31 மார்., 2010

நலக்குறிப்புகள்-43: சிறுகீரை

சிறுநீரகக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது சிறுகீரை. தினமும் ஆகாரத்தில் சேர்த்து வந்தால் தாராளமாக நீர் பிரியும். ஆனால் நாட்டு மருந்து சாப்பிட்டு பத்தியம் இருப்பவர்கள் இதை விலக்க வேண்டும். ஏனெனில் இக்கீரை மருந்தின் செயல்பாட்டை முறித்துவிடும்.

யோக சித்தி-16 : வழிபாடு-1:

நேசம் பதிந்துள்ளே நின்றுருகி, நெஞ்சாரப்
பேசினாற் பேசும் பிரான்.

உள்ளத்தில் அன்புறவு நன்றாக ஊன்றிப் பதிந்து, ஆங்கே நிலைத்து, இடைவிடாமல் மனங் கசிந்துருகி, நெஞ்சாரத் தனது ஆர்வங்களைக் கூறி முறையிட்டால், 'இதோ இருக்கிறேன்! அருளுகிறேன்!' என்று அந்தர்யாமியான இறைவன் பேசுவான்.

30 மார்., 2010

காரைக்குடி கம்பன் விழா 2010 - மூன்றாம் நாள்

கம்பன் மண்டபத்தில் நடைபெற இருக்கின்ற சித்திரைப் பொருட்காட்சியில், மதுரை இராமகிருஷ்ணா மடத்திற்கு ஒரு ஸ்டால் பதிவு செய்வதற்காக, காரைக்குடி தொழில் வணிகக் கழகத் தலைவரான திரு முத்து பழனியப்பன் அவர்களைக் கண்டு பேசுவதற்காக நேற்று மாலை கம்பன் மணிமண்டபம் சென்றிருந்தேன். அந்த வேலை முடித்து, கம்பன் மண்டபத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் ஒரு பகுதியைக் கண்ணுற்றேன்.

மாலை ஐந்தரை மணி முதல் திருமதி இளம்பிறை மணிமாறன் அவர்கள் தலைமையில் பட்டி மன்றம் நடந்து கொண்டிருந்தது. இதில் ஒரு சிறப்பு பேச்சாளர்கள் அனைவரும் மகளிர் என்பதுதான். பட்டி மன்றத் தலைப்பு: 'தருமநெறி நின்ற தம்பியரில் தலை நின்றவர்'. கும்பகருணனே என்று திருமதி ருக்மணி பன்னீர்செல்வமும், திருமதி சித்திரா சுப்ரமணியமும் பேசினர். வீடணனே என்று திருமதி விசாலாட்சி சுப்ரமணியமும், திருமதி கவிதா ஜவகரும் பேசினர்.

பொதுவாக எனக்குப் பட்டிமன்றங்களில் ஈடுபாடு இல்லை. ஆனால் நிகழ்ச்சிக்குச் சென்றதால் ஒரு முக்கிய தகவலைத் தெரிந்துகொண்டேன். விழா அமைப்பாளரான திரு பழ.பழனியப்பன் அவர்கள் முயற்சியால், கம்பன் மணி மண்டபத்தில் மாதம் ஒரு கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதில் இரண்டு சிறப்புப் பேச்சாளர்கள் பேசுவர். கலந்துகொள்ள விரும்புவோர் தங்கள் பெயர், முகவரி, மற்றும் மொபைல் நம்பரை வாசலில் வைத்திருந்த ஏட்டில் பதிவு செய்யும்படி ஏற்பாடாகியிருந்தது. நானும் பதிவு செய்துகொண்டேன். எஸ்.எம்.எஸ். மூலம் கூட்டங்கள் பற்றிய தகவல்களும், அழைப்பும் பதிவு செய்துகொண்ட அனைவருக்கும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளனர். இனிய செய்தி இது!

வாசலில் போடப்பட்டிருந்த புத்தகக் கடையில், தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய, "அன்பின் மொழி" என்ற கண்கவர் வண்ணப்படங்கள் கொண்ட, அன்னை தெரசாவின் சிந்தனைகள் அடங்கிய அழகிய குறுநூலையும், தமிழருவி மணியன் அவர்கள் எழுதிய "ஊருக்கு நல்லது சொல்வேன்!" என்ற நூலையும் வாங்கினேன். இரண்டாவது நூல் ஒரு விகடன் பிரசுரம். ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகளாக வெளிவந்து, அனைவரையும் கவர்ந்த கட்டுரைகள், தொகுக்கப்பட்டு, நேர்த்தியான கட்டமைப்பில் வெளிவந்துள்ளது.

நிகழ்ச்சியில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.

இன்றைய சிந்தனைக்கு-97:

ஒவ்வொரு தனிமனிதனும் ஒவ்வொரு விதத்தில் அபாரமானவன். பிரம்மாண்ட சக்தி கொண்டவன். அவன் வளர்ச்சியைப் பற்றி அவன் உண்மையான அக்கறை கொண்டாலே போதும். அவன் எதிர்பார்க்கும் மாற்றங்கள் சுற்றிலும் நிகழும்.

- சத்குரு ஜக்கி வாசுதேவ்

இன்று ஒரு தகவல்-25: திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் படங்கள்

உலகப் புகழ் பெற்ற டிஸ்னி சேனல் இளைய தலைமுறையினருக்காக, உலகப் பொதுமறையான திருக்குறளில் கூறப்பட்டுள்ள மேன்மையான கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு, முப்பரிமாண கார்ட்டூன் படங்களை உருவாக்கி ஏப்ரல் ஐந்தாம் நாள் முதல் வெளியிடவிருக்கிறது. கதைகள் அனைத்துமே சீரிய, அனைவருக்கும் பொதுவான கருத்துகள், படிப்பினைகள் அடங்கியனவாக இருக்கும்.

நன்றி: தி ஹிந்து, ஆங்கில நாளிதழ், திருச்சி, மார்ச் 27, 2010.

நலக்குறிப்புகள்-42: தண்டுக்கீரை

தண்டுக்கீரை கொழுப்பைக் குறைக்கும் ஆற்றலுள்ளது. உடல் மெலிய விரும்புவோர், வாரம் ஒரு முறை தண்டுக்கீரை சாப்பிடலாம். ஆனால் தினமும் சாப்பிட்டால் கைகால் சோர்வை உண்டாக்கிவிடும்.

யோக சித்தி-15: அருள் விளக்கம்-5:

நானென்னு மாயை நலிய நலியஉனைத்
தான்கொண்டு போற்றும் அருட்டாய்.

நான் என்று இறுமாக்கும் ஆணவமாயை தேயத் தேய, தெய்வத் திருவருள் அன்னை உன்னைக் கைக்கொண்டு காத்துப் பரிபக்குவப் படுத்துவாள்.

29 மார்., 2010

காரைக்குடி கம்பன் விழா 2010 - இரண்டாம் நாள்

காரைக்குடிக்கு பெருமை சேர்க்கும் பலவற்றில் முக்கியமானது கம்பன் விழா. கம்பன் அடிப்பொடி, திரு சா.கணேசன் அவர்கள் துவக்கிவைத்த இந்த விழா தொடர்ந்து சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்தாண்டு மார்ச் இருபத்து ஏழாம் நாள், சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் விழா துவங்கியது. விழாவிற்கு கவிக்கோ அப்துல் ரகுமான் தலைமை தாங்கினார். விழாவின் சிறப்பு அம்சமாக திரு பழ.பழனியப்பன் அவர்கள் எழுதிய கம்பராமாயண உரை - யுத்த காண்டத்தின் நான்கு தொகுதிகள் புதுச்சேரி கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு வி.பி.சிவக்கொழுந்து அவர்களால் வெளியிடப்பட்டது. நான் நண்பரின் மணிவிழாவிற்காக ஸ்ரீரங்கம் சென்றிருந்ததால் முதல் நாள் நிகழ்ச்சியைக் காண இயலவில்லை.

இரண்டாம் நாள் நிகழ்ச்சி, கம்பன் மணிமண்டபத்தில் மார்ச் இருபத்து எட்டாம் நாள், ஞாயிறன்று மாலை 5.30 மணிக்குத் துவங்கியது. நானும், அரவிந்தும் கம்பன் மணிமண்டபம் சென்றபோது விழா ஆரம்பித்து, தலைவர் உரை முடிந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த, பேராசிரியர் சத்தியசீலன் அவர்களது உரையைக் கேட்க இயலாததற்கு பெரிதும் வருந்தினேன். திரு தி.அருணாச்சலம் அவர்கள் எழுதிய "உவமை சொல்வதில் உவமையிலாக் கம்பன்' என்ற நூலும், திரு அ.அறிவுநம்பி அவர்கள் எழுதிய 'செம்மொழி இலக்கியச் சிந்தனைகள்' நூல் வெளியீடும் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நூல்களை அருப்புக்கோட்டை கம்பன் கழகத் தலைவர், திரு டி.ஆர்.தினகரன் அவர்கள் வெளியிட்டார்.

இரண்டாம் நாளின் பொதுத் தலைப்பு "கம்பனில் கணியன்". பேராசிரியர் சத்தியசீலன் தலைமையுரையில் கணியனையும், கம்பனையும் பற்றி என்ன பேசினார் என்பது தெரியாமல் போய்விட்டது.

அடுத்து "தீதும் நன்றும்" என்ற தலைப்பில் முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் ஆற்றிய சிறப்புரையைக் கேட்டு மகிழ்ந்தோம். இவர் புதுச்சேரி பலகலைக்கழகத்தில் கம்பன் இருக்கை பேராசிரியராக பணிபுரிபவர். இச்சிறப்புரையில் நான் புரிந்துகொண்டது, என் மனதில் தாங்கிய மையக் கருத்து:

சங்ககாலப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் "யாதும் ஊரே, யாவரும் கேளிர், தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற அற்புதமான பாடலிலிருந்து இத்தலைப்பு பெறப்பட்டது.

பட்டாபிஷேகம் சூட்டிக்கொள் என்றபோது எப்படி இருந்தானோ, பதினான்கு ஆண்டுகள் வனவாசம் என்றபோதும் அப்படியே இருந்தான் இராமபிரான். அவனது சமநோக்கு, அவனது புரிதலின் அடிப்படையில் உருவானது. தீதும் நன்றும் பிறர் தர வாரா. அவை இரண்டுமே நம் மும்மை, அல்லது இம்மை வினைப்பயன்களால் வருபவை. எனவே எய்தவன் இருக்க அம்பை நோவது போல மற்றவர்தான் காரணம் என்றெண்ணி அவர் மேல் சினம் கொள்வதோ, பகை கொள்வதோ சரியல்ல. இராமபிரானுக்கு முற்றிலும் மாறாக இலக்குவன் பெருஞ்சினம் கொண்டு, கைகேயியை அழிக்கிறேன், பரதனை ஒழிக்கிறேன் என்று சூழுரைக்கிறான். இராமபிரான் அவனுக்கு இது ஊழ்வினையின் பயன் என்பதைப் புரியவைக்கிறார். இந்த சீரிய கருத்தை நாம் மனதிற் கொண்டால், நல்லவை, தீயவை இரண்டையும் வினையின் பயன் என்று புரிந்துகொண்டால், வாழ்வில் எது நடந்தாலும் அதை கலங்காமல், எதிர்கொள்ளும் பக்குவம் நமக்கு அமையும்.

கணியன் பூங்குன்றனாரின் ஒப்பற்ற இக்கவிதை பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது; இக்கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு லண்டன் மாநகர மெட்ரோ ரயில் நிலையத்தில் எழுதி வைக்கப்பட்டுள்ளதாக எங்கோ படித்தது நினைவிற்கு வந்தது.

விழா நுழைவாயிலில் வழக்கம்போல் புத்தகங்கள் கடை விரிக்கப்பட்டிருந்தன. மேலும் பாடல்கள், இலக்கியச் சொற்பொழிவுகள் அடங்கிய CD-கள் மற்றும் DVD-களும் விற்பனைக்கு வைத்திருந்தார்கள். குறிப்பாக திரு பழ.பழனியப்பன் அவர்கள் எழுதிய கம்பராமாயண உரைநூல் - ஒன்பது தொகுதிகளாக சிறப்பு விலைகுறைப்பில் ரூபாய் இரண்டாயிரத்து எழுநூறுக்கு விற்கப்பட்டது. மற்ற நாட்களில் விலை ரூபாய் மூவாயிரத்து நானூறு.

நான் திரு நெல்லை கண்ணன் அவர்களது சிறப்புச் சொற்பொழிவுகள் அடங்கிய மூன்று CD-களும், திரு தமிழருவி மணியன் அவர்கள் சிறப்புச் சொற்பொழிவுகள் அடங்கிய மூன்று CD-களும், எனது துணைவியாருக்காக அவருக்குப் பிடித்த திருச்சி லோகநாதன், ஏ.எம்.ராஜா பாடிய பாடல்கள் அடங்கிய 1000 பழைய பாடல்கள் அடங்கிய DVD ஒன்றையும் வாங்கினேன்.

நிகழ்ச்சியில் சில நிழற்படங்களும் எடுத்தேன். அவற்றில் சிலவற்றை மேலே தந்துள்ளேன்.

இறுதிவரை இருந்து முழு நிகழ்ச்சிகளையும் காண இயலவில்லை. வேறு வேலை இருந்தபடியால் மனமின்றி முன்னதாகக் கிளம்பிவிட்டேன்.

நான் சென்ற பின்னர், நிகழ்ச்சி நிரல்படி, கவிச்சக்கரவர்த்தி கம்பனின் வாழ்க்கை வரலாறு பற்றிய குறும்படம் திரையிடப்பட்டது. புதுச்சேரி கம்பன் கழகம் வழங்கிய இக்குறும்படத்தை இயக்கியவர் திரு குணவதி மைந்தன்.

இரவு ஒன்பது மணிக்கு திருமதி கௌசல்யா சிவகுமார் அவர்கள் தம் இசைப்பேருரையில் "இராம நாடகம்" நடைபெற்றது.

நண்பர் கண்ணனது மணிவிழா:

சென்ற சனிக்கிழமை என்னுடன் பணிபுரிந்த நண்பர் திரு கண்ணன் அவர்களது மணிவிழா ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. சாதாரணமாக நான் கூடியவரை எல்லா விழாக்களையும் தவிர்த்துவிடுவேன். எனக்கு மிக நெருக்கமானவர்களது விழாக்களில் மட்டுமே கலந்துகொள்வேன். அலுவலகத்தில் ஒருவொருக்கொருவர் உறுதுணையாக, நட்பாகக் பழகியதை மறக்கமுடியாமல் ஸ்ரீரங்கம் சென்று அவரது மணிவிழாவில் கலந்துகொண்டேன்.

அங்கே பல அலுவலக நண்பர்களை நீண்ட நாட்களுக்குப்பின் கண்டு அளவளாவ முடிந்தது. குறிப்பாக, பல ஆண்டுகள் சந்திக்காத நண்பர், விஞ்ஞானி, முனைவர் எம்.ஹரிஹரன் அவர்களைக் காணமுடிந்தது.

காலை ரயிலில் சென்று மாலை ரயிலில் திரும்பியதால் படிப்பதற்கு நிறைய நேரம் கிடைத்தது. ரயிலிலும் சரி, திருச்சி ரயில் நிலை ஏ.சி. வெயிட்டிங் ஹாலிலும் சரி நிறையப் படித்தேன். ஏனோ நான் வீட்டில் இருக்கும்போது இந்த அளவில் பாதி கூட படிக்க முடிவதில்லை. மொத்தத்தில் ஒரு மகிழ்ச்சியான பயணம், மகிழ்ச்சியான அனுபவம்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஸ்ரீரங்கம் கோபுரங்களை எனது கேமராவில் க்ளிக்கினேன். அப்பா, ஸ்ரீரங்கம் கோவிலைச் சுற்றி எத்தனை கோபுரங்கள்! ஸ்ரீரங்கத்தைப் பற்றி அதிகம் தெரியாதவர்களுக்கு: காவிரிக்கும், கொள்ளிடத்திற்கும் இடையில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம், பூலோக வைகுண்டம் எனப்படுகிறது. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட 108 திவ்விய தேசங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இது. ஒரே வருத்தம் கால அவகாசம் சரியாக இல்லாமையால் கோவிலுக்குள் சென்று, ஸ்ரீரங்கநாதரை தரிசிக்கம் பாக்கியம் இல்லாமல் போய்விட்டது. இருக்கட்டும், அடுத்தமுறை கவனமாகத் திட்டமிட்டு கண்டிப்பாக தரிசனம் பெறவேண்டும்.

இந்த விழாவில் எடுத்த சில படங்களை மேலே பதிவு செய்துள்ளேன்.

கண்ணன் தம்பதிகள் சகல நலம் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்!

25 மார்., 2010

யோக சித்தி-14: அருள் விளக்கம்-4:

பிண்டத்தில் உள்ளான் பிரமாண்டத்திற் கோயில்
கொண்டுலவும் தெய்வமெனக் கொள்.

இறைவன் ஊன் பிண்டமாகிய இவ்வுடலில் உள்ளான். அவனே பிரம்மாண்டமாகிய உலகிலும் கோயில்கொண்டு திருவிளையாடல் புரியும் அருளிறைவன் என்று நம்புக!