சு பொ அகத்தியலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சு பொ அகத்தியலிங்கம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஆக., 2021

நூல் நயம் : அறிவியல் பார்வை என்றால் என்ன? - சு பொ அகத்தியலிங்கம்

#Reading_Marathon_ 2021_5_100+
RM ID 301
நான்காம் ஆண்டு விழா போட்டி 
பதிவு 1
முதல் வாரம்: #அறிவியல் சூழலியல் இயற்கை

நூல்:அறிவியல் பார்வை என்றால் என்ன?
ஆசிரியர்: சு பொ அகத்தியலிங்கம்
விலை: 30
பக்கங்கள்: 30

"நம்ம வீட்டுல தான் லைட் இருக்குல்ல, அப்புறம் ஏன்மா தீபம் ஏத்துற" என்ற குழந்தையின் கேள்விக்கு 
"ஆமாண்டா கண்ணா எனக்கும் இந்த கேள்வி இருக்கு, அதுவும் குறிப்பா  செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை மட்டும் ஏன்?அப்படினு நினைச்சுக்கிட்டு இருக்கேன், காரணம் தான் தெரியல. நீ உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட கேளு, நானும் எனக்கு தெரிஞ்சவங்க  கிட்ட கேக்குறேன். ரெண்டு பேரும் இணையத்திலயும் தேடிப் பார்ப்போம், என்ன காரணம்னு நாம கண்டுபிடிக்கலாம்.

குழந்தையோட கேள்விக்கு இந்த மாதிரி பதில் கிடைச்சா, அவர்களின் கேள்வி கேட்கிற வேகமும்,  உண்மையை தெரிஞ்சிக்கிற விருப்பமும் வளர்ந்து கொண்டே இருக்கும். ஆனால் பெரும்பாலும் "அதிகப்பிரசங்கி தேவையில்லாத கேள்வி கேட்காம, போய் ஹோம் வொர்க் பண்ணு"போன்ற பதில்களே கிடைக்கின்றன

இதன் மூலம் குழந்தைகள் "கேள்வி கேட்பதே தேவையில்லாத வேலை போல" என்று நினைக்கத் தொடங்கி விடுகின்றனர். பெரியவர்கள் தான் செய்யும் செயலுக்கு பின் அறிவியல் காரணம் ஏதேனும் இருக்கிறதா? அல்லது முன்னோர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் செய்தவற்றை இன்றும் காரணமில்லாமல் தொடர்கிறோமா? என்று சிந்திக்காதது  மட்டுமில்லாமல் கேள்வி கேட்கும் குழந்தையின் சிந்தனையையும் தடை செய்கின்றனர்😡

அறிவியல் கண்டுபிடிப்புகள் வளரவளர மூட நம்பிக்கைகள் குறைந்து போய் இருக்க வேண்டும்.ஆனால் நிலைமை  தலைகீழாக இருக்கிறது. அறிவியலுக்கு நிகராக மூடநம்பிக்கைகளும் வளர்ந்து வருவதற்கு காரணம் அறிவியல் பார்வை இன்மையே என்பதே இந்நூலின் மையக்கரு.

நாம் பின்பற்றும் பெரும்பாலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் #பூனையை_கட்டி_வைத்து_பாடம்__நடத்திய_கதை யைப் போல் இருக்கிறதே தவிர, அவற்றுக்கு பின் அறிவியல் என்று எதுவுமே இல்லை.

கேரளாவில் எந்தக் கட்சியும் பிளாஸ்டிக் கொடியோ, காகித கொடியோ அல்லது பிளக்ஸ் கூட பயன்படுத்துவதில்லை. பெரும்பாலும் துணி கொடி, துணி பதாகை புழக்கத்தில் வந்துவிட்டது. அதேபோல் எந்த பொது நிகழ்ச்சியிலும் பேப்பர் கப், பிளாஸ்டிக் கப் பயன்பாடு கிடையாது எவர்சில்வர் குவளை மட்டும்தான்..

இன்று குளோரோ புளோரோ கார்பன் வெளியிடாத குளிர்பதன பெட்டிகள் வந்துவிட்டன... இவையெல்லாம் அறிவியல் பார்வையின் விளைவுகள்👍

"முன்னோர்கள் என்ன முட்டாள்களா" என்று வாதம் அடிக்கடி வைக்கப்படும். முன்னோர்கள் பின்பற்றினார்கள் என்பதாலேயே அவைகள் அனைத்தும் அறிவியல் ஆகிவிடாது.

 அதேபோல் புஷ்பக விமானம், பிளாஸ்டிக் சர்ஜரி அந்தக்காலத்திலேயே இருந்துச்சு தெரியுமா, 
மாட்டு மூத்திரம் குடிச்சா எல்லா நோயும் குணமாகும், 
யோகா செஞ்சா எல்லா பிரச்சனையும் சரியாகும்,

அந்த காலத்துல எல்லாம் ஆஸ்பத்திரி போயா குழந்தை பெத்தாங்க, எல்லாமே சுகப்பிரசவம் தானே என்று you tube
 பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது

நடராஜரின் நடனத்தில் அணுவியல், சனீஸ்வரர் கோயிலுக்கு மேலே பறக்கும் செயற்கைக்கோள்கள் ஒரு நொடி நின்று பின் இயங்கும் என்பது, சூரியனில் இருந்து கிளம்பும் ஓம்  ஒலி  என்று கதை விடுவது 

இவை எல்லாமே அறிவியல் பார்வை இன்மையின் குறைபாடுகளே.

ஏன்? எதற்கு? எப்படி?என்ன? எப்போது? எங்கே? யார்? /யாரால் ?என்று கேள்வி கேட்கப்படும் போதெல்லாம் அறிவியல் பார்வை உருவாகிறது. இந்தக் கேள்விகள் மறுக்கப்படும் போதெல்லாம் மூடநம்பிக்கைகள் அறிவியல் போல் வேடம் பூணுகிறது

வீட்டில் பலகாரம் சுட்டு சாமிக்கு படையல் போடுவதற்கு முன்பாக குழந்தை எடுக்கும்போது "சாப்பிடாத, சாமி கண்ண குத்திடும்" என்று வீட்டிலுள்ளவர்கள் சொல்லும்போது "நம்ம வீட்டில உள்ளத நான் சாப்பிட்டாலே கண்ண குத்துற சாமி, மத்த வீட்டில  திருடரவங்க கண்ண ஏன் குத்தமாட்டேங்குது"

குழந்தைகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காகவாவது பெரியவர்கள் அறிவியல் பார்வையை வளர்த்துக் கொள்ள வேண்டும் இல்லையென்றால் குழந்தையின், "திருடரவங்க கண்ணை எல்லாம் ஏன் சாமி குத்த மாட்டேங்குது" போன்ற கேள்விகளுக்கு ,"சாமி விஷயத்திலேயே கேள்வி கேட்கிறாயா?" என்று குழந்தையின் அறிவியல் பார்வையையும் சேர்த்தே தடுத்து கொண்டிருப்போம். இது போன்ற நிகழ்வுகள் பல தலைமுறைகளுக்கு
மூடநம்பிக்கைகளை எளிதாக கடத்திச் செல்வதற்கு வழிவகுக்கும்.

கேள்விகள் கேட்போம்;
 கேள்விகளை அனுமதிப்போம்; அறிவியல் பார்வையை உருவாக்குவோம்.

🐣ராக குமார்
     19/08/2021



நன்றி :
ரா. க. குமார்
வாசிப்பை நேசிப்போம் 
முகநூல்