அலெக்சின் கைவண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அலெக்சின் கைவண்ணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

31 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-18: கைவண்ணம்-16

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் ஆங்கில இதழில் வெளியான ஒரு கவிதைக்காக  நண்பர்  அலெக்ஸ் வரைந்த படம்.  அனைவராலும் சிலாகிக்கப்பட்ட ஒரு படம்.  

29 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-17: கைவண்ணம்-15

நண்பர்  அலெக்ஸ்  வரைந்த மாமேதை டாக்டர் கென்ட் அவர்களது திருவுருவப்படம்.  நாங்கள் பெரிதும் போற்றும் ஹோமியோ மேதைகளில் ஒருவர் டாக்டர் கென்ட்.  அவரை ஹோமியோபதியின் தந்தை மாமேதை  டாக்டர் ஹானிமனுக்கு  அடுத்த இடத்தில்  வைத்துப் பெருமைப்படுவது ஹோமியோபதியர்களின் பழக்கம்.  காரைக்குடியில் கென்ட் விழா கொண்டாடியபோது அதற்காக அலெக்ஸ் வரைந்த படத்தின் 'அவுட்லைன்' இது.  முழுமையாக வரைந்த படம் கிடைக்காமல் போய்விட்டபடியால் இந்தக் கோட்டுச் சித்திரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

கென்ட் அவர்களது உலகப் புகழ் பெற்ற மருந்து காண் ஏடு (Repertory) ஹோமியோபதியின் உயிர் நாடி.  அது மட்டுமல்ல,  ஹோமியோபதித்துறையில் எத்தனையோ புதிய மருந்துகளை அறிமுகம் செய்து, அவற்றின் மூலம் இன்றும் பல உயிர்களைக் குணப்படுத்த, பல உயிர்களைக் காக்க அவர் செய்த சேவை மகத்தானது.  அவர் ஒரு ஒப்பற்ற ஹோமியோ ஆசான்.  அவரது மற்ற சிறந்த நூல்களான ஹோமியோபதி தத்துவத்தைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Philosophy),  ஹோமியோபதி மருந்துகளைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Materia Medica) ஆகியவை இன்றும் ஹோமியோபதியர்களால் பெரிதும் போற்றப்படுபவை.

ஹோமியோபதிக்காகவே  வாழ்ந்து,  மறைந்தவர் அவர்.  அவரை இங்கே நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  -  சூரி  

28 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-16: கைவண்ணம்-14

பிரபல  எழுத்தாளர்  கௌதம நீலாம்பரன்  அவர்கள்  நாங்கள் வருடாவருடம் நடத்தும் காரைக்குடி  புத்தகத் திருவிழாவில்  ஒரு வருடம், ஒரு நாள்  சிறப்பு  விருந்தினராக  வருகை புரிந்து, சிறப்புரையாற்றியும்,  எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  அப்போது நண்பர் அலெக்ஸ் வரைந்த ஓவியம் இது.  கௌதம நீலாம்பரன் அவர்கள் அதைப் பாராட்டி  "நன்றி - வாழ்க வளமுடன்" என்று எழுதி தன் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.  அந்தப் படம்தான் நாம் மேலே காண்பது.  

நினைவலைகள் பின்னே ஓடுகிறது;  அன்று புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவரை சிறப்புப் பேருந்தில் சென்னைக்கு வழியனுப்பக் காத்திருந்தபோது, நிறைய எண்ணங்களைப் பரிமாறிக்  கொண்டோம், குறிப்பாக ஆன்மீகச் சிந்தனைகளை. அப்போது அவர்,  "இவ்வளவு படித்திருக்கிறீர்கள், தெரிந்து வைத்திருக்கிறீர்கள்;   நீங்கள் ஏன் எழுதக் கூடாது" என்று என்னை எழுத ஊக்குவித்தார்.  அத்தோடு நில்லாமல் சென்னை திரும்பியபின் உற்சாகமூட்டிக் கடிதம் எழுதினார்.  'குங்குமச்சிமிழ்' என்ற இதழையும், இன்னொரு இதழையும் (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) அனுப்பினார்.  மேலும்  நாங்கள்  புத்தகப் பிரியர்களுக்கான  கையேடு ஒன்றை வெளியிட எண்ணியிருந்த தருணம் அது.  அதற்கு 'தமிழில் வரலாற்றுப்  புதினங்கள்'  பற்றி ஒரு கண்ணோட்டமாக எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.  அவர் உடனே அனுப்பி வைத்தார்.  ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்தக் கையேடு வராமலேயே போய்விட்டது.  அவருடைய நட்பை, அன்பைப் பற்றிக் கொள்ளாமல் நழுவ விட்டதை எண்ணி  இன்றும் வருந்துகிறேன் - சூரி 

26 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-15: கைவண்ணம்-13


ஒருமுறை  காரைக்குடி  கம்பன் மணிமண்டபத்தில் நடந்த  கம்பன் விழாவில்  கலந்துகொள்ள  முனைவர் அறிவொளி அவர்கள் வந்திருந்தார்.  என்னைப்போல், ஏன் நம்மில் பலரைப்போல், நண்பர் அலெக்சும்  முனைவர் அறிவொளி அவர்களது பரம ரசிகர். அறிவொளியவர்கள் பேச்சில் மயங்காதவர் யார் இருக்க முடியும்?   மேடையில் அவர் வீற்றிருக்க,  பார்வையாளர் வரிசையிலிருந்து நண்பர் அலெக்ஸ் அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மேலே உள்ள  அறிவொளி அவர்களின் படத்தை வரைந்து, பின்னர் அதை அவரிடம் காட்டி, அவரது  வாழ்த்துக்களையும் பெற்றார்.  "மிக அருளுடை வாழ்க" என்று அறிவொளியவர்கள் படத்திலேயே எழுதிக் கையொப்பமிட்டுள்ளதைக்    காணலாம்.  -  சூரி     

20 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-14: கைவண்ணம்-12

ஹோமியோ  மேதை  டாக்டர்  கான்ஸ்டன்டைன் ஹெரிங் அவர்களது  இந்தத் திருவுருவப் படம்    நண்பர்  அலெக்ஸ் அவர்களது கைவண்ணத்தில் உருவானது.    காரைக்குடி  ஹெல்த்  இன்ஸ்டிட்யூட்டில்  ஹெரிங் தினம் கொண்டாட்டத்திற்காக இதை அவர் உருவாக்கினார்.  வந்திருந்த ஹோமியோ அன்பர்கள்  அனைவருக்கும்  இப்படத்தின்  ஜெராக்ஸ்  பிரதி  ஒன்று வழங்கப்பட்டது.  விழாவில் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த்திருந்தன.  ஹோமியோபதியின்  தூண்களில் ஒருவர் என்று போற்றப்படும்  ஹெரிங் அவர்களது சாதனைகள்  கணக்கில் அடங்கா.  அவர்  ஆய்ந்தறிந்த  எத்தனையோ  மருந்துகளில் குறிப்பாக  லாக்கசிஸ்  என்ற  மருந்தைக் குறிப்பிடலாம்.  எண்ணிலடங்கா உயிர்களைக்  காத்த  அந்த  மருந்து  இன்றும் பலரைக்  காத்து வருகிறது.  தன் உயிரைப் பணயம் வைத்து  தென் அமெரிக்காவில்  வாழும்  சுருக்குக்கு  என்ற  மிகக் கொடிய விஷப்  பாம்பின்  விஷத்தை  ஹோமியோ முறைப்படி பக்குவம் செய்து அருந்தினார்.  அதனால் அவருக்கு  பல பாதிப்புகள் ஏற்பட்டது.  உதாரணமாக  வாழ்நாள் இறுதிவரை  காலர் வைத்த சட்டையை அவரால் அணியமுடியவில்லை.  ஆனால் அந்த மருந்து ஹோமியோபதி பக்குவத்தில்  பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காத்துள்ளது,  இன்றும்  காத்து வருகின்றது.  மேலும் நோய் குணமாவதை அறிவதற்கான விதிகளை அவர் கண்டறிந்தார்.  அந்த விதிகள் இன்றும் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது.  நோய்  குணமாவதின்  அறிகுறி, நோய்க் குறிகள் உள்ளிருந்து வெளியே வரும், முக்கிய உறுப்புகளிலிருந்து குறைந்த முக்கியம் வாய்ந்த உறுப்புகளுக்கு மாறும், உடம்பின் மேல் பகுதியிலிருந்து கீழ் நோக்கி  நோய்க்குறிகள் மாறும்.  இவை அனைத்தும்  நோயாளி  நோயிலிருந்து விடுபட ஆரம்பித்துவிட்டார் என்பதனை உறுதி செய்கின்றன. 

அந்த ஹெரிங் விழாவில் கலந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.   அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன, என்றும் இருக்கும்  -  சூரி    

27 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-8: கைவண்ணம்-6



வடிவமைப்புச்  சேவல் 

வடிவமைப்பைப்  பார்த்தால்  வாய்ப்பில்லை  சேவலுக்கு 
வடிவமில்லையேல்  வாய்ப்புண்டு  சேவலுக்கு.

26 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-7: கைவண்ணம்-5







அன்னம்  - முத்திரைகூட  சித்திரமாகலாம்!

எண்ணத்தில்  எழுந்த  அன்னம்  கை
வண்ணத்தில்   வந்ததென்ன!

25 ஜூன், 2010

அலெக்ஸ் பக்கம்-6: கைவண்ணம்-4:



அழகான மயிலிது! அதன் வாயில்  அரவமோ  ஆடுது!!
(ஒரு பழைய திருமண அழைப்பிதழ் கவரின் மேல் ஒரு சில நொடிகளில் ஒரு படத்தை  உருவாக்கிவிட்டார்!)