நெல்லையப்பன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நெல்லையப்பன் கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஆக., 2020

நெல்லையப்பன் கவிதைகள் : துன்பத்தை நெய்தவன்

துன்பத்தை நெய்தவன்- நெல்லையப்பன் கவிதைகள்

75 views•Aug 27, 2020

 

NELLAIAPPAN SIVASUBRAMANIAN

54 subscribers

 

நெல்லையப்பன் கவிதைகள்-11:

"துன்பத்தை நெய்தவன்!"

 

துன்பத்தை நெய்தவன்!

 

அடுப்பில் பூனை,

தறியில் குருவிக்கூடு,

நெய்தவை வீட்டுக்குள்,

நெய்தவனோ தெருவில்.

 

பசங்க பள்ளிக்குப் போகல,

தறி வெகுநாளா ஓடல,

காரணம் "நூல்" இல்ல.

 

பசங்க பாடம் எழுதல,

அவங்க வயிறும் நிறையல,

காரணம் "நோட்டு" இல்ல.

 

நெய்தத வாங்கல,

புது நூலும் கொடுக்கல,

காரணம் அரசிடம் "நாணயம்" இல்ல.

 

வியர்வையும் கண்ணீரும்

கலந்து நெய்த கைத்தறிய

விற்பதற்கு என்ன வழி?

 

பொருளில் தரமிருந்தால்

விற்பதற்கு என்ன தடை?

 

தரமற்ற நூலிலும் , சாயத்திலும்

வியர்வயையும், உழைப்பையும்

வீணடித்து விட்டார்களோ?

 

களர் நிலத்தில் விதைக்கலாமா?

கிழிந்த காகிதத்தில்

ஓவியம் வரையலாமா?

 

பட்டினிச் சாவும்

கஞ்சித் தொட்டியும் தொடருமா?

ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுமா?


 

30 நவ., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-90:

 நெல்லையப்பன் கவிதைகள்

படிப்பினை
பிள்ளையாரப்பா ... 
புத்தகம் இல்லாம
எவ்வளவு நல்லாருக்கு!
இது இப்படியே இருந்தா
எவ்வளவு விசயம் கத்துக்கலாம்!

எங்க வாத்தியாருக்கு 
என்ன வெல்லாம் தெரியுமுன்னு
இப்பத்தான் தெரியுது!

இதையெல்லாம்
ஏன்  சொல்லித்தரல
இத்தனை நாளா?

சாதாவோ, சமச்சீரோ
இந்த ஒரு மாதம்
நாங்க படிச்சது
எந்த புத்தகத்திலுமில்ல.

புத்தகம் வந்தா
எங்க சந்தோசமெல்லாம்
காணாத பூடும்.

இப்ப  நான் கத்துக்கிட்டது 
புத்தகத்திற்கு வெளியேயும்
நிறைய படிக்கணும்.



20 நவ., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-89: இலக்கு

இலக்கு
.
கருத்தரங்கில் கைகலப்பு.
தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.
.
வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய சொல்
எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒன்றை  முன்மொழிய,
.
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
.
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,

மிதிபட்டது திருக்குறள்.

24 செப்., 2017

நெல்லையப்பன் கவிதைகள்-88 கலி காலம்

95. கலி காலம்

நல்ல தலைவர்கள்
நாட்டு மக்களை
அரசியலுக்கு அழைத்தது
அந்தக்காலம்.
.
தொண்டர்கள் திரண்டு
தெண்டனிட்டு தங்கள்
தலைவரை இழுப்பது
இந்தக்காலம்.
.
இரவு பகல் பாராது
தலைவர்களெல்லாம்
பொதுப்பணி செய்தது
அந்தக்காலம்.
.
வெற்றி வாய்ப்பிற்கு
காலம் கனிய காத்திருந்து
லேட்டாக வந்தாலும்
லேட்டஸ்ட்டாக வருவேனென்பது
இந்தக்காலம்.
.
மூழ்கிக் கொண்டிருப்பவன்
கதறி அழைக்கிறான்
கைதூக்கிவிட தலைவருக்கு

காலம் இன்னும் கனியவில்லையாம்!

4 நவ., 2014

நெல்லையப்பன் கவிதைகள்-87: பகுத்தறிவு



பகுத்தறிவு


அகால மரணமடைந்த
பகுத்தறிவுப் பகலவனை
புதைப்பதா, எரிப்பதா
என தொண்டர்படை
இரண்டுபட,
கட்டவிழ்ந்த வன்முறையில்,
உயிருடன்-
புதைக்கப்பட்டனர் மூவர்
எரிக்கப்பட்டனர் ஐவர்.

29 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-86: அப்பா, அன்புள்ள அப்பா -1


அப்பா, அன்புள்ள அப்பா -1

பதினாறு வயதுப் பையன்
பை நிறைய காய்கறிகளை
வாரச் சந்தையில் வாங்கி
(அது ஒரு வசந்த காலம்)
பொய்விலை சொல்லி
கமிஷன் அடித்தான் வீட்டில்.

பிரிதொருநாள்
அப்பாவுடன் சந்தை சென்று
காய்கறிகள் வாங்கியவன்,
(அட, கமிஷன் போச்சே!)
அம்மாவிடம் அப்பா
விலைகளை யெல்லாம்
குறைத்துச் சொல்வது பார்த்து
குழம்பிப் போனான்

இன்று அவன் மனைவி,
“அட இதுக்குப் போயா
இந்தவிலை கொடுத்தீர்கள்?!”
என கேலி பேசும் போது,
அப்பாவின் தந்திரம்
அவனுக்குப் புரிகிறது.

28 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-85: மௌனம்

மௌனம்


மொழி
கண்களில் பிறக்கிறது;

கண்மொழி 
எல்லை தொடும் போது
உடல் மொழி உதவுகிறது;

உடல்மொழி போதாத போது
சொல்லும், பின் எழுத்தும்
சரியாய்ச் சொல்லும்;

உரைநடை தயங்கும் போது
கவிதை கை கொடுக்கும்;

கவிதை விழிக்கும் போது
இசை எளிமையாய்
இனிமையாய்ச் சொல்லும்;

இசை தாண்டி
தொடுமொழி செல்லும்;

அன்பு செய, நன்றி நவில
இத்தனை மொழிகள்
இருந்த போதிலும்

அனைத்தும் தாண்டி
முழுமொழி தேட
விடையாய்க் கிடைப்பது
மந்திர மௌனம்.

27 செப்., 2012

நெல்லையப்பன் கவிதைகள்-84: தும்பை விட்டு


தும்பை விட்டு

பள்ளி வாகனங்கள்
விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
ஒரு சுருதியை.

மாநிலம் விட்டு
மாநிலம் வரும்
கூலி தொழிலாளர்
நல விதிகள் சீரமைக்க
பலிகொடுக்க வேண்டி இருக்கு
பத்து தொழிலாளர்களை.

மருத்துவமனைகளில்
எலி, பூனை, நாய்கள்
வலம் வருவது தடுக்க
கடிபட வேண்டி இருக்கு
ஒரு இறந்த குழந்தை முகம்

ஆசிரியர் மாணவர்
உறவுமுறை பற்றி
விமர்சனம், விவாதங்கள்
விழிப்புணர்வு ஏற்பட
எங்கோ ஒரு மாணவன்
அருந்த வேண்டி இருக்கு
ஆசிரியர் கையால் சிறுநீர்.

பட்டாசு தொழிலகத்தில்
பாதுகாப்பு விதி மீறல்
நாற்பது என கண்டு சொல்ல
நாற்பது பேர் உடல் சிதறி
மடிய வேண்டியிருக்கு.

பெரிதாய் விபரீதம்
நடந்த பின்தான்
அரசு விழிக்குமா?

எந்த விபத்தில்
யார் இறந்தாலும்
ரூபாய் இரண்டு லட்சம்
கியாரண்டி என்பதோடு
முடிந்து விடுமா அரசின் கடமை.?