நூல்நயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூல்நயம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16 மே, 2024

நூல்நயம்

"மலைவாசல் "
சாண்டில்யன்
 வானதி பதிப்பகம்.
      சாண்டில்யன் அவர்கள் சரித்திர கதை எழுதுவதில் மன்னன். அவரின் கதைகளைப் படித்துக் கொண்டே இருக்கலாம் ;பொழுது போவதும் தெரியாது. அந்த காலத்தில் யவன ராணியை எவ்வளவு நாழிகை இரவு முழுக்க கண்விழித்து இரண்டே நாளில் படித்து முடித்தேன் .ஒரு இடத்தில் அவர் ஒரு பெண்ணின் அங்க லாவண்யங்களை வருணிக்கும் பொழுது பத்து பக்கங்களுக்குக் குறையாமல் வர்ணித்துக் கொண்டே இருப்பார் .அவ்வளவு நாவன்மை எழுத்து வன்மை வாய்ந்தவர்கள் அவர்கள்.
            "மலைவாசல் "இதுவும் சரித்திர கதை தான் .பழங்காலத்தில் வடமேற்கு கணவாய்களின் வழியாக நமது நாட்டிற்கு வந்த தொல்லைகள் மிகப் பல. நமது நாட்டின் செல்வத்தை பகைவர்கள் கொள்ளையடிக்கவே படை எடுத்தனர். இந்த நாட்டு மன்னர்கள் அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றதையும் சில சில சமயம் தோற்றதையும்அறிவோம். அத்தகைய படையெடுப்புகளில் ஒன்று ஹூனர்கள் என்னும் நாடோடி ஜாதியினர்களால் நேர்ந்தது. அவர்களுடைய மின்னல் வேக தாக்குதலை முறியடித்து பாரதத்தில் அவர்கள் ஆதிக்கம் நடைபெறா வண்ணம் தடுத்துவிடுவர் குப்த மன்னர்கள் .இருந்தாலும் ஸ்கந்த குப்தன் என்னும் மன்னன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்தபோது அந்த பகைவரை எதிர்க்க முடியாமல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் பொன்னின் மதிப்பும் நாட்டில் குறைந்து போயிற்று.
              ஸ்கந்த குப்தன் உடைய மாற்றான் தாயாகிய ஆனந்த தேவி தன் மகன் பூர குப்தனை அரியாசனத்தில் அமர்த்த விரும்பி எதிரியான தோரமானா என்னும் படைத்தலைவர் உடன் சேர்ந்து சதி செய்து வந்தார்.அந்த சமயத்தில் இனத் தலைவன் அடிலனிடம் வாத்தியார் ஆகி பணியாற்றி வந்தான் , குப்த ராஜ்ய உப ஜனாதிபதி அஜித் சந்திரன் .உள்நாட்டு கலகத்தையும் தோரமானவன் தாக்குதலையும் உப ஜனாதிபதியும் அஜித் சந்திரன் தன் ராஜ தந்திரத்தால் முறியடித்து அடிலன் மகள் சித்ரா தேதியை மணந்த வரலாற்று உண்மையை பகைப்புலமாக கொண்டு சிறந்ததொரு சரித்திர நாவலை புனைந்திருக்கிறார் திரு சாண்டில்யன் அவர்கள்.

     வரலாற்று நூல் எழுதுவது மிகவும் எளிது அன்று ;மிகவும் கடினமானது ;அதிலும் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உண்மைச் சம்பவங்களுக்கு மாறுபடாமல் நாவலுக்கு ஏற்ற குணநலன்கள் குன்றாமல் எழுதுவது அதிலும் கடிதமான ஒன்று. மேல்நாட்டு ஆசிரியர்களாகிய சர் வால்டர் ஸ்காட் டூமாஸ் போன்றவர் தம் வரலாற்றுக் கற்பனை நாவல்களால் உலக புகழ்பெற்ற அதோடு தன் மொழிக்கும் ஆக்கமும் ஊக்கமும் அளித்து வருகிறார்கள்.
             திரு .சாண்டில்யன்அவர்கள் தமிழில் மிகச் சிறந்த எழுத்தாளர் .இயற்கையான நகைச்சுவையும் சிறந்த பாத்திரங்களைப் படை க்கும் திரத்தாலும் நன்றாக கதையை நடத்திச் செல்லும் நலத்தாலும் நல்லதொரு நாவலை தமிழ்நாட்டிற்கு அவர்கள் அளித்திருக்கிறார்கள்..
       இந்த "மலை வாசல்" கதை  சரித்திர ஆதாரங்களை கொண்டு எழுதப்பட்டுள்ளது. ஆசிரியர் வின்சென்ட் ஸ்மித் என்பவரும் பின்வரும் குறிப்புகளை கொடுத் திருக்கிறார் .கி. பி.455ஆம் வருடத்தில் ஏற்பட்ட ஹுணர்களின் படையெடுப்பை ஸ்கந்த குப்தன் முறிஅடித்தாலும் 460 க்கு மேல் 470 க்குள்மீண்டும் ஹூணர்கள் சாரிசாரியாக இந்தியாவுக்குள் புகுந்து விட்டார்கள் .
             இந்த இரண்டாவது படையெடுப்பு காலத்தில் சக்கரவர்த்தியான ஸ்கந்த குப்தன் நோய்வாய்ப்பட்டு விட்டான். நேரடியாக எதிரிகளை சமாளிக்க முடியவில்லை .எனவே  ஹூணர்கள் பத்துவருஷ காலத்திற்குள் சிந்துநதி பிராந்தியம் பூராவையும் ஆக்கிரமித்துக் கொண்டார்கள் .திரும்பத் திரும்ப ஏற்பட்ட படையெடுப்பால் ஸ்கந்த குப்தன் செல்வ நிலையையும் சீரழித்து விடுகிறது. தங்க நாணயத்தின் மதிப்பை 108 லிருந்து 73 ஆக குறைத்து விடுகிறான் . 
              இக்காலத்தில், ஸ்கந்த குப்தனின் சிறிய தாயாரான ஆனந்த தேவி தன் மகனான பூரகுப்தனுக்கு  குப்த ராஜ்யத்தை சம்பாதிக்க கொடுக்க சதி செய்கிறாள். இதனால் உள்நாட்டு அமைதி குறைகிறது. ( The Early History of India- by Vincent Smith, chapter 7, pages 289 to 293 )இந்த சரித்திர குறிப்புகளை கொண்டு சரித்திர பாத்திரங்களோடு சில சிறிய பாத்திரங்களையும் சிருஷ்டித்து மலைவாசல் எழுதப்பட்டுள்ளதாக திரு சாண்டில்யன் அவர்கள் முன்னுரையில் 
விவரிக்கிறார்
      "மலைவாசல் "இந்த தலைப்பு வருவதற்கான காரணத்தை திரு சாண்டில்யன் அவர்கள் இவ்வாறு கூறுகிறார் .,'வடமேற்கு எல்லையில் உள்ள மலைப் பிரதேசத்தின் வாசலாக அமைந்துள்ள கைபர் கணவாய்க்கு அருகே இந்த கதையை பெரும்பாலும் நடப்பதால் இதற்கு *மலைவாசல் *என்று பெயர் கொடுத்தேன் 'என்று  கூறுகிறார்.
     சுமார் 500 பக்கங்கள் கொண்ட இந்த ' "மலை வாசல் "நீங்களும் சென்று பாருங்களேன்.!!!

நன்றி :

25 ஜன., 2024

நூல்நயம்

*மதிப்புரை*
"அருஞ்சுரம்" என்ற இந்த நாவலில், இதை எழுதிய அதியமான், பிழைப்புக்காக சவூதி அரேபியா சென்று அங்கு தான் பெற்ற அனுபவங்களை, துயரங்களை, வலிகளை வார்த்தைகளாக்கித் தந்திருக்கிறார். எவ்விதப் பாசாங்கும் இல்லாத எழுத்து. நாவலின் வடிவம், உத்தி குறித்து எல்லாம் கவலைப்படாமல் தனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை எழுதிச் செல்கிறார். இவ்வாறு எழுதுவதன் மூலம் அதியமான் நம்மை நெக்குருக வைக்கிறார். வாழ்வின் குரூரத்தைக் கண்டு ஏதும் செய்ய முடியாத ஒரு சாமானிய மனிதனின் கையறு நிலையை கண்முன்னே காட்டுகிறார். தமிழுக்கு கிடைத்துள்ள அசலான படைப்பாக நான் அருஞ்சுரத்தை மதிக்கிறேன். வெளிநாடுகளுக்கு பிழைப்பின் நிமித்தமாக செல்ல நேரும் தொழிலாளர்கள் கையில் இருக்க வேண்டிய எச்சரிக்கை மணியாக "அருஞ்சுரம்" இடம்பெற வேண்டும். 
-தஞ்சாவூர்க்கவிராயர்

நன்றி  :

தஞ்சாவூர்க்கவிராயர்
மற்றும்
முகநூல் 

20 டிச., 2023

நூல்நயம்

"வேதபுரத்தார்க்கு."
கி ராஜநாராயணன் அவர்கள் எழுதியது. அன்னம் பதிப்பகம் வெளியீடு விலை ரூபாய் 150 மொத்த பக்கங்கள் 184 முதல் பதிப்பு 2014.

எனது 16ஆம் வயதில் முதன் முறையாக வேதபுரி வந்து சென்றிருக்கிறேன். மொத்தம் ஐந்து முறை அப்போது சென்று வந்திருக்கிறேன்.
அப்போதைய வேதபுரி இப்போது புதுவை என்றும் புதுச்சேரி என்றும் பாண்டிச்சேரி என்றும் அழைக்கப்படுகிறது .எவ்வளவோ மாறிவிட்டது .இரண்டு வருடங்களுக்கு முன் சென்று வந்த போதும் கூட அந்த மாற்றத்தை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாத வண்ணம் இருக்கிறது.

           இந்தக் கதையைப் படிக்கும் பொழுது நெஞ்சின் ஒரு ஓரத்தில் புளியமரத்தின் கதை வீச்சமும் ,குழந்தைகள் பெண்கள்ஆண்கள் வாசமும் , பதினெட்டாவது அட்சக்கோடு நெடியும்,,அஞ்சாடியின்  நெஞ்சைத் தொடும் வரிகள் வந்து வந்து போகிறது.
                 எனது பாட்டனார் ,அவரின் முப்பாட்டனாரின் கதைகளை ,வாழ்ந்த கதை வீழ்ந்த கதை ,என்னை தோளில் போட்டுக் கொண்டு தாலாட்டிக்கொண்டு சொன்ன விதம்,பதம், நூறு சதம் நினைவுகள் இந்த புத்தகம் படிக்கும்போது வந்து போகிறது.
            கி .ராஜநாராயணன் அவர்களை ஒரு சகாப்தம் என்று சொல்லலாம் .என்றும் இளமை முறுக்கோடு உள்ள தெளிவோடு தனித்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு "நிகழ்வு"(லெஜன்ட் ) அவர். இந்த நூற்றாண்டின் மிகப் பெரும் நிகழ்வு அவர்.
       தன் துணையை இழந்து' தனிமைத் தவம்' செய்து கொண்டிருக்கிறார்.
    வேளாண் கல்லூரியில் படிக்கும் பொழுது கல்வி சுற்றுலா பயணமாக கோவில்பட்டி விவசாய பண்ணைக்கு சென்றோம். அப்பொழுது நண்பர் கவிஞர் ,ஓவியர், திரைப்பட இயக்குனர் ,கங்கைகொண்டான் அவர்கள் இடைசேவல் கிராமம் அழைத்துச் சென்று காணும் பாக்கியம் பெற்றேன். அப்பொழுதெல்லாம் அவரின் அருமை பெருமை எனக்கு தெரியாது. கரிசல்காட்டு கதைகள் இவரால் பெயர் பெற்றது . அந்த மக்களின் மொழியில் மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் .
   
      கரிசல் காட்டுப் பகுதியில் பிறந்தவர்கள் வெக்கை குடிப்பவர்கள.இவர்களுக்கு எந்த வித சுக வாழ்வு சம்பந்தமும் கிடையாது. விவசாயிகள் தினம்தோறும் வானத்தை பார்த்து மானத்தை காப்பவர்கள். அப்படிப்பட்ட  மக்களின் உணர்வுகளை தின பாடுகளை தனது வெற்றி மொழியால் உலகிற்கு காட்டியவர் கி .ராஜநாராயணன் அவர்கள்.
             அழகிரிசாமி அவர்களும்,கி. ரா. அவர்களும் பால்யகால நண்பர்கள் ;ஒரே தெரு வாசிகள்.;இருவருமே சாகித்திய அகாடமி விருது பெற்றவர்கள்.
            மண்ணையும் அதில் வாழும் மனிதர்களையும் எழுதுவது அத்தனை எளிதல்ல .ஆப்பிரிக்கா எழுத்தாளர்களுக்கு கிடைத்துள்ள உலக அங்கீகாரம் போல கி. ரா. அவர்களுக்கு கிடைக்கவில்லை . புதுவை பல்கலைக்கழகத்தின்* நாட்டார் வழக்காற்றியல் *துறையின் "வருகைதரு பேராசிரியராக "பணியாற்றியவர். 
              கரிசல் எழுத்துக்கு இவர் பீஷ்மர் .புது எழுத்தாளருக்கு இவர் துரோனாச்சாரியார். படித்து பாடம் பெறலாம்.
    '  தூங்காதிருக்க மருந்து 'என்று சொல்லப்படுகிற 'தேயிலை 'ஊருக்குள்ளே எப்படி வந்து எல்லோரையும் ஆட்கொண்டது என்று இவர் தெளிவாகவும் விளக்கமாகவும்  எழுதியது பிரமிக்கத்தக்கது. அதேபோல கழுவேற்றுதல் என்கிற ஒரு நிகழ்வை சரித்திரத்தை இவர் கதை மூலமாக படிக்கலாம் ;படித்து தெரிந்து கொள்ளலாம்.
  பல கதைகள்  பிரெஞ்சு மொழியில், பல மொழிகளில்  மொழிபெயர்க்கப்பட்டுள்ளது .
        நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்து ,அது தனிவகை இலக்கியம் என்று பல ஆண்டுகால அவரின் முயற்சி தற்பொழுது ஆயிரம் பக்கத்திற்கு மேலான புத்தகமாக வெளிவந்துள்ளது .
      கரிசல் வட்டார சொற்களைத் தொகுத்து அகராதி உருவாக்கியிருக்கிறார் .
     கடித இலக்கியம் என்ற வகையை மேம்படுத்தியது அவரது கடிதங்கள். கு. அழகிரிசாமி க்கும்  நண்பர்களுக்கும் அவர்கள் எழுதிய கடிதங்கள் ஆழமான இலக்கியத் தன்மை கொண்டது .

******

வேதபுரத்தார்க்கு .இது கிராவின் சுயசரிதை புத்தகம் .நான்கு தொகுதிகளாக எழுதி வெளியிட நிர்ணயிக்கப்பட்டது .முதல் தொகுதி இது .கி.ரா. அவர்கள் தனது 90 ஆவது வயதில் தீராநதி இதழில் 
 எழுதி பின் புத்தகமாக வெளியிடப்பட்டது.

       "வேதபுரத்தாருக்கு நல்ல குறி சொல்லு" என்று ஒரு தொடரை தான் கி.ரா. 
எழுதினார் .வேதபுரம் என்பது பாண்டிச்சேரி குறிக்கும் .பாண்டிச்சேரியில் குடியேறிய,பாரதி, பாரதிதாசன் கி.ரா.போன்றவர்களை குறிக்கும் .வேத புரத்தில் குடியிருப்பவர்களுக்கு ஒரு நல்ல குறிசொல் சொல் என்பதாக இந்த தொடரை எழுதினார் .ஆனால் இது முற்றிலும் முழுக்க முழுக்க சுயசரிதை என்றே சுயதம்பட்டம் போல சொல்லப்பட்டு எழுதப்பட்டது .ஆனால் பல விஷயங்கள் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

     90 வயதில் இவ்வளவு ஆச்சரியப்படத்தக்க நினைவாற்றல் கொண்டு எழுதியிருக்கிறார். தி.க.சி.தூண்டுதலும் கூட இது எழுதிடக் காரணம் என்று அவரே சொல்லியிருக்கிறார்.
1989இல் வேதபுரத்திற்கு குடியேறுகின்ற நிகழ்வோடு இந்த சுயசரிதம் தொடங்குகிறது.

         வேதபுரம் என்பது எல்லோருக்குமே,எல்லா ஊருக்கும்  பொருந்திப் போகின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

      முப்பது அத்தியாயங்களில் இந்தப் புத்தகம் எழுதப்பட்டுள்ளது.

கி ரா அவர்களின் புதுச்சேரி நகரத்தின் வாழ்க்கை பதிவுகள் அடங்கியது  தான் இந்த புத்தகம் இருக்கும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தால் ஆரம்பத்தில் அப்படி இருக்கும் .போகப்போக வேறு திசையில் மாறி செல்கிறது.

         பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக நியமிக்கப்பட்டது, அதிகாரிகளை சந்தித்து ஆய்வுக்கு திட்டமிட்டது உதவியாளர்களை உருவாக்கிக் கொண்டது ,துறை மாணவர்களோடு உரையாடியது என்பதாக இந்த கதை விரிகிறது.

       பள்ளிக் கல்வியை கூட முடிக்காத கி.ரா. அவர்களை புதுவைப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராக
 துணைவேந்தர் க.வெங்கட சுப்பிரமணி அவர்கள் நியமித்தார்கள்.

          அப்போது இருந்து 25வருட புதுச்சேரி வாழ்க்கை நிகழ்வுகளை மட்டும் இதில் எழுதப்படும் என்று நினைத்து படிக்க ஆரம்பித்தேன் .ஆனால் நிறைய மாற்றங்களை உட்படுத்தி ஒரு கதை சொல்லியாக இதனை எழுதி இருக்கிறார் கி.ரா. அவர்கள்.
  தனது கிராம வாழ்க்கையில் இருந்து வெளிப்பட்டு வேதபுரம் வந்து அதன் அடையாளத்திற்குள் இருக்கும் ரகசியங்களை தேடி தேடி கண்டுபிடித்த ரகசியங்களை சுவராசியமாக சொல்வதாகவும் இருக்கிறது அவரின் எழுத்து.

  கி.ரா அவர்கள் இந்த புத்தகத்தில் ஒரு வாசகத்தை எழுதியுள்ளார் ."எல்லா சகதிகளிலும் தாமரை பூப்பதில்லை "
என்று .
ஆனால் கி.ரா. என்கிற தாமரைப்பூ எந்த சகதியிலும் பூக்கும் ஒரு உன்னதமான பொன் தாமரைப்பூ என்பதில் ஐயமில்லை.

        ஆறி விட்ட இட்லி சாப்பிடுவது நன்றாக இருக்காது.இதை விட மிக மோசமானது.
ஆறி விட்ட தோசை சாப்பிடுவது .இதற்கு தணிகாசலம் என்கிற கி.ரா.அவர்களின் உதவியாளர் சென்னாங்கண்ணி பொடி தொட்டு சாப்பிடுகிறார் . அவ்வளவு அருமையாக சுவையாக இருக்கிறது.அதுகுறித்து தெனாலிராமன் கதை கூட எடுத்து விடுகிறார் .நான் முதன்முதலாக கேள்விப்பட்டேன் . சென்னாங்கண்ணி  பொடி குறித்து என் மனைவிக்கு தெரியும் என்று சொன்னார். எனது பாண்டிச்சேரி நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டிருக்கிறேன் .கிடைத்தால் வாங்கி அனுப்பும்படி...

         மீரா ஒருமுறை வீட்டுக்கு வந்தபோதும், இயக்குனர் பார்த்திபன் ஒரு முறை வீட்டுக்கு வந்த போதும் கோழி கறி சாப்பாடு போடுகிறார்.கோழிக்கறி சமையல் குறித்து ஒரு அத்தியாயமே எழுதியிருக்கிறார்.

     வெள்ளக்கால் என்ற ஊரில் *தேள்* இருப்பதில்லை என்ற ஒரு தகவல் பதிவு செய்யப்படுகிறது..

*சொல்லடி சொல்லடி சக்தி மாகாளி வேதபுரத்து நல்ல குறி சொல்லு *
என்று வேண்டுகிறான் பாரதி .அந்த வரிகளை தான் கீழ அவர்கள் புத்தக தலைப்பாக வைத்திருக்கிறார்.

              30 ஆவது அத்தியாயத்தில் ஆயுள் இருக்கும் வரை *அதை* எழுத முடியும் மட்டுமே எழுதலாம் அல்லது சொல்லலாம் என்கிறார் .*அதை *என்று சொன்னவுடன் எனக்கு வேறு நினைவு போய்விட்டது. ஆனால் அவர் சொல்வது வேறு உயில் எழுதிவிட்டு சொல்வார்களே அதை குறித்து சொல்கிறார் .

    நண்பர்களுக்கு எல்லாம் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கிறார் .அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதற்கும் ஒரு கதை சொல்லுகிறார் .

        .ஒரு பெண் விருப்பப்பட்டால் ,
   ஒரு பெண்ணின் வாய்விட்டு கூப்பிட்டு விட்டால் மறுக்கக் கூடாது என்பது நாட்டுப்புறத்தில் இப்பவும் சொல்லுகிற வார்த்தை.

      காம பசியில் துடிக்கும் ஒரு பெண் அரசனை கண்டதும் காதல் ஆகிவிடுகிறாவள் அரசரும்  காதலோடு திருப்தி செய்கிறான் .அப்போது அவள் சொன்னாளாம்," நீ நல்லா இருக்கனும்". என்று .

     அதுபோல என்னுடைய அருமை நண்பர்களுக்கெல்லாம் நான் நன்றி தெரிவிக்க இதுவே தக்க சமயம் ."நல்லா இருங்க "என்று சொல்லுகிறார்.

      எனது உடலை எரித்து சாம்பலாக்கி விடுங்கள் .துக்கத்தை எப்போதும் கொண்டாடாதீர்கள்.
பிறந்தநாளை மட்டும் நினைத்துக் கொள்ளுங்கள் .

    "எனக்கு நினைவு என்பது எனது எழுத்துக்கள் மட்டும் தான்" என்று முடிக்கிறார் ஆசிரியர்.

30 ஆக., 2022

நூல்நயம்


"அர்த்தமுள்ள இந்துமதம் "கண்ணதாசன் பதிப்பகம் வெளியீடு.கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதியது .ஓவியர் சில்பி வரைந்த அற்புத ஓவியங்களுடன். மொத்த பக்கங்கள் 800 .விலை ரூபாய் 275/-முதல் பதிப்பு 2009 .ஆறாம் பதிப்பு 2011. 
   
கவிஞர் கண்ணதாசனை தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் இருக்க முடியாது .கண்ணனை தெரிகின்றதோ இல்லையோ அவனது தாசனை கண்ணதாசனை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இதை உணர்த்தும் வகையில்தான் ;
அவன் அன்றே ;
*நானே அவன் 
அவனே நான் .
இதைக்காலம் உணர்த்தும்*
என்று சொன்னான்  .

வனவாசம் சென்று விட்டு 
மனம் திருந்தி 
குணவாசம் பெறுவதற்காக 
மனவாசத்தில் வாழ்ந்து விட்டு இப்பொழுது தின வாசம் கண்ணதாசம் ஆக முழுமையான மனிதனாக முழுமையான கண்ணதாசன் ஆக "அர்த்தமுள்ள இந்து மதம் *எழுதியிருக்கிறார். 

       பாரதி ,பாரதிதாசனைத் தொடர்ந்து வந்த கவிஞர் கண்ணதாசன் ,
தமிழ் கவிதை யை மேலும் எளிமையாக்கி விரிவான களத்தில் இயங்க செய்தார். கவிஞர் தன்னுடைய வாழ்வில் ஆதிக்கத்திற்கும் நாத்திகத்திற்கும் இடையில் நிகழ்த்தும் போராட்டங்களும் கூட அருமையான கவிதைகளாக வெளியிடப்பட்டுள்ளன. கண்ணனைத் தவிர பிற கடவுள்களும் இயேசு குறித்து அவர் கவிதைகள் ,காவியங்கள் புனைந்துள்ளார் .
     நன்மைக்கும் தீமைக்கும் இடையில் இருதலைக்கொள்ளி ஒளிபோல ஓயாமல் போராடிக் கொண்டிருந்ததால் அவர்கள் வாழ்க்கையின் முழுமையை தேடுமாறு இடைவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தது. உண்மையான எதார்த்தமான வாழ்வின் தன்மையை அறிவு ரீதியாகவும் ,அனுபவ ரீதியாகவும் கண்டறிந்தவர் .இயற்கையான பிரபஞ்ச இயக்கத்தில் இறைவனோடு இரண்டற கலந்து இருப்பதாக அவர் தன்னை இனம் கண்டு கொள்கிறார்.
        மனிதன் சம்பந்தப்பட்ட வாழ்க்கை இயற்கை ஆண் பெண் காதல் நினைவு நாடு அரசியல் தத்துவம் போன்ற பல வகையான அவற்றின் அனுபவங்கள் எல்லாம் கவிதை வடிவம் பெற்றுள்ளன .
   
   கவிஞர் கண்ணதாசன் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கலைஞர்.
 கவிஞராக ,கட்டுரையாளராக, நாவலாசிரியராக ,கதாசிரியராக திரைப்பட கலைஞராக ,பாடகராக ,அரசியல்வாதியாக பேச்சாளராக ,பத்திரிக்கை ஆசிரியராக, தன்னுடைய வாழ்க்கையில் பல மாறுபட்ட தளங்களில் இயங்கியவர் .தனது வாழ்க்கை தளங்களில் அவர் பெற்ற அனுபவமே அவருடைய கலை இலக்கிய வெளிப்பாடுகள் ;அர்த்தமுள்ள இந்துமதம் எழுதிட அவருக்கு அடித்தளமாக அஸ்திவாரமாக அமைந்தது ;அவரின் எல்லா அனுபவங்களும்.
    இந்தப் புத்தகத்தில் கண்ணதாசனின் ஒரு இடத்தில் குறிப்பிடுவார் .தனக்கும் கண்ணனுக்கும் உள்ள தொடர்பை *விட்டகுறை தொட்டகுறை *என்று .அவரும்  எட்டு,கண்ணனும் எட்டு. பிறப்பு ,என்பதாக சொல்லிக் கொண்டே போவார் .அது போலவே எனக்கும் கண்ணதாசன் அவர்களுக்கும் உள்ள தொடர்பு* விட்டகுறை தொட்டகுறை* என்று தான் நினைக்கிறேன் .எனது 12 13 வயதிலேயே அவரைப் பார்த்திருக்கிறேன் .அதன்பிறகு இரு முறை பார்த்திருக்கிறேன் .அவருடைய மகன் என்னுடன் பணிபுரிந்து இருக்கிறார். அவரது  பேரனுடன் பழகி இருக்கிறேன். அவரது ஒரு பேரன் டல்லாஸ் நகரில் சந்தித்து பேசி இருக்கிறேன் .அவர் மூலமாக கொள்ளுப்பேரன் தொட்டுப் பேசி இருக்கிறேன் .இதுதான் விட்டகுறை தொட்டகுறை என்று இந்து மதத்தில் சொல்லுவது உண்மை போலும்...
   
*******
ஸ்ரீ காஞ்சி காமகோடி முனிகள் ,தவத்திரு கிருபானந்தவாரியார் முதலானோர் அணிந்துரை வழங்கியுள்ளார்கள்.
     வானதி பதிப்பகம் திருநாவுக்கரசு அவர்கள் தனது பதிப்புரையில் :"இது ஒரு ஞானக் களஞ்சியம் .இந்து மதம் தழைப்பதற்கும் மக்களின் மன நலம் பிழைப்பதற்கும் கவிஞர் கண்ணதாசன் அவளுடைய செழுமையான கருத்துக்கள் நிச்சயம் பயன்படும் "என்கிறார் .

     கவிஞர் கண்ணதாசன் தனது முன்னுரையில் :"இந்து மதத்தின் தத்துவங்களில் எனக்கு நீண்ட கால ஈடுபாடு  உண்டு.நான் நாத்திகனாக இருந்த காலத்திலும் கூட சில தத்துவங்களின் உள்ளர்த்தத்தை வியப்போடு நோக்கி இருக்கிறேன் .அவற்றைப் பற்றி எல்லாம் பின்னால் நாம் எழுதப் போகிறோம் என்று கருதியது இல்லை .கருதி இருந்தால் இன்னும் பல விஷயங்களை குறித்து வைத்திருப்பேன் .காஞ்சி பெரியவர்களைப் போலவே வாரியார் சுவாமிகளைப் போலவே ஆழமான தத்துவ அறிவு எனக்கு இல்லை .அனுபவ ரீதியான உண்மைகளை பெரும்பாலும் இதில் கூறி இருக்கிறேன்" என்கிறார் முன்னுரையில் கண்ணதாசன்.
      மேலும் ,
*நோக்கம் *என்று தலைப்பிட்டு கூறுகிறார்: "கடவுளையும் புராணங்களையும் கேலி செய்ததற்காக கந்தபுராணம், பெரியபுராணம் ,கம்பனின் இராமகாதை, திருவாசகம் ,திருப்பாவை ,திருவெம்பாவை உள்ளிட்ட நாலாயிர திவ்ய பிரபந்தம், வில்லிபாரதம் ,அனைத்தையும் படிக்கத் தொடங்கினேன் ,
      கம்பனைப் படிக்கப் படிக்க நான் கம்பனுக்கு அடிமையானேன் .மேலும் மேலும் கம்பனைப் படித்தேன் ;கடவுளை படித்தேன் .
    என் சிறகுகள் விரிந்தன; சொற்கள் எழுந்தன ;பொருள்கள் மலர்ந்தன; காண்கின்ற காட்சிகள் எல்லாம் 
கவிதை களாகட் தோன்றின .என் வாழ்வில் ஏற்படும் ஒவ்வொரு நிகழ்வுலும் நான் அடிக்கடி சொல்வது ,"நம் மூதாதையர்கள் முட்டாள்கள் அல்ல ".
   ஆலமரம் போல் தழைத்துக் குலுங்கி நிற்கும் இந்துமதம் உன் வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் ஒவ்வொரு வினாடியையும் அளந்து கொடுக்கிறது .
   பல பூர்வீக மதங்களையும் தன்னுடைய கிளை அலுவலகமாக  ஆக்கிக்கொண்டு தானே தலைமை தாங்க தொடங்கிய காலம் ராமானுஜர் காலம் .
      அத்தகைய இந்து மதத்தை பற்றி என்னுடைய குறைவான அறிவில் தோன்றிய குறைபாடான கருத்துக்களை தொடர்ந்து எழுத ,அவற்றின்  தத்துவங்கள் வாழ்க்கைக்கு எவ்வளவு பயன்படுகின்றன என்பதை மட்டும் எழுதுவேன்", என்று கண்ணதாசன் முன்னுரையில் அழகாக தன்னை தெளிவுபடுத்திக் கொண்டுள்ளார்.
*******
இனி அர்த்தமுள்ள இந்துமதம் புத்தகம் குறித்து பார்ப்போம்:.
அர்த்தமுள்ள இந்துமதம் 10 பாகங்கள் ஆக பகுக்கப்பட்டுள்ளது .இந்து மதத்திற்கு புனிதமான நூல் பகவத் கீதை .தமிழில் அதற்கு அடுத்தபடி கவிஞரின் அர்த்தமுள்ள இந்துமதம் .
தினமணி கதிர் இதழில் அர்த்தமுள்ள இந்துமதம் தொடராக வந்தபோது 1972ஆம் ஆண்டு படித்து இருக்கிறேன் .
பிறகு சிறுசிறு புத்தகமாக வந்தது .அதை வாங்கிப் படித்திருக்கிறேன் .இப்பொழுது பத்து பாகம் ,ஒரே புத்தகமாக வெளியிட்டு இருக்கிறார்கள்.
   கருவறை முதல் கல்லறை வரை வாழ்கின்ற ஒரு மனிதனின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் நடத்திச் செல்லப் படுகிறது என்பதை இந்து மதம் ஏற்கனவே அழகாக ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்றவாறு பதில் அளித்திருப்பதாக நம்பிக்கையோடு இந்த அர்த்தமுள்ள இந்துமதம் எழுதப்பட்டிருக்கிறது. 
      கர்மா என்ற வார்த்தை இந்து மதத்தில் மிகவும் பிரபலம் .ஒருவர் தவறு செய்தால் கர்மாவில் இருந்து தப்பிக்கவே முடியாது என்பதை பல சம்பவங்களை தன் வாழ்க்கையில் எடுத்துக்காட்டுகளாக கூறியிருக்கிறார் .எனக்கு பயமில்லை துணிந்தவனுக்கு துக்கமில்லை என்பதுபோல இவர் பயத்தினால் புலன்கள் மென்மையாகி விடும் என்றும் அதனால் தான் அவைகளை என்று தெளிவாகக் கூறுகிறார்.
 முதல் பாகத்தில் ,
உறவு ,ஆசை ,துன்பம் ,ஒரு சோதனை பாவமாம் புண்ணியமாம் ,புண்ணியம் திரும்ப வரும் ,விதிப்படி பயணம் ,தாய் குறித்து ,மங்கல வழக்குகள் எப்படி எல்லாம் உங்கள் வாழ்க்கையில் கடைபிடித்து  கல்லானாலும் புல்லானாலும் புருஷன் என்கிறார் .தாத்பரியம்  ,இந்த நல்ல மனைவி ,நல்ல நண்பன் ,கீதையில் மனித மனம் உயர்ந்தோர் ,மரணம் , கண்ணனை நினைப்பவர்கள் சொன்னது பலிக்கும், பூர்வ ஜென்மம் ,பிற மதங்கள் ,சமதர்மம், குட்டி தேவதைகள் ,உலவும் ஆவிகள், சோதனையும் வேதனையும் , பாவிகளே பிரார்த்தியுங்கள் என்று முதல் பாகத்தில் குறிப்பிடுகிறார் .
    பெண்ணைப் பற்றியும் குடும்ப வாழ்வில் பெண்ணின் கடமை பற்றி கூறும்போது அவர் பெண்ணடிமைத்தனம் கொண்டவராக  நினைக்கத்தோன்றும். ஆனால் அவர்தான் திரைப்படத்தில் *நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும் நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும் *என்று பெண்ணுக்கு, ஈஸ்வரி ஈஸ்வரனுக்கும் சரி சமமாக பாவித்து பாடல் எழுதியிருக்கிறார் .
    ஆசையை மூன்று விதமாகப் பிரிக்கிறது இந்து மதம் .
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை மண்ணாசை வளர்ந்துவிட்டால் கொலை விழுகிறது .
பொன்னாசை வளர்ந்துவிட்டால் களவு நடக்கிறது .
பெண்ணாசை வளர்ந்துவிட்டால் பாபம் நிகழ்கிறது .இந்த மூன்றில் ஒரு ஆசைகூட இல்லாத மனிதர்கள் மிகவும் குறைவு. ஆகவேதான் பற்றற்ற வாழ்க்கையை இந்து மதம் போதித்தது.

      இரண்டாம் பாகத்தில் இதிகாசங்கள், ஜாதிகள் ,வாசலில் அமீனா நிற்கிறான் ,ஒரு புதிய சிந்தனை ,வரும் -ஏற்றுக் கொள் ,தரும் -பெற்றுக்கொள் ,நெஞ்சுக்கு நிம்மதி, ஆண்டவன் சந்நிதி ,வள்ளுவர்  ஓர் இந்து,கனவுகள் ,சகுனங்கள் ,ஏன் இந்த நம்பிக்கை ,இந்து மங்கையர் ,
அங்காடி நாய் ,ஆண்டாள் தமிழை ஆண்டாள் ,அறிவும் திருவும் , இன்றைய இளைஞனுக்கு,என்று இரண்டாம் பாகத்தில் எழுதியிருக்கிறார் .
      ஆண்டாளைப் பற்றி எழுதும் போது இவரை தன்னை காதலியாக நினைத்துக்கொண்டு கண்ணனை நினைந்து உருகி எழுதியிருக்கிறார். 

*கண்ணன் என்னும்
 மன்னன் பேரைச் 
சொல்லச் சொல்ல 
கல்லும் முள்ளும் 
பூவாய் மாறும் 
மெல்ல மெல்ல .*
கண்ணனை நினைக்காத 
நாள் இல்லையே 
காதலில் துடிக்காத 
நாளில்லையே *என்றெல்லாம் அவர், காதலியாகவே, தனியாகவே வாழ்ந்து இருக்கிறார்,கண்ணன் மீது காதல் கொண்டு.

       மூன்றாம் பாகம் : 
என் பணி  , அவனவன் தருமம், விரும்பாதவனும்,முடியாதவனும், இரத்தங்களின் யுத்தம் ,குடும்பம் என்னும் தர்மம் ,மெய்யுணர்வு , மனிதாபிமானம் மாலைக்குள் பாம்பு ,மரத்தைத் தண்ணீரில் போடு ,கோபம் பாவம் சண்டாளம் , காம உணர்ச்சி,மதுவும் மதமும் ,பக்குவம் ,இறைவனின் நீதிமன்றங்கள் . இன்று மூன்றாம் பாகம் முடிகிறது.

நான்காம் பாகத்தில்,
தனது அனுபவங்களையும் முழுமையாக எழுதுகிறார் .
40 வயதை தாண்டிய பிறகு ஒருவன் கை வீசியபடி முடிந்த வரை நீண்ட தூரம் நடக்க வேண்டும் .
வாயு பதார்த்தங்களை சாப்பிடாமல் இருத்தல் வேண்டும் .
கடலை மாவு கடலை எண்ணெய் தவிர்க்கவும் .
தவறான உணர்வுகள் கொள்ளாதிருக்க வேண்டும்.
 விழுந்து குளித்தல் .
இனம் அறிந்து சேர்ந்து 
இருத்தல்.
இருதயத்திற்கு துன்பம் கொடுக்க கூடிய தொடர்புகளில் மாற்றிக் கொள்ளாது இருத்தல் .
எதையும் அளவோடு வைத்திருக்கலாம்* என்று ஆரோக்கிய அறிவுரை 
வழங்குகிறார்.

பகவத் கீதையில் "கூடுகின்ற பெருங்கூட்டத்தில் வெறுப்புக் கொள்"என்று தனிமையில் இனிமை தான் அவன் அப்படி கூறுகின்றார் .தனிமை கண்டதுண்டு அதிலே சாரம் இருக்குமா என்றான்  பாரதி. தனிமையிலே இருந்து உன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்

 ஐந்தாம் பாகம் :
இது ஞானம் பிறந்த கதை ;
"உலக வாழ்க்கையில் நான் செல்வத்தை மட்டுமல்ல அனுபவங்களையும் 
திரட்டியவன் .உலகம் புள்ளிகளால் ஆனது என்றால் ஒவ்வொரு புள்ளியும் எதனால் ஆனது என்று எனக்கு தெரியும் "என்கிறார் கண்ணதாசன் . அருணகிரி  கதையும். அழகாக விவரிக்கப்படுகிறது.அவரது சீடர் பத்திரகிரியார் கதையும் அலசப்படுகிறது. ஒவ்வொருவரும் இந்த இரண்டு கதைகளையும் அறிவுபூர்வமாக வாசித்து உள் வாங்கிக் கொள்வது நலம் .பட்டினத்தார் பாடல் கேட்கும் போதெல்லாம் கண்ணில் கண்ணீர் வராமல் போகாது .
"அத்தமும் வாழ்வும் அகத்து மட்டே விழியம்பொழுக  மெத்திய மாதரும் வீதி மட்டே விம்மிவிம்மி இரு "என்பதைத்தான் வீடு வரை உறவு 
வீதி வரை மனைவி 
காடு வரை பிள்ளை 
கடைசி வரை யாரோ 
என்று கண்ணதாசன் பாட்டாக வடித்திருப்பார்.

ஆறாம் பாகம்:
   நெஞ்சுக்கு நிம்மதி ஆண்டவன் சந்நிதி, இதில் இசையும் கலையும் ,சேவையில் நிம்மதி  ,பூஜையில் நிம்மதி, நம்பிக்கையில் நிம்மதி ,இல்லறத்தில் நிம்மதி ,படிப்பதில் நிம்மதி ,ஆரோக்கியத்தில் நிம்மதி தூக்கத்தில் நிம்மதி.

தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே அந்த தூக்கமும் அமைதியும் நானானால் என்று பாடலை கேள்வி கேள்விப்பட்டிருப்பீர்கள் இதை சேக்ஸ்பியர் கவிதைகள் தமிழாக்கம் ரோமியோ ஜூலியட்டில்.
Sleep Dwell upon Thine Eyes 
Peace in Thy  breast 
Would i were Sleep and Peace
So Sweet to Rest
தூங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு .

உனக்குள்ளே நிம்மதி முடிவுரை என்று ஆரம்பத்தில் அழகாக நிம்மதி குறித்து பக்கம் பக்கமாக எழுதி இருக்கிறார் .

         ஏழாம் பாகம்:
 சுகமான சிந்தனைகள் :
காலங் களே தருகின்றன அவையே பறிக்கின்றன.
 காலங் களே சிரிக்க செய்கின்றன  ;அவையே அழவும் வைக்கின்றன .
காலம் பார்த்து காரியம் செய்தால் பூமியையே விலைக்கு வாங்கலாம். காலங்களிலேயே காரியங்களில் வெற்றி தோல்விகள் அடங்கியிருக்கின்றன.

 பத்து விதமான சுகமான சிந்தனைகளை பிட்டுப் பிட்டு வைக்கிறார் அத்தனையும் தூத்துக்குடி முத்துக்களாக ஜொலிக்கின்றன.

எட்டாம் பாகம் : பரலோக வாழ்க்கைக்கும் இகலோக வாழ்க்கைக்கும் இடையே உள்ள தராதம்மியங்களை குறிப்பிட்டு உலகத்துக்குச் சொல்லிவிட்டால் என் கடைசி காலம் பெருமைக்கு உரியதாக ஆகி விடாதா என்று போகம் குறித்தும் , ரோகம் குறித்தும்,யோகம் குறித்து இந்த எட்டாம் பாகத்தில் அழகாக எழுதுகிறார் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்.

    ஒன்பதாம் பாகத்தில் ,மனிதனின் மிகவும் குறைந்தபட்ச தேவை நிம்மதி,. அதை தெய்வத்திடம் இருந்து பெற்றுக் கொள்பவன் பெயர்தான் இந்து .
ஞானத்தை தேடி என்கிற தலைப்பில் சிறிது மவுனம் , உண்ணாவிரதம், இச்சாபத்தியம், குரு-சிஷ்ய பாவம் ,கடவுள் மனிதனாக ,சொர்க்கம் நரகம், புனர்ஜென்மம் ,கள்ளம் கபடம் வஞ்சகம், தெய்வத்தை அணுகும் முறை, எப்படி தெய்வத்தை வணங்கவேண்டும் என்று தெளிவாக குறிப்பிடுகிறார் ..
 

பாகம் 10 :
எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழ வேண்டும் என்று புத்தி சொல்லக் கூடிய யோகிதை எனக்கு உண்டு என்கிறார் கவிஞர் கண்ணதாசன் .

சாமி நீ !சாமி நீ !கடவுள் நீயே;
 தத்துவமசி ;தத்துவமசி ;நீயே  அஃதா ஆம் பூமியிலேயே நீ கடவுள் இல்லை என்று புகழ்வது நின்மனத்துள்ளே புகுந்த மாயை சாமி நீ ;அம்மா யை தன்னை நீக்கி சதாகாலம் சிவோஹ  மென்றுசாதிப்பாயே!   
          மகாகவி பாரதியார் .
இந்த பாகத்தில் ;பதில் இல்லாத கேள்வி, சேரிடம் அறிந்து சேர் ,பகுத்தறிவு, ஈஸ்வராலயம் ,பொய்யெல்லாம் வாழ்க்கை, சித்திரவதைகள் ,வாழ்க்கை என்பது வாழவே ,என்ற தலைப்புகளில் எழுதி முடிக்கிறார் .
 
விசையுறு பந்தினைப்போல் உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்றான் மகா கவி பாரதி.
 மனம் சொல்ல வேண்டுமாம். உடல் போக வேண்டும் .மனதை அடக்கி உடம்பை நன்றாக வைத்துக் கொள்ளுங்கள் என்று நான் அடிக்கடி சொல்கிறேன் காரணம் நான் அனுபவித்து சொல்கிறேன், என்கிறார் கவிஞர் கண்ணதாசன்.
 ****
எண்ணூறு பக்கங்களில் உள்ள அர்த்தமுள்ள இந்து மதத்தை 20 ஆயிரம் வார்த்தைகளில் சுருக்கி எழுத முடியுமா என்ன ?படித்துப் பாருங்கள் .
   கம்பன் சொன்னது போல கடல்மிசை,
மிசை  முன்வந்து நீரை நக்கி குடிப்பது போலத்தான் எனது இந்த சுருக்க உரை.
    

   போகாத வாசமில்லை 
   வைக்காத பாசம் இல்லை 
   செய்யாத மோசமில்லை 
   ஆசாபாசம் முற்ற உணர்வில் 
   பேசாமல் அர்த்தமுள்ள இந்துமதம் வாசி!!!!

    காதற்ற ஊசியும்
    வாராது காணுங்கள்
    கடைவழிக்கே....

நன்றி:
திரு கருணாமூர்த்தி 
வாசிப்பை நேசிப்போம் 
முகநூல்

24 ஜூலை, 2021

நூல்நயம் : உள்ளம் துறந்தவன் - சுஜாதா

"உள்ளம் துறந்தவன்."
 சுஜாதா எழுதியது .விசா பப்ளிகேஷன்ஸ் . முதல் பதிப்பு 2005 .மூன்றாம் பதிப்பு 2009 .விலை ரூபாய் 75 . மொத்த பக்கங்கள் 144.

        உள்ளம் துறந்தவன் கல்கி இதழில் தொடர்கதையாக வந்தது .படித்த நினைவு எனக்கு இல்லை .ஆனால் வாசகர்களின் பேராதரவைப் பெற்றது.
உள்ளம் துறந்தவனில் இதய மாற்று சிகிச்சை தொடர்பான செய்திகளில் கற்பனை எதுவும் இல்லை .மாற்றுவதற்கான சூழ்நிலையும் காதலும் அதைச் சார்ந்த இழப்ப்பும் தான் கதைக்கு வலுவூட்டுவது.
     அழகேசனின்  தாயைப் போல மன வலிமை படைத்த ஏழைகள் பலர் நம்மிடையே உள்ளனர்.
.
     மஞ்சரி கதாநாயகி ;அழகேசன் கதாநாயகன் . கதாநாயகனின் அறிமுகமும் கதாநாயகியின் அறிமுகமும் அவர்கள் இருவரின் பாத்திரத் செறிவும் வித்தியாசமாக உள்ளது..

     அழகேசனின் அறிவும் புத்திசாலித்தனமும் சூழலுக்கேற்ற பேச்சும் நகைச்சுவைத் தன்மையும் அறிவாற்றலும் திறம்பட செயல்படும் ஆசைப்படும் நிலைப்பாடு   எனது இளமைக்கால நண்பன் ஒருவனை நினைவு படுத்துவதாகவே இருக்கிறது .அவனுக்கு இன்னும் மரணம் வாய்க்கவில்லை என்றாலும் மனதில் நினைவு கொள்ளத்தக்க அளவிலே இரண்டும் ஒத்துப் போவதை என்னால் ஆச்சரியத்தோடு பார்க்க முடிகிறது.

       ராகவேந்தர் ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் .இந்தியாவிலேயே இரண்டாவது அல்லது மூன்றாவது பணக்காரர் .அவருக்கு இரண்டு பெண்களும் ஒரு வளர்ப்பு மகள் மஞ்சரியும் இருக்கின்றார்கள் .முதல் மாப்பிள்ளை அமெரிக்காவில்  இருதய சிகிச்சை நிபுணராக இருக்கிறார் .அவருக்கு இரண்டு பிள்ளைகள்.
     இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் கோயம்புத்தூரில் இருக்கிறார் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் .வேலை வெட்டி இல்லாமல் மாமனார் சொத்திலேயே காலங்கள் கழிப்பவர்.

      ராகவேந்தர் லண்டன் சென்ற பொழுது இருதயம் மிகவும் பாதிக்கப்பட்டது .அமெரிக்க மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது .

         இரண்டாவது மாப்பிள்ளை நாகரத்தினம் தனது மாமனாரின் தலைமைத்துவத்திற்கு வர ஆசைப்பட்டு காரியங்கள் செய்கிறான்.
        மஞ்சரி அழகேசன் காதலை அறிந்து கொண்டு அவர்களை பிரிக்கவும் , தனது மகனை மணம் முடிக்கவும் நினைக்கின்ற நாகரத்தினம் மாமனாருக்கு மாற்று இருதயம் தேவைப்படவே அழகேசனை விபத்தின் மூலமாக கொன்றுவிட்டு முதல் மாப்பிள்ளை பாலா மூலமாக அறுவைச் சிகிச்சை நடத்தப்படுகிறது .
       இவற்றை பின்னர் அறிந்து கொண்ட மஞ்சரி சதியை அம்பலப்படுத்தி எல்லோரையும் சிறைக்கு அனுப்புகிறார் .
       இறந்துவிட்ட அழகேசன் தாயாருக்கு பக்கபலமாக யாருக்கும் சொல்லாமல் கொள்ளாமல் மஞ்சரி போயிருக்கிறார் .
        தொலைக்காட்சியில் எல்லாரும் சிறை படுத்தப்பட்ட செய்தி கண்டு தனது வளர்ப்புத் தந்தையை காணச் செல்கிறாள் ;தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறாள் .
       இறுதியாக அழகேசன் இருதயம் ராகவேந்திராருக்கும்,கண்கள் வேறு ஒருவருக்கும், கல்லீரல் ஒருவருக்கும் சிறுநீரகம் இருவருக்கும் அளிக்கப்பட்டு எல்லோரிடமும் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

         கதை முடிவில் அழகேசன் அம்மா மிகவும் தைரியத்தோடு யாருமே நெருங்கமுடியாத மலை போல் இருந்த ராகவேந்திரரின் தொட்டுப் பார்க்கலாமா என்று கேட்கிறாள் .
         அவரும் சம்மதிக்கவே அவரின் இதயத்தை ,மார்பைத்தொட்டு பார்த்து மார்பில் சாய்ந்து மகனின் இதய ஓசையை கேட்டதாக கதை முடிகிறது.

####₹₹₹₹

           விஞ்ஞானபூர்வமாக மருத்துவ இயல் சம்பந்தமான அறிவியல் நுட்பத்தோடு கதை எழுதப்பட்டுள்ளது. கிரிமினல் சம்பந்தமாகவும் கதை சொல்கிறது.      
        புத்தகத்தைக் கையில் எடுத்தவுடன் கீழே வைக்க விடாமல் கதை நம்மை படிக்கச்  செய்கிறது. 

        உள்ளம் துறந்தவன் என்கிற தலைப்பு தான் எனக்கு ஒரு மாதிரியாக இருக்கிறது .உள்ளம் என்றால் இருதயம் ;எப்படி தொலைந்தவன் ஆவான். பறிக்கப்பட்டவன் தானே என்கிற எண்ணம் எனக்கு கதையைப் படிக்கும்போது ஓடிக்கொண்டு இருந்தது .எல்லாம் அறிந்த சுஜாதா சரியான தலைப்பு தான் வைத்திருப்பார் என்று சமாதானப்படுத்திக் கொண்டேன்.

          அழகேசன் இயற்றி நடித்த கொடி ஆலன் கூறுவதாக ஒரு வாக்கியம் வரும் .அதை நினைத்து நினைத்து சிந்திக்கவேண்டிய ஒரு வாக்கியம்,
 "I don't want to achieve immortality through my work .
I want to achieve immortality by living forever"

####
அழகேசன் உதித்த சில ஹைக்கூக்கள்.
1) கடற்கரையில் திரும்பிப் பார்த்தால் 
என் கால் பதிவுகளை
 காணவில்லை.

2)கோடை காலத்தில் 
குதிரை மணலில் இறங்கி
 ஆற்றை கடக்கிறது....