பால்யத் திருமணம் செய்து வைக்கப்பட்டு, பதின் பருவம் முடியும் முன்னரே விதவையாகப்பட்டு, வீடு திரும்பும் ஒரு இளம் பெண்.
குழந்தைப் பருவம் முதலே தான் ரசித்து வந்த ஒரு ஆணிடம் காதலை வெளிப்படுத்தி தன்னை திருமணம் செய்து கொள்ள நிர்பந்திக்க முயலும் காட்சி. சிறு வயது முதலே அந்தப் பெண்ணின் அழகை அவ்வபோது ஒளிந்து ரசித்து இன்னும் ரசித்துக் கொண்டிருக்கும் அந்த ஆண் , அக்காதலை நிராகரிக்க முயலும் காட்சி.
நன்றியுணற்சிக்கும், காதலுக்கும் நடுவே இதயமும் மூளையும் சிக்கித் திணறும் தருணங்கள். நாவலின் பத்தாவது பக்கத்திலேயே ஈர்த்து விடுகிறார் தி.ஜா.
முதல் பகுதியில் இந்துவின் கதாபாத்திர வடிவமைப்பில் கிறங்கி நிற்கும் நம்மை அப்புவின் அம்மா கதாப்பாத்திரம் மூலம் கட்டிப் போட்டுவிடுகிறார்.
அப்புவின் தந்தை கதாப்பாத்திரம் அமைதியாக இருந்து அனைவரையும் கலங்கச் செய்கிறது. ஒரு காட்சியில் தம்பியை வேதம் படிக்க வைத்து வாழ்க்கையைத் தொலைக்கிறீர்கள் என்று கேட்கிறான் இயற்பியல் விரிவுரையாளரான அண்ணன். நியூட்டனும், ஐன்ஸ்டீனும் எவ்வளவு முக்கியமோ அது போலவே வேதமும் முக்கியம் என்று அவனுக்குப் புரிய வைக்க முயற்சிக்கும் தந்தை, உண்மையிலேயே தன் மனைவியின் தகாத உறவுக்கான பாவத்தைக் கழுவும் பிரயச்சிதமாக தன் மகனை வேதம் படிக்க அனுப்புகிறாள் என்பதை மனதிற்குள்ளே வைத்துப் புழுங்குகிறார்.
இந்து, அம்மா, அத்தை என மூன்று வெவ்வேறு குணம் கொண்ட பெண்களைச் சுற்றும் இந்த கதைக் களம், நடைபிணமாக வாழும் அப்பாவையும் அப்புவின் கண் கொண்டு காட்டியிருக்கிறார்.
ஆண் பெண் பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வயதில் பல்வேறு ஆசைகள் தோன்றும். சமுதாயக் கட்டமைப்பு, கலாசாரம் என்று பல பொய் வேலிகளால் அவற்றைத் தகர்க்க நினைக்கும் சமுதாயத்துடன் போராடி தோற்று, சிலர் அனைத்தையும் மனதிற்குள்ளேயேப் புதைக்கின்றனர்.
அப்புவின் அம்மா மற்றும் இந்து போன்றோர்களோ தங்கள் விருப்பத்தை அடைய ஒரு முயற்சியாவது மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளை கலாசார சீர்கேடாகப் பார்க்கப் போகிறோமா? அல்லது அவர்களை புதுமைப் பெண்கள் எனப்போகிறோமா?
நன்றி :
Mr ANANTH RAM,
வாசிப்பை நேசிப்போம்,
முகநூல்