31 டிச., 2007

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-2:

ஆயிரம் கவிஞர்க்கு பாலூட்டியும்
வற்றாத மார்பு...
ஓ, வெண்ணிலா!


வாகனம் முன்னோக்கி விரையும்,
மரம் பின்னோக்கி ஓடும்,
வயதும், வாய்ப்பும்.


அடைமழை
அமோக அறுவடை,
மருந்துக் கடைகளுக்கு!


"சூரியனைக் கிள்ளி" (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

26 டிச., 2007

கவிஞர் ஜனநேசனின் ஹைகூ கவிதைகள்-1

வாழ்க்கை எனும் விஸ்வரூபத்தை ஹைகூ எனும் வாமன அவதாரத்தில் அடக்குகிற உரிமை கவிஞர்களுக்கு உண்டு. ஆனால் ஒன்று மட்டும் சர்வ நிச்சயம். கவிதை எவ்வளவு நீண் டாலும் சரி, எவ்வளவு சுருங்கினாலும் சரி, அது வாழ்வின் பிரதிபலிப்பாகத்தான் இருக்கும். மனிதன் கண்டுபிடித்த எந்த விஷயத்தில்தான், மனிதன் வெளிப்படாமல் இருந்திருக்கிறான்?...

இதற்கு கச்சிதமான எடுத்துக்காட்டாகச் சில ஹைகூ கவிதைகள்:
கும்பிட்டு இருந்தால் சோறு வருமோ
விரல்களை விரி தாமரையே
சூரிய சக்தி கிட்டும்
எனும்போது வாழ்வின் ஒட்டு மொத்தமான பிம்பம் கிட்டிவிடுகிறது.அதிலும் கவிஞர் ஜனநேசனுக்கு மிகவும் இளகிய மனசு. சகஉயிர்களிடம் அன்பைப் பொழிகிறார்.
நெல்கட்டு சுமக்கும் காலுக்கு
ஒத்தடம் தரும்
வரப்புப்புல்லின் நன்றி
வரப்பிலே நெற்கதிரைச் சுமந்து கொண்டு விடுவிடுவென்று நடக்கிற கால்களை நாமும் தான் பார்த்திருக்கிறோம். ஆனால் இப்படியொரு நினைப்பு வரவில்லையே. என்ன செய்வது, நாம் கவிஞர்கள் இல்லையே!
பிற உயிர்கள் பால் இவ்வளவு நேசம் காட்டுகிற கவிஞர் தன் உயிரை ஈந்த அந்த உயிரை மறப்பாறா? ஹைகூவில் ஆத்மார்த்த நமஸ்காரம் செலுத்தி விடுகிறார்.
மெல்ல முடி எடுங்கள்
பிள்ளைக்கு வலிக்கும்
படபடத்து வேகும் அம்மாவுடல்.
இவரின் அன்பு எல்லையில்லாதது. காக்கை குருவிகளையும் தாண்டி, மரம், செடி, கொடிகளையும் காதலிக்கிற அன்பு. அவர் வியக்கிறார் -
துப்பிய விஷம் அருந்துகிறாயே
நீ சிவபெருமானோ
ஓ.... மரம்!!
பிறருக்காக விஷம் அருந்துவதுதான் கடவுளின் தன்மை என்றால், இந்த பூமிப் பந்திலேயே நிறையக் கடவுள்கள் இருக்கிறார்கள் என்று இனங்காட்டி விட்டார்.
யோசித்துப் பார்த்தால் வாழ்க்கை என்பதே கவிதைதான் . அதில் இல்லாத மென்மையா, வேகமா, சுகமா, சோகமா, நவரசங்களா? கவிதையில் வாழ்க்கை வருமென்றால், இவையெல்லாம் வரத்தான் செய்யும், வரத்தான் வேண்டும்.
அதுதான் சிருஷ்டி வேலை, சித்து வேலை, அதிசயம், அற்புதம் என்கிற வியப்பு. இதையும் கூடக் கவிதை ஆக்கலாம், ஆக்கியிருக்கிறார் இந்தக் கவிஞர்.
முறுக்கேறி விறைத்தும்
குழைந்து பாடுகிறாயே
வீணைநரம்பு !
இதுதான் கவிதையின் இலட்சணம். இது இவருக்குள் கைவருகிறது.
கவிஞர் ஜனநேசனின் "சூரியனைக் கிள்ளி"க்கு பேராசிரியர் இரா.கதிரேசன் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து"
சூரியனைக் கிள்ளி" (ஹைகூ கவிதைகள்)
கவிஞர் ஜனநேசன்
விலை: ரூபாய் 15/-
காலம் வெளியீடு
19-1, பிள்ளையார் கோவில் தெரு
கோரிப்பாளையம், மதுரை-625002

24 டிச., 2007

திருக்குறள் ஊழியம்-1 : பேராசிரியர் தமிழண்ணல்

நாளும் திருக்குறளை ஓதுவோம் !

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
நம் வாழ்வு சீர் பெற்றுச் சிறக்கும்,
செல்வத்தில் செழிக்கும்!
வையத்தில் வாழ்வாங்கு வாழலாம்!
மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்!

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
துன்பங்கள் விலகிப் போகும்!
ஊழையும் வென்று வாழலாம்!
வாழ்வின் உச்சத்தைத் தொடலாம்!
புகழின் உச்சத்தை அடையலாம்!

திருக்குறளைப் பொருளுணர்ந்து ஓதினால்
நமது சாதி சமயப் பூசல்கள் நீங்கும்!
மனிதநேயம் வளரும்!
உலகின் சமுதாயம் ஒன்றுபடும்!
ஒவ்வொரு தனிமனிதர் வாழ்வும்
ஒப்பற்ற நிலைக்கு உயரும்!

பேராசிரியர் தமிழண்ணல்
'திருக்குறள் ஊழியம்'
4, இலூர்து நகர் 7ம் தெரு
கோ.புதூர்
மதுரை-625 007

14 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-12: "இலக்கு"

இலக்கு

கருத்தரங்கில் கைகலப்பு.

தலைப்போ வள்ளுவம்.
காரணம் ஆய்வறிக்கை.

வள்ளுவன் திருக்குறளில்
அதிகம் பயன்படுத்திய
சொல்எதுவென்ற ஆய்வில்
அறிஞர் பெருமக்கள்
ஆளுக்கு ஒருசொல்லை முன்மொழிய,
சொல்லுக்காக சொற்களால்
அடித்துக் கொண்டவர்கள்,
சொற்கள் தீர்ந்து போனதும்,
கைகளால் அடித்துக் கொள்ள,
கிழிந்தன சட்டைகள்,
பறந்தன புத்தகங்கள்,
காலில் மிதிபட்டது திருக்குறள்.

12 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-11: "துன்பத்தை நெய்தவன்!"

துன்பத்தை நெய்தவன்!

அடுப்பில் பூனை,
தறியில் குருவிக்கூடு,
நெய்தவை வீட்டுக்குள்,
நெய்தவனோ தெருவில்.

பசங்க பள்ளிக்குப் போகல,
தறி வெகுநாளா ஓடல,
காரணம் "நூல்" இல்ல.

பசங்க பாடம் எழுதல,
அவங்க வயிறும் நிறையல,
காரணம் "நோட்டு" இல்ல.

நெய்தத வாங்கல,
புது நூலும் கொடுக்கல,
காரணம் அரசிடம் "நாணயம்" இல்ல.

வியர்வையும் கண்ணீரும்
கலந்து நெய்த கைத்தறிய
விற்பதற்கு என்ன வழி?

பொருளில் தரமிருந்தால்
விற்பதற்கு என்ன தடை?

தரமற்ற நூலிலும் , சாயத்திலும்
வியர்வயையும், உழைப்பையும்
வீணடித்து விட்டார்களோ?

களர் நிலத்தில் விதைக்கலாமா?
கிழிந்த காகிதத்தில்
ஓவியம் வரையலாமா?

பட்டினிச் சாவும்
கஞ்சித் தொட்டியும் தொடருமா?
ஆட்சிகள் மாறுது காட்சிகள் மாறுமா?

7 டிச., 2007

ஆன்றோரின் அருள்வாக்கு

தரித்திரத்திலும் பரோபகாரம்.
பதவியிலும் பணிவு.
கோபத்திலும் பொறுமை.
ஏழ்மையிலும் நேர்மை.
துன்பத்திலும் தைரியம்.
தோல்வியிலும் விடாமுயற்சி.
செல்வத்திலும் எளிமை.

கேள்வியும் பதிலும்-6: "எப்போது?"

கல்வி கல்லாதிருப்பது நல்லது, எப்போது? கற்றும் அறிவில்லாதபோது.
எதுவும் எழுதாதிருப்பது நல்லது, எப்போது? எழுதியபடி ஒழுக இயலாத போது.
ஒன்றும் பேசாமல் இருப்பது நல்லது, எப்போது? பேசியபடி நடக்க இயலாதபோது.
சுதந்திரம் பெறாமலிருப்பது நல்லது, எப்போது? பெற்றும் வாழ முயலாத போது.

"அறிவுக்கு உணவு" - கி.ஆ.பெ. விசுவநாதம்

நெல்லையப்பன் கவிதைகள்-10: "படிக்க வேண்டும் புதிய பாடம்!"

படிக்க வேண்டும் புதிய பாடம்!

கற்ற கல்வி,
ஒரு படிவத்தை நிரப்ப
பயன்படவில்லை;
உழைப்பின் பெருமையை
உணர்த்தவில்லை;
பெற்றோர் அருமையை
போற்றவில்லை.
தன்னம்பிக்கை என்னும்
மூன்றாவது கையை
வழங்க வில்லை;
தேசியப் பார்வைக்கு
பழக்கவில்லை;
மொழிகளில் பயிற்சி
புகட்ட வில்லை.
நிறைந்த சபையில்,
தவறைத் தவரென்றுசொல்லும்
துணிவைக்கொடுக்கவில்லை;
மூடப் பழக்கங்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
எங்கோ பிழை இருக்கிறது!
கற்பிப்பவர்களுக்கு
முதலில்கற்றுக் கொடுக்கவேண்டும்!!

6 டிச., 2007

நெல்லையப்பன் கவிதைகள்-9: "என்ன பெயர் வைக்கலாம்?"

என்ன பெயர் வைக்கலாம்?

பிறந்த குழந்தைக்கு
பெயர் வைக்க வேண்டும் --
ஜாதியின் வாசனை மூக்கைத் துளைக்காமல்,
மதத்தின் மகிமையை முரசரையாமல்,
தாய்மொழிக்கு வால் பிடிக்காமல்,
'இஸம்' எதையும் எடுத்துக் காட்டாமல்,
வெறும் இந்தியனாய்த் தயாரிக்க,
பெயரொன்று வேண்டும்.
மொழியும், மதமும்,
மதம் சார் ந்த சின்னங்களும்,
இன்ன பிறவும்,
உள்ளாடைகளைப் போல் அவசியமானவை --
ஆனால் அவை வெளியே தெரிய வேண்டியதில்லை.
எனவே குழந்தைக்கு
என்ன பெயர் வைக்கலாம்?

5 டிச., 2007

மௌனம்

வார்த்தைகளில்லாத புத்தகம் மௌனம்.
ஆனால்வாசிக்க வாசிக்க இதற்குள் வாக்கியங்கள்.
மௌனம் என்பது வெளிச்சம்.
நம்மை நாமே இதற்குள் தரிசிக்கலாம்.
மௌனம் என்பது இருட்டு.
எல்லா கர்வங்களையும் இதற்குள் புதைக்கலாம்.
மௌனம் என்பது மூடி.
இதைத் தயாரித்து விட்டால் எல்லா உணர்ச்சிகளையும்
இதற்குள் பூட்டி வைக்கலாம்.
மௌனம் என்பது போதி மரம்.
இதுவரை உலகம் சொல்லாத
எல்லா உண்மைகளையும் நமக்கு போதிக்கும்.
மௌனம் என்பது தவம்.
இதில் ஆழ்ந்தால் அமைதி நிச்சயம்.
மௌனம் என்பது வரம்.
நம்மிடம் இருந்து நாமே பெறுவது.
இன்பம் துன்பம் இரண்டையும்
மௌனம் கொண்டு சந்தித்தால்
இதயம் எப்போதும் இயல்பாக இருக்கும்.
இதழ்களை இறுக மூடி இறங்குவோம் நமக்குள் நாம்.
மௌனம் என்பது கருவி.
அது குறிக்கோளாகாது.
மௌனம் என்பது வாள்.
பேச்சு உறை.
மௌனம் என்பது சொர்க்கம்.
பேச்சு நரகம்.
மௌனம் ஒற்றுமையை ஊட்டும்.
பேச்சு வேறுபாடு வளர்க்கும்.

நன்றி : இயற்கை மருத்துவம், அக்டோபர் 2000

நெல்லையப்பன் கவிதைகள்-8: "காண்ட்ராக்ட் கடவுள்கள்!"

காண்ட்ராக்ட் கடவுள்கள்!

கல்வி கற்கும் கடவுள்களை
காண்ட்ராக்டில் நியமிக்கிறார்களாம்!
நான்கு ஆசிரியர்கள் தேவையுள்ள
பள்ளியிலிருக்கும் ஒரே ஆசிரியர் -
நான்முகக் கடவுள்.
ஆணுக்கும் பெண்ணுக்குமாய்
வகுப்பெடுக்கும் ஒரே ஆசிரியர் -
அர்த்தநாரீஸ்வரர்.
அனைத்து பாடங்களுக்கும்
ஒரே ஆசிரியர்தான் என்றால்
சர்வ நிச்சயமாய் அவர்
சர்வேஸ்வரன்தான்.
அரசுப் பள்ளிக்கு
மாணவர்கள் வந்தாலும்
சரஸ்வதி தேவி மட்டும்
சத்தியமாய் வர மாட்டாள்!

4 டிச., 2007

எனக்குப் பிடித்த கவிதை-18: "அழாததென்னே!"


எனக்குப் பிடித்த கவிதை-17: "பண்பெனப்படுவது..."


நெல்லையப்பன் கவிதைகள்-7: "தீவுகள்"


நெல்லையப்பன் கவிதைகள்-6: "மனிதனும், மாமனிதனும்"


3 டிச., 2007

கேள்வியும் பதிலும்-5: "எது அழகு?"

எது அழகு?

பயிர்களைச் சுமந்து நிற்கும் நிலம் அழகு.
தாமரையைச் சுமந்து நிற்கும் குளம் அழகு.
நாணத்தை சுமந்து நிற்கும் பெண் அழகு.
நல்லறத்தைச் சுமந்து நிற்கும் ஆண் அழகு.

இப்படி நான்மணிக்கடிகை சொல்கிறது.

கேள்வி : தேன்மொழி இளங்கோ, ஸ்ரீரங்கம்
பதில்: தாம்பிரபரணி, கலைமகள், அக்டோபர் 2000

நெல்லையப்பன் கவிதைகள்-5: "உயிர் நீர்"

நெல்லையப்பன் கவிதைகள்-5

உயிர் நீர்

மலையில் குதித்து வந்து
சமவெளியில் வேகம் குறைத்து
பள்ளி செல்லும் குழந்தை போல
கடலுக்குள் செல்ல மறுத்து
அடம் பிடிக்கும் நதியின்
சிணுங்கலின் தமிழாக்கம்:
"ஏ மனிதா, என்னை வீணாகக்
கடலில் கலக்க விட்டு விட்டு,
கடல் நீரையா குடிநீராக்குகிறாய் ?"

நெல்லையப்பன் கவிதைகள்-4: "வேலைக்குச் செல்லும் பெண்ணே....!"

நெல்லையப்பன் கவிதைகள்-4

வேலைக்குச் செல்லும் பெண்ணே....!

வேலைக்குச் செல்லும் பெண்ணே!
மேலே உரசும் எருமை மாடுகள்,
முதுகின் மேல் மூச்சு விடும்
விஷ சர்ப்பங்கள்,
பார்வையால் கொத்தும்
பிணம் தின்னிக் கழுகுகள்,
எட்டிப் பார்க்கும் ஓட்ட்கங்கள்,
வழியில் நிற்கும் கொழுத்த கழுதைகள்,
அதிகார வர்க்க கடுவன் பூனைகள்,
தெரியாமல் பட்டதாய்
தொட்டுப் பார்க்கும் குள்ளநரிகள்,
சந்தர்ப்பம் எனும் உறுமீனுக்காய்
ஒற்றைக் காலில் நிற்கும் கொக்குகள் -
எப்படி சமாளிக்கிறாய்,
தனியாக ஒரு மிருகக் காட்சி சாலையை?

பெண் நிதானமாகப் பதில் சொன்னாள்:
"எனக்குள்ளும் ஒரு மிருகம் இருக்கிறது,
சிங்கம், அது பெண் சிங்கம்!"

எனக்குப் பிடித்த கவிதை-16: "ஆதிக்கம்"

எனக்குப் பிடித்த கவிதை-16

ஆதிக்கம்

கைப்பிள்ளையோடு
நாலஞ்சு மைலு தனியா போற...
வழியில ...
காத்து கருப்பு அடிச்சிடும்...
பேய் பிசாசு பிடிச்சிடும்னு சொல்லி
தலையில
கொஞ்சம்வேப்பிலையை
சொருகிவிடும் அம்மா,
உனக்குத் தெரியுமா?
நான்வாக்கப்பட்டு போனதே
ஒரு பேய்க்குத்தானென்பது !

- திருவை குமரன், திருச்சி-2
நன்றி - கல்கண்டு