புத்தகப்பிரியர்களுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகப்பிரியர்களுக்காக லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 டிச., 2024

புத்தகப்பிரியர்களுக்காக


ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது?

சென்னையிலோ, டில்லியிலோ,  கொல்கத்தாவிலோ, டோக்யோவிலோ, சிங்கப்பூரிலோ இல்லை.

விருத்தாசலத்ததில்தான் இருக்கிறது...

கிடைத்தற்கரிய பழைய நூல்களைத் தேடி அலையும் தமிழ் ஆய்வாளர்களுக்கு சரணாலையமாக விருத்தாசலத்தில் அமைந்திருக்கும்
இந்த தமிழ் நூல் காப்பகமே..
ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் .

தம் வாழ்நாள் பணியாக இந்த நூலகத்தை நிறுவியுள்ளார் 

புலவர்
பல்லடம் மாணிக்கம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கின்ற காலத்திலிருந்தே நூல்களைச் சேமித்து வைத்து இன்று ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நூல்களைச் சேர்த்துள்ளார்.

இந்த நூலகத்தில் மிகப்பழமையான பல நூல்கள் உள்ளன. 

இருநூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பெற்ற பெப்ரீசியசு  அகராதி, சங்க இலக்கியம் தொடங்கி சிற்றிலக்கியங்கள் வரைப் பல் தொகை நூல்களின் முதல் பதிப்புகள், தொல்காப்பியம் முதல் பதிப்பு, கம்பராமாயணத்தின் பத்துக்கு மேற்பட்ட பதிப்புகள் எனப் பல முதல் பதிப்பு நூல்கள் அமைந்திருப்பது தமிழ் நூல் காப்பகத்தின் தனிச்சிறப்பு.

திருக்குறளின் அத்தனைப் பதிப்புகளோடு திருக்குறள் தொடர்பான 1500 க்கும் மேற்பட்ட நூல்களும் இங்கு உள்ளன. 

கம்பன், இளங்கோ, பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் படைப்புகளின் பல்வேறு பதிப்புகளும் அவை பற்றிய அனைத்து ஆய்வு நூல்களின் தொகுப்பும் உள்ளன.

நான்கு வேதங்கள், உபநிடதங்கள், ஆங்கில, தமிழ்க் கலைக்களஞ்சியங்கள், பல்கலைக் கழகங்களின் வெளியீடுகள்,  சமைய நூல்கள், சித்தாந்த சாத்திரம், பன்னிரு திருமுறை, நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் எனப் பல பரிமாணங்களில் நூல்கள் வகைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மறைமலை அடிகள், தெ.பொ.மீ., வையாபுரி, மு.வ.,பாவாணர், ந.சி.கந்தையா, முதலிய ஆய்வு முதல்வர்களின் நுட்பமான ஆய்வு நூல்கள், காந்தியடிகள், காரல்மார்க்சு , அம்பேத்கர், பெரியார், அண்ணா முதலிய சமுதாய சிந்தனையாளர்களின் அரிய நூல்தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன.

ஐநூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வேடுகள் உலகின் தலை சிற்ந்த திரைப்படங்களின் குறுந்தகடுகள் இசைக் குறுந்தகடுகள் எனப் பல அரிய குறுந்தகடுகளும் அமைந்திருப்பது நூலகத்தின் கூடுதல் சிறப்பு.

தரைத் தளத்தில் நூலகமும் மேல் தளத்தில் கூட்டம் நடத்துவதற்கான அரங்கும் ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்வதற்கான அறைகளும் அமைந்த கலை நயம் மிக்க கட்டடமாகத் திகழ்கிறது இது...

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முதன்மைக் கட்டடத்தின் பெரிய தூண்களும், நேப்பாள மன்னர் அரண்மனையை நினைவூட்டும் மேல் முகப்பும் என, தன்னைக் கவர்ந்த வடிவமைப்புகளை பழனிவேல் என்ற பொறியாளரின் உதவியோடு வடிவமைத்துள்ளார் புலவர் பல்லடம் மாணிக்கம் அவர்கள்..

நூலகத்திற்கான
தனி கட்டிடத்தை
50 இலட்ச ரூபாய் செலவில் 2000ஆம் ஆண்டில் கட்டி முடித்ததோடு நூலகத்தின் முன்புறம் கண்ணைக் கவரும் அழகிய பூங்காவையும்  கலை நுணுக்கத்தோடு உருவாகி வைத்துள்ளார்.

இவரது முயற்சியைப் பாராட்டி பொள்ளாச்சி மகாலிங்கம், பதிப்புச்செம்மல் மெய்யப்பன், பொற்கோ, முனைவர் சுந்தரமூர்த்தி, க.ப.அறவாணன், கவிஞர் புரட்சிதாசன், த.பழமலை, க்ரியா ராமகிருஷ்ணன், விடியல் சிவா, ஆகியோர் தங்கள் சேகரிப்பிலிருந்து பல நூல்களை கொடையளித்துள்ளனர்.

பல்லடம் மாணிக்கம் அவர்கள், 
நிறங்கள் என்ற கலை இலக்கிய அமைப்பை ஏற்படுத்தி பல நூல்களை வெளியிட்டுள்ளார்.

வள்ளுவம் என்ற இதழை நடத்தியுள்ளார்.  24 இதழ்களோடு அது நின்று போனாலும் இலக்கிய இதழ்களில் குறிப்பிடத்தகுந்ததாகும்.

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார். 

பிரபஞ்சன், சிவகாமி, திலகவதி ஆகிய எழுத்தாளர்களுடனான இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிகளும், பெண்கள் இலக்கியச் சந்திப்பு-2007 ஆகிய இலக்கிய நிகழ்வுகளும் தமிழ்நூல் காப்பகத்தில் தான் நடைபெற்றன....

எல்லாவற்றுக்கும் மேலாக ஆசியாவிலேயே பெரிய தனிநபர் நூலகமும் இந்தத் தமிழ்நூல் காப்பகம் தான்.

13 அக்., 2018

புத்தகப்பிரியர்களுக்காக-3: வல்லிக்கண்ணன் கதைகள்


இலவச மின்னூல்

வல்லிக்கண்ணன் கதைகள் - சிறுகதைகள் - வல்லிக்கண்ணன்
http://freetamilebooks.com/ebooks/vallikkannan_stories/

படித்து மகிழுவீர்!

9 அக்., 2018

புத்தகப்பிரியர்களுக்காக-2: நாஞ்சில் நாடனின் "பனுவல் போற்றுதும்"

இந்த வாரம் கலாரசிகன்: பனுவல் போற்றுதும்

கலாரசிகன்

இந்த வாரம்’ பகுதியை நீங்கள் ஏன் எழுதத் துணிந்தீர்கள்? அதற்கு ஏதாவது காரணம் இருக்கிறதா?’ என்று என்னிடம் யாராவது கேட்டால், அதற்கு நான் என்ன பதில் சொல்லியிருப்பேன் என்று நினைக்கிறீர்கள்?

 “”பனுவல் எனில் புத்தகம் என்பது பொருள். பாயிரம் இன்றேல் பனுவல் அன்று என்பது தொன்தமிழ் வழக்கு. பாயிரம் என்றால் சாற்று கவி. முன்னுரை, அறிமுகம், நூன்முகம் என்பவை போல. பனுவல் எனும் சொல் பழைய பஞ்சாங்கம் என்றும் பிரதி என்பதே பின் நவீனத்துவச் சொல்லாடல் என்றும் நீங்கள் கருதக்கூடும். எமக்கதில் வழக்கில்லை.

 சிலப்பதிகாரத்தில், புகார்காண்டத்தில், மங்கல வாழ்த்துப் பாடலில், இளங்கோவடிகள் ஓதுகிறார். திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என. அந்தப் பாணியில் புத்தகங்களைப் போற்றுவோம் எனும் குறிக்கோளுடன் “பனுவல் போற்றுதும்’.

 முன்புபோல் புத்தக அறிமுகக் கட்டுரைகள், மதிப்புரைகள் தகுதி ஓர்ந்து தன்னியல்பாய் எழுதப்படுவதில்லை. அதற்குள்ளும் பதிப்பக அளவில் குழாம் அரசியல் செயல்படுகிறது. பருவ இதழ் ஆதரவும், எழுத்துலக நண்பர் குழாம் ஆதரவும் இல்லா இளைய படைப்பாளிகளின் நிலை இரங்கத் தக்கது.

 தமிழில் தகுதியான எத்தனையோ நூல்கள் வெளியாகி, வாசிப்புக் கவனம் பெறாமற் போய்விடுகின்றன. பல்கலைக்கழக வளாகங்கள் பலவும் தாம் வெளியிடும் பல முக்கியமான ஆய்வு நூல்களைக் கோவணத்தினுள் பதுக்கிக் கொள்கின்றன. ஒன்றில் இருளும், தூசியும் மண்டிய கிட்டங்கிகளில், அல்லது பொது நூலக அடுக்குகளில் தேடிக் கண்டடைய இயலா வரிசைகளில். நவீன இலக்கியவாதிகளுக்கும், இலக்கிய வாசகருக்கும் தேடி வாசிக்கும் வழக்கமும் சென்று தேய்ந்து இறுதலில் உள்ளது”.

 மேலே நான் குறிப்பிட்டிருப்பது “பனுவல் போற்றுதும்’ என்கிற கட்டுரைத் தொகுப்பில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் எழுதி இருப்பது. தகுதியான நூல்கள் வாசிப்புக் கவனம் பெறாமல் போய்விடக்கூடாதே என்கிற அதே அக்கறைதான் என்னையும் “இந்த வாரம்’ பகுதியை எழுதத் தூண்டிய அடிப்படைக் காரணம்.

 இனி, “பனுவல் போற்றுதும்’ புத்தகத்துக்கு வருவோம். பெரும்பாலான புதினம் எழுதும் படைப்பாளிகள் இலக்கியவாதிகளாக இருப்பதில்லை. விதிவிலக்கான சிலரில் நாஞ்சில் நாடன் ஒருவர் என்பதைப் “பனுவல் போற்றுதும்’ வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இந்த அளவுக்கு ஆழ்ந்த புலமையும், தமிழிலக்கியத்தில் ஆழங்கால்பட்ட தேர்ச்சியும் நாஞ்சில் நாடனுக்கு இருப்பது பிரமிப்பாக இருக்கிறது.

 டிசம்பர் 2010-இல் தில்லித் தமிழ்ச் சங்கம் நடத்திய “நவீனத் தமிழ் இலக்கியம்’ என்கிற கருத்தரங்கில் நாஞ்சில் நாடன் வாசித்த “ஐம்பதாண்டுத் தமிழ் நாவல்’ என்கிற கட்டுரையைப் பல தடவை திரும்பத் திரும்பப் படித்துத் தேர்ந்தேன் என்று நான் பதிவு செய்ய விரும்புகிறேன். விருப்பு வெறுப்பில்லாமல், தனது முன்னோடிகளையும், சமகால இலக்கியவாதிகளையும் அவர்களது படைப்புகளையும் நாஞ்சில் நாடன் ஆய்வு செய்திருக்கும் நேர்த்தி பாராட்டுக்குரியது. அந்தக் கட்டுரையின் கடைசி வரிகள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன.

 “”நாவலாசிரியர் என்பவர் மொழியும், கவிதையும் சமூகவியலும், வரலாறும், அரசியலும், தத்துவமும், தொல்லிலக்கியமும், உளவியலும், மரபும், நாட்டார் கலைகளும் அறிந்த ஆகிருதியாக இருத்தல் வேண்டும்.

 பணத்துக்கும் அரசியலுக்கும் அதிகாரத்துக்கும் வணிகம் போகாதவனாக இருத்தல் வேண்டும். குப்பை நாவல் ஒன்றினை, இந்த ஆண்டின் சிறந்த நாவல் என்று அரசியல் சட்டத் திருத்தத்துடன் குத்தி இறக்கும் காலம்கூட வந்துவிடுமோ என அச்சமும் ஏற்படுகிறது. இந்தச் சூழலில் புதிதாக நாவல் எழுத வருகிறவன் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வானா? சுய சிந்தனையுடன் சுதந்திரத்துடன் இயங்குவானா? இயங்க அனுமதிக்கப்படுவானா? பிரபலங்களின் ஜன நெரிசலில் சிக்கி மூச்சு முட்டிச் செத்துப் போகாதிருப்பானா?” என்கிற நாஞ்சில் நாடனின் கருத்து என்னையும் அடிக்கடி அலட்டுகிறது.

 “செந்தமிழ்க் காப்பியங்கள்’ பற்றி அவர் “தமிழினி’யில் எழுதிய கட்டுரை நாஞ்சில் நாடனை எனது மனதில் இமாலய உயரத்துக்கு ஏற்றி அமர்த்திவிட்டது.

 “இந்த வாரம்’ வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். நாஞ்சில் நாடனின் “பனுவல் போற்றுதும்’ புத்தகத்தைப் படிக்கத் தவறாதீர்கள்.

 *****

http://dinamani.com/edition/story.aspx?SectionName=Tamil%20Mani&artid=575414&SectionID=179&MainSectionID=179&SEO=&Title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%20%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D

நன்றி: கலாரசிகன் மற்றும் தினமணி