மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலரும் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

7 ஏப்., 2026

மலரும் நினைவுகள்

*“ஒரு காலம் இருந்தது...”*

சைக்கிளிலோ பேருந்திலோ கொண்டுபோய் விடுவது என்ற வழக்கம் இல்லாததால், நாங்கள் நாங்களாகவே பள்ளிக்குச் செல்ல வேண்டியிருந்தது. எங்களைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு, அங்கே என்ன நல்லது கெட்டது நடக்குமோ என்று எங்கள் பெற்றோர் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை...

அவர்கள் எதற்கும் பயந்ததும் இல்லை,

பாஸ் அல்லது ஃபெயில் — அவ்வளவுதான் எங்களுக்குத் தெரியும். சதவிகிதங்களைப் பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை.

டியூஷனுக்குப் போவதாக ஒப்புக்கொள்வது அவமானமாக இருந்தது, ஏனென்றால் எங்களை முட்டாள்கள் என்று நினைத்துவிடுவார்கள்.

புத்தகங்களில் அரச இலைகளையோ, படிப்பு இலைகளையோ, மயில் இறகுகளையோ வைத்தால் புத்திசாலியாகிவிடுவோம் என்று நம்பினோம்...

துணிப் பைகளில்... தோள்பைகளில்... 
பிறகு அலுமினியப் பெட்டிகளில்.

எங்கள் புத்தகங்களையும் நோட்டுகளையும் நேர்த்தியாக அடுக்கி வைப்பதில் நாங்கள் வல்லவர்கள்.

ஒவ்வொரு ஆண்டும், புதிய வகுப்பு தொடங்குவதற்கு முன்பு, எங்கள் புத்தகங்களுக்கும் நோட்டுகளுக்கும் பழுப்பு நிறத் தாள் போட்டு அட்டை போடுவோம் — அது ஒரு வருடாந்திர கொண்டாட்டம் அல்லது திருவிழாவிற்குச் சற்றும் குறைவானதல்ல.

ஆண்டு இறுதியில், எங்கள் புத்தகங்களை விற்றுவிட்டு, அடுத்த ஆண்டுக்கு பழைய புத்தகங்களை வாங்குவோம் — ஒருபோதும் வெட்கப்பட்டதில்லை.

ஏனென்றால், அந்த நாட்களில் புத்தகங்களோ பாடத்திட்டமோ ஒவ்வொரு ஆண்டும் மாறவில்லை.

எங்கள் பெற்றோருக்கு எங்கள் படிப்பு ஒரு சுமையாக ஒருபோதும் தோன்றியதில்லை.

ஒரு நண்பனை சைக்கிளின் முன்பக்க கம்பியில் உட்கார வைத்து, இன்னொருவனைப் பின் கேரியரில் உட்கார வைத்து தெருக்களில் சுற்றுவது — அதுதான் எங்கள் அன்றாட வழக்கம்.

இப்படி நாங்கள் எல்லையில்லாமல் சுற்றியிருக்க வேண்டும்.

கால் கட்டைவிரல்களைப் பிடித்துக்கொண்டு நிற்பதோ, காதுகள் சிவக்கும் வரை திருகப்படுவதோ எங்கள் சுயமரியாதையை ஒருபோதும் புண்படுத்தவில்லை... ஏனென்றால், உண்மையாகச் சொல்லப்போனால், சுயமரியாதை என்றால் என்னவென்றே எங்களுக்குத் தெரியாது.

வீட்டிலோ பள்ளியிலோ திட்டு வாங்குவது வாழ்க்கையின் ஒரு சாதாரண பகுதியாக இருந்தது. எங்கு வேண்டுமானாலும், வெறும் கால்களில், மரப்பலகைகளையும் எந்த வகையான பந்தையும் வைத்து கிரிக்கெட் விளையாடிய அந்த ஆனந்தம் எங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

நாங்கள் ஒருபோதும் பாக்கெட் பணம் கேட்டதில்லை, எங்கள் அப்பாவும் கொடுத்ததில்லை.

அதனால் எங்கள் தேவைகள் மிகச் சிறியதாகவே இருந்தன — வருடத்திற்கு சில முறை காரமான மிக்சர்களும் அல்லது ஒரு வெல்லப்பாகு -கல்கோனா மிட்டாயோ சாப்பிடுவது ஒரு பெரிய விருந்தாகத் தோன்றும்... அதில் நாங்கள் உண்மையாகவே மகிழ்ச்சியாக இருந்தோம்.

கூட்டுக் குடும்பங்களாக இருந்ததால், சிறிய தேவைகள் பொதுவாக வீட்டில் உள்ள யாராவது ஒருவரால் பூர்த்தி செய்யப்படும்.

தீபாவளியின் போது, பட்டாசு சரங்களை உடைத்து, ஒவ்வொரு பட்டாசாகக் கொளுத்துவது ஒருபோதும் வெட்கமாகத் தோன்றியதில்லை.

 'ஐ லவ் யூ' என்று எப்படிச் சொல்வது என்றே எங்களுக்குத் தெரியாததால், எங்கள் பெற்றோரிடம் நாங்கள் அவர்களை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதை எங்களால் ஒருபோதும் சொல்ல முடிந்ததில்லை.

பள்ளி பெஞ்சுகளில் இரண்டு அல்லது மூன்று பேர் அமர்ந்து, அரைக்கால் சட்டையுடன் பள்ளிக்கு வெளியே இருந்த சிறிய மிட்டாய்க் கடையில் நண்பர்களிடமிருந்து தின்பண்டங்களைப் பெற்ற அந்த அன்பை நாங்கள் இன்றும் நினைவில் வைத்திருக்கிறோம்.

அந்த நண்பர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்.

இப்போது நாங்கள் உலகில் எங்கு இருந்தாலும், உண்மை என்னவென்றால், நாங்கள் நிஜ உலகில் வளர்ந்தோம், யதார்த்தத்தை உண்மையாகவே எதிர்கொண்டோம்.

துணிகளில் சுருக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்வதும், உறவுகளில் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிப்பதும் ஒருபோதும் எங்கள் வழக்கம் அல்ல.

காலை மற்றும் இரவு உணவைத் தவிர, செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட ரொட்டிகளை எங்கள் டிஃபன் பாக்ஸில் எடுத்துச் சென்ற அந்த மகிழ்ச்சி இன்றைய குழந்தைகளுக்குப் புரியாது.

நாங்கள் எங்கள் விதியை குறை கூறவில்லை — நாங்கள் என்ன வாழ்க்கை வாழ்கிறோமோ, அதை மகிழ்ச்சியுடன் வாழ்கிறோம், இந்த மனப்பான்மை எங்களைத் தொடர்ந்து முன்னேற உதவுகிறது... நாங்கள் வாழ்ந்த எளிமையான வாழ்க்கையை இன்றைய வாழ்க்கையுடன் ஒப்பிடவே முடியாது.

நாங்கள் நல்லவர்களா கெட்டவர்களா என்று எங்களுக்குத் தெரியாது... ஆனால் எங்களுக்கும் ஒரு காலம் இருந்தது.

ஒன்று மட்டும் நிச்சயம் — இதை முழுமையாகப் படிப்பவர்கள் அனைவருக்கும், தங்கள் கடந்த காலத்தின் பல அழகான தருணங்கள் நிச்சயமாக நினைவுக்கு வரும்.

15 ஆக., 2025

மலரும் நினைவுகள்: ஆரஞ்சு மிட்டாய்


சுதந்திர தினத்தன்னைக்கி லீவுன்னு கூட பார்க்காம ஸ்கூலுக்கு போனது இந்த ஆரஞ்சு மிட்டாய்க்காகத்தான் இருக்கும்........

மஞ்சள், ஆரஞ்சு கலர்ல கிடைக்கும்......

ஸ்கூல்ல கொடுத்ததும் சாப்பிட மாட்டேன், அதை வீட்டுக்கு கொண்டு வந்து அம்மா கிட்ட காட்டித்தான் சாப்புடுவேன்........

வீட்டுக்கு வருவதற்குள் கையெல்லாம் பிசு பிசுன்னு ஆகிடும்........

ஸ்கூல்லையே தின்னுட்டு வர்றதுக்கென்னனு அம்மா திட்டுவாங்க.......

ஆனாலும் வருஷா வருஷம் இதையே செய்வேன்......

சுதந்திரமுன்னா ஆரஞ்ச் மிட்டாய் தர்ற நாள்ன்னு அப்போ நினைச்சேன்...

இப்போ தான் தெரியுது அந்த நாட்களை நினைத்துப்பார்க்க இது ஒரு நாளென்று.....

எது எப்படியோ அன்று சுதந்திர தினத்தில் வாங்கித்தின்ற ஆரஞ்சு மிட்டாய்க்கு இணையாக இன்று ஆப்பிள் போன் வாங்கினாலும் கிடைக்காது........

நன்றி: திரு கே முருகன், சிதம்பரம் பிள்ளை வாட்ஸ்அப் குழு

20 செப்., 2019

மலரும் நினைவுகள்-29: ஏழ்மையிலும் செம்மை..

ஏழ்மையிலும் செம்மை இருந்த காலம் ஒன்று இருந்தது.

 பற்றாக்குறையிலும் உள்ளம் நிரம்பி வழிந்தது.

பக்கத்து வீடும் நம் வீட்டின் நீட்சியாக நகரங்களிலும் அன்புக் கரம் நீட்டிய மனநிலை அன்று.

எப்போது வேண்டுமானால் நம்மிடம் இல்லாததைப் பக்கத்து வீடுகளில் கேட்டுப் பெறலாம் என்பது எத்தனை பெரிய வசதி.

 அன்று பண்டம் மாற்றுமுறை பாசத்தால் நிகழ்ந்தது. புதிதாக நம் வீட்டு வத்தக் குழம்பு சின்னக் கிண்ணத்தில் அடுத்த வீட்டுக்குப் பயணிக்கும்.

அங்கு வைத்த மிளகு ரசம் இங்கு பதிலுக்கு வந்து சேரும்.

 எந்த விசேஷமாக இருந்தாலும் அதற்காகச் செய்த பலகாரம் சுற்றியுள்ள வீடுகளுக் கும் சுடச்சுட வழங்கப்படும்.

நம் வீட்டு முருங்கை அதிகம் காய்த்தால், அது அடுத்த வீட்டினர் சாம்பார் வைப்பதற்காகவும்.

பக்கத்து வீட்டு செவ்வாழை தார் போட்டால் தண்டும் பழமும் கண்டிப்பாக நம் சமையலுக்கு வந்து சேரும்.

பால்காரர் மாடு கன்று போட்டதும் மறக்காமல் சீம்பால் அளிப்பது உண்டு.

அதற்காகவே நாங்கள் அவர்கள் வைத்திருக்கும் மாடு எப்போது கன்று போடும் என்று காத்திருந்ததும் உண்டு.

பாலில் கலக்கும் தண்ணீரை சீம்பாலால் அவர்கள் சரிசெய்து விடுவார்கள்.

இருப்பவர் இல்லாதவருக்குத் தருவதும், அதிகம் இருப்பவர் அடுத்தவரிடம் பகிர்வதும், யாரும் உபதேசிக்காமல் அன்று மக்கள் கடைப்பிடித்த நெறிமுறையாக இருந்தது.

ஒரே பொருளாதார நிலையில் இருப்பவர்கள் அருகருகே வாழ்ந்த சூழல் அது.

 எல்லோரிடமும் அவ்வப்போது பற்றாக்குறை தலைநீட்டும். அதை புரையேறும் தலையைத் தட்டிக்கொடுப்பதைப் போல சுற்றியிருப்பவர்கள் தங்கள் தாராளத்தால் அமுக்கி விடுவார்கள்.

ரெண்டு தீக்குச்சி வேண்டும்

நாங்கள் சிறுவராக இருக்கும்போது எங்கள் வீட்டுக்கு எதிரே மாட்டு வண்டி ஓட்டும் அண்ணன் தம்பிகள் ஐவர் இருந்தனர்.

 அவர்களுக்கு நாங்கள் வைத்த பெயர்பஞ்ச பாண்டவர். காலையில் பள்ளிக்குச் செல்லும் வழியில் நாங்கள் தட்டுப்பட்டால் ஒற்றைக் கைகொடுத்து எங்களை ஏற்றிக்கொண்டு பயணித்துப் பள்ளியில் இறக்கிவிடுவார்கள்.

 நூறு கிலோ அரிசி மூட்டைகளை அலாக்காக முதுகில் தூக்குவார்கள்.

 உடலில் இரும்பையும் உள்ளத்தில் காந்தத்தையும் வைத்திருந்தவர்கள் அவர்கள்.

 சமயத்தில் தீக்குச்சிகளை இரவல் கேட்டு இரவில் வருவார்கள்.

தீப்பெட்டிகூட சமயத்தில் வாங்க முடியாத சூழல் இருந்ததை இன்றையத் தலைமுறை நம்ப மறுக்கும்.

அந்தத் தோழர்கள் வீட்டுப் பெண்கள் அரிசி களைந்து, பருப்பு வேகவைத்து, சாதம் வடித்து பானையில் ஊற்றிய நீரையெல்லாம் எடுத்துக்கொண்டு,

கைநிறைய சாணத்தை வீட்டில் போட்டுவிட்டுச் செல்வார்கள்.

 சமயத்தில் மிஞ்சிய குழம்பையும், சோற்றையும் கொடுத்தால் மறுக்காமல் வாங்கிச் செல்வார்கள்.

 நள்ளிரவில் அரிக்கன் விளக்கோடு வெளியே வந்தால் அலறியடித்துக்கொண்டுஎன்ன ஆபத்தோ!’ என்று விசாரிக்க வருவார்கள்.

 ’அண்ணன் என்றும்தம்பி என்றும் உறவு வைத்து அளவளாவுவார்கள். அத்தனை அந்நியோன்யம்.

அன்று அவசரத்திற்கொன்று கேட்பது கவுரவக் குறைச்சல் அல்ல. அதிகாலையில் காப்பித் தூள் டப்பா வறண்டி ருப்பதைப் பார்த்து, பக்கத்து வீட்டில் ஒரு குவளை இரவல் வாங்கி திருப்பித் தருவது உண்டு.

 இரண்டு நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்தால் பாலுக்குப் புரையூற்ற பக்கத்து வீட்டில் இரண்டு கரண்டி தயிர் வாங்கி வருவது உண்டு.

 அவற்றையெல்லாம் மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள், மன நிறைவோடு பகிர்ந்தார்கள்.

ஜமுக்காளமும் மடக்கு நாற்காலியும்

மரச் சாமான்கள் அன்று விலை அதிகம். வீட்டடுக்கான முக்கியப் பொருட்களில் அவற்றிற்கு முதலிடம் இல்லை.

 பெரும்பாலும் பெண்களுக்கு பாயே விரியும். கொஞ்சம் வசதி இருந்தால் ஜமக்காளம் விரிக்கப்படும்.

ஆண்கள் அமர ஒன்றிரண்டு இரும்பு மடக்கு நாற்காலிகள். சிறுவர்கள் தரையில் அமர வேண்டும்.

 வருகிற உருப்படி அதிகமானால் மர ஸ்டூல்கள் மேலிருக்கும் அரிசி டின்கள் இறக்கப்பட்டு துணியால் அவசரமாக சுத்தம் செய்யப்பட்டு இருக்கைகளாக மாறும்.

இன்னும் சிலர் கூடுதலாக வந்தால் அண்டை வீடுகளில் இருந்து நாற்காலிகள் இறக்குமதி செய்யப்படும்.

 விருந்தினர் சென்றதும் உடனடியாகத் திருப்பி ஒப்படைக்கப்படும். ஏணி என்பது ஒரு சில வீடுகளில் மட்டுமே இருக்கும்.

பரணில் இருக்கும் பாத்திரம் எடுக்கவும், கூரையில் ஏறி பழுது பார்க்கவும் வேண்டியபோது அடுத்தவர் ஏணி நமக்கு ஏற்றம் தர சித்தமாக இருக்கும்.

 மரணம் என்பது பெரும்பாலும் வயோதிகத்தில் வரும். இறந்தவரை சாய வைக்கிற நாற்காலிகூட இரவலாய்ப் போகிற இடங்கள் உண்டு.

நம்மிடம் போதிய நாற்காலிகள் இல்லையே என்று யாரும் வருத்தப்பட்டதில்லை. உடனே இரவல் வாங்கி வர மகன்கள் என்கிற இரு காலிகள் இருந்ததால்.

தோசை சுடுவதற்கு அம்மாக்கள் கைவசம் முக்காலி இருக்கும். விருந்தினர் அமர்ந்து சாப்பிட நான்கைந்து பலகைகள் இருந்தன.

தரையில் அமர்ந்து சாப்பிடும்போது அளவோடு சாப்பிட்டதோடு மட்டுமல்லாமல், மூட்டு வலியும் முழங்கால் வலியும் வராமல் எல்லோரும் திடமாக இருந்தார்கள்.

பக்கத்து வீட்டு அட்டிகை

அவசரம் என்றால் அடுத்த வீட்டினரிடம் மிதிவண்டியை இரவல் வாங்குவது உண்டு.

 திருப்பும்போது மரியாதைக்காக காற்றை நிரப்பித் தருவார்கள்.

சமையல் எரிவாயு திடீரெனத் தீரும்போது பக்கத்து வீட்டு உபயத்தால் அடுப்பைப் பற்ற வைப்பதும் உண்டு.

அன்று கத்தி முதல் சுத்தி வரை தேவையான பொருளை வழங்கிக்கொள்வதில் நட்பும், உரிமையும் சோம்பல் முறித்தன.

 கைக்கும் வாய்க்குமே வருமானம் நீடிக்கும் பரிதாப நிலை நடுத்தரக் குடும்பங்களில் நர்த்தனமாடியது.

பெண் பார்க்க வருகிறபோது பக்கத்து வீட்டு அட்டிகைகூட பெண்ணின் கழுத்தை அலங்கரிக்கப் பயன்படும்.

இரவல் என்பது சின்ன நகரங்களில் மட்டுமே இருந்தது.

 கிராமங்களில் யார் வேண்டுமானாலும் எந்த வேப்ப மரத்திலும் பல் துலக்க குச்சியை ஒடித்துக்கொள்ளலாம்.

 எந்த மோட்டார் ஓடினாலும் தங்கள் துணிகளை மூட்டையாக எடுத்துச் சென்று துவைத்துக்கொள்ளலாம்.

 ஓடுகிற தண்ணீரில் சிண்டுகள் சோப்புத் தேய்த்துக் குளித்துக்கொள்ளலாம்.

அதற்காகவே பெரிய தொட்டிகள். உழவர்கள் தங்கள் நிலத்தில் இன்றும் வாணிகம் செய்வதில்லை.

வருவோர் போவோர் ஆசையோடு மாங்காய் கேட்டால் காசு வாங்காமல் பறித்துத் தருவார்கள்.

 கரும்பு வயல்களில் அங்கேயே ஒடித்து ருசிக்கத் தடையில்லை. குழந்தைகளுக்குப் பால் என்று கேட்டால் பணம் பெற்றுக் கொடுப்பதில்லை.

இந்த அரிய பண்புகளால் சிற்றூர்களில் இன்னமும் மனிதம் ஜீவித்திருக்கிறது.

வீட்டுக்குள்ளேயும் இரவல் உண்டு. அண்ணன் வளர்ந்ததும் தம்பிக்கு அந்த சட்டை தானாக வரும்.

அக்காவின் தாவணி தங்கைக்குத் தாரை வார்க்கப்படும்.

ஐந்தாவது படிக்கும் அண்ணன் முழு ஆண்டுத் தேர்வு முடிந்ததும் நான்காம் வகுப்பை முடித்த தம்பிக்கு புத்தகங்களை அப்படியே ஒப்படைக்க, அவன் அதிலேயே படிப்பைத் தொடரும் சிக்கனங்கள் உண்டு.

 வசதியற்ற மாணவர்கள் மற்றோர் படித்த புத்தகங்களை அரை விலைக்கு வாங்கி அவற்றை வைத்துத் தேறுவது உண்டு. வண்ணப் பென்சில்கள் வீட்டின் பொதுவுடைமை.

 வேண்டியபோது அண்ணன் தம்பிகள் எடுத்துப் பயன்படுத்தி மீள வைப்பது மரபு.

இன்று பொதுவுடைமை என்பது இல்லத்துக்குள்ளேயே இல்லை.

 அண்ணனுக்கு வாங்குவதை தம்பிக்கும் தருவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் தகராறு.

 அவசரத்துக்கு என்று அடுத்தவரிடம் கேட்பது அநாகரிகம்.

அழுது எடுத்து எறிவார்களே தவிர, பகிர்ந்து மகிழ மாட்டார்கள்,

முருங்கைக்காய் அதிகம் காய்த்தால் பக்கத்தில் உள்ள கடைகளில் சென்று விற்க முயல்கின்றனர் ,

பற்றாக்குறை இல்லாத நிலை பல வீடுகளில் இன்று இருக்கிறது.

ஆனாலும் பெட்டியில் இல்லாத வறுமை உள்ளத்தை நிறைத்திருப்பது உண்மை !