25 மே, 2009

நெல்லையப்பன் கவிதைகள்-69: "கார்ட்டூன் தந்த கவிதை"


கார்ட்டூன் தந்த கவிதை

நாளிதழில் வந்த குரங்கு கேலிச் சித்திரம்
பார்த்து பிறந்த கவிதை:

வெள்ளம் சுழித்தோடிய
ஆற்றின் ஒரு கரையில்
குட்டியுடன் நின்ற கரடி,
மறுகரைக்கு போய் விட்டால்
பாலும் தேனுமாய் ஓடும் என நம்பி
குட்டியை தலையில் சுமர்ந்து
நதி கடக்க தொடங்கியது

இடர் பல வந்த போதும்
மெதுவாக முன்னேறியது.
அப்பப்பா எத்தனை துயர்கள்!
விடாது முன்னேறியது கரடி.

நடு வழியில் ஆழமும் இழுப்பும் அதிகமாக
சமாளிக்க முடியாத கரடி
குட்டியை தண்ணீருக்குள் போட்டு
அதன்மீது ஏறிநின்று
தன்தலை காத்துக்கொண்டது.

வெள்ளம் சிறிது வடிய
சிரத்தையுடன் தன் குட்டியை
தண்ணீரிலிருந்து வாரி எடுத்து
தலையில் வைத்துக்கொண்டு
மறு கரை நோக்கி நடந்தது

கரடியை நான் உங்களுக்கு
அடையாளம் காட்டத் தேவையில்லை;
கரடிக்குட்டியது மட்டும் பாவம்
கடல் சூழ்ந்த நாட்டின்
அப்பாவித் தமிழ் மக்கள்.

23 மே, 2009

நெல்லையப்பன் கவிதைகள்-68: "விடை கொடுப்போம்!"

கனத்த மனத்துடன்
விடைகொடுப்போம்!
"அப்பாடா" என்று
உடன் வரும் பெருமூச்சை
தவிர்க்க முடியவில்லை!

ஓய்ந்து விட்டது
துப்பாக்கிச் சப்தம்
முடிந்து விட்டது
துவந்த யுத்தம்
இழந்தது போதும்
இரண்டு பக்கமும்

நல்ல தலைவன்தான்-
இலக்கை சரியாய்
தெரிவு செய்தவன்
பாதையில் பெரும்
பிழை செய்திட்டான்!

கிடைத்த வாய்ப்பையெல்லாம்
தவறவிட்டு இன்று
தலை குப்புற வீழ்ந்து விட்டான்

"நல்லதே ஆனாலும்
அடைய முடியாது
தவறான வழியில்"-
சரித்திரம் மறுபடியும்
எழுதிக் கொண்டது
அவனுடைய இரத்தத்தால் !

பிழை பல இருந்ததாலும்
மன்னிப்போம்
பிரியாவிடை கொடுப்போம்.
விடைகொடுப்போம்
தலைவனுக்கும் வன்முறைக்கும்.

13 மே, 2009

இன்றைய சிந்தனைக்கு-45: "நித்திரைக்கு முன்" - திரு தங்கவேலு மாரிமுத்து

வையத்துள் வாழ்வாங்கு வாழ்வதே மானிடப் பிறவிக்கு மகத்தான பெருமை சேர்க்கும். ஒவ்வொரு நாளையும் நாம் எப்படிக் கழித்தோம், கழிக்கிறோம் என்பதைப் பற்றி தினமும் படுக்கப் போகுமுன் பத்துப் பதினைந்து நிமிடமாவது சிந்தித்துப் பார்க்கும் போதுதான், நமது வளர்ச்சியை நாமே அறியமுடியும். நமது தேக்கத்தை நாமே உணர முடியும். நமது வாழ்க்கையை நாமே அலச முடியும். நம்மை நாமே செதுக்கிச் சீராக்க முடியும். இன்றைய தினத்தைவிட, நாளைய தினம் சிறப்பாக அமைவதற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக இந்தப் பழக்கம் அமையும்.

முயன்று பாருங்கள், முன்னேற்றம் தெரியும்.

நன்றி: திரு.தங்கவேலு மாரிமுத்து.

7 மே, 2009

இன்றைய சிந்தனைக்கு-44:

சத்தியம் எனும் குறிக்கோளை அடைய அஹிம்சையைக் கடைப்பிடித்தல் அவசியம். எனவே நம் அன்றாட வாழ்வில் அஹிம்சை இடம் பெறவேண்டும். அதனால் மக்களிடையே அஹிம்சையின் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக வலியுறுத்த வேண்டும். அஹிம்சையால் அறிவின் தெளிவும், அறிவின் தெளிவால் சத்தியமும் கிட்டும் - காந்திஜி

2 மே, 2009

என்ன நடக்கிறது?-10: "வருமான வரி விபரத்தை வெளியிடாத கோடீஸ்வர வேட்பாளர்கள்"

* இந்திய மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்டத் தேர்தலில் மனு தாக்கல் செய்த கோடீஸ்வர வேட்பாளர்களில் 68% பேர் வருமான வரி செலுத்தியதற்கான விபரத்தை வெளியிடவில்லை.

* சென்ற தேர்தலில் போட்டியிட்ட கோடீஸ்வர வேட்பாளர்கள் 9 சதவிகிதம்; இம்முறை 14 சதவிகிதம்.

* முதல்கட்ட தேர்தலில் 193 கோடீஸ்வரர்களும், இரண்டாவது கட்ட தேர்தலில் 288 கோடீஸ்வரர்களும், மூன்றாவது கட்ட தேர்தலில் 196 கோடீஸ்வரர்களும் போட்டியிடுகின்றனர்.

* டில்லியைச் சேர்ந்த பகுஜன் கட்சி வேட்பாளர் தனக்கு ரூபாய் அறுநூறு கோடிக்கும் மேலாக சொத்து இருப்பதாகக் காட்டியுள்ளார்.

* மனுத்தாக்கலின் போது இந்தக் கோடீஸ்வர வேட்பாளர்களில் பலருக்கு வருமான வரி கணக்கிற்கான நிரந்தர அட்டை (PAN card) இல்லை.

* பான்கார்டு (PAN card) இல்லையென்றால் ரூபாய் பத்தாயிரம் அபரதாமும், வரி ஏய்ப்பு செய்த தொகையைப்போல் 100 முதல் 300 சதவிகிதம் வரை அபராதம் கட்டவேண்டும். செய்வார்களா?

நன்றி: தினமலர், தமிழ் நாளிதழ், மதுரைப் பதிப்பு, 30.4.2009.

இன்றைய சிந்தனைக்கு-43:

இரும்பு நீருடன் சேர்ந்தால் துருப்பிடித்துவிடும். அதே இரும்பு நெருப்புடன் சேர்ந்தால் தூய்மை பெறும். அதுபோல, நீங்கள் யாரோடு பழகுகிறீர்களோ, அவருடைய தன்மையைப் பெறுவீர்கள். நல்லவர்களோடு பழகினால், நம்மையும் அறியாமல் நாம் நல்ல இயல்புகளைப் பெறுவோம். - பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபா.