31 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-8: காலச்சுவடு, ஜூன் 2011

காலச்சுவடு, உலகத் தமிழ் இதழ், ஜூன் 2011,  விலை ரூ.25/-, ஆசிரியர் சுந்தர ராமசாமியின் புதல்வர் கண்ணன் (இணையதளம்: www.kalachuvadu.com) 

முதலில் தலையங்கம், "ஒரு கெட்ட நிமித்தம்".  1200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தைப் புதிய அரசு புறக்கணித்திருப்பதும், சமச்சீர் கல்வித் திட்டத்தை ஓராண்டு நிறுத்தி வைப்பதாக அறிவித்திருப்பதும் (200 கோடி  ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுள்ள புத்தகங்கள் வீணா?) கெட்ட நிமித்தங்களதாம்.  இத்தலையங்கத்திலிருந்து:

"...தமிழக பாரம்பரிய கட்டடக்கலையின் சுவடே இல்லாமல், பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனம் போல் கட்டப்பட்டிருக்கும் இந்த அமைப்பு தமிழக சட்டசபையாகத்   திகழ்வதற்குத் தகுதியற்றது.  வட இந்திய ஏழைத் தொழிலாளர்களைக் கேவலமாகச் சுரண்டி, காலனியவாதிகளின்  வழிமுறைகளைப் பின்பற்றி இக்கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் மிருகங்கள் போலக் கேவலமாக நடத்தப்பட்டது பற்றியும், கட்டடப்பணிகளின் பொது நடந்த பல விபத்துக்களும், மரணங்களும் மூடிமறைக்கப்பட்டது பற்றியும் எண்ணற்ற வதந்திகள் துர்தேவதைகள் போல உலவிக் கொண்டிருக்கின்றன.  இந்தக் குற்றச்சாட்டுகளை நடுநிலையோடு விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப் புதிய அரசு ஆவன செய்யவேண்டும்.  இக்கட்டடத்தை முழுமையாகப் பூர்த்தி செய்வதற்கு முன்பாகவே, திரைப்படக் கலை இயக்குனர் தோட்டா தரணியைக் கொண்டு, இரண்டு கோடி ரூபாய் செலவில் செட் அமைத்துத் திறந்துவைக்க வேண்டிய கட்டாயம் கருணாநிதியின் தன்முனைப்பால் ஏற்பட்டது....

"....இந்தத் தேர்தலில் மக்கள் எத்தகைய மாற்றங்களைக் கோரி அதிமுகக் கூட்டணியை வெற்றிபெற வைத்திருக்கிறார்கள் என்பதை ஜெயலலிதா சரியாகப் புரிந்துகொள்ளவில்லையோ எனத் தோன்றுகிறது.  கடந்த ஐந்தாண்டுக் காலத் திமுக அரசின் செயல்பாடுகளால் பலவிதங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வாழ்வியல் நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதற்கு ஜெயலலிதா முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.  தனக்கும், கருணாநிதிக்கும் இடையேயான கணக்கு வழக்குகளைத் தீர்த்துக் கொள்வதற்காக இந்த வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள முயல்வது அபத்தம்.  அரசின் எல்லாத் திட்டங்களையும் தன்னுடையதாக மாற்றிவிடும் கருணாநிதியின் மனநோயும், அதைச் சகிக்க முடியாமல் அழித்துவிடும் ஜெயலலிதாவின் எதிர்வினைகளும் இனியும் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை.  மாற்றத்தை விரும்பி வாக்களித்திருக்கும் மக்கள், ஆட்சியாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள்.  அவர்களது கோபம் எத்தகைய சாம்ராஜ்யங்களையும் வீழ்த்தும் சக்திகொண்டது.  பலமுறை இது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது.  அதிகாரத்தில் இருப்பவர்கள் தம் 'அதிரடி' நடவடிக்கைகளைச் செயல்படுத்தத் தொடங்குவதற்கு முன் இதைக் கவனத்தில் கொள்வது நல்லது."
  
அடுத்து, "கண்ணோட்டம்" பகுதியில், ஆசிரியர் கண்ணனின் "அந்நியப்படுத்தும் சகிப்பின்மை". அதிலிருந்து:

"...ஐ.நா.வின் குற்ற அறிக்கை இலங்கை அரசை மட்டுமல்ல, புலிகளையும் கண்டிக்கிறது.  ஐ.நா. அறிக்கையை முன்வைத்துப் பேசும்போது  இந்த விமர்சனத்தையும் சேர்த்தே ஏற்றுக்கொள்கிறோம்.  இதில் ஒரு பகுதியை மட்டும் முன்னிலைப்படுத்தி, பிற பகுதிகள் விவாதத்திற்கு வராமல் தடுப்பது பிரச்சினையின் பல்வேறு பரிமாணங்களை அறியும் உரிமையைத் தடுப்பதாகும். பிறர் எதை அறியவேண்டும், எதை விவாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்யும் உரிமை யாருக்கும் இல்லை.  அதேபோல ஈழப் போராட்டத்தின் தமிழகத்தின் ஆதரவாளர்கள் தம்மை ஈழ மக்களின் பிரதிநிதியாகக் கருதிக்கொள்வதும், அவர்கள் சார்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தமதாக்கிக் கொள்வதும் கேடானது.  பிரதிநிதித்துவ அரசியல் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.  எல்லாம் இழந்து நிற்பவர்களின் பிரதிநிதித்துவத்தையும் பிடுங்க முயல்வது கண்டனத்திற்குரியது...."

"...சகிப்பின்மையே கடந்த காலங்களில் நம்மைத் தனிமைப் படுத்தியது. அந்த மூதேவியை இனியும் சுமந்து திரிவது அழகல்ல.  பிறரின் கருத்துரிமையை மறுப்பவர்களுக்குச்  சமத்துவம், மனித உரிமை பற்றி எல்லாம் பேசும் அருகதையே இல்லை..."

"கடிதங்கள்" பகுதியில், வத்திராயிருப்பிலிருந்து தெ.சுந்தரமகாலிங்கம் எழுதியிருக்கும் கடிதத்திலிருந்து ஒரு பகுதி: "...உழைப்பின் மேன்மையைப் பறைசாற்ற வேண்டிய அரசு இரந்துண்டு வாழும் வாழ்வின் இழிவு குறித்த அக்கரையற்றவர்களாகக் குடிமக்களை மாற்றும் அவலம் மதிமயக்கும் பானங்களின் வலுவால் நீடிக்கிறது. வரலாறு தன் பக்கங்களில் 'இருண்ட காலம்' என்று பதிவுசெய்யும் காலம் இன்று ஒளிமயமானதெனப் பொய்யுரைப்போரால் நெஞ்சைப் புறந்தள்ளிக் கூறப்படுகிறது."

அடுத்து, காலச்சுவடு புதிய வெளியீடு பற்றிய தகவல் - சுந்தர ராமசாமியின் நினைவோடை வரிசையில் எட்டாவது நூலான, "கு.அழகிரிசாமி".   முதல் பதிப்பு ஏப்ரல் 2011.   விலை ரூ.50௦/-. அதைப் பற்றி: "மென்மையும், நேரடியுமான சிறுகதைகள் மூலம் தமிழில் முக்கிய இடத்தைப் பெற்றவரான கு.அழகிரிசாமியின் இயல்புகளையும், எழுத்துச் செயல்பாட்டின் பின்னணிகளையும் இந்நூல் முன்வைக்கிறது.  அழகிரிசாமியைச் சந்திப்பதற்கு முன்பே அவரது கதைகளைத் தேடி வாசித்த  வாசகரான சுந்தர ராமசாமி நேரடிப்  பழக்கத்தில் அவருடன் கொண்டிருந்த நட்பு நெருக்கமானது; இலக்கியம் சார்ந்தது, சமரசமற்றது."

அடுத்து, "சு.ரா. 80"   விழாவின் நிகழ்ச்சி நிரல்.  ஜூன் மூன்று முதல் ஐந்து தேதி வரை கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் சிறப்பாக நடந்திருக்கும் என்று நம்புகிறேன்.  கருத்தரங்கில் நடைபெற்ற விவாதங்கள், கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாற்றங்கள் பற்றி அறிய ஆவல்.

ஆசிரியர் கண்ணனின், தமிழகச் சட்ட மன்றத் தேர்தல் பற்றிய கட்டுரை, "சதுரங்க ஆட்டங்களின் முடிவு". அதிலிருந்து: "கருணாநிதியின் குடும்பம் - இச்சொல்லின் மூலப் பொருளில் - ஒரு மாஃபியா.   அதிகார அமைப்புகளை ஊடுருவிப் பணத்தையும், சட்டத்திற்குப் புறம்பான அதிகாரத்தையும் குவிப்பது மாஃபியா பாணி.  'காட்பாதர்' நாவலையும், திரைப்படத்தையும் அனுபவித்தவர்களுக்கு எண்ணற்ற ஒப்பீடுகள் தோன்றும். நீதித் துறையும், போலீஸ் அமைப்பையும் ஊடுருவுவது, அரசியல்வாதிகளைக் குடும்பத் தொண்டர்களாக்குவது , போலீசாரையே குற்றங்களுக்கு உடந்தையாகுவது, ஊடங்களை ஊழலில் கரைத்துச் செய்திகளை வரவழைப்பது, சட்டம் அண்டிவரும்போது இடைப்பட்ட கண்ணிகளைத் தீர்த்துக்கட்டுவது, உதவி தேடி வருபவர்களை 'நட்புக்கு' அடிமையாக்குவது, குடும்பம் பல கிளைகளாகப் பிரிந்து பணத்தைச் சுருட்ட சினிமா, சூதாட்டம், பண்பாடு என அனைத்துத் துறைகளிலும் கைவைப்பது, பாதிரிகளைக் கைப்பாவைகளாக்குவது, கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாகச் 'சலவை' செய்வது எனச் சொல்லிக்கொண்டே போகலாம். ஒரு முக்கிய வேறுபாடு உண்டு. 'காட்பாதரில்' மாஃபியா குடும்பங்களில் குடும்ப உறுப்பினர்களிடையே வெளிப்படும் அன்பும், பாசமும், கரிசனமும் உண்மையானது."

க.திருநாவுக்கரசின் கட்டுரை, "மாறிவரும் அமெரிக்க மனசாட்சி"யிலிருந்து: "... தீவிரவாதத்தை எந்தக் காரணம் கொண்டும் ஒருவர் ஆதரிக்க முடியாது.  ஆனால் அது உருவாவதற்கான காரணத்தை ஒருவர் புரிந்துகொண்டாக வேண்டும்.  இந்தப் புரிதல் இல்லாமல் எந்தவிதமான தீவிரவாதத்தையும் ஒழிக்க முடியாது. மேலும், அரசு தீவிரவாதத்தை ஆதரித்துக் கொண்டே, அரசு-சாரா இயக்கங்களின் தீவிரவாதத்தை மட்டும் கண்டிப்பது என்பது இரு தீவிரவாதங்களும் (அரசு மற்றும் அரசு சாரா) மேலும், மேலும் அதிகரிக்கவே உதவும்...."

சங்கீத ஸ்ரீராமின் தொடர்கட்டுரையான "பசுமைப் புரட்சியின் கதையின்" பதினெட்டாவதும், இறுதியுமான கட்டுரை, "வேளாண்மையின் இறுதி லட்சியம் எது?".  அதிலிருந்து: 

"... மனித மனம் உழன்று வரும் இரைச்சல், இல்லாத ஒன்றை உருவாக்கி, எதையோ சாதிக்க வேண்டும் என்னும் ஆழமற்ற அகங்கார இலட்சியங்கள் ஆகியவற்றின் வெளிப்பாடுதான், இன்று நாம் பார்க்கும் சூழலியல் நெருக்கடி (ecological crisis). இதன் நீட்சிதான் வேளாண் நெருக்கடியும் கூட.

நாம் எதற்காக வாழ்கிறோம் என்னும் கேள்விக்கு ஆழமான, அர்த்தமுள்ள விடை காண இந்தியாவின் பண்டைய நூல்கள் முயல்கின்றன. "உன்னுடைய இளமை, பணம், புகழ் எல்லாம் வெறுமையானது; பொய்யானது. எல்லாவற்றையும் விட்டுவிட்டு மரத்தடியில் போய்  உட்கார்ந்து தியானம் செய், உண்மை எதுவென விளங்கும்" என்று ஆதிசங்கரர் பஜகோவிந்தத்தில் கூறுகிறார். இந்தக் கருத்து பல தத்துவ நூல்களிலும், தரிசனங்களிலும் எதிரொலிக்கிறது.  இதைத்தான் ஃபுக்குவோக்கா, 'ஒன்றும் செய்யாமல் இருத்தல்' (do nothing ) என்னும் தத்துவமாக வாழ்ந்து காட்டினார். தனது விவசாயத்தையே ஒருவகையான தியானமாகப் பாவித்து, பல்கலைக்கழகத்தில் படித்த கருத்துக்களை எல்லாம் நிசப்தப்படுத்திவிட்டு, இயற்கையிடம் சரணடைந்து, உணர்வுபூர்வமாக அறிவித்தார். (இந்தக் கட்டுரையில் அவரது 'ஒற்றை வைக்கோல் புரட்சி' நூலிலிருந்து பல பகுதிகள் தரப்பட்டுள்ளன.)...

...இயற்கை வேளாண்மை என்பது ஒருவனது அகத்திலிருந்துதான்  தொடங்கவேண்டும்.  மண் குணமாவதற்கும், மனித ஆன்மா குணமாவதற்கும் செயல்முறை ஒன்றுதான்.  அவை இரண்டும் ஒருங்கிணைந்த வாழ்க்கைமுறையையும், வேளாண்முறையையும்  நோக்கித்தான் நாம் பயணிக்க வேண்டும்.

ஃபுக்குவோக்கா கூறுவது போல 'வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்ப்பதல்ல. மனித இனம் முழுமையடையும் வண்ணம் அதைப் பயன்படுத்துவதே."

சேரனின் கட்டுரை, "சர்வதேச அமைப்பின் ஜனநாயக மறுப்பும், இரட்டை வேடமும்".  அதிலிருந்து:

"ஈழத் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், கட்டாய ஆள் சேர்ப்பு (சிறுவர்கள் உட்பட), வெளியேறாவண்ணம் மக்களைப் பலவந்தமாகத் தடுத்து நிறுத்தியமை, மீறித் தப்பிச் செல்ல முயன்றோரைக் கொன்றமை போன்ற விடுதலிப்புலிகளின் செயற்பாடுகள் விடுதலையின் அறத்தைச் சிதைத்தவை...விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், கோட்பாட்டிலும் விளைந்தவை. ஆனால் சர்வதேசச் சட்டங்களும், ஜெனிவா உடன்படிக்கைகளும் சர்வதேசப் போர் நெறிமுறைகளும், வழிமுறைகளின் நியாயப்பாட்டையும் தேவையையும் அடியொற்றி எழுந்தவை. விளைவு வழிமுறைகளை நியாயப்படுத்துமென வாதிடுவோமானால், அந்த வாதம் இனப்படுகொலை புரிந்த இலங்கை அரசுக்கும் பொருந்திப்போகும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்...."

தேவிபாரதியின், "அற்ற குளத்து அற்புத மீன்கள்"; சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின், "ஒசாமா பின்லாடன் என்னும் பயனுள்ள பகைவன்"; மனோமோகன், ரவி சுப்பிரமணியன், பெருந்தேவி ஆகியோரின் கவிதைகள்; பா.வெங்கடேசனின் சிறுகதை, "வெறும் கேள்விகள்"; பா.செயப்பிரகாசத்தின், ஈழ இனப்படுகொலை பற்றிய கட்டுரை, "புதைகுழிக்கு அனுப்பப்படும் அறக்கோட்பாடுகள்"; செல்லப்பாவின், "பிரச்சாரப் பொதிசுமக்கும் மரக்குதிரை" (அழகர்சாமியின் குதிரை திரைப்படம் பற்றிய விமர்சனம்); தவசிக் கருப்பசாமியின், "அருங்கூத்து" நூலின் மதிப்புரை;  இந்திய நாடக உலகில் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்திய பாதல் சர்க்காருக்கும், 'கணையாழி'யைத் தோற்றுவித்த கஸ்தூரி ரங்கனுக்கும் அஞ்சலி;  ஏப்ரல் பதினைந்து அன்றும், மே பதினைந்து அன்றும் மதுரையில் நடைபெற்ற "அற்றைத் திங்கள்" பற்றிய குறிப்புகள் என்று பல சுவையான அம்சங்கள்.

காலச்சுவடு ஒரு சிறப்பான மாத இதழ் என்பதை நிரூபித்துக் கொண்டே இருக்கிறது. 

நன்றி: "காலச்சுவடு" மற்றும் அதன் ஆசிரியர் கண்ணன் அவர்கள்.    
  


   

30 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-7: உயிர்மை, மாத இதழ், ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன், ஜூன் 2011


உயிர்மை, மாத இதழ், ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன், ஜூன் 2011, விலை ரூ.20/-
------------------------------------------------------------------------------------------------------------
என்னைப்போல் பலருக்கும் "உயிர்மை", "காலச்சுவடு" மற்றும் "உயிர் எழுத்து" தற்போதைய தலைசிறந்த தமிழ் இலக்கிய இதழ்கள்.

உயிர்மை இதழில் மனுஷ்ய புத்திரனின் தலையங்கம் எப்போதுமே மிகச் சிறப்பாக, ஆழமாக இருக்கும்.  இந்த மாத இதழின் தலையங்கம், "ஒரு 'புரட்சி'யின் கதை".   அதிலிருந்து: 

"... எல்லாவற்றையும்விட தி.மு.க. ஆட்சியில் பொதுமக்களின் ஆழமான சில தார்மீக உணர்வுகள் அவமதிக்கப்பட்டன. ... தன்னுடைய பல்வேறு குடும்பங்கள், கிளைக் குடும்பங்களின் அதிகாரப் போராட்டத்திற்கான மையமாக ஒரு அரசை, ஒரு கட்சியை மாற்றுவதன் அபாயம் குறித்து கருணாநிதி புரிந்துகொள்ளவே இல்லை.  இரண்டாவதாக, அரசியல் அதிகாரம் ஒரு கட்சிக்கு வழங்கப்பட்டதே தவிர, தனது குடும்பத்திற்கு வழங்கப்பட்டதல்ல என்பதை கருணாநிதியின் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே ஏற்கவில்லை.  அவர்கள் கருணாநிதியின் பிள்ளைகளாகவோ உறவினர்களாகவோ இருப்பதாலேயே அதிர்காரம் செலுத்துவது தங்கள் பிறப்புரிமை என்று கருதினார்கள். அந்த உரிமையை நிலை நாட்டுவதற்காகவே ஒருவரை ஒருவர்  ரகசியமாக  வேட்டையாடினார்கள், சதிச் செயல்களில் ஈடுபட்டார்கள், தீ வைத்து எரித்தார்கள், வரலாறு காணாத ஊழலில் ஈடுபட்டார்கள். ஒரு ஜனநாயக அமைப்பின் மக்களது உணர்ச்சிகளை நாம் அவமதிக்கிறோம் என்று யோசிக்கக்கூடிய ஒருவர்கூட அங்கு இல்லை.

ஒரு தேர்தலை யுத்தகால கெடுபிடியுடன் தேர்தல் கமிஷன் நடத்த வேண்டியிருந்தது என்றால் அது தமிழகத்தில்தான்.  ஓட்டுக்குப் பணம் கொடுப்பதை தி.மு.க. இவ்வளவு பரவலாகவும், பகிரங்கமாகவும் செயல்படுத்த முயன்றதன் விளைவாக அது நேரான வழிமுறைகளில் சிறிதும் நம்பிக்கையற்ற ஒரு இயக்கம் என்கிற அவப்பெயரையே தேடித் தந்தது.... தி.மு.க. அரசு எல்லாவிதத்திலும் தனது நம்பகத்தன்மையையும், தார்மீக நெறிகளையும் இழந்ததன் மூலம் இப்போது அதிகாரத்தை இழந்திருக்கிறது...."

அடுத்து, "கடிதங்கள்".  குடந்தையிலிருந்து நெய்வேலி தியாகராசன் எழுதிய கடிதமும் ( ஊழல் பற்றிய மனுஷ்ய புத்திரனின் மே மாத தலையங்கத்தைப்பற்றி), ஆர்.கோவிந்தசாமி எழுதிய கடிதமும் (மௌனியுடன் சந்திப்பு) என்னை ஈர்த்தன.  அவற்றிலிருந்து: 

"... தங்களின் தலையங்கம் 'சுருக்'கென்று இதயத்தில் பாய்கிறது. ஊழல் என்பது அன்றும் சரி, இன்றும் சரி, அது ஒரு சிலந்தி வலை.  அதில் சிறிய பூச்சிகள் சிக்கிக்கொள்கின்றன. பெரிய பூச்சிகள் அறுத்துவிட்டுப் பறந்துவிடுகின்றன. இன்னும் சில நேரங்களில் அரசியல் துறையில் தனக்குப் பிடிக்காத பெரும்புள்ளிகளைப்  பழிவாங்கும் துருப்புச்சீட்டாக இது பயன்படுத்தப்படுகிறது. புராண, இதிகாச காலங்களிலும் இது கொடிகட்டிப்  பறந்திருக்கிறது  வெவ்வேறு வடிவங்களாய்....  ஊழல்வாதியைத் தீண்டத்தகாதவராக மக்கள்  ஒதுக்க வேண்டும். அந்தநிலை ஏற்பட்டால், ஓரளவு ஊழலை ஒழிக்கமுடியும். இவை அனைத்திற்கும் மக்கள் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்."

"தருமு சிவராமு குறித்த மணா கட்டுரை நன்று. அது குறித்து சில முக்கிய தகவல்கள். எங்கள் ஊருக்குப் பக்கம் உள்ள எழுத்தாளர் சிதம்பரம் 'மௌனியை' ஒரு தருணம் நானும் சந்தித்தேன்.... பூர்வாங்க விசாரணை நிறைவுற்று, இலக்கிய விசாரம் துவங்கிற்று.  "தமிழ்,  இலக்கியத்துக்கு உகந்த பாஷை இல்லை. அதை இலக்கியத்துக்கு உகந்ததாக மௌனி மாற்றினார் என்று கே.என்.எஸ். சொல்வார்" என்றார் மௌனி.  நான் "கே.என்.எஸ். என்றால் யார்?" என்றேன்.  "க.நா.சுப்ரமண்யம்"  என்றார் மௌனி.  நான், "ஏன், தமிழ் இலக்கியத்துக்கு உகந்த பாஷை இல்லை என்று சொல்லணும். திருக்குறள் நல்ல இலக்கியமாச்சே" என்றேன்.  மௌனி, "திருக்குறள் நீதிநூலே தவிர, இலக்கிய நூல் இல்லை" என்றார்.  "ஏதிலார் விலைமாதர் பெண்டிர் முயக்கம் குறித்து 'இருட்டறையில் பிணந்தழீ  இயற்று' என திருவள்ளுவர் சொல்கிறார்.  இத்திருக்குறளில் சிறுகதைக்கு வேண்டிய உருவம், உள்ளடக்கம், உத்தி நுட்பம், கருத்து எல்லாம் அபாரமா இலக்கியத்தன்மை பொருந்திக் கவித்துவமாகவும் இருக்கே' எனவும், அவர் "உங்கள் பேர் என்ன சொன்னீங்க?" எனவும், நான் "என் பேர் ஆர்.கோவிந்தசாமி. 'கனலரசன்'ற பேர்ல கவிதைகள் எழுதுவேன்  என்றேன். "உங்களைப்போல்தான் தருமு சிவராமு எழுதுவார். இலங்கைக்காரர். பிரம்மச்சாரி." என்றார் ...எனக்கு அப்போது தருமு சிவராமு குறித்து எதுவுமே தெரியாது. தற்போது மணா கட்டுரை மூலம் பழைய நினைவுகள் மீண்டும் ஞாபகத்திற்கு வந்தன...."

அடுத்து, மாயாவின், "ஒசாமா பின்லாடன்: இன்னும் முடியாத ஒரு பயங்கரவாதக் கனவு".  அதிலிருந்து: 
   
"...அடக்குமுறையை எதிர்கொள்ளும்போதுகூட வன்முறையைக் கடைசி ஆயுதமாகப் பிரயோகிக்கவேண்டும் என்றும், அப்பாவிகளைக்   கொல்வதை  எந்த இடத்திலும் ஜிகாத் நியாயப்படுத்தவில்லை என்றும் இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.  இந்த நூற்றாண்டில் புரிதலில் இரு வேறு துருவங்களையும் தொட்ட ஒரு வார்த்தை என்றால் அது ஜிகாத்.  அதில் ஒசாமா பின்லாடனின் அடிப்படைவாத விளக்கத்தைக் கேட்கவும் ஒரு கூட்டம் உருவாகியிருக்கிறது என்றால் அதற்கு அமெரிக்காவின் நூறு ஆண்டுகளைக் கடந்த உலக ஏகாதிபத்தியத்தைக் கட்டுப்படுத்தத் முடியாத இயலாமையே காரணம்."

அடுத்து, ஒரு மொழிபெயர்ப்புச் சிறுகதை, "அமெரிக்கத் தூதரகம்".  தமிழில் தந்தவர் ஜி.குப்புசாமி.  அருமையான கதை.  ஆனால் இது போன்ற துயரம் வடியும் கதைகளை இப்போதெல்லாம் படிப்பதையே நான் தவிர்க்கிறேன்.

அடுத்து, தேவதச்சனின் கவிதைகள்.  அதிலிருந்து எனக்குப் பிடித்த ஒரு கவிதை மட்டும்.

கவிதை எழுதுவது
என்பது
ஒரு குண்டு பல்பை
ஹோல்டரில் மாட்டுவது போல் இருக்கிறது
முழுமையானதின்
அமைதியை ஏந்தி
பல்ப்
ஒளிவீசத் தொடங்குகிறது
ஒரு
மெல்இழை
நிசப்தத்தில்
எவ்வளவு நீள
நன்கணம்.

இன்னும் ஆரபி ஆத்ரேயா, சுகுமாரன், மனுஷ்ய புத்திரன் ஆகியோரது கவிதைகள்; இங்கே ஒன்றை நான் முக்கியமாகப் பதிவு செய்தாக வேண்டும்.  தற்காலத் தமிழ் கவிதைகள் பெரும்பாலும் என் களிமண் மண்டையில் ஏறுவதில்லை. ஒரு சில கவிதைகளே என்னை ஈர்க்கின்றன.  குறை என்னுடையதுதான். இந்த நேரத்தில் ஏனோ நான் எங்கோ வாசித்த ஆங்கிலக் கவிதை ஒன்றிலிருந்து சில வரிகள் அரைகுறையாக நினைவுக்கு வருகின்றன: 

In this prosaic world
There is no room for poetry 
The full moon is  
But a baked bread 
Call it a day for the poet.

இந்தக் கவிதை கருத்தை நான் ஏற்றுக்கொள்ளாத போதும், அந்த வரிகளுக்குப்பின் இருக்கும் வலியை என்னால் உணரமுடிகிறது.

அடுத்து, எஸ்.ராவின் "இன்றைய வானம்" பகுதியில் "எண்கள்  மட்டும் கணிதமல்ல".  வித்தியாசமான, தனித்துவம் வாய்ந்த அவரது எழுத்து எனக்கு எப்போதுமே பிடிக்கும்.  அவரது பரவலான, ஆழமான வாசிக்கும் பழக்கம், மேலான சிந்தனைகள் அனைத்துமே பாராட்டத்தக்கவை. ஞானக்கூத்தனின் ஒரு சுவையான கவிதையோடு கட்டுரையை நிறைவு செய்துள்ளார்.

அடுத்து மூன்று அஞ்சலிக் கட்டுரைகள்.  மறைந்த சின்னக் குத்தூசி, மருத்துவர் தம்பையா, பாதல் சர்க்கார் ஆகியோருக்கு.   அ.முத்துலிங்கத்தின் "கூஸ்பெர்ரீஸ் " என்கிற சிறுகதை. செக்காவின் அதே பெயருடைய கதையின் பின்னணியில்.  நன்றாக இருந்தது.

இன்னும் பிரபஞ்சனின் "பூ விற்போர் என்றும் இவர்களைச் சொல்வார்கள்"; "அழகர்சாமியின் குதிரை" எனும் தமிழ்ப்படத்தையும், 'I am" எனும் இந்திப் படத்தைப் பற்றியும் சாரு  நிவேதிதாவின் கட்டுரை;  யமுனா ராஜேந்திரனின்    ஈழப்படுகொலை மீதான ஐ.நா. அறிக்கை பற்றிய கட்டுரை; தியடோர் பாஸ்கரனின் "கரையேறுமா நோவாவின் பேழை", அ.ராமசாமியின் "அரசியல் குடும்பங்களின் இருண்ட காலம்";  "சுஜாதா  விருதுகள் 2011"  பற்றிய பதிவுகள் படங்களுடன்.

உயிர்மை இதழ் தற்காலத் தமிழ் இலக்கிய இதழ்களில் சிறப்பான முதலிடத்தைப் பிடித்துள்ளதை என் போன்ற அரைகுறைகள் கூட எளிதில் உணரமுடிகிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்!

நன்றி: திரு.மனுஷ்ய புத்திரன் மற்றும் "உயிர்மை"  
  

29 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-6: புதிய பார்வை, சமகாலத்தின் முகம், மாதமிருமுறை, மே 1-15 , 2011


இதன் ஆசிரியர் ம.நடராசன் (திருமதி சசிகலாவின் கணவர்).  இந்த இதழிலிருந்து எனக்குப் பிடித்த சில மட்டும்: 

"நலம் நலமறிய ஆவல்" பகுதியில் "கோடைக்கேற்ற மாதுளை".  அதிலிருந்து:

மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும்.  உடல் குளிர்ச்சி அடையும். கோடை காலத்தில் ஏற்படும் காய்ச்சலுக்கு மாதுளம்பழம் மருந்தாக அமையும்.  மாதுளம்பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்திற்குப்பின் தினமும் சாப்பிட்டு வரவேண்டும். இப்படி ஒரு மாத காலம் உட்கொண்டு வந்தால் உடல் ஆரோக்கியமும், தெம்பும் உண்டாகும்.  புதிய ரத்தம் உற்பத்தியாகும்.  மாதுலம்பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக்கொண்டு வேலைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால் இருமல் நிற்கும்.

அடுத்து, "சமூகத் தொண்டே ஆன்மிகம்" - நிறைய புள்ளிவிவரங்களுடன் சாய் பாபா பற்றிய கட்டுரை.  அதிலிருந்து:

... அவரின் (சாய் பாபாவின்) சமூகத் தொண்டு:

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் நிலவிய கடுமையான குடிநீர் பஞ்சம், பாபாவின் ரூ.இரு நூறு கோடி திட்டத்தால் முடிவுக்கு வந்தது.  அம்மாவட்டத்திலுள்ள ஐம்பது லட்சம் மக்கள் இன்றும் பயனடைகின்றனர்.  இத்திட்டம் ஒன்பது மாதங்களில் முடிக்கப்பட்டது.  2500 கிலோமீட்டர்   தூர குழாய்கள், 268 தண்ணீர்த் தொட்டிகள், 124 நீர்த்தேக்கங்கள்,  200 நீரேற்று நிலையங்கள் ஆகியன எழுநூறு கிராமங்களுக்கும், பதினோரு நகரங்களும் பயனளிக்கின்றன.

சத்யசாய் அமைப்பு ஏராளமான  இலவச கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள்  மற்றும்  மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை செய்கிறது.  உலகளவில் 114 நாடுகளில்  1200 சாய்பாபா மையங்கள் இயங்குகின்றன.

தமிழகத்தின் தலைநகரான சென்னையின் குடிநீர் தாகத்தை போக்கும் வகையில் கிருஷ்ணா நதி நீரை தெலுங்கு கங்கை திட்டத்தின் மூலம்  கொண்டுவர பெரும் நிதியுதவி வழங்கினார்....ரூ.200 கோடி செலவில் சாய்பாபா அறக்கட்டளை கால்வாயை சீரமைத்ததன் காரணமாக சென்னைக்கு கண்டலேறு நீர் கிடைத்தது.
 
சாய்பாபா தனது பக்தர்களுக்காக பலதரப்பட்ட சமூக சேவை நிறுவங்களை தன பார்வையிலேயே நேர்மை நடத்தினார்.  இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் உள்ள 136 நாடுகளில் அவை இயங்கி வருகின்றன.
 
பெங்களூருவில் உள்ள பாபாவின் ஆசிரமத்திற்கு அருகில் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் முதியோருக்காக 'விருத்தாஸ்ரமம்' ... கட்டப்பட்டுள்ளது.  இங்கு முதியவர்களுக்குத் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

உலக அமைதி மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தி பாபா அவர்கள் புட்டபர்த்தி மட்டுமல்லாமல் கர்நாடக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தினார்.

ஒயிட்பீல்டு ஆசிரமம் அருகே சத்யசாய் மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட படுக்கைகளுடன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இங்கு நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதேபோன்று சத்யசாய் இன்ஸ்டியூட்  ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனையின் உதவியுடன் இதயம் மற்றும் நரம்பு தொடர்பான கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.  மொத்தம் ஐம்பத்திரண்டு ஏக்கரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது.  இங்கு 333 படுக்கைகள்,   பன்னிரண்டு அறுவை சிகிச்சைக்கூடங்கள், ரத்த வங்கிகள், ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளன.

நாட்டில் இயற்கைப் பேரழிவு ஏற்படும் சமயங்களில் அப்பகுதியில் உள்ள சாயி அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உதவிகள் செய்கின்றனர். 
 
இந்தியாவில் 2500 சாய் சமிதிகள், 5700 பஜனை மண்டலிகள்,  16000 பாலவிகாஸ் அமைப்புகள், 60000 மகளிரைக்கொண்ட சேவாதள கிளை அமைப்பு, 75000 உறுப்பினர்களுடன் சாய் இளைஞர் அணியும் செயல்பட்டு வருகின்றன.

கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் பழங்குடிகள் அதிகம் வசிக்கும் பகுதியில், 25 கிராமங்களில், ஸ்ரீசத்யசாய் குடிநீர்த் திட்டம் என்கிற மற்றொரு திட்டம் கடந்த 20.1.2008-ல்  தொடங்கப்பட்டது.  

இந்தியா முழுவதும் 2100 கிராமங்களை தத்தெடுத்து சேவைப் பணிகள் செய்யப்பட்டு வருகின்றன.  சத்யசாய் ஒருங்கிணைந்த திட்டத்தின் கீழ் 13000 கிராமங்களில்  மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

மத்தியப் பிரதேசத்தில் 34000 கழிவறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆந்திரத்தில் கிழக்கு கோதாவரி மாவட்ட காடுகளில் சோதனை வேளாண் பண்ணைகள் சாய் பக்தர்களாக உள்ள விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்டுள்ளன.

உத்தரகாண்ட் மாநிலத்தில் மலைப்பகுதியில் மின்சார உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு தொண்ணூறு வீடுகளில் விளக்கு எரியவும்,  கையினால் இயக்கப்படும் அரிசி இயந்திரங்களை இயக்கவும் மின்விநியோகம் செய்யப்படுகிறது.

வங்கத்திலும், ஒரிசாவிலும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தண்ணீர் சுத்திகரிப்பு, இயற்கை முறை விவசாயம், சூரிய ஒளி மின்சாரம் உள்ளிட்ட பணிகளிலும் ஸ்ரீ சத்யசாய் சேவை நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

புட்டபர்த்தியில் அமைந்துள்ள சத்யசாய் பல்கலைக்கழகத்தின் துணை வளாகங்கள் ஆனந்தபூரிலும், பெங்களூரிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதெல்லாம் அவரது சமூகப் பணிகளில் ஒரு சிறு துளிதான்.

அடுத்து "நோட்டீஸ் போர்டு"  பகுதியில் சமூக சேவகர் பினாயக் சென்னுக்கு தென் கொரியாவின் மனித உரிமைக்கான உயரிய விருதான 'குவாங்க்ஜூ" விருது வழங்கப்படுவது பற்றி:  ".... அர்ப்பணிப்பு உணர்வுடன் ஏழைகளுக்கு சேவை செய்ததோடு, சமூக ரீதியான அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடியதால் அவர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக தென் கொரியா அறிவித்துள்ளது...."

 "உலகப் புகழ் பெற்ற நூல்" வரிசையில் இருபதாவது நூலாக சார்லஸ் டிக்கென்சின்    "டேவிட் காப்பர் ஃ பீல்ட்".

"ஹாட் டாபிக்"  பகுதியில் "மிதவை விவசாயம்", "வரப்பே இல்லாத விவசாயம்" பற்றிய தகவல்கள் பயனுள்ளவை.

"பூமணியின் படைப்புலகம்" பற்றி ஜெயமோகனின் கட்டுரை. "தமிழின் இயல்புவாத இலக்கியத்துக்கு பெருமை சேர்த்த படைப்பாளிகளுள் முக்கியமானவர் பூமணி.  அவரது 'பிறகு', 'வெக்கை' ஆகிய நாவல்களும், 'ரீதி' என்ற சிறுகதைத் தொகுப்பும் முக்கியமானவை. ... பூமணி திரைப்படம் பக்கமாகச் சென்றது அவரை இலக்கியத்திலிருந்து ஓரம் கட்டியது என்று சொல்லப்படுவது உண்டு. ... அவரை ஒரு வருடம் முன்பு சந்தித்தபோது, தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதாகவும், சீக்கிரமே மீண்டும் தன இலக்கியப் பிரவேசம் அமையும் என்றும் சொன்னார்...."

அடுத்து, இளம்பிறை அவர்களின் "பெருங்கடல் இரான்.. சில துளிகள்". கவிஞர் மதுமிதா தொகுத்துள்ள, 'இரவு - இருள் வெளியில் எழுத்தும், அனுபவமும்' நூலிலிருந்து. 

"இதைப் படிங்க முதல்ல..." பகுதியிலிருந்து ஜப்பானில் பாதிக்கப்பட்ட அணு உலையைச் சுற்றி உலோகக் கோட்டை அமைப்பது பற்றிய தகவல். "... பாதித்த அணு உலையில் இருந்து 120 மீட்டர்   அகலத்துக்கு இந்தக் கோட்டை கட்டப்படுகிறது. இருபுறமும் உலோகத் தகடுகள் பதித்து, இடையில் கதிர்வீச்சை தடுக்கக்கூடிய ரசாயனப் பொருட்களினால் ஆனா கோட்டை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணி பத்து ஆண்டுகளில் முடிவடைய உள்ளது.  அதற்கான பணியில் என்ஜினீயர்கள் ஈடுபட்டுள்ளனர்."

"இதனால் சகலமானவர்களுக்கும்" பகுதியிலிருந்து:

முதல் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்பீடு - ஒரு கோடி மக்கள் கொல்லப்பட்டனர். இரண்டு கோடிக்கு மேல் மக்கள் ஊனமுற்றனர்.  யுத்தத்திற்கான செலவு 360 கோடி டாலர்கள்.

இரண்டாம் உலகப் போரினால் ஏற்பட்ட இழப்பீடு ஐந்து கோடி மக்கள் கொல்லப்பட்டனர். யுத்தத்திற்கான செலவு 4000 கோடி டாலர்கள். 

ஒரு ராணுவ டாங்கியை தயாரிப்பதற்கு உண்டாகும் செலவில் 30,000 பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளைக் கட்ட முடியும்.

ஒரு போர் விமானம் தயாரிப்பதற்கு உண்டான செலவில் 40,000 மருத்துவமனைகள் கட்டலாம்.   

ஒரு பட்டுப்புடவை தயாரிக்க 8000 பட்டுப்புழுக்கள் சாகடிக்கப்படுகின்றன.

நமது கால்கள் ஒவ்வொன்றிலும் 2,50,000 வியர்வை சுரப்பிகள் உள்ளன. 

ஒரு மனிதன் தன சராசரி வாழ்க்கையில் நடக்கும் தூரம் ஒரு லட்சம் மைல்கள்.

உப்பிலியப்பன் கோயில் பற்றிய தம்பி கார்த்திகேயாவின் கட்டுரை.

இப்படிப் பல சுவையான அம்சங்கள். 

நன்றி: திரு ம.நடராசன் மற்றும் "புதிய பார்வை"

26 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-5: அம்ருதா, நவீன கலை இலக்கிய சமூக மாத இதழ்


அம்ருதா, நவீன  கலை  இலக்கிய  சமூக  மாத  இதழ்,  ஆசிரியர் பிரபு திலக், கௌரவ ஆசிரியர் திலகவதி, இதழின் விலை ரூபாய் 25 /- 

அம்ருதா இதழை முதன்முதலில் நான் கோட்டையூர் நூலகத்தில் பார்த்தேன், படித்தேன்.  அதன்பின் புத்தகக் கடைக்குச் செல்லும்போதெல்லாம் கண்ணில்பட்டால் வாங்குவேன்.  அப்படித்தான் மே மாத இதழை வாங்கினேன்.  நிறையப் பேருக்கு இந்த இதழ் அறிமுகம் இருக்காதோ என்ற எண்ணத்தில் இங்கே என் வலைப்பூவில் அதைப் பற்றிப் பதிவு செய்கிறேன்.

தற்போது ஜூலை மாதம் முடியும் தருவாய்.  நானோ மே மாத இதழ் பற்றி எழுதுகிறேன்.  செய்திகள் பழசாகத்தான் இருக்கும்.  ஆனால் காலத்தால் பாதிக்கப் படாத விஷயங்கள் இருக்கின்றனவே!

முதலில் தலையங்கம் - இது ஆசிரியர் கடிதமாக வருகிறது.  "தேர்தலின் நாயகன்" என்று தமிழகத் தேர்தல் ஆணையர் பிரவீன் குமாரையும், தேர்தல் கமிஷனையும் பாராட்டி.

அடுத்து, செ.சண்முகசுந்தரத்தின்  "சிந்தனையில் சுட்ட வடு" - "மகிந்தவை வெல்லப்போகும் நீதி" - புள்ளி விவரங்களுடன் நெஞ்சைக் கனக்க வைக்கும் கட்டுரை.  இதிலிருந்து: "போரின் இறுதிக் கட்டத்தில் இந்தியா எப்படி இலங்கையைக் காப்பாற்றியது என்ற ஆவணம் இந்துப் பத்திரிகை கட்டுரையாக மேஜையில் கிடக்கிறது." 

அடுத்து, பா.செயப்பிரகாசத்தின் கச்சத்தீவு பயணம், "செங்கடல் சாட்சியாகி".  கச்சத் தீவு எப்படி இல்லங்கை கைக்குப் போனது போன்ற பல தகவல்கள்.

திலகபாமாவின் "கழுவேற்றப்பட்ட மீன்கள்" என்ற நாவலைப் பற்றி மேலாண்மை பொன்னுச்சாமியின் விமர்சனம்.

விஞ்ஞானம் பகுதியில் கார்ல் பிரடெரிக் கவுஸ் என்கிற கணித மேதையைப் பற்றிய பத்ரி சேஷாத்திரியின் கட்டுரை.

விக்கிரமாதித்யன் கவிதைகள் இரண்டு.

சு.வேணுகோபாலின் சிறுகதை, "முதற் காய்ப்பு".

தமிழ்நதியின் "எழுத்தும் வாசிப்பும்".  இதில் நைஜீரியப் பாடகர் பீலா அணிக்குலபோ குட்டி, ஜமைக்காவின் இசை மேதை பாப் மார்லி, அமெரிக்காவின் பிரபல பாடகர் பாப் ராப்சன், ஈழத்திலிருந்து குடிபெயர்ந்து, பிரிட்டனில் வாழும் பாடகி மாயா அருட்பிரகாசம் ஆகிய உண்மைக்காகப் போராடிய கலைஞர்கள் பற்றிய எழுச்சியூட்டும், சிறப்பான கட்டுரை.

"முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டங்கள்" தொடரில் கியூபாவின்            ஃபிடல் காஸ்ட்ரோ பற்றிய மருதனின் அற்புதமான கட்டுரை.  அதிலிருந்து: 
         
"கொலம்பஸ் முதல் முதலாக கியூபாவில் காலடி எடுத்துவைத்தபோது  கியூபா ஒரு ரம்மியமான கனவுப் பிரதேசமாக அவருக்குக் காட்சியளித்தது.  ஓங்கி வளர்ந்த மரங்கள்; இனிமையாக இசைக்கும் குயில்கள்; பூத்துக் குலுங்கும் மலர்கள்; மழைப் பிரதேசங்கள்; இதுவரை இப்படி ஒரு அழகை அவர் தரிசித்தது கிடையாது.  தான் மட்டுமல்ல, இந்த உலகமே இப்படி ஓர் அழகிய பகுதியை இதுவரை கண்டிருக்க முடியாது என்று அவர் நம்பினார்.  நிச்சயம் இது ஓர் அதிசயத் தீவாகத்தான் இருக்க வேண்டும் என்று தனது குறிப்பேட்டில் குறித்து வைத்துக் கொண்டார்.  கியூபாவின் ஒவ்வோர் பகுதியையும் சுற்றிச்சுற்றி வந்து கண்களை விரித்து அதிசயித்தார்.  இது நடந்தது அக்டோபர் 28, 1492-ஆம் ஆண்டில்.
.....
... கரும்புகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும் கியூபர்களின் வாழ்வு இனிமையானதாக இல்லை.  வறுமை வாட்டியது. பெரும்பாலானவர்களுக்கு காலை ஆகாரம், மதிய ஆகாரம் இரண்டுமே கரும்புச்சாராக அமைந்து விடுவதுண்டு.
....
...கியூபாவில் மட்டும் இந்நிறுவனம் (அமெரிக்காவின் யுனைடட் ஃ ப்ரூட் கம்பெனி) இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ஏக்கர் நீர் வளமுடைய நிலப் பரப்பை கையகப் படுத்திக்கொண்டது.  ஆனால், அவர்களது கொள்முதல் விலை மிகவும் குறைவு.  ஒரு ஏக்கர் வெறும் மூன்று டாலர் மட்டுமே.  கிட்டத்தட்ட பகல் கொள்ளை.  இது 1890-களில் இருந்த நிலை.
...
 யுனைடட் ஃ ப்ரூட் நிறுவனத்தைத் தவிர கியூபாவில் அரசாங்கம் என்று ஒன்று செயல்படுகிறதா என்றே யாருக்கும் தெரியவில்லை.  பள்ளிக்கூடங்கள் கிடையாது. சாலைகள் கிடையாது. மருத்துவமனைகள் கிடையாது.  வேலை வாய்ப்பு வசதிகள் கிடையாது.  ஆனால், பலமான ராணுவம் மட்டும் உண்டு.  எல்லாமே கரும்புகளுக்காகத்தான்.  கரும்புகள் மட்டும் இல்லையென்றால் கியூபாவின் சரித்திரத்தை முதல் பக்கத்திலிருந்து மீண்டும் மாற்றி எழுதவேண்டிவரும்.....
...
காலனி இல்லாமல்  குழந்தைகள் நடந்துபோவதைக் கண்டபோது ஃ பிடல் காஸ்ட்ரோவுக்கு கோபமும், துக்கமும் பீறிட்டது.  அப்போதுதான் உயர்கல்வி முடித்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்.  தோட்டங்களிலும், வயல்களிலும், முரட்டுப்பாதைகளிலும் எப்படி இவர்கள் நடந்துபோகிறார்கள்? ஒரு சதை செருப்பு வாங்கக்கூட இவர்களிடம் காசில்லையே?  இவர்களுக்கு மட்டும் ஏன் இப்படி ஒரு கொடுமை?  எந்த நோய் வந்தாலும் முதலில் இவர்களைத்தானே தாக்குகிறது?  வியாதிகளின் இருப்பிடமாக இவர்கள் மாறிப்போவதை ஏன் யாராலும் தடுக்க முடியவில்லை?  அவர்களோடு சேர்ந்து விளையாடும்போதும், கதை பேசும்போதும் திடீர் திடீரென்று இப்படி ஏதாவது கேள்விகள் முளைத்துக் கொண்டே இருக்கும்....
----
தீபச் செல்வனின் "உறங்காத நிலம்" என்ற கவிதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அடுத்து பாவண்ணனின், "பனிக்கட்டியாகக் கரையும் பாரங்கள்".  மதுமிதா தொகுத்து, சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ள, "இரவு: இருள் வெளியில் எழுத்தும், அனுபவமும்" நூல் பற்றியது.  அதிலிருந்து:

முப்பதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகளிடமிருந்து மறக்க முடியாத இரவுகளின் அனுபவத்தை எழுதி வாங்கி, மதுமிதா நூலாகத் தொகுத்துள்ளார்.  அந்த அன்பவங்களின் தொகுப்பை ஒருசேரப் படிக்கும் நேரத்தில் பலவிதமான வாழ்க்கையை ஒரே நேரத்தில் நாமே வாழ்ந்தது போன்ற உணர்வைத் தருகிறது.  பார்ப்பதற்கு நமக்கு பலஜோடிக் கண்கள் கிடைத்தது போன்ற பரவசம் எழுகிறது.  இந்த உலகத்தில் அறிந்துகொள்வதற்கு கணக்கற்ற விஷயங்கள் இருக்கும்போது, நாம் நம்மை வாட்டியெடுக்கும் ஒற்றை விஷயத்திலேயே ஆழ்ந்து, மனம் சோர்ந்து, மீலாது கிடக்கும் உண்மையை உணர்த்துகிறது.  இந்த அனுபவம் ஒருவகையில் நம்மை மீட்டெடுக்கும் வெளிச்சம் நம் பாரத்தை பனிக்கட்டியாக்கிக் கரைத்துவிடும் ஆற்றல் கொண்ட வெளிச்சம்.

"படிக்க பாதுகாக்க" பகுதியில் என் கவனத்தை ஈர்த்தது:

கல்குதிரை; ஆசிரியர்: கோணங்கி; பக்கங்கள் 280; விலை ரூ.190;   வெளியீடு: கோணங்கி, 6 /1700  இந்திரா நகர், கோவில்பட்டி 628502. 
தமிழ் சிற்றிதழ்கள் வரலாற்றில் இடம் பெறக்கூடிய மிக முக்கியமான பத்திரிகைகளில் ஒன்று கல்குதிரை.  இப்பொழுது, வேனிற் காலங்களின் இதழாக வருடத்திற்கு ஒருமுறை மட்டும் கல்குதிரையைக் கொண்டு வருகிறார் கோணங்கி.  இது இந்த வருடத்துக்கான இதழ்.  புதிய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகள், சமகால உலக இலக்கிய மொழிபெர்யர்ப்புகள், எழுத்தாளர்கள் நேர்காணல்கள் என படிக்க நிறைய இருக்கிறது.ஒரு அருமையான, சிறப்பான, பல்சுவை மாத இதழ்.  பெரிதும் வரவேற்கத்தக்கது.  (அம்ருதா சிறந்த பல நூல்களையும் வெளியிடுகிறது. அதில் "முத்துக்கள் பத்து" என்ற தலைப்பில் தமிழகத்தின் சிறந்த எழுத்தாளர்களின் பத்து சிறுகதைகள் தொடர்ந்து புத்தகங்களாக வந்து கொண்டிருக்கின்றன.  தம்பி நெல்லையப்பன் அவற்றைத் வாங்கிச் சேர்த்து வருகிறான். திருப்போரூர் சென்றிருந்தபோது  அவனிடமிருந்து சிலவற்றை மட்டும் நான் வாங்கிப் படிக்க முடிந்தது.)  

நன்றி:  "அம்ருதா"

கருத்துக்கள்-24: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

... மாநிலக்  கல்வித்  திட்டத்தை  அப்படியே  தூக்கிவைத்து, இதுதான் சமச்சீர்க் கல்வித் திட்டம் என அறிவித்துவிடவில்லை.  சி.பி.எஸ்.ஈ. பாடத் திட்டத்தை எந்த அடிப்படையில் தயாரிக்கிறார்களோ, அதே தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன தேசியக் கலை திட்டத்தின்படிதான் சமச்சீர் கல்வி பாடங்களும் உருவாக்கப்பட்டுள்ளன.    ஐ.ஐ.டி. பேராசிரியர்கள், பலகலைக் கழக, கல்லூரி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் எனத் திறமை, தகுதி வாய்ந்தவர்கள்தான் இந்தப் பாடத் திட்டத்தை உருவாக்கித் தந்தார்கள்.  தரத்தில் எந்த சமரசமும் செய்யப்படவில்லை. 'ஒவ்வொரு வகுப்பு மாணவர்களின் புரிந்து கொள்ளும் திறனுக்கேற்ப பாடங்கள் உருவாக்கப்படவேண்டும்' எனும் குழந்தை மனநல நிபுணர்களின் கருத்தையும் விட்டுவைக்கவில்லை.  மாணவர்கள் படிப்படியாக, சீரான வளர்ச்சிப் போக்கில் பள்ளிப் படிப்பை நிறைவு செய்யும் வகையில், புதிய முறையை உருவாக்கினோம்.  இதனால், அந்தந்த வயதுக்கு மீறிய பாடச் சுமை இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது.  அகில இந்திய நுழைவுத் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளக்கூடிய வகையில், புதிய மதிப்பீட்டு முறை சமச்சீர்க் கல்வித் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு பாடத்தின் முடிவிலும், கேள்விகளுக்குப் பதில் எழுதும் முறையை மாற்றி, படித்த பாடத்தில் உள்ளவற்றைப் பகுப்பாய்வு செய்து, தீர்வுகளைச் சொல்லக்கூடிய முறை சேர்க்கப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாணவனின் ஆளுமைத் திறனையும் வளர்க்கக் கூடிய முறை இது... 

-  பள்ளிக் கல்வித்துறை முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு

நன்றி:  ஜூனியர் விகடன், ஜூலை 27 , 2011

24 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-4: "பாடம்", சிற்றிதழ் , ஏப்ரல் 2011

அண்மையில்  "பாடம்"  என்ற சிற்றிதழை வாங்கினேன்.  அது ஏப்ரல் 2011 இதழ். பை-லைனில்  "குன்றா வளர்ச்சி அரசியல் மாத இதழ்"  என்று குறிப்பிட்டிருந்தார்கள்.  அதில் தரமான, சமுதாயப் பிரக்ஞை உள்ள பல கட்டுரைகள் படித்தேன்.  தரமான சிற்றிதழ்கள் வளரவேண்டும் என் நினைப்போர் ஆதரவு தரவேண்டிய நல்ல மாத இதழ்.  அதிலிருந்து:

இதழின் "வரவேற்பறை"  தலையங்கம் - இதழின் ஆசிரியர் அ.நாராயணன்   அவர்களின் அருமையான கட்டுரை  -  "பாவம், குப்பம்மாளுக்குக் கிடைக்காது!" 
கிருஷ்ணகிரியிலிருந்து பஞ்சம் பிழைக்க கோவை வந்த ஒரு குடும்பத் தலைவி.  ஒன்பது மாத கர்ப்பிணி.  அடிப்படை வசதிகளில்லாத ஒரு குப்பத்தில் வாழ்ந்தார்.  காலை ஐந்து மணிக்கே எழுந்து, ரயில் பாதை அருகே காலைக் கடன்களை முடித்தாக வேண்டும்.  ஒரு நாள் பிரசவ வலி ஏற்பட்டு, ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு, ஆயாசத்தில் தண்டவாளத்தில் சாய, அடுத்த வந்த நீலகிரி எக்ஸ்ப்ரஸ் அவளைச் சிதைக்க, காலை ஏழு மணி அளவில் வந்தவர்கள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை எடுத்து, மருத்துவ மனையில் சேர்க்க, அது உயிர் பிழைத்ததா என்று தெரியாத நிலை.  இதிலிருந்து சில பகுதிகள் மட்டும் ஆசிரியரின் வார்த்தைகளில்: 

"... ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வாங்க முடிந்த அவள், கக்கூஸ் போக கட்டணக்காசு கொடுக்க முடியாமல், இருட்டு கலையுமுன் காடு கழனி செல்ல வேண்டி வந்ததா?.... ஒரு கக்கூஸ் பிரச்சினை அவளது உயிரைப் பறித்தது நியாயமா?...

எல்லாமே இலவசம் என்று அறிவிக்கும் ஆட்சியாளர்கள், குப்பம்மாள் போன்றவர்கள் கழிப்பதற்காக ஒன்று செய்வதில்லையே? ... 

தங்க நாற்கர சாலைகளுக்கும், மேம்பாலங்களுக்கும், பூங்காக்களுக்கும், புதிய தலைமைச் செயலகங்களுக்கும் அரசு-தனியார் ஒப்பந்தங்கள் மூலம் ஆயிரக்கணக்கான கொடிகளை முதலீடு செய்ய நினைப்பவர்கள், குப்பம்மளுக்கும், அவரது குழந்தைகளுக்கும், கவுரவமாக மலம் கழிப்பதற்கும், கழுவிக் கொள்வதற்கும், உறுதி செய்ய முடியாதா?  

பஸ் பிரயாணம் இலவசம் என்கிறார்கள், ஆனால் பேருந்து நிலையங்களில், தரமான குடிநீருக்கும், சுத்தமான கழிப்பறைக்கும் ஒன்றும் செய்வதில்லையே?  பரம ஏழை கூட, ஒரு பாட்டில் குடிநீரை தனியாரிடமிருந்து பதினைந்து ரூபாய் கொடுத்து வாங்க வேண்டிய அவலம் அல்லவா இன்றைக்கு சுட்டெரிக்கும் உண்மை!  எதற்கெல்லாமோ  சாலை மறியல்!  இந்த ஒரு காரணத்திற்காகவே தமிழகம் ஸ்தம்பிக்கக் கூடாதா?

இயற்கையாக சாகலாம்! இயற்கை சீற்றத்தினால் சாகலாம்! தீவிரவாதிகளிடம் போராடி சாகலாம்! வறுமையினால் சாகலாம்! உண்மைக்காக சாகலாம்.  ஆனால், கக்கூஸ் போக இடம் தேடி இருட்டுப் புதர்களில் பாம்பும் விஷப்பூச்சிகளும் கடித்தோ, ஓடும் ரயில்களில் அடிபட்டோ சாகக் கூடாது. ஆனால் பல குப்பம்மக்கள் இவ்வாறு செத்திருக்கிறார்கள் நம் இந்தியாவில்....

அடுத்து டவுன் டு எர்த் (DOWN TO EARTH) ஆங்கில மாத இதழை ஆதாரமாகக் கொண்டு, டி.எஸ்.ஜம்புநாதனின் "விளையாட்டுக்கள் முடிந்தன, வேதனைகள் முடியவில்லை".   "குடிசைவாழ் மக்களும், பணித்திட்டங்களுக்காக சிறு மனைகளில் வசித்தவர்களும் காமன்வெல்த் விளையாட்டின் பொது எவ்வாறு வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள் என்று ஒரு அறிக்கை அண்மையில் வெளியாகி இருக்கிறது.  மனித உரிமைகள் எவ்வாறு மீறப்பட்டிருக்கின்றன என்ற துயரக் கதையை அது வெளியிட்டிருக்கிறது.  ஒரு தோராயமான மதிப்பீட்டின்படி சுமார் இரண்டு லட்சம் மக்கள் இந்த காமன்வெல்த் விளையாட்டுத் திட்டங்களின் பொது வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். ... சேரிகளற்ற உலகத்தரம் வாய்ந்த நகரமாக தில்லியை உருவாக்கும் மறைமுகமான திட்டமே சேரிகள் இடிக்கப்பட்டதற்கு உண்மையான காரணமாகும். ... காமன்வெல்த் விளையாட்டுகளினால் முறையற்ற வழிகளில் செல்வம் குவித்தவர் சிலர் ஒரு புறம்.  தங்களின் சிறு குடிசைகளையும், பிழைப்பையும் கூட இழந்து வாழ வழியின்றித் தவிக்கும் மக்கம் மறுபுறம்.  பின் எப்படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்?

ஜம்புநாதனின் இரண்டாவது கட்டுரை - "பாதரச விளக்குகளா, பாதக ரச விளக்குகளா?"  "சி.எ ஃப்.எல். ஒளிர் விளக்குகளில் உள்ள பாதரசம் நரம்பு மண்டலம், சிறு நீரகங்கள், கல்லீரல், சுவாசப்பை ஆகிய உறுப்புகளை பாதிப்பது மட்டுமின்றி கை கால் அசைவு, நினைவாற்றல் ஆகியவற்றைக் கூட பாதிக்கக் கூடியது.  ... இன்றைக்கு நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சி.எ ஃப்.எல். விளக்கிலும் மூன்றிலிருந்து பன்னிரண்டு மில்லிகிராம் வரை பாதரசம் கலந்திருக்கிறது.  ஆனால் ... அகில உலக தர அமைப்பின் தர நிர்ணயங்களின்படி, ஐந்து மில்லிகிராமிற்கு மேல் பாதரசம் இருக்கக் கூடாது.  அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ... ஒரு மில்லிகிராம் பாதரசத்துடன் இந்த விளக்குகளை உற்பத்தி செய்யமுடிகிறது.... இந்த விளக்குகள் உடைந்து பாதரச ஆவி வெளிப்பட்டால், வீட்டில் உள்ளவர் பாதிக்கப்படுவர். .. ஃ ப்யூஸ் ஆகி குப்பைக் கிடந்குகளுக்குச் சென்றால் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும்.  2009 -ஆம் ஆண்டுவரை உற்பத்தி செய்யப்பட முப்பத்து கோடி விளக்குகள், கிட்டத்தட்ட 1750 கிலோ எடை உள்ள பாதரசம் கலந்த குப்பைகளை சேர்த்திருக்கும்....." 

அடுத்து, ஆசிரியர் நாராயணனின் சிறப்புக் கட்டுரை - "துயரத்திலும் கண்ணியம் காக்கும் ஜப்பானியர்கள்"  அதிலிருந்து: 

"...இதுவரை, அதிகாரபூர்வமாக 24,000 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கானவர்கள் வீடிழந்து முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ஜப்பானுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு 300 பில்லியன்  டாலர்கள் இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.  ஜப்பானில் 55 அணு உலைகள் இருப்பதாக விக்கிப்பீடியா கூறுகிறது.  இவற்றில் ஆறு உலைகள் பதிப்படைந்ததால் மூடப்பட்டுள்ளன. 

குழாயில் வரும் குடிநீரில்கூட அணுக்கதிர்வீச்சு இருப்பதாக அரசு அறிவித்துள்ளது.  பால் உட்பட ஒவ்வொரு உணவுப் பொருளும் சோதிக்கப்பட்ட பின்னரே விநியோகிக்கப்படுகின்றன.  

நல்ல குடிநீருக்குத் தட்டுப்பாடு.  ஆயினும் மக்கள் பதறவில்லை. அரசின் ஒவ்வொரு அறிவிப்பினையும் தெளிவாகக் கடைப்பிடிக்கின்றனர்.  ஒருவொருக்கொருவர் உதவிக் கொள்கின்றனர்.  
தட்டுப்பாடு இருப்பினும், வியாபாரிகள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களை, தாமாக முன்வந்து சலுகை விலையில் விற்கின்றனர்..."

அடுத்து, தூரிகை எழுதிய "தலைவர்கள் எந்த சாதி?" அதிலிருந்து:  "விட்டு விடுதலையாகி நிற்பாய் அந்த சிட்டுக் குருவியைப்போல"  என்பது மிக மிக அப்போர்வமான உணர்வு.  மனக்கட்டுகளை உடைத்துக் கொண்டு ஜிவ்வென்று எம்பிப் பறக்கும் எழுச்சி.  இந்த அற்புதமான உணர்வோடு பிறருக்காகவே வாழ்ந்து காட்டியவர்களை அறிஞர்கள், பெருந்தகையோர், மக்கள் தலைவர்கள் என்று அழைக்கிறோம்.... இருக்கும் நிலையிலிருந்து வேறு உயர்ந்த நிலைக்கு மாறுவதைத்தான் முன்னேற்றம் என்கிறோம்.  சாதி என்ற மாறாத விலங்கை சர்வ சதா காலமும், பிறப்பிலிருந்து, இறந்த பின்பும் மாட்டிக் கொண்டு அலைந்தால், நாம் எப்படி முன்னேறுவது?...அறிஞர்கள் பூமியில் பிறந்த நாட்களையும், மறைந்த நாட்களையும் நினைந்து கோலாகலமாகக் கொண்டாடுவது நம் வழக்கமாகிவிட்டது.  எதற்காக, எவ்வாறு, நாம் கொண்டாடுகிறோம் என்பதை ஒரு கணம் நினைத்தால் மனம் வேதனைப் படுகிறது.  அன்று  உண்டு இல்லை என்று இந்த மகான்களை ஒருகை பார்த்து விடுகிறோம்.  அநியாயமாக அவர்களைச் சாதிக் கூண்டுகளில் ஏற்றுகிறோம். ... சாதீயம், மதத்துவேசம், மொழி வெறி, இன வெறி என்பதற்கு எதிராகப் போரிட்டு உன்னதமாக வாழ்ந்தவர்களின் மேல் நமது அழுக்குகளைப் பூசலாமா? ....

ஆலன் ஆக்செல்ராடு ஆங்கிலத்தில் எழுதிய "Gandhi CEO " என்ற நூலை தமிழாக்கம் செய்து தொடராக எழுதி வருகிறார் ஈரோடு பசுமை இயக்கத்தின் தலைவர், மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள்.  இன்னும் இது போன்ற பல சிறப்பான சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்.  மொத்தத்தில் அனைவரும் வாசிக்க வேண்டிய, ஆதரிக்க வேண்டிய இதழ்.  வளர்க பாடத்தின் சிறப்பான சேவை!

நன்றி:  "பாடம்" 

கருத்துக்கள்-23: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

"நான்கு ஆண்டுகளாக நடந்த விரிவான ஆய்வுக்குப்பின், சமச்சீர் கல்வி கொண்டுவரப்பட்டது. சமச்சீர் கல்வியை அமல்படுத்துவதில்லை என ஒரே நாளில் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பாடப்புத்தகத்தில் சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. இரு நூறு கோடி ரூபாய் செலவில் ஒன்பது கோடி புத்தகங்கள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கத் தயாராக உள்ளன. இந்தப் புத்தகங்களை எரிக்கப் போகிறார்களா. கிட்டங்கியில் வைக்கப் போகிறார்களா; பாடப் புத்தகங்கள் இல்லாமல் இரண்டு மாதங்களாக மாணவர்கள் ஏன் கஷ்டப்பட வேண்டும், குழந்தைகள் மத்தியில் அரசு ஏன் அரசியல் செய்யவேண்டும்..."


- மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு ஏ.கே.கங்குலி


நன்றி: தினமலர், மதுரை, ஜூலை 22 , 2011

மனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011

மனதில் பதிந்தவை-3: புதிய தலைமுறை ஜூலை 21, 2011
------------------------------------------------------------------------------------

இதற்கடுத்த இதழ் ஏற்கனவே வெளியாகிவிட்டது. நான் இன்னும் இந்த இதழைப் பற்றிய கருத்துக்களைப் பதிவு செய்தபாடில்லை. ஆனந்த விகடன் போல் நான் வாரம் தவறாமல் வாங்கும் இதழ் இது.

இந்த இதழின் அட்டைப்படக் கட்டுரை, "பந்தாடப்படும் பள்ளிக்கல்வி". ஒரு கோடிக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தோடு அரசியல்வாதிகள் விளையாடும் பொறுப்பற்ற, கேவலமான, ஈகோ விளையாட்டு. வேதனை! இரண்டு மாதம் ஏற்கனவே வீணாகி விட்டது, விரைவில் முடிவுக்கு வந்தால் சரி.

தலையங்கம்: ஊக்க மருந்தினால் அவமானப்பட்டு, மனம் உடைந்து நிற்கும் நம் விளையாட்டு வீரர்களும், இந்தத் தலைகுனிவிற்குக் காரணமான பயிற்சியாளர்களைப் பற்றியும். இந்தக் குளறுபடிக்கேல்லாம் முடிவேது?

எரிபொருள் சேமிப்பு பற்றிய கலந்துரையாடல். ஏனோ மிகவும் மேலோட்டமாக, உப்புச் சப்பில்லாமல் இருக்கிறது. இது குறித்து என்னுடைய கருத்துக்கள்:

1. தேவையில்லாமல் சோம்பேறித்தனத்தாலும், பழக்கத்தாலும் எதற்கெடுத்தாலும் வாகனங்களைப் பயன்படுத்துவது. என்னிடமும் இந்தக் கெட்ட பழக்கம் இருக்கிறது. மாலை நேரம் காற்று வாங்கிக் கொண்டு, நடந்து கோவிலுக்குச் செல்லலாம். அது உடலுக்கும், மனதிற்கும் நல்லது. ஆனால் பெரும்பாலும் டூ வீலரிலேயே செல்கிறேன். நடக்கும் பழக்கத்தை பாப்புலரைஸ் செய்யவேண்டும். இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

2. ஒரு காலத்தில் எவ்வளவு தூரம் போக வேண்டியிருந்தாலும் சைக்கிளில்தான் செல்வேன். இருபத்தைந்தாண்டுகளுக்கு மேலாகிறது சைக்கிள் ஒட்டி! தொடர்ந்து சைக்கிள் ஒட்டி இருந்தால் எனக்கு சர்க்கரை வியாதியும், கொலஸ்ட்ரால் பிரச்சினையும் வந்திருக்காதோ என்னவோ. மேலை நாடுகளில் சைக்கிள் சவாரி இயக்கங்கள் செயல்படுகின்றன. அதுபோல் இந்தியாவிலும் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் இயக்கங்கள் வேண்டும். அரசு தன் பங்குக்கு சைக்கிள்கள் மீதான சகல வரிகளையும் நீக்கலாம். சைக்கிள்களுக்கென சாலையின் தனி 'லேன்' தரலாம்.

3. பெட்ரோல், டீசல் ஆகியவற்றுக்கு இரட்டை விலை முறை. பேருந்து, லாரி போன்ற போது வாகனங்களுக்கு குறைந்த விலையிலும், தனியார் வாகனங்களுக்கு 'ரேஷன்' முறையிலும் வழங்கலாம். குறிப்பிட்ட அளவுக்கு மேல் தேவைப்பட்டால், இரட்டிப்பு விலை கொடுத்து ஒப்பன் மார்க்கெட்டில் வாங்கும்படி இருக்க வேண்டும்.

4. அமெரிக்காவில் நிக்சன் அதிபராயிருந்த போது, முயன்ற, பெட்ரோல் பங்குகளுக்கு வாரம் ஒரு நாள் விடுமுறை (ஞாயிறு) அளிக்கலாம்.

5. எரிபொருளைக் கபளீகரம் செய்யும் (Gas Guzzlers) சொகுசு வாகனங்களுக்கு கடுமையான வரி, எரிபொருள் வரி, என்று தனியாக விதிக்கலாம். அது தவிர, அவற்றுக்கான வருடாந்திர சாலை வரிகளும் கடுமையாக இருக்க வேண்டும்.

6. மாற்று எரிபொருள் ஆராய்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். இக்கட்டுரையில் பயோடீசல் பற்றியும், காட்டாமணக்கு பயிரிட்டுப் பின்னர் நிறுத்தியதைப் பற்றியும், குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்து ரயில்வேயில் ஓடும் டீசல் கோச்களுக்கு (திருச்சி-மானாமதுரை, திருச்சி-காரைக்குடி, திருச்சி-லால்குடி போன்ற பல இடங்களுக்கும்) பயோடீசல் மட்டுமே எரிபொருள். காட்டாமணக்கைப் பயன்படுத்துவதில் ஏதாவது பிரச்சினை இருந்தால் அதற்குத் தீர்வு காணவேண்டுமே தவிர பயிரிடுவதை நிறுத்தக்கூடாது. நம் ஊர்களில் தரிசு நிலங்கள் நிறைய இருக்கின்றன. இவற்றில் பயோடீசல் தயாரிக்க உதவும், எளிதில் பயிரிடக் கூடிய தாவரங்களைப் பயிரிட ஊக்குவிக்கலாம். அவற்றைக் கொள்முதல் செய்வதிலும் பயிரிடுவோருக்கு எந்தச சிரமும் இல்லாமல், தேடி அவர்கள் இடம் சென்று, கொள்முதல் செய்ய வகை செய்யவேண்டும்.

7. பேட்டரி வாகனங்களை ஊக்குவித்தல். ஆரம்பத்தில் எல்லாப் புது முயற்சிகளிலும் பிரச்சினைகள் மலைபோல் தோன்றத்தான் செய்யும். முதலீடு, பராமரிப்புச் செலவு அதிகம் இருக்கத்தான் செய்யும். நவீன ஆராய்ச்சிகள் மூலம் இப்பிரச்சினைகளைக்குத் தீர்வு காணவேண்டும். பின்னர், எல்லாமே எளிதாகிவிடும். இதில் இன்னொரு நல்ல விஷயம், சுற்றுச் சூழல் மாசடைவது குறையும். பழைய பேட்டரிகளை ரீசைக்கிள் செய்யமுடியும்; அப்படிச் செய்யும் வசதி ஏற்கனவே இருக்கிறது. பயன்பாடு அதிகமாகும்போது, இவ்வசதி பரவலாக எல்லா இடங்களுக்கும் வந்துவிடும்.

8. உலகெங்கும் எரிபொருள் சிக்கனத்திற்கு என்னென்ன செய்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அவற்றை நாமும் பின்பற்ற வேண்டும். ஏனென்றால் இது உலகளாவிய பிரச்சினை. நிச்சயமாக புதிய, புதிய சிந்தனைகள், வழிமுறைகள் இருக்கத்தான் செய்யும்.

இதுபோல் என்னால் நிறைய சொல்லமுடியும். கால அவகாசம் வேண்டும். சிந்தித்து புதிய கருத்துக்களை பின்னர் பதிவு செய்கிறேன்.

அடுத்து, "என் பள்ளி" - பிரபலங்கள் எழுதும் தொடர். முதல் கட்டுரை கவிஞர் வைரமுத்துவுடையது. வைரமுத்துவின் தமிழுக்கு மயங்காதோர் யார்?

அடுத்து, "அள்ளி வழங்கும் நெல்லி". இதிலிருந்து: நீர் கலக்காத நேரடியாக எடுக்கப்பட்ட நெல்லிச்சாறு அமுதம் போன்றது. ஒரு மேசைக்கரண்டி அளவுக்கு அருந்தினால்கூட கீழ்க்கண்டவற்றை சப்பிட்டதற்குச் சமம்:

ஒரு கிலோ அன்னாசி (அல்லது)
இரண்டு கிலோ கொய்யா (அல்லது)
ஒன்பதரைக் கிலோ ஆரஞ்சு (அல்லது)
பதினெட்டு கிலோ திராட்சை (அல்லது)
ஐம்பத்திரண்டு கிலோ வாழைப்பழம் (அல்லது)
நூற்றிரண்டு கிலோ ஆப்பிள் (அல்லது)
நூற்றைம்பது கப் பால்.

நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் தொடர் - மனிதர், தேவர், நரகர். அவரது சினிமா அனுபவம் சுவையாய் இருந்தது.

சென்ற வாரம் பகுதியில், தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் மறைவு, டெஸ்ட் கிரிக்கட்டில் நானூறு விக்கட் எடுத்து ஹர்பச்சனின் சாதனை, தெற்கு சூடன் என்ற புதிய நாடு உதயம், மும்பையில் கனமழை போன்ற பல தகவல்கள்.

வரும்வாரம் பகுதியில் நெல்சன் மண்டேலா பற்றிய குறுங்கட்டுரை. தன் நாட்டின் விடுதலைக்காக இருபத்தேழு ஆண்டுகள் சிறையில் கழித்த ஆப்பிரிக்க மகாத்மா. தற்போது அவருக்கு வயது தொன்னுற்றுமூன்று! 2004 ஜூலை பதினாறு, கும்பகோணம் பள்ளியில் தொன்னுற்றுமூன்று சிறார்களை தீ பலிகொண்ட நாள். எனக்குத் தெரிந்து காரணமான குற்றவாளிகள் யாரும் தண்டிக்கப்ப் பட்டதாகத் தெரியவில்லை என்பது வேதனையான விஷயம்.

தமிழ் வார இதழ்களில் தனெக்கென ஒரு சிறப்பான, வித்தியாசமான வழியமைத்து, பாராட்டத்தக்க பல அம்சங்களுடன் வெற்றிநடை போடுவது மகிழ்ச்சியான விஷயம். மனமார்ந்த பாராட்டுக்கள். 

நன்றி: "புதிய தலைமுறை"

21 ஜூலை, 2011

கருத்துக்கள்-22: சமச்சீர் கல்வி தொடர்பான விவாதங்கள்

 ....

....நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே, புத்தகங்களை அச்சடித்து, நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு உள்ளாகி இருக்கிறது தமிழக அரசு.  இப்படி ஒரு அறிக்கையை அரசு நியமித்த குழுவினர் கொடுப்பார்கள் என்று நீதிமன்றமே எதிர்பார்க்கவில்லை.  அரசு மீது நம்பிக்கை வைத்து, நீதிமன்றம் அரசையே ஒரு குழு அமைக்கச் சொன்னது.  ஆனால், சமச்சீர் கல்வித் திட்டத்தை எதிர்த்தவர்களைக் கொண்டே குழு அமைத்தது அரசு.  அதனால்தான், இப்படி ஒரு மோசமான அறிக்கையை அவர்கள் தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

'இந்தப் பாடத் திட்டத்தைக் கற்றுக்கொள்ள முடியாது.  நகர்ப்புற, வசதியான மாணவர்களால் மட்டுமே முடியும்' என்றெல்லாம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள்.  இன்று குறைந்த வசதிகளை மட்டுமே கொண்டு, நூறு சதவிகிதம் தேர்ச்சி பெறும் கிராமப்புறப் பள்ளிகளை நான் காட்டவா?  மொத்தத்தில் இது பாடத் திட்டம் தொடர்பான பிரச்னையே இல்லை.  கல்விக் கட்டணக் கொள்ளை அடிக்கும் கும்பலுக்கும், நியாயமான சமச்சீரான கல்வி வேண்டும் என்பவர்களுக்குமான போராட்டம் என்பதுதான் உண்மை!.
 ....
 ...மெட்ரிகுலேஷன் பாடத்திட்டத்தில் ஆயிரம் குறைகளையும், ஓட்டைகளையும் நான் கண்டுபிடித்து சுட்டிக் காட்டவா?....
....
மெட்ரிகுலேஷன் தேர்வுகளில்  சாய்ஸ் நிறைய உண்டு.  அதனால், அதைக் கற்பிக்கும் ஆசிரியர்களும், 'குறிப்பிட்ட பகுதியை மட்டுமே படி' என்று மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்கள்.  அதை மட்டுமே படித்து தேர்வு எழுதுகிறான் மாணவன்.  ஆனால், சமச்சீர் கல்வியில் சாய்ஸ் கிடையாது. முழுப் புத்தகத்தையும் படித்து மெத்த அறிவு பெறுகிறான் மாணவன்......

-  மூத்த கல்வியாளரும், முன்னாள் துணை வேந்தருமான வசந்தி தேவி அவர்கள், ஜூனியர் விகடன், ஜூலை 17 , 2001.

நன்றி:  வசந்தி தேவி அவர்கள் மற்றும் ஜூனியர் விகடன்

18 ஜூலை, 2011

மனதில் பதிந்தவை-2: புதிய புத்தகம் பேசுது, ஜூன் 2011

புதிதாக வெளிவரும் புத்தகங்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், பல படைப்பாளிகளின் சிந்தனைகளை அவர்களது நேர்முகம் வழியேயும், விமர்சனக் கட்டுரைகளின் வழியேயும் அறிந்துகொள்ள உதவும் இந்த இதழ் எனக்கு மிகவும் பிடித்த இதழ்களில் ஒன்று.


ஜூன் 2011 இதழில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களது நேர்காணல், தலையங்கம் - உலகம் வாசிக்கிறது, இரா.நடராஜன் அவர்களின் அயல்மொழி அலமாரி-9 (குருவாசகம்), நூல் அறிமுகம் - முனைவர் து.மூர்த்தி அவர்களின் தமிழில் புதிய தடங்கள் (விமர்சனங்களைக் கோரி நிற்கும் 19 கட்டுரைகள்), ச.சுப்பா ராவின் தாத்தாவின் டைரிக் குறிப்புகள் (வாழ்க்கை சார்ந்த நினைவுப் புரட்டல்கள்), மற்றும் ஐந்தாறு வகுப்பறைகளும் , பத்துப் பதினைந்து காக்கைகளும் (சுடர் ஒளியின் குழந்தைகளின் உலகிலிருந்து ஒரு குரல்), கட்டுரை (ஆர்.நீலா எழுதியுள்ள இரா.நடராசனின் கதைகளில் புதிய உத்திகள்), முதல் பிரவேசம் (குட்டி ரேவதியின் கவிதையின் ஒற்றைக்கயிறு), தமிழ்ச்செல்வன் அவர்களின் என் சக பயணிகள்-8 (அஸ்வகோஷ் என்கிற இராஜேந்திர சோழன்) என்று பல அற்புதமான, சுவையான படைப்புகள்.


முதலில் எஸ்.ராவின் நேர்காணல். ஏற்கனவே பதிந்துள்ளபடி, எனக்கு மட்டுமல்ல தமிழ் வாசகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்த அற்புதமான எழுத்தாளர். அவரை எங்களது காரைக்குடி புத்தகத் திருவிழாவிற்கு அன்போடு அழைத்தது, அவர்கள் எங்களது அழைப்பை ஏற்று வந்தது, ஆனால் அவரது சொற்பொழிவை கேட்கமுடியாமல் எங்கள் அமைப்பில் சிலர் செய்த குளறுபடி, அதனால் எனக்கு ஏற்பட்ட வேதனை இவற்றை ஏற்கனவே என் வலைப்பூவில் பதிவு செய்திருக்கிறேன். நான் படித்த அவரது முதல் படைப்பு விகடனில் தொடராக வந்த அவரது துணையெழுத்து. அதன் பின்னர் உயிர்மை, உயிர் எழுத்து, காலச்சுவடு போன்ற இதழ்களிலும், அவரது இணையத் தளத்திலும் அவரது எழுத்துக்களைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். மேலும் யூடூபில் அவரது வீடியோ நேர்காணல்களை தகவிறக்கம் செய்து பார்த்து-கேட்டு மகிழ்ந்தது எல்லாவற்றையும் இங்கே சொல்லவேண்டியிருக்கிறது. புத்தகத்தைத் திறந்ததும் அவரது நேர்காணலுக்குச் சென்று பேராவலுடன் படித்தேன். மிகச் சிறந்த நேர்காணல் அது. எஸ்.ராவைப் பற்றிய ஒவ்வொரு செய்தியும், அவரது சிந்தனைகளும் மேலும் மேலும் என்னை அவருக்கு அருகில் கொண்டு சென்றன. என்ன, அந்த தலைப்பு மட்டும் (ரஷ்ய இலக்கியங்கள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன) சற்று நெருடலாக இருந்தது. யாரோ கூடி, திட்டமிட்டு, சதிசெய்து, ரஷ்ய இலக்கியங்களை மக்கள் படிக்கவிடாமல் செய்கின்றனர் என்பது போன்ற ஒரு கருத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.


சோவியத் ரஷ்யா உடைவதற்கு முன் வரை, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ரஷ்ய நூல்களை, குறிப்பாக இலக்கியங்களை, ஆங்கிலத்திலும், தமிழிலும் அருமையான வளவளப்பான தாட்களில், நேர்த்தியான பைண்டிங்குடன், நம்பமுடியாத மிகக் குறைந்த விலையில் சந்தைப் படுத்தியது. அந்தக் கால கட்டத்தில் நான் ரஷ்ய கிளாசிக்குகளையும், சை-ஃ பை, ரஷ்யாவின் பல மாநிலங்கள் மற்றும் ஊர்கள் பற்றிய வண்ண வண்ண நூல்கள் மற்றும் பல நூல்களையும் வாங்கிக் குவித்திருக்கிறேன், படித்து மகிழ்ந்திருக்கிறேன். OUP வெளியிட்டுள்ள பத்து பாகங்கள் கொண்ட ஆக்ஸ் ஃபோர்ட் செகாவ் நூலை நான் மதுரைக் காமராசர் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து வாங்கிப் படித்திருக்கிறேன். செகாவின் நாடகங்கள், சிறுகதைகள், வாழ்க்கை வரலாறு என்று தேடிதேடி படித்தேன். உலகின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர் செகாவ் என்று போற்றி மகிழ்ந்திருக்கிறேன்.


பொதுவாகவே பிற மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படும் நூல்களைப் படிப்பவர்கள் குறைவு. அதிலும் ரஷ்யன் போன்ற வெளிநாட்டு மொழி இலக்கியங்களைப் படிப்போர் மிகக் குறைவே. மொழி பெயர்ப்பு செய்பவர்களும் குறைவே. இதனால் பதிப்பகங்களும் முன்வருவது குறைவு. இதுதான் சரியான காரணமாக இருக்கமுடியும் என்பது என் தாழ்மையான கருத்து.


ஆனால் இன்று இணையத்தில் பல வெளிநாட்டு மொழி இலக்கியங்களின் ஆங்கில மொழி பெயர்ப்புகள் இலவசமாகவே கிடைக்கின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் 'குற்றமும் தண்டனையும்' (Crime and Punishment) ஆங்கிலத்தில் படித்தேன். தற்போது "காரமசோவ் சகோதரர்கள்" (Brothers Karamazov) என்கிற அவரது மற்றொரு நாவலைப் ப்ராஜெக்ட் கூடன்பர்க்கிலிருந்து தகவிறக்கம் செய்து படித்து வருகிறேன்.


இத்தருணத்தில் மொழி பெயர்ப்பு இலக்கியங்களுக்காகவே தமிழில் வெளிவரும் இதழ்களான 'திசை எட்டும்' மற்றும் 'இனிய உதயம்' போன்றவற்றின் சேவையைப் பாராட்டி இங்கே பதிவு செய்வதில் மகிழ்வடைகிறேன்.


மன்னிக்கவும், எங்கேயோ போய்விட்டேன். மறுபடியும் எஸ்.ராவின் நேர்காணலுக்கு. முதலில் தாகூர் விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் என்ற முறையில் எஸ்.ரா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். பன்னிரண்டு சுவையான பக்கங்கள். எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு தெளிவான சிந்தனைகள்!! இந்த நேர்காணலில் என் மனதில் பதிந்த அற்புதமான கருத்துக்கள் நிறைய இருந்தாலும், இப்பதிவு பெரிதாக நீண்டுவிடும் என்கிற காரணத்தால் ஓரிரு கருத்துக்களை மட்டும் பதிவு செய்கிறேன். (நேர்காணல் செய்திருப்பவர் கீரனூர் ஜாகிர்ராஜா. அவரைப் பற்றியும், அவரது படைப்புகள் பற்றியும் சமீபத்தில் நிறையப் படிக்கிறேன்.)


"மனிதர்கள் மிகவும் சுயநலமானவர்கள் என்பதை நாய்கள்தான் திரும்பத்திரும்ப உலகத்துக்கு சொல்லிக்கொண்டே இருக்கிறது. நாய் ஒரு குறியீடு. அதுவும் தர்மத்தின் குறியீடு. மகாபாரதத்தில் தருமர் சொர்க்கத்துக்கு செல்லும்போது ஒரு நாயை அழைத்துக்கொண்டு செல்கிறார். இருவரில் ஒருவருக்குத்தான் சொர்க்கத்தில் இடம் உண்டு என்று அறிந்தவுடன் அந்த நாயை உள்ளே அனுப்புகிறார். தருமம்தான் நாய் உருவில் வருகிறது என்று இந்தியாவில் ஐதீகம் இருக்கிறது."

"இயற்கையில் மனிதனைத் தவிர எல்லா உயிரினங்களும் இடம்விட்டு இடம் போய்க்கொண்டேதான் இருக்கின்றன. சைபீரிய நாரை நாடு விட்டு நாடு பறந்துவருவது தன்னை விருத்தி செய்துகொள்ளத்தான். எழுத்தாளனும் தன் அறிவை விருத்தி செய்துகொள்ள பயணம் செய்கிறான்."

"எழுதப்பட்ட எல்லா அனுபவங்களிலும் ஒருபாதிதான் நிஜம். அதனால்தான் மார்க் ட்வைன் சுய சரிதை என்பது மறுக்கவே முடியாத பொய்களின் தொகுப்பு என்று சொல்கிறார்."

"...அனுபவத்தை வடிவம் கொள்ளச்செய்வது கற்பனையே. கற்பனை பற்றி நமக்கு தவறான புரிதல் இருக்கிறது. அதை பொய்யான ஒன்று என்றே கருதுகிறோம், உண்மையில் கற்பனைதான் நமது புரிதலின் ஆதாரம்."

"எதுவாக இருந்தாலும் அதை சரியான இடத்தில் ஊன்றினோமானால் வளர்ந்து, கிளைத்து பெரிய விருட்சமாகிவிடும் என்பதை எழுத்தாளர்கள் நிரூபித்துக்கொண்டே இருக்கிறார்கள்."

"குறுங்கதை மரபு மிகப் பழமையானது. எல்லாக் கடவுள்களும் கதை வழியாகவே உயிரோடு இருக்கிறார்கள். ஞானிகள் கதைகளின் வழியேதான் அனுபவ அறிவைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். குறுங்கதை என்பது ஒரு பகிர்வுமுறை."

அடுத்து 'உலகம் வாசிக்கிறது' (தலையங்கம்): சுவையான, படித்து பெரிதும் மகிழ்ந்த தகவல்கள். புத்தக வாசிப்பை ஊக்குவிக்க உலகெங்கும் என்னவெல்லாம் செய்கிறார்கள்! ஸ்பெயினில் கடற்கரை நெடுகிலும் பிரபல புத்தகங்களின் கதாபாத்திர வேடமிட்டு கத்தை கத்தையாய் புத்தகங்களை விற்கிறார்கள். போர்ச்சுகலில் புத்தக வாசிப்பிற்கென மாதாந்திர விடுமுறையுடன், பள்ளி வாசல்களில் புத்தகங்களை வைத்து வாசிப்பை ஊக்குவிக்கிறார்கள். பூங்காக்களில் வாசிப்புக் கூட்டங்கள் நடத்தப் படுகின்றன. சீனாவில் மிஷின்களில் காசு போட்டு, புத்தகத்தின் பெயரை டைப் செய்தால் நாம் விரும்பிய புத்தகத்தை வாங்கலாம். ஜப்பானில் நாம் ஆர்டர் செய்த உணவு வரும்வரை படிக்க மேஜைக்கு அடியிலேயே புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன; அதை நாம் உணவு வரும் வரை படிக்கலாம். டென்மார்க்கில் சாலைகளில் விளக்குக் கம்பங்களில் பெட்டிகளில் புத்தகங்கள் - யார் வேண்டுமானாலும் தாம் படித்த புத்தகங்களை மற்றவர்களும் படித்து மகிழ அங்கே கொண்டு வைக்கலாம். ஸ்வீடனில் செயின்ட் பீட்டர் தினத்தன்று பிள்ளைகள் பெற்றோர்களுக்கு மலர்ச்செண்டு பரிசளிப்பார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு புத்தகங்களைப் பரிசளிப்பார்கள். பாரிஸ் நகரத்தில் வாசிப்பு பூங்காக்கள் வந்து விட்டன. இரவும் பகலும் வாசிக்க விரும்புவோர் வாசிக்கலாம்; அதற்கு வேண்டிய வசதிகள் செய்யப்பட்டுள்ளன. க்யூபாவில் ரேஷன் பொருட்களோடு உலக அளவில் பேசப்படும் புத்தகங்களும் பொதுவிநியோக முறையில் வழங்கப்படுகின்றன.

இரா.நடராசனின் 'குருவாசகம்' (அயல்மொழி அலமாரி-9): பெரும்பாலான ஆசிரியர்கள் செய்தித்தாட்கள் தவிர ஏதும் படிப்பதில்லை என்று பொதுவாக நம்பப்படுகிறது. ஆசிரியர்கள் படிக்க வேண்டிய சில சிறந்த நூல்கள் பற்றி இக்கட்டுரையில் சொல்லப்பட்டுள்ளது. High Hopes : A Lancashire Life by Billy Hopkins; Teaching as Leadership by Steven Far; There are no children by Alex Kotovs; Savage in Inequalities by Jonathan Kozol; Children at War by Peter Singer; இறுதியாக ஒரு மாணவரின் நூல். கண்பார்வையற்ற, காது கேட்காத, வாய் பேசாத ஹெலன் கெல்லருக்குப் பாடம் கற்பிக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த ஒரு லட்சிய ஆசிரியரைப் பற்றிய நூல்: Teacher - Anne Sullivan Macy by Helen Keller. கற்றல் எனும் அற்புத அனுபவத்தை அறிமுகம் செய்த தன் ஆசிரியரைப் பற்றி ஹெலன் கெல்லர் எழுதிய நூல். கெல்லரைப் பற்றி நடராசன் அவர்கள் கூறியதை அப்படியே இங்கே தருகிறேன்: "ஹெலன் கெல்லர் அறுபத்து நான்கு புத்தகங்களை எழுதி இருக்கிறார். மாற்றுத் திறனாளிகளின், மங்கையர் குலத்தின் கலங்கரை விளக்கமாய் போற்றப்படும் ஹெலன் கெல்லர் தன்னை ஆளாக்கிய ஆசிரியையைப் பற்றி எழுதுவதை வாசிக்கும்போது பல இடங்களில் கண்ணீர் வந்து சொற்களை மறைத்து, மனம் விம்முவதைத் தவிர்க்க முடியவில்லை." இக்கட்டுரையின் கடைசி சில வரிகளையும் அப்படியே தருவது நல்லது என நினைக்கிறேன்: "பில்லி ஹாப்கின்ஸ் சொல்வதைப் போல, ஒரு ஆசிரியர் வாசித்துக் கொண்டிருக்கும் புத்தகம் எது என சொல்லுங்கள். அவர் எப்படிப்பட்ட ஆசிரியர் என நான் சொல்லிவிடுவேன். புத்தகம் வாசிக்க முடியவில்லையா... ஆசிரியரா நீங்கள்... உங்கள் வாழ்வை முன்வைத்து ஒரு புத்தகம் எழுதுங்கள்... அதை வாசிக்கிற வேலையை நாங்கள் பார்த்துக் கொள்வோம்."

முனைவர் மூர்த்தியின் "தமிழில் புதிய தடங்கள்". இக்கட்டுரையிலிருந்து நினைவில் நிற்கும் சில வரிகள்: "சுரண்டல் அரசியல் அமைப்பிலிருந்து தமிழ்ச் சமூகத்தை மீட்காமல் தமிழை எப்படிக் காப்பாற்ற முடியும்? தமிழை எப்படி வளர்க்க முடியும்?"

"வாழ்க்கை சார்ந்த நினைவுப் புரட்டல்கள்" என்ற தலைப்பில் எஸ்.சங்கரநாராயணன் அறிமுகம் செய்துள்ள ச.சுப்பா ராவின் "தாத்தாவின் டைரிக் குறிப்புகள்" . இந்நூலைப் பற்றி சில வரிகள்: "நல்ல வாசிப்பு அனுபவம் தந்த புத்தகம். ... அறிவின் ஜாலங்கள் இல்லாத எளிமை புத்தகத்தின் அழகு."

"குழந்தைகளின் உலகிலிருந்து ஒரு குரல்" என்ற தலைப்பில் சுடர் ஒளி அறிமுகம் செய்துள்ள சந்தான மூர்த்தியின் "ஐந்தாறு வகுப்பறைகளும், பத்துப் பதினைந்து காக்கைகளும்" என்ற நூலிலிருந்து சில வரிகள்: "குழந்தைகளின் உலகம் சிறிதும் போலிகளற்றது, அழகானது, இயல்பானது, குதூகலமானது, மகிழ்ச்சி நிறைந்தது, வண்ணமயமானது, கற்பனை வளமிக்கது,... இப்படி முடிவில்லாமல் பலவற்றை தன்னுள் கொண்டது." "குழந்தைகளின் உலகினுள் பயணித்து, குழந்தை இலக்கியங்கள் படைத்தவர்கள் மிகச் சிலரே. அதிலும் குழந்தைகளினூடே இயங்குபவர்கள், குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பது அரிது. குழந்தைகளோடு பயணிக்கிற வாய்ப்பு பெற்ற ஆசிரியர்கள் குழந்தை இலக்கியம் படைப்பவர்களாகும் நிலை விரைவில் வாயக்கப்பெறவேண்டும். அப்போது மட்டுமே அதிசிறந்த குழந்தை இலக்கியங்கள் பிறக்கும். அந்நம்பிக்கைக்கு இப்புத்தகத்தின் மூலம் சாட்சியமளிக்கிறார் சந்தானமூர்த்தி."

"இரா.நடராசனின் கதைகளில் புதிய உத்திகள்" என்ற தலைப்பில் ஆர்.நீலா எழுதியுள்ள கட்டுரை. நடராசன் அவர்களின் எட்டு நூல்கள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. கட்டுரை ஆசிரியரின் வார்த்தையில், "... அனைத்துக் கதைகளும் ஒவ்வொரு வகையில் வாசகரைக் கவர்கிறது. அது குழந்தைக் கதைகள் என்று ஒதுக்க முடியாதபடி, பெரியவர்களுக்கும், பெரியவர்களுக்கு என்று ஒதுக்க முடியாதபடி சிறுவர்களுக்கும், தவிர்க்க முடியாத புத்தகங்களாக உள்ளது. குழந்தைகளாகட்டும் , பெரியவர்களாகட்டும், இப்புத்தகங்களின் வாசிப்புக்குப்பின் அவர்களின் மனது அறிவில் விரிவடைவது திண்ணம்."

குட்டி ரேவதியின், "ஒற்றைக் கயிறு". இவரது படைப்பு எதையும் நான் இதுவரை வாசித்ததில்லை. இனிமேலாவது வாசிக்க வேண்டும். இக்கட்டுரையிலிருந்து: "கவிதை என்பது வரிகளாலான ஒற்றைக் கயிறு. அது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி திரிந்து திரிந்து முறுக்கி உருவாகிறது. அது அவரவர் இரத்தத்தாலும், உணர்ச்சிகளாலும், அவர்கள் பிறந்து வளர்ந்த சமூகச் சூழலாலும், வளர்க்கப்பட்ட முறைகளாலும், குழந்தைப் பருவ நினைவுகளாலும் ஆனதொரு கலவையாகத்தான் ஆகி வருகிறது. என்றாலும், அதன் மலினங்களைத் தன்னைத் தானே உதறிச் சிதறி, விட்டு விலகி, முறுக்கேற்றிக் கொள்வது மிக மிக அவசியமென பிரமிள் போன்ற படைப்பாளிகளின் படைப்புகளுக்கும், அவரைப் பற்றிக் கேள்விப்படும் விடயங்களுக்கும் உள்ள இடைவெளி உணர்த்தியது."

அடுத்து மிக சுவாரச்சியமான ஒரு கட்டுரை, ஒரு எழுத்தாளரைப் பற்றியது. என் சக பயணிகள் என்ற தலைப்பில் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதுவரும் தொடரில் எட்டாவது கட்டுரை, அஸ்வகோஷ் எனும் இராஜேந்திர சோழன் பற்றியது. அஸ்வகோஷ் அவர்களது எழுத்து எதையும் நான் படித்ததில்லை என்பதை முதலில் கூறிவிடுகிறேன். ஆனால் இந்த சுவையான கட்டுரையைப் படித்ததும் என் இழப்பை உணரமுடிந்தது. நான் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. காலம் எனும் எதிரி மட்டுமல்ல இன்னும் எத்தனையோ எதிரிகளை (உடல் நலக் குறைவு, உடல் மற்றும் மனச் சோர்வு, பொருளாதாரம், செய்து முடிக்க வேண்டிய எண்ணற்ற கடமைகள் என்று பல) வென்றால் மட்டுமே இது சாத்தியமாகும். ஏற்கனவே என் கணக்கில் அறுபத்தி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன; இன்னும் என் கணக்கில் எவ்வளவு ஆண்டுகள் மிச்சமிருக்கிறதோ தெரியவில்லை. இக்கட்டுரையிலிருந்து சில வரிகள்: "அஸ்வகோஷின் சிறுகதைகள் பிரதானமாக சமகாலச் சமூக யதார்த்தங்களை அழகியலோடும், ஒருவித உணர்ச்சிகர மனநிலையோடும் முன்வைத்தவை.... அவரது கதைகள் இலக்கியத்தரமான முற்போக்கான கதைகள்தாம் என்று அடித்துக் கூறலாம். ஏழ்மை, இல்லாமை - அதன் காரணமாக மனித மனங்கள் அடையும் அவமானங்கள், சிதையும் மனித மாண்புகள், அதையும் மீறி வெளிப்படும் அன்பும், நேசமும் - இவைதான் பெரும்பாலான அஸ்வகோஷ் கதைகளின் பாடுபொருளாக அமைந்தவை. எவ்வித தளுக்கும், மினுக்கும் இல்லாத ரொம்பச் சாதாரணமான மொழியில் நேரடியாகக் கதை சொல்லும் பாணி அவருடையது. வட ஆற்காடு வட்டார மொழி இயல்பாக அவரது கதைகளில் ஊடாடும். வறுமையை நேரடியாகச் சொல்லாமல் அது ஏற்படுத்தும் உறவுச் சிக்கல்கள், மன அவஸ்தைகளைக் கதையாக்கியதுதான் அஸ்வகோஷின் தனிச் சிறப்பு. மூன்று தளங்களில் அவரது கதைகள் இயங்கின. ஒன்று ஆண்-பெண் உறவு சார்ந்தது. இரண்டாவது சமூக யதார்த்தங்கள் சார்ந்தது. மூன்றாவதாக அவருடைய மனதை ஆக்கிரமித்து அவரை அமுக்கிப்போட்டதாக நான் குறிப்பிட விரும்புவது கம்யூனிஸ்ட் கட்சி மீதான அவருடைய காட்டமான விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும், கேலியும், நக்கலும் நிறைந்த கதைகள்...."

இவை தவிர புத்தகங்கள் பற்றிய சில விளம்பரங்களும் குறிப்பிடத் தகுந்தவை. அவற்றை படத்துடன் பதிவு செய்துள்ளேன். புத்தகப்பிரியர்கள் அவற்றை வரவேற்பார்கள் என்று நம்புகிறேன்.

நன்றி: புதிய புத்தகம் பேசுது & பாரதி புத்தகாலயம், சென்னை

மனதில் பதிந்தவை-1: ஆனந்த விகடன் ஜூலை 2011


இந்தப் புதிய பகுதியை என் மனதிற்கு மிகவும் பிடித்த ஆனந்த விகடன் வார இதழுடன் ஆரம்பிக்கின்றேன். 

விகடன் விலை இந்த இதழ் முதல் ரூபாய் பதினேழு!

விகடனில் நான் விரும்பிப் படிக்கும் பகுதிகள் எஸ்.ராமகிருஷ்ணனின் கேள்வி பதில்கள் (விகடன் மேடை), வாலியின் நினைவு நாடாக்கள், சுகாவின் மூங்கில் மூச்சு, சிறுகதை, அன்டன் பிரகாஷின் WWW வருங்காலத் தொழில் நுட்பம் ஆகியவை.

இந்த இதழிலும் எஸ்.ராவின் பதில்கள் சிறப்பாக இருந்தன. குறிப்பாக என் மனதில் பதிந்த வரிகள்: (மகாபாரதம்) கலாச்சாரம் மற்றும் சமூக மாற்றங்களின் வழியே இந்திய சமூகம் எப்படித் தன்னை வளர்த்துக்கொண்டது என்பதைப் பற்றிய மிகப் பெரிய ஆவணக் களஞ்சியம்.

வாலியின் நினைவு நாடாக்களில் மனதில் பதிந்த வரிகள்: மனித வாக்கியத்தின் முற்றுப்புள்ளியாய் மரணத்தைச் சொன்னால் முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.... எவ்வளவு முக்கியப் புள்ளியையும் முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை.....

சுகாவின் மூங்கில் மூச்சை நான் படிக்க முக்கியக் காரணம், அவரைப் போலவே நானும் திருநெல்வேலிக்காரன். நெல்லைப் பேச்சு, பார்வதி டாக்கீஸ், ரத்னா தியேட்டர், குறுக்குத்துறை, சந்திப் பிள்ளையார் கோவில், சா ஃப்டர் ஹைஸ்கூல் என்று நான் ஒரு காலத்தில் சுற்றி வந்த இடங்களைப் பற்றிப் படிக்க முடிகிறது. நான் நெல்லைக்குச் சென்று பல வருட காலம் ஆகிவிட்டது; அப்படியே சென்றாலும் சில மணி நேரங்கள் மட்டுமே அங்கிருப்பேன். என்ன சுகாவிற்கு நான் பலப் பல வருடங்கள் சீனியர். இந்த வாரம் பண்டாரவிளை நாடார் பற்றி எழுதியிருப்பதைப் படித்ததும் என் பாட்டியின் நினைவு வந்தது; அவள்தான் பண்டாரவிளை நாடாரைப் பற்றிச் சொல்லுவாள்.

அடுத்து யுவ கிருஷ்ணாவின் சிறுகதை, அசோகர் கல்வெட்டு. தரமான கதை. ஏனோ கதையில் வரும் அமல்ராஜ் போல என் வாழ்விலும் என்னுடன் படித்த மணியை நெல்லை ரயில் நிலையத்தில் சந்தித்தது நினைவிற்கு வந்தது. நெல்லை எக்ஸ்ப்ரஸ் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தது. தன் முதலாளிக்கு ஸ்லீப்பரில் பெர்த் கேட்டு பரபரப்பாக அலைந்து கொண்டிருந்தான். டேய்! உன் அப்பா டி.டி.ஆர்.தானே, எனக்கு உதவக்கூடாதா என்றான் பரிதாபமாக. அன்றைக்கு என்னால் உதவ முடியவில்லை. அதன் பிறகு பல வருடங்கள் ஓடிவிட்ட பின்பும் அவனை இன்றுவரை பார்க்க முடியவில்லை.

அன்டன் பிரகாஷின் WWW - கூகுள் பிளஸ் மற்றும் ஸ்கைப் தொழில்நுட்பத்துடன் கைகோர்த்து ஃபேஸ்புக் வழங்கும் வீடியோ சாட் பற்றி படித்தேன். நான் இரண்டையும் இதுவரை முயன்று பார்க்க வில்லை. இனிதான் பார்க்கவேண்டும்.

இவைதவிர, விகடன் தரும் புள்ளிவிபரங்கள் பகுதி. பத்மநாப சாமி கோயிலின் பாதுகாப்புக்கென கேரள பட்ஜெட்டில் ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட தகவல். அப்போதும் நூறு சதவிகிதம் பாதுகாப்பு கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தேவையில்லாத பல பிரச்சினைகள். ஏன் இவ்வளவு சிரமம்? அவ்வளவு நகைகளையும் போட்டுப் பார்க்கவோ, பயன்படுத்தவோ முடியாத நிலையில் அவற்றை விற்று எவ்வளவோ நல்ல காரியங்களுக்குப் பயன்படுத்தலாமே, திருப்பதியில் உள்ளதுபோல் பல்கலைக்கழகம், பக்தர்களுக்கு உதவும் வகையில் இலவச தங்குமிடம், இலவச உணவு, பக்தி நூல்களை குறைந்த விலையில் பதிப்பித்து வெளியிடுவது, தினமும் பல ஊர்களில், பல இடங்களில் ஆன்மீகச் சொற்பொழிவுகள், சிறார்களுக்கு தினமும் மனதை ஒருமுகப் படுத்தும், மேன்மைப் படுத்தும் பக்திப் பாடல்களை சொல்லிக்கொடுப்பது, ஆன்மீக நூல்களை எழுவோரை ஆதரிப்பது மற்றும் எவ்வளவோ நல்ல காரியங்களுக்கு உதவுதல் என்று.

புத்தகப்பிரியன் என்ற முறையில் விகடன் வரவேற்பறையில், தீப.நடராஜன் தொகுத்து, உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ள ரசிகமணி டி.கே.சி.கடிதங்கள் என் கவனத்தை ஈர்த்தது. 960 பக்கங்கள், விலை ரூபாய் அறுநூறு! அம்மாடியோவ்! எங்காவது நூலகத்தில் ஓசியில் படித்தால்தான் உண்டு.

அடுத்து இன்பாக்ஸில், எழுபத்தைந்து கோடி மக்களை ஈர்த்து சமூக வலைத்தளங்களில் ஃபேஸ்புக் முதலிடம் பிடித்துள்ள தகவல்.

ந.வினோத்குமாரின் கூடங்குளம் அணுமின் நிலையம் - காத்திருக்கும் பேராபத்து. அணுமின் நிலையங்கள் பற்றி வெளிவரும் செய்திகளைப் படித்தும், தொகுத்தும் வருகிறேன். மேலைநாடுகளே வேண்டாம் என்று கைவிடத்தொடங்கியுள்ள அணுமின் சக்தி நமக்கு ஏன்? தவறு நேர்ந்தால் ஏற்படும் கதிர்வீச்சு அபாயம் 40,000 வருடங்களுக்கு மேல் நீடிக்கும் என்று எங்கோ படித்திருக்கிறேன். நம்மவர்களின் கவனக்குறைவு அனைவரும் அறிந்ததே. அழிவு நம்மோடு முடிவதல்ல, தலைமுறை தலைமுறையாய்த தொடரும். எல்லாம் அச்சுறுத்துவதாக இருக்கிறது. இதெல்லாம் தேவைதானா? வேறு எத்தனையோ வழிகள் இருக்கிறதே, ஏன் அவற்றை முயலக் கூடாது. அமெரிக்காவே தற்போது சூரிய சக்திக்கு முதல் இடம் அளிக்க ஆரம்பித்துவிட்டது என்று படிக்கிறேன். அப்புறம் காற்றாலைகள் இருக்கின்றன. வெப்ப நாடான இந்தியா போன்ற நாடுகளுக்கு சூரியசக்தியை விட சிறந்தது என்ன இருக்க முடியும்?

அப்புறம் நிறைய சினிமா, அரசியல் குப்பைகள். ஆம், என்னைப் பொறுத்தவரை அவை குப்பைகள்தாம். நம் சினிமாக்களும் சரி, அரசியல்வாதிகளும் திருந்தப் போவதே இல்லை. ஊழல் அரசை மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள் என்று மகிழும் வேலையில், மறுபடியும் பதினைந்து பெர்சென்ட் கமிஷன் என்று ஆளுக்கு ஆள் ஆரம்பித்துவிட்டார்கள் என்று படிக்கிறேன். வேதனையாக இருக்கிறது. 2 ஜி ஊழலைப் பொறுத்தவரை பத்து சதவிகித உண்மையாவது வெளிவருமா என்பது சந்தேகமே.

விகடனில் கவிபேரரசு வைரமுத்து படைக்கவிருக்கும் உலக இலக்கியத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். 

நன்றி: ஆனந்த விகடன்