29 ஆக., 2012

கம்பன் கவிதை-3:

கல்லிடைப்  பிறந்து  போந்து  கடலிடைக்  கலந்த  நீத்தம் 
எல்லையில்  மறைகளாலும்  இயம்பரும்  பொருள்  ஈதென்னத் 
தொல்லையில்  ஒன்றேயா கித் துறைதொறும்  பரந்த  சூழ்ச்சிப் 
பல்பெருஞ்  சமயம்  சொல்லும்  பொருளும்போல்  பரந்ததன்றே.

மலையில் தோன்றி  ஓடிக்  கடலிற் கலந்த  ஆற்று வெள்ளம்,  வேதங்களாலும் அளவிட்டு உரைக்க முடியாத  பரம்பொருளைப்  போல்  ஆதி தொடக்கம்  ஒன்றே ஆனது.  பின்னர்ச் சமயங்களினால் மாறுபட்ட  தெய்வம்  போல்,  தான் செல்லும்  பல  இடங்களிலும்  பல  வகையில்  பரவி (ஏரி,  குளம், வாய்க்கால்,  ஓடை எனப் பல பெயர் பெற்று) நின்றது.    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-55:

கொல்லா  விரதம்  குவலயம்எல்லாம்  ஓங்க
எல்லார்க்கும்  சொல்லுவதென்   இச்சை  பராபரமே 

யோக சித்தி-69: கல்வி-1

அறிவு  தொழிலொழுக்கம்  ஆண்மை  அழகாம்
திறமான  கல்வித்  திரு.

மேற்சொன்னவாறு  உள்ளிருந்து  அறிவைக் கல்லிஎடுப்பதே  கல்வியாம்.  மனிதனைப் பூரணப்படுத்தும்  திறமை வாய்ந்த கல்வியின் ஐந்துயிர்களாவன:-  (1)  அறிவு: தன்னறிவு, நூலறிவு; (2) தொழில்:  வறுமையற்று வாழ ஒரு நல்ல தொழில் திறமை; (3) ஒழுக்கம்: 'அறவியலிலும் ',  'நடையியலிலும்'  காணும்  நல்லொழுக்கம்; (4) ஆண்மை: உடல் மனவுறுதி, ஆட்சித்திரமை, காரியத் திறமை, தைரியம் முதலிய வீரத் தன்மைகள்; (5) அழகு: இசை, காவியம், ஓவியம் ஆகிய அழகுக் கலைவளம்.

நல்லறிவு, நல்லொழுக்கம், நற்றொழில்வளம், நல்லாற்றல்,  நற்சுவையின்பம்  - இவையே கல்வியின் ஐந்துறுப்புக்கள்.  இவற்றில் ஒன்று குறைந்தாலும் கல்வி முற்றுப் பெறாது. ...

கல்விக்கு, எண்ணெழுத்து கண்ணெனத் தகும்; தன்னறிவு தலைஎனத் தகும்; ஒழுக்கம் உலமெனத் தகும்;  ஆற்றல் உடலெனத் தகும்;  அழகுக் கலை வடிவெனத் தகும்.   மன இருள் ஒழிக்கும் மாசிலா ஞானம், பெரியார் சொல்லும் அரிய  நூற் பயிற்சி, உலகியல், வானியல், உயிரியல் அறிவு, ஆடை உணவிற்காகிய  நற்றொழில்,  வைரவுடலம் வைக்கப் பெறுதல், வீரத் திறமை, வித்தகப் பெருமை, அழகுக் கலைகள், அருட்பணி வளமை,  ஆருயிர்க்கு அன்பு இவை சீரிய கல்வியாம்.  

நலக்குறிப்புகள்-72: சீனி

இன்றைக்கு சீனி  இல்லாமல் பானங்கள் இல்லை.  காபி, டீ முதல் இனிப்புத் தின்பண்டங்கள் அனைத்திலும் சீனி.  சீனி வருமுன் நம்மவர்கள் பனைவெல்லம், கருப்பட்டி இவற்றையே சீனிக்குப் பதில் பயன்படுத்தினர்.  சீனியால் விளையும் கெடுதல்கள் பற்றி அறிந்த இயற்கை வைத்தியர் அதை ஆறு வெள்ளை நஞ்சுகளில் ஒன்றாகக் கூறுகின்றனர்.  

சீனி  நம் உடலில் உள்ள கால்சியம் உப்பை சிதைக்கிறது.  அதனால்  எலும்புகள் பலவீனம் அடைகின்றன.  கால்சியம் வளர்சிதை மாற்றத்தைக் குலைப்பதால் சர்க்கரை வியாதி போன்ற நோய்களும் வரக்கூடும்.  இன்று சர்க்கரை நோய்  அதிகமாக இருப்பதற்கு இதுவே காரணமாக இருக்கலாம். 

21 ஆக., 2012

இன்று ஒரு தகவல்-33: பாலிதீன் பயங்கரம்

ஆண்டுக்கு  ஐம்பது லட்சம் டன்  அளவு பாலிதீன் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.  பயன்படுத்தியபின், இவை அனைத்தும் குப்பையாக மண்ணுக்குள் புதைகிறது.  பாளிதீனை  மக்கவைக்கும்  ஆற்றல் நுண்ணுயிர்களுக்கு இல்லை.  எனவே இவை சிதையாமல், பூமிக்கு ஒரு சுமையாக, மண்ணின் வளத்தை கடுமையாக பாதிக்கும் ஒரு தீய பொருளாக மாறிவிடுகிறது.  இதன் பின்விளைவாக,  இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம்.  ஒரு கைப்பிடி மண்ணில் ஆறாயிரம் கோடி நுண் உயிரிகள் உள்ளன.  பிளாஸ்டிக் கசடுகள் இந்த நுண்ணுயிரிகளை அழித்துவிடும்.  எனவே பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து, மீண்டும் பயன்படுத்த வேண்டும்.  ஒருபோதும் அவற்றை மண்ணோடு கலக்கவிடக்கூடாது. 

ஆதாரம்: ........................

17 ஆக., 2012

கம்பன் கவிதை-2:


முல்லையைக் குறிஞ்சியாக்கி  மருதத்தை முல்லையாக்கிப்
புல்லியநெய்தல்  தன்னைப்  பொருவருமருதம் ஆக்கி
எல்லையில்  பொருள்கள்எல்லாம்  இடைதடுமாறு  நீரால்
செல்லுறுகதியிற்  செல்லும்  வினையெனச்  சென்றதன்றே.


உயிர்களை வினை பலவகைப்  பிறப்புகளாக மாற்றுவது போலச்,  சரயு நதி தன் ஓட்டத்தால் முல்லையைக் குறிஞ்சியாகவும்,  மருதத்தை முல்லையாகவும்,  நெய்தலை மருதமாகவும்  மாற்றி, அந்த நிலங்களின் பொருட்களை எல்லாம் இடம் மாறச்செய்தது.

இன்று ஒரு தகவல்-32: ஒரு நிமிடத்தில் ஒரு ஜிபி டவுன்லோட்!


அண்மையில் தினமலர் கம்ப்யூட்டர் மலரில் படித்த அந்தச் செய்தி என்னை ஆச்சரியப்படவும், மகிழவும் வைத்தது. ஒரு நிமிடத்தில் ஒரு ஜிபி அளவு டவுன்லோட் அல்லது அப்லோட்  செய்யமுடியும்! கூகுள் நிறுவனம் பிராட்பேண்ட் இணையச் சேவையிலும் இறங்கியிருக்கிறது.  கூகுள் ஃபைபர் என்ற பெயரில் செயல்படும் இம்மின்னல் வேக சேவை முதலில் அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இச்சேவை மூன்று நிலைகளில் தரப்பட உள்ளது.  முதல் நிலை முற்றிலும் இலவசமானது. இணைப்புக் கட்டணம் முன்னூறு டாலர் மட்டும் செலுத்தவேண்டும். ஏழு ஆண்டுகளுக்கு நொடிக்கு ஐந்து எம்பி வீதம் டவுன்லோடும், ஒரு எம்பி அளவு அப்லோடும் செய்யலாம். இரண்டாவது நிலை மாதம் எழுபது டாலர் சந்தா செலுத்தவேண்டும்.  இதற்கு இணைப்புக் கட்டணம் கிடையாது.  இதில் நொடிக்கு ஒரு ஜிபி  வேகத்தில் டவுண்லோட்/அப்லோட் செய்து கொள்ளலாம். மூன்றாவது நிலையில் மாதம் நூற்று இருபது டாலர் சந்தா.  தகவலைச் சேமிக்க கூகுள் ஒரு டிபி டிரைவ் வசதியை அளிக்கிறது. தொலைக்காட்சி இணைந்த இச்சேவையில் ஒரே நேரத்தில் எட்டு டிவி சேனல் நிகழ்ச்சிகளைப் பதிவு செய்து, பின்னர் வேண்டும்போது பார்த்துக் கொள்ளலாம்.  இந்த வகை சேவையில், கூகுளின் சிலேட்டுக் கணினியான நெக்ஸஸ் 7 தரப்படுகிறது.  இதை ரிமோட் கண்ட் ரோல் போலப் பயன்படுத்தலாம். 

இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றால் இந்தச் சேவை உலகமெங்கும் விரிபடுத்தப்படும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கலாம்.

நன்றி தினமலர் தமிழ் நாளிதழ் 

ஆன்மீக சிந்தனை-33:


கடவுள் பக்தியும், நல்லோரிணக்கமும் ஒருவனுக்கு வாய்த்துவிடுமானால் ஆன்மீகத்தில் அனைத்தும் கைகூடியதாகக் கொள்ளலாம்.  சான்றோர்களுடன் பழகுபவர்களை அவர்கள் தெய்வத்திற்கே  அறிமுகப்படுத்தி  உய்விற்கு வழிகோலுவார்கள்.

இன்றைய சிந்தனைக்கு-155:


தன்னலம் கருதும் மனிதன் எங்கு வாய்ப்புக் கிடைக்கிறதோ அங்கு கொள்ளையடிப்பான்.  அவனுக்குத் தன் இனத்தவர், பிற இனத்தவர் என்ற வேறுபாடு இல்லை -  காந்தியடிகள்

தாயுமானவரின் பராபரக்கண்ணி-54:


கண்ணாவாரேனும்  உனைக் கைகுவியாராயின்  அந்த
மண்ணாவார்  நட்பை  மதியேன்  பராபரமே.

யோக சித்தி-68: அறிவு-5


நம்பு; நினை; முயல்; நாடொருமை;  ஞானமாம்
இன்பம்  பெருகும்  இனிது.

நான் சுத்தான்மா என்று நம்பு;  உறுதிகொள்;  அதையே நினை;  உள்ளார்ந்து தியானி.  முதலில் தியானம் ஓடாது, சித்தம் அலையும்.  சித்தத் திரைகளை வைராக்கியத்தாலும், பயிற்சியினாலும் அடக்கமுயல்;  சாதனம் செய்.  வேறு நினைப்புகளை விலக்கி, ஒருமை நாடு;  உள்ளே ஏகாக்கிரப்படு.  மனம் வெளிச்சென்றால் கவலை;  உட்குவிந்தால் களிப்பு.  மனம் உள்ளத்தில் நிலைத்தால் நான் ஆன்மா என்ற ஞானம் உண்டாகும்.  அதன் இன்பம் நாளுக்கு நாள்  இனிதாகப் பெருகும்.

நலக்குறிப்புகள்-71:


நவீன சமையலில் வினீகர் எனப்படும் சோடியம் சிட்ரேட் பயன்படுத்துவது வெகு சாதாரணமாகி விட்டது.  இது எவ்வளவு கெடுதல் என்பதை அறியாமல் நாம் பயன்படுத்தி வருகிறோம்.  தோலில் அரிப்பு, தடிப்பு, ஏற்படுத்தும்.  உடலில் கெட்ட நீர் சேர வழிவகுக்கும்.  அதனால் பற்பல வியாதிகள் தோன்ற வழிவகுக்கும்.  எனவே சமயலில் வினீகரைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

16 ஆக., 2012

கம்பன் கவிதை-1:

உலகம்  யாவையும்  தாம்   உளவாக்கலும் 
நிலை  பெறுத்தலும்  நீக்கலும்  நீங்கலா 
அலகிலா  விளையாட்  டுடையார்  அவர்
தலைவர்  அன்னவர்கே   சரண்  நாங்களே. 

எல்லா  உலகங்களையும்  படைத்துக்  காத்து  அழிக்கும்  தொழில்களின்றி வேறுபடாது,  அவற்றை  விளையாட்டாகக்  கொண்டுளார்  எவரோ,  அவருக்கு எம்  வணக்கம்.  

சித்தர் பாடல்கள்-4: பட்டினத்தார் பாடல்

நெஞ்சுடனே  தாம்புலம்பி  நீலநிறத்  தாளின்ற 
குஞ்சரத்தை  ஆதரித்துக்  கும்பிட்டால்  -  கஞ்சமுடன் 
காம முதல்;  மும்மலத்தின்  கட்டறுத்து  ஞானமுடன் 
பூமிதனில்  வாழ்வார்  எப்போதும்.  

இன்று ஒரு தகவல்-31: இந்திய வரலாற்றில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்

இந்திய  வரலாற்றில்  கிறிஸ்து பிறப்பதற்கு முன் நடந்த  முக்கிய  நிகழ்ச்சிகள்:

கி மு 3102  -  கலியுகம்  ஆரம்பம் 
கி மு 3000  -  சிந்து சமவெளி நாகரீகம் (மொஹஞ்சதாரோ-ஹாரப்பா)
கி மு 2500  -  வேதங்கள் இயற்றப்படுதல் 
கி மு 2000  -  ஆரியர் வருகை 
கி மு 0800  -  இதிகாசங்கள்,  உபநிஷத்துக்கள்  இயற்றப்படுதல் 
கி மு 0567  -  கௌதம புத்தர் பிறப்பு 
கி மு 0550  -  மகாவீரர்  பிறப்பு 
கி மு 0480  -  புத்தர் நிவாணம்  அடைதல் 
கி மு 0327  -  மாவீரர் அலெக்சாண்டர் படையெடுப்பு - 
                          ஜீலம் நதிக்கரையில் போரஸ் தோல்வி 
கி மு 0321  -  சந்திர குப்த மௌரியர் ஆட்சிக்கு  வருதல் -
                          சாணக்கியர்  அர்த்த சாஸ்திரம்  எழுதுதல் 
கி மு 0305  -  செல்யூகஸ்  படையெடுப்பு 
கி மு 0303  -  கிரேக்க  தூதர்  மெகஸ்தனிஸ் வருகை 
கி மு 0273  -  அசோகர்  ஆட்சிக்கு  வருதல் 
கி மு 0261  -  கலிங்கப் போர்  - அசோகர்  மனமாற்றம் 
கி மு 0185  -  புஷ்ய மித்திர  சுங்கன்  ஆட்சி 
கி மு 0145  -  சோழ மன்னன்  ஏராளன்  இலங்கையைக் 
                          கைப்பற்றுதல் -  கலிங்கத்தில்  காரவேலர் அரசு 
கி மு 0058  -  விக்கிரம சகாப்தம் தொடக்கம் 

நன்றி:  "இந்திய  வரலாற்றில்  5000 ஆண்டுகள்"  - தொகுப்பு:  எஸ்.சங்கரன் - அனுராகம் வெளியீடு 

ஆன்மீக சிந்தனை-32:

உங்களை  ஒருவர்  வணங்கினால்,  அவரைவிட  அதிகப்  பணிவோடு  நீங்களும்  வணங்குங்கள்.  அல்லது  அதே  அளவாவது  திருப்பி  வணங்குங்கள் - குரான் 

இன்றைய சிந்தனைக்கு-154:

வறுமை  என்கிற  இருள் 
சோம்பேறிகளை  மட்டுமே  
என்றும் சூழ்ந்திருக்கும். 
உழைக்கத்  தொடங்குபவரைச்  சுற்றி 
உவகை  எனும்  ஒளி  வட்டம் 
பேரொளியைப்  பிரகாசிக்கும். 

நன்றி:  அந்தியூர்  நடராஜனின்,  "சின்னச்  சின்ன  சிந்தனைகள்" 


எனக்குப் பிடித்த கவிதை-74: கவிஞர் சிற்பியின் கவிதை

நியாயங்களின்  சமாதிகளை  
நீங்கள்  கண்டதுண்டா?  
எங்கள்  நாட்டில்  அவைகளை  
"நீதி  மன்றங்கள்"  என்போம்.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-53:

துச்சமென  வேண்டா  இத்தொல்லுலகில்  அல்லல்கண்டால் 
அச்சம்  மிகஉடையேன்   ஐயா  பராபரமே. 

யோக சித்தி-67: அறிவு-4

யானும்  உலகும்  அறிவுண்மை  இன்பமயம் 
ஏனச்சம்  என்றெண்ணிப்  பார்.

சுத்தான்மா நான்;  விசுவான்மா  உலகம்.  இரண்டும்  உண்மை, அறிவு, இன்ப நிறைவு, சச்சிதானந்த மயம்.   எதுவோ  அதுவாயிருக்கும்  ஒன்றைக்கண்டு அச்சமேன்?  சிங்கத்தை சிங்கம்  அஞ்சுமா?  அச்சம்  ஏன்?  எதை  யார்  அஞ்சுவது?  நினைத்துப்  பார்த்தால்  அச்சத்திற்கு இடமேயில்லை.   

நலக்குறிப்புகள்-70: பொன்னாங்கண்ணிக்கீரை

பொன்னாங்கண்ணிக்கீரை  மகத்தான மருத்துவ குணங்கள் கொண்டது.  இதன் பெயரே இது பொண்ணுக்கு இணையானது என்றுரைப்பது.  இக்கீரையை சமைத்து உண்ண நீங்கும் தொல்லைகள்:

1. தொண்டைப்புண் 
2. உணவுக் குழாய்ப்புண் 
3. வாய்  துர்நாற்றம் 
4. கல்லீரல்  நோய்கள் 
5. வயிற்றெரிச்சல் 

மேலும் இது மேனியைப் பலபளப்பாக்கும்.  இதனால் இதயமும், மூளையும் பலம் பெரும். 

15 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-31:

உங்களை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்களோ, அதே அளவிற்கு பிறர் மீதும் நேசம் காட்டுங்கள். அவர்கள் உங்களைவிட எந்த விதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். எக்காரணம் கொண்டும், பிறரை இழிவாக பேசுதலும், வீண்பழி சுமத்துதலும் கூடாது. இத்தகைய செயல்களால் வீண் பகை வளருமே தவிர, பெயருக்குக் கூட நன்மை உண்டாகாது. மேலும் இத்தகைய குணமுடையவர்களிடம் பாசம், பரிதாபம், இரக்கம், கருணை என எத்தகைய நற்பண்புகளும் இருக்காது.

நன்றி:  B.G.துர்கா தேவி அவர்கள் 

இன்றைய சிந்தனைக்கு-153:

நுட்பமான  கருத்துக்கள் உங்களுக்கு புரிகிறது என்றால் புரிந்துகொள்ளுங்கள். புரியவில்லை எனில், சிந்தனை செய்து புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அப்போதும் புரியவில்லை என்றால் விளக்கம் தெரிந்தவரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளுங்கள். என்ன செய்தும் புரியவில்லை என்றால் பொறுமையாகக் காத்திருங்கள்.  என்றாவது ஒருநாள் காலம் உங்களுக்கு அக்கருத்தைப் புரிய வைக்கலாம்.  

எனக்குப் பிடித்த கவிதை-73: கந்தர்வனின், "விடுகதை"

இந்த  தேசத்திலேயே 
மிகவும்  உயர்ந்தவன் 
கிராம  வாசியா 
நகர  வாசியா 
இல்லை  
விலைவாசி 


தாயுமானவரின் பராபரக்கண்ணி-52:

நேச  நிருவிகற்ப  நிட்டைஅல்லால்  உன்அடிமைக்கு
ஆசையுண்டோ  நீஅறியாத  தன்றே  பராபரமே  

யோக சித்தி-66: அறிவு-3

போக்குவரவற்ற பொருள் ஆன்மா;  நான்அதுவென்றே
ஏக்கமற்று இன்புற்று இரு.

இங்கு வந்து வாழ்ந்து செல்வதெல்லாம் இயற்கையுடலே, வினைச்சுமையே.  நான் ஆன்மா;  ஆன்மா போக்குவரவற்றுத்  தானே  தானாகத்  தாக்கற்றிருக்கும் நிலைப்பொருள்.  'அதுவே நான்'  என்று அறிந்து தெளிக.  அந்த  அறிவால்  உலகின் முக்குண விகாரங்களால்  வரும் ஏக்கம், கவலை, அச்சம்  அற்று,  எப்போதும் தன்னுளே தானாக, உள்ளத்தில் உள்ளபடி  இருந்து  இன்புறுக.   

நலக்குறிப்புகள்-69:

எந்த மருத்துவரும் நோயை குணப்படுத்துவதில்லை. நம்முள்ளே இருக்கும் பிராண சக்தியே நோயை குணப்படுத்துகிறது. ...  பிராண சக்தியை நம்முள்ளே வளர்த்துக் கொள்வதன் மூலமாகத்தான் வந்த நோயை குணப்படுத்தவும், நோய்கள் வருவதற்கு முன்னே  வராமல் தடுத்துக் கொள்ளவும் முடியும் - சுவாமி.நாகலிங்கம், தலைவர், தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம் 

இரத்தின சக்திவேல் எழுதிய, "இயற்கை உணவுகள்" நூலின் அணிந்துரையிலிருந்து. 

14 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-30: சுவாமி விவேகானந்தர்

நீங்கள் ஆன்மீக உண்மைகளை நேருக்கு நேர் காணாத வரையில், ஆன்மீக வாழ்க்கை என்பது உங்களுக்கு ஆரம்பிக்கவில்லை.  உங்களிடம் உயர்ந்த ஆன்மீக உணர்வுகள் மலர்ச்சி பெறாத வரையில், ஆன்மிகம் என்பதெல்லாம்  வெறும் பேச்சுதான்,  ஆரம்பப் பயிற்சிதான் - சுவாமி விவேகானந்தர் 

இன்றைய சிந்தனைக்கு-152:

இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால், பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள் பரிமாற்றம் நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.

எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது. சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில் நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்! இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள். யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும்,  பரஸ்பர வெறுப்பை கிளறும். அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும். அந்த மானுடப் பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.

-  ஈரோட்டில், "இன்றைய காந்தி" புத்தக வெளியீட்டு விழாவில் ஜெயமோகன் அவர்கள் பேசியதிலிருந்து 

11 ஆக., 2012

வீடியோ சொற்பொழிவுகள்-2: நெல்லை கண்ணனின், "சிந்திப்போம்நன்றி: 'தமிழ்க்கடல்'  நெல்லை கண்ணன்,    பிராவோ தக்ஷிணாமூர்த்தி மற்றும் யூட்யூப்(YouTube). 

நலக்குறிப்புகள்-68: திரு.வி. க.

நித்தியம்  அடையச்  சத்தியம்  வேண்டும்   
சத்தியம்  அடையச்  சத்துவம்  வேண்டும் 
சத்துவம்  சாரும்  சுத்த  உணவால்  - தமிழ்த் தென்றல் திரு.வி. க. 

திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார் - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து:

http://ta.wikipedia.org/s/2a5

தமிழ்த் தென்றல் திரு.வி. க.  பற்றி 'பிரான்சு கம்பன்  மகளிரணி'  வலைப்பூ:
http://francekambanemagalirani.blogspot.in/2011/09/blog-post_2346.html 


சேதுபதி  சேதுபதியின் "பாரதியாரும் திரு.வி.க.-வும்"  - ஒம் saசக்தி ஆன்லைனில்  இருந்து:

http://omsakthionline.com/?katturai=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE&publish=1376


நன்றி:  'பிரான்சு கம்பன்  மகளிரணி'  வலைப்பூ,   ஒம்சக்தி ஆன்லைன்,      Om Sakthi Publications  மற்றும்  Tamil Wikipedia, the free encyclopedia.

யோக சித்தி-65: அறிவு-2

எங்குற்றோம்  என்னசெயல்  அங்கேக  என்றறிவோன் 
கங்குற்  கடற்  கடந்தோன்  காண்.

கங்குற்  கடற்   என்றால்  இருட்கடல்;  அஞ்ஞானக்கடல்.    aஅதைத்  தாண்டினாலே சுகம்  உண்டாகும்.  யார்  அதைத்  தாண்டவல்லவன்?  'இந்த உலகில் நாம் ஒரு  பட்சி  போலப்  புகுந்துள்ளோமே, எங்கிருந்து  நாம்  வந்தோம்?  என்ன  செய்ய  வந்தோம்?  பிறகு  நாம்  எங்கு  செல்லப் போகிறோம்?'  என்று  தன்னைத்  தானே  வினாவி,  ஆத்மவிசாரஞ் செய்து உண்மை  அறிவோனே  அறியாமை  எனும்  இருட்கடலைத்  தாண்டியோனாவான். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-51:

சொல்லும் பொருளும் அற்றுச் சும்மா இருப்பதற்கே
அல்லும்  பகலும்  எனக்காசை  பராபரமே  

ஆன்மீக சிந்தனை-29:

வென்றிட லாகும்  விதிவழி  தன்னையும் 
வென்றிட  லாகும்  வினைப்பெரும்  பாசத்தை 
வென்றிட  லாகும்  விழைபுலன்  தன்னையும்
வென்றிடு  மங்கைதன்  மெய்யுணர்  வோர்க்கே.

- திருமந்திரம்  

எனக்குப் பிடித்த கவிதை-72: கவிஞர் பி.சிதம்பரநாதன் கவிதை

திசை தெரியாது 
திரிந்து கொண்டிருக்கிறோம் 
இறைவா!
எங்களுக்கு 
நல்ல  மேய்ப்பனைக் கொடு 
தூக்கிக் கொள்பவனை எல்லாம் 
கர்த்தராகவே  கருதும்  
எங்கள்  குட்டிகளுக்கு 
ஆண்டவரே!
எப்போது  நீ 
புத்தியை  வழங்குவாயோ?  

- கவிஞர்  பி.சிதம்பரநாதன் 


இன்றைய சிந்தனைக்கு-151:

வாழ்க்கை தற்செயலாகவோ, மற்றொருடைய கருணையினாலோ  நடப்பது நல்லதல்ல.  உங்கள் தெளிவினாலும்,  திறமையினாலும்  நடக்கவேண்டும் - சத்குரு ஜக்கி வாசுதேவ் 

9 ஆக., 2012

எனக்குப் பிடித்த கவிதை-71: சிற்பியின் கவிதை-2

நீயும்  நானும்  
திசைகளை  மறந்தபோது 
வடக்கும்  கிழக்கும் 
தெற்கும்  மேற்கும் 
எல்லா  இடத்திலும் 
சூர்யோதயங்கள் 

-  சிற்பி 


நலக்குறிப்புகள்-67: நோயின் மூல காரணங்கள்

அறியாமை,  அசட்டை,  புலனடக்கமின்மை,  இச்சைப்படி  நுகர்ச்சி,  இயற்கை விதிகளை  மீறல் -  இவைகளே நோயின் மூல காரணங்கள் - ஹென்றி லிந்தார்  

ஆன்மீக சிந்தனை-29:

தனது உள்ளத்தில் மனகட்டும் மாளிகைக்குத்  தூய்மை,  நல்லறிவு,  இரக்கம், அன்பு ஆகிய நான்கும்  நான்கு  சுவர்கள்  ஆகின்றன.  அமைதி  அதன்   கூரை,  சிரத்தை  அதன்  தளம்.  இறைவழிபாடு  அதன் வாயில்.  அருள் அதனுள் வீசும்  காற்று  ஆனந்தம்  ஆங்கு  நிகழும்  இசை -  சுவாமி  சித்பவானந்தர்  

யோக சித்தி-64: அறிவு-1

அறவின்பம்,  வாழ்வின்  அழகின்பம்  எல்லாம் 
அறிவின்ப  ஊற்றின்  அமிழ்து.  

அறவழி நடந்தால் இன்பமுண்டாகும்.  "அறத்தால்  வருவதே  இன்பம்".  அந்த  இன்பவாழ்வில் ஓர் அழகின் இன்பம் பொலியும்.  இந்த அறவின்பத்தையும்,  அழகின்பத்தையும் வளர்க்கும்  அமுதம்  ஒன்றுள்ளது.  அதுவே அறிவின்பம்  என்கிற  ஊற்றின் அமுதம்.   அறிவின்பம் இல்லாத  அஞ்ஞானிகளுக்கு அறத்தால் வரும் இன்ப  வாழ்வில்லை. 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-50:

சொன்னத்தைத்  சொல்வதல்லால்  சொல்லற என்       
                                                                            சொல்லிறுதிக் 
கென்னத்தைச்  சொல்வேன் எளியேன்  பராபரமே  


இன்றைய சிந்தனைக்கு-150:

உலகத்தில் கட்டுப்பாட்டுக்கும் கட்டளைக்கும் அடங்காமல் தன்னிச்சையாகப் பிறந்து வளரும் உணர்வு அன்பு ஒன்றுதான் -நா.பார்த்தசாரதி 

நா.பார்த்தசாரதி பற்றி விக்கிபீடியா:

http://ta.wikipedia.org/s/lg


நன்றி:  விக்கிபீடியா, இலவச கலைக்களஞ்சியம் 


8 ஆக., 2012

ஆன்மீக சிந்தனை-28:

ஆன்மிகம் என்பது விழிப்புணர்வுடன் கூடிய அறிவாற்றலுடன் வாழ்வதே! உடலையோ, மனதையோ, ஆற்றல் மிக்க சக்திகளையோ அமைதியாக வைத்திருக்கத் தெரியாத வரை உலக அமைதி என்பது வெறும் கேலிப் பேச்சாகவே இருக்கும்.

யோக சித்தி-63: பொதுநலம்-4:

பொதுநலம்  அற்பம்  பெரியதென்று  எண்ணாமல்  அன்புசெயு 
நுட்ப  அறிவுடைமை  நோன்பு.

மனிதன் ஒரு நோன்பு நோற்க வேண்டும்;  எது சிறந்த நோன்பு?  அன்பு செய்வதே;  அன்பு எவ்வாறு செய்யவேண்டும் ?  'இது அற்பம்,  சிறியது,  எளியது;  அது  பெரியது,  வலியது,  வளமை  பெற்றது'  என்று  எண்ணாமல்,  வேறுபாடில்லாமல்,  சர்வ சமரச நோக்குடன்  அன்பு செய்யவேண்டும்.  அன்பு நோன்பே  இன்ப  நோன்பாம்.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-49:

பாடிப் படித்துலகில் பாராட்டி நிற்பதற்கோ 
தேடி எனை அடிமை சேர்த்தாய் பராபரமே 

4 ஆக., 2012

பயணங்கள்-21: பட்டமங்கலம்


ஸ்ரீ கற்பக சிந்தாமணி விநாயகர் 

அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார்  கோவில்ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் முகப்பு 
ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் பிரகாரம் 


ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் வெளித் தெப்பக்குளம் 
கடந்த வியாழக்கிழமை பட்டமங்கலம் சென்று பிரசித்தி பெற்ற  அருள்மிகு      ஸ்ரீஅஷ்டமாசித்தி தட்சிணாமூர்த்தி கோவில் சென்று வழிபாட்டு வருகிறேன்

பட்டமங்கலம் சிவகங்கைமாவட்டத்திலுள்ள ஒரு சிற்றூர்.  ஊருக்குள் நுழையுமுன் கோவில் வந்து விடுகிறது.  அமைதியான, இயற்கை எழில் கொஞ்சும் சூழல்.  மனம் அடங்கி மகிழ்வைத் தந்தது.

இங்குவியாழக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.  குரு பகவானுக்கமிகவும் உகந்த நாள்வியாழன் என்பதால்.  வியாழக்கிழமை  காலை ஒன்பது மணிக்கு  முன்னரே  கோவிலுக்கு வந்துவிட்டேன்  முதலில் வழியில் அரசமரத்தடியில் வீற்றிருக்கும் அருள்மிககற்பக சிந்தாமணி விநாயகரை அருகம்புல் கொண்டு வழிபட்டேன்.  அடுத்து, அருள்மிகு அடைக்கலம் தந்த அய்யனார்  கோவில்  அங்கே வழிபாட்டு  அதன் பின்னர் கோவிலுக்குள் நுழைந்தேன்.

முதலிலேயே குரு பகவான் சன்னதி.  கூட்டத்தில் காத்திருந்து, அவருக்குகந்த  முல்லைப்பூ மாலையோடு  அர்ச்சனை செய்து. நெய் விளக்கேற்றி வழிபட்டேன்.  மும்முறை பிரகாரம் சுற்றி வந்து வழிபட்டேன்.  பிரகாரம் பின்புலம் முழுவதும் ஒரு  நெடிய  ஆலமரம்  விழுதுகள் விட்டுக் கிளர்ந்து விழுதுகள் மரங்களாகி அற்புதமாகக் காட்சியளித்தது.  மரத்தடியில் நாகர்கள்.  அருள்மிகு நாகனாதப் பெருமானை நினைந்து, ஒம் நமோ நாகராஜாய நமோஸ்துதே என்று ஜபித்து வழிபட்டேன்.

பிரகாரத்திலிருந்து உள்ளே  சென்றால் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் சன்னதி மற்றும் நவ கிரகங்களின் சன்னதி. அங்கெல்லாம் வழிபட்டபின  அக்கோவிலின் பிரகாரத்தில் திருக்குளம் தென்பட்டது  எட்டிப் பார்த்தால் அங்கே ஒரு விநாயகர் சன்னதி அருள்மிகு  அனுக்க விநாயகர் சன்னதி. அங்கும் வழிபாட்டு வெளியே வந்தேன்.  மனம் நிறைந்த அனுபவம்.  இயன்றவரை oஒவ்வொரு வியாழனும் வரவேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

ஒரு சிற்றூரில் இவ்வளவு பெரிய கோவிலா!   தல வரலாற்றைப் பார்த்தபோதுதான் தெரிந்தது அது முப்பத்துமூன்றாவது திருவிளையாடல் நடை பெற்ற திருத்தலம்  என்பது.

மேலும் பிரகாரத்தில் திருவிளையாடற் புராணத்தில் இடம் பெற்றுள்ள,  ஸ்ரீ பரஞ்சோதி முனிவரின் பிரசித்தி பெற்ற,  பெரும்பாலும் அனைவரும் அறிந்த  குரு பகவானைப் பற்றிய திருப்பாடல்:

கல்ஆலின்   புடை அமர்ந்து  நான்மறை  ஆறு
         அங்க முதற்  கற்றகேள்வி
வல்லார்கள்  நால்வருக்கும்  வாக்கிறந்த
         பூரணமாய்  மறைக்கு அப்பாலாய்
எல்லாம் ஆய்  அல்லதும் ஆய்  இருந்ததனை
         இருந்தபடி  இருந்து  காட்டிச்
சொல்லாமல்  சொன்னவரை  நினையாமல் நினைந்து
         பவத்  தொடக்கை   வெல்வாம்.

மன நிறைவைத்  தந்த அந்தப் பயணக்காட்சிகளில் சிலவற்றை எனது  புகைப்படக்கருவியில் பதிந்தேன்.  அவற்றுள் சில  மேலே.

புதிதாக அக்கோவிலுக்குச் செல்லும் அன்பர்களுக்காகச் சில தகவல்கள்:

காரைக்குடியிலிருந்து காலை எட்டு மணி அளவில் மல்லிகா எனும் பேருந்து பட்டமங்கலம்  வழியாக திருக்கோஷ்டியூர் செல்கிறது சிவகங்கையிலிருந்து காலை ஆறு மணி அளவில் ராயல் இந்தியா எனும் பேருந்து பாகனேரி, பட்டமங்கலம், திருக்கோஷ்டியூர், திருப்பத்தூர் வழியாக புதுக்கோட்டை செல்கிறது.

ஐந்து கால பூஜை நேரம்:
---------------------------------

காலை 6 மணி முதல் 6.30 மணி வரை                 திருவனந்தல்

காலை 8 மணி முதல் 9 மணி வரை                      காலசந்தி

மதியம் 12.30 முதல் 1.00 வரை                                  உச்சிக்காலம்

மாலை 5 முதல் 6 வரை                                              சாயரட்சை

இரவு  7.30 முதல் 8.00 வரை                                       அர்த்தஜாமம்

வியாழன் மட்டும்
------------------------------

காலை  4.30 மணி முதல்
இரவு  9.00 மணி வரை

கோவிலமுகவரி
-------------------------------

ஸ்ரீமீனாக்ஷி சுந்தரேஸ்வரர்
ஸ்ரீஅஷ்டசித்தி தட்சிணாமூர்த்தி  திருக்கோவில்
பட்டமங்கலம் - 630 310
சிவகங்கை மாவட்டம்