நோக வைத்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நோக வைத்தவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26 டிச., 2018

நோக வைத்தவை-2:

தமிழ்த்திரைப்பட இயக்குநர் ருத்ரன், தனது "வெற்றிச் செல்வன்' படத்தின் காட்சிகளை 20நாட்களுக்கும் மேலாக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவ மனையில் படமாக்கியிருக்கிறார் அந்த அனுபவங்களைக் கேட்கச் சென்ற ஒரு பத்திரிகையாளர் எழுதுகிறார் ...

"யாவரும் நலம்' படத்தில் இயக்குநர் விக்ரம் குமாரின் உதவியாளராக நான் பணியாற்றியபோது லொகேஷன் பார்ப்பதற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றிருந்தேன். அப்போது நான் சந்தித்த ஒரு நபர்தான் எனது "வெற்றிச் செல்வன்' படத்திற்கான ஆரம்ப விதையாக இருந்தார்.

நான் சந்தித்த அந்த நபர் –
காமராஜரின் ஆட்சியில் அமைச்சராக இருந்த கக்கனின் மகன் நடராஜ மூர்த்தி.
நேர்மையான அரசியல்வாதியாக கக்கனை எங்களுக்குத் தெரியும்.
ஆனால், அவரின் மகன் நடராஜ மூர்த்தி கீழ்ப்பாக்கம் மருத்துவ மனையில் சுமார் 30 வருடங்களாக --அனைவராலும் கைவிடப் பட்ட நிலையில்-- கால்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கிறார்
என்றால் அது, தமிழருக்கு எவ்வளவு பெரிய அவமானம்...?

அவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சரியான முறையில் நடத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. அவர் சொன்ன சில கதைகளை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்தேன்.

கீழ்ப்பாக்கத்தில் சுமார் 3000 பேர் வரை இருக்கிறார்கள். அதில் சுமார் 500 பேருக்கு மேல் முற்றிலும் குணமானவர்கள். ஆனால், அவர்களை அழைத்துச் செல்ல யாருமே இல்லாததால், இன்னும் அங்கேயே இருந்து மேலும் மேலும் மனச் சிதைவுக்கு உள்ளாகிறார்கள்.

கீழ்ப்பாக்கத்தில் படப்பிடிப்பு நடத்த என்னிடம் சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரை அன்பளிப்பாக மருத்துவமனை நிர்வாகம் கேட்டது. அந்தப் பணத்தில் நோயாளிகளுக்கு ஏதாவது செய்கிறேன் எனக் கேட்டபோது, அதற்கு அனுமதிக்க வில்லை. மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் கூட சாதாரணமான மனிதர்கள் தானே...?

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் எல்லா நோயாளிகளும் இரவு ஆறு மணிக்கே இரும்புக் கதவுகளின் பின்னால் அடைக்கப்படுகிறார்கள். அந்த இரும்புக் கதவுகள் ஆங்கிலேயர் காலத்தில் செய்யப்பட்டவை. சிறிதளவு காற்றுகூட அந்தக் கதவு வழி புகமுடியாமல் முழுவதுமாக மூடி இருக்கும். நான் அங்கு பார்த்த பெரும்பாலான நோயாளிகள் தங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை அவிழ்த்து விடுமாறு கதறுவார்கள். ஆனால், கேட்பதற்கு யாரும் இல்லை. பறவைக்கு கூட தான் விரும்பிய இடம் எல்லாம் பறக்க முடியும். ஆனால், அங்கிருப்பவர்களால் அந்த வாசலைத்தாண்டி போக முடியாது.

சமைப்பது, துணி துவைப்பது, உட்பட அங்குள்ள சகல வேலைகளையும் நோயாளிகள் தான் செய்கிறார்கள். தோட்ட வேலை களைக் கூட அவர்கள்தான் செய்கிறார்கள். சும்மா ஒரு லாஜிக்கிற்காக
கேட்கிறேன்,அவர்கள் மனநலம் சரியில்லாதவர்கள் என்றால் அவர்கள் கைகளில் கடப்பாறை போன்ற கூரிய ஆயுதங்களைக் கொடுக்கலாமா?

அங்கு இருக்கும் காவலர்கள் எல்லாம் அடியாட்கள்போல இருப்பார்கள். ஒரு சிறிய தவறு நடந்து விட்டால் கூட நோயாளிகளை தூக்கிப் போட்டு ரத்தம் வரும் வரைக்கும் மிதிப்பார்கள். ஒரு நோயாளிக்கு அவர் விரும்பிய உணவை நான் வாங்கிக் கொடுத்ததற்காக, அவரை எனது கண்முன்னால் அவர் மயக்கமாகும் வரைக்கும் அடித்தார்கள்.

இன்றுவரை கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு பத்திரிகையாளர்கள்
யாருமே செல்ல முடியாது. பத்திரிகையாளர்கள் சென்றால் அவர்கள் அங்கு நடக்கும் அநீதிகளை வெளி உலகிற்கு அடையாளம் காட்டி விடுவார்கள் என்றுதான் அவர்களை நிர்வாகம் அனுமதிப்பதில்லை. அங்கு நடக்கும் கொடுமைகளுக்குப் பதிலாக அந்த நோயாளிகளை கருணைக் கொலை செய்து விடலாம்.

நான் பார்த்த ஒரு நோயாளி சுமார் 10 வருடங்களாக யாருடனும் பேசுவது இல்லை. அங்கு நடக்கும் கொடுமைகளால் மனம் உடைந்து அவர் பேசுவதில்லை எனச் சொன்னார்கள்.

தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
ஊடகங்கள் இந்த நோயாளிகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டும். குரல் கொடுத்தால் என்னைப்போன்ற 3000 சக மனிதர்கள் நல வாழ்வு பெறுவார்கள்' என முடித்துக் கொண்டார்.

மனிதனாய் பிறந்த எல்லோருக்கும்
நிம்மதி கிடைக்க இறைவனை பிரார்த்திப்போம்!

வாழ்க மனிதம்!

27 நவ., 2018

நோக வைத்தவை-3:

ஒரு நட்சத்திர ஹோட்டலில் இரவு முழுக்கக் குடித்து, கும்மாளமிட்டு நிலைதடுமாறி இரண்டு பேர் துணையுடன் தவழ்ந்து காரில் ஏறிப்போகிற மனிதர், மறுநாள் காலை டாஸ்மாக் வாசலில் கால் இரண்டையும் பரப்பிக்கொண்டு தலைதொங்கி, போதையில் கிடக்கும் ஒருவரைப் பார்த்து 'நாஸ்ட்டி பீப்பிள்’ என்கிறார். நேற்று இரவு அவரும் 'நாஸ்ட்டி பீப்பிள்’ ஆகத்தான் இருந்தார்!

சவாரிக்காக அல்லாடி நிற்கும் ஆட்டோ மீது சர்ரென்று லத்தியை வீசி, 'எடு வண்டியை’ என்று அதட்டும் போலீஸ்காரர், சிக்னல் முனை ஷாப்பிங் மால் வாசலில் காரை நிறுத்திவிட்டுப் போனவரிடம், 'ஏன் சார் இப்படிப் பண்றீங்க?’ என்று குசலம் விசாரித்து, சலாம் அடித்து அனுப்பிவைக்கிறார். லத்தியால் ஆட்டோவில் அடித்ததைப் போல கார் டிக்கியில் அடிக்க அவருக்கு மனம் வருவது இல்லை.

'போன மாசம் வரை 550 ரூபாய்தான் டிக்கெட். இப்போ 750 ரூபாய் ஆக்கிட்டானுவலே!’ என்ற அங்கலாய்ப்புடன் ஏ.சி. பேருந்தில் ஏறுகிறவர்கள் கோயம்பேட்டில் இறங்கும்போது, 'அண்ணே மொத சவாரிண்ணே... 150 ரூபாய் குடுங்க போதும்’ என்று இறைஞ்சும் ஆட்டோக்காரரிடம், 'ஏம்ப்பா... இப்படிக் கொள்ளையடிக்கிறீங்க...’ என்று கரித்துக் கொட்டுவார்கள்.

இந்த வருடம் 5,000 ரூபாயாவது சம்பள உயர்வு இருக்கும் என்ற நம்பிக்கை பொய்த்து, '4,000 ரூபாய்தான் அதிகமாக்கியுள்ளோம்’ என்று மேலதிகாரி சொல்லும்போது இடிந்துபோகும் நமக்கு, வேலைக்கார அம்மா 200 ரூபாய் சம்பளத்தை ஏற்றிக் கேட்டால் கோபம் உள்ளுக்குள் உலை கலனாகக் கொதிக்கிறது!

சர்வீஸ் சென்டரில் காரை டெலிவரி எடுக்கும் போது, ஒரு அடி நீளத்துக்கு அவர்கள் தரும் பில்லில், ஒன்றிரண்டு விளக்கங்கள் கேட்டுப் பணம் செலுத்தும் நாம், தெருமுனை மெக்கானிக்கிடம் 'அநியாயம் பண்றப்பா!’ என்று அலுத்துக்கொள்கிறோம்.

இல்லாதவர்களிடமும் இயலாதவர்களிடமும், அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் காட்டுகிற மனநிலை ஒரு சுய திருப்தியாகவும், பல்லைக் கடித்துக்கொண்டு நாம் பொறுத்துக்கொண்ட பல விஷயங்களுக்கான வடிகாலாகவும் நமக்கு அமைந்துவிடுகிறது.

'அதிகாரத்தில் இருப்பவனிடம் அடங்கிப் போக வேண்டும்... இல்லாதவனை அதிகாரம் செய்ய வேண்டும்’ என்பதை எனக்கு, உங்களுக்கு, நமக்கு யார் சொல்லிக்கொடுத்தது?

மேலதிகாரியின் மகனிடம் 'சொல்லுங்க தம்பி...’ என்று மரியாதை பேசும் நாம், இஸ்திரி வண்டிக்காரர், ஆட்டோக்காரர், துணிக் கடை விற்பனையாளர், ஹோட்டல் சிப்பந்திகளை வயது வித்தியாசம் இல்லாமல் ஒருமையில் விளிக்கிறோம்.

மேலிருந்து கீழ் நோக்கி நகரும் அதிகாரம் ஒரு நாகரிக சமுதாயத்தின் அடையாளம் இல்லை. 'இல்லாதவர்கள் அப்படியே இருக்கட்டும்... அதுதான் நமக்கு நல்லது’ என்ற யதேச்சதிகார, ஆதிக்க மனப்பான்மை நம்மையறியாமல் நமக்குள் புரையோடிக்கிடக்கிறது.

எதிர்க்கும் சக்தி இல்லாத மனிதர்களிடம் அதிகாரத்தையும் புத்திசாலித்தனத்தையும் வெளிப்படுத்துவதன் மூலம் நாம் சுய அளவில் தாழ்ந்துபோகிறோம் என்ற படிப்பினை நமக்குச் சொல்லித்தரப்படாமலே போய்விட்டது.

கடையிலோ, வீட்டிலோ ஒரு பொருள் காணாமல் போனால் முதலில் நம் கண்கள் தேடுவது கடைநிலை ஊழியரைத்தான். இன்ஷூரன்ஸ் பாலிசி விஷயமாகப் பேச வருபவரை நடுவீட்டில் அமரவைத்துப் பேசும் நாம், தண்ணீர் கேன் கொண்டு வரும் பையனின் பின்னாலேயே போகிறோம். வசதியற்றவனுக்கும் சுயமரியாதை, கொள்கைகள், நற்குணங்கள் உண்டு என்பதை ஏன் இந்த மிடில்கிளாஸ் மனசு ஏற்க மறுக்கிறது?

அதிகாரம் படைத்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்கிற அல்லது பொறுத்துக்கொள்கிற நம் மனம், இல்லாதவனின் ஏழ்மையை மட்டும் சந்தேகக் கண்ணுடனேயே உற்று நோக்குகிறது!

'என்னது உன் புள்ள மெட்ரிகுலேசன் ஸ்கூல்ல படிக்கிறானா?’ என்று வீட்டைக் கூட்டிப் பெருக்க வரும் அம்மாவிடம் கேட்கும் கேள்விக்குப் பின்னால், 'இவருக்கு ஏது இவ்வளவு காசு?’ என்ற குரூரம் ஒளிந்திருக்கிறது.

நலிந்த மனிதர்கள் மீது நம்பிக்கைவைக்கத் தயங்குகிற சமூகம், கோழைத்தனமான சமூகம்.
'வலிமையில்லாதவன் அவனுக்கான வரம்புக்குள்தான் கனவு காண வேண்டும்’ என்று உலகில் எந்தச் சட்டமும் விதிக்கப்படவில்லை.

இல்லாதவன் எப்போதும் இயலாதவனாகவே இருந்தால், நமக்கு அது சௌகர்யம் என்று எண்ணுகிறோம். அதனால்தான் எளியவர்களின் கனவுகளைச் சீண்டுகிறோம். அதை முளையிலேயே கிள்ளி எறிய முனைகிறோம்.

பலம் படைத்தவர் களை ஒருவிதமாகவும், பலமற்றவர்களை வேறுவிதமாகவும் நடத்து வது அடிப்படை ஜனநாயக முறைக்குப் புறம்பானதாயிற்றே!

அன்றாட வாழ்க்கையில் அப்படிச் செயல் படும் நமக்கு அரசியல்வாதிகளைக் கேள்வி கேட்க என்ன உரிமை இருக்கிறது..???

சூப்பர் மார்கெட்டில் பாலீத்தீன் உறையில் அழகாக பேக் செய்யப்பட்ட வெண்டைக் காய்களை வாங்குவதற்கு முன்னால், நுனி உடைத்துப் பார்க்க உரிமை இல்லை. அங்கே வாய் பேசாமல் வாங்கிக்கொண்டு வருகிறோம்.

ஆனால், வாங்கும் பொருள் நன்றாக இருக்கிறதா என்று பரிசோதித்து வாங்க அனுமதிக்கிற வண்டிக்கார அம்மாவிடம் ஊர், உலக நியாயம் எல்லாம் பேசுகிறோம். அடக்க விலைக்கே கட்டாத நம் பேரத்தால் ஒரு கட்டத்தில் வெறுத்துப்போய், 'வேணும்னா வாங்கிக்க... வேணாட்டி போ’ என்று சொல்லும்போது, அந்த வண்டிக்காரம்மா திமிர் பிடித்தவர் ஆகிறார்.

ஒரு உண்மையை உணர்ந்திருக்கிறீர்களா..???

எளியவர்கள் பெரும்பாலும் நம் குரலுக்கு மரியாதை கொடுக்கிறார்கள். பதிலுக்கு அவர்களின் குரலுக்கு மனசைக் கொடுக்க வேண்டியது மானுடத்தின் கடமை.

அதிகாரம் எப்போதும் மேலிருந்து கீழாகப் பாய்கிறது. அந்தப் பாய்ச்சல் ஒவ்வொரு மனிதனையும் துன்புறுத்துகிறது.

அதிகாரக் கட்டமைப்பின் கடை நிலையில் இருக்கும் எளியவன், தனக்கு மேலிருக்கும் அனைவரின் அடிகளையும் தாங்கிக்கொண்டு காயங்களோடு அழுகிறான்.

'நம்மிடம் சேரும் காசு, பணம், செல்வாக்கு எல்லாம் எளியவர்களை அதிகாரம் செய்வதற்கான வாய்ப்புகள் அல்ல...’ என்பதை நாம் எப்போது உணர்வோம்?

சமூகத்தில் நம்மைச் சுற்றி நிகழ்பவை எல்லாம், 'இயலாத மனிதர்கள்தான் அதிகாரம் செய்யத் தோதானவர்கள்’ என்ற தோற்றத்தை முன்வைக்கின்றன.

லட்சக்கணக்கில் ஊழல் மோசடி புரிந்தவனுக்கு ஏ.சி. அறையில் விசாரணை நடக்கிறது. பிக்பாக்கெட் அடித்தவனைக் குத்த வைத்துக் கும்முகிறார்கள்.

பீரோவைத் திறந்து அப்பா பணத்தில் 5,000 ரூபாயைத் திருடுகிறவனை, 'பணக்கார வீட்டுப் புள்ள அப்படி இப்படித்தான் இருப்பான்’ என்று சாதாரணமாகச் சொல்லும் சமூகம், இஸ்திரி துணியைக் கொடுக்கவந்த சிறுவன் கரடி பொம்மையைக் கையில் எடுத்து ஆசையாகப் பார்த்தால், முன்னெச்சரிக்கையுடன் அந்த பொம்மையை எடுத்து உள்ளேவைக்கிறது.

இந்த உலகத்தில் எல்லா மனிதர்களும் கெட்டவர்கள் என்று சித்தரிப்பதைப் போல இந்தக் கட்டுரை சிலருக்குப் படலாம். ஆனால் நான், நீங்கள் என நம் எல்லோருக்குள்ளும் ஊறிப் போயிருக்கும் நாம் கவனிக்காத மனஉணர்வின் விவரணைகள்தான் இவை.

நியாயப்படி, அதிகாரம் என்பது இல்லாதவர்களின் ஏக்கங்களைத் தீர்க்கவும், அவர்களின் சுயமரியாதைக்கு எதிராக அநீதி நடக்கும்போது அதைத் தட்டிக் கேட்கவும் பயன்பட வேண்டும்.

இருக்கிறவன், இல்லாதவன் என அனைவரின் மனமும் கனவுகளாலும், உணர்வுகளாலும் நிரம்பியிருக்கிறது என்று நாம் ஒவ்வொருவரும் உண்மையாக உணரும்வரை அது சாத்தியமில்லை.

இங்கு எல்லா மனிதரும் ஒன்றுதான். மூச்சுக்கு முந்நூறு தடவை ஆங்கிலத்தில் கெட்ட வார்த்தை பேசுகிற அதிகாரம் படைத்த அதிகாரி பேசுவது சரி என்றால், டீக்கடை முக்கில் தமிழில் கெட்ட வார்த்தை பேசுகிற மனிதரின் பேச்சும் சரிதான்.

'3,500 ரூபாய்க்கு வாங்கின செருப்பைத் தைக்க 30 ரூபாய் கூலி கேட்கிறியே... இது அடுக்குமா’ என்ற கேள்விக்குப் பின், '3,500 ரூபாய் கொடுத்து செருப்பு வாங்குன நீங்க, அதைத் தைக்க 30 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்க’ என்ற பதிலும் இருக்கிறது நண்பர்களே!

11 ஜன., 2013

சூரியின் டைரி-61: நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை


சூரியின் டைரி-61:  நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை

குமுதம் தீராநதி 2013 ஜனவரி இதழில் வெளியான செ.சண்முகசுந்தரம் எழுதிய வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம் என்ற மிகச் சிறப்பான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
----------

காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.  தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை.  தமிழ் நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு, விளை நிலங்களை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்.  வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம் பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள், விளை நிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டு விட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல் பார்க்கும் அரசு, வங்கி அதிகாரிகள், பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக, கர்நாடக ஆளும் வர்க்கங்கள், இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பிவிடும் சுய நலக் கட்சிகள், மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள், வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு, தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச  நீதி மன்றம், களவாடப்படும் குளங்கள், ஏரிகள்.  யாரிடம் போய் முறையிடுவது?

....

பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து, தம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு, அதன் நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டு வந்து, இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து, பாம்புகளுடன் பழகி, சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என்  நினைவில் நிழலாடுகின்றன. சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவ்விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனகளாயிருந்தன. வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளை நிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.  என்ன தேசம் இது?


நன்றி: திரு செ.சண்முகசுந்தரம் மற்றும் குமுதம் தீராநதி 

8 ஜன., 2013

சூரியின் டைரி-59: நோக வைத்தவை


சூரியின் டைரி-59:   நோக வைத்தவை

ஆனந்த விகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:

வெளி நாட்டு வியாபாரி... உள் நாட்டு துரோகம்!

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அங்குள்ள வியாபார நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் லாபி செய்வதற்கென்றே அங்கு லாபியிஸ்ட்கள் இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல... கம்ப்யூட்டர் நிறுவனங்களும், பிரபல மருத்துக் கம்பெனிகளும்கூட இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்காக, பணத்தை இறைத்து லாபி செய்திருக்கும் செய்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்தே ஆதாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இதில், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைக் குளிரிவிப்பதற்கான செலவும் அடங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

....

ஆண்டாண்டு காலமாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துவிட்டு, சுய உழைப்பாலும், மூலதனத்தாலும் பல இந்தியக் குடிமக்கள் சொந்தமாக வியாபாரம் பார்க்கத் தலைப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் அவர்களை எல்லாம் அடிமைகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மத்திய் அரசு செய்கிறது என்பதுதான் வலிமிக்க நிஜம்.

அமெரிக்க லாபி செலவில், இந்தியாவுக்குள் அளிக்கப்பட்ட லஞ்சமும் உண்டா?  இதற்கு, வழக்கமான வழுக்கல் பதிலைத் தந்துள்ளது காங்கிரஸ்.  அப்படி எல்லாம் இருக்காதாம்.  ஒருவேளை இருந்து விட்டால், சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்!  நாட்டை ஏலம் விடும் மொத்த வியாபரிகள் சிக்கல் வ்ந்தால் சொல்லும் கெட்ட வார்த்தை அல்லவா இது!

....

நன்றி:  ஆனந்தவிகடன்