28 செப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-124:

நல்வாழ்க்கைக்கு  கல்வி  ஒரு  தொடக்கப்பொருள். 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-29:

பாராயோ  என்னைமுகம்  பார்த்தொருகால்  என்கவலை
தீராயோ  வாய்திறந்து  செப்பாய்  பராபரமே.   

யோக சித்தி-43: அறம் -4:

அறமென்று  அறிந்ததனை  அஞ்சாது  செய்மின்;
இறைவனருள்  காக்கும்  இனிது.

மனச்சாட்சிக்குப்  பொதுவாக,  'இது  தருமம், இது நியாயம், இது அறம்'  என்று அறிந்ததைப் பிறர் இகழ்ச்சிக்கும், இடர்களுக்கும்  பயப்படாமல்,  கலங்காமல்,  செய்மின்.  அப்படிச் செய்யும்  அறவோரை  இறைவனருளே  மகிழ்வுடன்  பாதுகாக்கும்.   

27 செப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-123:

காலத்தை  வீணாக்காதே. அது வாழ்க்கையை வீணாக்குவதாகும்.   ஏனெனில்  வாழ்க்கையே  காலத்தால்  ஆனது.   

தாயுமானவரின் பராபரக்கண்ணி-28:

சொல்லால்   அடங்காச்   சுகக்கடலில்  வாய்மடுக்கின்
அல்லால்  என்தாகம்  அறுமோ  பராபரமே.    

யோக சித்தி-42: அறம் -3:

'இவ்வழிசெல்'  என்று  உள்எச்சரிக்கை  செய்கின்ற
தவ்வழியில்  அச்சமறச்   செல். 

நமது  உள்ளத்தே  நின்று  சூட்சுமமான  ஒரு பொருள்,  'இதோ  இந்த  வழியிலே  நட,  கவனம்'  என்று  அடிக்கடி  அறிவிக்கிறது;  'அந்தத் தப்புவழியே செல்லாதே'  என்று  எச்சரிக்கை செய்கிறது.  அதுவே  மனச்சாட்சி.  அது சரிஎன்னும் வழியில் அஞ்சாது  வீர  உறுதியுடன்  செல்லுக.       

23 செப்., 2010

தாயுமானவரின் பராபரக்கண்ணி-27:

உற்றறியும்  என்னறிவும்  உட்கருவி  போற்சவிமாண்
டற்றுமின்பம்  தந்திலையே  ஐயா  பராபரமே.     

இன்றைய சிந்தனைக்கு-122:

நீ  தின்பது  என்னவென்று  சொல்;  நீ  யாரென்று  சொல்கிறேன்.   

யோக சித்தி-41: அறம் -2:

மன்னு  மனச்சாட்சி  மன்னவன்சொல்  என்னவென
உன்னி  நடத்தல்  உயர்வு.

நமது  உள்ளம்  அரியணை;  அதில்  ஒரு  மன்னவன்  மன்னியுல்லான்;  என்றும்  நிலை பெற்றுள்ளான்.  அவன் நமது  பேச்சுக்களையும்,  நடத்தைகளையும்  உடனிருந்து  கவனிக்கிறான்.  அவன்  நல்லதைச் சொல்லுகிறான்.  அவன்  என்ன  சொல்லுகிறான்  என்று  நெஞ்சைத் தொட்டுப் பார்த்து,  நன்றாக  உன்னிப்  பார்த்து  ஆராய்ச்சியுடன்  நடத்தலே  மிகவும்  மேலானது.    

21 செப்., 2010

சூரியின் டைரி-32: மாயையும் நானும்

எல்லாம்  மாயை,  எல்லாம்  பொய்;   வாழ்வே  மாயம்,  மண்ணாவது  திண்ணம்  என்று  வேரில்  வெந்நீர்  ஊற்றும்  தத்துவங்களுக்கு,   நம் உற்சாகத்தை,  நம்பிக்கையை,  செயல்  ஆற்றலைக்  குறைத்து,  நம் முயற்சிகளுக்கு  முட்டுக்கட்டை  போடும்  சிந்தனைகளுக்கு  இந்நாட்டில் பஞ்சமில்லை;  மாயாவாதம்தான்  பாரதத்தைச் சீரழித்து,  இந்தியர்களை  வெள்ளையர்களின்  அடிமையாக்கி  வைத்தது  என்று  மாயாவாதத்தைக்  கடிவோர் உண்டு.

இது  தவறு;  மாயை  என்றால் என்ன  என்பதைச் சரியாகப்  புரிந்துகொண்டு,  வாழ்க்கைப்  பாதையைச்  சரியாக  அமைத்துக் கொண்டால்  பிறவிப்பயனை  அடையலாம் என்பது  எதிர்வாதம்.

இருக்கட்டும்,  மாயை  என்றால்  என்ன? உண்மையைப் பொய்யாகவும்,  பொய்யை  உண்மையாகவும்,  இருப்பதை  இல்லாததாகவும்,  இல்லாததை  இருப்பதாகவும்  காட்டும்;  ஒன்றுமில்லாததை  அதுவே  எல்லாம்  என்பது  போலவும்,  முக்கியமானதை  ஒன்றுமில்லாதது போலவும்  காட்டும் வல்லமை  மிக்கது  மாயை.  பந்தம்,  பாசம்  போன்ற  பலவற்றாலும்  நம்மைப்  பிணைப்பது  மாயை.  வாழ்வின்  மேலான  குறிக்கோளை  மறக்க வைத்து,  நம்மை  அறியாமை  இருளில்  மூழ்க  வைப்பது  மாயை.  நம் அறிவுக்கண்ணை  மறைத்து,  நம்மைக் குழம்ப வைத்து,  தடுமாறவைத்து,  தவிக்கவைத்து,  தவறிழைக்கவைத்து,  தண்டனையில் சிக்கவைத்து,  பாதை  மாறவைத்து,  நம் வாழ்வை  சீரழிக்கும்  ஆற்றல்  கொண்டது  மாயை என்றெல்லாம்  கூறப்படுகிறது.  சரி  இருந்துவிட்டுப் போகட்டும்;  மாயையை  எவ்வாறு  அடையாளம்  கண்டுகொள்வது?  அதை  எவ்வாறு  வெல்வது?

 அது  அவ்வளவு  எளிதல்ல. பெரும்  ஞானிகளும்,  மகான்களும், முனிவர்களும்கூட  மாயையிலிருந்து  மீளமுடியாமல், கட்டுண்டு, தடுமாறியிருக்கின்றனர்  என்று  படிக்கிறோம். மாமுனிவர்  வசிஷ்டர்  வாயால்  பிரம்ம ரிஷி  என்று  போற்றப்பட்ட  விசுவாமித்திர  முனிவர்  மாயையில் சிக்குண்டு தடுமாறவில்லையா?  பூமியில்  பிறந்த  அனைத்து  உயிர்களுக்கும்  மாயை  ஒரு மாபெரும்  தடைகள்;  ஒவ்வொருவரும்  முழுமை  பெற  தடையைக்  கடன்தேயாக வேண்டும்; மாயை என்பது அச்சுறுத்தும்  ஒரு  தவிர்க்கமுடியாத  தேர்வு;  இதில் தேராவிடில்  வாழ்க்கையில் தோற்றவராவோம்.

சீதையைப்  பிரிந்து,  துயருற்று  ஸ்ரீ ராமன்  கண்ணீர்  விட்டதை, பிரம்மமே  மாயையால்  கட்டுண்டு  அழுதது  என்பார்  ஸ்ரீ  ராமகிருஷ்ண பரமஹம்சர்.  வராக அவதாரம் எடுத்த மஹா விஷ்ணு,  அசுரனை வதம் செய்தபின்னும்,  வீடு திரும்பாமல்,  மாயையால் கட்டுண்டு  பன்றியாகத்  தன் குட்டிகளுடன்  திரிந்தார்.  தேவர்கள் அவரிடம் வந்து  தேவலோகம் திரும்பவேண்டியும்,  அவர்  செவிசாய்க்கவில்லை.  இறுதியில்  சிவபெருமான்  தோன்றி  தனது  சூலாயுதத்தால்  அந்தப் பன்றியை வீழ்த்த,  மாயை  எண்ணிச்  சிரித்தவாரே  மகாவிஷ்ணு  வைகுண்டம்  திரும்பினார்  என்று  படித்திருக்கிறேன்.  இதையெல்லாம் என்னும்போது  மாயையின்  வலிமையை  உணர முடிகிறது.

என் வாழ்வில் மாயை  எப்படியெல்லாம்  விளையாடியிருக்கிறது!  குறிப்பாக, எனது  போது  வாழ்க்கையில்.  என்  வாழ்வின்  ஒரு  கட்டத்தில்  என்னையுமறியாமல்  பொதுவாழ்வில்  நாட்டம் கொண்டு,  ஈடுபட  ஆரம்பித்தேன்.  'ஈடுபட'  என்பது  மிகச்  சரியான  வார்த்தை.  ஏனெனில்  ஏதாவது ஒன்று  மனதிற்குப் பிடித்து, அதைப்  பற்றி விட்டால்  அதிலேயே மூழ்கிவிடுவேன்; பைத்தியமாகிவிடுவேன்.  இது என்னுடைய பெரிய குறைபாடு.  இதனால்  நான்  அடைந்த  கஷ்டங்கள்,  துன்பங்கள், துயரங்கள், மன வேதனைகள் கொஞ்சநஞ்சமல்ல.  

அலுவலக மனமகிழ் மன்றம்,  அலுவலக உணவகம்,  ஆரோக்கிய நிலையம்  என்ற  ஒரு  ஹோமியோ  பயிலகம் மற்றும்  சேவை  மையம்;  அப்ரோச்  எனும்  தூய  ஹோமியோபதி  பிரச்சார சங்கம்,  FASOHD   எனும்  மனித  மேம்பாட்டு  அறிவியல்  பேரவை  ஆகியவை  நான்  செயல்பட்ட  அமைப்புகள்.  இவையனைத்தும்  ஒன்றன் பின்  ஒன்றாக,  ஒவ்வொன்றும்  ஒரு  கால கட்டத்தில்  என்  வாழ்வில்  வந்தவை.  எதிலுமே  என்னால்  நிலைத்திருக்க முடியாமல்  வெளியேறவேண்டிய  கட்டாயம்  ஏற்பட்டது.  ஒரே  பைத்தியமாக  இருந்துவிட்டு - செயல்பட்டுவிட்டு - சாதனைகள் புரிந்துவிட்டு -  ஆளைவிட்டால் போதும்  என்று  துண்டைத் தோளில் உதறிப் போட்டு வெளியேறி இருக்கிறேன்.

என் மனைவி  என்னைக்  கேலி செய்வாள்:  "எதிலாவது நிலைத்து இருந்திருக்கிறீர்களா?  எல்லாவற்றையும்  பாதியிலேயே விட்டுவிட்டு  வெளியேறி விடுகிறீர்களே;  நீங்கள்  பொது  வாழ்க்கைக்கு  லாயக்கில்லாதவர்"   "ஒன்று  இந்த  எல்லை,  அல்லது  அந்த  எல்லை;  எல்லோரையும்போல்  'நார்மலாக'  இருக்கக்கூடாதா?"  உண்மைதான்,  நான்  ஒரு  துருவ சஞ்சாரி.

ஒன்றன்பின்  ஒன்றாக, உதைவாங்கி ஒன்றைவிட்டு  வெளியேறி -  சிறிய  இடைவெளிக்குப்பின்  அடுத்தது -  என்று  உலா வந்திருக்கிறேன்.  ஆனால்  எல்லா  இடத்திலும்  ஒரே கதைதான்.  சிந்திப்பேன் ஒவ்வொரு முறையும்:   என் தவறென்ன?  நான்  என்ன  செய்திருக்கவேண்டும்?    மாயையின் மயக்கமா?  கடும் பற்றா?  சகிப்புத்தன்மை இன்மையா?  தேர்ந்த அமைப்பு  சரியில்லையா?

ஒரு நாள்  திடீரென்று  ஒரு  வாசகம் என் மனதில் பட்டது, சுட்டது:  "Maya is nothing but Name and Form "   மனதில் ஒலித்த  இந்த  வாசகத்தை  என்  பொது வாழ்க்கையில் பொருத்திப் பார்த்தேன்.  அநேகமாக  எல்லா அமைப்புகளிலும் இந்தப்  பிரச்சினை இருக்கிறது என்று நினைக்கிறேன்.  உயிரைக் கொடுத்து, சிந்தித்து, செயலாற்றுபவர் ஒரு புறம்;  அவர்கள் ஓரம் கட்டப்படுவர், காணாமல் போய்விடுவர்.  எதுவும் செய்யாமல் எல்லாவற்றையும் தனதாகக்  காட்டிக்கொண்டு,  எல்லாவற்றிலும் தம் பெயரைப் பதித்துக் கொண்டு, மேடைகளை ஆக்கிரமித்து,  புகைப்படங்களில் நிறைந்து,  தாமே எல்லாம்  என்பதுபோல்  வலம் வரும் கூட்டம் மறுபுறம்;  இதுதான் உண்மை;  இதுதான் நாட்டுநடப்பு;  பெயர் மயக்கம்,  புகழ் மயக்கம்,  மேடை மயக்கம்,  தன் மயக்கம் என்று இப்படிப்  பல மயக்கங்கள் மனிதனுக்கு என்று மாயை நான் மொழி பெயர்த்தேன்.  எதிலும் பெயர் வராமல்,  முக்கியத்துவம் பெறாமல்,  மேடையை ஒதுக்கி,  புகைப்படம், காட்சி என்று வரும்போது காணாமல் போதல் போன்ற வழிமுறைகளைப்  பின்பற்றினேன்.  ஏனெனில்  நான் பொது வாழ்க்கைக்கு வந்தது பெயருக்கும் புகழுக்காகவும் அல்ல;  என் வாழ்வில் ஒரு நிறைவில்லாமல் இருந்தது;  பொது வாழ்க்கையில் பலருக்கும் பயன்பட வாழ்க்கையில் அது கிடைப்பதாக உணர்ந்ததால் பொது வாழ்க்கையில் தொடர்ந்தேன். அதன் பின்  என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது;  நிறைய சாதிக்க முடிந்தது;  மன நிறைவு கிடைத்தது.   இதில் வேடிக்கை  என்னவெனில்  பெயரும், புகழும் என்னைத் தேடி வந்தது.  ஆனாலும்  இறுதியில் கடைசி அமைப்பிலிருந்தும் வெளியேறவேண்டிய நிலை.  எனது வழிமுறைகள் போதவில்லை.  இன்னும் ஏதோ தேவைப்பட்டது.  மாயைக்குப்  பல பரிமாணங்கள்  உள்ளதென்பதை அப்போதுதான்  உணர்ந்தேன். மாயையை முற்றிலுமாக அறிந்து,  அதிலிருந்து மீண்டாலன்றி,  துன்பம்தான்.    தற்போது நான் எந்தப் பொது அமைப்பிலும் இல்லை.

ஆனால்  ஒன்று - என் முயற்சிகள், செயல்பாடுகள்   அனைத்தும்   வீண்  என்றோ, அதனால் எனக்கு   எந்தப் பயனும் இல்லை  என்றோ  நான் கருதவில்லை.   நிச்சயமாக  ஒவ்வொரு அமைப்பிலும் நான்  வளர்ந்திருக்கிறேன்;  பாடம் கற்றிருக்கிறேன்;  கொஞ்சம் கொஞ்சமாக தெளிவடைய ஆரம்பித்திருக்கிறேன்.  இவை  போதாவா?

விவேகானந்தரின்  வாசகம் ஒன்று  நினைவிற்கு வருகிறது:  "Man is not travelling from error to truth but smaller truth to higher truth ."   என் பொதுவாழ்க்கையும் அப்படித்தான் என்று நினைக்கிறேன்.  அதை  பெருமையை நோக்கிய ஒரு பயணமாகக் கருதினால் (Search for the Ultimate Truth), மன வேதனை குறைகிறது,  ஆறுதல்   கிடைக்கிறது, தொடர்ந்து நடைபோட  உத்வேகம் பிறக்கிறது.
 

இன்றைய சிந்தனைக்கு-122:

வைகறைத்  துயில்  எழுந்தால்   உடல்  ஆரோக்கியம்  பெறும்;   அறிவு  வளரும்;  செல்வம்  பெருகும்.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-26:

அப்பாஎன்  எய்ப்பில்வைப்பே  ஆற்றுகிலேன்  போற்றிஎன்று
செப்புவதல்லால்  வேரென்  செய்வேன்  பராபரமே.      

யோக சித்தி-40: அறம் -1:

தானு(ம்)   நிறைவுற்றுத்  தன்னவரும்  இன்புறுதற்
கான  ஒழுக்காறே  அறம்.

மனிதனுக்கு  இரண்டு  கடமைகள் உள்ளன.  ஒன்று  தான்  பூரணம் பெறுதல்;  இரண்டு  தன்னவராகிய  மனித சமுதாயம்  பூரணம்  பெறச் செய்தல்.  இந்த  இரண்டு  நிறைவேற்றத்திற்கும்  ஏற்ற  ஒழுக்காறே,  சன்மார்க்கமே  அறம்.     

20 செப்., 2010

இன்றைய சிந்தனைக்கு-121:

முழு  ஈடுபாட்டுடனும், கவனத்துடனும்  வேலை  செய்கிறவன்  நிபுணனாகிறான்.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-25:

தாகமறிந்து  இன்பநிட்டை  தாராயேல்  ஆகெடுவேன்
தேகம்  விழுந்திடின்  என்செய்வேன்  பராபரமே.      

யோக சித்தி-39: உலக வாழ்வு-5

அகில  வாழ்வத்தனையும்  ஆன்ம  விரிவாக
நிகழுவதே  உண்மை  நிறைவு.

இந்த உலக வாழ்வெல்லாம்  ஆன்மாவின் விரிவாக இயலுவதே உண்மையான பூரணத் தன்மையாகும்.  மனித வாழ்வு தெய்வ வாழ்வாக நிறைவேற்ற வேண்டும்.  உலகம் ஆனந்த நிலையமாக வேண்டும்.  அதற்கு வழி என்ன?  மனிதனிடம் குடிகொண்டுள்ள தெய்வானந்தத்தைத் தேடியடைய வேண்டும்.  அந்தத் தெயவானந்தமே, சுத்தான்மாவாக ஒவ்வோருள்ளத்தும்  விளங்குகிறது.    

19 செப்., 2010

சூரியின் டைரி-31: செப்டம்பர் பதினொன்று சிந்தனைகள்

முதலாவதாக, இந்த செப்டம்பர் பதினொன்று அன்று விநாயகர் சதுர்த்தி.  சென்னையில் மகள் வீட்டில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடினேன்.  பிறகு உறவினர் வீட்டிற்குச் சென்றேன்.  அங்கும் மோதகம் உண்டு விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டம்.  தமிழ்நாட்டில் எந்த ஊருக்குச் சென்றாலும் வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை ஒரு சிறிய வினயாகர் கோவிலாவது இருக்கும்.  பல இடங்களில் கூரையும் இருக்காது, கதவும் இருக்காது.   எந்த நல்ல காரியத்தைத் தொடங்கினாலும் பிள்ளையார் சுழியுடன், பிள்ளையாரை வணங்கி ஆரம்பிப்பது நமது மரபு.  ஒரு உருண்டை மாவிலோ, சானத்திலோ பிள்ளையாரை உருவாக்கி விடலாம்.  பிள்ளையார் என்றாலே  இந்த எளிமைதான்  எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது.   

சென்னையில் வினயாகர் சதுர்த்தியை முன்னிட்டு பல இடங்களில் சாலையோரம் ஐந்தடி, பத்தடி உயர வண்ண வினயாகர் சிலைகள் அலங்கரித்தன.  மகாராட்டிரத்தைப்போல் தமிழ்நாட்டிலும் விநாயகர் வழிபாடும், குறிப்பாக வினயாகர் சதுர்த்திக் கொண்டாட்டமும் சிறப்பாகிக் கொண்டே போகிறது என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். 

இரண்டாவதாக,  இந்த செப்டம்பர் பதினொன்று அன்றுதான்  தன்னையாரும் எதுவும் செய்துவிடமுடியாது என்ற அகந்தையில், இறுமாப்பில் இருந்த வல்லரசான அமெரிக்காவின் ஆணவத் தலையில் இடி விழுந்த நாள்.  இரட்டைக் கோபுரங்களைத் தகர்த்து அல்-கொய்தா  அமெரிக்காவை அரளச் செய்த நாள்.    ஆப்கானிஸ்தானில் சோவித் ரஷ்யாவிற்கு  எதிராக அமெரிக்கா வளர்த்துவிட்ட  அல்கொய்தா  அவர்கள் தலையிலேயே மண்ணைப்போட்ட  நாள்.  அதன் பின்னரும் படிப்பினை பெறாமல், இந்தியா போன்ற நாடுகளில் பயங்கரவாதம் தலை விரித்தாடுவதைக்  கண்டுகொள்ளாமல், பயங்கரவாத நாடான பாகிஸ்தானுக்கு இன்றுவரை மேலும் மேலும்  ஆயுத தளவாடங்கள் வழங்கிவருவதும், பாகிஸ்தானுக்கு வழங்கப்படும் உதவிகள் அனைத்தும் பயங்கரவாதத்திற்கு துணை புரிகின்றது என்ற உண்மையை இன்னும் உணராததும்தான் வேதனையான உண்மை.  "வரலாற்றிலிருந்து  நான் கற்றுக் கொண்ட உண்மை, அதிலிருந்து யாரும் எதுவும் கற்றுக் கொள்வதில்லை என்பதுதான்" (I have learnt from History that people seldom learn anything from it) என்று எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.   நோக்கம் எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும்,  வழிமுறைகள் தவறாக இருந்தால் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்ற மாபெரும் உண்மையை யாரும், குறிப்பாக  ராஜிய பாரம்  சுமக்கும் எவரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.  இது உலகத் தலைவர்கள் அனைவருக்குமே பொருந்தும். 

மூன்றாவதாக மஹாகவி பாரதியின் பிறந்த நாள். சமீப காலமாக  பாரதி பற்றிய நூல்களைத் தேடித் தேடி  படித்துவருகின்றேன்.  தற்போது பாரதி கட்டுரைகளைப் படித்து வருகிறேன்.  பழனியப்பா  பிரதர்ஸ் பதிப்பித்து வெளியிட்டுள்ள  இந்த அருமையான 571 பக்கங்கள் கொண்ட இந்த அற்புதமான நூல் (விலை ரூபாய் தொண்ணூறு மட்டும்)  அனைவரும் படிக்கவேண்டிய ஒன்று, குறிப்பாக பாரதி அன்பர்கள்.  பாரதியின் மேன்மையான சிந்தனைகள் சிலிர்க்க வைக்கின்றன.  இதிலிருந்து பாரதியின் சில சிந்தனைகளை மட்டுமாவது இந்த வலைப்பூவில்  பின்னர்  பதிவு செய்யலாம் என்று நினைக்கிறேன்.  (பாரதியின் படைப்புகள் அனைத்தையும்  நாட்டுடமையாக்கிய தமிழக அரசிற்கு நன்றி!).  தற்போது அவரது ஒரே ஒரு சிந்தனையை மட்டும் இங்கே பதிவு செய்து இதை நிறைவு செய்கிறேன்: 

"கோவிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி;  தெய்வத்தை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி;  பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால், தெய்வம் அருள் புரியும்.  துளிகூட, ஓர்  அணுகூட  மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில், அவனே ஈசுவரன்."

தாயுமானவரின் பராபரக்கண்ணி-24:

மாறா  அநுபூதி  வாய்க்கின்  அல்லால்  என்
சித்தம்  தெளியாதென்   செய்வேன்  பராபரமே.  

யோக சித்தி-38: உலக வாழ்வு-4

வினையுலகை  அஞ்சாதவீரன்  போல்  வெல்க
மன  உறுதியாலே  மகிழ்ந்து.

இந்த வினையுலகை மாயை  பந்தம்  என்று  அஞ்சி  ஓடக்கூடாது.  இதை  அஞ்சாத  வீரனைப்போல  வெல்ல  வேண்டும்.  எதனால் வெல்வது?  மன உறுதியினால்.  மனஉறுதி  எப்படி  வரும்?  'இரு விகார  அலைகள்  யானல்ல;    நான்  ஆழி, நான்  எல்லையற்ற  ஆன்மா'   என்றறிந்தால்  மனம் உறுதியாகும்.  ஆத்மஜயத்தால்  உலகை  வெல்லலாம்.  இறைவனை  உள்ளே  கண்டோருக்கு  இயற்கை  அடிமையாகும்.

இன்றைய சிந்தனைக்கு-120:

சூழ்நிலை மனிதனின் ஆதிக்கத்திற்கு அப்பாற்பட்டது.  ஆனால்  ஒழுக்கம்  அவனது ஆதிக்கத்தில் உள்ளது.

5 செப்., 2010

சூரியின் டைரி-30: ஆசிரியர் தின சிந்தனைகள்

இன்று நாடெங்கும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.  முனைவர் எஸ்.இராதாகிருஷ்ணன் குடியரசுத் தலைவர், நாட்டின் முதற் குடிமகன், புகழ் பெற்ற சிந்தனையாளர் என்ற அடையாளங்களை விட ஒரு ஆசிரியர் என்பதையே பெருமையாக நினைத்தார்.  அதன்படி  அவரது  பிறந்தநாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.  இந்த நன்னாளில் நாட்டின் வருங்காலச் சிற்பிகளை உருவாக்கும் உன்னத வாய்ப்பைப் பெற்றுள்ள  ஆசிரியப் பெருந்தகைகளுக்கு எனது பணிவான வணக்கங்களும், ஆசிரியர் தின வாழ்த்துக்களும்.

இத்தருணத்தில் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி பற்றிய என்னுடைய சிந்தனைகளை இங்கே பதிவு செய்ய விரும்புகின்றேன்.    

நமது பாரம்பரிய மிக்க சமுதாயத்தில் அன்னை தந்தையோடு குருவையும் தெய்வமாக வணங்கும் பழக்கம் இருந்தது. இதைக் கருத்தில் கொண்டால்  அன்றைய நமது கலாச்சார மேன்மைக்கும், இன்றைய சரிவிற்கும்  காரணம் புரியும்.  ஆதர்ஷ ஆசிரியர்களும் சரி, லட்சிய மாணவர்களும் சரி, இன்றைக்கு அருகிப் போய்விட்டார்கள்.  கல்வியே தரம் தாழ்ந்து, ஒரு கேவலமான வியாபாரமாகி விட்டது.  ஆனால் இன்றைக்கும் மேன்மையான ஆசிரியர்களும், அவர்களைப்போற்றும் மாணவர்களும் இல்லாமலில்லை.  எண்ணிக்கைதான் குறைந்துவிட்டது.

மனிதமேம்பாட்டு அறிவியல் அமைப்பில் இருக்கும்போது நண்பர்களுடன் விவாதித்திருக்கிறேன்.  ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க நல்ல ஆசிரியர்கள் தேவை;  நல்ல ஆசிரியர்கள் இல்லாமல் நல்ல மாணவர்கள் இல்லை; நல்ல மாணவர்கள்தான் நல்ல பிரஜைகள் (குடிமகன்கள் என்ற வார்த்தைக்கு இன்று அர்த்தம் வேறு, ஆகவேதான் பிரஜைகள்);  நாளை நாட்டின் முக்கிய பொறுப்புகளை வகிக்கப் போகிறவர்கள்; நாட்டின் உயர்வு அவர்கள் கையில்தான்.  இந்த எண்ணத்தில்தான் பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும்,  பல்கலைக்கழகங்களுக்கும் சென்று,  சீரிய சிந்தனைகளை விதைக்க, விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு சிறிய அளவில்,  ஏதோ எங்களால் இயன்றவரை முயன்றிருக்கிறோம்.   ஆசிரியர்களோடும், மாணவர்களோடும் கலந்துரையாடி, கருத்துப் பரிமாற்றம் செய்துகொள்வோம்.  எங்கள் அமைப்பிலேயே பல லட்சிய ஆசிரியர்கள் இருந்தார்கள்.

கல்வித்துறையில் அரசியல்வாதிகளும், வியாபாரிகளும் கால்வைத்த பிறகு கல்வித்துறை மிக மோசமான நிலையை அடைந்து விட்டது.  சொல்லிக்கொள்ளலாம், ஆண்டுக்கு அதிக பட்ச பொறியாளர்களை, பட்டதாரிகளை உருவாக்குகிறோம் என்று.  அப்படி உருவானவர்கள் வெளிநாடுகளில் பல சாதனைகள் படைத்து, நாட்டுக்குப் பெருமை தேடித் தருகிறார்கள், நிறைய அந்நியச் செலாவணி ஈட்டித் தருகிறார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை.   ஆனால் கல்வியின் அடிப்படை வெறும் அறிவைப் புகட்டுவது,  சாதனையாளர்களை உருவாக்குவது  மட்டுமல்ல, உயர் பண்புகளை ஊட்டுவதும் தானே.  அப்படிப் பண்பாளர்களை உருவாக்கி இருக்கிறோமா?  எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும் பொய், பித்தலாட்டம், அநியாயம், அராஜகம், லஞ்ச லாவண்யம்; நேர்மையான வழியில் சம்பாதிக்க வழிகள் இருந்தாலும், பேராசையால் எப்படியாவது குறுக்கு வழியில் நிறையப் பணம் குவிக்கவேண்டும், அளவில்லாத சொத்து சேர்க்கவேண்டும் என்ற மனப்பான்மையல்லவா எங்கும் மேலோங்கியிருக்கிறது. 

நான் ஆசிரியர்களை மட்டும் ஏதோ குறைகூறுகிறேன் என்று எண்ணவேண்டாம்.  இது ஒரு முக்கிய சமுதாயப்  பிரச்சினை.  இதன் அடிப்படை என்ன?  இந்தச் சரிவிலிருந்து மீள  என்ன வழி?  என்று அனைவரும் ஆழமாகச் சிந்தித்துச், செயல்படவேண்டிய தருணம் இது.  இதற்கு மேலும் கீழே போக முடியாது. 

கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம் வாட்டி வதைக்கும் இந்நாளில் ஆசிரியப் பணிக்கு வருபவர்களெல்லாம் விரும்பி, லட்சியத்தோடு அந்தத் துறைக்கு வருகிறார்கள் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்.  ஏதோ ஒரு வேலை, இதுதான் கிடைத்தது, என்பதுபோல் ஆசிரியத் துறையில் உள்ளவர்கள்தான் இன்று அதிகம்.  அதிலும் என் தலையெழுத்து, இதில் வந்து மாட்டிக் கொண்டேன் என்று சொல்பவர்களும் நிறைய இருக்கிறார்கள்.  பெரும்பாலும் கையூட்டு இல்லாமல் எந்த வேலையும் இல்லை என்பதும் இன்றைய நிலை.  பெரும்பாலும் லட்சக் கணக்கில் கொடுத்து வேலைக்கு வருகிறார்கள்.  இப்படிப்பட்டவர்கள் எப்படி மாணவர்களுக்கு லட்சிய ஆசிரியர்களாக அமையமுடியும், நல்ல வழிகாட்ட முடியும், உயர் பண்புகளை ஊட்டமுடியும்?    நாட்டின் நலனில், எதிர்காலத்தில் அக்கறை உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும்.   

2 செப்., 2010

சூரியின் டைரி-29: கண்ணன் வந்தான், கண்ணன் வருவான்!

நேற்று தொலைக்காட்சியில் காலை நேரத்திற்கேற்ற நல்ல பக்திப் பாடல் கேட்கலாம் என்ற எண்ணத்தில் சேனல் மாற்றம் செய்துகொண்டே வந்தேன்.  எதிர்பார்த்ததுபோல் மனதிற்குப் பிடித்த பாடல் கிடைத்தது.  ராமு திரைப்படத்தில் வரும் "கண்ணன் வந்தான், எங்கள் கண்ணன் வந்தான்" ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.  பாடலில் லயித்தேன், மனம் கசிந்தேன்.  பாடல் முடிந்தபின்னும் மனம் அந்தப் பாடலிலேயே இருந்தது.  பொறி தட்டியது.  நேற்று ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, கோகுலாஷ்டமி.

கண்ணன் திருவடி எண்ணுக மனமே என்று மனதை ஓடவிட்டேன்.  கண்ணனின் லீலைகள் மனத்திரையில் ஓடின.

கோகுலத்தில் பிஞ்சுப் பாலகனாக வெண்ணை திருடி, குறும்புகள் செய்து கோபியர்கள் மனம் கொள்ளைகொண்ட கோபிகிருஷ்ணன்;  ஆயர்பாடிச் சிறுவர்களோடு ஆநிறை மேய்த்து, விளையாடிக் களித்த கோபாலகிருஷ்ணன்; ராதையின் பேரன்பில் கட்டுண்ட ராதாகிருஷ்ணன்;  வேங்கடத்தைக் குடையாகப் பிடித்த வேங்கடகிருஷ்ணன்; வாழ்க்கையே ஒரு மாயா  பஜார் என்று  காட்டிய மாயக்கண்ணன்;  பார்த்தனுக்கு மட்டுமன்றி, பாருலகோர் அனைவருக்கும் மாயையிலிருந்து விடுபட கீதை உரைத்த கீதகிருஷ்ணன்; வாழ்க்கை முழுவதையும் ஒரு யோகமாக வாழ்ந்துகாட்டிய யோகேஷ்வர் கிருஷ்ணன்;  எதிலும் வெற்றி, எல்லாவற்றிலும் வெற்றி என்று வெற்றி கொண்ட ஜெயகிருஷ்ணன்;  மெய்யடியார் குறை தீர்க்க ராமனாகவும், கிருஷ்ணனாகவும் வந்த ராமகிருஷ்ணன்;  ஆதி அந்தமற்ற அனந்தகிருஷ்ணன்; கிருஷ்ணன் எத்தனை கிருஷ்ணனடி! 

பாரதிக்கு கண்ணன் - மெய்க்காதலன், உயிர்க்  காதலி, தீராத விளையாட்டுப்பிள்ளை, ஆருயிர்த் தோழன், ஆதர்ஷ சேவகன்.  கண்ணதாசனுக்கு கானம் பாடிய ஸ்ரீ கிருஷ்ணன்.

என் சிறுவயதில் என் அன்னை ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி அன்று மாக்கோலமிட்டு, கண்ணனின் பிஞ்சுப் பாதங்கள் வீட்டுக்குள் வருவதுபோல் வழி நெடுக பாதச்சுவடுகளைப் பதித்தது, ஸ்ரீ கிருஷ்ணனுக்குப் படைத்த  தின்பண்டங்கள் பிரசாதமாக, அவற்றை உண்டு மகிழ்ந்தது எல்லாம் நினைவில் ஆடின.

எப்போதெல்லாம் அதர்மம் தலை தூக்குமோ, அப்போதெல்லாம் அதை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட மீண்டும் மீண்டும் வருவேன் என்று கீதையில் ஆறுதல் வார்த்தைகள் நல்கினான். அவன்  இன்று அராஜகமும், அக்கிரமும், அநியாயமும், அடாவடித்தனமும் மலிந்து அதர்மத்தின் உச்சத்தில் வாழ்கிறோம்.  இதற்கு மேலும் எங்களால் தாங்க முடியாது.  கண்ணா!  நீ வரமாட்டாயா, இந்தக் கம்சர்களை வதம் செய்யமாட்டாயா, எங்கள் உள்ளத்தைத்  தூய்மைப்படுத்தி, கோவிலாக்கி, அதில் நீ வந்து குடியேற மாட்டாயா , எங்கள் மனக் குழப்பங்கள், மடமைகள் நீக்கி நாங்கள் முழுமை பெற வழிகாட்ட  மாட்டாயா  என்று மனம் ஏங்குகிறது.

கண்ணன் வருவான்!
நிச்சயம் வருவான்!! 
அவன் வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருப்போம்!!!