28 ஏப்., 2009

ஆத்திச்சூடி: விரிந்த பொருள் காணல்

அஃகம் சுருக்கேல்.

ஒவ்வொருவரிடமும் ஒரு தனித்திறமை ஒளிந்திருக்கிறது. முதல் படி, தனது தனித்திறமையை உணர்தல்; இரண்டாம் படி, அதை முறையாக வளர்த்தல்; மூன்றாம் படி, அதை வெளிக்கொணர்தல்; நான்காம் படி, அதை தனக்கும், தன்னைச் சேர்ந்தோர்க்கும், மற்றும் இந்த சமுதாயத்திற்கும் பயனுள்ளதாக்கல்.

26 ஏப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-42:

பிறர் உடல் அல்லது உள்ளத்தைப் புண்படுத்தாமை மட்டும் அஹிம்சை அல்ல. சாதாரணமாக இதை அஹிம்சையின் வெளிப்படைத் தத்துவம் எனலாம். உண்மையான அஹிம்சை விருப்பு வெறுப்பற்ற நிலையில் உள்ளது. - காந்தியடிகள்

25 ஏப்., 2009

நாலடியார்-4: "செல்வம் நிலையாமை"

நின்றன நின்றன நில்லா எனஉணர்ந்
தொன்றின ஒன்றின வல்லே செயின்செய்க;
சென்றன சென்றன வாழ்நாள் செறுத்துடன்
வந்தது வந்தது கூற்று.

திருவருட்பா-3: புண்படா உடம்பும் புரைபடா மனமும்...

புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படாது இரவும் பகலும்நின் தனையே
கருத்தில் வைத்து ஏந்துதற் இசைந்தேன்
உன்பனே எனினும் உடுப்பனே எனினும்
உலகரை நம்பினேன் எனது நண்பனே
நலன்சார் பண்பனே உனையே
நம்பினேன் கைவிடல் எனையே.

பாரதிதாசன் கவிதைகள்-10: "வெள்ளம் வருமுன்"

வெப்பத்தால் வெதும்பு கின்ற
வெளியெலாம் குளிர்காற் றொன்று
தொப்பென்று குதிக்க, அங்கே
துளிரெலாம் சிலிர்க்கக் கண்டேன்.
எப்பக்கம் இருந்தோ கூட்டப்
பறவைகள் இப்பக் கத்துக்
குப்பத்து மரத்தில் வந்து
குந்திய புதுமை கண்டேன்.

பாரதிதாசனின் "அழகின் சிரிப்பிலிருந்து"

இயற்கை மருத்துவ முகாம்-1: "குலசேகரபட்டினத்தில்"

இலவச ஏழு நாட்கள் இயற்கை மருத்துவம், யோகா சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு முகாம்

நடைபெறும் இடம்:
----------------------------
இயற்கை வாழ்வு நிலையம்
(வள்ளியம்மையார் ஆசிரியைப் பயிற்சிப்பள்ளி அருகில்)
குலசேகரப்பட்டினம்-628206
திருச்செந்தூர் வழி, தூத்துக்குடி மாவட்டம்

நாட்கள்: 2009 மே 18 முதல் 24 வரை

மருத்துவம் அவசியமா? நோய் தராத உணவுகள் எவை? நோய் தரும் உணவுகள் எவை? எப்பொழுது உண்ணவேண்டும்? எப்படி உண்ணவேண்டும்? எதை உண்ணவேண்டும்? நோய்வந்தால், எளிய இயற்கை வழியில் நம்மை நாமே எப்படி குனப்படுத்திக்கொள்வது? போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடைகாண.

புனேயில் உள்ள "நேஷனல் இன்ஸ்டிடுட் ஆஃப் நூட்ட்ரிஷன்" (National Institute of Nutrition, Pune) உதவியுடன் நடத்தப்படுகிறது.

கலந்துகொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள:

அலைபேசி: 9380873645, 9944042986.
மின்னஞ்சல்: fruitarianashram@gmail.com

இன்று ஒரு தகவல்-22: "உலக டிஜிட்டல் நூலகம்"

ஏப்ரல் 21 அன்று "சர்வ தேச டிஜிட்டல் நூலகம்" திறக்கப்பட்டுள்ளது. வரும் 2010 ஆண்டுக்குள் ஒரு கோடிப் புத்தகங்கள் இந்த வெப்சைட்டில் சேர்க்கப்பட உள்ளன. பழமையான புத்தகங்கள், வரைபடங்கள், ஆடியோ, வீடியோ உள்ளிட்ட தகவல்களை இலவசமாக 'டௌன்லோட்' செய்துகொள்ளலாம்.

வலை முகவரி: http://www.wdl.org/

நன்றி: தினமலர், மதுரை, ஏப்ரல் 24, 2009.

ஆன்மீக சிந்தனை-20:

தர்மோ ரக்ஷதி, தர்மம் ரக்ஷித - தர்மத்தைக் காப்பீர்களானால் தர்மம் உங்களைக் காக்கும். - பகவான் சத்யா சாய்பாபா

எனக்குப் பிடித்த கவிதை-49: "வருகுது, வருகுது, தேர்தல் வருகுது"

வருகுது, வருகுது, வருகுது, வருகுது!
தேர்தல் வருகுது, தேர்தல் வருகுது!
வீட்டுச் சுவர்களும் வீதி மரங்களும்
ஊர்வன பறப்பன ஒன்று விடாமல்
வண்ணம் பூசிச் சின்னம் தாங்க
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

தெருக்கள் தோறும் கட்சித் தோரணம்
திரும்பும் இடமெல்லாம் கட்சித் தலைவரின்
'கட்-அவுட்' சிரிக்க; வண்ண மின்னொளி
தாங்கும் மேடைகள்; சாதனை; பேச்சுக்கள்!
தினந்தினம் நடக்க தெரு-விழா காண
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

கள்ளப் பணமும் கறுப்புப் பணமும்
வெளியில் வந்து வீடுகள் தோறும்
"உங்கள் வீட்டுப் பிள்ளை நான்தான்
உங்கட் காகவே உழைப்பேன் நான்" என
சென்ற தேர்தலில் ஒட்டு வாங்கிச்
சென்றவர்! - மீண்டும் இன்று திரும்பி
குழைந்து பேச கும்பிடு போட
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

இருக்கும் கட்சி உடைந்து சிதற
இன்னொரு கட்சி கூட்டணி அமைக்க
தோளோடு தோளாய் இருந்தவர் பிரிந்து
இவர்மேல் அவரும் அவர்மேல் இவரும்
ஊழல் குற்றம் ஊர்தோறும் கூறி
நாக்கு நாடகம் நடத்திக் காட்ட
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

ஊர்ப்பண மெல்லாம் ஒருசிலர் மட்டும்
பங்கு போடவும் பதவிச் சண்டையில்
சட்ட மன்றில் கட்டிப் புரண்டு
இருக்கையை - செருப்பை எடுத்து வீசி
சிலம்பப் போரும் செய்து காட்டி
"மக்கள் ஆட்சியின் மாண்பைக்" காக்க
வருகுது, வருகுது, தேர்தல் வருகுது!

கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன் அவர்கள் 1989-ல் எழுதிய கவிதை.

"எண்ணத் திவலைகள்"
கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன்
இளங்கதிர் வெளியீட்டகம்
19, காளியம்மன் கோவில் தெரு
கொட்டப்பட்டு, பொன்மலை
திருச்சி-620004
தொலைபேசி: 0431-2491097

நன்றி: கவிஞர் கொட்டப்பட்டு ப.சக்திவேலன் அவர்கள் & இளங்கதிர் வெளியீட்டகம்.


24 ஏப்., 2009

நாலாயிர திவ்வியப் பிரபந்தம்-2:

குலந்தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம்
நிலந்தரம் செய்யும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றுந் தந்திடும் பெற்றதாயினும் ஆயின செய்யும்
நலந்தருஞ் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்.

- திருமங்கை ஆழ்வார் பாசுரம்

திருமந்திரம்-10: புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை...

புறப்பட்டுப் புக்குத் திரிகின்ற வாயுவை
நெறிப்பட உள்ளே நின்மலம் ஆக்கில்
உறுப்புச் சிவக்கும் உரோம் கருக்கும்

புறப்பட்டுப் போகான் புரிசடை யோனே.

தேவாரம்-6: "தோடுடைய செவியன்..."

தோடுடைய செவியென் விடையேறியோர் தூவெண் மதிசூடிக்
காடுடைய சுடலைப் பொடிபூசி எனுள்ளங் கவர்கள்வன்
ஏடுடைய மலரான்முனை நாட் பணிந்தேத்த அருள்செய்த
பீடுடைய பிரமாபுர மேவிய பெம்மான் இவனென்றே.