26 பிப்., 2010

யோக சித்தி-13: அருள் விளக்கம்-3

ஒன்றென்றும் தோற்றம் ஒடுக்கம் அதிலேயே
கண்டவனே காட்சிக் கிறை.

ஐந்தொழிலும் புரிந்து உலகாடலை நடத்தும் அருட்சக்தி, தெய்வசக்தி ஒன்றே. உலகம் தோன்றி, வளர்ந்து, முதிர்ந்து அடங்குவதும் அந்த ஒன்றிலேதான். இவ்வாறு இறைவன் சக்தி ஒன்றே எங்குமாய், எல்லாமாய், எதற்கும் பிறப்பிடமாய் ஒடுங்கிடமாய் நிற்பதென்று அறியும் ஞானியே அறிவிற் பெரியவனாவான்.

25 பிப்., 2010

என்ன நடக்கிறது?-13: "அதிர்ச்சித் தகவல்"

நேற்றுத்தான் பி.டி.கத்திரி பற்றி அவள் விகடனில் வெளியான ஜக்கி வாசுதேவ் அவர்களது எச்சரிக்கையைப் பதிவு செய்தேன். இன்று இமெயிலில் பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம் அவர்கள் அதிர்ச்சி தரும் அந்தச் செய்தியை அனுப்பியிருந்தார். அதன் விபரம் வருமாறு:

இந்திய அரசின் பயோடெக்னாலஜித் துறை சட்டம் ஒன்றை வடிவமைக்கிறது. அதன்படி மரபணு மாற்றம் செய்யப்பட உணவுகள் அல்லது மருந்துகளை எதிர்த்துப் பேசுவதோ, எழுதுவதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது சட்டமாக்கப்பட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையும், இரண்டு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படலாம்.

தேவீந்தர் ஷர்மா அவர்களது வலைப்பூவில் பதிவு செய்யப்பட்ட தகவலை பேராசிரியர் எனக்கு அனுப்பியிருந்தார். நீங்களும் அந்தத் தகவலைப் படிக்கலாம்.

http://devinder-sharma.blogspot.com/2010/02/india-seeks-jail-for-gm-food-critics.html

இது குறித்து மெயில் டுடேயில் முதற் பக்கத்து செய்தியாக தினேஷ் ஷர்மா அவர்களது கட்டுரையையும் அவசியம் படியுங்கள்.

http://epaper.mailtoday.in/epaperhome.aspx?issue=1922010

நாட்டில் என்ன நடக்கிறது? ஒன்றுமே புரியவில்லை.

மேலே குறிப்பிட்ட இரண்டு செய்திகளையும் ஜூனியர் விகடன் போன்ற இதழ்களுக்கு அனுப்ப எண்ணியுள்ளேன். நீங்களும் இவற்றை அனைவரின் கவனத்திற்கும் கொண்டுசெல்வீர்கள் என்று நம்புகிறேன். நம் அனைவரின் எதிர்காலமும் பாதிக்கப்படலாம். உடனே செயல்படுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


நன்றி: பேராசிரியர் சுப்பையா அருணாச்சலம், திரு தேவீந்தர் ஷர்மா, திரு தினேஷ் ஷர்மா மற்றும் மெயில் டுடே.

என்ன நடக்கிறது?-12: "ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம்"

"ஒதுக்கியும் செலவழிக்காததால் ரூபாய் 59,000 கோடி வீண்: அமைச்சகங்களின் அலட்சியம்" என்ற தலைப்பில் தினமலர் நாளிதழில் (தினமலர், மதுரை, 21.2.2010) வெளியாகியிருந்த செய்தியை வேதனையுடன் படித்தேன். அதன் சுருக்கத்தை இங்கே தருகிறேன். என்ன நடக்கிறது?

"மக்களுக்காகப் போடப்படும் அரசு திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை, பல அமைச்சகங்கள் அலட்சியப்படுத்தி, அவற்றைப் பயன்படுத்தாது வீணாக்குகின்றன. மத்திய கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் இவ்வுண்மை வெளிவந்துள்ளது. மோசமான திட்டமிடல், சரியான கண்காணிப்பின்மை போன்ற காரணங்களால் இந்த வீணடிப்பு நடந்திருக்கிறது. அதிலும் நலவாழ்வு, கல்வி, கிராமப்புற மேம்பாட்டுத் திட்டம், உணவு, பொது விநியோகம், காவல்துறை, பாதுகாப்புத்துறை, அணுசக்தித்துறை ஆகிவற்றின் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில்தான் இது நடந்திருக்கிறது.

என்ன நடக்கிறது?

நன்றி: தினமலர் நாளிதழ்.

24 பிப்., 2010

கருத்துக்கள்-21: "பி.டி.கத்திரிக்காய் நாட்டுக்கு நல்லதல்ல"

பி.டி. கத்திரிக்காய் பற்றி ஏகப்பட்ட சர்ச்சை. அரசுத்தரப்பும், அறிவியலார் பலரும் நல்லதுதான் என்று மொட்டையாக, எந்தவித ஆதாரமின்றிக் கூற, அதை எதிர்ப்போர் பலர் சரியான அறிவியல் மற்றும் பொதுநலக் கருத்துக்களுடன் அதை திட்டவட்டமாக எதிர்கின்றனர். முற்றிலும் சரியாகத் தெரிந்து கொள்ளாமல், விவசாயிகள் மற்றும் பொதுநல ஆர்வலர்கள் கருத்தைத் தெரிந்துகொள்ளாமல், அவசர அவசரமாக மரபணு மாற்றப்பட்ட கத்திரிக்காய்க்கு பச்சைக்கொடி காட்ட அரசு பரபரப்பது ஏன்? இதனால் பலவிதமான சந்தேகங்கள் எழுகின்றன. இருக்கட்டும்.

அவள் விகடன் பிப்ரவரி 26, 2010 இதழில் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் கருத்துக்களை திரு ஜி.பழனிச்சாமி அவர்கள் கட்டுரை வடிவில் தந்துள்ளதைப் படித்தேன். அதிலிருந்து சில முக்கிய கருத்துக்களை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்:

"மரபணு மாற்றுப் பயிர்களை அனுமதித்தால் மண்ணை மலடாக்குவதொடு, மனிதகுலத்துக்கே கேடாக அமையும். மரபணு மாற்றுக் கத்திரியை புழு, பூச்சிகள் கூட சாப்பிடாது என்கிறார்கள். அப்படிப்பட்ட விஷக் கத்திரிக்கையை மக்கள் எப்படி சாப்பிட முடியும்?

மண், சுற்றுச்சூழல், ஆரோக்கியம் என்று எல்லாவற்றையும் கெடுக்கக்கூடிய இந்த பி.டி. கத்திரியை இங்கே பயிரிட ஆர்வம்காட்டுவதன் பின்னணியில் வியாபார நோக்கம் இருக்கிறது. இதை அனுமதித்தால், நாட்டு ரக விதைகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விடும். இதனால், முதலில் விவசாயிகள் அடிமைப்படுத்தப்படுவார்கள். அதன் தொடர் விளைவாக, நுகர்வோர்கலான நாமெல்லாம் பாதிக்கப்படுவோம். மக்களின் உணவு பாதுகாப்புதான் ஒரு அரசாங்கத்தால் மிக மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அத்தகைய உணவுப் பாதுகாப்பை பி.டி. ரக விதைகள் நிச்சயமாக அழித்துவிடும்.

உலக அளவிலேயே பல்வேறு துறையிலிருக்கும் மெஜாரிட்டியான விஞ்ஞானிகள் இதை எதிர்த்து வருகிறார்கள். சுகாதார ஆய்வு சம்மந்தப்பட்ட விஞ்ஞானிகள் அந்த ரகத்தைப் புறந்தள்ளுகிறார்கள். ஐரோப்பா உள்ளிட்ட பல நாடுகளில் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய நிலையில் நாம் மட்டும் நம்முடைய மக்களின் வாழ்க்கையோடு விளையாடலாமா?

நன்றி: சத்குரு ஜக்கி வாசுதேவ், திரு ஜி.பழனிச்சாமி மற்றும் அவள் விகடன்.

யோக சித்தி-12: அருள் விளக்கம்-2

தக்கற்று நோக்குந் தனித்தலைவன் சந்நிதிக்கே
யாக்கலோடு ஐந்தொழிலு மாம்.

பற்றற்று, (தாக்கற்று) சர்வசாட்சியாகச் சிருஷ்டிப் பிரபஞ்சத்தைப் பார்க்கும் தானே தானான இறைவன் சந்நிதானப் பெருமைக்கே படைத்தல், காத்தல், அழித்தல், அடங்கல், அருளல் என்னும் ஐந்தொழிலும் இயல்பாக நிகழ்வதாகும்.

22 பிப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-96:

பக்தியால் உண்டாகும் மேன்மைகள் பலவாகும். நம் சித்தம் தெளியும். செய்யும் செயல்கள் அனைத்திலும் செம்மை பிறக்கும். கலைகளில் நாட்டம் செல்லும். நல்ல வீரர்களின் உறவு வரும். மனம் உண்மை இன்பத்தை உணரத் துவங்கும் - மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்.

மகாகவிக்கு அன்பு வணக்கங்கள். தினமலர் நாளிதழுக்கு நன்றி.

யோக சித்தி-11: அருள் விளக்கம்-1

அறிவுச் சுடரோன் அருட்கதிரால் எங்கும்
நிறைந்த நிறைவை நினை.

ஞானஜோதியாக சுத்த பரமாத்மா தனது அருட்சக்திக் கதிர்களைப் பரப்பி உலகுயிரெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பூரணத்தன்மையைத் தியானிக்கவும்.

21 பிப்., 2010

சூரியின் டைரி-7: "ஒரு பகல் நேரப் பாசெஞ்சர் ரயிலில்"


வழிநெடுக பார்த்தவிடமெல்லாம் வாழைத்தோப்பு!காவிரிப்பாலம்

கொள்ளிடம்
கார்த்திக் தனது பக்கத்து வீட்டுப் பையனுடன்


எதிரே விரைந்து செல்லும் விரைவு ரயில்

கல்லக்குடி பழங்காநத்தத்தில் டால்மியா சிமின்ட் கம்பெனி

சென்ற
நவம்பர் மாதம் இரண்டாவது வாரத்தில் ஒருநாள் என்று நினைக்கிறேன். கடலூர் செல்வதற்காக திருச்சியில் அந்த பாசெஞ்சர் ரயிலைத் தேர்ந்தெடுத்தேன். ஏற்கனவே அதில் இருமுறை பயணித்த சுகமான அனுபவம் அதற்கு முக்கிய காரணம். திருச்சி ரயில் நிலையத்தை விட்டு மதியம் 3.30 மணி அளவில் ரயில் புறப்பட்டது. திருச்சி-கடலூர் பயணக் கட்டணம் வெறும் ரூபாய் இருபத்துஎட்டு மட்டுமே. பேருந்துக் கட்டணமோ ரூபாய் அறுபத்து ஐந்து! பயண நேரம் இரண்டிலுமே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம். பேருந்தில் கூண்டில் அடைபட்டதுபோல், நசுக்குப்பட்டு செல்வதைவிட, ரயிலில் செல்வது எவ்வளவோ மேல். வசதியாக கால்நீட்டி அமர, அங்கங்கே ரயில் நிற்கும் பொது இறங்கிக் காலாற நடக்க - இப்படிப்பல வசதிகள். என்னைப்போன்ற சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு ரயில் பெரிய நிம்மதி. அடிக்கடி சிறுநீர் கழிக்க அல்லாட வேண்டாம். எனது இன்னொரு வியாதி பயணத்தின்போது புத்தகம் படிப்பது. அதற்கும் இந்த ரயில் மிக சுகமானது. சென்றமுறை இதேபோல கடலூர் சென்றபோது, "படைப்பாற்றல்" என்ற அற்புதமான அங்கில நூலின் பெரும்பகுதியை பயணத்திலேயே படித்து முடித்தேன். உபரியாக, ஒன்று மாற்றி ஒன்று நொறுக்குத்தீனி வந்துகொண்டே இருக்கும். என் போன்ற நாக்கு நீண்டவர்களுக்கு இந்த ரயில் சொர்க்கம்.

பெரும்பாலும் கிராமத்து மக்கள், பாமர மக்கள் பயணிக்கும் இந்த ரயிலில் பலவகையான நொறுக்குத்தீனிகள் வந்துகொண்டே இருக்கும். பெரும்பாலானவற்றின் விலை வெறும் ஐந்து ரூபாய்தான். பாப்கார்ன், முறுக்கு, சுண்டல், வேர்க்கடலை (பொட்டலம் மூன்று ரூபாய்), தேநீர் (கப் நான்கு ரூபாய்) என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஸ்ரீ ரங்கத்தில் மல்லிகைப்பந்து (பத்து ரூபாய்), முல்லைப்பந்து (பத்து ரூபாய்) . கற்பூரவள்ளி வாழைப்பழம் (பதினைந்து பழம் பத்து ரூபாய்), ரஸ்தாளி (பத்து பழம் பதினைந்து ரூபாய்) - இப்படி எல்லாமே விலை மலிவு.

குறைந்த கட்டணம் என்பதாலோ என்னவோ, பயணிகள் கூட்டம் குறைவில்லாமல் இருந்தது. அனைவரும் உற்சாகமாக, எதையாவது கொறித்துக்கொண்டே, சிரித்துக்கொண்டே பயணிப்பதைப் பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

லால்குடிக்கு முன்பாக ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் ரயில் காரணமில்லாமல் அதிக நேரம் நின்றது. அப்போது பரபரப்பான அந்த செய்தி வந்தது. யாரோ மூன்று மாணவர்கள் (வேறொரு) ரயிலில் அடிபட்டு இறந்து விட்டார்கள், எனவேதான் தாமதம். இத்துரச் செய்தி அனைவரையும் பாதித்ததை கண்கூடாகக் காணமுடிந்தது. ஒரே அனுதாப அலை. அனைவர் மனதிலும் கஷ்டம். என் எதிரே இருந்த பயணி கீழே இரங்கி விசாரித்து வந்தார். அவர் ரயில்வே ஊழியர் என்று நினைக்கிறேன். சிரித்த முகத்தோடு திரும்பிய அவர், "Mock Drill"; விபத்து எதுவும் நடக்கவில்லை. விபத்து நடந்தால் தொடர்புடைய ரயில் நிலையங்களின் ஊழியர்கள் எப்படிச் செயல்படுவார்கள் என்பதைக் கண்டறிய, மேலதிகாரிகள் நடத்திய நாடகம் அது. அனைவரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டோம்.

அடுத்து வந்த ஒரு ரயில் நிலையத்தில் பெரிய தட்டுக்கூடை நிறைய முரட்டு, முரட்டு வாழைப்பூக்களைச் சுமக்க முடியாமல் சுமந்துகொண்டு வந்தார் ஒரு பெண்மணி. அவ்வளவு பெரிய வாழைப்பூக்களை நான் பார்த்ததே இல்லை. (வழி நெடுக பார்த்தவிடமெல்லாம் வாழைத்தோப்பு.) நம்மவர்கள் பேரம் பேசாமல் எதையும் வாங்குவதில்லையே. அவர் பூ ஐந்து ரூபாய் சொல்ல, பயணிகள் இரண்டு பூ ஐந்து ரூபாய் என்று பேரம் பேச, இறுதியில் பூ மூன்று ரூபாய், நான்கு ரூபாய் என்று விற்பனையானது.

நான் ஒரு சாதாரண அரசு ஓய்வூதியக்காரன். இருப்பினும் ஒரு சில ரூபாய்களுக்காக சுமக்க முடியாமல் சுமந்து, பெட்டி பெட்டியாக ஏறி இரங்கி, பேரம் பேசி, காவல்துறை மற்றும் ரயில் அலுவலர்களுக்கு அஞ்சி, காலை ரயிலில் வந்து, மாலை ரயிலில் ஊர் திரும்பும் - இப்படிப் பிரம்மப்பிரயத்தனம் செய்யும் - இவர்களுக்கெல்லாம் எப்போது விடிவு காலம் பிறக்கும் என்ற என்ற வேதனைக் கேள்வியும் எழுந்தது. மனதில் ஒருவகையான குற்ற உணர்வும் ஏற்பட்டது.

அப்போது முறுக்கு விற்கும் பெண்மணியின் பையன் என் எதிரே வந்து அமர்ந்தான். ஒரு பெரிய்ய்ய பை நிறைய முறுக்குப் பொட்டலம் வைத்திருந்தான். விற்றுக் காலியாகக் காலியாக, அவன் அவனிடமிருந்து மேற்கொண்டு பொட்டலங்களைப் பெற்று விற்கச் சென்றார். (பத்து முறுக்கு பத்து ரூபாய்).

நான் எனது டிஜிட்டல் காமெராவில் படம் எடுத்துக்கொண்டு வருவதைக் கவனித்த அவன், காமேராவால் ஈர்க்கப்பட்டு, அதைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தான். என்ன விலை, எங்கே வாங்கினீர்கள், நிறையப் படம் எடுக்கலாமா? என்னைப் படம் எடுப்பீர்களா? அவன் ஆசைப்படி அவனைச் சில படங்கள் எடுத்தேன். படம் உடனே தந்துவிடுவீர்களா? இல்லை, ஊர் சென்று அனுப்புகிறேன் என்றேன். அவனைப்பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். கார்த்திக் (கிட்டத்தட்ட ஒன்பது வயது இருக்கலாம்), "School Dropout". வாத்தியார் பெயிலாக்கிவிட்டார் என்றான். சொந்த ஊர் அரியலூர். அப்பா வளைகுடா நாட்டில் (?) வேலை (Unskilled Labour?). அம்மா முறுக்கு சுட்டு விற்கிறார். அம்மாவுக்குத் துணையாக, உதவியாக அவனும் உடன் செல்கிறான். தன முகவரியைக்கூட அவனால் சரியாகச் சொல்லமுடியவில்லை. நல்லவேளையாக, அவனது பக்கத்துவீட்டுக்காரர் அருகில் இருந்தார். அவர் சொன்னார். குறித்துக்கொண்டேன். பத்து நாட்களில் படத்தைக் கூரியரில் அனுப்புவதாகக் கூறினேன். அரியலூரில் அவன் விடைபெற்றான். (வருத்தமான செய்தி, இன்று வரை என்னால் அந்தப் படங்களை அனுப்ப முடியவில்லை. தொடர்ந்து உடல் நலக்குறைவு போன்ற பல பிரச்சினைகள். குற்ற உணர்வு இன்னும் மேலோங்குகிறது).

விருத்தாச்சலம் வருவதற்குள் ரயில் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இருட்டில் நெய்வேலி திறந்த வெளி நிலக்கரிச் சுரங்கங்களில் இரவு பகலாக வேலை நடப்பதைப் பார்த்தேன். பரந்த நிலப்பரப்பில், பல அடுக்குகளில், மின் விளக்கில் வேலை நடப்பதைப் பார்க்க பிரமிப்பாக இருந்தது.

கடலூர் துறைமுகம் ரயில் நிலையத்தை இரவு எட்டு முப்பது மணியளவில் அடைந்தோம். தம்பி நெல்லை எனக்காக அன்போடு காத்திருந்தான்.

இப்பயணத்தின்போது எடுத்த ஒரு சில படங்களை மட்டும், மேலே பதிவு செய்துள்ளேன்.