சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சுஜாதா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2 அக்., 2021

நூல் நயம் : அமெரிக்க நாட்கள் - சுஜாதா

வாசிப்பு மாரத்தான் 2021/46/75
நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழா
ஏழாம் வார தலைப்பு;பயணம்
V. நாகலட்சுமி
Id no;313
புத்தகத்தின் பெயர் 60 அமெரிக்க நாட்கள்
ஆசிரியர் சுஜாதா
உயிர்மை பதிப்பகம்
விலை 50 ரூபாய்
80 பக்கங்கள்
திரு சுஜாதா, அவர்கள் ஐந்து முறை அமெரிக்கா சென்று விட்டு, வந்த பிறகு இந்த புத்தகத்தை 2007 இல் எழுதியிருக்கிறார். இந்த நூல் எழுதப்பட்ட காலத்தை தாண்டி ,அதன் ஆதார உண்மைகள் என்றும் மாறாதவை.
வியப்புகளின்றி, எதார்த்தமாக, அதன் மனிதர்களின்,குறிப்பாக அங்கு போய் சேர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்வின் உண்மைகளையும், பாசாங்குகளையும் யோக்கியமாக எழுதியுள்ளதாக கூறியுள்ளார்.
17 பொருளடக்கம் கொண்ட புத்தகம் இது.
அமெரிக்கா செல்ல விரும்புபவர்களை நான்கு வகைகளாக பிரிக்கலாம்.
ஒன்று.மாணவர்கள்,இவர்கள் ஜி. ஆர். இ, டோஃபல் மார்க்கமாக செல்பவர்கள்.
2. தாய்மார்கள் ,தமது பெண்கள் பிரசவத்திற்காக செல்லுபவர்கள்,
3.டூரிஸ்ட் விசாவில் செல்பவர்கள், 4.கம்யூட்டர் புரோகிராம் எழுத செல்பவர்கள்,
டில்லி ஹாங்காங் 5 மணி நேரம், ஹாங்காங் சான்பிரான்சிஸ்கோ சுமார் 12 மணி நேரம்,மறுநாள் கிளம்பி முதல் நாள் வந்து சேரும் வினோத பயணம், சர்வதேச தேதி கோட்டை பின்பக்கமாக கடப்பதால் ஏற்படும் குழப்பம், என்று ஆசிரியர் கூறுகிறார்.
சான் பிரான்சிஸ்கோ விமான நிலையம் அமெரிக்காவின் மேற்கு வாசல்,
முதல் ஆச்சரியம்;எத்தனை சீனர்கள்? அவர்கள் அனைவரும்,அவசரமாக அமெரிக்கா குடி வந்து கொண்டிருக்கிறார்கள்,என்பது தெளிவாக தெரிகிறது.சீன மொழியிலும், ஸ்பானிஷ்மொழியிலும், அறிவிப்புகள் ஒலிக்கின்றன.
சான் மேடியோ,என்ற பகுதி சிலிகான் பள்ளத்தாக்கு, என்று சொல்லப்படும் உலக பிரசித்தி பெற்ற டெக்னாலஜி தலைநகரின், விளிம்பில் அமைந்துள்ள அமைதியான இடம். இங்கு ஆசிரியரின் உறவினர் வீட்டில் தங்கி இருந்தாராம். அப்போது அந்த இடத்தைப் பற்றிய வர்ணனையாக,
அவ்வப்போது கார்கள் பெருமூச்சுடன் செல்ல,
பறவைகள் இல்லாத நீல வானத்தில் காற்றில் லேசான குளிர்,
சற்று தூரம் சென்றால்" பே "என்னும் வளைகுடாவில் அதிக குளிர்,
விமானங்கள் இறங்கி ஏறும் விமான நிலையம்,
சாலையில் பறிப்பார் இல்லாமல், தாழ்வாக தொங்கும் ஆரஞ்சு பழங்கள்.
அருகே, சான்ஜோஸ்(san jose) இங்கே நிறைய இந்தியர்கள், நாக பஞ்சமி,
வரலட்சுமி விரதம்,
கோகுலாஷ்டமி,
ஆவணி அவிட்டம்,
எல்லாம் விடாமல், கொண்டாடுகிறார்கள்.
இந்தியாவில் நாம் செய்வதை எல்லாம் கொஞ்சம் அதிகமாகவே, மிகையாகவே, அவர்கள செய்வது, தெளிவாக தெரிகிறது. உதாரணம்,வேத பாராயணம்,பஜனைகள், லட்சுமி அபிஷேகங்கள்,சந்தோஷிமாதா பூஜை, பாலாஜி அபிஷேகம்.

சைனா,வியட்நாம், போன்ற தேசங்களில் இருந்து அமெரிக்காவில் குடி புகுந்தவர்கள்,என்னதான் அமெரிக்க பிரஜையாக இருந்தாலும், உள்ளத்தினுள்ளே,நான் ஒரு சீனன், வியட்நாமஸ்,என்று சொல்லிக் கொள்கிறார்கள்.ஆனால்,இந்தியர்கள் பெரும்பாலும் தன் அடையாளங்களை, மறைக்க தான் விரும்புகிறார்கள்.
இந்தியர்அனைவரும், அமெரிக்க உச்சரிப்பில் தான் பேசுகிறார். இங்கு வந்த உடனே அடையாளங்களை மாற்றிக் கொள்ளும் அவசரம் தெரிகிறது. இருந்தும்,தோற்றம் எளிதில் காட்டிக்கொடுத்து விடுகிறது.
பெரும்பாலும், அமெரிக்காவில் குடியேறும் இந்தியர்களின் குறிக்கோள், ஒரு வீடு,2கார்,அரைடஜன் கிரெடிட் கார்டுகள், அமெரிக்காவில் பிறந்த 1,2 குழந்தைகள், கொஞ்ச காலம் ஏதாவது ஒரு கம்பெனிக்கு உழைத்துவிட்டு, சொந்தத்தில் ஒரு ஸ்டார்ட் அப் கம்பெனி துவங்குவதுதான். அமெரிக்காவில், குழந்தை பிறப்பது முக்கியம். அப்போதுதான் அவர்கள், அமெரிக்க பிரஜைகள். அவர்கள் இவ்வாறு தம் குழந்தைகளை, அமெரிக்க பிரஜைகள் ஆக்கும் பொழுது,அவர்கள் இந்தியாவில் வந்து செட்டில் ஆகும் உரிமையை விட்டு விடுகிறார்கள், என்று தான் தோன்றுகிறது. இந்தியாவில் பிறந்து, வளர்ந்தவர்களுக்கு,இந்தியா திரும்பிச் செல்வது ஒரு சில வருஷங்களில், மிக மிக சிரமமாக இருக்கிறது. இந்த குழந்தைகள், அமெரிக்காவில் வளர்ந்து, தாய் மொழி தெரியாமல்,ஆங்கிலம் மட்டும் தெரிந்து, வீட்டில் ஒரு கலாச்சாரம், வெளியே மற்றொரு கலாச்சாரம், என்கிற இரு நிலைகளில் உள்ள முரண்பாட்டின் இடையே வாழ்ந்து, வளரும் இவர்களுக்குச் சொந்த நாட்டின் கதவுகள் பிறக்கும்பொழுதே,மூடப்பட்டுவிட்டன.
அமெரிக்காவில் குடிபுகுந்த இந்தியர்கள் பலவகை. ஆரம்பத்தில் அதிகம் திறமை தேவையில்லாத,வேலைகளுக்காக, பிழைப்பு தேடி வந்தவர்கள்.இந்த நாட்டிலும் அவர்கள் சமூக, மற்றும் பொருளாதார முன்னேற்றம் பெற, இரண்டுஅல்லது மூன்று தலைமுறையாய், ஆயிற்று
நடு அறுபதுகளில்,அமெரிக்காவின் குடி போனவர்கள் படித்தவர்கள்.
இந்திய நடு வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள்,மேல் வர்க்கத்தைச் சார்ந்த மாணவர்கள்,கல்லூரிகளில் படித்தவர்கள்,மேல்படிப்புக்காக வந்தவர்கள்இங்கே வேலை கிடைத்து செட்டில் ஆனவர்கள்,புதிய திறமை _யாளர்கள் அங்கே இருக்கும் சூழ்நிலையை கொண்டு அவர்களால் சிறக்க முடிந்தது. எழுபதுகளில், தொழில்துறையில் மேம்பட்டவர்கள், அவர்கள் எழுபதுகளின் மத்தியில் கொஞ்சம் பொருளாதார சுதந்திரமும், தைரியம் பெற்று, சொந்த தொழில் தொடங்க முற்பட்டார்கள். ரியல் எஸ்டேட், இந்தியன் ஸ்டோர், கேசட் கடைகளில் தான் முதலில் கவனம் செலுத்தினார்கள்.கொஞ்சம், கொஞ்சமாக, ஹைடெக் தொழில் துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார்கள்.
இன்று,ஆயிரக்கணக்கான இந்தியர்கள், சிலிக்கன் பள்ளத்தாக்கில், சிறுசும்,பெருசுமா சொந்த கம்பெனி வைத்திருக்கிறார்கள். அமெரிக்க பொருளாதாரத்தில், வேலை வாய்ப்புகளையும்,சுபீட்சத்தையும் ஏற்படுத்துவதில் இவர்கள் தாக்கம் கணிசமானது.
அடுத்து சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து, நியூயார்க் வருவதற்கு அமெரிக்காவின் குறுக்கே பறக்க ஆறு மணி நேரம் ஆகிறது.
கடிகாரத்தை 2 மணிநேரம் தள்ளி வைக்க வேண்டியிருக்கிறது
நியூயார்க் கலாச்சாரத்திலும், நடை, உடை பாவனைகளில் மிகவும் மாறுபட்ட நகரம்தான்.ஆங்காங்கே, பாலங்களையும், பாட்டைகளையும் கடக்க டாலர்கள் கேட்கிறார்கள்.
புதுப்பித்த சுதந்திர தேவியின் சிலை இங்கு இருக்கிறது.

அடுத்தது, டெக்சஸ்,இது தமிழ்நாட்டை விட பெரிய மாநிலம்.எப்பொழுதுதோ செவ்விந்தியர்களுக்கு சொந்தமாக இருந்தது.ஸ்பானிஷ்,பிரெஞ்சு டிராப்பர்கள்,ஆங்கில அமெரிக்க பிராட்டஸ்டன்ட் மதபோதகர்கள் என்று பலவிதமாக,பலரால் ஆக்கிரமிக்கப்பட்டு நெப்போலியனின் யுத்த செலவுக்கு பணம் போதாமல்,ரொம்ப சீப்பாக அமெரிக்காவிற்கு விற்கப்பட்டு இன்று இதன் பழங்குடியினரின் ஞாபகங்கள் ஏதாவது மிச்சம் இருக்கிறதென்றால் மெஸ் கிட் போன்ற சில பெயர்கள் மட்டுமே.
டல்லஸ்,டெக்சஸ் மாநிலத்தின் மிக முக்கியமான நகரம்.டெக்சஸ் இன்ஸ்றுமெண்ட்ஸ் போன்ற பெரிய எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்கள், பலவற்றின் தலைமைச் செயலகங்கள் இங்கேதான் இருக்கின்றன.
இங்குள்ள தமிழர்கள், சபா அமைத்துஅருமையான ஒளி,ஒலி அமைப்பு கொண்ட அரங்கத்தில்,
தமிழ்நாட்டில் உள்ள முன்னணி பாடகர்களை அழைத்து வந்து, மிகுந்த ஆர்வத்துடன்,கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் கைதட்டி உற்சாகப்படுத்தி, கச்சேரி கேட்கிறார்கள்.

ஆசிரியர் அங்கு சென்ற சமயம், ஜனாதிபதி தேர்தல் சூடு பிடித்துக் கொண்டிருந்த நேரம். கிளிண்டன் டெமாக்ரடிக் கட்சியிலும், பாப் டோல் ரிபப்ளிகன் கட்சியிலும்,ராஸ் பெரோ சீர்திருத்தக் கட்சியிலும், மற்றும் ஒருவர், என நான்கு பேர் போட்டியிட்டு கடைசியில் கிளின்டன் ஜெயித்த சமயம்.
தேர்தல் தினத்தின்போது,நம்மூர் போல லவ்ட் ஸ்பீக்கர்,தோரணம், திருவிழாக்கோலம் ,போஸ்டர் ஏதுமில்லை.எல்லாம் டிவி பிரச்சாரம் தான். அமெரிக்காவில் 50 சதம் மக்கள் பங்கு கொண்ட தேர்தல் அது.

சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பொது நூலகம் அப்பொழுதுதான் கணிப்பொறி மயமாக்கப்பட்டது நூலகத்தில் நுழைந்ததும் ஸ்பேஸ் ஸ்டேஷன் போல இருக்கிறது. 5 மாடிகளின் உப்பரிகையிலிருந்து, மையத்து ஏட்ரியத்தை எட்டிபார்க்க முடிகிறது.20 லட்சம் புத்தகங்கள் எங்கே வைத்திருக்கிறார்கள்? என்று தெரியாமல்,அத்தனை விஸ்தாரம். காணுமிடமெல்லாம், கணிப்பொறி முனையங்கள் .அதில்,ஹெல்ப் என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்ததும் எப்படி புத்தகங்களை அந்த நூலகத்தில் தேடுவது? என்று கணிப் பொறிசொல்கிறது. ஒரு நிமிஷத்தில் பர்சிவலின் தமிழ் ஆங்கில அகராதி எந்த செல்ஃபில் இருக்கிறது! என்று, ஈசியாக கண்டுபிடிக்க முடிந்தது.
அமெரிக்காவின் கனவு தொழிற்சாலை ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்சில் இருப்பது, எல்லோருக்குமே தெரியும். யுனிவர்சல் ஸ்டுடியோ, டிஸ்னிலேண்ட் இரண்டுமே மிகப்பெரிய சுற்றுலாத்தலம்.
டிஸ்னி லேண்ட்டில், முழு தினம் உலாவிய போது,எத்தனை வழிகளில் பார்வையாளர்களிடமிருந்து பணம் பிடுங்க முடியும்? என்று கவனிக்க முடிந்தது, என்கிறரர்.
டிக்கெட்டு 30 டாலர். உள்ளே போனதும், மிக்கி மவுஸ் குல்லாயிலிருந்து, மின்னி பலூன், ப்ளூட்டோ டி-ஷர்ட், 5 டாலர் 10 டாலர், என்று பத்தடிக்கு ஒரு தடவை பிள்ளைகள் மூலம் பிடுங்க வைத்து, இறுதியில் வரும் போது, கிரெடிட் கார்டு தேய்ந்துவிடும்.
டிஸ்னிலேண்ட் குழந்தைகளுக்கும், ஒருநாள்,குழந்தைகளாக இருக்க விரும்பும் அப்பா அம்மாக்களுக்கும் தான்.
பண்டாஸ் மேஜிக்,என்று அவர்கள் நதிக்கரைகள் நடத்திய லேசர் காட்சிதான்,மிகவும் அற்புதமாக இருந்தது. வால்ட் டிஸ்னி கதாபாத்திரங்கள், அனைத்தும் வானில் விசிறப்பட்ட லேசான நீர் திரையில் லேசர் பிம்பங்களாக, டெக்னிக் உதவியுடன் உயரத்தில் தெரிந்தது.
அமெரிக்கர்களின் முன்னேற்றத்திற்கு, மக்களின் அறிவுத் திறனையோ, இயற்கை வளங்களயோ, தொழில்நுட்ப முன்னேற்றமோ,முக்கிய காரணங்களாக சொல்ல முடியவில்லை. இயற்கை வளங்கள் நிறைந்த ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கியுள்ளன. நுட்பமான அறிவு படைத்த மக்களைப் பெற்ற, இந்திய நாட்டு குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்கள்.தொழில் நுட்பத்தில் முன்னேற்றம் கண்ட பிரான்ஸ் ஜெர்மனி ஜப்பான் போன்ற நாடுகள், முன்னணிக்கு வர முடியவில்லை கல்விமுறை ஒரு முக்கிய காரணமாக இருக்கும்.பிள்ளைகளின் தனித்திறமைகளை இளமையிலேயே கண்டுபிடித்து, விளையாட்டிலும், படிப்பிலும்,சிறந்தவர்களை அவர்களால், தேர்ந்தெடுக்க முடிகிறது. கல்வித் திட்டங்களில் மனப்பாடம் என்று இல்லாமல், இயல்பாக கற்கும் முறைகள் இருப்பதும்,ஒரு காரணம்.
மேலும் கல்வி வேலைக்காக அல்ல, கல்விக்காக வேலை, ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தால் வேலை கிடைக்கிறது.அந்த வேலையில் சம்பாதித்து,பணம் சேர்த்து விருப்பப்பட்ட கல்வியை அடைய முடிகிறது.நம் நாட்டில் இது தலைகீழாக
இருக்கிறது.
வேலை இல்லாதவர்களை, ஆதரவற்றவர்களை, வயதானவர்களை,அரசாங்கம் கவனித்துக் கொள்கிறது .
எல்லோரும் பணம் பண்ணுவதில் கவனமாக இருப்பதால், எல்லோருக்கும் வேலை வாய்ப்பு இருப்பதால், இன மத கலவரம் இல்லை.
கோபித்துக் கொள்ளக் காரணம் இருந்தாலும்,நேரம் யாருக்கும் இல்லை.
நூற்றுக்கணக்கான ஜனங்கள், இங்குமங்கும் இலக்கின்றி திரிவதை கண்டதும் நாட்டின் இத்தனை மனிதவளத்தை வீணடிக்கும் அவலம் தாக்குகிறது. இந்தியா மோசமான நாடல்ல, மோசமாக ஆளப்படும் நாடு, என்பது அமெரிக்கா போய் வந்தபின் விளங்குகிறது.
அமெரிக்காவில் கார் ஓட்ட கற்று கொண்டால் வாழ்க்கையின் வண்ணமே வேறு, 80 90 வயசு தாத்தாவெல்லாம்,
அனாயசமாக கார் ஓட்டுவார்கள். பாட்டிகள் ரூஜ், லிப்ஸ்டிக் போட்டுக் கொள்வார்கள்.
இந்தியாவிலிருந்து செல்பவர்கள் டிஸ்னி வேர்ல்டு, டிஸ்னிலேண்ட் நயாகரா,பிட்ஸ்பர்க், கிராண்ட் கான்யன் இதெல்லாம் போய் தீர்ந்தபின் அமெரிக்காவாக இருந்தாலும் இந்தியாவாக இருந்தாலும் வாழ்க்கையை ஓரிரு அறைக்குள் வாழ பழக வேண்டும்.
எல்லா வீட்டிலும் வாஷிங் மெஷின், டிஷ் வாஷர், மைக்ரோ வேவ்,வாக்குவம் கிளீனர் நான்கும் கட்டாயமாக இருக்கும்.
அங்கு செல்லும் வயதானவர்கள் எப்படி இருக்க வேண்டும்? எப்படி எல்லாம் இருக்கக் கூடாது?
திருமணம் முடிந்த பின்,அங்கு செல்லும் இளம் பெண்கள், அவர்களுடைய ஆசைகள்,எதிர்பார்ப்புகள்,
பின்னர் அவற்றை எப்படி எல்லாம் மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது,என்பது பற்றியும்,
அவர்களுக்கு குழந்தைகள் அங்கு பிறப்பதில் இருந்து ஸ்கூலில் சேர்த்து,அங்குள்ள அட்டகாச குழந்தைகளுக்கிடையே சோனி
பிச்சான் ஆக வளர்வது, மற்றும் வெஜிடேரியனா?நான் வெஜிடேரியனா?இந்தியனாகவா?அமெரிக்கனாகவா? எப்படி வளர்க்கிறது?என்பது பற்றி புரியாத நிலை, 
என்று அமெரிக்க சமூக,கலாச்சார, அரசியல், பொருளியல், வாழ்க்கையினை மற்றும் அங்கே வாழும் அமெரிக்க இந்தியர்களின் பல தரப்பினரின்,
பொதுவான பிரச்சனைகள் குறித்து சுஜாதா தனக்கே உரிய கூர்மையான பார்வையின் வழியாக சித்தரிக்கிறார்.
அங்குள்ள பத்திரிக்கைகள், இலக்கியங்கள், இன்டர்நெட் என்று நிறைய விஷயங்கள் எழுதியிருக்கிறார்.
படித்து தெரிந்து  கொள்ளலாம்.

நன்றி :


17 ஆக., 2021

நூல் நயம் : கற்பனைக்கும் அப்பால் - சுஜாதா

#ஆண்டுவிழா
#முதல்வாரம்

தலைப்பு : அறிவியல்

புத்தகம் : கற்பனைக்கு அப்பால்
ஆசிரியர் : சுஜாதா
பக்கங்கள் : 80

முதல் வாரம், முதல் பதிவு குருவணக்கம் குடுக்கணும் அதான் மரியாதை..

புத்தகத்தைப் பற்றி :

1991வது வருஷம் டிசம்பர் மாசம் அறிவியல் சம்பந்தமா ஆசிரியர் தனக்கு தெரிஞ்ச விஷயங்களை கொண்டு எழுதிய கட்டுரை தொகுப்பு தான் இந்த புத்தகம். (வருஷம் நல்லா பாத்துக்கோங்க). ஏன்னா அன்னைக்கு பெருமளவுல செல்போன் பயன்பாடு கூட இருந்திருக்கல.

அறிவியல் என்பது என்னங்கிறதுல ஆரம்பிச்சு தொடர்ந்து, மனித தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், புலன்கள், மனம் அறிவு இப்டி கண்ணுக்கு புலப்படாத விஷயத்துக்கு கொண்டுபோய், கொஞ்சம் கொஞ்சமா கம்ப்யூட்டர், செல்போன், ரோபோட், work from ஹோம், ESP, மொழி, biology, உலகத்தோட தோற்றம்ன்னு கிட்டத்தட்ட எல்லா ஏரியாவிலும் கைவைக்கணும்னு ஆசைப்பட்டு, கடைசியா கடவுள்கிட்ட வந்து u turn அடிச்சு நிறுத்துறாரு.

எப்பவும் போல அவரோட writing style அட்டகாசம். நம்மள நிறுத்த விடாம வாசிக்க வைக்கும். பதில் இல்லாத கேள்விகளுக்கும் சரி, குதற்க்கமான பதிலுக்கும் சரி, அருமையா சமாளிச்சு அடுத்த பகுதிக்கு தாவிடுறாரு. இதுல அவர அடிச்சிக்க முடியாது.

இதுல ரொம்ப பிடிச்ச கட்டுரைன்னா அது ' நிஜம் என்பது பொய்' தான். ஒரு பொருளின் இருப்பதால் தான் அது திடப்பொருள் ஆகின்றன என்ற கூற்று அது ரசிக்கும்படியா இருந்துச்சு.

ஆச்சர்யம் என்னனா wfh, அப்பறம் எந்திரன் படக்கதைய அப்பவே சொன்னது தான். தீர்க்கதரிசி..

நீங்க எல்லாரும் ஜோதிகா நடிச்ச மொழி படம் பாத்திருப்பீங்க இல்லையா. அதுல ஒரு காதபாத்திரம் வரும், MS. பாஸ்கர். ஹீரோ கிட்ட basics of computer science புக் குடுத்து படிக்க சொல்வாரு. "மார்க் மை words. இன்னும் 10 வருஷத்துல computer தான் நாட்டோட வளர்ச்சிக்கு முக்கியமா பங்கு வாங்கிக்கும்"னு சொல்வாரு. அவரபொறுத்தவரைக்கும் உலகம் 1987லையே நின்னு போயிருக்கும்

இந்த புத்தகம் வாசிக்கும் போது எனக்கு ஆசிரியர் ms பாஸ்கர் தான் நியாபகம் வந்தாரு. அன்றைய காலகட்டத்துல இந்த புத்தகம் வாசிக்கும் போது புதுசா எதையோ நாம தெரிஞ்சுக்கிறதா எல்லாரும் யோச்சிருப்பாங்க. ஆனா இது 2021 இல்லையா. அதனால ஒரு விஷயமே இல்லாத புத்தகமா தான் தோணும்.

முக்கியமான பிரச்னை என்னென்னா, இவர் எல்லா இடத்துலயும் ஆன்மீகத்தை நுழைச்சது தான். அது இந்த ஒட்டுமொத்த புத்தகத்தையும் சாப்டீருச்சு.

எல்லாமே எம்பெருமான்னு இருக்குறவங்களுக்கு அது அமிர்தமா இருக்கும். ஆனா அறிவியலையும் ஆன்மீகத்தையும் கலந்தது எல்லோராலையும் ஏற்றுக்கொள்ளப் படாது. ரெண்டுமே எதிரேதிர் துருவம். இவர் இதுல இணைக்க முயற்சி பண்ணிட்டார். சொல்லப்போனா குழந்தைங்களுக்கு பாடத்துல விளக்கம் சொல்ல, நடைமுறை வாழ்க்கைல இருந்து சில உதாரணங்களை தேர்ந்தெடுக்குற மாதிரி  கடவுளை content ஆக்கிட்டார்.

இதுல இன்னொன்னு என்னெனா, அந்த முரண்ல்ல இருந்து தப்பிடணும்னு சில வரிகளை சேத்தி இருக்காரு. ஆனாலும் அது அவர காப்பாத்தல. முக்கியமா, ஒரு புது விஷயம் பத்தின அறிமுகம் கொடுக்கும்போது சின்னதா எழுதம்ன்னு கட்டுப்பாடு இருக்க கூடாது.  சொல்லவந்த செய்தி சரியா கடத்தபடாம போறது கூட குற்றம் தான். ஏனா அது தப்பா பிரதிபலிக்கக் கூடிய சாத்தியம் இருக்கு. இங்க அதான் நடந்திருக்கு.

அறிவியல் சம்பந்தமான அறிமுககட்டுரைகள் தான். அன்னைக்கு நிச்சயமா பலராலும் வரவேற்றக்க பட்டிருக்கும் அதுல சந்தேகம் இல்லை. முக்கியமா வார வாரம் பத்திரிகைல வந்திருக்கு. இதுல அந்த content நமக்கு நல்லாவே தெரியும் அதை கழிச்சிட்டு பாக்கும்போது இந்த புத்தகம் சிலருக்கு பிழையாக தெரியும். ஆனா விஷம்ன்னு சொல்ற மாதிரி ஒன்னும் இல்லை. சாதாரண வாக்கியத்துல கூட அரசியல் பண்ணாதீங்க. நீங்க கண்டுக்கலைனாலே அது ஒன்னும் இல்லாம போய்டும்.

ஆசிரியரை பிடிச்சவங்க கண்டிப்பா வாசிக்கலாம். மத்தபடி இதுல அறிவியல், அதும் இப்ப நாம தெரிஞ்சிக்க எதும் இல்லை. அதெல்லாம் எப்பவோ பயன்பாட்டுக்கு வந்தாச்சு.

நன்றி :

வாசிப்பை நேசிப்போம்
முகநூல்

24 ஜூலை, 2021

நூல்நயம் : உள்ளம் துறந்தவன் - சுஜாதா

"உள்ளம் துறந்தவன்."
 சுஜாதா எழுதியது .விசா பப்ளிகேஷன்ஸ் . முதல் பதிப்பு 2005 .மூன்றாம் பதிப்பு 2009 .விலை ரூபாய் 75 . மொத்த பக்கங்கள் 144.

        உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது .படித்த நினைவு எனக்கு இல்லை .ஆனால் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
உள்ளம் துறந்தவனில் இதய மாற்று சிகிச்சை தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை .மாற்றுவதற்கான சூழ்நிலையும் காதலும் அதைச் சார்ந்த இழப்ப்பும் தான் கதைக்கு வலுவூட்டுவது.
     அழகேசனின்  தாயைப் போல மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.
.
     மஞ்சரி கதாநாயகி ;அழகேசன் கதாநாயகன் . கதாநாயகனின் அறிமுகமும் கதாநாயகியின் அறிமுகமும் அவர்கள் இருவரின் பாத்திரத் செறிவும் வித்தியாசமாக உள்ளது..

     அழகேசனின் அறிவும் புத்திசாலித்தனமும் சூழலுக்கேற்ற பேச்சும் நகைச்சுவைத் தன்மையும் அறிவாற்றலும் திறம்பட செயல்படும் ஆசைப்படும் நிலைப்பாடு   எனது இளமைக்கால நண்பன் ஒருவனை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது .அவனுக்கு இன்னும் மரணம் வாய்க்கவில்லை என்றாலும் மனதில் நினைவு கொள்ளத்தக்க அளவிலே இரண்டும் ஒத்துப் போவதை என்னால் ஆச்சரியத்தோடு பார்க்க முடிகிறது.

       ராகவேந்தர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் .இந்தியாவிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது பணக்காரர் .அவருக்கு இரண்டு பெண்களும் ஒரு வளர்ப்பு மகள் மஞ்சரியும் இருக்கின்றார்கள் .முதல் மாப்பிள்ளை அமெரிக்காவில்  இருதய சிகிச்சை நிபுணராக இருக்கிறார் .அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
     இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் கோயம்புத்தூரில் இருக்கிறார் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் .வேலை வெட்டி இல்லாமல் மாமனார் சொத்திலேயே காலங்கள் கழிப்பவர்.

      ராகவேந்தர் லண்டன் சென்ற பொழுது இருதயம் மிகவும் பாதிக்கப்பட்டது .அமெரிக்க மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது .

         இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் தனது மாமனாரின் தலைமைத்துவத்திற்கு வர ஆசைப்பட்டு காரியங்கள் செய்கிறான்.
        மஞ்சரி அழகேசன் காதலை அறிந்து கொண்டு அவர்களை பிரிக்கவும் , தனது மகனை மணம் முடிக்கவும் நினைக்கின்ற நாகரத்தினம் மாமனாருக்கு மாற்று இருதயம் தேவைப்படவே அழகேசனை விபத்தின் மூலமாக கொன்றுவிட்டு முதல் மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது .
       இவற்றை பின்னர் அறிந்து கொண்ட மஞ்சரி சதியை அம்பலப்படுத்தி எல்லோரையும் சிறைக்கு அனுப்புகிறார் .
       இறந்துவிட்ட அழகேசன் தாயாருக்கு பக்கபலமாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மஞ்சரி போயிருக்கிறார் .
        தொலைக்காட்சியில் எல்லாரும் சிறை படுத்தப்பட்ட செய்தி கண்டு தனது வளர்ப்புத் தந்தையை காணச் செல்கிறாள் ;தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள் .
       இறுதியாக அழகேசன் இருதயம் ராகவேந்திராருக்கும்,கண்கள் வேறு ஒருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் சிறுநீரகம் இருவருக்கும் அளிக்கப்பட்டு எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

         கதை முடிவில் அழகேசன் அம்மா மிகவும் தைரியத்தோடு யாருமே நெருங்கமுடியாத மலை போல் இருந்த ராகவேந்திரரின் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்கிறாள் .
         அவரும் சம்மதிக்கவே அவரின் இதயத்தை ,மார்பைத்தொட்டு பார்த்து மார்பில் சாய்ந்து மகனின் இதய ஓசையை கேட்டதாக கதை முடிகிறது.

####₹₹₹₹

           விஞ்ஞானபூர்வமாக மருத்துவ இயல் சம்பந்தமான அறிவியல் நுட்பத்தோடு கதை எழுதப்பட்டுள்ளது. கிரிமினல் சம்பந்தமாகவும் கதை சொல்கிறது.      
        புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்க விடாமல் கதை நம்மை படிக்கச்  செய்கிறது. 

        உள்ளம் துறந்தவன் என்கிற தலைப்பு தான் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது .உள்ளம் என்றால் இருதயம் ;எப்படி தொலைந்தவன் ஆவான். பறிக்கப்பட்டவன் தானே என்கிற எண்ணம் எனக்கு கதையைப் படிக்கும்போது ஓடிக்கொண்டு இருந்தது .எல்லாம் அறிந்த சுஜாதா சரியான தலைப்பு தான் வைத்திருப்பார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

          அழகேசன் இயற்றி நடித்த கொடி ஆலன் கூறுவதாக ஒரு வாக்கியம் வரும் .அதை நினைத்து நினைத்து சிந்திக்கவேண்டிய ஒரு வாக்கியம்,
 "I don't want to achieve immortality through my work .
I want to achieve immortality by living forever"

####
அழகேசன் உதித்த சில ஹைக்கூக்கள்.
1) கடற்கரையில் திரும்பிப் பார்த்தால் 
என் கால் பதிவுகளை
 காணவில்லை.

2)கோடை காலத்தில் 
குதிரை மணலில் இறங்கி
 ஆற்றை கடக்கிறது....

16 ஜூலை, 2021

நூல் நயம் : கடவுள்களின் பள்ளத்தாக்கு - சுஜாதா

"கடவுள்களின் பள்ளத்தாக்கு ."
சுஜாதா எழுதியது .தொகுப்பு
தேசிகன் .உயிர்மை பதிப்பகம் வெளியீடு .விலை ரூபாய் 165. மொத்த பக்கங்கள் 206 .
முதற் பதிப்பு 2004 நான்காம் பதிப்பு 2013.

       பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம் .
அ)பயணம் 
     1)கடவுள்களின் பள்ளத்தாக்கு
       2) தமிழ்நாடு 2000 மைல்.
       3) நவீன குவைத்.

ஆ) இலக்கியம் .
        1)நகைச்சுவை பற்றி ஒரு சீரியஸான   
                          கட்டுரை .
        2)சூடிக்கொடுத்த சுடர்கொடி    
         3)வீடுதோறும் தமிழ் கவிதை .
         4)சிறுகதை நுணுக்கங்கள் .
         5)சிறுகதை அடிக்கடி கேட்கப்படும்   
                     கேள்விகள் .
         6படிப்பது எப்படி ?.

இ) சினிமா
          1) ஹே ராம். 
           2)தமிழ் படம் ஆஸ்கார் வாங்க     
                 முடியுமா .?
          3)பாய்ஸ் .

ஈ)அரசியல்:
        1) காவிரிக்கு மொழி தெரியாது.
        2) ராஜீவ் காந்தி இறந்ததற்கு காரணம் 
         3) கவிழ்ப்பது எப்போது 
        4)14ஆம் தேதி சிந்தனைகள் .
         5)சீரழிவுக்கு யார் காரணம்?
         6) " பலே" சியா.
         7) இந்தியர்கள் நிறைய அல்வா      
                       சாப்பிடுகிறார்கள்!

உ.) பொது: 
         1)வயது வந்தவர்களுக்கு மட்டும் .
          2)மாற்றமும் ஏமாற்றமும் .
          3)அனந்துவின் சிரிப்பு .
          4)பெண்களும் நானும் .
          5)சிவந்த செவ்வாய் .
          6)நானும் விகடனும் .
          7)பில்கேட்ஸ் விரித்த  டாலர் வலை 
          8)எதிர்காலத்தில் பத்திரிகைகளும்  
                     புத்தகங்களும்.
         9) உயிர்மை புத்தக வெளியீட்டு    
                   விழாவில்.
        10). டயாபடீஸ் .
         11)வெளிநாட்டு மோகம் கொண்ட     
                இளைஞர்களுக்கு அன்புடன் . 
          12)ஆதலினால் காதல் செய்தேன் . 
           13)தொழில்நுட்பமா தொப்புள்   
                   நுட்பமா?  
            14டெலிபோனும் நானும் .

        ஆக மொத்தம் பயணம் ,இலக்கியம் , சினிமா, அரசியல் மற்றும் பொது என்கிற தலைப்பில் ஆசிரியர்  எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த புத்தகம்.

#####$

பயணம்.:

           நான் முதல் முதலாக அமெரிக்காவில் உள்ள பிக் பேண்ட் Big Bend,white  Sand பகுதிகளுக்குச் சென்று இருந்தேன். அந்த இயற்கையின் அதிசய பெரிய மடிப்புகளையும் புவியியல் தொல்லியல் சூழலியல் குறித்த ஆச்சரியங்களை எல்லாம் திறம்பட எழுதுவதற்கு சுஜாதா எஸ் ராமகிருஷ்ணன் போன்றவர்கள் இங்கு வந்து எழுதலாமே என்று எண்ணமிட்டுக் இருந்தேன். அது குறித்த எனது சிறு குறிப்பை முகநூலில் பதிவிட்டு இருந்தேன் .
        திவ்ய தேசங்கள்-108 அவற்றின் 106 காணும் பேறு பெற்றேன் .பத்ரிநாத் சென்று வந்த பிறகு இனிமேல் மீண்டும் ஒருமுறை பத்ரிநாத் சொல்லக் கூடாது என்கிற பயம் என்னை கவ்விக்கொண்டது . எல்லா திவ்ய தேசங்களையும் இன்னொரு முறை காண வேண்டும் என்கிற ஆவல் உறுதி சங்கல்பம் எடுத்துக் கொண்ட போதிலும் பத்ரிநாத் செல்வதற்கு ஏனோ மனம் மீண்டும் ஒரு முறை விரும்பவில்லை .இரண்டாம் முறை எனது தம்பி சென்றபோது , ஏனோ எனக்கு உயிர் பயம் வயிற்றைப் பிசைந்த காரணத்தினால் செல்லவில்லை .
       இதையேதான் சுஜாதா அவர்களும் பத்ரிநாத் சென்று வந்த பிறகு குறித்து இருந்தார் .
         சுஜாதா அவர்கள் பயணம் குறித்து எந்த நூலும் எழுதவில்லை என்று நினைத்திருந்தேன் .ஆனால் இந்த தொகுதியில் பத்ரிநாத் (கடவுள்களின் பள்ளத்தாக்கு) என்ற தலைப்பிலும்  குவைத்து நாட்டு அனுபவத்தையும் பயணத்தையும் தமிழ்நாட்டில் சென்ற சில இடங்களில் அனுபவத்தையும் தொட்டுக் காட்டி இருக்கிறார் என்கிற களிப் பேருவகை கொள்ளத்தக்க அளவிலேயே வரிகளை பின்னி அள்ளி வீசியிருக்கிறார் . 
         பத்ரிநாத் சென்று வந்த பிறகு நான் சிறு குறிப்பினை முகநூலில் பதிவிட்டு இருந்தேன் .திருமங்கை ஆழ்வாரை நினைக்காமல் இருக்க முடியாது .மனத்திடம் உடல் திடம் இருந்தாலன்றி இந்த காலத்திலேயே பயணம் செய்து செய்வது மிகவும் ஆபத்தானது .ஆனால் எந்த ஒரு வகையும் வசதியும் இல்லாத அந்தக் காலத்திலேயே திருமங்கையாழ்வார் சென்று வந்து பாடியிருக்கிறார் என்றால் அவருக்கு எவ்வளவு மனோதிடம் உடல் திடம் இருந்திருக்க வேண்டும் என்று ஆச்சர்யப்பட்டு போனேன். அதையே சுஜாதா அவர்களும் குறிப்பிட்டிருக்கிறார் .நுணுகி ஆராய்ந்து தனது பயணத்தை பதிவு செய்திருக்கிறார் .
      நான் சென்ற போது நதியின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு இருந்தது .
          இமயமலை என்பது இளையமலை என்று குறிப்பிடுவார்கள் .அந்த இமயமலையின் முடிகளை எல்லாம் மரங்களை எல்லாம் அழித்துவிட்டு ஆங்காங்கே பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதை கண்ணீர் மல்க ஆசிரியர் அந்த பயணத்தை இவ்வாறு முடித்திருப்பார்.  
               "ஏழ்மையால் ம லையை விற்று சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள் .இதனால் ஏற்படும் மண்சரிவு ஸ்ல்டிங் silting,வெள்ளப்பெருக்கு ,
நதி கோபம் என்று எத்தனையோ 
ஈகாலஜிகல் விளைவுகள் இருக்கின்றன.

     மரங்கள் இல்லா மலையிலிருந்து இறங்கி வந்து விட்ட  குரங்கு
பிஸ்லெரி பாட்டிலை  கடித்துக் கொண்டு இருந்தது.

######

சினிமா என்கிற தலைப்பில் மூன்று கட்டுரைகள் எழுதியிருக்கிறார் .
தமிழ் படம் ஆஸ்கார் வாங்க முடியுமா ?:

        வாங்க முடியும் என்று பத்து கட்டளைகளை தந்திருக்கிறார் ஆசிரியர்.
1)கமர்சியல் தேவைகளில் இருந்து விடுபடவேண்டும் .
2)இதற்கு தமிழ்நாட்டில் உள்ள ஆறு தொலைக்காட்சி சேனல்களில் ஓர் இரண்டாவது HBO, Hallmark ஹால்மார்க் போல படம் எடுக்க நிதி ஒதுக்கவேண்டும் .
3)டைரக்டர்கள் கதை பண்ணாமல் தமிழ் இலக்கியத்தில் சிறந்த எழுத்தாளர்கள் எழுதிய கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் .
4)கதையை முற்றும் வரை எழுதி பைண்ட் பண்ணி விடவேண்டும் .
5)கதைக்கேற்ப பாத்திரங்களை தேர்ந்தெடுக்க Casting director கேஸ்டிங் டைரக்டர் வேண்டும் .
6)எந்த விதமான மீட்டர் வட்டி கவலையுமின்றி படம் எடுக்கவேண்டும் .
7)கதைக்கு தேவைப்பட்ட அளவுக்கு டெக்னாலஜி தந்திரங்களை பயன்படுத்த வேண்டும் .
8)கதைக்களன் என்பதில் குழப்பம் இல்லாமல் இருக்க வேண்டும் 
பாட்டு டான்ஸ் என்பதெல்லாம் கதை கேட்டால் தான் கொடுக்க வேண்டும் .
9)இங்கிலீஷ் தப்பில்லாமல் சுருக்கமாக சப்டைட்டில் செய்ய வேண்டும் .
10)அதன் பிறகு டை கட்டிய இளைஞரிடம் கொடுத்து டில்லியிலும் ஹாலிவுட்டிலும் கூவி விற்க வேண்டும் என்று 10 அறிவுரைகளை கட்டளையாக தெரிவித்திருக்கிறார் ஆசிரியர்.

##₹##

 "சீரழிவுக்கு யார் காரணம் ? " - 
50 வருஷம் சுதந்திரத்துக்குப்பின் என்ன சாதித்திருக்கிறோம் என்று இப்போது 'ஜோதிடம்' உள்ளிட்ட   எல்லாப் சிறப்புப் பேட்டி , கட்டுரைகள் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

டெலிவிஷனில் தேசியக் கொடியை அடிக்கடி காட்டி ஏசி அறைகளில் தலைகலைந்த எக்கனாமிஸ்டுகள் ' Where did we go Wrong' என்று இங்கிலீஷில் அலசுகிறார்கள்.

காரணங்களாக அரசியலும் , கருப்புப் பணமும் , அதிக ஆசைகளை ஏற்படுத்திய நுகர்வோர் கலாச்சாரமும் , கிராமங்களைப் புறக்கணித்ததும் லஞ்சமும் சொல்லப்படுகின்றன.

யோசித்துப் பார்த்தால் சீரழிவுக்கு நாம்தான் காரணம் என்பது சுலபமாகப் புரியும்.

வீட்டை சுத்தமாக வைத்துக் கொண்டு வெளியில் குப்பை கொட்டும்போது
நின்ற இடத்தில் , சுவர் கண்ட இடத்தில் ஒன்றுக்குப் போகும் போது; 
பஸ் ஜன்னல்களுக்கு வெளியே துப்பும்போது.

எப்படி நாம் அரசியல்வாதிகளைக் குறை சொல்ல முடியும்?
அவர்களும் நம்மிலிருந்து வந்தவர்தாம்!

##₹₹₹
எந்தப் பொருள் குறித்தும் நுணுகி ஆராய்ந்து எழுதுகின்ற திறன் மிக்கவர் சகலகலா பல்கலை  பன்முக வித்தகர் சுஜாதா அவர்கள் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

நன்றி :

6 செப்., 2008

"ரேஷன் கார்டு" - சுஜாதா

அதன் பாட்டுக்கு சமர்த்தாக இருந்த ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என்று கார்ப்பரேஷன் அதிகாரி வந்து சொல்லிவிட்டுப் போனார். ரேஷன் கார்டு ஒரு முக்கிய ஆவணம். பாஸ்போர்ட்டுக்கு அடுத்தபடியாக உங்கள் இருப்பை நிரூபிக்கக் கூடியது.

சாய்பாபா கோயில் அருகே ஜனசந்தடியின் மத்தியில் மாடியில் இருந்தது அலுவலகம். எனக்கு அத்தனை மாடி ஏறமுடியாது என்று நாகராஜை அனுப்பி வைத்தேன். சற்று நேரத்தில் அவன் ஒரு அலுவலருடன் திரும்பி வந்தான். "பழைய கார்ட ஜெராக்ஸ் பண்ணி வெச்சுக்கங்க. இந்த பாரத்தை நிரப்புங்க. ஒரு போட்டோ ஒட்டிக் கொடுங்க" என்றார்.

நான், 'நண்பா, நன்றி' என்றேன்.
'பத்து ரூபா கொடுங்க.'
'எதுக்கப்பா?'
'பாரத்துக்கு. இதை கொடுத்து டோக்கன் வாங்கறதுக்கு தனியா சார்ஜ் பண்ணுவேன்' என்றார்.
'ஏம்பா, இந்த பாரம் ப்ரீ இல்லையா?' என்று சொல்லிவிட்டு பத்து ரூபாய் கொடுத்தேன்.
அவர் என்னை ஏற இறங்கப் பார்த்து, 'கார்ல வந்துருக்கே, பத்து ரூபாய் குடுக்கமாட்டியா?' ஏம்பா டிரைவர், இது பத்து ரூபாதானே பாத்துக்க' என்று சொல்லிவிட்டு, முகத்தை சுருக்கிக்கொண்டு சென்றார். லஞ்சம் வாங்குவது மட்டுமின்றித் திட்டிவிட்டு வாங்கும் சிப்பந்தி. அவர் கார்ப்பரேஷன் அலுவலரா என்பதே எனக்குச் சந்தேகமாக இருந்தது.

ஒரு சிறிய அரசாங்க அலுவலகத்தில் உள்ள சம்பாத்திய சாத்தியங்களை யோசியுங்கள். இலவசமாகக் கொடுக்கவேண்டிய விண்ணப்பங்களை ஒரு ஆள் கவர்ந்துகொண்டு, ஒவ்வொன்றுக்கும் பத்து ரூபாய் என்று ஒரு நாளைக்கு நூறு பாரமாவது விநியோகிப்பார். இதில் நிச்சயம் சிப்பந்திகளுக்குப் பங்கு இருக்க வேண்டும். இவர்களுக்கெல்லாம் சம்பளம் கூடத் தேவையில்லை.

இந்த சதியை எதிர்த்து 'படிவம் இலவசம்தான். பணம் கொடுக்க மாட்டேன்' என்று பிடிவாதம் செய்யலாம். என்ன ஆகும்?

'உங்களுக்கு பாரம்தான வேணும்? நேரா கார்ப்பரேஷன் ஆபீஸ் போங்க. அங்க ரிப்பன் பில்டிங் பின்பக்கத்தில் காலைல பத்து மணியிலிருந்து பத்தேகால் வரைக்கும் தருவாங்க. போயி வாங்கிக்கங்க இலவசமா.'

'அதற்கு போக வர ஆட்டோ சார்ஜ் மட்டும் அம்பது ரூபா ஆகுமேப்பா?'

'பஸ்ல போங்க. 23G ல போய்டுங்க.'

அவன் சொல்லும் பஸ் திருவான்மியூரில் இறக்கிவிட்டாலும் ஆச்சரியமில்லை. நான் சொல்லவருவது இதுதான். நேர் வழிகள் அத்தனையையும் கடுமையாக்கி வைத்திருக்கிறார்கள். லஞ்சத்தை எதிர்ப்பதற்கு அசாத்தியப் பொறுமை வேண்டும்.

நன்றி: 'சுஜாதாவின் எண்ணங்கள்', தினகரன் தீபாவளி மலர் 2007.