மேன்மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மேன்மக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 ஏப்., 2026

மேன்மக்கள்: அமரர் திகசி

தி.க.சி. பிறந்த தினம்: மார்ச் 30
.........................
*தி.க.சி....*
*திருப்பூர் கிருஷ்ணன்.*
.........................
  *பத்திரிகை ஆசிரியராகவும் இருந்து எழுத்தாளராகவும் திகழ்பவர்கள், தாங்கள் எழுதுவதோடு மற்றவர்கள் எழுத்து வெளிவரவும் காரணமாக இருக்கிறார்கள். 

    எனவே இத்தகையவர்களுக்கு நாம் கூடுதல் மரியாதை தரவேண்டியது அவசியம். 

  மணிக்கொடி பி.எஸ். ராமையா, எழுத்து சி.சு.செல்லப்பா, தீபம் நா. பார்த்தசாரதி, கணையாழி கி. கஸ்தூரிரங்கன், பிரசண்ட விகடன் நாரண துரைக்கண்ணன், கல்கி கிருஷ்ணமூர்த்தி போன்றோர் அத்தகைய கூடுதல் மரியாதையைப் பெறத் தகுதியுள்ளவர்கள். 

   நாரண துரைக்கண்ணன், நா.பா,வின் முதல் சிறுகதையையும் லட்சுமியின் முதல் சிறுகதையையும் தாம் நடத்திய பத்திரிகையான பிரசண்ட விகடனில் வெளியிட்டவர். 

   அவரால் இனங்காணப் பட்டதால்தான் நா.பா., லட்சுமி என்ற இரு நட்சத்திரங்கள் தமிழின் தற்கால இலக்கியத்திற்குக் கிடைத்தார்கள். 

   1942 இல், தி.க.சி.யின் முதல் சிறுகதையை வெளியிட்டதும் பிரசண்ட விகடன்தான். `வண்டிக்காரன்` என்பது கதையின் தலைப்பு.   
 
 தி.க.சி. 1965 - 72 ஆகிய காலகட்டத்தில் தாமரை இதழின் பொறுப்பாசிரியராக இயங்கினார். 

   அப்போது அவரால் ஊக்கம் பெற்று எழுதத் தொடங்கியவர்கள்தான் பூமணி, பா. செயப்பிரகாசம், பிரபஞ்சன், சி.ஆர். ரவீந்திரன், கந்தர்வன், நா.காமராசன் போன்ற எழுத்தாளர்கள். 

 என்னுடைய `நியாயங்கள் மாறுபடும்` என்ற முதல் சிறுகதையைத் தாமரையில் வெளியிட்டவர் தி.க.சி. தான். 

   அப்போது நான் திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரியில் தமிழ் இளங்கலை படித்துக் கொண்டிருந்த மாணவன். அந்தக் கதை தாமரையில் பிரசுரமான விவரம் முதலில் எனக்குத் தெரியாது. 

அந்தக் கதையை வகுப்பில் முழுமையாகப் படித்துக் காட்டி என்னை ஊக்குவித்தவர் பொதுவுடைமைவாதியும் என்மேல் மிகுந்த அன்பு கொண்டவரும் இப்போது கோவையில் வாழ்ந்து வருபவருமான என் பேராசிரியர் திரு முப்பால்மணி அவர்கள்.
 
  பத்திரிகை மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது ஒரு வகை. பத்திரிகை இல்லாமலேயே எண்ணற்ற கடிதங்கள் மூலம் எழுத்தாளர்களை ஊக்குவிப்பது என்பது இன்னொரு வகை. 

   தி.க.சி., வல்லிக்கண்ணனுக்கு முன்னால், தமிழுலகம் காணாத புதுமை அந்த வகை. 

   தற்கால இலக்கிய வரலாற்றிலேயே தி.க.சி.க்கும் வல்லிக்கண்ணனுக்கும் இணையாக எழுத்தாளர்களுக்கு அதிக எண்ணிக்கையில் கடிதங்கள் எழுதியவர்கள் வேறு யாருமில்லை. 

   தமிழகமெங்கும் எந்தப் பட்டி தொட்டிக்குச் சென்றாலும் வல்லிக்கண்ணனையும் தி.க.சி.யையும் அவர்களின் கடிதங்கள் பெற்றதால் நெகிழ்ச்சியோடு நினைவு கூர்பவர்கள் ஏராளமானோர் இன்னமும் இருக்கிறார்கள். 

  இப்படிப் பலன் கருதாது கடிதங்கள் எழுதுவது என்பது ஒருவகையான தியாக வேள்வி. தி.க.சி., வ.க. இருவரது நேரமும் உழைப்பும் இந்த ஆயிரக்கணக்கான கடிதங்களை எழுதுவதற்கு எத்தனை செலவிடப் பட்டிருக்கும் என்று கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலும் மலைப்பேற்படும். 

   ஒவ்வொரு நாளும் கடிதம் எழுதுவதை ஒரு முக்கியக் கடமையாகவும் பணியாகவும் கொண்டு கடிதங்கள் எழுதியவர்கள் அவர்கள். 

   அவர்கள் இருவரின் மறைவுக்குப் பிறகு, ஓயாமல் ஊறிக் கொண்டிருந்த இளம் எழுத்தாளர்களின் உற்சாக ஊற்று வற்றி விட்டது. 

  இவர்களால் கடிதங்கள் பெற்றவர்களில் பலரும் முதல் தலைமுறைப் படிப்பாளிகள் என்பதும் குறிப்பிடத் தக்கது. பாரம்பரிய ரீதியாக இலக்கியம் அறியாதவர்கள் கடிதம் பெற்றவர்கள். 

   அவர்களிடம் நல்லிலக்கியம் என்றால் என்ன என்ற தெளிவை வகுத்துக் கொடுத்ததில் வ.க., தி.க.சி.யின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

  வ.க.வைப் போல் தி.க.சி., படைப்பிலக்கியத் துறையில் பெரிய அளவில் ஈடுபட்டவர் அல்ல. வ.க. சிறுகதைகள், கவிதைகள் உள்ளிட்ட படைப்பிலக்கியங்கள் பலவற்றையும் படைத்தார்.

   ஆனால் அவர் அதிக எண்ணிக்கையில் கட்டுரைகளை எழுதியதால் அவரது படைப்பிலக்கிய முகம் பரவலாக அறிமுகம் ஆகாமல் போய்விட்டது. 

   வல்லிக்கண்ணன் சிறந்த சிறுகதை ஆசிரியர் அல்ல என்கிறார் க.நா.சு. அது அவர் கருத்து. ஆனால் வ.க.வின் சில சிறுகதைகளைப் படிக்கும்போது அவரைத் தமிழ்ச் சிறுகதைத் துறையிலிருந்து முற்றிலுமாகப் புறக்கணித்து விட இயலும் என்று தோன்றவில்லை. 

   நான் தினமணிகதிரில் துணையாசிரியனாகப் பணிபுரிந்தபோது என் வேண்டுகோளின் பேரில் வ.க. கதிரில் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை இன்னும் என் மனத்தில் நிற்கின்றன. 

  தி.க.சி. விஷயம் அப்படியல்ல. அவர் படைப்பிலக்கியமாகக் கொஞ்சம் படைத்திருந்தாலும் அவரைப் படைப்பிலக்கியவாதி என்று சொல்ல இயலாது. 

   `வசந்த காலத்திலே, போர்வீரன் காதல், சீனத்துப் பாடகன்` ஆகிய மொழிபெயர்ப்பு நூல்களும் கூட தி.க.சி.யின் பங்களிப்புத்தான். 

  என்றாலும் இவற்றையெல்லாம் மீறி ஏராளமான விமர்சனங்களையும் முக்கியமாக அறிமுகக் கட்டுரைகளையும் எழுதிக் குவித்தவர் அவர். 

  `தி.க.சி.யின் திறனாய்வுகள், விமர்சனத் தமிழ், விமர்சனங்கள் பேட்டிகள் மதிப்புரைகள், மனக்குகை ஓவியங்கள், தமிழில் விமர்சனத் துறை` என்றிப்படி வெளிவந்திருக்கும் அவரது பல நூல்கள் கட்டுரை நூல்கள்தான். 

   (எழுத்தாளர் எஸ். ராஜகுமாரன் எடுத்த ஆவணப் படம் ஒன்றும் அவரைப் பற்றி வந்திருக்கிறது.) 
 
  நிறைய அறிமுகக் கட்டுரைகளை எழுதியவர் தி.க.சி. அப்படி அறிமுகக் கட்டுரைகளை எழுதி, நல்லிலக்கியத்தையும் நல்ல எழுத்தாளர்களையும் வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதும் மிக முக்கியமான ஓர் இலக்கியப் பணிதான். 

    ஒருவரின் இலக்கிய ஆளுமையைக் கணிக்கிறபோது அவரின் முழுமையான இலக்கியப் பங்களிப்பு என்ன என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தற்கால இலக்கிய வளர்ச்சிக்கு அவரின் உழைப்பு எந்த அளவு பங்காற்றியிருக்கிறது என்பதைக் கட்டாயம் கணக்கில் கொள்ள வேண்டும். 

  அப்படிப் பார்த்தால் எண்ணற்ற எழுத்தாளர்களைத் தம் எழுத்தாலும் தொடர்ந்த உரையாடல்களாலும் ஊக்குவித்தவர் என்ற வகையில் தி.க.சி.க்கு இணையானவர்களாகத் தமிழ் உலகில் இன்று யாரையும் குறிப்பிட இயலவில்லை. 

   தீபம் நா. பார்த்தசாரதியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் அவர். தீபம் இலக்கிய இதழோடு பல்லாண்டு காலம் நட்புறவு கொண்டிருந்தவர். 

   ஒருமுறை தி.க.சி காலில் அடிபட்டு சென்னை ஆதம்பாக்கத்தில் அவர் புதல்வர் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவரை நலம் விசாரிப்பதற்காக நானும் நா.பா.வும் மின்சார ரயிலில் ஆதம்பாக்கம் சென்றோம். 

  அன்பு மயமாக நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார் தி.க.சி. பிறகு மின்சார ரயிலில் நா.பா.வின் வீடிருந்த மாம்பலத்திற்குத் திரும்பிவந்தோம். அப்போது நா.பா. என்னிடம் சொன்னார்: 

  `அதியமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனி எனக்குக் கிடைத்தால், அதியமான் அவ்வைக்குக் கொடுத்த மாதிரி நான் எனக்குக் கிடைத்த நெல்லிக்கனியைத் தி.க.சி.க்குக் கொடுப்பேன்!`  

   அதன் பொருள் இதுதான். நா.பா. தீபம் என்னும் பத்திரிகையால் ஊக்குவித்துக் கொண்டிருந்த எழுத்தாளர்களை விடவும் அதிகமான எழுத்தாளர்களை தி.க.சி. தம் கடிதங்களால் ஊக்குவித்துக் கொண்டிருந்தார். 

   இன்றைய தற்கால இலக்கியத்தின் ஜனநாயகப் பரவலுக்குத் தி.க.சி. செய்த பணி ஒரு முக்கியக் காரணம். தி.க.சி. நெடுநாள் வாழ்ந்தால் இன்னும் ஏராளமான பேர் எழுத்துத் துறையில் ஈடுபடுவார்கள் என்று நா.பா. நினைத்தார் என்பதே இதன் கருத்து. 

   இலக்கியத் துறைசார்ந்த நண்பர்களைச் சந்திப்பதிலும் அளவளாவுவதிலும் தி.க.சி. தம் வாழ்வின் பெரும் பகுதியைச் செலவிட்டார். 

  சென்னை ராயப்பேட்டையில் வல்லிக்கண்ணன் வசித்தவரை, நான், நா.பா., தி.க.சி. மூவரும் வல்லிக்கண்ணன் இல்லத்தில் வாரம் இருமுறையாவது சந்தித்து நீண்டநேரம் அளவளாவி மகிழ்வதுண்டு. 

  தி.க.சி.க்கு வயது வித்தியாசமில்லாமல் முதுபெரும் எழுத்தாளர்களிலிருந்து இளம் எழுத்தாளர்கள் வரை ஏராளமான பேர் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள். 

  தலைமுறை இடைவெளியின்றி எல்லோரிடமும் பழக முடிந்ததையும் அவரது பலம் என்று சொல்ல வேண்டும். 

   சென்னையில் மாதந்தோறும் கடைசி சனிக்கிழமையன்று நடைபெற்ற இலக்கியச் சிந்தனைக் கூட்டங்களுக்குச் சென்னையில் இருந்தவரை தவறாமல் வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் தி.க.சி. 

  காரணம் பல இலக்கிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும் என்பதும் அவர்களோடு உரையாடி மகிழலாம் என்பதும்தான். 

  புதிதாய்ச் சந்திப்பவர்களுக்கெல்லாம் மறுநாளே ஓர் அஞ்சலட்டை எழுதி அவர்களுடன் நட்புறவை ஏற்படுத்திக் கொண்டுவிடுவார். 

  தி.க.சி. எண்ணற்ற நூல்களைப் படித்துத் தள்ளினார். அவரிடம் அண்மையில் வெளிவந்த எந்த நூலைப் பற்றியும் கருத்துக் கேட்கலாம். கறாராகவும் கூர்மையாகவும் உடனுக்குடனே கருத்துச் சொல்வார். 

  படைப்பிலக்கியங்கள் பலவற்றைச் சுடச்சுடப் படித்து உடனடியாகக் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் அவரது சுறுசுறுப்பு வியக்கத் தக்கது. 

   கலாப்ரியா, `ஆண்டுக்கு சுமார் 300 புத்தகங்களாவது தி.க.சி. படித்திருக்க வேண்டும்` என்று தோராயமாக ஒரு கணக்குச் சொல்கிறார். 

  தி.க.சி. படித்த புத்தகங்களின் எண்ணிக்கை இதைவிட அதிமிருக்குமே தவிரக் குறைந்திருக்க வாய்ப்பில்லை. படிப்பே வாழ்வாக வாழ்ந்தவர் அவர். 

   `வீர வழிபாடு வேண்டாம்` எனத் தாம் எழுதிய ஒரு கட்டுரையில் புதுமைப்பித்தனைப் பற்றி தி.க.சி எழுதினார். தி.க.சி. பற்றியும் கூட வீர வழிபாடு தேவையில்லைதான். 

  ஆனால் அதே நேரம் உண்மைக்கு முற்றிலும் மாறான அணுகுமுறையோடு தி.க.சி.யை அணுகத் தேவையில்லையே? 

   ஜானகிராமன் கவிதை எழுதவில்லையே என்றா குறை சொல்வது? ஜானகிராமன் கவிஞர் அல்ல, அதனால் அவர் கவிதை எழுதவில்லை, அவ்வளவுதான். 

   தி.க.சி. போஸ்ட் கார்ட்களை அதிகமாக எழுதினாரே தவிரப் படைப்பிலக்கியமாக அதிகம் எழுதவில்லை என்று நாம் ஏன் அவரை மதிப்பிட வேண்டும்? 

   அவர் என்னவாக இருந்தாரோ அந்த எல்லைக்குள் நின்று அவரை மதிப்பிடுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்கும். 

  `அவருடைய ஆயுதம் தபால் அட்டை. அவரும் சரி வல்லிக்கண்ணனும் சரி கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். மிக்க அன்புடன் என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்து தான் கற்றேன்` என்று அசோகமித்திரன் தி.க.சி.யைப் பற்றிய தம் கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டிருப்பது கவனிக்கத் தக்கது. 

    தி.க.சி கடித எழுத்தாளர்தான். அந்தக் கடிதங்கள் இலக்கிய உலகில் பெரும் விளைச்சலை ஏற்படுத்திய கடிதங்கள் என்பதே அவற்றின் பெரிய பலம். 

    நாவல்களாலும் சிறுகதைகளாலும் இலக்கியத்தை வளர்த்தவர்களை விடவும் கூடுதலாகத் தம் கடிதங்களால் இலக்கியத்தை வளர்த்தார் தி.க.சி. என்பதே உண்மை. 

   இப்போதும் தி.க.சி. நினைவில் சற்றுக் கண்ணை மூடினால், கண்ணுக்குள் முத்து முத்தான கையெழுத்தில் அஞ்சலட்டைகளில் அவர் எழுதியவை வரிவரியாய் ஓடுகின்றன. 

   எப்பேர்ப்பட்ட திடசித்தம் இருக்க வேண்டும் தொடர்ந்து ஓயாமல் கடிதங்கள் எழுதிக் கொண்டே இருப்பதற்கு என்று மனம் மலைக்கிறது. 

 காந்திக்கும் ராஜாஜிக்கும் கடிதம் எழுதினால் சுவரில் எறிந்த பந்துபோல் உடனுக்குடன் பதில் வரும் என்பார்கள். தி.க.சி.யும் அப்படிப் பட்டவர்தான். 

  இப்போதெல்லாம் யாரும் கடிதம் எழுதுவதே இல்லை. எல்லாம் குறுஞ்செய்திதான். வாட்ஸ்அப் தான். மின்னஞ்சல் தான். 

   கடிதக் கலாசாரத்தின் கடைசிப் பிரதிநிதியாக, அஞ்சலட்டை வீரராக தி.க.சி. வாழ்ந்து மறைந்துவிட்டார். 

  அந்தக் கடிதங்களுக்கு என்றென்றும் அழிவே இல்லை. ஏனென்றால் அவற்றை அவர் தபால்பெட்டியிலா போட்டார்? நம் மனசுக்குள் அல்லவா போட்டிருக்கிறார்!

(மீள் பதிவு)

----------
நன்றி:
திரு.திருப்பூர் கிருஷ்ணன்.
மற்றும் 
முகநூல் 

18 ஜன., 2026

மேன்மக்கள்


திருப்பூர் குமரன் நினைவு தினம்: ஜனவரி 11
...............................................
*கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!*
*திருப்பூர் கிருஷ்ணன்* (நிறைவுப் பகுதி)
படங்கள்: திருப்பூர் குமரன், ராமாயி அம்மாள்.
...............................................
  *திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு.

   இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது. 

  கல்லூரி மாணவனாக இருந்த நான், வேலை கிடைத்து பத்திரிகையாளனாக மாறிய பின்னும் ராமாயி அம்மாளைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். தினமணிகதிரில் அவரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன். 

  பொதிகைத் தொலைக்காட்சியில் ஸேவியர் என்ற நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் பொதிகைத் தொலைக்காட்சிக்காக நான் ராமாயி அம்மாளைப் பேட்டி காணவேண்டும் என ஏற்பாடு செய்தார். 

  அது நேரலை ஒளிபரப்பு. (அப்போதெல்லாம் பெரும்பாலும் அப்படித்தான்.) 

  திருப்பூரிலிருந்து ராமாயி அம்மாள் சென்னை வந்து சேர்ந்தார். மாடி ஏற இயலாது என்பதால் ஓர் உணவகத்தின் கீழ்த்தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார். 

  எனக்கு அவரைப் பேட்டி காண்பதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. காரணம் அவர் மூலமே அவர் வாழ்க்கை முழுவதையும் ஏற்கெனவே நன்கு அறிந்தவன் நான். 

 பொதிகை நிலையத்தில் ஸ்டூடியோவில் பேட்டி தொடங்கியது. ஒளிவெள்ளம் தன்மேல் விழுந்ததும் ராமாயி அம்மாள் திகைத்தார். தன்மேல் வெளிச்சம் விழுவதை அவர் விரும்பவில்லை போலும்! 

  என்னிடம் எப்போதும் சகஜமாக உரையாடும் அவரிடம் ஏனோ ஒரு மிரட்சி தென்பட்டது. 

   நான் கேட்ட கேள்விகளுக்கு எவ்வளவு வற்புறுத்தியும் விரிவாக பதில் சொல்லாமல் `ஆமுங்க, அஆமுங்க` என்று கொங்கு மொழியில் மிகச் சுருக்கமாகவே பதிலளிக்கத் தொடங்கினார். 

   நிகழ்ச்சியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஸேவியருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அரைமணி நேரத்தை ஓட்டியாக வேண்டுமே? 

  திருப்பூர் குமரன் வரலாறு முழுவதும் எனக்கு அத்துப்படி என்பதால் நான் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்லி `அது அப்படித்தானே?` எனக் கேட்கலானேன். `ஆமுங்க அஆமுங்க` என என் பேச்சு முழுவதையும் அவர் ஆமோதித்தார். ஒருவழியாகப் பேட்டி முடிவடைந்தது. 

  ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்தோம். `கண்கூசற வெளிச்சத்துல எனக்குப் பேச்சே வரல கண்ணு! நீதான் நல்லா சமாளிச்சிட்டியே!` என்று என்னைப் பாராட்டினார் ராமாயி அம்மாள். 

  முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்ட ஸேவியரும், `திருப்பூர் குமரன் பற்றிய தகவல்கள் எல்லாம் வெளிவர வேண்டும் என நினைத்தோம். அவை வெளிவந்து விட்டன. அதுவே நிகழ்ச்சியின் வெற்றிதான்!` என என்னைப் பாராட்டினார்.

   நான் வீட்டிற்கு வந்துசேர்ந்தேன். என் நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கலாய்த்தார்கள். நடந்ததன் பின்னணி அவர்களுக்குத் தெரியவில்லை. 

  `என்ன ஆயிற்று உனக்கு? அந்த மூதாட்டியைப் பேச விடாமல் நீயே பேசிக் கொண்டிருந்தாயே?` எனக் கடிந்துகொண்டார்கள் அவர்கள்!

   *ராமாயி அம்மாள் இளம் வயதிலேயே வெள்ளைச் சேலை அணிந்தார். வெள்ளைச் சேலையோடு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தார். 

  பதினேழு வயதில் கணவனை இழந்தவர் அவர். எழுபத்து மூன்று ஆண்டுகள் கணவனை இழந்த கைம்மை வாழ்வு. 

   திருப்பூர் குமரன் உயிர்நீத்த தியாகம், ராமாயி அம்மாள் உயிர்வாழ்ந்த தியாகம் - இரண்டில் எது பெரிது? 

  திருப்பூர் குமரன் பெயர் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராமாயி அம்மாளின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்?.....  

   குமரன் காலமான ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, ராமாயி அம்மாளின் இல்லத்திற்குச் சென்று குமரனின் தியாகத்தை எண்ணி நெகிழ்ச்சியோடு அவரைக் கைகூப்பி வணங்கினார். 

  காந்தியே அவரை வந்து பார்த்தார் என்பதால், அதன்பின்னர்தான் மக்களிடையே அவருக்கு மதிப்பு ஏற்பட்டது....  

  *நடிகர் திலகம் சிவாஜிகணேசன் `ராஜபார்ட் ரங்கதுரை` என்ற படத்தில், இறுதிப் பகுதியில் சிறிதுநேரம் திருப்பூர் குமரன் வேடத்தில் நடித்திருப்பார். 

   பிறகு அந்தத் திரைக்கதையின் போக்குப்படி அவர் சுடப்பட்டு இறந்து கீழே விழுவதாக வரும். 

  திரைப்படங்களையே பார்த்தறியாத ராமாயி அம்மாள், தன் கணவர் வேடத்தில் நடிகர் திலகம் நடிப்பதாக அறிந்து அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார். 

   திருப்பூரில் டைமண்ட் தியேட்டரில்  அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. 

  படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த அவர், திருப்பூர் குமரன் பாத்திரமேற்றிருந்த நடிகர் திலகம் இறந்ததாக நடித்த காட்சியைப் பார்த்தவுடன், தான் மயக்கமடைந்து கீழே விழுந்தார். 

  பிறகு அவர் மயக்கம் தெளிவிக்கப்பட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார். 

  `நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லோரையும் மயக்கக் கூடியதுதான். ஆனால் நீங்கள் ஏன் மயங்கி விழுந்தீர்கள்?` என்று அவரிடம் பின்னொருநாள் நான் கேட்டேன். 

  `தான் சொல்லும் பதிலைத் தான் உயிரோடிருக்கும் வரை வெளியே சொல்லக்கூடாது` என வாக்குறுதி வாங்கிக் கொண்ட அவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்ன பதில் இதுதான்:

  `கண்ணு! பத்து வயசுல எனக்குக் கல்யாணம். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பதினேழு வயிசுலே தாலியறுத்தேன். புருசனோட வாழ்ந்த வாழ்க்கை ஏழு வருசம். அவர் போலிஸ்லே அடிபட்டு சாகறப்ப கூட நான் திருப்பூர்ல இல்லே. 

  எத்தினி வருசம் ஓடிபபோச்சு. அவர் முகமே எனக்கு மறந்துபோச்சு. இதோ என் புருசன்னு சிவாஜி நடிச்ச அந்தப் பாத்திரத்தையே என் புருசனா நினைச்சுப் பார்த்தேன். 

  அந்தப் பாத்திரம் செத்து விழுந்தப்ப உண்மையிலேயே என் புருசன் அபபத்தான் செத்ததா நினைச்சு மயக்கம் போட்டு விழுந்திட்டேன் ராசா. அடடா! என்னமா நடிச்சிருக்காரு!`

  `ஆசை முகம் மறந்துபோச்சே! அதை யாரிடம் சொல்வேனடி தோழி` என்ற பாரதியார் பாடல் என் நினைவில் ஓடியது. 

  நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தின் பின்னணியில் எத்தகைய மகத்தான தியாகங்களெல்லாம் இருக்கின்றன என்ற எண்ணத்தில் என் கண்களில் குளம் கட்டியது.  

  *ஜெயப்பிரகாஷ் நாராயண், பெருந்தலைவர் காமராஜ், எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோரெல்லாம் ராமாயி அம்மாளை பல்வேறு காலகட்டங்களில் வந்து சந்தித்திருக்கிறார்கள்....

  எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான ஓரிரு நாட்கள் கழித்து நான் ராமாயி அம்மாளைச் சந்தித்தேன். `என் பிள்ளை போயிட்டானே!` என அவர் கண்கலங்கினார். 

   நான் வியப்போடு `எம்.ஜி.ஆர் எப்படி உங்கள் பிள்ளையாவார்?` எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இன்று முதியோர் இல்லங்களில் பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் அனைவரும் அறிய வேண்டியது. அவர் சொன்னார்:

   `ரொம்ப வருசம் முன்னாடி என்னைப் பாக்க அவர் வந்தாரு. நீ என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு கேட்டேன். சினிமால நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. நான் சினிமாவெல்லாம் பாக்கறதில்லியேன்னு சொன்னேன். 

  என் வீட்டைச் சுத்துமுத்தும் பாத்தாரு. நீங்க என் அம்மா மாதிரின்னு சொல்லி கையில ஒரு பெரிய தொகையைக் கொடுத்தாரு. பிறகு மெட்ராஸ் போனப்புறம் கவர்மென்டில சொல்லி எனக்கு மாசாமாசம் பென்சன் கிடைக்கவும் ஏற்பாடு செய்தாரு. 

  இப்ப அவரு காலமாயிட்டாரு. ஆனா நான் காலமாற வரையிலும் அவர் ஏற்பாடு செஞ்சு தந்த பென்சனை நான் வாங்கப் போறேன். 

  அப்பா அம்மாவை பொருளாதார சிரமம் இல்லாம பாத்துக்கறவன் தானே பிள்ளை? அப்படிப் பாத்தா எம்.ஜி.ஆர்.தான் எனக்குப் பிள்ளை! என் பிள்ளை போயிட்டானே!` என்ற ராமாயி அம்மாள் முந்தானையால் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார். 

   குமரன் உயிர்நீத்த தொடக்க காலத்தில் தான் பட்ட பொருளாதார சிரமங்களை ராமாயி அம்மாள் என்னிடம் பகிர்ந்து கொண்டதுண்டு. அதைக் கேட்டு என் உள்ளம் கசியும். 

  பிற்காலங்களில் ஒரு நடுத்தர வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த ஓய்வூதியம் மூலம் அவருக்குக் கிடைத்தது. அவர் இருப்பது போதும் என்று தன்னிறைவோடு வாழும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.  

   பிற்காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் திருப்பூர்ப் பள்ளிகளில் அவரைக் கொடியேற்றக் கூப்பிடுவார்கள். அவர் மறுக்காமல் அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்வார். 

  கொடிக்காக உயிர்நீத்த குமரனின் மனைவிக்கல்லாமல், நம் தேசக் கொடியை ஏற்றி வைக்கும் முதல் உரிமை இந்தியாவில் வேறு யாருக்கு உண்டு? 

  கொடிக்கயிறை இழுத்து கொடி மேலே சென்று பறப்பதை அண்ணாந்து பார்ப்பார். அவர் விழிகளில் நீர் கசியும். 

  கொடியின் முடிச்சவிழ்ந்து கொடியிலிருந்து தற்காலிகமாகக் கீழே உதிரும் மலர்களெல்லாம் தன் கூந்தலிலிருந்து நிரந்தரமாக உதிர்ந்தவை என்று அவர் மனம் நினைத்ததோ என்னவோ?

   அவர் தொடக்க காலத்தில் வறுமையில் வாடியதையும் பின்னாளில் கொடியேற்றும் அளவு சமூகத்தில் மதிப்புப் பெற்றதையும் இணைத்து கற்பனைச் சம்பவங்களையும் கலந்து, சுதந்திரத் தியாகி ஒருவவரின் மனைவியைக் கதாநாயகியாக்கி `பட்டொளி வீசி..` என்ற தலைப்பில் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நான் ஒரு சிறுகதை எழுதினேன். 

  அந்தக் கதையை உள்ளடக்கிய, அதே தலைப்பிலான என் சிறுகதைத் தொகுதியை வானதி பதிப்பகம் வெளியிட்டது. அந்தத் தொகுதி பல பரிசுகளைப் பெற்றது. 

   ராமாயி அம்மாளின் வாழ்நாள் முழுவதும், எல்லா அரசியல் கட்சிகளும் அவரைத் தங்கள் கட்சியில் சேரச் சொல்லித் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தன. 

  `என் கணவர் உயிர்நீத்தது இன்றைய இந்த ஊழல் அரசியலுக்காக அல்ல!` என்று சொல்லி இறுதிவரை எந்தக் கட்சியிலும் அவர் சேராமலிருந்தார். 

 அதிகப் படிப்பறிவு இல்லாத அவருக்கு இறுதிநாள் வரை இருந்த சிந்தனைத் தெளிவு வியக்க வைக்கிறது. அதுசரி, அவர் கொடிகாத்த குமரனின் மனைவி அல்லவா!

(இது ஒரு மீள்பதிவு.)
................................................

நன்றி: திரு திருப்பூர் கிருஷ்ணன் 
மற்றும் 
முகநூல் 

14 டிச., 2025

மேன்மக்கள்: நா.பா. என்றொரு குறிஞ்சி மலர் - திருப்பூர் கிருஷ்ணன்

நா.பா. பிறந்த தினம்: டிசம்பர் 18, 1932, மறைந்த தினம் டிசம்பர் 13, 1987
..................................   
*நா.பா. என்றொரு குறிஞ்சி மலர்...*
          *திருப்பூர் கிருஷ்ணன்*
..................................   
  `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!`
..................................   
  *யதார்த்தவாதப் படைப்புகளே பெருகியுள்ள தற்கால இலக்கிய உலகில், காவிய மரபில் லட்சியவாத இலக்கியத்தைப் படைத்துப் பெரும்புகழ் பெற்றவர் தீபம் நா. பார்த்தசாரதி. 

  தாம் வாழ்ந்த சம காலத்தில் இப்போது எந்த நட்சத்திர 
நடிகருக்கும் இல்லாத அளவு பெரும் புகழ் நா.பா.வின் எழுத்தால் அவருக்குக் கிட்டியது. 

   அவரின் கரத்தில் தங்கள் குழந்தையைக் கிடத்திப் பெயர்வைக்கச் சொன்னவர்களும் அவர் தலைமையில் திருமணம் செய்துகொண்டவர்களும் நிறையப் பேர். 

   மதுரை அருகே நதிக்குடியில் 1932ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி பிறந்தவர் நா.பா. பாண்டித்துரைத் தேவர் பரிசுடன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் பட்டம் பெற்றவர். 

   சென்னைப் பல்கலைக் வித்வான் பட்டம் பெற்றார். தவிர சென்னைப் பல்கலையில் தமிழ் எம்.ஏ. பட்டமும் பெற்றார். 30.7. 1987 அன்று சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு பிஎச்.டி பட்டத்திற்கான ஆய்வேடு அளித்தார். 

   ஆனால் முனைவர் பட்டம் பெறுவதற்குள் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் 13ஆம் நாள் காலமானார். 

   ஆங்கிலம், சம்ஸ்க்ருதம், இந்தி ஆகிய மொழிகளையும் அறிந்தவர். `மணிவண்ணன், பொன்முடி, வளவன், கூடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர், தீரன்` உள்ளிட்ட பல புனைபெயர்களில் எழுதிவந்தார். 

    பாரதியார் பணியாற்றிய சிறப்புடைய மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். நான்கு ஆண்டுகள் கல்கி வார இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். 

   தீபம் மாத இதழை நிறுவி இருபத்து மூன்று ஆண்டுகள் ஆசிரியராக இருந்து நடத்தினார். அவர் காலமானபின் தீபம் இதழ் நிறுத்தப்பட்டது. சில ஆண்டுகள் தினமணிகதிர் வார இதழின் ஆசிரியராகவும் பொறுப்பு வகித்தார். 

   சாகித்ய அகாதமி தேர்வுக் குழு உறுப்பினராக இருந்தவர். நேஷனல் ·பிலிம் ·பெஸ்டிவல் ஜூரியாகப் பணியாற்றியவர். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தில் பொறுப்பான பதவி வகித்தவர். 

   சோவியத் யூனியன், போலந்து, இங்கிலாந்து, பிரானஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, ரோம், எகிப்து, குவெய்த் போன்ற நாடுகளுக்கு பாரத அரசாங்கத்தின் கல்வி மற்றும் கலாசார அமைச்சக அழைப்பை ஒட்டி விசேஷ கலாசாரத் தூதராகப் பயணம் மேற்கொண்டவர். 

   சிங்கப்பூர், மலேசியா, இலங்கை ஆகிய இடங்களுக்குப் பலமுறை சென்று வந்தவர். 

    39 சமூக நாவல்கள், 9 வரலாற்று நாவல்கள், 22 சிறுகதைத் தொகுதிகள், ஒரு நாடக நூல், இரண்டு இலக்ண நூல்கள், ஒரு கவிதை நூல், இரண்டு திறனாய்வுக் கட்டுரை நூல்கள், நான்கு பொதுக் கட்டுரை நூல்கள், இரண்டு பயணக் கட்டுரை நூல்கள், மூன்று மொழிபெயர்ப்பு நூல்கள் என எழுதிக் குவித்தவர். 

   இவர் படைத்தவையாக எண்பத்து ஐந்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் தமிழை அணி செய்கின்றன. 

 `சமுதாய வீதி` நாவலுக்கு சாகித்ய அகாதமிப் பரிசு, `துளசி மாடம்` நாவலுக்கு ராஜாசர் அண்ணாமலைச் ரெட்டியார் பரிசு, `சாயங்கால மேகங்கள்` நாவலுக்கு தமிழ்நாடு அரசு பரிசு என இன்னும் பற்பல பரிசுகளும் விருதுகளும் பெற்றவர். 

  *தமிழில் சாதனை படைத்த ஒவ்வோர் எழுத்தாளருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. தி. ஜானகிராமன் என்றால் அழகியல். ஜெயகாந்தன் என்றால் விவாதக் கோணம். ஆர். சூடாமணி என்றால் உளவியல். ராஜம் கிருஷ்ணன் எனறால் கள ஆய்வு. லா.ச.ரா. என்றால் தத்துவப் பார்வை.

   இப்படிப் பல எழுத்தாளர்களின் தனித்தன்மையைப் பட்டியலிடுவோம் என்றால் நா.பா. எழுத்தின் தனித்தன்மை என்பது அவரது அழகிய நடை. சிலேடை போன்ற தமிழுக்கே உரிய நயங்கள் அனைத்தும் கலந்த நடை அது.  

   மற்ற எழுத்தாளர்களின் எழுத்தைப் போல் நா.பா. எழுத்தை அதன் அத்தனை நயங்களும் புலப்படுகிற மாதிரி மொழிபெயர்ப்பது கடினம். 

   `அவள் பார்வையே ஒரு பேச்சாய் இருந்ததென்றால் அவள் பேச்சில் ஒரு பார்வையும் இருந்தது.` என்பது நா.பா. இலக்கியத்தின் ஒரு வரி. 

  இதில் முதலில் வரும் பார்வை என்ற சொல், கண்பார்வையைக் குறிப்பது (SIGHT) . இரண்டாவதாக வரும் பார்வை பரந்துபட்ட சமூகப் பார்வையைக் குறிப்பது.(VISION). இந்த வரியை எப்படி இதே சிலேடை நயத்தோடு இன்னொரு மொழியில் மொழிபெயர்க்க முடியும்? 

  இதுபோல் நா.பா இலக்கியத்தில் இன்னும் ஏராளமான எடுத்துக் காட்டுக்களைக் கூற முடியும். நா.பா.வின் நடை தமிழுக்கே உரிய அழகிய சொல் நயங்களை உள்ளடக்கிய நடை. 

   எனவே நா.பா. இலக்கியத்தைத் தமிழில் தமிழர்கள் அனுபவிப்பது மாதிரி, மொழிபெயர்ப்பில் பிற மொழியினர் அனுபவிக்க இயலாது.  

  *நா.பா. படைப்பிலக்கியத்தின் இன்னொரு பண்பு, ஆங்காங்கே தென்படும் பொன்மொழிகளைப் போன்ற சிந்தனையைத் தூண்டும் வரிகள். பாயசத்தின் இடையே முந்திரிப் பருப்பு மாதிரி அவை வாசகர்களை ஈர்த்து ரசிக்க வைத்தன. எ.கா.:
 
 `சுயமரியாதை உள்ள புத்திசாலிகள் சுயமரியாதை காரணமாகவே தட்டத் தயங்குகிற கதவுகளை, சுயமரியாதையற்ற முட்டாள்கள் உடைத்துக் கொண்டு உள்ளே போய் நாற்காலியில் அமர்வதுதான் இன்று நாட்டின் அவலம்!`

   இத்தகைய வாக்கியங்கள், அத்தியாயங்களின் முகப்பில் தனியே எடுத்து அச்சிடப் பட்டிருக்கும். தவிர கதையின் இடையேயும் இந்த வரிகள் வரும். 

   கதையோடு பொருந்தியிருக்கிற இதுபோன்ற வரிகள், கதையிலிருந்து தனியே எடுத்தாலும் படிப்பவர் மனத்தில் நீண்டநேரம் சிந்தனையைத் தோற்றுவிக்கும் வகையில் அமைந்திருப்பதே இவ்வரிகளின் சிறப்பு. 

   நா.பா. வாசகர்கள் பலர் இந்தப் பொன்மொழிகளைக் குறிப்பிட்ட புத்தகங்களில் தனியே அடிக்கோடிட்டு வைத்துக் கொள்வதுண்டு. 

  *நா.பா.வின் பாத்திரங்கள் எல்லாம் தரைக்கு அரையடி மேலே நிற்கின்றனவே என நா.பா.விடம் வானொலிப் பேட்டியில் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நா.பா. சொன்ன பதில்...

(இதன் நிறைவுப் பகுதி அடுத்த பதிவில்...) 
..................................

9 அக்., 2025

மேன்மக்கள்: சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவா!


சுப்பிரமணிய சிவா பிறந்த தினம்: அக்டோபர் 4
............................
*சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவா!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
............................
  *பி.எஸ். ராமையா, சி.சு. செல்லப்பா ஆகியோர் பிறந்த திண்டுக்கல் மாவட்டத்து வத்தலக்குண்டு தான் சுதந்திரத் தியாகி சுப்பிரமணிய சிவாவின் சொந்த ஊர். பிறந்த ஆண்டு 1884. தந்தையார் ராஜம் ஐயர். தாயார் நாகம்மாள். 

  சுப்பிரமணிய சிவாவுக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரு சகோதரிகளும் வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. 

  கடும் வறுமையில் வாடிய குடும்பம். பன்னிரண்டு வயது வரை மதுரையில் பாரதியார் பணியாற்றிய சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் படித்தார் சிவா. பிறகு ஓராண்டு கோவையில் கல்வி பயின்றார். 
 
   ஒருவேளை உணவுக்கே பெரிதும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த சிவாவுக்கு திருவனந்தபுரத்தில் இலவச உணவோடு கல்வி கிடைக்க வாய்ப்பிருப்பது தெரிய வந்தது. 
 
   ஆகா! வேளாவேளைக்குச் சாப்பாடு மட்டும் கிடைத்துவிட்டால்,. பிறகு படிப்பதில் என்ன சிரமம்?
 
   திருவனந்தபுரம் சென்றார். இலவசச் சாப்பாட்டைச் சாப்பிட்டுக் கொண்டு அங்கே மேற்படிப்புப் படிக்கலானார்.   
 இயற்கையிலேயே கூர்மையான அறிவு படைத்திருந்த அவர் மொழிப் பாடங்களில் கூடுதல் ஆர்வம் காட்டினார். கல்வி பயிலும் காலத்திலேயே பேச்சுத் திறமையையும் எழுத்துத் திறமையையும் வளர்த்துக் கொண்டார். 
  
    திருவனந்தபுரத்தில் இருந்தபோது, சுதந்திர வேட்கை கொண்டிருந்த வாலிபர்களை ஒன்றுதிரட்டி 'தர்ம பரிபாலன சமாஜம்' என்ற அமைப்பைத் தொடங்கினார். தம் கல்வி நிறைவுற்ற பின் அவர் அங்கு தொடர்ந்து வசிக்க இயலாத நிலை ஏற்பட்டது. 

   அவர் தோற்றுவித்த சமாஜம் ஆங்கிலேயே அரசுக்கு எதிராகச் செயல்பட்டதால் அவர்  அங்கிருந்து  வெளியேற்றப் பட்டார். 
  
    தமிழகம் திரும்பிய அவர், சிவகாசியில் காவல் துறை எழுத்தராகச் சேர்ந்தார். ஒரே நாள்தான். திடீரென தாம் இந்தச் சராசரிப் பணிக்காகப் பிறந்தவரல்ல என்று அவரது உள்குரல் சொல்லிற்று. அடுத்த நாளே அந்தப் பணியிலிருந்து ராஜினாமா செய்துவிட்டார். 

 அவர் தம் வீட்டில் அதிகம் தங்கியதில்லை. எப்போதாவது வந்து செல்வார். அவருக்குத் திருமணமானால் மாறுவார் என்றெண்ணி அவரை வற்புறுத்தித் திருமணம் செய்து வைத்தார்கள். 

   அவருக்கு மண வாழ்வில் நாட்டம் இருக்கவில்லை. அதன் பின்னும் அவர் வீட்டுக்கு அதிகம் வந்து செல்லவில்லை. 

 நீ எப்போது வீட்டுக்கு வருவாய்  என்று தந்தை பாசத்தோடு வினவியபோது, தேவைப்படும் சந்தர்ப்பத்தில் வருவேன், கவலை வேண்டாம் என வாக்குறுதி கொடுத்துவிட்டு வெளியேறினார். 

   தாயாரின் இறப்புத் தருணத்தில் ஆதிசங்கரர் வந்த மாதிரி, தம் தந்தையின் இறுதித் தருணத்தில் வீடுதேடி வந்து தந்தையைத் தன் மடியில் கிடத்திக் கொண்டார். 

   தோற்றத்தால் பெரிதும் மாறிப் போயிருந்த அவரைக் குடும்பத்தார் யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது விழிகளை உற்றுப் பார்த்த தந்தை அவரை இனம் கண்டு கொண்டார். 

  மகனே வந்து விட்டாயா எனக் கேட்ட அவர் தன் மகனைப் பாசத்தோடு பார்த்தவாறே மகனின் மடியில் உயிர் நீத்தார். தந்தைக்குச் செய்ய வேண்டிய அந்திமக் கிரியைகளை முடித்துவிட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் சிவா. 

 *தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் சரளமாக எழுதம் ஆற்றல் பெற்றிருந்த அவர், தமிழில் கவிதையெழுதும் கவிஞரும் கூட. 

  சொற்பொழிவாற்ற மேடையேறினால் அவர் பேச்சில் ஒரு தனிக் கவர்ச்சி தென்படும். கேட்பவர் உள்ளங்களை வசப்படுத்தி விடுவார். தாம் சொல்லும் அனைத்துக் கருத்துகளையும் கேட்பவர்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும்படிச் செய்துவிடுவார். 

   மகுடிக்கு நாகம் கட்டுப்படும் என்பார்களே, அப்படி அவர் குரலுக்குக் கட்டுப்பட்டார்கள் மக்கள். 

  ஊர் ஊராக நடந்தே சென்றார். ஆங்கிலேயர்கள் இந்திய நாட்டின் செல்வ வளத்தைச் சூறையாடுவதை அவர் உணர்ந்திருந்தார். தேசபக்தி நிறைந்த அவர் மனத்தில் சுதந்திரச் சிந்தனைகள் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தன.  

  தாம் நடந்து செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்காங்கே நின்று மக்களிடையே சொற்பொழிவாற்றி விடுதலை உணர்ச்சியைத் தூண்டி விட்டார். 

 அப்படி அவர் தூத்துக்குடி சென்றபோது வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்தார். இரும்பைக் காந்தம் ஈர்ப்பதுபோல் வ.உ.சி.யால் ஈர்க்கப் பட்டார். சுதந்திரத் தியாகிகளான அவர்கள் இருவருக்கும் ஆழ்ந்த நட்பு ஏற்பட்டது. 

 காலப் போக்கில் மகாகவி பாரதியார் இவர்கள் இருவருக்கும் அணுக்கமானார். இவர்கள் மூவரும் மேடைப் பேச்சு மூலம் மக்களிடையே சுதந்திர எழுச்சியைத் தோற்றுவிக்கத் தொடங்கினார்கள்.    

 சென்னை, தூத்துக்குடி, திருநெல்வேலி போன்ற இடங்களில் தொழிலாளர் போராட்டங்களை முன்னின்று நடத்தியவர் சுப்பிரமணிய சிவா தான். அந்தப் போராட்டங்கள் எண்ணற்ற மக்களை ஆங்கிலேயருக்கு எதிராகத் திருப்பின. 

  சிவாவின் மக்கள் செல்வாக்கை அறிந்த ஆங்கிலேய அரசு ராஜத் துரோகக் குற்றம் சுமத்தி 1908-ல் அவரைச் சிறையில் அடைத்தது-   

   சிறையில் சொல்லவொண்ணாத கடும் சித்ரவதைகளுக்கு ஆளானார். நான்கு ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு 1912-ல் விடுதலையாகி, சென்னையில் குடியேறினார்.

  'ஞானபானு' என்ற மாத இதழைத் தொடங்கினார். பிறகு 'பிரபஞ்ச மித்திரன்' என்ற வார இதழையும் தொடங்கினார். அதில் நாரதர் என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். 

 `மோட்ச சாதனை ரகசியம், அருள்மொழிகள், வேதாந்த ரகஸ்யம், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ச வைபவம்` உட்பட 20-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர் அவர். அவரது கவிதைகள் பின்னர் 'ஞானபானு' என்ற பெயரில் தொகுக்கப்பட்டன.

 *ஒருமுறை திருவனந்தபுரத்தின் அருகே உள்ள கொட்டாரக்கரை என்ற கிராமத்திற்குச் சென்றபோது அங்கே சதானந்த சுவாமிகள் என்ற ஒரூ தெய்வீகத் துறவியைச் சந்தித்தார் சிவா.     
  
   அந்தப் பெயர் அந்தத் துறவிக்குக் காரணப் பெயராய் அமைந்ததோ என்னவோ? சதா ஆனந்தத்திலேயே திளைத்திருந்தார் அவர்.  

   அவரது விழிகளில் பளிச்சிட்ட ஒளியும் முகத்தில் தென்பட்ட மாறாத மலர்ச்சியும் சிவாவின் நெஞ்சத்தைக் கொள்ளை கொண்டன. 

   ஆனந்தம் என்பது வெளியே இல்லை, ஒவ்வொருவரது உள்ளத்தின் உள்ளே இருக்கிறது என்ற உண்மையை அந்தத் துறவி அவருக்கு எடுத்துச் சொன்னார். 

  `மனிதன் தன்னை உடலாகக் கருதும்போது இன்ப துன்பங்களில் ஆழ்கிறான். தான் ஆன்ம சொரூபம்தான் என்பதை உணர்ந்து கொண்டால் நிலையான ஆனந்தத்தைப் பெறுவான். ஏனெனில் ஆன்மாவின் இயல்பே ஆனந்தம்தான். 

    ஆன்மாவை வெய்யில் உலர்த்தாது. மழை நனைக்காது. நெருப்பு சுடாது. நீ அழிவில்லாத, அழிக்க முடியாத ஆன்மா என்பதை உணர்ந்துகொள்!` என போதித்தார் சதானந்தர்.  

  சதானந்தரிடம் ராஜயோகம்  பயின்ற சிவா, தம் ஆழ்மனத்தை எப்போதும் இறைச்சக்தியில் நிலைநிறுத்தி வாழலானார்.  

   அவரிடம் தீட்சை பெற்றுக் காவியாடை உடுத்தித் துறவியாகவே மாறினார். இந்தியா சுதந்திரம் பெற வேண்டும் என்பதில் பெரிதும் வேட்கை கொண்டிருந்த சிவா, தன் பெயரை 'ஸ்வதந்திரானந்தர்' என்று மாற்றம் செய்துகொண்டார்.  

   விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக மீண்டும் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டார். இரண்டாவது சிறை வாசத்தின்போது சிறையில் தொழுநோய் அவரைப் பற்றிக் கொண்டது. 

    விடுதலையானதும், சென்னைக்கு வந்தார். உடல்நிலை ஓரளவு முன்னேறியதும் கூட்டங்கள், போராட்டங்களில் மறுபடி பங்கேற்கலானார். 

   நண்பர்கள் உதவியுடன் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் 6 ஏக்கர் நிலம் வாங்கி ஓர் ஆசிரமத்தை உருவாக்கினார். அதற்கு 'பாரதபுரம்' என்று பெயர் சூட்டினார். 

   சர்வ மதத்தினரும் வழிபடும் வகையில் அங்கு பாரதமாதா கோயில் கட்ட முடிவு செய்தார். அதற்கு அடிக்கல் நாட்டியவர் அரவிந்தர் சிறைப்பட்ட போது அரவிந்தரது விடுதலைக்காக வாதாடிய புகழ்பெற்ற  வழக்கறிஞரான 'தேசபந்து' சித்தரஞ்சன்தாஸ். 

  தொழுநோயைப் பொருட்படுத்தாமல், ஊர் ஊராகச் சென்று தாம் நிர்மாணிக்கவிருந்த பாரதமாதா ஆலயத்திற்கு நிதி திரட்டினார். அவரது செயல்பாடுகளால் எரிச்சலடைந்த ஆங்கிலேய அரசாங்கம் அவரது நோயைக் காரணம் காட்டி, பேருந்து, ரயில்களில் அவர் பயணம் செய்யலாகாது எனத் தடை விதித்தது. 

 அதனால் என்ன? நடந்தும், கட்டை வண்டியில் சென்றும் பல ஊர்களில் சொற்பொழிவாற்றி, நிதி திரட்டலானார். 

    தொடர் பயணத்தால் உடல்நலம் குன்றியது. தன் நடைபயணத்தை முடித்துக் கொண்டு பாரதமாதா ஆலயத்தை நிர்மாணிக்கும் கனவுடன் அதற்கென வாங்கிய நிலம் இருக்கும் பாப்பாரப்பட்டிக்குத் திரும்பினார். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு 41ஆவது வயதில் (1925) தமது பாரதமாதா ஆலயக் கனவு நிறைவேறாமலேயே மறைந்தார். 
  
     'வீரமுரசு' என்று போற்றப்பட்ட சுப்பிரமணிய சிவா நினைவாக பாப்பாரப்பட்டியில் அவருக்கு மணிமண்டபம் நிர்மாணிக்கப் பட்டுள்ளது. 

(நன்றி: ஓம் சக்தி மாத இதழ்.)

நன்றி:

ஓம் சக்தி மாத இதழ் 
மற்றும் 

 ............................

8 அக்., 2025

மேன்மக்கள்: திருப்பூர் குமரன்


திருப்பூர் குமரன் பிறந்த தினம்: அக்டோபர் 4, 1904
...............................
*கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!*
(பகுதி  1)
*திருப்பூர் கிருஷ்ணன்*
..............................
   *மகாத்மாவின் சிந்தனைகளால் கவரப்பட்டு, காந்திமயமாக வாழ்ந்து இளம்வயதில் மறைந்த திருப்பூர் குமரன் வாழ்வில் ஓர் ஆச்சரியம். 

   தேதியும் ஆண்டும் வேறு வேறானாலும் அவர் காந்தி பிறந்த அக்டோபர் மாதம் பிறந்தார். (அக்டோபர் 4, 1904.) காந்தி மறைந்த ஜனவரி மாதம் மறைந்தார். (ஜனவரி 11, 1932.) திருப்பூர் குமரன் இறக்கும்போது அவர் வயது வெறும் 27 மட்டுமே.

  தந்தை நாச்சிமுத்து முதலியார். தாய் கறுப்பாயி அம்மாள். இளம் வயதிலேயே கைம்பெண் ஆன குமரனின் மனைவி பெயர் ராமாயி அம்மாள். 

  காந்தியிடம் அளவற்ற ஈடுபாடு கொண்ட தியாகி குமரன், `தேசபந்து வாலிபர் சங்கம்` அமைத்து சுதந்திர 

   உணர்வுகளை மக்களிடையே வலுப்படுத்தினார். உண்மையில் அவர் ஊர் ஈரோடு மாவட்டத்தில் சென்னிமலை அருகிலுள்ள மேலப்பாளையம் என்ற சிற்றூர்தான். பின்னாளில் திருப்பூர் வந்ததாலும் அங்கேயே கொஞ்சகாலம் வாழ்ந்து பின் அங்கேயே காலமானதாலும் திருப்பூர் அவர் பெயரோடு இணைந்துவிட்டது. 

  சென்னிமலையில் நெசவுத் தொழில் நசித்ததால், திருப்பூரில் எடைபோடும் தொழிலில் ஈடுபட்டுப் பணியாற்றினார் குமரன். 

  இன்று மதுவிலக்கை ஆதரிக்கும் நல்லுள்ளம் கொண்டவர்கள் அனைவரும் திருப்பூர் குமரனை மனத்தில் வணங்கக் கடமைப்பட்டவர்கள். சுதந்திரப் போராட்ட காலத்திலேயே காந்தியின் மதுவிலக்குக் கொள்கையின் பெருமையை உணர்ந்துகொண்டார் குமரன். 

 மதுவிலக்குப் போராட்டத்தில் கலந்துகொண்டு கள்ளுக்கடை மறியல் நடத்தினார். தங்கள் மது வணிகம் படுத்ததால் எரிச்சலடைந்த மது விற்பனையாளர்கள் ஆங்காரத்தோடு குமரன் தலையிலேயே மதுப் பானையைப் போட்டு உடைத்தார்கள். 

  பானையின் கழுத்து வளையம் குமரன் கழுத்தில் மாட்டிக் கொண்டது. கழுத்தில் பானை வளையத்தோடு, `இது மகாத்மா காந்தி எனக்குப் பரிசாகத் தந்த மாலை` என அறிவித்து, கம்பீரமாக திருப்பூர் வீதிகளில் நடந்துசென்றார் அவர்.  

  *குமரன் உயிர்துறக்கக் காரணமாக இருந்த அந்த மோசமான தினத்தன்று சுதந்திர எழுச்சி ஊர்வலத்தில் கொடிதாங்கி நடந்தார் அவர். 

   ஊர்வலத்தில் உடன் நடந்தவர்கள் பி.எஸ். சுந்தரம், ராமன் நாயர், நாச்சிமுத்துக் கவுண்டர், பொங்காளி முதலியார், நாச்சிமுத்துச் செட்டியார், சுப்பராயன், அப்புக்குட்டி, நாராயணன் உள்ளிட்ட பற்பல தியாகிகள். ஆங்கிலேயர் மேல் கொண்ட அச்சத்தில் மக்கள் உறைந்திருந்த காலம் என்பதால் ஊர்வலத்தில் கூட்டம் மிகக் குறைவாகத்தான் இருந்தது.

  காவல் துறையினர் கடும் ஆவேசத்தோடு கம்பால் அடித்த அடியில் சுந்தரத்திற்கு நிரந்தரமாகக் காது செவிடாயிற்று. 

   (சுந்தரம் `காதல் தூங்குகிறது` என்ற நாவலை எழுதியவரும் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியருமான கு. ராஜவேலுவின் நண்பர். கொஞ்சம் வெண்ணெயை விழுங்கி தொண்டையைச் சரிசெய்துகொண்டு கம்பீரமான குரலில் சுதந்திர எழுச்சி உரைகளை வழங்குவார் சுந்தரம் என்று கு. ராஜவேலு என்னிடம் சொன்னதுண்டு.) 

  தலையில் விழுந்த பலமான அடியொன்றால் குமரனின் மண்டையோட்டுச் சில் இரண்டரை சென்டிமீட்டர் தலைக்குள் போயிற்று. குமரன் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கீழே விழுந்தார். 

   அந்த நேரத்திலும் கையில் பிடித்திருந்த கொடியை மட்டும் அவர் விடவேயில்லை. கொடியை அவர் கைவிரல்களிலிருந்து இழுத்துப் பறிக்க நினைத்த காவல் துறையினர் முயற்சி வெற்றிபெறவில்லை.  

  பல மருத்துவர்கள் குமரனுக்கு மருத்துவம் பார்க்கத் தயங்கினார்கள். ஆங்கிலேயரைப் பற்றிய அச்சம்தான் காரணம். ரங்கநாதன் என்ற மருத்துவர் ஒருவர் மட்டும் மனம்பொறுக்காமல் தைரியமாக மருத்துவம் பார்த்தார். 

   (அந்த ரங்கநாதன் என் தூரத்து உறவினர். அவர் வசித்த பகுதியைத் திருப்பூரில் ரங்கநாதபுரம் என்று பெயரிட்டு அழைக்கிறார்கள்.)

   ஆனால் மண்டையோட்டுச் சில்லே உடைந்திருந்ததால், மருத்துவச் சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. ஜனவரி 11 ஆம்தேதி குமரன் காலமானார். `தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார்` என்ற மகாகவி பாரதி வரிகளுக்கு விளக்கமாக அமைந்த வாழ்வு நிறைவுற்றது. 

  குமரனின் இறுதி ஊர்வலத்தில் அச்சத்தால் மிகக் குறைவான நபர்களே கலந்துகொண்டார்கள். குமரனின் தம்பி ஆறுமுகம் கொள்ளி வைத்தார். குமரன் தேசத்தின் பொதுச் சொத்து என்று கூறி வெங்கடாசலம் பிள்ளை, மாணிக்கம் செட்டியார், ராஜகோபால ஐயர் ஆகிய தேச பக்தர்களும் கண்களில் கண்ணீர் வழிய குமரன் உடலுக்குக் கொள்ளி வைத்தனர். 

   ஆண்டுகள் பல ஓடின. குமரன் கனவுகண்ட சுதந்திரம் நமக்குக் கிடைத்தது. ஆனால் அதைக் கண்டு மகிழக் குமரன்தான் இல்லை. குமரனின் தியாகத்தை கெளரவிக்கும் விதமாக, திருப்பூர் குமரன் நூற்றாண்டை ஒட்டி அவர் திருவுருவைத் தாங்கிய அஞ்சல் தலை வெளியிடப்பட்டது. 

  திருப்பூர் ரயில் நிலையம் அருகே குமரனுக்கு ஒரு நினைவில்லம் அமைக்கப்பட்டுள்ளது. குமரன் வாழ்க்கை நிகழ்வுகளைச் சித்திரிக்கும் சில ஓவியங்கள் அங்கு காணப்படுகின்றன. 

  எந்தச் சாலையில் திருப்பூர் குமரன் காவல் துறையினரின் தடியடிபட்டு மயங்கி விழுந்து பின் காலமானாரோ அந்தச் சாலைக்கு குமரன் சாலை எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

 *திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு. இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது. 

( இது ஒரு மீள் பதிவு. ராமாயி அம்மாளைப் பொதிகைத் தொலைக்காட்சி நேரலையில் நான் பேட்டி கண்டபோது எழுந்த சிக்கல் என்ன, சிவாஜி கணேசன் திருப்பூர் குமரன் வேடத்தில் நடிப்பதைப் பார்த்த ராமாயி அம்மாள் ஏன் மயக்கம் போட்டு விழுந்தார், எம்.ஜி. ஆர் இறந்தபோது என் பிள்ளை காலமாகிவிட்டான் என அவர் வருந்தக் காரணம் என்ன, தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தங்கள் கட்சியில் சேரச் சொல்லி அவரை அழைத்தபோது அவர் சொன்ன பதில் என்ன....உள்ளிட்ட கேள்விகளுக்கான விளக்கங்கள் அடுத்த பதிவில்!)
..............................

நன்றி:




8 செப்., 2025

மேன்மக்கள்: எல்லை காந்தி


*எல்லை காந்தி*

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது (எல்லை காந்தி என்றே அன்புடன் அழைக்கப்பட்டவர்) 

யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. பட்டேல் நேரு காந்தி காமராஜர் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு

காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர். தேசம் பிரிய கூடாது இஸ்லாமியர்கள் இந்தியர்களாக தங்களை முதலில் உணரவேண்டும் என உறுதியாக சொன்னவர்

அது முடியாத பொழுது "காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்."

எங்களை இந்தியாவோடு சேர்ந்த மேற்கு இந்தியா அமைத்து கொடுங்கள் என கதறினார், ஆம் அவர் இஸ்லாமியர் ஆனால் ஜின்னாவின் பாகிஸ்தானின் உள்நோக்கமும் அதில் இஸ்லாமியர் அமைதியாக வாழமுடியாது என்ற தீர்க்கதரிசன கவலையும் அவருக்கு இருந்தது

மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது.

நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் என கபார்கான் சொன்னதெல்லாம் யார் காதிலும் விழவில்லை

இவ்வளவிற்கும் அவர் கோரிக்கைக்கு பலுசிஸ்தான் பக்கம் பெரும் வரவேற்பு இருந்தது

ஜின்னா கோஷ்டி தவிர யாருக்கும் பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவது பிடிக்க்கவே இல்லை என்பதுதான் அன்றைய நிலை

அந்த கபார்கானின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்திருந்தால் நிச்சயம் இப்பொழுது பாகிஸ்தானுக்கு அடுத்து ஆப்கனுக்கும் அதற்கும் இடையில் ஒரு குட்டி இந்தியா இருந்திருக்கும்

பாகிஸ்தான் இன்னும் சுருங்கி இருக்கும், யுத்தம் என வந்தால் பாக்குவெட்டிக்குள் சிக்கிய எலிபோல் பாகிஸ்தான் மாட்டியிருக்க்கும்

அவர் குரலை யாரும் கேட்கவில்லை

"இந்த ஓநாய்களிடம் எங்களை ஒப்படைக்காதீர்கள், இவர்கள் ஒருநாளும் உருப்படாத கொடூரமான கூட்டம்" என அவர் கதறியது பிரிட்டன் காதிலும் விழவில்லை

காந்தி அதுபற்றி கவலைகொண்டாலும் அத்தோடு அவர்காலமும் முடிந்தது, காந்தி நினைத்திருந்தால் இரு பாகிஸ்தான் உருவானது போல் இரு இந்தியாவினை உருவாக்கியிருக்கலாம்

நேரு அந்த நேரம் காத்த கள்ளமவுனமும் சந்தேகமே, படேலின் குரலும் எடுபடவில்லை

ஆனால் கபார்கான் தொடர்ந்து கேட்டுகொண்டேதான் இருந்தார், பிடிக்காத மருகளுடன் வாழ்வது போல அவர் முதிர்ந்த வயதுவரை அழுது கொண்டேதான் இருந்தார்

வங்கதேசத்தை உடைத்தபின் இந்திராவின் பார்வை பலுசிஸ்தான் மேல் விழுந்தது, தன் கடைசி நம்பிக்கையாக இந்திராவினை கண்டார் கான்

வங்கவெற்றிக்கு பின் இந்திராவின் கவனம் பாகிஸ்தானை இன்னும் உடைப்பதில் இருந்தபொழுதுதான் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பித்தது

இந்திரா எமர்ஜென்ஸி கொண்டுவந்ததில் இந்த உள்நோக்கமும் இருந்தது, பாகிஸ்தானை மேற்கொண்டு உடைத்து போட அவர் கடும் நோக்கம்கொண்டிருந்தார்

ஆனால் அது சர்வாதிகாரம் என சொல்லி உள்நாட்டு குழப்பம் இன்னும் பல குழப்பங்களுக்கு பின் அவர் ஆட்சிக்கு வர சில ஆண்டுகள் ஆனது

அவர் மறுபடி வந்தபொழுது பஞ்சாப் பற்றி எரிய அதிலே கவனம் செலுத்தி உயிரையும் விட்டார் இந்திரா

இதனால்தான் இந்திரா மறையும் பொழுது ஜியா உல்கக் எனும் ராணுவ பாகிஸ்தானிய ஆட்சியாளர் சொன்னான்

"அல்லா இருக்கின்றார், இந்திரா மறைந்தார்"

ஆம் இந்திரா ஆட்சிகாலத்தில் அஞ்சிய பாகிஸ்தான் கபார்கானை படாதபாடு படுத்தியது, அவர் இந்திய உளவாளி என 85 வயதிலும் சிறையில் வைத்து கொடுமைபடுத்தியது

இந்திரா கொஞ்சம் காலம் இருந்தால் நிச்சயம் கபார்கானின் நினைவு நிறைவேறியிருக்கும்

அவர் மறைந்த‌ பின் பலுசிஸ்தான் பக்கம் இந்திய பார்வை குறைந்ததென்றாலும் ரகசிய ஆதரவு உண்டு

1988ல் தன் 98ம் வயதுவரை வாழ்ந்த கபார்கான் தான் விரும்பிய இந்தியாவுடன் இணையாமலே மறைந்தார்

அவர் தன் உடலை பாகிஸ்தானில் புதைக்க விரும்பாமல் ஆப்கனில் தன் முன்னோர்கள் ஊரிலே புதைக்க சொன்னார்

ஆம் இந்தியா தங்களை கைவிட்ட சோகம் அவரை வெகுவாக பாதித்தது, அதனால் அவர் கல்லறை ஆப்கானிலே இன்றும் உண்டு

அந்த மனிதரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்த்திருந்தால் இன்று இந்தியா பாகிஸ்தான் என்றொரு மிரட்டலை சந்தித்திருக்காது

மிக சிறிய நாடாக பாகிஸ்தான் சுருங்கி இந்தியா இடையே சிக்கியிருக்கும்

தியாகிகளின் கண்ணீரை உதாசீனபடுத்தினால் என்னாகும் என்பதற்கு கபார் கானின் கண்ணீரே சாட்சி

எனினும் இந்தியா 1988ல் அவர் இறந்தபின் அவருக்கு பாரத ரத்னா எனும் உயரிய விருது வழங்கபட்டது. இந்தியனாக பிறந்து அந்நியராக அந்த விருதை வாங்கியர் அவர்தான்

காஷ்மீர் பாகிஸ்தான் சிக்கல்கள் வரும்பொழுதெல்லாம் அம்மனிதரின் நினைவு வந்துவிட்டே செல்லும்

அந்த எல்லைகாந்தியின் கோரிக்கை நிறைவேறியிருந்தால் இந்த அளவு மோசமான நிலை வந்திருக்காது

வேண்டாத பிள்ளைகளிடம் சிக்கிவிட்ட பாசமிக்க தந்தையாக அவர் அழுது ஏங்கி செத்திருக்கவும் மாட்டார்

பாவம் அந்த மனிதன்.

அவனுக்கு செய்த துரோகமோ என்னமோ இந்தியா இன்னும் எல்லையில் ரத்தம் சிந்தி கொண்டேதான் இருக்கின்றது

காங்கிரசாலும் காந்தியாலும் நேருவாலும் கைவிடபட்ட அந்த தேசபற்றாளனுக்கு இன்று நினைவுநாள்

முஜிபுர் ரகுமானுக்கு உதவியது போல இந்தியா பலுசிஸ்தானியருக்கும் தனக்கும் உதவுவார் என எண்ணி ஏமாந்துபோன அந்த அப்பாவி மனிதனுக்கு நினைவு நாள்

நல்ல இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கலாமுக்கு முன்பே வாழ்ந்த இஸ்லாமியன் அந்த பெருமகன்

நேதாஜி போலவே வெள்ளையனுக்கு அஞ்சி காங்கிரஸ் தலைவர்களால் கைவிடபட்டு வதைத்து கொல்லபட்ட அந்த பெருமகனுக்கு வீரவணக்கம்

உங்களை காக்க முடியாத எங்களை, இந்நாட்டின் தேசபற்றாளனை கைவிட்ட எங்களை மன்னித்துவிடுங்கள், நாட்டுபற்றில்லா காங்கிரஸ் இந்நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தாக இருந்தது என்பதை நீங்களும் நேதாஜியும் எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்

கட்டினோர் விலக்கிய கல்லே மூலகல்லாய் அடையளமாய் நிற்கும் என்றார் இயேசுநாதார், அப்படி நீங்களும் நேதாஜியும் விலக்கி வைக்கபட்டு காங்கிரசின் துரோகத்தை, காந்தியின் உள்நோக்கத்தை, ஜின்னாவுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனும் நேருவின் சதிகளை எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்

ஒருநாள் கபார்கானின் நினைவுநாள் இந்தியாவில் பிரிவினைக்கு எதிரான ஒருமைபாட்டு நாளாக அறிவிக்கபடும், அது நடக்கும்

ஒருகாலமும் உம் புகழ் ஓயாது, ஒரு நன்னாளில் உங்கள் சிலையும் இத்தேசத்தில் நிறுவி உங்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தபடும், இது சத்தியம்

நன்றி:

திரு.ஸ்டான்லி ராஜன் 
https://consenttobenothing.blogspot.com

29 ஆக., 2025

மேன்மக்கள்: மாணிக்கவாசகர்


மாணிக்கவாசகர் சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இவரது திருவாசகமும்திருக்கோவையாரும் தமிழ் இலக்கியத்தில் முக்கிய இடம் பெற்றவை.

வரலாறு

மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டில் திருவாதவூரில் அந்தணர் குடும்பத்தில் பிறந்தார். இயற்கை பெயர்  'வாதவூரர்'. சிறந்த கல்வி அறிவும், நேர்மையும் கொண்ட மாணிக்கவாசகர் பாண்டிய மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் அமைச்சராக பணியாற்றினார். திருப்பெருந்துறையில் இறைவனின் திருவருளால் ‘மாணிக்கவாசகர்’ எனும் பெயர் பெற்றார்.

உருவாக்க நிகழ்வு

திருப்பெருந்துறை என்பது சோழநாட்டில் கடற்கரை அருகே அமைந்துள்ள புகழ்பெற்ற சிவத்தலம் ஆகும்; இது மாணிக்கவாசகரின் ஆன்மீக வாழ்வில் மிக முக்கிய இடம் வகிக்கிறது. மாணிக்கவாசகர் திருப்பெருந்துறையில் தெய்வீக அனுபவம் பெற்று, தனது வாழ்க்கை முழுவதும் சிவனுக்கே அர்ப்பணித்தார் என்பதே திருப்பெருந்துறை மற்றும் மாணிக்கவாசகர் தொடர்பான சிறப்பு ஆகும்.

திருப்பெருந்துறையின் சிறப்பு

  • தற்போது ஆவுடையார்கோவில் என்றும் அறியப்படுகிறது.

  • கோவிலில் சிவன் குருந்தமரம் அடியில் “குருமூர்த்தி”யாக மாணிக்கவாசகருக்கு அருள் புரிந்தார் என்ற இலக்கிய மரபு உள்ளது.

  • இந்தத் தலத்தில் மாணிக்கவாசகர் பெரும் திருப்பணியும் அறப்பணியும் ஆற்றினார்; அவர் கொண்டுவந்த அரசின் பொருளை கோவில் கட்டுதலுக்கே பயன்படுத்தினார்.

மாணிக்கவாசகர் – ஆன்மீக வழிகாட்டி

  • திருப்பெருந்துறையில் சிவன் “ஆட்கொண்டது”, அழகிய அருட்பார்வையை வளங்கியது என்பதே இவர் வாழ்வில் திருப்புமுனை.

  • நானேயோ தவம் செய்தேன்; சிவாய நம எனப்பெற்றேன்!” மற்றும் “என்னை ஓர் வார்த்தை யுட்படுத்துப் பற்றினாய்” என்று பாடலில் வாழ்த்தியுள்ளார்.

  • குதிரை வாங்க அரசன் தந்த பொருளை கோவில் அருட்பணிக்காக செலவு செய்தார்; அரசன் கோபம் கொள்ள பின்னர் இறைவனே நரிகளை பரிகளாக மாற்றி மாணிக்கவாசகருக்கு அருள்செய்த திருவிளையாடல் இலக்கியத்தில் இவர் புகழ் பாடுகின்றது 

இலக்கியத்தில் இடம்

  • திருப்பெருந்துறை மற்றும் மாணிக்கவாசகர் தொடர்பாக “திருவாசகம்” உள்ளிட்ட பல தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

  • மாணிக்கவாசகரின் வாழ்க்கை, அதில் திருப்பெருந்துறை சம்பவம், ஆன்மீக செயற்பாடுகளில் சைவ சித்தாந்தத்துக்கு சமய அடையாளமாக திகழ்கிறது.

திருப்பெருந்துறை என்பது மாணிக்கவாசகர் ஆன்மீக வளர்ச்சிக்கு ஊற்றாக அமைந்த புனித தலம்

  • மாணிக்கவாசகர் ஓலைச் சுவடியில் பாடல்களைத் தொகுத்துக் கூற, இறைவன் தன் கரத்தால் “திருவாசகம்” என எழுதி முடித்து “திருச்சிற்றம்பலமுடையான்” என்று கையெழுத்திட்டார் என்று சொல்லப்படுகிறது 

திருவாசகத்தின் அமைப்பு

  • இது 51 பாடல்பகுதியுடன் 658 பாடல்களைக் கொண்டுள்ளது.

  • இதில் சிவபுராணம், திருவெம்பாவை, திருவம்மானை, நீத்தல் விண்ணப்பம், திருச்சதகம், உள்ளிட்ட பல பெயரிடப்பட்ட பகுதி பாடல்கள் அடங்கும்.

  • பன்னிரு திருமுறைகளுள் எட்டாம் திருமுறையாக இது மதிக்கப்படுகிறது.

முக்கிய அம்சங்கள்

  • மாணிக்கவாசகரின் இந்த நூல் சிவபக்தியில் மனிதக் உள்ளத்தை உருக்கும் இயல்பினால் பெருமையும் புகழையும் பெற்றது.

  • திருவாசகத்துக்கு உருகாதார் ஒருவாசகத்துக்கும் உருகார்” என்பது இதன் சிறப்பை எவரும் ஒப்புக்கொள்வர்.

திருவாசகம் உருவாக்கம் உண்மையிலே ஒரு பக்திப் பெருவிழா, தமிழ் இலக்கியம் மற்றும் சைவ சமயத்துக்கு அளிக்கப்பட்ட புனித படைப்பு.

இறுதி நிகழ்வுகள்

மாணிக்கவாசகர் 32 ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து ஆனி மாதம் சிதம்பரத்தில் சிவன் திருவடியில்  முக்தியடைந்தார். இவரது நினைவாக ஆண்டுதோறும் அனைத்து சிவன் கோயில்களிலும் குரு பூஜை நடைபெறுகிறது.

மற்ற பெயர்கள்

மாணிக்கவாசகர், திருவாதவூரடிகள்,  மணிமொழியார், தென்னவன் பிரமராயன் என பல பெயர்களாலும் அறியப்படுகிறார்.

திருவாசகம் தமிழ் சமய இலக்கியத்தில் அவருக்கு நிரந்தர இடம் பெற்றுத் தந்துள்ளது. அவரது புகழ் நிலைத்து நிற்கும்.

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


Grateful thanks to PERPLEXITY AI for its help and support in creating this blogpost and the creators of the beautiful images cited above 

22 ஆக., 2025

மேன்மக்கள்: மசானபு ஃபுகோகா


மசானபு ஃபுகோகா (Masanobu Fukuoka) ஒரு ஜப்பானிய விவசாயி, இயற்கை விவசாயி மற்றும் எழுத்தாளர் ஆவார், இவர் "ஒற்றை வைக்கோல் புரட்சி" (One-Straw Revolution) என்ற இயற்கையான, ரசாயனமற்ற வேளாண்மை முறையைக் கண்டறிந்து популяராக்கியவர். இயற்கை விவசாயம், தத்துவம் மற்றும் இயற்கை வேளாண்மையின் தத்துவங்கள் அவரது பணியில் முக்கிய இடம் பிடித்தன.
 

முக்கிய பங்களிப்புகள்:

இயற்கை வேளாண்மை:

வயல்வெளிகளில் உரங்கள் மற்றும் ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாமல், இயற்கை உரங்களோடு பயிர் செய்யவும், மண் வளத்தை மேம்படுத்தவும் இம்முறையில் சாத்தியமாகும். 

"ஒற்றை வைக்கோல் புரட்சி":

ஃபுகோகா தனது இந்த அணுகுமுறையை இந்தப் புத்தகத்தின் மூலம் வெளிப்படுத்தினார், இது பல விவசாயிகளுக்கு உத்வேகம் அளித்தது. 

உலகளாவியத் தாக்கம்:

ஃபுகோகா இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வருகை தந்து தனது இயற்கை வேளாண்மை முறைகளைப் பற்றிப் பேசியுள்ளார். 

இந்தியாவில் தாக்கம்: 

இந்தியாவில் இயற்கை விவசாயம் மற்றும் மாற்று வேளாண்மை பற்றி விவாதிப்பதற்கு ஃபுகோகா தனது வருகையின் போது உதவினார்.

அவர் "ஒற்றை வைக்கோல் புரட்சி" முறையை இந்திய சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பது பற்றி விவாதித்து, சிறிய மற்றும் வளரும் நாடுகளுக்கு இந்த முறை ஏற்றதாக இருக்கலாம் என்று கூறினார்.

நன்றி: Google AI OVERVIEW 



17 ஆக., 2025

மேன்மக்கள்: மகான் அரவிந்தர்

Image attribution:
Sri Aurobindo, c. 1900. Public domain, via Wikimedia Commons.


மகான் அரவிந்தர் – 
இந்தியாவின் ஆன்ம சுதந்திரப் போராளி!


“இந்தியாவின் சுதந்திரம் என்பது அரசியல் சுதந்திரம் மட்டுமல்ல, ஆன்ம சுதந்திரமும் ஆகும்.” – அரவிந்தர்

ஆகஸ்ட் 15ம் நாள் இந்தியாவின் சுதந்திர திருநாள் மட்டுமல்ல, மகான் அரவிந்தரின் அவதரித்த நாளும் ஆகும்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்ட அவர், பின்னர் பாண்டிச்சேரிக்குச் சென்று ஒரு எளிய , சிறந்த ஆன்மிகப் பரிபூரணப் பாதையை கண்டடைந்து அதை உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தி பிறவிப் பயனை அடையவேண்டும் என்று விரும்பினார்.

அவரது வாழ்க்கை இரண்டு பரிமாணங்களில் ஜொலிக்கிறது:

1. சுதந்திரப் போராளி – எழுத்தாளர், பத்திரிகையாளர், தீவிர சுதந்திரக் குரலாகக் களத்தில் இறங்கியவர்.


2. மெய்ஞானி – “சூப்பர் மைண்ட்” (Supramental consciousness) பற்றிய அவரது அனுபவமும் போதனைகளும் இன்றும் உலகை ஊக்குவிக்கின்றன.


பலராலும் இன்றும் 'அன்னை'   (The Mother)  போற்றப்படும் மிர்ரா அல்ஃபாசா அவர்கள், பாண்டிச்சேரி வந்துசேர அவருடன் இணைந்து அரவிந்த ஆசிரமத்தை உருவாக்கினார் . அரவிந்த ஆசிரமம் பாண்டிச்சேரியில் இன்று பலருக்கு புகலிடமாகவும், ஆயிரக்கணக்கானோர் மன அமைதியைத் தேடி வரும் ஆன்மிகத் தலமாகவும் மிளிர்கிறது.

விடுதலைப் போராளிகள் பலரும் மனம் செம்மைபெறவும், உத்வேகம் பெறவும் அவரை நாடினர். மகாகவி பாரதி, மகான் வ வே சு ஐயர் போன்ற பலருக்கும் ஆன்மீக வழிகாட்டியாய் விளங்கினார் 

அவரது சிந்தனைகள் :

சுதந்திரம் அரசியல் விடுதலைக்கு மட்டுமல்ல, ஆன்மீக வளர்ச்சிக்கான பாதைக்கு இட்டுச் செல்லும் கதவுமாகும்.

கல்வி என்பது உள்ளார்ந்த சக்திகளை வெளிப்படுத்தும் கருவி.

மனிதன் தன்னை மீறி, தெய்வீக நிலையை அடைய முடியும்.

அரவிந்தரது சில புகழ்பெற்ற நூல்கள்:

The Life Divine 

Essays on the Gita

Savitri: A Legend and a Symbol

The Secret of the Veda

எனது தனிப்பட்ட வாழ்க்கையில், வருடம் ஒருமுறையாவது பாண்டிச்சேரி அரவிந்த ஆசிரமத்திற்குச் சென்று என்னை புதுப்பித்துக் கொள்கிறேன் 


இன்று நாம் மகான் அரவிந்தரை நினைவுகூரும் போது, அவர் காட்டிய வழியில் நடைபோட்டு சுதந்திரம்–ஆன்மீகம்–முழுமை என்ற  உன்னதமான சித்தாந்தத்தை மனதில் கொண்டு செயல்படுவோம், வீடும் நாடும் பெருமை கொள்ளும் வகையில் சீரிய ஆன்மீக வாழ்க்கையை வாழ்ந்து காட்டுவோம்.

வாழ்க அவரது சிந்தனைகள்! வளர்க அவரது புகழ்!!

இப்பதிவை உருவாக்குவதில் உறுதுணையாய் விளங்கிய ChatGPT-க்கு எனது மனமார்ந்த நன்றிகள்!

விக்கிமீடியா காமன்ஸ் அமைப்பிற்கும் அரவிந்தரின் திருவுருவப் படத்திற்காக மனமார்ந்த நன்றிகள்!!

4 ஆக., 2025

மேன்மக்கள்: டாக்டர் பி. எம். ஹெக்டே

                                        (Photo by courtesy of: Dr B M HEGDE Fans Club, Facebook)

🩺 டாக்டர் பி. எம். ஹெக்டே – சிகரம் தொட்ட மனித நேயமிக்க மகத்தான மருத்துவர்

"மருத்துவம் என்பது மனதுடன் தொடர்பு கொள்ளும் நுண்ணிய கலை."
— டாக்டர் பி. எம். ஹெக்டே

இன்றைய நவீன மருத்துவம் அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் உலகெங்கிலும் கோலோச்சி வரும் இந்த வேளையில், அசுர வளர்ச்சி பெற்றுவரும் மருந்துக் கம்பெனிகளின் ஆதிக்கமும் அச்சுறுத்தும் அளவிற்கு வளர்ந்துள்ளது. 

 விலையுயர்ந்த மருந்துகளும் அதிநவீன கருவிகளும் எல்லாம் என் நம்பும் உலகில் - மருத்துவ உலகில், டாக்டர் பெல்லே மோனப்ப ஹெக்டே அவர்கள் தன் தனித்துவமிக்க பார்வையாலும்,  ஆழ்ந்த, சீரிய சிந்தனைகளாலும், மாறுபட்ட அணுகுமுறைகளாலும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் 

உலகப் புகழ்பெற்ற ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட், ஆசிரியர், எழுத்தாளர், சிந்தனையாளர், மனிதநேயம் நிறைந்த மருத்துவ நபர் என்ற பன்முகச் சிறப்புகள் கொண்ட பண்பாளர்.

🎓 சிறப்பான கல்வியும், மனிதகோட்பாடு மிக்க வாழ்க்கையும்

18 ஆகஸ்ட் 1938, கேரள எல்லையிலுள்ள உத்தபியில் உள்ள ஒரு சிறிய கிராமமான பங்காலாவில் பிறந்த ஹெக்டே அவர்கள், தன்னலமற்ற சேவை மற்றும் உழைப்பின் மூலம் உலக medically-acclaimed மருத்துவராக உயர்ந்தார்.

எம்பிபிஎஸ் (மெடல் பெற்றவர்) – ஸ்டான்லி மெடிக்கல் கல்லூரி, சென்னை

எம்டி – லக்னோவில் கிங் ஜார்ஜ் மெடிக்கல் கல்லூரி

Royal Colleges of Physicians (UK) உறுப்பினர்

முன்னாள் துணைவேந்தர் – மணிப்பால் பல்கலைக்கழகம்

Journal of the Science of Healing Outcomes இதழின் தலைமை ஆசிரியர்

அவரது பணிக்கு பாராட்டாக:

பத்ம பூஷண் (2010). 

பத்ம விபூஷண் (2021)

இந்தியாவின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

🌿 மருத்துவத்திற்கும் மேல் – ஒரு மனிதநேயம் மிக்க பார்வை

டாக்டர் ஹெக்டே, ஆலோபதியை நிராகரிப்பவர் அல்ல. அவரே ஒரு ஆலோபதி மருத்துவர். ஆனால், அவர் விமர்சிக்கிறவர் — மனிதரை இயந்திரம் போலப் பார்த்து மருந்து மட்டுமே தீர்வாக கருதும் நடைமுறையை.

"மனித உடல் என்பது சிக்கலான, தன்னியக்க சிகிச்சை இயந்திரம். அதை நேர்வழி நுட்பத்தால் மட்டும் குணப்படுத்த முயல்வது பிழை."

அவர் வலியுறுத்துவது — உணவு, சுவாசம், தூக்கம், மனநிலை ஆகியவை மருத்துவத்திற்கே அடிப்படை. அக்கறை, கேட்டல், மென்மை ஆகியவை மருந்துகளுக்கு மாற்றாக வேலை செய்கின்றன.

"நோயாளி உரைத்ததை கேட்கும் போதுதான், சிகிச்சை துவங்குகிறது."

🧘 பழங்கால அறிவை ஒட்டிய நவீன சிந்தனைகள்

அவர் நவீன மருத்துவத்துடன் சேர்த்து ஆயுர்வேதம், யோகா, பிராணாயாமம் போன்றவை நலனுக்குப் பெரும் பங்கு வகிக்கின்றன என நம்புகிறார்.

"உணவு, சிந்தனை, சுவாசம் – இவை தான் இயற்கை மருந்துகள்."

"நல்ல சுவாசம், மோசமான மருந்துக்கு மேல்!"

📚 புத்தகங்கள் மற்றும் எழுத்துகள்

அவர் எழுதிய 35க்கும் மேற்பட்ட புத்தகங்கள், ஆயிரக்கணக்கான கட்டுரைகள், சாதாரண வாசகர்களுக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் விளக்கமாக அமைகின்றன.

சில புகழ்பெற்ற புத்தகங்கள்:

What Doctors Don’t Get to Study in Medical School(மருத்துவ கல்லூரியில் 
கற்பிக்கப்படாத பாடங்கள்)

You Can Be Healthy (நீங்கள் நலமாக வாழலாம்)

Holistic Living (முழுமையான வாழ்வியல்)

Wisdom of the Human Body (மனித உடலின் ஞானம்)

🏅 விருதுகளும் பாராட்டுகளும்

பத்ம பூஷண், பத்ம விபூஷண்

டாக்டர் பி.சி. ராய் விருது

கர்நாடக அரசு ரஜ்யோற்சவ விருது

ஜே.சி.போஸ் விருது (Life Sciences)

Pride of India Award, USA

💬 சில உயர் சிந்தனைகள்

❤️ "அன்பு தான், உண்மையான மருத்துவம்."

📖 "மருத்துவ அறிவு புத்தகங்களில் இல்லை — வாழும் முறையிலும், சிந்தனையிலும், உணவிலும் உள்ளது."

🧘‍♂️ "நோயை குணப்படுத்துவது சுலபம்; மனிதனை குணப்படுத்துவது ஒரு கலை."

🕊️ "உடம்பு தன்னைத்தானே சரிசெய்யும் ஆற்றல் படைத்தது;  நாம் அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்."

🙏 முடிவுரை

டாக்டர் பி. எம். ஹெக்டே, ஒரு மனிதநேயமிக்க மருத்துவராகவும்,  தெளிவான சிந்தனையாளராகவும், வழிகாட்டும் வித்தகராகவும் திகழ்கிறார்.

அவிடமிருந்து நாம் அறிவது மருத்துவம் என்பது தொழிலல்ல — அது அர்ப்பணிப்பும் அன்பும் மிக்க மகத்தான, உன்னதமான சேவை என்பதே!
                          

Grateful thanks to ChatGPT for its splendid role in creating this blogpost and Dr B M Hegde Fans Club, Facebook for the photograph of Dr Hegde

3 ஆக., 2025

மேன்மக்கள் : பாலகங்காதர திலகர்


திலகர் நினைவு தினம்: ஆகஸ்ட் 1: 
.....................................
*சரித்திரம் புறக்கணித்த சத்தியபாமாக்கள்!*
 (நிறைவுப் பகுதி)
திருப்பூர் கிருஷ்ணன்*
..................................................
*திலகர் சிறையில் இருந்தபோது, நீரிழிவு நோயால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். ஆனாலும் `கீதா ரகசியம்` என்ற நூ¨லை எழுதி முடித்தார். 

   திலகரைப் பற்றி நன்கு அறிந்திருந்தார் விவேகானந்தரால் மதிக்கப்பட்டவரும் ஜெர்மனியில் வாழ்ந்தவருமான உலகப் புகழ்பெற்ற அறிஞர் மாக்ஸ்முல்லர். 

   இந்திய ஆன்மிகத்திலும் வேத வேதாந்தங்களிலும் பெரும் நாட்டம் கொண்டிருந்த அவர், ஜெர்மனியிலிருந்து விக்டோரியா மகாராணிக்குக் கடிதம் எழுதினார். 

  திலகர் பகவத் கீதை என்ற புனித நூலுக்கு உரையெழுதியவர் என்றும் அவரைச் சிறைப்படுத்தியதன் மூலம் பிரிட்டிஷ் அரசு மாறாத களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டதென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப் பட்டிருந்தது. 

  விக்டோரியா மகாராணியின் மனம் துணுக்குற்றது. இவ்வளவு பெரிய பிரமுகரால் மதிக்கப்படுபவரா திலகர் என ராணியின் மனம் வியந்தது..... 

  *எப்படியோ, நன்னடத்தை காரணமாகவோ வெளிப்புற அழுத்தங்களின் காரணமாகவோ, திலகர் குறிப்பிட்ட காலத்திற்குச் சற்று முன்னதாகவே விடுதலையானார்.... 

  திலகர் `கேசரி` என்ற மராட்டிய இதழையும் `மராட்டா` என்ற ஆங்கில இதழையும் தொடங்கினார். அந்தக் காலத்தில் `கேசரி` தான் இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையில் விற்பனையான பத்திரிகை. 

  தம் பத்திரிகைகளில் அவர் எழுதிய ஆவேசமிக்க தலையங்கங்கள் ஆங்கிலேய ஆட்சியை நடுநடுங்க வைத்தன. எனவே திலகரின் அத்தனை நடவடிக்கைகளும் ஆங்கிலேயே அரசாங்கத்தால் கூர்மையாகக் கண்காணிக்கப்பட்டன. 

  தான் கண்காணிக்கப் படுவதைத் திலகரும் அறிந்துவைத்திருந்தார். அச்சம் என்ற உணர்வே ஒருதுளியும் இல்லாத அவர் அதன்பொருட்டுத் தன் போக்கை எள்ளளவும் மாற்றிக் கொள்ளவில்லை. 

 சுதந்திர எழுச்சியூட்டும் கட்டுரைகளை எழுதியதோடு, எதிர்கால இந்தியா ஒவ்வொரு துறையிலும் எப்படியெல்லாம் திகழ வேண்டும் எனவும் தம் பத்திரிகைகளில் திட்டமிட்டு எழுதி வந்தார் திலகர். 

   `சுதந்திரம் நமது பிறப்புரிமை` என உரத்து முழங்கிய அவர், கட்டாயம் சுதந்திரம் கிடைக்கும் என மனப்பூர்வமாக நம்பினார்.

 `ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று ஆடுவோமே` என சுதந்திரம் வரும் முன்னரே வந்ததாகக் கண்டு பாடிய மகாகவியின் தீர்க்கதரிசன  மனநிலையில்தான் அவரும் இருந்தார். 

  புதிய இந்தியாவில், இந்தியக் கலாசாரத்துடன் இணைந்த கல்வியை வழங்க வேண்டும் என `தக்காண கல்விச் சபை`யைத் தோற்றுவித்தார். 

   கல்வி, பாரதத்தின் கலாசாரத்தோடு இணைந்ததாக இருக்க வேண்டும் என்றும், பண்பாட்டுக் கல்வி, யார் படிக்கும் எந்தப் படிப்பிலும் ஒரு முக்கியமான பகுதியாக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

  இளைஞர்களுக்கு அவர்களின் பாடத் திட்டம் மூலமே பண்பாட்டை போதித்தால்தான் கனவு காணும் பாரதத்தை உருவாக்க முடியும் என அவர் கருத்துக் கொண்டிருந்தார்.   

  இந்தியச் செல்வம் பிரிட்டிஷாரால் கொள்ளையடிக்கப் படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் புத்தகமும் அதை அடிப்படையாகக் கொண்டு ரானடே, விஷ்ணு சாஸ்திரி போன்றோர் ஆற்றிய எழுச்சி மிக்க உரைகளும் அவரைச் சிந்திக்கச் செய்தன. அவர் மனத்தில் நாளுக்கு நாள் சுதந்திரக் கனல் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. 

  பொய் வழக்குகளை ஜோடித்து பல சுதந்திரத் தியாகிகளை பிரிட்டிஷ் அரசாங்கம் சிறையில் தள்ளும் அராஜகம் தொடர்ந்து நாடெங்கும் நடந்தவாறிருந்தது. 

  சட்டத் துறையை விடக் கணிதத்தில் தான திலகருக்குக் கூடுதல் ஆர்வம். ஆனால் தன் ஆர்வத்தைக் கணக்கில் கொள்ளாமல் அப்போதைய சூழ்நிலையைக் கணக்கில் கொண்டார் திலவர். 

  கணிதத்தில் ஆர்வமுள்ள திலகர், சுதந்திரப் போராட்ட வீரர்களைச் சிறையிலிருந்து விடுவிப்பதற்காகவே சட்டப் படிப்புப் படித்தார். அதன்பின் பல தேச பக்தர்களைத் தம் வாதத்தால் விடுவிக்கவும் செய்தார்....  

  *திலகர், தம் மனைவி இறந்த துயரை மறக்கும் வகையிலும் பாரத தேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள மக்களைச் சந்தித்து சுதந்திர எழுச்சியூட்டும் எண்ணத்திலும் பல இடங்களில் சுற்றுப் பயணம் செய்தார். 

  இங்கிலாந்துக்கும் சென்றார். அங்கும் இந்திய சுதந்திரத்தின் தேவை பற்றி மேடைகளில் பேசி இந்தியாவுக்கு ஆதரவாக அங்குள்ள ஆங்கிலேயரின் கருத்துப் போக்கு உருவாகப் பாடுபட்டார்.....  

  *சுவாமி விவேகானந்தர் இந்தியாவைச் சுற்றிவந்த அவரது தொடக்க காலத் துறவு வாழ்வின்போது மும்பையில் இருந்து பூனாவுக்கு ரயிலில் வந்தார். தற்செயலாக அப்போது உடன் பயணம் செய்தவர் திலகர். (இது திலகரின் மனைவி காலமாவதற்கு முன்னால் நடந்த சம்பவம்.) 

  சுவாமிஜியால் பெரிதும் ஈர்க்கப்பட்ட திலகர், அவரைத் தம் இல்லத்தில் தங்குமாறு அன்போடு வேண்டினார். அந்த வேண்டுகோளை ஏற்று விவேகானந்தர் பத்து நாட்கள் திலகர் இல்லத்தில் தங்கினார். 

  சுவாமிஜி பூனாவில் தங்கிய பத்து நாட்களிலும் அவரது ஒளிவீசும் கண்களின் பிரகாசத்திலும் உள்ளத்திற்கு எழுச்சியூட்டும் உரைகளிலும் எண்ணற்றோர் ஈர்க்கப்பட்டனர். அதனால் ஏராளமான பேர் சுவாமிஜியை சாரிசாரியாக தரிசிக்க வரவே சுவாமிஜியின் தனிமைக்கு ஊறு நேர்ந்தது. 

  தொடர்ந்து தாம் தியானத்தில் ஈடுபட விரும்புவதாகச் சொல்லி, திலகரிடம் மட்டும் சொல்லிக்கொண்டு ஒருநாள் எல்லோரும் உறங்குகிறபோது விவேகானந்தர் பூனாவை விட்டுப் புறப்பட்டுச் சென்றுவிட்டார். 

  தன் இல்லத்தில் விவேகானந்தர் தங்கியிருந்த அறையைப் புனிதம் மிகுந்த அறையாகக் கருதினார் திலகர். அந்த அறையிலிருந்துதான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் வகையில் விநாயகர் திருவிழாவை ஆரம்பித்தார். (அந்த அறை இப்போதும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.). 

  சத்ரபதி சிவாஜி உற்சவங்களையும் அந்த அறையிலிருந்துதான் தொடங்கி வைத்தார். எதிர்கால பாரதம் விவேகானந்தர் காட்டிய வழியில் உருவாக வேண்டும் என்பதே திலகரின் கனவாக இருந்தது. 

  பம்பாய், பூனா ஆகிய இடங்களில் பிளேக் நோய் பரவியபோது ஒருசிறிதும் தயங்காமல் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். `பாரதம் என்பது பாரத மக்களே!` என அவர் அடிக்கடிச் சொல்வதுண்டு. `பாரத மக்களுக்குச் சேவை செய்வது பாரத தேவிக்குச் சேவை செய்வதாகும்` என அவர் கருதினார். 

    `நோய் விறுவிறுவென்று பரவிய அந்தச் சோதனையான காலத்தில், மக்களை நோயிலிருந்து காப்பாற்றி அவர்களுக்குத் தொண்டு புரிவதே அனைவரும் அனுசரிக்க வேண்டிய தர்மம்` என்றும், `இந்நேரத்தில் சண்டை சச்சரவுகளை மறந்து மக்கள் அனைவரும் ஒன்றுபட்டிருக்க வேண்டியது மிக முக்கியம்` என்றும் அவர் பத்திரிகைகளில் எழுதினார். 

  அந்த இக்கட்டான காலத்தில் மக்களைக் காப்பாற்றாமல் விக்டோரியா மகாராணியின் வைரவிழாக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் சில பிரிட்டிஷ் அதிகாரிகள். அந்தப் போக்கைத் திலகர் தம் பத்திரிகையின் தலையங்கத்தில் கண்டித்தார். 

  பிரிட்டிஷ் அதிகாரிகளில் இருவர் கொல்லப்பட்டனர். அதற்கு திலகர் தம் பத்திரிகையில் எழுதிய தலையங்கமே காரணம் எனச் சொல்லி அவர் மறுபடி சிறையில் அடைக்கப் பட்டார். கொஞ்ச காலத்திற்குப் பின் விடுதலையானார்.

 வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அன்னியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு எனப் பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். காங்கிரசில் மிதவாதிகள், தீவிரவாதிகள் என இரு பிரிவுகள் உருவாகின. தீவிரவாதிகள் திலகரின் தலைமையில் இயங்கினார்கள்..... 

  *தென்னாட்டில் சுற்றுப் பயணம் செய்த திலகர், வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பரானார். திலகரின் சீடரானார் வ.உ.சி. (பின்னாளில் வ.உ.சி. `தென்னாட்டுத் திலகர்` என்றே அழைக்கப்பட்டார்.) 

  திலகர் தலைமையில்தான் ஸ்ரீஅரவிந்தர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார் என்பதும் பகவான் ஸ்ரீ அரவிந்த மகரிஷியே திலகரின் தலைமையை ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத் தக்கன. மக்கள், திலகரை `திலக் மகராஜ்` என்று அன்போடு அழைத்தார்கள்.

  மனைவியின் அந்திமக் கிரியைக்குக் கூட தான் வர இயலாமல் போனதும் மனைவியின் வாழ்வில் அவள் ஒரு சுகத்தையும் காணவில்லை என்பதும் திலகரின் கடைசி நாள் வரை அவரை ஆழ்மனத்தில் வாட்டி வதைத்துக் கொண்டிருந்தன. 

  வெளியே பல பணிகளை அவர் செய்தாலும் அந்தச் சோகம் அவர் மனத்தின் உள்ளே ஆறாத ரணமாகப் படிந்திருந்தது. 

 ஓயாத பிரயாணங்களாலும் சுதந்திரப் போரில் தீவிரமாக ஈடுபட்டதாலும் தொடர்ந்து ஓய்வே இல்லாமல் கடினமாக உழைத்ததாலும் திலகரின் உடல் சோர்வடைந்தது. காஷ்மீர் சென்று சற்று ஓய்வெடுக்குமாறு நண்பர்கள் அவரிடம் தொடர்ந்து கூறிவந்தார்கள். 

  விரைவில் பூரண ஓய்வு கிட்டப் போகிறது என்ற உண்மை அவருக்குத் தெரிந்திருந்ததால் அவர் தற்காலிக ஓய்வில் நாட்டம் காட்டவில்லை. நோய்வாய்ப்பட்ட திலகர் 1920 ஆகஸ்ட் முதல் நாள் தம் 64ஆவது வயதில் காலமானார். 

  அவரது உடலை மயானத்திற்குச் சுமந்து சென்றவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. மற்றும் சிலர் லாலா லஜ்பத்ராய், மெளலானா செளகத் அலி போன்றோர். திலகரின் இறுதி ஊர்வலத்தில் சுமார் இரண்டு லட்சம்பேர் கலந்து கொண்டதாக வரலாறு பதிவு செய்துள்ளது. 

 *திலகரையும் திலகர் போன்ற தியாகிகளையும் நாம் போற்றுகிறோம். அவர்கள் போற்றப்பட வேண்டியவர்களே. சந்தேகமில்லை. அவர்களுக்குப் புகழ் கிட்டியது. ஆனால் புகழையும் சேர்த்துத் தியாகம் செய்தது தியாகியின் மனைவி அல்லவா? 

  ஒவ்வொரு தியாகியின் மனைவியும் தனி வாழ்வில் செய்த தியாகத்தை இன்று எண்ணிப் பார்ப்பவர்கள் யாரேனும் உண்டா? திலகர் பெயரும் அவர் வரலாறும் நம் எல்லோருக்கும் தெரியும். தெரிய வேண்டும். 

  ஆனால் திலகரின் மனைவி சத்தியபாமாவின் வரலாறல்ல, அந்தப் பெயர் மட்டுமே கூட நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? 

 `மாதரையும் மக்களையும் வன்கண்மையால் பிரிந்து காதல் இளைஞர் கருத்தழிதல்` பற்றி பாரதி உருகி உருகிப் பாடினார். 

  `கண்ணீர் விட்டோ வளர்த்தோம் சர்வேசா, இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்` என்று சுதந்திரப் பயிர் பற்றிச் சொல்லும்போது பாரதி சொல்லும் கண்ணீர், தியாகியின் கண்ணீர் மட்டுமா, தியாகியின் மனைவியின் கண்ணீரும் கூட அல்லவா? 
.................................................

திரு திருப்பூர் கிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள் !
முகநூலுக்கும் நன்றி!!