ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 ஜன., 2025

ஜெயமோகன் : அ.முத்துலிங்கம்



ஜெயமோகன் 


சில வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகன் கனடா வந்திருந்தபோது நான் அவரை Juggernaut எனக் குறிப்பிட்டேன். பிரம்மாண்டமான, நிறுத்தமுடியாத விசை என்று பொருள். ஜெகந்நாதர் என்ற வார்த்தையிலிருந்து ஆங்கிலத்துக்குப் போன சொல் இது. பூரி ஜெகந்நாதருடைய ரத யாத்திரை 12-ஆம் நூற்றாண்டிலிருந்து பிரபலமானது. தேர் புறப்பட்டால் பெரும் விசையுடன் நிற்காமல் செல்லும். அதைக் குறித்துத்தான் அந்தச் சொல் உருவானது என ஆங்கில அகராதி சொல்கிறது.

ஆரம்பத்திலிருந்து ஜெயமோகனின் எழுத்து அப்படித்தான் இருக்கிறது. வெண்முரசு தொடங்கியபோது பலர் அந்த முயற்சி பாதியில் நின்றுவிடும் என்றே எதிர்பார்த்தார்கள். ஆனால் ரதம் நிற்கவில்லை. தொடர்ந்து 6 வருடம் 7 மாதங்கள் எழுதி, 26.000 பக்கங்களை எட்டிய  பின்னர், அனைத்துலகிலும்  படைக்கப்பட்ட ஆகப்பெரிய நாவலாக வெண்முரசு, நிறைவுக்கு வந்தது.  இந்த நீண்ட ஓட்டத்திற்குப் பின்னர் ஜெயமோகன் ஓய்வெடுப்பார் எனப் பலர் நினைத்தார்கள். ஆனால் தொடர்ந்து ஒரு நாளைக்கு ஒன்று, இரண்டு என நூறு சிறுகதைகள் எழுதினார். பின்னர் நாவல்கள், குறுநாவல்கள் என ஓயாமல் எழுதிய வண்ணமே இருக்கிறார்.

அவரை நான் அறிந்தது கடிதம் மூலம்தான்.  நான் அப்பொழுது ஆப்கானிஸ்தானில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கதை ஒன்று அந்த நாட்டின் பின்னணியில் இந்தியா டுடேயில் பிரசுரமானது. ஜெயமோகன் அதுபற்றி எழுதினார். அவருடைய கதைகள் வெளியானால் நான் அவருக்கு எழுதுவேன். ஒரு வித்தியாசம், அவருடைய கடிதம் நாலு பக்கத்துக்கு குறையாமல் இருக்கும். என்னுடையது அரைப் பக்கத்தை தாண்டாது. அவை ஆனந்தமான நாட்கள். அப்பொழுதுதான் மின்னஞ்சல் வசதி தமிழில் வந்திருந்தது. ஒரே கொண்டாட்டம். தமிழில் ‘இ’ எழுத்து வராது. ஆகவே அந்த எழுத்து வராத வார்த்தைகளாகப் பார்த்து ஒருவருக்கு ஒருவர் எழுதுவோம். எனக்கு பகல், அவருக்கு இரவு ஒரு மணி, இரண்டு மணியாக இருக்கும்.  அவர் எழுப்பிய ஒரு கேள்வி நினைவுக்கு வருகிறது. ‘கடைசியாக கூட்டுக்கு வரும் பறவை வென்றதா? தோற்றதா?’ இந்த விவாதம் தொடர்ந்தது. கடைசிவரை விடை கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் அருண்மொழி அவரிடம்  ’போய்த் தூங்குங்கள்’ என்று கடைசி எச்சரிக்கை விடுவார். அப்பொழுது ஜெயமோகனுக்கு வாசகர்கள் குறைவு. ஆகவே முழு ராச்சியத்தையும் நான் கைப்பற்றியிருந்தேன். ஒரு முறை கடிதத்தில் அவர் முழுச் சிறுகதை ஒன்றை எழுதி அனுப்பிவிட்டார். உண்மைக் கதை. தேவ கடாட்சம் என்ற ரவுடி பற்றியது.  அந்தக் கதை இன்றுவரை பிரசுரமாகவில்லை என்றே நினைக்கிறேன். 

வெண்முரசு கொடுத்த ஆச்சரியங்கள் கணக்கில் அடங்கா. வியாச மகாபாரதத்தில் 50 பக்கம் வரும் பகுதி, வெண்முரசில் 1000 பக்கங்களாக விரிந்திருக்கும். நூற்றுக்கணக்கான புது உவமைகள். ஓர் உவமை மீண்டும் பயன்படுத்தப்பட்டது கிடையாது. பல நூறு புதிய சொற்களும், சொல்தொடர்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. பிறவிநூல், தீச்சொல், அறப்புதல்வி, பிழையீடு, மொழிமீட்சி, நீராட்டறை, மணத்தன்னேற்பு என்று சொல்லிக்கொண்டே போகலாம். வியாசர் சொல்லாமல்விட்ட பல தகவல்கள் கிடைக்கின்றன. திருதராஷ்டிரன் என்ன உணவருந்தினான்? கோதுமை அப்பமும், பருப்பு மாமிசம் சேர்த்த கூட்டும். எப்படிப்பட்ட படைக்கலன்களை பயன்படுத்தினார்கள்? 12,000 அம்புகளை நொடியில் செலுத்தக்கூடிய பொறிவிற்கள் தயார் நிலையில் இருந்திருக்கின்றன.  இளமையிலேயே வளைத்துக் கட்டப்பட்டு வளர்ந்த மூங்கில் விற்கள்மேல் அமைக்கப்பட்ட வண்டிகள். சாலையில் சக்கரங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகள் வண்டியில் பயணிப்பவர்களை அடைவதேயில்லை. இப்படி பலவிதமான தொழில் நுட்ப உச்சங்களைப் பற்றிய விவரங்கள் வெண்முரசில் கிடைக்கின்றன.

நான் பாகிஸ்தானிலும் பின்னர் கென்யாவிலும் அவருடன் தொடர்பில் இருந்தேன்.  விஷ்ணுபுரம் வெளிவந்த பிறகு அவர் வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. முதல் 20 பக்கத்தை படித்துவிட்டு புத்தகத்தை கீழே வைத்துவிடுவேன். பிரமிப்பு தாங்கமுடியவில்லை. முடிந்துவிடுமோ எனப் பயந்துகொண்டு மெதுமெதுவாக வாசித்தேன். அற்புதமான நாவல் என்று கண்டுபிடித்த முதல் பத்து பேர்களில் நானும் ஒருவனாக இருப்பேன். கனடாவில் இருந்து கடிதம் எழுதினேன். அவர் ஒரு  கேள்வி கேட்டார் ’கென்யா முத்துலிங்கமும் நீங்களும் ஒருவரா?’ என்று. ’ஓம்’ என்றேன். பின்னர் கனடாவுக்கு வந்தார். அவருடைய  முதல் வெளிநாட்டுப் பயணம் என்பதால் இருவருக்கும் மறக்கமுடியாத நாட்கள். நயாகரா அருவியையும்,  இலைகள் நிறம் மாறும் அதிசயத்தையும் பார்த்து சிறு குழந்தைபோல ரசித்தார். அப்பொழுது மீசை வைத்து இளம் நடிகர்போலவே இருப்பார். வெளிநாட்டவர்களுக்கு  அறிமுகம் செய்யும்பொது ’தமிழில் நோபல் பரிசு பெறப்போகும் எழுத்தாளர்’ என்று அப்போதே கூறினேன். அவர் வருகை ஞாபகமாக தபால் தலை ஒன்று வெளியிட்டு அதை ஒட்டி பல கடிதங்களை இந்தியாவுக்கும் வெளிநாட்டு நண்பர்களுக்கும் அனுப்பிவைத்தோம்.

மாபெரும் படைப்பான  வெண்முரசின் ஆரம்பத்திலும் நிறைவிலும் எனக்கு ஒரு தொடர்பு உண்டு. 2013 டிசெம்பரில் வெண்முரசு  அறிவித்தல் வந்தபோது நான் ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினேன். ’இது நியாயமா? இதை முடிக்கும்போது நான் உயிருடன் இருப்பேனா தெரியாது.’  ஆறு வருடம் 7 மாதம் தொடர்ந்து எழுதினார். கடைசி அத்தியாயம் எழுதி அவர் ஓய்ந்த நாள் 13 ஜுலை 2020.  தொலைபேசியில் அவரை அழைத்து வாழ்த்தினேன். அன்றுதான் கண்ணன் பிள்ளைத் தமிழ் எழுதி வெண்முரசை அழகான நிறைவுக்கு கொண்டுவந்திருந்தார். அவர் மனதிலே பூரண திருப்தியும் அமைதியும் நிலவிய நேரம். 

வியாசர் பாரதம் சொல்லச் சொல்ல, விநாயகர் ஒரு தந்தத்தை முறித்து கையை எடுக்காமல் மேரு மலையில் எழுதினார் என்பது ஐதீகம். நாளுக்கு  ஒரு அத்தியாயம் என்ற முறையில் நிறுத்தாமல் எழுதி முடித்தது சாதனை இல்லாமல் வேறு என்ன?  அது மாத்திரமல்ல, வியாச பாரதத்தை நீட்டியும் அகலித்தும் ஆழமாக்கியும் எழுதப்பட்டது இது. பல மடங்கு பெரியது. வியாசரே பிரமித்துப் போகும் அளவுக்கு புதிய தகவல்களைக்  கொண்டது. 

இதிலே உள்ள அற்புதம் என நான் நினைப்பது முன்னரே அறிவித்துவிட்டு விண்கலம்  அனுப்புவதுபோல 10,000 வாசகர்கள் வாசித்து அதன் பாதையை தொடர தினமும் எழுதி பதிவிட்டதுதான்.  கம்பருக்கோ, வால்மீகிக்கோ, வியாசருக்கோ எழுதியதை மீண்டும் சரிபார்த்து  திருத்தும் வாய்ப்பு  இருந்தது.  இங்கே அது கிடையாது. எழுதியது எழுதியதுதான். முன்னர் எழுதியதை  பின்னர் புத்தகமாக்குவதுதான் மரபு. இது புத்தகமாகவே எழுதப்பட்டது. முன்னுக்குப் பின் முரண் இல்லை. அசுர சாதனை,  மனிதப் பிரயத்தனத்துக்கு அப்பால்பட்டது என்றுதான் சொல்லவேண்டும்.

கனடாவில் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் அலிஸ் மன்றோவை நான் நேர்காணல் செய்திருக்கிறேன். இவரை சிறுகதைகளின் அரசி என்று சொல்வார்கள். நாவல்களுக்கு நோபல் பரிசு கொடுப்பார்கள், ஆனால் சிறுகதைகள் மட்டுமே எழுதி நோபல் பரிசு பெற்ற ஒரே எழுத்தாளர் இவர்தான். ஒரு சிறுகதை எழுத 6 – 8 வாரங்கள் எடுப்பதாக இவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். ஒருமுறை ஆறுமாதம் தொடர்ந்து எழுதிய சிறுகதை ஒன்றை அப்படியே தூக்கி வீசிவிட்டார். அதனுடைய அடிநாதம் சரியாக அமையவில்லையாம்.  சில சிறுகதைகளை முடிக்க முடியாமல் துண்டு துண்டாக வெட்டி வேறு சிறுகதைகளுக்கு பயன்படுத்தியிருக்கிறார். ’சிறுகதை அரசி’ 15 தடவைகளுக்கு மேல்  தன் படைப்பை  திருத்தியிருக்கிறார். இந்தப் பின்னணியில் பார்த்தால் நாளுக்கு ஒன்று என தொடர்ந்து 100 சிறுகதைகள் படைத்த ஜெயமோகனுடைய  சாதனையை எதனுடன் ஒப்பிடுவது?  இவருடைய சிறுகதைகள் சாதாரணமானவை அல்ல. அவை எல்லாமே உலகத் தரத்தை மேலும் ஒரு படி உயர்த்தக்கூடியவைதான்.

இங்கேதான் நாம் பாரதி சொன்னதை நினைத்துப் பார்க்கவேண்டும். ‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை இல்லை; திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.’  பாரதிக்கு  இருந்த பெரும் ஆதங்கம் இதுதான். அவருடைய எழுத்து வெளி உலகத்திற்குப் போய்ச் சேரவில்லை. புதுமைப்பித்தனின் படைப்புகளை உலகம் அறியவில்லை. அதற்கான முயற்சிகளையும் பெரிதாக ஒருவரும் முன்னெடுக்கவில்லை என்பதுதான் துயரமான உண்மை.

700 வருடங்களாக கல்கத்தா நூலகம் ஒன்றில் கவனிப்பாரற்றுக் கிடந்த பாரசீக கவிதைப் புத்தகம் ஒன்றை எட்வார்டு ஃபிட்ஸ்ஜெரால்டு என்பவர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். இன்று உமர் கயாம் உலகம் முழுக்க கொண்டாப்படுவதற்கான காரணம் அந்த மொழிபெயர்ப்புத்தான். இஸ்மெயில் காதரே எனும் அல்பேனிய எழுத்தாளர் அந்த மொழியில் ஒரு நாவல் எழுதினார். அல்பேனிய  மொழி பேசுவோர் உலகத்தில் முப்பது லட்சம் மக்கள்தான். நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க ஆள் கிடைக்கவில்லை. ஆகவே  நாவலை முதலில் பிரெஞ்சில் மொழிபெயர்த்து பின்னர் ஆங்கிலத்தில் மொழிமாற்றினார்கள்.  அந்த நூலுக்கு சர்வதேச புக்கர் விருது வழங்கப்பட்டது. நோபல் விருதுக்கு அடுத்தபடியாகக் கொண்டாடப்படும் விருது அது.

ஜெயமோகன் இனி என்ன செய்யவேண்டும் என்று பலரும் பல கருத்துக்களை சொல்கிறார்கள்; விவாதிக்கிறார்கள்.  அவர் பல தலைமுறை வேலையை செய்துவிட்டார். 10 பேராசிரியர்கள், 20 எழுத்தாளர்கள், 30  பல்கலைக்கழகங்கள் செய்ய வேண்டிய பணியை அவர் தனியொருவராக  செய்து முடித்திருக்கிறார்.  பாரதியார் சொன்னார் திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கம் செய்தல் வேண்டும் என்று. இன்னமும் உலகம்  இலியட்டையும், ஒடிசியையும், ஏனிட்டையும், சேக்ஸ்பியரையும் கொண்டாடுகிறது. ஜெயமோகனின் படைப்புகளுக்கு முன்னர் இவை எல்லாம் மங்கிப்போய் நிற்கின்றன. இவருடைய படைப்புகளை வெளிநாட்டோர் கொண்டாடவேண்டிய நாள் வரவேண்டும். அப்பொழுதுதான் தமிழுக்கு வெற்றி.  

’வில்லாளரை எண்ணில் விரற்கு முன் நிற்கும் வீரன்’ என்று இந்திரஜித்தை கம்பர் வர்ணிக்கிறார். ஒன்று, இரண்டு, மூன்று என விரல்களை எண்ணும்போது வரும் முதலாவது என்ற அர்த்தமில்லை. விரற்கு முன் நிற்பவர், அதாவது ஒன்று, இரண்டு என எண்ணத் தொடங்கு முன்பே நிற்பவர் ஜெயமோகன்.  உலகப் படைப்பாளிகளில்  விரற்கு முன் நிற்பவர்.

பிரம்மாண்டமான நிறுத்த முடியாத விசையாக ஜெயமோகன் தமிழுக்கு கிடைத்திருப்பது பெரும் வரம். உலக மகா படைப்பான வெண்முரசை நிறைவேற்றிய பின்னரும் தொடர்ந்து எழுதியபடியே இருக்கிறார்.  எத்தனை விசையோடும் வீச்சோடும் எழுதியும் என்ன பிரயோசனம்? அவருக்கு மலர் வெளியிடுவதோடு கடமை முடிந்ததா? அவரது படைப்புகளை வெளியுலகத்துக்கு எடுத்துச் செல்லவேண்டிய கடமை உள்ளது. வேறு யாரும் செய்யப் போவதில்லை; நாம்தான் செய்ய வேண்டும். அது நாம் தமிழுக்கு செய்யும் சேவை அல்ல; உலகத்துக்கு செய்யும் தொண்டு. 

***

அ. முத்துலிங்கம் – தமிழ் விக்கி பக்கம்



11 நவ., 2021

நூல் நயம் : இந்திய ஞானம் - ஜெயமோகன்


இந்திய சிந்தனைகளின் தொகுப்பே இந்திய ஞான மரபாகும் மற்றும் அது பன்முகத்தமை கொண்ட polytheism மரபாகும். எந்த ஒரு சமூகத்தின் தொல் பிரதி தொடக்கம் என்பது நாட்டார் பண்பாடாகத்தான் இருக்கும் அதில் இருந்துதான் இலக்கியம் மற்றும் கவிதைத்தன்மை கொண்ட செவ்வியல் இலக்கியங்கள் உருவாகும். அடுத்த படிநிலையில் செவ்வியல் இலக்கியங்கள் மூலம் உருவான கருத்துக்கள் தர்க்கரீதியான விவாததிற்கு உட்பட்டு அவை தத்துவமாக தொகுக்கப்படும். இதன் அடுத்தபடிநிலையில் அந்த தத்துவம் பிற அறிவு துறைகளில் விரிவடைந்து தரிசனமாகிறது. அந்த தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து ஒரு கட்டத்தில் பெரு மதங்களாகிறது. இதன் முறையே,

நாட்டார் பண்பாடு -> செவ்வியல் இலக்கியங்கள் -> தத்துவங்கள் -> தரிசனங்கள் -> மதங்கள்

இதே முறையிலே தான் பழமைவாய்ந்த  இந்திய, கிரேக்க மற்றும் சீனா நாகரிகங்கள் வளர்ந்து வந்துள்ளது. இந்த முறையில் இந்து ஞான மரபை வகுத்துக்கொண்டாள். அதிலிருந்து இந்திய ஞான மரபை புரிந்து கொள்ளலாம். இதன் அடிப்படையில் இந்து ஞான மரபை பின்வருமாறு வகுத்துக்கொள்ளலாம்,

இந்து ஞான மரபு

1. வேதங்கள் (நாட்டார் பண்பாடு + செவ்வியல் இலக்கியங்கம்)

2. மூன்று தத்துவங்கள்
(பிரஸ்தான திரயம்) - கீதை, உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம்.

3. ஆறு தரிசனங்கள் - சாங்கியம், யோகம், நியாயம், வைஷேடிகம், பூர்வமீமாம்சம், உத்தர மீமாம்சம்.

4. ஆறு மதங்கள் - சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம்

இந்திய ஞான மரபில் வேதம் மற்றும் தரிசனங்களுடன் விவாதித்தே அவைதிக மதங்களான ஆசீவகம், சமணம் மற்றும் பௌத்தம் மதங்கள் உருவாகின. அதேபோன்று நாடோடி வாழ்க்கை கொண்ட சித்தர் மற்றும் சூஃபி மரபுகள் இந்து ஞான தத்துவதுடன் விவாதித்தே உருவானவை.

இந்து ஞான மரபின் தொடக்கம் என்றால் அது வேதங்களே(குறிப்பாக ரிக் வேதமே) மற்றும் அவை பல இனக்குழுக்களின் சடங்குளையும் நம்பிக்கைகளையயும் கொண்டவையாகும். அவை நாட்டார் பண்பாட்டை கொண்ட இயற்கையை நோக்கிய எளிய பிரார்த்தனை பாடல்களையும் மற்றும் கவிதை தன்மை உடைய செவ்விய இலக்கியங்களை உடையவையாகும். அச்சமூகம் இயற்கையை இறையாக உருவகம் செய்து இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற சிறு தெய்வங்களை வழிபட்டனர். அதே சமயம் அவர்கள் இப்பிரஞ்சத்தில் நடப்பவற்றை எல்லாம் வியந்து கவிதைகளாக பாடினார். ஒரு கட்டத்தில் அந்த பிரபஞ்ச வியப்பு சக்தியை பிரம்மம் என்று ஒலித்தனர். அதிலிருந்து பிரபஞ்ச ரகசியத்தை அறியும் பிரம்மத்தை நோக்கி நகர ஆரம்பித்தன. இதுவே வேதம் மற்றும் இந்து ஞான மரபின் உச்சம் எனப்படுகிறது. இதிலிருந்தே இந்து ஞான மரபின் அனைத்து தத்துவங்களும் பிரபஞ்சத்தை பற்றி அறியும் பிரம்மத்தை நோக்கி உருவாக ஆரம்பித்தது.

வேதங்களின் ஞான தரப்புகளை கர்ம காண்டம் ஞான காண்டம் என்று இருதரப்புகளாக பிரிக்கலாம். அதில் கர்ம காண்டம் என்பது சடங்குகள், வேள்விகள் மற்றும் ஆச்சாரங்களை முன்னிறுத்துபவை. ஞான காண்டம் என்பது தூய அறிவு தேடலை முன்வைப்பது. இந்த ஞான தேடலின் தொடர்ச்சியே உபநிஷங்கள், பிரம்ம சூத்திரம், வேதாந்தம் மற்றும் ஆறு தரிசனங்களாகும்.

"பிரபஞ்சத்தின் சாரம்", "பிரம்மத்தில் இருந்தது உருவானது பிரபஞ்சம்", "பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமே பிரம்மம்", "பிரபஞ்சமே பிரம்மம்", "நானே பிரம்மம்", "நீயே பிரம்மம்" என்று பல தன்மைகளில் பிரம்மத்தை மையமாக வைத்து விவாதிக்க ஆரம்பித்தன ஞான தத்துவங்கள். இந்த பிரம்ம(பிரபஞ்ச) தேடலே இந்து ஞானத்தின் மைய தேடல் என்று வைத்து கொள்ளலாம். இதன் சாரம் என்னவென்றால் இப்பிரபஞ்ச தோற்றத்தை எப்படி வகுத்து கொள்ளவது என்பதேயாகும்.

உபநிஷங்கள் பிரம்மத்தை தத்துவர்த்தரீதியில் விரிவாக விவாதித்து அதை அடைவதற்கான வழிகளை முன்வைத்தன. உபநிஷங்கள் பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே முன்வைக்கின்றது அதேசமயம் அவை வேதங்களின் கர்ம காண்டத்தை பெருமளவு எதிர்க்கின்றன. இதற்கடுத்து பிரம்ம சூத்திரமும் அதன் தொடர்ச்சியான பிற்கால வேதாந்தகளும் பிரம்மத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்கின்றன. குரு பாதராயணர் பிரம்ம சூத்திரத்தில் பிரம்மத்தில் இருந்துதான் பிரபஞ்சம் தோன்றியது என்கிறார். ஆனால் பின்னால் வந்த ஆதி சங்கரர் ஒருபடி மேல் சென்று பிரபஞ்சமே பிரம்மம் என்கிறார் தனது அத்வைத கோட்ப்பாட்டில். சங்கரரின் அத்வைதத்திற்கு அடுத்து விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் போன்ற பிரம்ம தத்துவங்கள் உருவாகின. இதில் சங்கரரின் அத்வைதமே அறிவு தளத்தில் சிறந்து விளங்குகின்றது.

தத்துவங்களுக்கு அடுத்து தரிசனங்கள் பிரபஞ்ச தோற்றத்தை தர்க்கரீதியில் வேதங்களுடன் விவாதிக்கின்றனா. குறிப்பாக சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக தரிசனங்கள் பிரபஞ்சம் பருப்பொருட்கள் மற்றும் அணுக்களால் ஆனது என முன்வைக்கின்றன. தரிசனங்களில் பூர்வமீமாம்சத்தை தவிர அனைத்து தரிசனங்களும் ஞான தேடலையே முன்வைக்கின்றன.

சமணம் மற்றும் பௌத்த தரிசனங்கள் வேதம் மற்றும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்து மதங்களாக உருவாகின.

தத்துவங்களும், தரிசனங்களும்  
உள்ளுணர்வால்  விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும். 

உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் உள்ளுணர்வால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன. ஞான மரபில் உள்ள  ஒவ்வொரு சமயத்தை அதன் வழிபாட்டை நீக்கிவிட்டால் அதன் சித்தாந்தம் வெளிபடும் மற்றும் அது மையமாக குறிப்பது பிரம்மம் அல்லது பிரபஞ்ச சக்தியையே.

இந்து சிந்தனை மரபில் மூல நூல்களை சுருதி, ஸ்மிருதி என இரண்டு வகையாக பிரிப்பதுண்டு. பிரபஞ்ச தரிசனங்களை முன்வைக்கும் நூல்கள் சுருதிகளாகும். வாழ்க்கை நெறிகளையும் சமூக சட்டங்களையும் வகுப்பவை ஸ்மிருதிகள் என்று பிரிக்கப்படுகிறது.

சுருதி மூல நூல்கள்
வேதங்கள்
உபநிஷங்கள்
பிரம்ம சூத்திரம்
ஆறு தரிசனங்கள் 

ஸ்மிருதி மூல நூல்கள் 
ஸ்ம்ருதி(மனு, யம, யாக்ஞவல்கிய போன்ற ஸ்மிருதிகள்)
நீதி நூல்கள்(விதுர நீதி, சாணக்கிய நீதி)
புராண நீதி நூல்கள்
சாஸ்திரங்கள்(அர்த்தசாஸ்திராம்)

ஸ்மிருதி மூல நூல்கள் என்பவை சமூக சூழல் மற்றும் காலத்திற்கு ஏற்ப மாறு படுபவை. இன்றைய காலகட்டத்தில் ஸ்மிருதி என்பது நமது அரசியல் அமைப்பு சட்டமே. மனு ஸ்மிருதிக்கு முன்பும் பின்பும் ஏகப்பட்ட ஸ்மிருதிகள் இருந்துள்ளன.

ஒரு சமூகம் தன்னைத் தொகுத்துக்கொள்ளவும் திறம்பட செயல்படவும் தனக்கு தானே உருவாக்கி கொண்ட நெறிமுறைகளும் நம்பிக்கைகளும்தான் நீதி எனப்படுகிறது. சிறிய இனக்குழுக்களை செயல் அல்லது தொழில் வழியாக பகுப்பது என்பது சாத்தியமானது(சதுர்வர்ணம்). 

ஆனால் ஒரு சமூகத்தில் பல்வேறு இனக்குழுக்களும் மற்றும் அச்சமூகத்தில் உபரி உற்பத்தி அதிகமாகி அங்கு மாபெரும் சாம்பிராஜ்யம் உருவாகும் போது அந்த அதிகார மையம் நிரந்தர பொருளாதார கட்டமைப்புக்கும், சமூகத்தை எளிய முறையில் தொகுத்து கொள்ளவும் பிறப்பின் அடிப்படையிலான வர்ணாசிரமத்தை முன்னெடுத்திருக்கும். மிகப்பெரிய ஆயுதமேந்திய அதிகார சூழலில் தான் மனுஸ்மிருதி போன்ற நீதி நூல்கள் உருவாகியிருக்கும் மற்றும் அந்த சமூகம் சதுர்வர்ணத்தில் இருந்து வர்ணாசிரமம் நோக்கி நகர்ந்திருக்கும் தன்னை தொகுத்து கொள்ள. மன்னராட்சி அல்லது monopoly ஆட்சி முறைகளில் உருவாகும் நீதி நூல்கள்/சட்ட நூல்கள் என்பவை சுரண்டலை மையாக வைத்து இயங்கும் அதிகார அமைப்பாகத்தான் அமையும். இதேபோல் உலகம் முழுவதும் அடிமைவுடைமை மற்றும் நிலவுடமை சமூகங்களில் இருந்த அதிகார சுரண்டல்களை மார்க்சிசம் பகுப்பாய்வு செய்து விவரித்துள்ளது. ஆக இந்த அதிகார சுரண்டல் என்பது இங்கு மட்டும் நிகழ்ந்தது அல்ல. இங்கு வர்ணத்தின் அடிப்படையில் ஆயுதம் ஏந்துபவர்கள் சத்திரியர்களே. எனவே அதிகார மையத்தில் இருந்த சத்திரியன்தான் சுரண்டல் மிக்க மனு ஸ்மிருதியை முன்மொழிய அதுவை வெறுமென தொகுத்தவர் வேண்டும் என்றால் பிராமணராக இருந்திருக்கலாம். ஆனால் இப்போது முன்மொழிந்தவரை விட்டுவிட்டு எழுத்து வடிவம் கொடுத்தவரை பழி சொல்லுகிறார்கள்.

வேதங்கள், தத்துவங்கள் எல்லாம் சமூகத்தில் உயர் அறிவுத்தளங்களில் இயங்குபவை. இந்த தத்துவங்களை எல்லாம் மக்களிடம் எளிய முறையில் கொண்டு சேர்ப்பதற்கு உருவாக்கப்பட்டவை புராணங்கள். அவை நீதி அல்லது தர்மம் சார்ந்தவற்றை பேசுபவையாகவும் அதன் பின்புலத்தில் தத்துவமும் இருக்கும். ஆனால் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அதன் தத்துவ சாராம்சம் இல்லாமல் புராணங்கள் மட்டும் கடத்தப்படுவதால் அது வெறும் கதைகளாக மட்டுமே பார்க்கப்படுகிறது.

தமிழ் பேரிலக்கியங்களான சங்க இலக்கியங்கள் மற்றும் திருக்குறளை இந்திய ஞான மரபில் எங்கே நிறுத்துவது?

சங்க இலக்கியத்தில் மிகவும் பழைய இலக்கிய பிரதிகள் என்று நம்பப்படுபவை நற்றிணை, புறநானூறு மற்றும் குறுந்தொகையாகும். இப்பிரதிகள் மூன்றுமே தூய செவ்வியல் இலக்கியங்கள் ஆகும். ஆனால் சங்க இலக்கிய காலகட்டத்தில் காப்பியங்கள், தத்துவங்கள் உருவாகவில்லை மற்றும் அவை எல்லாம் சங்கம் மருவிய காலத்திலே உருவாகின. சங்ககாலத்தில் தத்துவம்  மற்றும் பெரும் காப்பியங்கள் உருவாகாமல் போனதற்கு தத்துவ விவாதங்களும் மற்றும் விவாத சபைகளும் சீரான முறையில் நடைபெறவில்லை என்று நம்பப்படுகிறது. அவை எல்லாம் களப்பிரர்கள் காலத்திலே தொடங்கி,  காப்பியங்கள் உருவாக ஆரம்பித்தன.

திருக்குறளை இந்திய ஞான மரபு பின்னணியில் பார்க்க வேண்டும் என்றால், குறள் என்பது நீதி நெறிகளை வலியுறுத்தும் ஸ்மிருதியாகும். திருக்குறள் ஸ்மிருதி மனு போன்ற தீவிரம் இல்லாமல் இருப்பதற்கு காரணம். அது உருவான கால கட்டம் மற்றும் பெரிய சாம்பிராஜ்யத்தின் ஆளும் நீதி நூலக அல்லாமல் சிற்றரசுகள் ஆளும் பகுதிகளில் விவாத தளத்தில் உருவான நூலக இருக்கலாம். நீதி நூல்கள் எல்லாம் காலத்திற்கு ஏற்ப மறுபடுபவை மற்றும் அவற்றின் நீதி நெறிகள் என்பது எல்லா காலத்திற்கும் பொருந்தாது. 

சங்க இலக்கியம் மற்றும் திருக்குறளை தொடர்ந்து இந்திய ஞான மரபில் வேதாந்தத்துக்கு பெருமளவு பங்களித்தவர்கள் ஆதி சங்கரர், ராமானுஜர் மற்றும் மத்வாசாரியர் போன்ற தென்னகத்தவர்களே...

#இந்திய_ஞானம்

நன்றி :

திரு குருசாமி கிஷோர், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

25 அக்., 2021

நூல் நயம் : இந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் - ஜெயமோகன்


இந்து ஞான மரபு என்பது வெறும் இறை வழிபாட்டையும் சடங்குகளையும் மட்டும் கொண்டதல்ல அவை பல தத்துவங்களையும் தரிசங்களையும் உள்ளடக்கியவை. நமது இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. இப்பிரபஞ்ச தோற்றத்தை வகுத்துக்கொள்ள பல தத்துவங்கள் உருவாகின, அந்த தத்துவங்கள் விரிவடைந்து தரிசனங்களா மாறின, தரிசனங்கள் ஒரு எல்லையில் இறைவழிபாடாக மாறி மதங்களானது. இப்படி இந்திய ஞான மரபில் உருவான மதங்கள்தான் ஷண்மதம், சமணம் மற்றும் பௌத்தமாகும்.

முதலில் தத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட துறையில் உருவாகுகின்ற தர்க்களின் தொகுப்பாகும். தர்க்கரீதியாலான சிந்தனைகளின் தொகுப்பே தத்துவமாகும்.

ஒரு தத்துவ சிந்தனையில் உருவான கருத்து சித்தாந்தமாக விரிவடைந்து, பிற அறிவு துறைகளில் உள்ளவற்றையும் விளக்க முற்படுவதே தரிசனமாகும். இந்த தரிசனங்கள் இந்து மெய் ஞானங்களின் வரிசையேயாகும்.

இந்து ஞான மரபு என்பது தரிசனங்கள் தனது கற்பனை மற்றும் உள்ளுணர்வால்  விரிவடைந்து இறை வழிபாடாக மாறும்போது மதங்களா உருவாகுகின்றன. அப்படி இந்து ஞான மரபில் உதித்தவை சைவம், வைணவம், சாக்தேயம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகியவையாகும். 

உதாரணத்துக்கு வைசேஷிக தரிசனம் அணுக்களின் சேர்க்கை அல்லது இணைவுகளின் மூலமே இப்பிரபஞ்சம் தோன்றியது என்கிறது. இப்போது அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது. அந்த பிரபஞ்ச உந்து சக்தியை பெண் தெய்வமாக பாவித்து வழிபடுவது சாக்தேயம் ஆகும். அதேபோல் அந்த சக்தியை பிள்ளையார் வடிவமாக பார்ப்பது காணபத்யம் ஆகும். இவ்வாறே தரிசனங்கள் கற்பனைகளால் விரிவடைந்து வழிபாட்டு மாதங்களாக உருவாகுகின்றன.

அப்படி மதங்களாக வளராத தரிசனங்களை தரிசனம் என கூறுகிறோம். நமது இந்து ஞான மரபில்  அவ்வாறு வளராத ஆறு தரிசனங்கள் காலத்தால் மிக பழையதும் அடிப்படையானதும் ஆகும். அவை

சாங்கியம்
யோகம்
வைசேஷிகம்
நியாயம்
பூர்வமீமாம்சம்
வேதாந்தம்

என்பவையாகும். 

சாங்கியம் | ஆதி இயற்கை வாதம்

இந்து ஞான தரிசனங்கள் ஆன்மிக  தத்துவங்களையும் சரிபாதி பௌதிக  தத்துவங்களையும் கொண்டவையாகும்.  இந்து ஞான தரிசனங்களில் முதன்மையானதாகவும் காலத்தால் முற்பட்டதாகவும் கருதப்படுவது சாங்கியமாகும். இது முழுக்க முழுக்க பௌதிக(Materialism) அடிப்படையிலான  தரிசனமாகும். இந்த தரிசனமானது கபிலரால் தொகுக்கப்பட்டது மற்றும் இதன் காலகட்டம் உபநிஷ காலகட்டத்தை சார்ந்தது. இது ஆதி இயற்கை வாதம் அல்லது சடவாத தரிசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் சாங்கிய மரபுக்கு பின் தோன்றிய ஞான மரபுகளும், பௌத்தம் மற்றும் சமணம் போன்ற மதங்களும் மற்றும் வேதாந்தங்களும் சாங்கிய தரிசனத்தோடு விவாதித்தே தம்மை புதுப்பித்து கொண்டன.

ஒவ்வரு தத்துவமும் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை(அல்லது காரிய காரணத்தை) தர்க்கரீதியாக பல தளங்களில் விவாதித்து தரிசனமாக மாறுகிறது. வேதங்கள் இப்பிரபஞ்ச தோற்றத்திற்கும் இருப்பிற்கும் பிரம்மமே காரணம் என்று கூறுகிறது. ஆனால் சாங்கியம் வேதங்களின் பிரம்ம இருப்பை மறுத்து இப்பிரபஞ்சம் பருப்பொருள்களில் இருந்து தோன்றின என்று தர்க்கரீதியாக விவாதிக்கின்றன.

மனிதன் அகத்துயரம், புறத்துயரம் மற்றும் இயற்கை நியதி என்னும் துயரம் என்னும் மூவகை துயரங்களால் ஆட்கொள்கிறான் மற்றும் இத்துயரங்களை மனிதன் எதிர்கொண்டே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது. எனவே இவ்வகை துயரங்களின் காரிய காரணத்தை ஒருவன் சாங்கிய அடிப்படையில் புரிந்துகொண்டால் அவன் அச்சம் அடையாமல் அத்துயரங்களில் இருந்து விடுவித்து கொள்ளலாம் என்பதே இதன் அடிப்படையாகும்.

சாங்கியதின் அடிப்படை மூன்று கோட்பாடுகள்,
பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது.
பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும்.
முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது.

பருப்பொருள்களில் இருந்து தோன்றியதே இப்பிரபஞ்சம் என்பது சாங்கியதின் முதல் கோட்பாடாகும். இப்போது உள்ள அறிவியலும், மார்க்சிசமும் உலகம் பருப்பொருளால் ஆனது என்றே  கூறுகிறது. நாம் இன்று காணும் இயற்கை(உலகம்) மற்றும் சுற்றுசூழல்கள் எல்லாம் பருப்பொருள்களாலானது என்கிறது. 

அதேபோன்று நிகழும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரிய காரணம் உண்டு என்கிறது சாங்கியம். காரிய காரண அடிப்படையில் நாம் இப்போது காணும் உலகம் அல்லது இயற்கை காரியம் என்றால். இதன் மூல காரணம் எது என்று விவாதிக்கும் போது. சாங்கியம் ஆதி இயற்கை என்னும் பருப்பொருளே என்கிறது. அதேசமயம் கடவுள், பிரம்மம், பரம்பொருள், ஆத்மா போன்றவற்றை சாங்கியம் ஏற்பதில்லை. சாங்கியம் உருவற்ற பிரம்மம் என்றதிலிருந்து எவ்வாறு பருப்பொருளாலான இயற்கை(அல்லது பிரபஞ்சம்) தோன்ற முடியும் என்று வேதத்துடனான தனது கேள்வியை முன்வைக்கிறது.

அதேபோன்று ஆதி இயற்கையானது முக்குணங்கள் சமநிலையை இழந்து எதிர் எதிர் வினை புரியும்போது நாம் காணும் பிரபஞ்சம் தோன்றுகிறது என்கிறது சாங்கியம். அம்மூன்று முக்குணங்களின் தொடர் எதிர்வினையே இப்பிரபஞ்சத்தை இயக்குகிறது. மேற்கத்திய மார்க்சிச  சிந்தனையில் materialistic dialectics என்பார்கள், அதாவுது இரண்டு பொருட்களின் முரணியக்கத்தால் புதிய பொருட்கள் உருவாகுகின்றன அது சமூகத்தை இயக்க நிலையில் வைக்கிறது. அதைத்தான் சாங்கியமும் முக்குணங்களின் முரணியக்கம் என்கிறது மற்றும் இந்த முரணியக்கமே பிரபஞ்சத்தை இயக்குகிறது. அந்த முக்குணங்களின் குணங்களை சத்துவகுணம்(Positive Movement), தமோகுணம்(Negative Movement), ரஜோகுணம்(Neutral Movement) என்கிறது சாங்கியம்.

சாங்கியத்தின்படி ஆதி இயற்கையானது படிப்படியாக பரிணாம் அடைந்து நாம் காணும் இயற்கையாக(உலகம்) மாறியுள்ளது. இயற்கையை பிரகிருதி  என்று வரையறுக்கிறது சாங்கியம். ஆதி இயற்கையில் இருந்து எப்படி உயிரினங்கள் படிப்படியாக தோன்றின என்பதை பிரகிருதி, மகத், அகங்காரம், மனம், பஞ்ச ஞானேந்திரியங்கள்(காது, தோல், கண், மூக்கு, நாக்கு), பஞ்ச கர்மேந்திரியங்கள்(வாக்கு, கை, கால், மலத்துவாரம், சிறுநீர் குழாய்), ஐந்து தன்மாத்திரைகள்(ஒலி, தொடுகை, நிறம், சுவை, மணம்), ஐந்தாற்றல்கள்(நிலம், நீர், வானம், நெருப்பு, காற்று) என்ற 24 தத்துவங்களின் மூலம் சாங்கியம் விளக்குகிறது.

சாங்கிய தத்துவத்தில் இரு முக்கிய கேள்விகள் எழுந்தன ஒன்று இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ? காரணம் இல்லை என்றால் தத்துவம் எதற்க்கு ?  இரண்டு, பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர்  போன்ற குணங்கள் குடியேறின? இந்த கேள்விக்கு பதிலாக புருஷன்(பரிபூர்ண சாட்சி) என்னும்  தத்துவத்தை சாங்கியர்கள் உருவாக்கினார். இங்கு புருஷன் என்பது பிறப்பும் இறப்பும் இல்லாதவன், உருவம் இல்லாதவன், எல்லா இடத்திலும் இருப்பவன் ஆதி இயற்கை போலவே புருசனும் முழுமுதற் பொருள். அதுஒரு பரிபூரண மௌனசாட்சி மட்டுமே. இது கிட்டத்தட்ட ஆன்மா போன்றுதான். ஜடத்தை அறிவதே புருஷனின் வேலை அவன் இருத்தலுக்கும் அதுவே காரணம். பிரபஞ்ச தோற்றம், ஜட உடலில் எவ்வாறு மனம், அறிவு, உயிர் உருவாகின என்பதற்கான பதிலாகவும், காரணமாகவும், காரியமாகவும் புருஷனை முன்வைத்தார்கள் சாங்கியர்கள்.

பிற்கால வேதாந்தங்கள், குறிப்பாக ஆதி சங்கரரின் அத்வைதம் தர்க்க பூர்வமாக விவாதித்து சாங்கியத்தை மறுக்கிறது. சங்கரர் பின்வரும் கேள்விகளை சாங்கியத்தை நோக்கி முன்வைக்கிறார்.

ஒவ்வொன்றுக்கும் காரிய காரணம் உண்டெனில் இப்பிரபஞ்சம் தோன்றியதற்கான காரணம் என்ன ? காரியம் என்ன ?
உயிரற்ற ஜட பொருளிலில் இருந்து எவ்வாறு உயிருள்ள ஜட பொருள் உருவாக முடியும்? பருப்பொருளால் ஆனா மனித உடலில் எவ்வாறு அறிவு, மணம், உயிர்  போன்ற குணங்கள் குடியேறின?
இந்த உயிர் எங்கிருந்து வந்தது எங்கு போகிறது?
முக்குணங்கள் சமநிலையை இழக்க காரணம் எது ? அது எப்போது சமநிலையை அடையும்?

இவற்றுக்கு பதிலாக உயிர், பிரபஞ்ச தோற்றத்துக்கு காரணமாக பிரமத்தை தனது அத்வைத கோட்ப்பாட்டில் முன் வைக்கிறார் சங்கரர். ஜீவாதாமாவும் பரமாத்மாவும் ஒன்று என்றும் மற்றவை  எல்லாம் மாயை என்று தனது அத்வைத தத்துவத்தில் கூறுகிறார்.

இப்போது உள்ள நூல்களில் சாங்கியத்தை முழுவதுமாக உள்வாங்கிய நூல் பகவத் கீதையே ஆகும். அது சாங்கியதின் சாரங்களை எடுத்து கொண்டு ஆன்மிக தத்துவங்களுக்கு ஏற்றபடி மாற்றிக்கொண்டது. கீதை சாங்கியதின்  ஆதி இயற்கை அல்லது பிரபஞ்ச தோற்றத்திற்கு மூல காரணமாக பரம்பொருளை முன்வைக்கிறது. அதே சமயம் புருசனுக்கு பதில் அது ஆத்மாவை முன்வைக்கிறது. அதேசமயம் கீதை இறைக்கு பதில் கடமையே(அல்லது செயலே) முக்கியம் என்ற கர்ம  ஞானத்தை முன்வைக்கிறது.

யோகம்

இப்போது எல்லாரும் அறிந்த யோகா பயிற்சிகள் கூட இந்த யோகா தரிசனத்தில் இருந்து வந்ததுதான்.  இதுவும் பௌதிக தரிசனமாகும். இந்த யோகா தரிசனமானது சாங்கியதின் கிளையாக பரிணமித்து தனி தரிசனமாக மாறியது. யோகம் சாங்கியதின் மூன்று அடிப்படை கொள்கைகளையும் ஏற்றுக்கொண்டது(பிரபஞ்சம் பருப்பொருளால் ஆனது, பிரபஞ்சத்தின் மூல காரணமும் பருப்பொருளேயாகும், முக்குணங்கள் சமநிலையை இழக்கும் போது ஆதி இயற்கை உருவாகுகிறது). இதனால் இதை சாங்கியதின் உப தரிசனம் என்றும் அழைப்பார்கள். 

முக்குணங்களில் பிளவு உண்டானதால்(சம நிலை இழந்ததால்) ஆதி இயற்கை(பிரபஞ்சம்) தோன்றியது. பிளவுபடாத(சமநிலையில் உள்ள) ஆதி இயற்கையை எப்படி நம்மால் அறிய முடியும் ? என்ற கேள்விக்கு சாங்கியம் பதில் அளிக்க முயன்ற போதுதான் யோகம் என்னும் தரிசனம் உருவாகியது.  நமது மனமானது காமம், குரோதம் மற்றும் மோகம் என்னும் தீய குணங்களால் மூடப்பட்டுள்ளது. இந்த தீய குணங்களை விடுத்து யோகா முறைகளால் மனதை தூய நிலைக்கு எடுத்து சென்றால் நாம் ஆதி இயற்கையை தரிசிக்க முடியும். யோகம் என்றாலே தூய அறிதல் என்று பொருள். 

ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம் ஆகும். இந்த யோகா தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து தொகுத்தவர் பதஞ்சலி ரிஷியாகும் மற்றும் இவர் கிமு  இரண்டாம் நூற்றாண்டை சேர்ந்தவராக இருக்கலாம். 

சாங்கியம் கூறும் 24 தத்துவங்களையும் யோகம் ஏற்கிறது. அதுமட்டும் அல்லாமல் யோகம் சாங்கியத்தின் புருஷ தத்துவத்தையும் ஏற்கிறது. மனிதன் காமம் குரோதம் மோகம் போன்ற தீய குணங்களால் இயற்கைக்கும் புருஷனுக்கும்(மனிதர்கள்) தொடர்பு இருப்பதாக ஒரு மாயை(அறியாமை) ஏற்படுகிறது. இந்த அறியாமை ஒருவனுக்கு அகன்றால் புருஷனுக்கும் இயற்கைக்கும் உறவு இல்லாமல் தன் தூய நிலையை அறிவான். இந்த நிலையே முக்தி என்று பௌதிக அடிப்படையிலான யோகா தரிசனம் சொல்கிறது.

ஐம்புலன்களையும் மனதையும் அடக்கி ஒருவன் தன் தூய நிலைக்கு போக பின்வரும் யோகத்தின் எட்டு படிநிலைகளை கடைபிடிக்க சொல்கிறது.

யமம் (அடக்கம்)
நியமம் (கட்டுப்பாடு)
ஆசனம் (யோக முறையில் உட்காருதல்)
பிராணாயாமம் (மூச்சைக் கட்டுப்படுத்தல்)
பிரத்தியாகாரம் (புலனறிவை மறக்கடித்தல்)
தாரணை (கவன ஈர்ப்பு)
தியானம் (தியானம்)
சமாதி (சமாதி)

இதில் யமம் என்பது அகிம்சை, சத்தியம், அஸ்தேயம், பிரம்மசரியம், அபரிகிரகம் என்னும் ஐயம் பெரும் விரதங்களாகும்.

நியமம் என்பது சௌசம்(உடலையும் மனதையும் சுத்தப்படுத்துதல்), தபஸ்(பிடிவாதமாக நெறிகளை பின்பற்றுதல்), ஸந்தோஷம்(சகஜமான இனிய மனநிலை), ஸ்வாத்யாயம்(கல்வி) போன்றவையாகும்.

தூய உடல் மற்றும் தூய மனம் ஆகியவை யோகத்திற்கு அவசியம். இதுவே சீரான இயக்கம் உடைய உடல் பயிற்சின் முதல் தேவையாகும். இதையே யமம் மற்றும் நியமம் வலியுறுத்துகிறது.

மூன்றாவது படிநிலையான ஆசனம் என்பது சௌகரியமான ஆசன இருப்பையே கூறுகிறது.

நான்காவது படிநிலையான பிராணாயாமம் சுவாசத்தை சீராக விடுவதாகும். யோகாசனம் மூலம் வெளியுறுப்புகளையும் பிராணாயாமம் மூலம் உள்ளுறுப்புகளை துல்லியமாக வைத்திருப்பதை யோகம் வலியுறுத்துகிறது.

அடுத்த படிநிலையான பிரத்தியாகாரம் என்பது புலன்களை(கண், காது, மூக்கு, சருமம், நாக்கு) மூடிவிட்டு மனதை நோக்கி நமது கவனத்தை குவிப்பதாகும். புலன்களின் செயல்களில் இருந்து விடுபட்டு ஆழ்ந்த நிலைக்கு செல்வது இதன் அடுத்தகட்டமாகும்.

அடுத்த ஆறாவது படிநிலையில் தாரணை என்பது மன செயல்பாட்டினை ஒரு புள்ளியை நோக்கி குவிப்பதாகும். பொதுவாக மனதை மந்திரத்தில் குவிப்பதே வழக்கம். ஓம், க்ரீம், ஹம் போன்ற மந்திரங்கள் யோக பயிற்சியின் போது உச்சரிப்பதை காணலாம். இது மனதை ஒரு புள்ளியில் குவிக்க உதவும்.

ஏழாவது தியானம் என்பது முழு பிரக்ஞையையும் மெதுவாக குவிய வைப்பதே ஆகும்.

கடைசி படிநிலை சமாதி என்பது சித்தம் அடங்கி தியானிக்கும் நிலை ஆகும். இந்த நிலையில்தான் ஒருவன் தன் தூய நிலைக்கு போய் பிரகிருதியை அறிகிறான்(ஆதி இயற்கையை தரிசிக்கிறான்). இதுவே யோக மெய்ஞான நிலையாகும்.
 
இந்த யோக பௌதிக தரிசனத்தை பிற தத்துவங்கள் உள்வாங்கிக்கொண்டு அதை ஆன்மிக அடிப்படையிலான யோக முறையாக வளர்த்தெடுத்தன. உதாரணத்துக்கு அத்வைதம் யோகத்தின் மூலம் அறியாமையை களைந்து தூய நிலைக்கு செல்லும்போது ஒருவனுக்கு பிரம்மம் மட்டும் எஞ்சும் என்கிறது.

வைசேஷிகம்

அணுக்களின் சேர்க்கை அல்லது கூட்டு மூலமே இப்பிரபஞ்சமும் அதில் உள்ள எல்லா பொருட்களும் உருவாகின என்பதே வைசேஷிக தத்துவமாகும். இன்றைய நிகழ் உலகில் அணுக்கொள்கையானது அறிவியல் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. அறிவியலும் அணுக்கள் இணைவு(Nuclear Fusion) மற்றும் அணுக்கள் பிணைவு(Nuclear Fission) மூலமே பொருட்கள் உருவாகுகின்றன என்கிறது. அணுக்களின் கூட்டாக பொருட்களை பார்க்கும் பார்வை பழைய காலம் முதலே இருந்து வந்துள்ளது.

கிரேக்க சிந்தனையாளர்கள் எபிகுரஸ்(கிமு 341-271), டெமாகிரிட்டஸ்(கிமு 460-380) போன்றார் அணுக்கொள்கையை பற்றி தங்களது தத்துவங்களை உருவாக்கியுள்ளனர். அதேபோன்று இந்தியா ஞான மரபிலும் வெகு காலம் முன்பே அணுக்கொள்கை பற்றிய கருத்து இருந்திருக்க வேண்டும். அதிலிருந்த இந்த தர்க்கபூர்வமான வைசேஷிக தரிசனம் உருவாகியிருக்க வேண்டும். வைசேஷிகத்தின் மூல குரு கணாதர் என்னும் ரிஷியாகும் மற்றும் இவர் கிமு ஆறாம் நூற்றாண்டிலோ அல்லது கிமு பத்தாம் நூற்றாண்டிலோ வாழ்ந்திருக்கலாம். இதுவும் சாங்கியம் போன்று பௌதிக தரிசனமாகும்.

வைசேஷிகம் ஒவ்வொரு பொருட்களை பகுத்து பகுத்து பகுப்பாய்வு செய்தால் நுண் அணுக்களே இறுதியில் மிஞ்சும் என்கிறது. அதேபோன்று வைசேஷிகம் தனது தத்துவத்தை தர்மம் எது என்று விளக்கும் போது. எதிலிருந்து எல்லா விஷயங்களும் உருவாகினவோ அதுவே தர்மம் என்கிறது. அந்த தர்மத்தை அறிதல், பொருள்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் பிரபஞ்ச இயக்கம் பற்றியும் தனது திரவியம்(பொருள்), குணம்(இயல்பு), கர்மம்(செயல்), சாமான்யம்(பொதுத்தன்மை), விஷேசம்(சிறப்புத்தன்மை), சமவாயம்(இணைவுத்தன்மை) என்ற ஆறு தத்துவங்கள் மூலம் வைசேஷிகம் விளக்குகிறது.

பிரபஞ்சத்தை அறிந்து கொள்வதற்கு இரு வழி முறைகள் உள்ளன. அவை தொகுத்தல் மற்றும் பகுத்தல் ஆகும். தொகுத்தல் என்பது கிடைத்த ஒவ்வொன்றையும் கூட்டி இது என்ன என்று யோசித்தால். பகுத்தல் என்பது கைக்கு கிடைத்த பொருளை பகுப்பாய்வு செய்தலாகும்.

வைசேஷிகமும் சாங்கியம் போன்றே பிரபஞ்சம் பொருட்களால் ஆனது என்கிறது. ஆனால் இரண்டிருக்கும் உள்ள வித்தியாசம் என்பது பிரபஞ்சத்தை பகுப்பாய்வு செய்வதில் வேறுபடுகிறது. சாங்கியமானது எல்லா பொருட்களையும் தொகுத்து நமது பிரபஞ்சம் ஆதி இயற்கையில் இருந்து தோன்றியது என்கிறது. ஆனால் வைசேஷிகம் இதற்க்கு நேர் எதிராக பொருள்களை பகுத்து பார்ப்பது போல பிரபஞ்சத்தை பகுத்தால் அணுவே மிஞ்சும் என்கிறது.

இந்த நுண் அணுக்களின் சேர்க்கையில் இருந்தே நீர், நிலம் மற்றும் புற வயத்தில் நாம் பார்க்கும் பொருட்கள் எல்லாம் உருவாகி இருக்கின்றன என்கிறது வைசேஷிகம். அதேபோல் அணுக்களுக்கு நிறம், குணம், வடிவம், கனம் உண்டு என்கிறது மற்றும் அணுக்கள் இணைந்து உருவாகும் பொருட்களுக்கும் அணுக்கள் போன்றே பண்புகள் இருக்கும் என்கிறது. ஆனால் அணுக்களில் இருந்த அதே பண்புகள் பொருட்களாக பரிணமிக்கும்போது இருக்க அவசியம்மில்லை என்கிறது வைசேஷிகம்.

அணுக்கள் சேர்ந்து பொருட்கள் உருவாகுவதை காரணம் காரியம் என்கிறது. வைசேஷிகம் சாங்கியத்தை போன்றே காரண காரியத்தை ஏற்கிறது. ஆனால் சாங்கியதின் காரியத்திற்குள் காரணம் ஒழிந்து இருக்கிறது என்ற கோட்பாட்டை வைசேஷிகம் மறுக்கிறது. காரியத்திற்குள் காரணம் ஒழிந்திருக்க முடியாது, காரணம் வேறு காரியம் வேறு என்கிறது வைசேஷிகம். அணுக்களின் சேர்க்கையினால் ஒரு புதிய பொருள் உருவாகுகிறது. இரு அணுக்களின் சேர்க்கை என்னும் காரணத்திலிருந்து பிறந்த புதிய பொருள்தான் காரியம் என்கிறது வைசேஷிகம்.

அணுக்கள் ஏன் ஒன்றாக இணைய வேண்டும்? அணு சேர்க்கை நடைபெற காரணம் என்ன? அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? என்று கேள்விகள் எழும்போது. அதை வைசேஷிகம் கண்ணனுக்கு தெரியாத உந்து சக்தி என்கிறது.

அதேபோன்று வைசேஷிகம் இப்பிரபஞ்சம் பிரம்மத்தில் இருந்து தோன்றியது எனில் நாம் காணும் பொருட்களின் தன்மையான பருத்தன்மை மற்றும் மாறும் தன்மை போன்றவை பிரமத்திற்கும் இருக்கவேண்டும். ஆனால் அருவ சக்தியான பிரம்மத்திற்கு அணுக்கள் தன்மை இருக்க வாய்ப்பில்லை. எனவே பிரம்மத்தையோ அல்லது கடவுள் இருப்பையோ வைசேஷிகம் ஏற்பதில்லை.

ஆதி சங்கரர் இந்த பௌதிக வைசேஷிக தரிசனத்தை தர்க்கரீதியாக விவாதித்து உடைக்கிறார். முதல் கேள்வி, அணுக்கள் இணைந்து பிரபஞ்சம் உருவாக காரணமான உந்து சக்தி எது? இதற்க்கு சங்கரர் பதில் அளிக்கும்போது அந்த உந்து சக்தியை பிரம்மம் என்கிறார் மற்றும் அந்த பிரம்மமே எல்லாம் என்கிறார். 

இரண்டாவுது கேள்வி, அணுக்களுக்கு உள்ள குணங்கள் பொருட்களாக மாறும்போது அணுக்களின் குணங்கள் மறைகிறது என்கிறது வைசேஷிகம். அப்படியென்றால் பிரம்மத்தின் குணங்கள் பிரபஞ்சமாக மாறும்போது மறைகிறது என்று வாதிட்டு பிரம்ம இருப்பை உறுதி செய்கிறார் சங்கரர். நாம் காணும் பிரபஞ்ச பொருட்கள் எல்லாமே மாயை என்றும் பிரம்மமே மெய் என்கிறார்.

நியாயம்

எந்த ஒரு தத்துவம் அல்லது சிந்தனைக்கும் தனக்கேயுரிய தர்க்க முறை இருக்கும் அதன் சிந்தனைகளை வகுத்து கொள்ள. அப்படி இந்திய ஞான மரபு வளர்த்து எடுத்த தர்க்கமுறைதான் நியாயம் ஆகும். நாம் தினமும் பயன்படுத்தும் நியாயம் என்ற வார்த்தை கூட இந்த நியாய தரிசனத்தில் இருந்து தோன்றியது தான். நியாயம்  வைசேஷிகத்தின் உப தரிசனமாகும் மற்றும் இதுவும் பௌதீகவாத தரிசனமாகும்.

பின்னர் வந்த தரிசனங்களும் நியாய தரிசனத்தை உள்வாங்கி கொண்டு தர்கரீதியில் விவாதித்து தங்களது சிந்தனைகளை வளர்த்தெடுத்தன. இந்த நியாய மரபுக்கு எதிராக வந்த வேதாந்தமும் சரி, பௌத்த மற்றும் சமண மரபுகளும் சரி நியாய தருகத்தையே கையாளுகின்றன. இதை பின்னர் பெரிய அளவில் வளர்த்தெடுத்தவர்கள்  பௌத்தர்களே. நியாயத்தை இந்தியத் தர்க்கவியல்(Indian Logic) என்றும் அழைக்கலாம். இந்த நியாய தரிசனத்தை தொகுத்தவர் கௌதமர் ஆகும் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டை சார்ந்தவராக இருக்கலாம்.

பிரபஞ்சம் அணுக்களால் ஆனது என்னும் வைசேஷிக கோட்பாட்டை நியாயம் ஏற்கிறது. பிரபஞ்சத்தை பற்றிய அறிவு இல்லாமையால்தான் நாம் சமநிலை இழந்து வியப்பு, பயம், மகிழ்ச்சி மற்றும் துக்கம் போன்றவை உருவாகுகின்றன. இந்த அறியாமையை அகற்றி இப்பிரபஞ்சத்தை புரிந்து கொண்டால் சமநிலை அடையாளம். அவ்வாறு அடையும் சமநிலையை நி:ஸ்ரேயஸம் என்று கூறுகிறது. நியாயத்தை பொறுத்தவரை பிரபஞ்சம் எப்படி உருவானது என்பதை விட அதை அறியும் வழியை எப்படி வகுத்து கொள்வது என்பதுதான் அதன் நோக்கமாகும். 

நியாயம் ஒரு விஷயத்தை அறிந்துகொள்ள விஷயம்(அறிபடு பொருள்) மற்றும் விஷயி(அறிபவன்) என்ற இரு முனைகளை கணக்கில் கொள்கிறது. இவ்விரு முனைகளுக்கு இடையே உள்ள உறவே அறிவு எனப்படுகிறது. விஷயம்(பிரபஞ்சம்) மற்றும் விஷயி(மனிதன்) என்ற இரு புள்ளிகளுக்கு இடையே உள்ள எல்லா வகை தொடர்புகளையும்(உறவுகளையும்) கணக்கில் கொள்கிறது நியாயம்.

பிரபஞ்சத்தை பற்றி அறிந்து கொள்ள அல்லது அது பற்றிய அறிவை வகுத்து கொள்ள பிரமாணம், பிரமேயம், சம்சயம், பிரயோஜனம், த்ருஷ்டாந்தம், சித்தாந்தம், அவயவங்கள், தர்க்கம், நிர்ணயம், வாதம், ஜல்பம், விதண்டாவாதம், ஹேத்வ ஆபாசம்,சலம், வாத நிரசனம், நிக்ரஹ ஆஸ்தானம் என்ற பதினாறு தத்துவங்கள் மூலம் நியாயம் விளக்குகிறது. இதில் பிரமேயம் மட்டும் அறிபடுபொருள் மற்ற பதினைந்து முறைகளும் அதை அறிவதற்கான வழிமுறைகள்.

இதில்வரும் முதலாவுது அறிவதற்கான  முறை பிரமணமாகும். ஒரு அறிபடு பொருளை என்னென்ன வழிமுறைகள் கொண்டு அறிகிறோம் என்பதே பிரமணமாகும். பிரமாணம் ஒரு விஷயத்தை பற்றி அறிய நான்கு பிரமாணங்களை வகுக்கிறது. அவை, 

பிரத்தியட்சம் - நேரடிக்காட்சி
அனுமானம் - உய்த்துணர்வு
உபமானம் - ஒப்பீடு
சப்தம் - உரைச்சான்று என்பனவாகும்

பிரத்தியட்ச பிரமாணம் என்பது நமது புலன்கள் வழியாக புற வயத்தில்(உலகத்தில்) நடப்பவற்றை நேரடியாக பார்த்து அறிந்து கொள்ளுதல்.

இரண்டாம் பிரமாணம் அனுமானம் என்பது ஊகித்து அறிவதாகும். புலன்களில் மூலம் அறிதலில் சில தவறுகள் ஏற்படலாம். உதாரணத்துக்கு சூரியன் பூமியை சுற்றுகிறது என்பது போன்று நமது புலன்களுக்கு தென்படுகிறது. ஆனால் பூமிதான் சூரியனை சுற்றுகிறது என்பதை நாம் ஊகித்தே அறிகிறோம். இவ்வாறு ஊகித்து அறிந்து கொள்ளும் முறையே அனுமானம் எனப்படுகிறது. அனுமானத்தை நியாயம் மூன்று வகையாக வகைப்படுத்துகிறது அவை பிரத்தியட்சம் நிகழும் முன் ஊகிப்பது, 
பிரத்தியட்சம் நிகழ்ந்த பின் ஊகிப்பது, பிரத்தியட்சம் நிகழும் போதே ஊகிப்பது என்பவையாகும்.

மூன்றாம் பிரமாணம் உபமானம் என்பது ஒன்றை இன்னொன்றுடன் ஒப்பிட்டு அறிவதாகும்.
 
நான்காவது பிரமாணம் சப்தம் என்பது முன்னறிவு அல்லது மரபான அறிவு என்று வரையறுக்கலாம். ஒரு விஷயத்தை நாம் அறிந்து கொள்ளும் முன் அதுவரைக்கும் அதை பற்றிய விவரங்களை தலைமுறைகளுக்கு கடத்தப்பட்டிருப்பது முன்னறிவாகும். அதிலிருந்து அறிபடு பொருளை பற்றி நாம் அறியலாம்.

இதுவரை இந்தியா ஞான மரபில் தோன்றிய பௌத்தம், சமணம் மற்றும் வேதாந்தங்களும் உண்மையை அறிவதற்கு நியாய தரிசனத்தையே கையாளுகின்றன.

பூர்வமீமாம்சம்

இந்து மதங்களிலோ அல்லது இந்தியாவில் தோன்றிய மதங்களுக்கோ மூல நூல் என்று எதுவும் இல்லை. அவை பல நூல்களை கொண்டவை மற்றும் இதுதான் மூல நூல் என்று எதுவும் கிடையாது. ஆனால் ஆபிரகாமிய மதங்களான கிறிஸ்துவமும் இஸ்லாமும் அதன் மையநூலக பைபிள் மற்றும் குரானை வைத்து வளர்ந்தவை. இப்படி மையநூலை வைத்து இயங்குவது செமிட்டிக் மதங்களின் இயல்பாகும். அப்படி வேதங்களை மூலநூல்களாக கொண்டு வளர்ந்தவை பூர்வமாம்சமாகும். இந்தியா தத்துவ மரபில் மையநூல்வாதம் கொண்டு இயங்கும் ஒரே தத்துவ தரிசனமும் பூர்வமீமாம்சம் மட்டுமே. 

பூர்வமீமாம்சம் என்பது வேதங்களை அடிப்படையாக கொண்டு வேள்விகளை சடங்குகளையும் நடத்துவதாகும். வேள்வி மற்றும் சடங்குகளை செய்வதே இதன் முதன்மையான கர்மமாகும். இந்த தரிசனம் சடங்கு செயல்பாடுகளையும் அவற்றின் விளைவுகள் பற்றியே விவரிக்கிறது(செயல் - விளைவு). இது புரோகித மரபு என்றும் அழைக்கப்படுகிறது. பூர்வமீமாம்சத்தை தொகுத்தவர் ஜைமினி என்று குரு ஆவர் மற்றும் இவர் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் மூன்றாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்டகாலமாக  இருக்கலாம்.

பூர்வமீமாம்சம் தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சம் என்ற நான்கு அடிப்படைகளை கொண்டது. இதில் தர்மம் என்பது அறம் அல்லது நீதி நெறிகள் அல்ல. மாறாக எந்தந்த அடிப்படைகளின்படி நமது செயல்களை ஆற்றுகிறோமோ அதுவே தர்மம் எனப்படுகிறது. இத்தத்துவதில் கர்மம் என்பது சடங்குகள் செய்வதே ஆகும். அந்த கர்மத்தின் விளைவே காமமும்  மோச்சமுமாகும்.

பூர்வமீமாசத்தில் கடவுளுக்கு முக்கிய இடமில்லை மற்றும் சடங்குகளே முக்கியமானவை. பிரபஞ்சத்தின் மூல காரணம் யார் என்று கேள்வி எழும்போது இறைவன் என்ற கருத்து தேவைப்படுகிறது மற்றும் இவை படிப்படியாக பிற்காலத்தில் உருவாகி வந்தவையாகும். 

வேதகாலத்தில் இருவகையான கடவுள் வடிவங்கள் இருந்து வந்தன. ஒன்று செயல் வடிவ கடவுள்கள். அவை ஒவ்வொரு செயலுக்கு உரிய தனி தெய்வங்கள்(ராத்ரிதேவி, உஷை, சாவித்ரி) ஆகும். இரண்டாம் வகை தெய்வங்கள் இந்திரன், வருணன் மற்றும் அக்னீ போன்ற இயற்கையை உவமையாக கொண்ட தெய்வங்கள் ஆகும். ஆனால் இவை முழுமுதல் தெய்வங்களல்ல. முழுமுதற் கடவுள் என்று வரும்போது இப்பிரபஞ்ச விதிகளுக்கு மூலக்காரணமாக உள்ள பிரம்மமே என உருவகிக்கப்படுகிறது.

பூர்வமீமாசத்தின்படி இப்பிரபஞ்சம் இறைவனால் உருவாக்கப்பட்டது அல்ல. அது அதற்குரிய செயல்விதிகளின்படி தானாக உருவாகியது. பௌதிக  பொருட்களால் நிறைந்த பிரபஞ்சத்தில் அவற்றுடன் கடவுளும் குடிகொண்டுள்ளது. இப்பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொன்றும் செயல் - விளைவு என்ற விதிகளுக்கு உட்பட்டவை மற்றும் அவை கடவுளுக்கும் பொருந்தும்.

வேள்வி சடங்குகளே இதன் முதன்மையான கர்ம நோக்கமாகும் மற்றும் இந்த சடங்குகள் கடவுளின் கருணையையோ அல்லது அருளையோ பெற அல்ல. கடவுள்களே வேத மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவையாகும். இந்த கர்ம சித்தாந்தம் இந்தந்த சடங்குகளுக்கு இந்தந்த விளைவுகள் என்று விளக்குகின்றன. இந்த கர்ம விளைவுகளின்படியே விதி, மறுபிறப்பு போன்றவை நிர்ணயிக்கப்படுகிறது. இதற்கும் கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.

ஆன்மிகம், யோகம் மற்றும் தியானம் போன்றவற்றிக்கு எதிரானது இத்தத்துவம். ஆனால் பிற்காலத்தில் இவை அனைத்தையும் தனது வைதிக மரபுடன் உள்ளிழுத்து கொண்டது பூர்வமீமாம்சம்.

இன்று இந்தியா முழுவதும் காணப்படும் கணபதி ஹோமம் போன்ற சடங்குகள் இந்த பூர்வமீமாம்சத்தின் வைதிக மரபேயாகும். இந்த வேள்வி மரபானது பிற்காலத்தில் மெல்லமெல்ல ஆலய மரபுடன் தன்னை இணைத்து கொண்டது. இன்று இந்து மதத்தில் காணப்படும் அனைத்து வழிபாட்டு கூறுகளையும் தன்னகத்தே உள்ளிழுத்து கொண்டு வளர்ந்து நிற்கிறது பூர்வமீமாம்சம்.

வேதாந்தம் | உத்தரமீமாம்சம்

வேதத்தின் அந்தம்தாம் தான் வேதாந்தமாகும். அதாவுது வேதத்தின் இறுதியில் வருவது என்று பொருள். இந்து மத அனைத்து சமய வழிபாடுகளிலும் வேதாந்தத்தின் தத்துவார்த்தம் காணப்படும். வேதாந்தத்தின் முக்கிய தேடல் இப்பிரபஞ்ச தோற்றம் மற்றும் இயக்கத்திற்கு முக்கிய மூல காரணமாக இருக்கும் பிரம்மத்தை பற்றியதேயாகும். வேதாந்தங்கள் உபநிஷங்கள் மற்றும் பிற பௌதிக தத்துவ தரிசங்களுடன் விவாதித்து தம்மை வளர்த்து கொண்டவை.

இத்தரிசனம் வேதங்களை ஏற்று கொண்டாலும் அதில் உள்ள சடங்குகளை ஏற்பதில்லை. பிரம்மத்தை பற்றி அறிய ஞான தேடலையே வேதாந்தங்கள் முன்வைக்கின்றன. அதனால் இதை பிரம்ம மீமாம்சை அல்லது ஞான மீமாம்சை என்று குறிப்பிடுவார்கள். வேதாந்த மரபினை தொகுத்தவர் குரு பாதராயணர் ஆவர் மற்றும் இவர் கிமு நான்காம் நூற்றாண்டுக்கும் கிமு இரண்டாம் நூற்றாண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர் என்று நம்பப்படுகிறது. இவருடைய பிரம்மசூத்திரங்கள் என்ற நூலே வேதாந்தத்தின் முக்கிய நூலாகும். வேத வியாசர்தான் வேதாந்தத்தின் முதல் குரு என்ற நம்பிக்கையும் உண்டு.

இந்து மரபில் வேதா காலம் முதல் தற்போது வரை அதன் தேடல் எவ்வாறு இப்பிரபஞ்சமும் அதன் உயிர்களும் தோன்றின என்பதே. அதை சாங்கியம் போன்ற பௌதிக தரிசனங்கள் பருப்பொருளில் இருந்து தோன்றின என்று முன்வைக்கின்றன மற்றும் இன்றைய big bang theory போன்ற அறிவியில் தத்துவங்கள் சிறு வெடிப்பில் இருந்து universe தோன்றின என்று கூறினாலும். பௌதிக தத்துவங்களாலும் அறிவியலாலும் விளக்கமுடியாத சில பகுதிகள் உள்ளன அவற்றை தர்க்கரீதியாக விவாதித்து ஆன்மிக தத்துவங்கள்(வேதாந்தங்கள்) அந்த இடத்தை நிரப்பிவிடுகின்றன. 

உதாரணத்துக்கு பருப்பொருளில் இருந்து எவ்வாறு உயிர்கள் உருவாக முடியும்? பருப்பொருள் வெடித்து இப்பிரபஞ்சம் உருவாக உந்து விசையாக இருந்தது எது? அதன் ஆதிமூலம் என்ன? திட பொருளான உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பு என்ன? இந்த இடத்தில் வேதாந்த தத்துவங்கள் விளக்க முடியாத அந்த  இடைவெளியை ஆத்மா, பிரம்மம், பரமாத்மா மற்றும் பரம்பொருள் என்று பெயர் கொடுத்து நிரப்பிவிடுகின்றன. அதேசமயம் அவை பௌதிக வாதங்களையும் முழுமையாக மறுப்பதும்மில்லை. வேதாந்தங்கள் சாங்கியம், யோகம், வைசேஷிகம் மற்றும் நியாயம் போன்ற பௌதிக வாதங்களுடனும் விவாதித்தும் பிரம்மத்தை உபநிஷங்களிடம் விவாதித்தும் புதுப்பித்துக்கொண்டவை.

பௌத்த சமண மதங்களுடன் ஆழமான விவாதத்தில் ஈடுபட்டதான் விளைவாக பிற்கால வேதாந்தங்கள் உருவாகின. முதலில் உருவானது ஆதி சங்கரரின் அத்வைதமாகும். இதிலிருந்து பிரிந்து உருவானவை விசிஷ்டாத்வைதம் மற்றும் துவைதம் ஆகும்.

நன்றி :

திரு.ஜெயமோகன்,
திரு.குருசாமி கிஷோர், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

7 அக்., 2021

நூல் நயம் : விஷ்ணுபுரம் : ஜெயமோகன்


படிச்சு முடிச்சாச்ச்ச்ச்..‌ 👍

(ஒரு தனி மனிதராக ஜெயமோகனை விரும்பாதவர்கள் இந்தப் பதிவை கடந்து சென்றுவிடலாம். தமிழின் முக்கிய நூலான 'விஷ்ணுபுரம்' பற்றிய ஒரு வாசகனாக எனது பதிவு இது.)

புத்தகம்: விஷ்ணுபுரம் (புதினம்)
எழுத்தாளர்: ஜெயமோகன்
பதிப்பகம்: கிழக்கு பதிப்பகம்
அளவு: 830 பக்கங்கள் !!!

முன்னுரையிலேயே சொல்லிவிடுகிறார் —தருக்கங்கள் அதிகம் இருக்கும் என்று. இரண்டாம் பகுதி முழுவதும் தருக்கங்களால் கட்டமைக்கப்பட்டுள்ளது.

முதல் பகுதியில் விளக்கப்படும் விஷ்ணுபுரம் பற்றிய பிரம்மாண்டம் பிரமிப்பூட்டுகிறது. இவரது கற்பனை வளம் மிரட்டுகிறது.

மூன்றாம் பகுதியைப் படிக்க நிறையவே திடமும் நடுநிலைத்தன்மையும் தேவைப்படும். பிரளயம் என்பதை பிட்டு வைத்திருக்கிறார்.

பக்கத்திற்கு ஒரு கதாபாத்திரம் என அறிமுகம் செய்துகொண்டே போகிறார். ஒரு கட்டத்திற்கு மேல் அவற்றின் பின்புலங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியாமல் சற்று தள்ளி நின்று வாசிக்கும் மனநிலை இயல்பாக வந்துவிடுகிறது.

பல அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பின்றி இருந்தாலும் தொடர்ந்து படித்தால் வேறொரு அத்தியாயத்தில் அந்தக் கதாபாத்திரத்தின் முடிவு தெரிகிறது.

ஒரு வாசகனை சவாலுக்கு உள்ளாக்கும், மிரட்டும், ஆச்சரியமூட்டும், கனிவாக்கும், ஞானமூட்டும் படைப்பு இது.

தங்குதடையின்றி இதைப் படித்து முடிப்பதே நிச்சயம் வாசகனின் சாதனைதான்.

இதுதான் இப்படித்தான் என்று எதையும் திணிக்காமல், எல்லா விதமான நம்பிக்கைகளையும் வழிபற்றுதலையும் கண் முன்னே கடை விரித்து நமக்கு வேண்டியதை நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தைக் கொடுத்ததால் நிச்சயம் பாராட்டலாம்.

அரசர் காலத்தில் இருந்த பல இசைக் கருவிகளையும் பல மரபுகளையும் தெரிந்துகொள்ள முடிந்தது. கற்பனை வளம் புத்தகம் முழுக்க கரைபுரண்டு ஓடுகிறது.

கதையைப் பற்றி நிறையச் சொல்லி இனி படிக்கப் போகிறவர்களின் சுவாரசியத்தைக் குலைக்க விரும்பாததால் ஆழமாகச் செல்லவில்லை.

இதைப் படிக்கும் வாசகர்கள் யாவரும் அன்னப் பறவை போல இருந்து, தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் கொள்ள முடிந்தால் இது நிச்சயம் ஒரு முறையாவது படிக்க‌ வேண்டிய புதினம்.

ஒரு வாசகனாக நம்மை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிடுகிறது —நம்மையும் அறியாமல் 👍

நன்றி :

சத்யஸ்ரீ எழுத்தாளர், 

8 செப்., 2021

சிறுகதை நேரம் : சோற்றுக்கணக்கு - ஜெயமோகன்


கதை#56:

சோற்றுக்கணக்கு

எழுத்தாளர் ஜெயமோகன்|

கதை சொல்லி மகா | தமிழ் சிறுகதை |

21,730 views

Aug 13, 2020

கதைசொல்லி மகா- Story Teller

15.5K subscribers

பசிக்கு கணக்கில்லாமல் சோறு இடுகிற மனிதனின் உண்மை கதையையும், அதோடு சேர்ந்து கல்வி ஒரு மனிதனுடைய வாழ்க்கையை எப்படியெல்லாம் மாற்றிவிட முடியும் என்கிற உன்னதத்தையும் சொல்லக்கூடிய அற்புதமான கதையிது.

 

இவ்வழகிய கதையினை அளித்த எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களை கொண்டாடுவோம். கதையினை கேட்டு, படித்து இன்புறுக.

-------------------------------------------

இதற்கு முன் பகிர்ந்த 10 கதையாடல்கள்:

-------------------------------------------

கதை#55: எழுத்தாளர் அம்பை அவர்களின் "காட்டிலே ஒரு மான்" சிறுகதை- https://youtu.be/6zP3bTUucVg

 

கதை#54: திரு. கு.பா.ராஜகோபாலின்  "கனகாம்பரம்" சிறுகதை-

https://youtu.be/pO4s5bdTZE8

 

கதை#53: திரு. கண்மணி குணசேகரனின் "பால் நரம்பு" சிறுகதை-

https://youtu.be/xUBUibx7T3k

 

கதை#52: திரு. நாஞ்சில் நாடனின் கிழிசல் சிறுகதை-

https://youtu.be/fZt9xUIo0FI

 

கதை#51: திரு. ஜெயகாந்தனின் ஒரு பிடி சோறு சிறுகதை- https://youtu.be/OWMacG5Qhbg

 

கதை#50: திரு. பவா செல்லத்துரையின் வலி சிறுகதை- https://youtu.be/CRrbUx0Opjw

 

கதை#49: திரு. அஸ்வகோஷ் () ராஜேந்தர சோழனின் காசுக்காக அல்ல சிறுகதை- https://youtu.be/mcdM0pMPpAQ

 

கதை#48: திரு. எஸ்.ராமகிருஷ்ணனின்  அவளது வீடு  சிறுகதை- https://youtu.be/SwMpMbm9uAo

 

கதை#47: திரு. பிரபஞ்சனின் ஆகஸ்ட் 15  சிறுகதை- https://youtu.be/IvKL0et1PE0

 

கதை#46: திரு. நகுலனின் தில்லைவெளி சிறுகதை- https://youtu.be/1sSpog0Mzt0

 

#தமிழால்_இணைவோம்

#கதைகளால்_இணைவோம்

 

Facebook Page:https://www.facebook.com/Kathai-Solli...

 

Grateful thanks to

ஜெயமோகன்

கதைசொல்லி மகா- Story Teller

and YouTube and all the others who made this video possible