30 நவ., 2009

இன்று படித்தவை-13: நவம்பர் 28, 2009


படிக்கவேண்டும் என்று புத்தகங்களையும், பத்திரிக்கைகளையும், சஞ்சிகைகளையும் மேஜை மேல் அடிக்கிக்கொண்டே போகிறேன். பத்து புத்தகம் அல்லது பத்திரிக்கை வாங்கி, ஒன்றை எடுத்துப் படித்து முடிப்பதற்குள் அடுத்த பத்து வந்து சேர்ந்துவிடுகின்றன. என்ன செய்வது என்றே புரியவில்லை. ஒரு காலத்தில் ஹேரி லோரைன் வேகமாகப் படிக்கும் முறையை (Harry Loraine Speed Learning Technique) ஓரளவு பயின்று அதைப் பின்பற்றியும் இந்த நிலை.

புதிய தலைமுறை, வார இதழ், அக்டோபர் 15, 2009:
-------------------------------------------------------------

புதிய தலைமுறை வார இதழ் மெருகேறிக்கொண்டே போகிறது. தமிழில் இப்படி ஒரு இதழ் இருப்பது பேரு மகிழ்ச்சியைத் தருகிறது. நான் மிகவும் பின்தங்கியிருக்கிறேன் - நான்கு இதழ்கள் சேர்ந்துவிட்டது!

இந்த இதழில் என்னைத் தொட்ட சில மட்டும்:

1. தேவை: சிகரெட் உற்பத்திக்குத் தடை

பொது இடங்களில் புகைக்க தடைச் சட்டம் வந்து ஓராண்டைத் தாண்டியும் எதிர்பார்த்த பலன் இல்லை. நிறையப் பேர் பொது இடங்களில் புகைக்கின்றனர். அவர்களை யாரும் எதுவும் செய்வதில்லை. இதைப் பற்றிய மாலன் அவர்களது கட்டுரை.

2. பத்தாயிரம் மைல் பயணம்

வெ.இறையன்பு அவர்களின் இனிய கட்டுரை. பல பயனுள்ள, சுவையான தகவல்கள் அடங்கியது. முதல் வரியே அருமை: "சீனத்தில் ஒரு பழமொழி இருக்கிறது. "ஒருவன் மரணமடைவதற்கு முன் பத்தாயிரம் புத்தகங்கள் படித்திருக்க வேண்டும், பத்தாயிரம் மைல் நடந்திருக்க வேண்டும்". பத்தாயிரம் மைல் நடக்கிறேனோ என்னவோ, பத்தாயிரம் புத்தகங்கள் நிச்சயம் படித்திடுவேன்.

"பயனங்கலால்தான் வரலாற்று நூல்கள் உருவாயின. முதல் வரலாற்று நூலை எழுதியவர் ஹிரோடட்டஸ். அவர் சரித்திரங்கள் என்ற பெயரில் ஒன்பது புத்தகங்களை எழுதினார். ஒரு சுற்றுலாப் பயணியைப்போல ௨௪௩0 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்து நாட்டிலிருக்கும் மூன்று பிரமிடுகளைப் பார்வையிட்டார். பயணத்தின்போது அவர் பார்த்தவையும், கேட்டவையும் அவரை நூலாசிரியராக மாற்றியது. பயணம் நமக்குள் இருக்கும் ஆற்றலை வெளிக்கொண்டு வருகின்ற ஒளிச்சாதனமாய்த் திகழ்கிறது."

"பயன்களால் தேசங்கள் இணையும். தடுப்புச் சுவர்கள் உடையும். அன்பு பெருகும். பண்பாடு பரிமாறப்படும். விஞ்ஞானம் செழிக்கும். வாழ்க்கைத்தரம் உயரும்..."

இப்படி பல சுவாரஸ்யமான, சுவையான செய்திகள்.

3. அன்று பத்தாம் வகுப்பு தவறியவர் இன்று பிஎச்.டி.

கல்வி தடைப்பட்டால் வாழ்க்கை முடிந்து விடுவதில்லை என்று தன்னம்பிக்கை ஊட்டும் முனைவர் பரசுராம் அவர்களைப்பற்றிய யுவகிருஷ்ணா அவர்களின் கட்டுரை.

4. தெய்வம் தந்த பூ!

இந்தக் கட்டுரையைப் பார்த்துவிட்டுத்தான் நானும், தம்பி நெல்லையும் தனுஷ்கோடி, அரிச்சல்முனை எல்லாம் சென்று வந்தோம். மறக்க முடியாத அனுபவங்கள். ஏற்கனவே இந்த வலைப்போவில் தனியே பதிவு செய்துள்ளேன் படங்களுடன்.

5. உருப்பட ஒரு புத்தகம்: "உன்னதம் உங்கள் இலக்கா?"

"நீங்கள் உன்னதங்களை நேசிப்பவரா? உன்னத நிலையை கனவு காண்பவரா? அடைய முயற்சி கொண்டிருப்பவரா? "

உன்னத நிலையை அடைவதற்கான வழிகளைக் கூறும் பா.ராகவன் அவர்கள் எழுதிய "எக்ஸலன்ட்" என்ற சுய முன்னேற்ற நூலைப் பற்றிய கட்டுரை.

இன்னும் பல கட்டுரைகள், பயனுள்ள செய்திகள், தகவல்கள். குறிப்பாக இளைஞர்கள் வாங்கிப் படித்து, தொக்குத்து வைக்க வேண்டிய பொக்கிஷம். ஆசிரியர் திரு மாலன் அவர்களுக்கும், ஆசிரியர் குழுவிலுள்ள மற்றவர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

29 நவ., 2009

கருத்துக்கள்-18: "பரிசுகள்"பரிசுகள் வழங்கும் பழக்கம் உலக மக்கள் அனைவர்க்கும் பொதுவானது. திருமணம், பிறந்தநாள், மணிவிழா, புத்தாண்டு, கிறிஸ்துமஸ் என்று பல சமயங்களில் பரிசுகள் வழங்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரிகளிலும் போட்டிகளுக்கும், மற்றும் சாதனை புரிந்தவர்களுக்கும் பரிசுகள் வழங்கப் படுகின்றன.

இதில் பிரச்சினை என்னவென்றால் பரிசுப் பொருளை தேர்ந்தெடுப்பது. என் நண்பர் ஒருவர் கூறினார்: "என் வீட்டில் கழிப்பறை தவிர எல்லா அறைகளிலும் சுவர்க்கடிகாரம் உள்ளது. அத்தனையும் பரிசாக வந்தது." ஒரு சமயத்தில் பல பேர் ஒரே பொருளை பரிசாக வழங்கி, பெற்றவர் அதை என்ன செய்வது என்று தெரியாமல், அடுத்து வரும் வாய்ப்பில் அதை அவர் மற்றவர்க்கு பரிசாக வழங்கி, அப்பாடா என்று பெருமூச்சு விடலாம்.

இந்த பிரச்சினைக்கு விடையாக சிலர் பணமாகவே பரிசுகளை வழங்கி விடுகின்றனர். இதிலும் வேடிக்கை இருக்கிறது. ஒரு பெரும் பணக்காரருக்கு ஒன்றுமே இல்லாத சாதாரண மனிதர் பணம் பரிசாகக் கொடுப்பது.

நானறிந்தவரை இதற்கு சரியான விடை நல்ல புத்தகங்களை பரிசாக வழங்குவதே. பெறுபவரின் விருப்பு வெறுப்புகளை ஓரளவு அறிந்திருந்தால் சரியான புத்தகங்களை தேர்ந்தெடுக்க முடியும்.

காரைக்குடியில் ஆண்டுதோறும் புத்தகத் திருவிழாக்கள் நடத்தும்போது, முதன்மைக் கல்வி அலுவலர் மூலம் மாவட்டத்திலுள்ள பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ஒரு விண்ணப்பம் அளித்தோம். பள்ளிகளில் வழங்கப்படும் பரிசுகள் அனைத்தும் புத்தக வடிவில் இருக்க வேண்டும். பல பள்ளிகள் பிளாஸ்டிக் சாமான்கள், பாத்திரங்கள் என்று பரிசு வழங்கியதை மாற்றி, புத்தகங்களைப் பரிசாக வழங்கினர்.

சமீபத்தில் நடந்த எனது மணிவிழாவில் இரண்டு அன்பர்கள் மட்டும் புத்தகங்களைப் பரிசாக வழங்கினர். ஒரு அன்பர், சிரிக்க வேண்டாம், இரயில்வே கால அட்டவணையைப் பரிசாக வழங்கினார்! இன்னொரு நண்பர் ஜக்கி வாசுதேவ் அவர்களின் சிந்தனைத் தொகுப்பான, "ஆயிரம் ஜன்னல்" என்ற அற்புதமான நூலையும், சுஜாதாவின் "கடவுள்" என்ற நூலையும் அன்புப் பரிசாக வழங்கினார்.

ஒன்று இரண்டுமே என்னிடம் இல்லாத புத்தகங்கள். இரண்டாவது இரு நூலாசிரியர்களும் நான் பெரிதும் மதிப்பவர்கள். ஆயிரம் ஜன்னலில் முதல் இரு அத்தியாயங்களைப் படித்து விட்டேன். என் மனதிற்கு மிகவும் ஏற்புடையதாக இருக்கின்றது. அற்புதமான புத்தகம் என்பதை அவை கட்டியம் கூறுகின்றன. ஏற்கனவே சத்குரு அவர்களின் "அத்தனைக்கும் ஆசைப்படு" புத்தகத்தை மூன்று முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன். முதல் பக்கத்திலிருந்து கடைசிப் பக்கம் வரை தேர்ந்தெடுத்த பகுதிகளை எனது குறிப்பேட்டில் பதிவு செய்திருக்கிறேன். ஈடு இணையற்ற நூல் அது.

இந்த இரு புத்தகங்களை வழங்கிய அன்பர் பணத்தைச் செலவு செய்தது மட்டுமல்லாமல், நேரத்தை செலவு செய்து, சிந்தனை செய்து, எனக்கு என்ன பிடிக்கும் என்று யூகித்து, புத்தகக் கடையைத் தேடிச் சென்று அருமையான இந்த இரு புத்தகங்களை வாங்கியிருக்கிறார் என்பதை என்னால் உணரமுடிகிறது. அவருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இத்தருணத்தில் எனது மணிவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அன்பர்கள், சிறப்பாக நடக்க உதவிய அன்பர்கள், பரிசுகள் வழங்கிய அன்பர்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும் நல்லருள் புரியட்டும்.

27 நவ., 2009

கருத்துக்கள்-17: "கண் திருஷ்டி" (Evil Eye)

கோவிலுக்குச் சென்று திரும்புகையில், ஒரு வீட்டுச் சுவரில் அந்த அழகிய 'கண் திருஷ்டி விநாயகர்' படத்தைக் கண்டேன். கேமெரா கையில் இல்லை. சரி பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டேன்.

அது கண் திருஷ்டி பற்றி என்னை சிந்திக்க வைத்தது. பொறாமைக்காரர்கள், வயிற்றெரிச்சல் பிடித்தவர்கள் பார்வை நம்மை பாதிக்கும் என்ற நம்பிக்கை நம்மிடையே பரவலாக இருக்கிறது. பல வீடுகளில் சுவற்றிலோ அல்லது வாசலிலோ கண் திருஷ்டி விநாயகர் படத்தைப் பார்க்கலாம். சில வீடுகளில் திருஷ்டி பூசணிக்காயை கட்டித் தொங்கவிட்டிருப்பர்கள். அல்லது கோரமான ராக்ஷஸ உருவத்தின் படத்தை மாட்டியிருப்பார்கள். இதை மூட நம்பிக்கை என்று எளிதாக தள்ளிவிடலாம்.

ஆனால் இதில் ஏதோ உண்மை இருக்கிறது என்பதை என்னால் கூறமுடியும். நான் ஹோமியோபதி பயின்ற காலத்தில் 'அஸாரம் யூரோப்பியம்' (Asarum Europeum) என்ற மருந்தைப் பற்றி படித்திருக்கிறேன். ('நிலக் கடம்பு' என்ற தாவரத்திலிருந்து தயாரிக்கப்படும் கண் திருஷ்டிக்கான (Evil Eye) மருந்து அது). எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மேலை நாட்டினரிடமும் இது போன்ற நம்பிக்கை இருப்பது. மேலும் அந்த மருந்திற்கான அனுபவக் குறிப்புகளில் ஹோமியோபதி மருத்துவர்கள் கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களை இந்த மருந்தைக் கொடுத்து குணப்படுத்தியதைக் கூறியிருந்தார்கள்.

நன்றாகப் பால் கொடுத்துக் கொண்டிருந்த கொழு கொழுவென்றிருந்த பசுமாடுகள் திடீரென பால் கொடுப்பதை நிறுத்தியதோடு மட்டுமல்லாமல், உருக்குலைந்து எழும்பும் தோலுமாக ஆகின. அவற்றை ஹோமியோ மருத்துவர்கள் குணப்படுத்தியிருக்கிரார்கள். எனவே மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் 'கெட்ட பார்வையால்' பாதிக்கப் படக்கூடும்.

நம் தமிழ்நாட்டிலேயே ஒரு புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவர் இதைப் பற்றிக் கூறியிருந்தது நினைவுக்கு வருகிறது. அவரது உறவினரின் குழந்தை வயதுக்கு மீறிய அறிவு வளர்ச்சி மற்றும் இனிமையான குரல், ஸ்லோகங்கள், பாடல்களை மிகத் தெளிவாகப் பாடி அனைவரையும் கவரும் தன்மை பெற்றிருந்தது. ஒருநாள் அவர்கள் வீட்டிற்கு ஒரு பெண்மணி வந்திருந்தபோது, வழக்கம்போல் அந்தக் குழந்தையை அழைத்து பாடச் சொன்னார்கள். அதன் பாடும், பேச்சும் அந்தப் பெண்மணியை மிகவும் கவர, அவர் "குழந்தை என்னமா பாடுகிறாள்" என்று வியந்து பாராட்டிச் சென்றாராம். திடீரென அது முதல் அந்தக் குழந்தை பேச முடியாமல் போனது. பெரிய மருத்துவர்களிடம் சிகிச்சை அளித்தும் குணப்படுத்த முடியவில்லை, என்ன நோய் என்று அறியவும் முடியவில்லை. இறுதியில் அப்போது ஹோமியோபதி படித்துக்கொண்டிருந்த பின்னாளில் புகழ் பெற்ற அந்த ஹோமியோபதி மருத்துவர், அந்தக் குடும்பத்தில் ஒருவர். குழந்தையின் பெற்றோர் எப்படியாவது குணமானால் சரி என்று சம்மதிக்க. அவர் 'அஸாரம் யூரோப்பியம்' என்ற மருந்தைக் கொடுக்க, குழந்தை விரைவில் குணமடைந்து, முன்போல் பாட, பேச ஆரம்பித்து விட்டாள். இதெல்லாம் பலருக்கு நம்பக் கடினமாக இருக்கும். ஆனால் நான் இதை முழுமையாக நம்புகிறேன்.

25 நவ., 2009

நண்பர் கிருஷ்ணன் அவர்களது மணிவிழா


இன்று நண்பர், சாமி.கிருஷ்ணன் அவர்களது மணிவிழா. எனது மணிவிழா முடிந்து பத்து நாட்களில் இன்னொரு மணிவிழா!

முனைவர் சாமி.கிருஷ்ணன் எங்கள் அலுவலகத்தில் உலோக அரிமானப் பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற விஞ்ஞானி. நான் அந்தப் பிரிவில் பணியாற்றியபோது எங்களுக்குள் நட்பு ஏற்பட்டது.

அவர் அன்னை-அரவிந்தர் மீது பற்றுக் கொண்டவர். எனது ஈடுபாடோ ஸ்ரீஇராமகிருஷ்ணர்-அன்னை சாரதாதேவி-சுவாமி விவேகானந்தர் மீது. நாங்கள் நேரம் கிடைக்கும்போது ஆன்மீகக் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வோம்.

வருடத்தில் மூன்று-நான்கு முறை பாண்டிச்சேரி சென்று அரவிந்த ஆஸ்ரமத்தில் தங்குவார். போகும்போதெல்லாம் என்னையும் அழைப்பார். இறுதியில் ஒருநாள் அவருடன் சென்றேன். தங்குவதற்கு ஆஸ்ரம சர்வதேச விடுதியில் அறை பதிவு செய்திருந்தார். அங்கே அவருடன் இரண்டு நாட்கள் தங்கியிருந்தேன்.

அரவிந்தரின் மாபெரும் காப்பியமான சாவித்ரியைப் பற்றி அப்போதுதான் அறிந்து கொண்டேன். மில்டனின் 'பேரடைஸ் லாஸ்டுக்கு' (Paradise Lost) இணையான ஒரு பெருங் கவிதை. பேராசிரியர் நட்கர்னி அவர்களது தொடர் உரைகளை கேட்டு பிரமித்தேன், இன்புற்றேன். தினம் இரண்டு சிறப்புரைகள் என்று தொடர்ந்து பத்து நாளோ-பதினைந்து நாளோ நடைபெற்றது. நான் இரண்டு நாட்கள் மட்டுமே தங்கியிருந்ததால் நான்கு சிறப்புரைகளை மட்டுமே கேட்க முடிந்தது. மறக்க முடியாத ஒரு அற்புத அனுபவம் அது.

மேலும் என்னை அவர் ஆரோவில்லுக்கு அழைத்துச் சென்றார். அங்கே அன்னையின் ஆலயத்தில் (Matri Mandir) தியானம் செய்தோம். மற்றுமொரு மறக்கமுடியாத அனுபவம் இது.

பெரிய இடைவெளிக்குப் பின் நண்பர் கிருஷ்ணன் அவர்களை சந்தித்தது, அதுவும் அவரது மணிவிழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைத் தந்தது. மேலும் பல நண்பர்களை அங்கே கண்டேன். அங்கே எடுத்த சில படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.

நண்பர் கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சகல நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

18 நவ., 2009

வீடியோ சிறுகதைகள்-1: பொன்.சுதாவின் "மறைபொருள்"இன்று காலை வலையில் தேடும்போது, பொன்.சுதாவின் இந்தக் குறும்படத்தைக் கண்டேன். மிகவும் நேர்த்தியாக, வசனம் எதுவும் இல்லாமல், ஆழமான, ஒரு வீடியோ கதையை (வீடியோ கவிதை என்றே சொல்லலாம்) உருவாக்கியமைக்காகப் பாராட்டுக்கள். இறுதியில் நெஞ்சில் ஒரு முள் குத்தியதைப் போன்ற வலி.

நீங்களும் பாருங்களேன்.

நன்றி: பொன்.சுதா & YouTube.

17 நவ., 2009

கருத்துக்கள்-16: உழைக்காமல் உண்பதில்லை!


இரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் பொது இடங்களில் பெரியவர், சிறியவர், குழந்தைகள் பிச்சை எடுப்பதை அன்றாடம் நாம் பார்க்கிறோம். மனதிற்கு கஷ்டமாக இருக்கும். ஏதோ சில்லறையைப் போட்டுவிட்டு மறந்துவிட முயற்சிப்போம், ஒருவகையான குற்ற உணர்வோடு.

சென்ற முறை இராமேஸ்வரம் செல்லுகையில், இராமநாதபுரம் இரயில் நிலையத்தில் அந்தப் பாட்டியைப் பார்த்தேன். பனை ஓலை விசிறி, பனை ஓலை கிலுகிலுப்பை வேண்டுமா என்று ஒவ்வொரு இரயில் பெட்டியாகத் தேடித் தேடி விற்றுக்கொண்டிருந்தாள்.

சிரித்த முகத்தோடு, பொறுமையாக, குறைந்த விலையில் கலைநயம் மிக்க பொருட்களை விற்று, வாழும் அந்தப் பாட்டி என்னைப் பெரிதும் கவர்ந்தாள். அந்தப் பாட்டியிடம் ஒரு படம் எடுக்கலாமா என்று கேட்டதும் வெட்கம் வந்துவிட்டது. இரண்டு விசிறி பத்து ரூபாய், இரண்டு கிலுகிலுப்பை பத்து ரூபாய்! கிலுகிலுப்பை வைத்து விளையாடும் வயதில் வீட்டில் யாரும் இல்லாதிருந்தபோதும், நாங்கள் கிலுகிலுப்பைகள், விசிறிகள் வாங்கினோம்.

இந்தத் தள்ளாத வயதிலும் உழைத்து உண்ண வேண்டும். வேறு யாரையும் சார்ந்து வாழக் கூடாது என்றிருக்கும் அந்தப் பாட்டியை நாம் அனைவருமே, குறிப்பாக, நம் இளைஞர்கள் முன்மாதிரியாகக் கொள்ளலாம்.

16 நவ., 2009

எனது மணி விழா (சஷ்டியப்தபூர்த்தி)

கிரிகோரியன் கேலண்டர்படி (Gregorian Calendar) நான் சென்ற அக்டோபர் இருபத்தோராம் நாள், அறுபத்து ஒன்றாவது வயதில் அடி எடுத்து வைத்துவிட்டேன். ஆனால் நம்மவர்கள் நட்சத்திரக் கணக்குப்படி, தமிழ் கணக்குப்படி, அறுபது ஆண்டுகள் என்ற சுழற்சி. எனவே அறுபது வயது முடிந்தபின் பிறந்த அதே வருடம் மறுபடியும் வரும்.

நான் பிறந்த 'விரோதி' வருடம் மறுபடியும் வந்திருக்கிறது. விரோதி வருடம் ஐப்பசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தேன். அன்று தீபாவளி. தற்போது
நவம்பர் பதினான்காம் நாள் எனது ஜன்ம நட்சத்திரம்.

என் பிள்ளைகள் மணிவிழா எடுக்கவேண்டும் என்று முடிவெடுத்தனர்.

எனக்கு அதில் உடன்பாடு இல்லாததற்கு காரணங்கள் உண்டு.

1. அந்தக் காலத்தில் அறுபது வயது வரை வாழ்வது பெரிய சமாச்சாரம். இன்று அறுபது, எழுபது என்பது சர்வ சாதாரணம். எனவே அறுபது வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை.

2. சொத்துபத்து, வசதி வாய்ப்பு உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் கொண்டாடலாம். தங்கள் பேரன் தும்மல் போட்டால்கூட அதைக் கொண்டாடலாம். என்னிடம் சொத்து பத்து எதுவும் கிடையாது. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தமில்லை.

3. வாழ்க்கையில் சாதனை நிகழ்த்தியவர்கள் மணிவிழாவில் எடுப்பதில் அர்த்தம் இருக்கிறது. என் வாழ்வில் அது போன்ற சாதனைகள் எதுவம் இல்லை. எனவே நான் கொண்டாடுவதில் அர்த்தம் இல்லை.

மாற்றுக் கருத்து: என் பிள்ளைகள் என் திருமணத்தைப் பார்க்கவில்லை. தற்போது அதைப் பார்க்க ஒரு வாய்ப்பு. ஹோமம் வளர்த்து, மந்திர ஜபங்கள் ஒலிக்க, தோஷங்கள் நீங்கி, வாழ்வின் கடைசிப் பக்கங்களை நிம்மதியாகக் கழிக்கலாம்.

எனவே இறுதியில் மிக எளிய விழாவிற்கு உடன்பட்டேன். அவ்வளவுதான். அதற்கப்புறம் அது படிப்படியாக விரிந்துகொண்டே போய் பெரிதாகிவிட்டது. மாட்டிக்கொண்டோம் என்ற உணர்வுதான் இருந்தது.

விழா முடிந்தபின் இந்த உணர்வு முற்றிலுமாக மறைந்து மனதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. நம் மேல் பேரன்பு கொண்டவர்கள், நெருக்கமானவர்களுடன் கூடி உறவாடியது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.

அன்பை அபரிமிதமாக வெளிப்படுத்த, அன்பைப் பரிமாறிக்கொள்ள, அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. கலந்துகொண்டு அன்பைப் பொழிந்த அனைத்து உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

விழாவில் எடுக்கப்பட்ட சில படங்களை இங்கே பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
12 நவ., 2009

இன்றைய சிந்தனைக்கு-84:

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு.

படிக்கப் படிக்க இன்பம் தருவது நல்ல இலக்கியம். அதுபோல், பழகப் பழக இன்பம் தருவது நல்ல நட்பு. (கவிஞர் புவியரசின் தெளிவுரை)

நன்றி: கவிஞர் புவியரசு & டீலக்ஸ் வெளியீடுகள்

10 நவ., 2009

பாகனேரி தேர்த் திருவிழா

பாகனேரி சிவன் கோவில்

திருவிழாக்கள் என்றால் குழந்தைகளுக்கு மட்டும்தான் மகிழ்ச்சி என்று எண்ணியிருந்தேன். பொதுவாக எனக்கு சிறுவயதிலிருந்தே திருவிழாவில் கலந்துகொள்வதில் ஈடுபாடு இல்லை. பாகனேரி தேர்த்திருவிழாவில் ஒரு சாதாரண பார்வையாளனாக கலந்துகொண்டு, பார்த்ததும், கேட்டதும் அந்த எண்ணத்தை மாற்றியது. மக்கள் எவ்வளவு உற்சாகமாக கலந்து கொள்கிறார்கள்! உற்றார் உறவினருடன் எவ்வளவு மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள்!!

திருவிழா, தொழில், வேலை என்று எங்கெல்லாமோ சிதறிப்போனவர்கள் ஒன்றுகூடும் நாளாகவும் அமைவதைக் கண்டேன். பிரிந்த நண்பர்கள் ஒருவொருக்கொருவர் மகிழ்ச்சியுடன் உரையாடுவதைக் கண்டேன்.

அங்கே எடுத்த சில படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

பாகனேரி சிவன் கோவிலும், நிலையில் நிற்கும் தேரும்

நிலையில் தேர்நிலையில்
நிற்கும் தேர் முன்

தேர் நகர ஆரம்பித்துவிட்டது

தேர் உலா

திருவிழா என்றால் பலூன் இல்லாமலா!குழந்தைகளின் குட்டித்தேர்

(குறிப்பு: திருவிழா நடந்தது ஜூலை ஐந்தாம் நாள். பிறகு பதியலாம் என்று தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன்; பிறகு முற்றிலுமாக மறந்துவிட்டது. நேற்று இரவு என் ஆல்பத்தைப் புரட்டிப் பார்க்கையில் கண்டதும், இன்று முதல் வேலையாக என் வலைப்பூவில் பதிய முடிவு செய்தேன்.)

9 நவ., 2009

சிந்தனைகள்-4: "ஈ"

தமிழ்நாட்டில் குக்கிராமத்தில்கூட தெருவுக்கு குறைந்த பட்சம் ஒரு டீக்கடை இருக்கும். அந்த டீக்கடையில் மொறுமொறுவென்று வடை இருக்கும். விலை நம்பமுடியாது: ஒரு ரூபாய் மட்டும்! பார்த்தாலே சாப்பிடத்தோன்றும், அதாவது நீங்களும் என்னைப்போன்ற ஒரு போஜனப் பிரியனாக இருந்தால். (எண்ணெய், பருப்பு விற்கும் விலையில் இது எப்படி சாத்தியமாகிறது?)

டீக்கடையில் எப்போதும் நான்கைந்து பேர் வடையை சுவைத்து மென்றுகொண்டு, அரட்டை அடித்துக்கொண்டு, டீயை உறிஞ்சிக்கொண்டு இருப்பதைப் பார்க்கலாம். இதில் கொடுமை என்னவென்றால், அந்த வடைகளில் தவறாது ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். கடைக்காரருக்கோ, 'கஸ்டமர்களுக்கோ' அதைப்பற்றிய எந்த உணர்வும் இருப்பதாகத் தெரியாது.

ஒருநாள் இதுபோன்ற ஒரு டீக்கடையில் வடை சாப்பிட கையை நீட்டியபின் நீட்டிய கையை பின்னே இழுத்துகொண்டேன். காரணம்: ஈ. நொந்துபோய் கடைக்காரரிடம், "ஏம்பா! வடையை ஒரு இலையாலோ அல்லது ஒரு பேப்பராலோ மூடிவைத்தால் ஈ மொய்க்காதிருக்கும் இல்லையா?" என்றேன். டீக்கடைக்காரரும், சுற்றியிருந்தவர்களும் ஏதோ விசித்திரமான பிராணியைப் பார்ப்பதுபோல் என்னைப் பார்த்தார்கள். தர்ம சங்கடமாக இருந்தது; நான் ஏதோ பெரிய தப்பு செய்துவிட்டதைப்போல் உணர்ந்தேன். மெதுவாக நகர்ந்து விட்டேன்.

சிரமப்பட்டு சுவையான வடை தயார் செய்கிறார்கள். அதை மூடி சுகாதாரமாகப் பாதுகாப்பது எவ்வளவு எளிது! இருப்பினும் ஏன் செய்ய மறுக்கிறார்கள்? அந்த ஈ எங்கெல்லாமோ உட்கார்கிறது. அது நமக்குத் தெரியாமலா இருக்கிறது? ஏன் கொஞ்சம்கூட அருவருப்பு உணர்வே இல்லை.

பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுவார். ஒவ்வொரு மனிதனுக்கும் ஏழு தளைகள் (விலங்குகள்) இருக்கின்றன. அவற்றிலிருந்து விடுபடாதவரை முக்தி என்பது கிடையாது. அருவருப்பு அவற்றில் ஒன்று. நம்மவர்கள் அருவருப்பு என்ற தலையை உடைத்து ஆன்மீகத்தில் முன்னேறி விட்டார்களா என்று எடுத்துக் கொள்ளவா?

சரி, சாதாரண டீக்கடையில்தான் இப்படி என்றால், ஒருமுறை உலகப் புகழ் பெற்ற ஒரு மிகப் பெரிய ஸ்டார் ஹோட்டலில் அலுவலக வேலையாக, ஒரு தேசிய கருத்தரங்கத்திற்காகச், சென்றிருந்தேன். மூன்று நாள் கருத்தரங்கம் முடிந்து, கிட்டத்தட்ட ஏழு லட்ச ரூபாய் ஹோட்டலுக்கு கட்டணம் செலுத்தினார்கள். அங்கே 'பஃபே' முறையில் உணவு. ஒரு தட்டை கையில் எடுத்தாலே ரூபாய் 650 கணக்கில் ஏறிவிடும். என் நண்பர் சாப்பாட்டில் நாட்டமின்றி, கொஞ்சம் சுண்டல் மட்டும் சாப்பிட்டால் போதும் என்று ஒரு தட்டில் சுண்டல் எடுக்க, அதில் ஒரு முழு கரப்பான் பூச்சி இருந்தது. உடனே அதை மூடி மறைக்க பயங்கர பரபரப்பு.

ஏன் நம்மிடம் சுத்தம், சுகாதாரம் என்பது பெயரளவில் மட்டுமே இருக்கிறது. நம் சுத்தம், சுகாதார உணர்வுகள் முற்றிலும் மழுங்கிப் போய்விட்டனவா?

மறுபக்கம் சுத்தம், சுகாதாரம் என்பது ஒரு 'fetish' ஆக்கிவிட்ட ஒரு கூட்டம்.

ஒன்றும் புரியவில்லை. உங்களுக்குப் புரிந்தால் சொல்லுங்கள். நன்றி.

5 நவ., 2009

அருள்மிகு வயல் நாச்சி அம்மன் குடமுழுக்கு விழா

கும்பாபிஷேகம் (குடமுழுக்கு) பார்த்தால் கோடிப் புண்ணியம் என்பார்கள். சமீபத்தில் எங்களுக்கு அந்தப் பேறு கிடைத்தது.

சென்ற
நவம்பர் முதல் தேதி காலை, சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் வேலங்குடி, அருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவில் குடமுழுக்கு விழா இனிதே நடை பெற்றது. அவ்வமயம் எடுத்த படங்களை இங்கே பதிவு செய்துள்ளேன்.
Justify Fullகும்பாபிஷேகத்திற்கு வரவேற்பு

யாகசாலைஅருள்மிகு வயல்நாச்சி அம்மன் கோவிலும் குளமும் -
குடமுழுக்கைக்
காண காத்திருக்கும் கூட்டமும்

4 நவ., 2009

சிந்தனைகள்-3:"குழி தோண்டல்"

நம்மவர்களுக்கு குழி தோண்டுவது என்றால் ஏக குஷி - மனிதருக்கு மனிதரும் சரி, சாலைகளிலும், சாலை ஓரங்களிலும் சரி. அதுவும் அரசு அமைப்புக்கள் ஒருவரை ஒருவர் கண்டுகொள்வதில்லை. ஏகப்பட்ட 'ஈகோ' பிரச்னை வேறு. அப்போதுதான் அழகாகப் போட்டு முடித்திருப்பார்கள் சாலையை. பின்னாலேயே வந்துவிடுவார்கள், குழி தோண்ட. ஒரு துறை குழி தோண்டி மூடிய பின் அடுத்த துறையினர் குழி தோண்ட வந்து விடுவார்கள். அதிலும் தோண்டுவார்களே தவிர சரியாக மூட மாட்டார்கள். சமயத்தில் எனக்குத் தோன்றும்: "அரசுத் துறைகள் ஒப்பந்தக்காரர்களின் வசதியை மட்டும்தான் பார்க்கிறதோ என்று". ஏன் சரியாக மூடவில்லை என்று கேட்கமாட்டார்கள்.

அதிலும் மழைக்காலத்துக்கு முன் தோண்டிப் போட்டுவிட்டுப் போய்விடுவார்கள். மழை பெய்ய ஆரம்பித்ததும் மக்கள் நரக வேதனை அனுபவிக்க வேண்டாமா? மேலெல்லாம் சேற்றை வாரியிறைக்க வசதியாக குழிகள் சரியாக மூடப் படாமல் இருக்கும். மழை நீர் சாலையில் ஓட, குழி கண்ணில் படாமல், விழுந்து எழுவோர், விழும் வாகனங்கள் என்று நம் ரோதனைகளை சொல்லிக்கொண்டே போகலாம். அதிலும் குழந்தைகள், பெண்டிர் படும்பாடு சொல்லிமுடியாது. ஆனால் இதைப் பற்றியெல்லாம் அரசு எந்திரங்களுக்குக் கவலை இல்லை.

இந்த வேதனைகளை எல்லாம் நான் நிறைய அனுபவித்திருக்கிறேன், நீங்களும் அனுபவித்திருக்கலாம்.

தற்போது இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் வந்து விட்டதுபோல் தோன்றுகிறது.

இரயில் பயணச்சீட்டு ஒன்றின் பின்புறம் கண்ட விளம்பரம் மனதிற்கு நம்பிக்கை தருவதாகவும், ஆறுதல் அளிப்பதாகவும் உள்ளது. (படம் ஆரம்பத்தில்). "குழாயோ, கேபிளோ அமைப்பதற்கு குழி தோண்டவேண்டாம்." ஒரு புதிய 'டெக்னாலஜி' வந்துள்ளது. மோகன் ப்ராஜெக்ட்ஸ் லிமிடெட் என்ற இந்தக் கம்பெனியின் விளம்பரம் உண்மையாயின், நல்ல காலம் பிறந்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். ஆனாலும் இன்னொரு முட்டுக்கட்டையைத் தாண்டவேண்டும். அரசு அமைப்புக்கள் இந்த 'டெக்னாலஜியைப்' பயன்படுத்த முன்வரும் என்று கூறமுடியாது. ஒப்பந்தக்காரர்களின் நலம் நாடி செய்யப்படும் இவ்வாறான வேலைகளை அவ்வளவு எளிதாக மாற்றிவிட முடியுமா? என் நண்பர் கூறுவார்: "Government for the contractors, of the contractors and by the contractors" என்று கூறுவதுண்டு. அது முற்றிலும் உண்மையா என்று பார்க்க வேண்டும்.