23 ஜூலை, 2008

எனக்குப் பிடித்த கவிதை-27: "காய்த்தல்"

எனக்குப் பிடித்த கவிதை-27: "காய்த்தல்"

கை நழுவிய சொல்லொன்று
நிலம் பிளந்து
உள்ளிரங்கியது.

எங்கெங்குமாய் கிளைதெழுந்த
செடிகள் தோறும்
சொற்கள் காய்த்தன.

காத்திருப்பின் நீள்பொழுதில்
கனியவேயில்லை,
ஒரு சொல் கூட.

வெறுமையின் கூடுடைத்து
திரும்பி நடக்கையில்...
காய்த்திருந்த சொற்கள்
பூவாய் மாறியிருந்தன
மறுபடியும்.

- மு.முருகேஷ் கவிதைகள்
"புதிய பார்வை", ( மாதம் இருமுறை தமிழிதழ்) டிசம்பர் 16-31, 2007.
நன்றி: திரு மு முருகேஷ் & புதிய பார்வை.

நலக்குறிப்புகள்-3: "வாழை இலையின் மருத்துவ குணங்கள்"

1.வாழை இலையில் சூடான அன்னத்தை நெய் சேர்த்துப் பிசைந்து சாப்பிட்டு வந்தால் கண், இதயம், மூளை, குடல் முதலிய உறுப்புகள் சிறப்பாக இயங்கும்.
2.வாழை இலைத் துளிரை அரைத்துக் குடித்து வந்தால் ஸோரியாஸிஸ் முதலிய 18 வகை தோல் நோய்கள் குணமாகும்.
3. புற்றுநோய், பிளவை, தொழுநோய் முதலிய நோய்கள் ஏற்படுத்தும் புண்களின் மேல் வாழை இலையில் விளக்கெண்ணெய் தடவி, கட்டி வர அந்தப் புண்கள் ஆறும்.
4. இயற்கை நலவாழ்வுப் பயிற்சி முகாம்களில் வாழையிலையை போர்த்திக் கொண்டு சூரிய ஒளிக் குளியல்கள் செய்வார்கள். இதனால் உடலின் கழிவுகள் வியர்வையாக வெளியேறும். ஸோரியாஸிஸ், அதிக உடல் எடை முதலிய நோய்கள் நீங்கும்.

நன்றி: "இயற்கை நாதம்", (இயற்கை நல மாத இதழ்), ஜூன் 2008

ஆடுதுறை இயற்கை மருத்துவ சங்கம், தியாகராஜபுரம்-609802, தமிழ்நாடு

21 ஜூலை, 2008

எனக்குப் பிடித்த கவிதை-26 : 'ஐம்பது வயதில் புரிகிறது' - கவிஞர் வைரமுத்து

'ஐம்பது வயதில் புரிகிறது' - கவிஞர் வைரமுத்து

ஓரோர்
பொழுது
ஞானக் கிடங்காய்,
வேறோர் பொழுது
குப்பைக் கூடையாய்
மாறி மாறித் தோற்றங் காட்டும்
மனமே!

உனது பள்ளம் எனது சமாதி
உனது சிகரம் எனது உயரம்.

மனமே! என் மனமே!
சூரியனாய் இரு,
பொறாமைத் தூசுகள்
புகாதபடி.

வானமாய் இரு,
அவமானத் துப்பல்கள்
ஒட்டாதபடி.

மேகமாய் இரு,
மெய்வருத்தி ஞானம் தேக்கி
சமத்துவ மழையாய்ச் சிதறும்படி.

காலமாய் இரு,
எனக்குப் பிறகும்
நீளும் படி."கொஞ்சம் தேநீர், நிறைய வானம்"
சூர்யா லிட்டரேச்சர் பிரைவேட் லிமிடெட், சென்னை.
ஜனவரி 2005
விலை : ரூபாய் 75/-

19 ஜூலை, 2008

பிருந்தாவின் கவிதைகள்-1 : அன்புள்ள அம்மா!

அன்புள்ள அம்மா!
எங்கு திரும்பினாலும்
வீட்டின் நினைவலைகள்
நினைக்க நினைக்க கவலைகள்.
என் கண்ணில் நீர்த்தேக்கம்,
மனத்தில் தனிமையின் தாக்கம்,
எல்லாம் நீயில்லாத ஏக்கம்.
விடுதியும் வீடும் ஒன்றாகுமா?
அங்கோ,
காலையில் எழுப்பவும்,
அறுசுவை உணவளிக்கவும்
அன்பான நீ!
இங்கோ,
கரகரப்பான அழைப்பு மணி!

என் கவிதை-2 : பாட்டி!

பாட்டி! பாட்டி!!
பாடாய்ப் படுத்தும் பாட்டி.
இரவைப் பகலாய்,
பகலை இரவாய்ப்
பார்க்கும் பாட்டி.
அது கூடாது,
இது கூடாது,
எதிலும் பிரச்னை.
பல்தேய்ப்பது முதல்
குளிப்பு,
உடை, உணவு,
தலை சீவல்,
பள்ளி, படிப்பு,
படுக்கை என்று
அனைத்திலும்
உன் மூக்கு!
உல்லாசமான
கோடை விடுமுறை
சொல்லாமல் போனது.
ஓடும் ரயிலில் உயிர் விட்டு
ஒன்றுமில்லாமல்
செய்த பாட்டி!


5 ஜூலை, 2008

கேள்வியும் பதிலும்-10:

இந்தியாவுக்கு ஏன் எண்ணெய் வளத்தைத் தரவில்லை என்று கடவுள் பேரில் எனக்குக் கோபம் உண்டு என்கிறாரே, ப.சிதம்பரம்?(பழ.கவிதா சிவமணி, புன்செய் புளியம்பட்டி )

எண்ணெய் வளமே இல்லாத எத்தனையோ நாடுகள் பொருளாதார முன்னேற்றமும், ஸ்திரத்தன்மையும் கண்டுள்ளன. அவற்றில் உள்ளது போன்ற அரசாங்கங்களையும், அமைச்சர்களையும் தருமாறு நாம் கடவுளைப் பிரார்த்திக்க வேண்டியதுதான்.

நன்றி: கல்கி, ஜூன் 29, 2008 (நீங்கள் கேட்டவை - தராசு)

நலக்குறிப்புகள்-2: அகத்திக்கீரை

நலக்குறிப்புகள்-1: அகத்திக்கீரை

புகை பிடிக்கும் பழக்கத்தை விட முடியாதவர்களுக்கு, அகத்திக் கீரை அருமருந்து. புகை பிடிப்பதால் மூச்சுக்குழாயிலும், இருதயத்திலும் படியும் விஷத்தன்மையை அகத்திக்கீரை முறியடிக்கும்.

தகவல்: வள்ளி ராமகிருஷ்ணன், திருவனந்தபுரம்

நன்றி: மங்கையர் மலர், ஜூன் 2008

நெல்லையப்பன் கவிதைகள்-16: நன்மரம்

நெல்லையப்பன் கவிதைகள்-16

நன்மரம்

வீட்டுக்கு ஒருமரம்
வளர்ப்போம்!
இயலாதவர்கள்
ஆசிரியர் இல்லா
அரசுப் பள்ளியில்
ஒரு குழந்தையை
சேர்ப்போம்!

எனக்குப் பிடித்த கவிதை-25 : தெரு மணம் - பூர்ணா

எனக்குப் பிடித்த கவிதை

தெரு மணம் - பூர்ணா

பலகடை ஏறி இறங்கி
எடுக்கப்பட்டது
பட்டுப்புடவை.

உரசிப் பார்த்து
வாங்கப்பட்டது
நகை.

தட்டிப் பார்த்து
எடுக்கப்பட்டது
பாத்திரம்.

நசுக்கிப் பார்த்து
வாங்கப் பட்டது
காய்கறி.

மாப்பிள்ளையை மட்டும்
கண்ணை மூடிக்கொண்டு
பார்த்து விட்டார்கள்.

நன்றி : தாமரை, மே-ஜூன் 2008

என் கவிதை-1: குறைப்பிரசவம்

என் கவிதை

குறைப்பிரசவம்

மூக்குமில்லை, முழியுமில்லை,
முகமுமில்லை,முடியுமில்லை.
பிண்டம்,
சதைப் பிண்டம்,
வெறும் சதைப் பிண்டம்.
வேதனையில் பிறந்து,
வேதனையில் முடிந்த
விடியாக் கனவு.