22 ஏப்., 2008

திருமந்திரம்-2: "யாவர்க்குமாம்..".

யாவர்க்குமாம்...

யாவர்க்குமாம் இறைவர்க்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவிற்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

- திருமந்திரம்

காலையில் இறைவனுக்கு பச்சிலை இட்டு வணங்கியும், பசு, நாய், பூனை, காகம் போன்ற பிராணிகட்கு சிறிது உணவளித்தும், வறியார்க்கு சோறிட்டும், மற்றவர்கட்கு இன்சொல் கூறியும், நாம் வாழ்வோமாக. இதனால் எல்லா நலங்களையும் அடையலாம். உலகிற்கு நாம் உதவினால் உலகம் நமக்கு உதவுகிறது.

நன்றி : "தினசரி திருமுறை"
தொகுத்தவர் - சிவ.அ.பக்தவச்சலம்
வெளியிட்டோர் - சிவனடியார் திருக்கூட்டம், குடியாத்தம்

3 ஏப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-15: "தீர்ப்பு"

நெல்லையப்பன் கவிதைகள்-15

தீர்ப்பு

பள்ளியறை காமத்தை,
பள்ளிக்குள் கொண்டுவந்து,
பயிர்மேயும் வேலிகளுக்கு
என்ன தண்டனை?

சத்துணவில் கைவைத்து,
பருப்பு, எண்ணெய், முட்டைகளை,
பதம்பார்க்கும் படித்தவர்க்கு
என்ன தண்டனை?

பயிற்றுவிக்கும் பணியின்
மகத்துவத்தை உணராமல்,
கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்திற்கு
என்ன தண்டனை?

புத்தகங்களுக்கு
வெளியேயும் படிக்கலாம்,
புத்தகங்களுக்கு உள்ளும்
இளைப்பாறலாம்,
இது புரியாத ஆசிரியர்களுக்கு
என்ன தண்டனை?

நூல்களையும், மக்களையும்
விடாது படிப்பவரே ஆசிரியரெனில்,
படிப்பதையே நிறுத்திவிட்டவர்க்கு
என்ன தண்டனை?

தீர்ப்பெழுதிய பின்
தீர்மானிக்க வேண்டியவை:
ஆசிரியர்களுக்கான தகுதிகள்,
சம்பளம், உயர்தர பயிற்சி.

2 ஏப்., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-14: "தீவுகள்"

நெல்லையப்பன் கவிதைகள்-14

தீவுகள்

ஜாதி, மல்லிகையில்
மட்டும் இருக்கட்டும்.
மதம், யானைக்குக்கூடப்
பிடிக்க வேண்டாம்.
மொழி, முதலில்
ஊடகம் தான்.
தோலுக்குக் கீழே
எல்லோரும் ஓர் நிறம்,
எனில் நான்கின் பெயராலும்
சுவர்கள் எதற்கு?
பாலங்களை எல்லாம்
சுவர்களாக்கி விட்டால்,
திசைகளை மறந்து
தீவுகளாகி விடுவோம்.