26 பிப்., 2009

திருக்குறள்: விரிந்த பொருள் காணல்

தூய்மை, துணைமை, துணிவுடைமை இம்மூன்றும்
வாய்மை வழியுரைப்பான் பண்பு.

எப்போதும் உண்மையே பேசுபவன் மனம் தூய்மையுடன் மிளிர்கிறது. தூய உள்ளத்தைத் தேடிவந்து இறைவன் குடிபுகுகின்றான். இறைவனை விட உலகில் பெரிய துணை, உற்ற துணை யார்? அப்படி இறைவனே துணையானபின் அச்சத்திற்கு இடமேது? துணிவிற்குப் பஞ்சமேது? எனவே வாய்மை பேசுகின்றவனிடம் தூய்மை, துணைமை, துணிவுடைமை போன்ற சிறந்த பண்புகள் இயல்பாக வந்தமைகின்றன.

நெல்லையப்பன் கவிதைகள்-57: "அடையாளம்"

ஆடை, அணிகலன்கள்,
நிறம், ஜாதி, மதம் தாண்டி
எது நம் அடையாளம்?

தமிழன் என்று சொல்லி
மொழியின் பின்னால்
குளிர் காயமுடியாது;
அதனால் தமிழுக்கு
கிடையாது பெருமை.

மதராசி என்று சொல்லி
வசிக்கும் இடத்தை
முன்னிறுத்த முடியாது -
அன்றே பாடிவிட்டாள் அவ்வை.

கல்தோன்றி மண்தோன்றாக்
கதையெல்லாம் சொன்னால்
இன்று நாம் செய்வதென்ன
என்றே கேள்வி எழும்.

நற்பண்பை, நற்செயலாய்,
நம் அடையாளமாய்
பெருமையாய்ச் சொல்ல
விஞ்சி நிற்பதென்ன நம்மிடம்?

நல்லதாய் விஷயங்கள்
ஞாபகத்தில் வரவில்லை;
ஞாபகத்தில் இருப்பவையோ
நல்லவைகளாய் இல்லை.

தயக்கத்தோடு ஒன்றிரண்டு
சொல்ல நினைத்தாலும்
கண் முன்னே வந்து
கைகொட்டிச் சிரிக்கிறது
நம் மனசாட்சி!

திருவிழாவில்
பெற்றோரைத் தொலைத்த
குழந்தை மாதிரி,
நம் அடையாளத்தை
தொலைத்துவிட்டு,
உணர்வற்று ஓடுகிறோம்
திசை தெரியாமல்
இலக்குகள் இன்றி.

25 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-56: "பிழை திருத்தம்-2"

அடக்கியது கொஞ்சம்
வேலைக்காரியிடம் கொஞ்சம்
மீதி மாமியாரிடம் என
முடியும் என் கோபம்.

சின்னத்திரையோ
கிளறும் என் காயம்
தொலைபேசி மணியோ
அடிப்பதேயில்லை
அவர் போனதிலிருந்து.

யாருடைய "ஐயோ பாவமும்"
தேவையில்லை எனக்கு.
துக்கம் விசாரிக்கிறேன்
பேர்வழி என்று
கலங்கடிக்கிறார்கள்
மீண்டும் மீண்டும்!

ஒருவருக்குத் தெரியாமல்
ஒருவர் அழுகிறோம்
இருவர் மட்டுமே
இருக்கும் வீட்டில்
ஒருவரையொருவர்
தவிர்ப்பதெப்படி?

ஏதாவதொன்றில்
மனதைச் செலுத்து
என்கிறாள் தோழி

வயதும் வாழ்வும்
மிச்சமிருக்க
மறுமணம்தான்
தீர்வு என்கிறாள்.

அவள் வாதத்தின்
எதார்த்தம் உண்மை;
ஒப்புக்கொள்ளத்
தயக்கமே தடை;
ஊர் உலகம்
பற்றிய பயமுந்தான்.

முடிவு செய்துவிட்டேன்;
காத்திருப்பேன்;
தனியே விடமாட்டேன்
என் அத்தையை;
ஒரு ஆண் தயாரென்றால்
மறுக்க மாட்டேன்!

யார் என்னை
ஏற்றுக்கொள்வார்
என காத்திருக்கத்தானே
முடியும்.
அட இந்த முறையாவது
தெரிந்தெடுக்கும்
உரிமையும், வாய்ப்பும்
கிட்டுமா எனக்கு?

19 பிப்., 2009

இன்று ஒரு தகவல்-19: "அணையாத அடுப்பு!"

திருவருட் பிரகாச வள்ளலார், வடலூரில் சத்திய ஞானசபையில், 1867 மே மாதம் 23-ம் நாள் தர்மசாலை அமைத்து அன்னதானத்தைத் தொடங்கினார். அன்று அவர் ஏற்றி வைத்த அடுப்பு 142 ஆண்டுகளாகியும் அணையாமல் எரிந்துகொண்டிருக்கிறது. அன்னதானத்திற்கு அரிசி, பருப்பு மற்றவை பக்தர்கள் மூலமாக வந்துவிடுகிறது. தினமும் காலை ஆறு மணி, மற்றும் எட்டு மணி, பகல் பன்னிரண்டு மணி, மாலை ஐந்து மணி மற்றும் இரவு எட்டு மணி என தினமும் ஐந்து வேளை அன்னதானம், தொடங்கிய நாள் முதல் இன்று வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விசேஷ நாட்களில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது.
ஆதாரம்: தினமலர், 7.2.2009.

நெல்லையப்பன் கவிதைகள்-55: "பிழை திருத்தம்"

கண்ணீர் வற்றிய கண்கள்
கொல்லும் தனிமை,
நீளும் இரவுகள்,
விடியலில் கண்ணயர்ந்து
அரவம் கேட்டு
வாரிச் சுருட்டி எழுவதும்,

இழுத்துப்போட்டுச் செய்தாலும்
எவ்வளவு வேலை இருக்கும்
இருவர் மட்டுமே
இருக்கின்ற வீட்டில்?

கழுவிய வீட்டையே
எத்தனை தடவை
திரும்பக் கழுவுவது.

எத்தனை நேரம்
வேடிக்கை பார்ப்பது
நடு முற்றத்தில்
வந்தமரும் குருவிகளை.

எதைப் பேசமுடியும்
வேலைக்காரியிடமும்
மாமியாரான என்னிடமும்

புத்தகம், ஆன்மிகம்,
தொலைக்காட்சி எல்லாமே
ஏதாவது ஒரு இடத்தில்
காயத்தை மறுபடி கிளறும்

சிரிக்கக்கூடதென்று
தடையிருப்பதுபோல்
எப்பொழுதாவது
அதிசயமாய்ப் பூக்கும்
புன்னகை மலர்களையும்
அவசரமாக உதிர்த்துவிடுவதேன்?

செடியோடு உறவு
விடுபட்டுப் போனதென்று
மணம் வீசுவதை
நிறுத்தி விடமுடியுமா
உதிர்ந்த மல்லிகை?

பிறந்த கன்று
இறந்ததென்று
பால் சொரிவதை
நிறுத்துமா பசு?

இரவெல்லாம் உறங்காமல்
படுக்கையில் புரள்வதை
உறங்குவதுபோல் நானும்
பார்த்திருப்ப தெத்தனை நாள்?

முடிவெடுத்து விட்டேன்
அவளையும் கேளாமல்;
நல்ல வரனொன்று சொல்லுங்கள்
எனதருமை மருமகளுக்கு.

சிற்றிதழ்கள்-1: "புதிய ஆசிரியன்"

தமிழிலக்கிய வளர்ச்சியில் சிற்றிதழ்களின் பங்களிப்பு அளப்பரியது என்பதில் எள்ளளவும் ஐயமே இல்லை. ஆனால், தமிழ் வளர்ச்சி பற்றியும், தமிழின் பெருமை பற்றியும் வாய்கிழியப் பேசுபவர்கள், இது போன்ற சிற்றிதழ்களுக்கு உதவிக்கரம் நீட்ட ஏன் தயாராக இல்லை. இலக்கியத்தரம் வாய்ந்த சிற்றிதழ் கண்ணில் பட்டால், உடனே ஓராண்டு சந்தாவோ, பத்தாண்டு சந்தாவோ கட்டுவது என்கிற தமிழுணர்வு ஏன் நமது தமிழார்வலர்களுக்குத் தோன்றுவதில்லை?

சமீபத்தில் நெல்லையில், மூத்த பத்திரிக்கையாளர் தி.க.சி.யை சந்தித்தபோது, "இதைப் படித்துப் பாருங்களேன்" என்று சொல்லாமல், "இதை நீங்கள் கட்டாயம் படிக்க வேண்டும்" என்கிற கட்டளையுடன் ஒரு சிற்றிதழை என்னிடம் தந்தார். அந்த இதழின் பெயர் 'புதிய ஆசிரியன்'. மதுரை, காக்காத்தொப்புத் தெருவிலிருந்து வெளிவரும் அந்தப் பத்திரிக்கையின் ஜனவரி மாத இதழைப் படித்தபோதுதான் தெரிந்தது, ஜனரஞ்சகமாகவும் ஒரு இலக்கிய இதழை நடத்தமுடியும் என்று.

'புதிய ஆசிரியன்' இதழில் ஜீவி என்கிற கவிஞர் எழுதியிருந்த 'சாணை பிடித்தல்' என்கிற கவிதை எனது சிந்தனையை நிஜமாகவே சாணை பிடித்தது. தன்னம்பிக்கை ஊட்டும் இதுபோன்ற கவிதைகளைப் பாடப்புத்தகங்களில் ஏன் சேர்க்க மறுக்கிறார்களோ தெரியவில்லை!

வெளிர்ந்த உன் பூக்களுக்கு

வண்ணம் அடி.
அலுத்துச் சலித்த நாட்களின் மேல்
ஆனந்தம் தெளி.
பிளவுண்ட பிரதேசங்களுக்கு
தண்ணீர் பாய்ச்சு.
புல்லாங்குழல் போரடிக்கிறதா,
பறையோசை கேள்.
திரையிசையால் திணறுகிறாயா,
பாரதி பாடல்களில்
ஆறுதல் தேடு.
அநீதியை எரிக்கும் நெருப்பை
அவியாமல் காப்பாற்று.
யுகத்தை ஜெயிக்கும் வீரியத்தை
விரல்களில் ஏற்று.

கையைச் சுட்டுக்கொண்டபின்
இந்த முறையும்
விதை தேடும் உழவன்.
சொட்டும் இல்லையென்று
தெரிந்த பின்னும்
தாய்மடி முட்டும் கன்று.
இலைகள் உதிர்ந்த பின்னும்
பச்சையாய்ச் சிரித்து
துளிர்க்கும் செடி.
வழக்கமான கோலம் தவிர்த்து
விழா நாட்களில்
பெரிதாய்க் கோலமிடும் அம்மா -
அவர்களிடம் பாடம் படி.
எழு, நட... தூரத்தில் பார்...
அகண்ட புதிய பாதை!

 

கலாரசிகனின் "இந்த வாரம்", 'தமிழ்மணி', தினமணி, 15.2.2009.
நன்றி: திரு.கலாரசிகன் & தினமணி.

18 பிப்., 2009

நலக்குறிப்புகள்-34: "பாகற்காய்"

பாகற்காய் பல சிறந்த மருத்துவ குணங்களையுடையது. விஷத்தை முறிக்கும்; பசியை உருவாக்கும்; பித்தத்தை தணிக்கும்; சர்க்கரையின் அளவைக் குறைக்கும்; மலச்சிக்கலைத் தவிர்க்கும்; ரத்தத்தை சுத்தம் செய்யும். நீரிழிவு, மூலம், சுவாசம் தொடர்பான நோய்கள், எக்சீமா, சொரியாசிஸ், கரப்பன், படை போன்ற சகல சரும நோய்கள் ஆகிய பல நோய்களுக்கு நல்லது. தீராத தோல் நோய்களுக்கு தினம் ஒரு கப் பாகற்காய் சாறு வெறும் வயிற்றில் பருகிவர நல்ல பலன் கிடைக்கும்.

இன்றைய சிந்தனைக்கு-40:

பிறர் நலம் பேணுதல், உயிர்களிடத்தில் அன்பு, தேச பக்தி, கடமையுணர்வு ஆகிய இக்குணங்கள் நம் உயிரோடு கலக்க வேண்டும். - ஸ்ரீ அரவிந்தர்.

இன்று ஒரு தகவல்-18: "28 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை!"

பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, மு.ராகவையங்கார், பம்மல் சம்பந்தனார், டாக்டர் மு.வரதராசனார், கவியரசு கண்ணதாசன், அழ.வள்ளியப்பா, பண்டிதமணி கதிரேசன் செட்டியார், அ.சிதம்பரநாதன் செட்டியார், மு.சு.பூரணலிங்கம் பிள்ளை, தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான், பாலூர் கண்ணப்ப முதலியார், இராய.சொக்கலிங்கனார், முனைவர் ச.அகத்தியலிங்கம், பாவலர் நாரா.நாச்சியப்பன், புலியூர் கேசிகன், சாண்டில்யன், கோதைநாயகி, சின்ன அண்ணாமலை, பூவை எஸ்.ஆறுமுகம், என்.வி.கலைமணி, கவிஞர் முருகு சுந்தரம், புலவர் த.கோவேந்தன், சுந்தர ராமசாமி, திருக்குறள் மணி நவநீதகிருஷ்ணன், லட்சுமி, வடுவூர் துரைசாமி ஐயங்கார், ஜமதக்னி மற்றும் ஜே.ஆர்.ரங்கராஜு உள்ளிட்ட இருபத்து எட்டு தமிழ்ச் சான்றோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, அவர்கள் மரபுரிமையர்களுக்கு பரிவுத் தொகை வழங்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 95 தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

தகவல்: தினமலர், மதுரை, 18.2.2009.
நன்றி: தினமலர்.

நெல்லையப்பன் கவிதைகள்-54: "ஒரு நல்ல தொடக்கம்"

மதம் என்றால் என்னப்பா?
எட்டு வயது மகளுக்கு
ஏற்றதொரு பதில் சொல்ல
சிந்தித்த வேளையில்
மகளே மறுபடியும் கேட்டாள்:

சகித்துக்கொள்ள முடியாதபடி
நாத்தம் பிடித்ததா அது?
மதசகிப்புத் தன்மை வேண்டுமென
புத்தகத்தில் போட்டிருக்குதே!

கூவத்து குடிசைகளைக் காட்டி
குடியிருக்க எத்தனை
சகிப்புத்தன்மை வேண்டுமென
கேட்டீர்களே அன்று!

தொட்டால் ஒட்டிக்கொள்ளும்
தொற்றுநோய் போன்றதா, மதம்?
அவர்களுடன் சேராதே,
இவர்களைத் தொடாதே என
அடிக்கடி சொல்கிறாளே பாட்டி!

புளித்துப்போன விஷயமா மதம்
அம்மா ஏன் 'உவ்வே' என்கிறாள்?
ஒருத்தர் விட்டுக்கொடுத்தா
ஒருநாளும் சண்டை வராதுன்னு
நீங்கதானே சொன்னீங்க;
பெரியவர்கள் பின் ஏன்
கூட்டமாய் சண்டை போடுறாங்க?

மதம் என்ன நிறம் மாறும்
பச்சோந்தியைப் போன்றதா?
ஏன் அவங்க மட்டும்
சேப்பா இருக்குறாங்க?

கேள்விகளைக் கேட்டுவிட்டு
மகள் போய்விட்டாள்.
கேள்விகளின் கனம் தாங்காமல்
அமர்ந்துவிட்டேன் அப்படியே.

சொல்லிக் கொடுப்பானேன்
தப்புப் தப்பாக?
கெட்டிக்காரி என் மகள்.
அவளே கண்டுபிடிக்கட்டும்!

கடிதம்-12: "பஸ் எரிப்பு"

அரசு சொகுசு பஸ்சை எரித்த குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பாராட்டப்படவேண்டிய, தொடரவேண்டிய விஷயம்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை 'தாஜா' செய்ய, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, கவர்னரின் விஷேஷ உரிமையை பயன்படுத்தி வெளிக்கொணர்வது ஆளுங்கட்சியின் பழக்கம். சொகுசு பஸ், சாதாரண பஸ் எரித்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக, கவர்னரின் அனுமதியை ஒரு ஆண்டு முடிவதற்குள் தமிழக அரசு கோரக்கூடாது.

உ.பி. மாநிலத்தில் சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதற்காக காவல்துறை துணை ஆய்வாளரும், காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாக்கியதை வேடிக்கை பார்த்ததற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற காவல்துறையை உருவாக்கி நிர்வாகம் செய்த குற்றத்திற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதே போக்கை பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் விஷயத்திலும் கடைப்பிடிக்க மாநில அரசுகள் தைரியமாக முன்வர வேண்டும். சூத்ரதாரியை விட்டுவிட்டு, பொம்மைகளை அடிப்பதால் பயன் என்ன?

'சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் பாசாங்குக்காரன் விடான்.' அரசியல் தலைவர்கள், விஷமிகள் சிறைக்குச் சென்றாலும் விடமாட்டார்கள். தியாகி முத்திரை குத்தி, எம்.எல்.ஏ. சீட் தந்து சட்டசபைக்கு அனுப்பிவிடுவர்.

மரத்தை நட்டு, குளத்தை வெட்டி, அன்றைய அரசர்கள் ஆட்சி செய்தனர்; மரத்தை வெட்டி, பஸ்சை கொளுத்தி இன்றைய ஜனநாயக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். - வீ.அன்புராஜா, எட்டயபுரம்.
தகவல்: "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை, 16.2.2009.
நன்றி: திரு.வீ.அன்புராஜா & தினமலர்.

17 பிப்., 2009

ஆன்மீக சிந்தனை-18:

எல்லோரையும், எல்லாவற்றையும் நேசிப்பவன் இறைவனை நேசிப்பவனாகிறான்.

தேவாரம்-4: "பொன்னவன்..."

பொன்னவன் பொன்னவன்
பொன்னைத்தந்து என்னைப் போகவிடா
மின்னவன் மின்னவன்
வேதத்தின் உட்போருளாகிய
அன்னவன் அன்னவன்
ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன்
என் மனத்து இன்புற்று இருப்பானே!
- சுந்தரர் தேவாரம்

கடிதம்-11: "விளையாட்டு"

விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. நம் பாரதி கூட ஓடி விளையாடு பாப்பா என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை புகழ்ந்து பட்டியிருக்கிறார். ஆனால் இன்றோ பல்வேறு பள்ளிகளில் சிறிது நேரம் கூட விளையாட அனுமதிப்பது இல்லை. படிப்பு, படிப்பு என்றே அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தமிழக அரசு நிதி அளிக்கவேண்டும். - எம்.பாசில் ஷரீஃப், தாளவாடி.
தகவல்: "கடிதங்கள்", தினகரன், 13.2.2009.
நன்றி: திரு பாசில் ஷரீஃப் & தினகரன்.

நெல்லையப்பன் கவிதைகள்-53: "காமம்"

எப்போதும் விழித்திருக்கும்
அடங்கியதாய் பாவனை காட்டும்
உலை மூடி போல் தலை தூக்கும்
கிடைக்கும் முதல் வாய்ப்பில்
கட்டவிழ்ந்து கரை உடைக்கும்.

நூலில் கட்டிய மதயானை
நூலறுக்கும் ஆசை -
அவமானத்திற்கு அஞ்சி
கால் மாற்றிக் கால் மாற்றிக்
காத்து நிற்கும்
காணும் காட்சிகள் கனல் மூட்டும்
கனவுகள் உணர்வை உசுப்பிவிடும்.

அடக்க நினைப்பது அழகல்ல
அலட்சியப்படுத்துவது அறிவுடைமை அல்ல
அடிக்கடி புசிக்க உணவல்ல
பலர் கூடிச்செய்ய பொதுப்பணியல்ல.

வெறும் மெய்மட்டும் என்றால் மெய்யல்ல
உயிரும் மெய்யும் கலக்கும் ரசவாதம்
தக்க துணையோடு தணிக்க வேண்டும்
தவமென்று உணர்ந்தால் இனிமை கூடும்.

16 பிப்., 2009

நலக்குறிப்புகள்-33: "அகத்திக்கீரை"

அகத்திக்கீரையை வாரம் ஒருமுறை சமைத்து உன்ன வெயிலில் அலைவதால் ஏற்படும் வெப்பம், மலச்சிக்கல், காப்பி, டீ குடிப்பதால் ஏற்படும் பித்தம் ஆகியவை தீரும்.

அகத்திக்கீரையை அவித்து அரைத்து காயங்களுக்குக் கட்ட காயங்கள் விரைவில் ஆறும்.

அகத்திபூ சாற்றை கண்களில் பிழிய, கண்நோய் குணமாகும்.

தகவல்: "பித்தம் நீக்கும் அகத்தி", எழுதியவர்: ந.விஜயராஜன், தினமணி கதிர், 15.2.2009.

நன்றி: திரு ந.விஜயராஜன் & தினமணி கதிர்.

பார்த்தது-2:

ஆட்டோ ஒன்றின் பின்னால்...

தட்டிப்பறிப்பவன் வாழ்ந்ததில்லை;
விட்டுக் கொடுப்பவன் வீழ்ந்ததில்லை.

நன்றி: தி.பச்சமுத்து, கிருஷ்ணகிரி & தினமணி கதிர், 15.2.2009

கடிதம்-10: "மிகச் சிறந்த நிர்வாகி!"

தொடர்ந்து ஆறாவது முறையாக கட்டண உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் அமைச்சர் லாலு. இதுமட்டும் அல்லாமல், எல்லா பொருட்களின் விளையும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், கட்டணங்களை குறைத்திருப்பதன் மூலம் சிறந்த நிர்வாகி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். - எஸ்.ஜெகன், திருச்சி.

நன்றி: "கடிதங்கள்", தினகரன், ஃபிப்ரவரி 14, 2009.

நெல்லையப்பன் கவிதைகள்-52: "அண்ணலுக்கு அஞ்சலி"

அண்ணலே!
உங்கள் சுயசரிதைக்கு
முன்னும் பின்னும்
கற்பனைக் கலப்பு
சிறிதுமின்றி வெளிவந்தது
தொலைபேசி அட்டவணை
மட்டும்தான் ஐயா!

நீங்கள் தொடங்கிய
உண்ணாவிரதத்தை
இந்தியப் பொருளாதாரம்
பட்டினியாக
கொண்டு சேர்த்துவிட்டது
பட்டி தொட்டியெல்லாம்!

மதுரை விவசாயியால்
நீங்கள் நிறுத்தினீர்கள்
சட்டை அணிவதை!

ஆடை இல்லாத
அனைத்து இந்தியனுக்கும்
ஆடை வழங்கிவிட்டு
உனது சிலைக்காவது
சட்டை போட்டுப் பார்க்கும்
எங்கள் ஆசை இருக்கிறது
இன்னும் நிராசையாகவே!

உங்களுக்குப் பின்
அரிச்சந்திரா
நாடகம் பார்த்த சிலர்

உண்மை சொன்னால்
இத்தனை துன்பமா என்று
இனிதே நிறுத்திவிட்டனர்
உண்மை பேசுவதையும்,
நாடகம் பார்ப்பதையும்!

இந்தியாவின் எதிர்காலம்
கிராமங்களில் இருப்பதாக
ஐயா சொன்னீர்கள் அன்று.
இன்று நாங்கள் கூட்டம் கூட்டமாக
கிராமங்களை காலிசெய்து
வேதனையில் வாடுகிறோம்,
வேலைக்காக நகரம் வந்து!

உன்னால் கிடைத்தது
அரசியல் சுதந்திரம்;
மறுபடியும் அவதரித்து
பெற்றுத் தரவேண்டும் நீ
பூரண சுதந்திரம்!

13 பிப்., 2009

எனக்குப் பிடித்த கவிதை-47: "ஞானக்கூத்தன் கவிதை"

ஏதோ சின்னஞ்சிறு விதை
ஊசிமுனை அளவு இடமும் தராமல்
அதன் மேல் வண்ணம் மிளிர்கிறது.
விதையின்மேல் மரம் ஒரு லிபியால் சொல்கிறது:
"உடைக்கவோ, நசுக்கவோ செய்யாதீர்கள்;
ஏனெனில் உள்ளே பல குழந்தைகள் தூங்குகின்றன"

நெல்லையப்பன் கவிதைகள்-51: "வாய்ச்சொல் வீரர்கள்"

ஆயுத பூஜைக்கு
மாணவ மாணவியர்
பூஜையில் வைத்தனர்
புத்தகங்களை எல்லாம்.

தொழிற்சாலையில்
பூஜை போட்டனர்
உபகரணங்களுக்கு;

பலசரக்குக் கடையில்
பெரிதாய் பூஜை
தராசு, எடைக்கற்களுக்கு;

முடிதிருத்தகத்தில்
பூஜையின் நாயகர்
கத்தரிக்கோலும் கண்ணாடியும்;

பூஜையில்
எழுத்தாளன் நான்
பேனாவை வைத்தேன்;

ஓட்டுனர்கள்
லாரிகளைக் குளிப்பாட்டி
நிறுத்தினர் ஓட்டத்தை;

அட! அந்தப் பெண்களும்
அன்று ஒருநாள் மட்டும்
எண்ணைக் குளியல் போட்டு
விடுமுறை விட்டனர் தொழிலுக்கு;

ஆகா! நம் அரசியல் தலைவர்கள்
கட்சி பேதமின்றி
ஆயுத பூஜைக்கு
மௌனமாய் இருக்கலாம்!

12 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-50: "சின்னத்திரை"

அறிவுக்குத் திரையிட்டு
ஒலி, ஒளி விலங்கிட்டு
மனிதரைச் சிறைவைக்கும்
மற்றுமொரு மாயத்திரை.

சிந்திக்கும் ஒருசிலரின்
சிந்தனையும் மழுங்கிவிடும்;
இசையெனும் பெயரால்
காதடைக்கும் பேரிரைச்சல்.

நான்கு சேனல்கள்
நான்கு விதமாய்
அவசரமாய் திரிக்கும்
ஒரே செய்தியை.

பெண்களை மேலும்
இழிவும் படுத்தும்;
தொடர்கள் கெடுக்கும்
குழந்தைகள் படிப்பை.

உறவுகள் வீட்டினுள்
ஒருவரோடொருவர்,
மனம்விட்டுப் பேசும்
நேரத்தைத் திருடும்.

நல்ல புத்தகங்கள்
செய்தித்தாள்கள்
படிக்கும் பழக்கங்கங்கள்
குறைந்து போகும்.

வீட்டிற்கு வந்தவரை
சும்மா அமரவைத்து
வாய் பிளந்து
தொடர் பார்க்க
விருந்தோம்பல்
குறைந்து போகும்.

வக்கிர வன்முறைகள்
வண்ணத்திரையினில்
பார்த்துப் பார்த்துப்
பழகிப்போகும்.

நிஜ வாழ்விலும்
அதுவே எதிர்பட,
எதிர்ப்பே இல்லாது
மனமும் ஏற்கும்.

சின்னத்திரைக்கு
இரண்டு முகங்கள்,
இரண்டாம் முகமோ
அறிவுப் பெட்டகம்.

கண்ணுக்கும், காதுக்கும்
விருந்து படைக்கும்;
அள்ளக் குறையாத
அட்சய பாத்திரம்.

உடனுக்குடன்
உலகையே வீட்டிற்குள்
இறக்குமதி செய்யும்.

வயதானவர்களின்
வரப்பிரசாதம்;
வீட்டுப்பெண்களின்
ஒருங்கிணைப்பாளர்.

ஆயகலைகள்
அறுபத்தி நான்கிற்கும்
பதிவுகளும் உண்டு
பரிசுகளும் உண்டு.

அமிழ்தும்
ஆலகாலமும்
ஒரே பாற்கடலில்.

சின்னத்திரை தீ;
அது மின்சாரம்;
ஆக்கத்திற்கா?
அழிவிற்கா?
ரிமோட் நம் கையில்.

6 பிப்., 2009

பரிபாடல்-1: "திருமால் பெருமை"

தீயினுள் தென்றல் நீ; பூவினுள் நாற்றம் நீ;
கல்லினுள் மணியும் நீ; சொல்லினுள் வாய்மை நீ;
அறத்தினுள் அன்பு நீ; மறத்தினுள் மைந்து நீ;
வேதத்து மறை நீ; பூதத்து முதலும் நீ;
வெஞ்சுடர் ஒளியும் நீ; திங்களுள் அளியும் நீ;
அனைத்தும் நீ; அனைத்தின் உட்பொருளும் நீ;
- கடுவன் இளவெயினனார்

இயற்கை உணவுக் குறிப்பு-5: "அவல் பயிர்க் கலவை"

நன்றாக ஊறவைத்த அவலுடன், முளைகட்டிய பாசிப்பயறு, சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேங்காய்த்துருவல் கலந்து, மேலும் சிறிது நேரம் ஊற வைக்க வேண்டும். சுவையான, சத்து நிறைந்த அவல் பயிர்க்கலவை தயார்.

பாரதி கவிதைகள்-15: "சங்கு"

செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்
சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார்
பித்தமனிதர், அவர் சொலுஞ் சாத்திரம்
பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்!
இத்தரை மீதினி லேயிந்த நாளினில்
இப்பொழு தேமுக்தி சேர்ந்திடநாடிச்
சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்
தூயவ ராமென்றிங் கூதேடா சங்கம்!
பொய்யுறு மாயைப் பொய்யெனக் கொண்டு
புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே
ஐயுற லின்றிக் களித்திறுப் பாரவர்
ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்!
மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்
மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே,
செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்
சித்தர் களாமென்றிங் கூதேடா சங்கம்.

இன்றைய சிந்தனைக்கு-39:

பகுத்தறிவு என்பது உண்மையை அறியக் கடவுள் நமக்குத் தந்துள்ள ஒரே புனிதமான சாதனம். - டால்ஸ்டாய்.

நெல்லையப்பன் கவிதைகள்-49: "குப்பையும் கடவுளும்"

மனித மனம் தொடங்கி
மரத்தடி, தெருக்கோடி வரை
இல்லாத இடமில்லை
நீக்கமற நிறைந்திருக்கும்.

ஒன்றுக்குத் தொட்டி
ஒன்றுக்கு ஆலயம்
இருந்தாலும் இரண்டும்
சந்திக்கு வந்துவிடும்

மாதா, பிதா, குரு தெய்வமாம்,
அப்பா அம்மா கொட்டிய குப்பை
அவ்வப்போது சண்டையில் தெரியும்
ஆசிரியக் கடவுள்கள்
குப்பை கொட்டுவது வகுப்பறையில்.

அறிந்தவை தான்
ஆண்டவனின் அவதாரங்கள்
பத்திரிகை, திரைப்படம்
செய்தித்தாள், சின்னத்திரையிலும்
குப்பையின் அவதாரங்கள்
குறிப்பிட்டுச் சொல்ல சில.

ஒன்றில் அபூர்வமாய்
சக்கைகளுக்கு நடுவிலும்
சாரம் கிடைப்பதுண்டு
மற்றதில் மனிதர்கள்
சாரத்தை விட்டுவிட்டு
கொண்டாடுவதோ
சக்கையை மட்டும்.

எனக்குப் பிடித்த கவிதை-46: "களிமண் இனம்"

பத்து முறை சுற்றினாலே
குயவனின் சக்கரத்தில்
களிமண் பானையாகும்போது
இத்தனை
நூற்றாண்டுகளாய் பூமி சுற்றியும்
மனித இனம் மட்டும் ஏன்
களிமண்ணாக உள்ளது?

(கவிஞரின் பெயர் கிடைக்கவில்லை)
(பேராசிரியர் அருணன் அவர்களின் "பொங்குமாங்கடல்")

5 பிப்., 2009

பாரதி கவிதைகள்-14: "ஆத்ம ஜெயம்"

கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்
கவர்ந்திட மாட்டாவோ? - அட
மண்ணில் தெரியுது வானம், அது நம்
வசப்படலாகாதோ?
எண்ணி யெண்ணிப்பல நாளும் முயன்றிங்
கிறுதியிற் சோர்வோமோ? - அட
விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்
மேவு பராசக்தியே!
என்ன வரங்கள்! பெருமைகள், வெற்றிகள்,
எத்தனை மேன்மைகளோ!
தன்னை வென்றாலவை யாவும் பெறுவது
சத்திய மாகுமென்றே
முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்
முற்றுமுணர்ந்த பின்னும்
தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்கு
தாழ்வுற்று நிற்போமோ?

இயற்கை உழவாண்மை-1:

இயற்கை வழி வேளாண்மை மண்ணில் வாழும் பல நுண்ணுயிர்களை வளர்க்கிறது. பயிர்களுக்குத் தேவையான தனிமங்களை இந்த நுண்ணுயிர்கள் வழங்குகின்றன. மண்ணின் பௌதிகத் தன்மையையும் உயர்த்துகின்றன. மண்ணில் புரைகளைக் கூட்டுகின்றன. காற்றோட்டம் கூடுகிறது. ஈரப்பிடிப்பு உயர்கிறது. வடிகால் வசதி கூடுகிறது. மண் அரிப்பு தடுக்கப் படுகிறது. இதன் மூலம் தொடர்ந்து விளைச்சல் அதிகரித்த வண்ணம் உள்ளது. இடுபொருள் செலவு குறைகிறது. இதன் மூலம் பண்ணை வருவாய் உயர்கிறது.

கலப்புப் பயிர் சாகுபடி பண்ணையின் மொத்த விளைச்சலைப் பெருமளவு உயர்த்துகிறது. இந்தப் பயிர்கள் நிறையக் கரியை உள்வாங்குவதால், பூமி வெப்பக்கூடமாவது குறைகிறது. கழிவுகளின் சுழற்சி, நிலவளம் பராமரிக்கப்பட உதவுகிறது. ஒவ்வோர் ஆண்டும் இறக்குமதி செய்யப்படும் பருப்பும் எண்ணெய் வித்தும் இங்கேயே உற்பத்தியாக உதவும்.

நமது நாட்டில் தண்ணீர் மற்றும் சக்தி பற்றாக்குறை கூடிய வண்ணம் உள்ளது. ஒரு ஏக்கர் பரப்பில் ஒரு அடி ஆழம் மண் இருந்து, அதில் ஒரு சதவிகிதம் மக்கு உயரும்போது, 74,250 லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது.

டாக்டர் கோ.நம்மாழ்வார் எழுதிய "உழவுக்கும் உண்டு வரலாறு" என்ற நூலிலிருந்து. (விகடன் பிரசுரம், சென்னை, பக்கம் 128, விலை: ரூபாய் 45/- )

நன்றி: டாக்டர் கோ.நம்மாழ்வார் & விகடன் பிரசுரம்.

நெல்லையப்பன் கவிதைகள்-48: "எனக்கும் வேண்டும்"

பெண்ணே!
எப்பொழுதும் நீ
ஒருபடி மேல்தான்.

நிரூபித்துவிட்டாய் நீ!
பூமியிலும் நீருக்கடியிலும்
வான்வெளியிலும்
உன் சமநிலையை.

ஒரு விஷயத்தில்
எட்டமுடியாத உயரத்தில்
இருக்கின்றாய் நீ.

உனக்கு மட்டுமே
சித்தித்திருக்கும்
சுஹானுபவம் அது!

எந்த சூப்பர் கம்ப்யூட்டரும்
மொழி பெயர்த்து
புரிய வைக்கமுடியாது
அந்த அனுபவத்தை.

உன்னைப் பார்த்து நாங்கள்
உணர முடியாததை
புரிந்துகொள்ள முயல்கிறோம்,
பொறாமைப்படுகிறோம்,
மெல்லத் தலை வணங்குகிறோம்.

உள்ளிருந்து உதைப்பதை
நீ வயிறு தடவி ரசிப்பதையும்
குழந்தைக்கு மார்பு கொடுத்து
கண் செருகி இருப்பதும்
நானும் உணர வேண்டுமடி!

விஞ்ஞானம் கைவிட்டாலும்
காத்திருந்து மறுபடியும்
பெண்ணாகப் பிறந்துவந்து
பெறவேண்டும் ஒரு குழந்தை!

4 பிப்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-47: "வடிவமும் உள்ளீடும்"

மலைக்கோயிலுக்கு
மாலை போட்டார்
மச்சுவீட்டு அண்ணாச்சி
கள்ளச்சாராயம்,
கட்டப்பஞ்சாயத்து,
தண்டல், கரைவேட்டி,
இவைகளுக்கு நடுவே
தலைவருக்குப் பாதுகாப்பாக
தானும் உடன்செல்ல.

இரண்டுமுறை குளியல்
நாற்பதுநாள் விரதம்
இலையில் சாப்பாடு
தண்ணி கவிச்சிக்கு விடுப்பு
புதிய காவி வேட்டி துண்டு
மாருலே சந்தனம், நீறு
தினம் பாட்டு, பஜனை.

முதல் பத்துநாள்
வாய் திறக்காத அண்ணாச்சி
மெதுவாய் சரணம் என்றார்
பஜனையில் தாளம் போட்டார்
பார்க்கும் எல்லோரையும்
சாமி என்று கூப்பிட்டார்.

நாற்பது நாட்களில்
முற்றிலுமாய் மாறிப்போனார்
கோபம் கெட்டவார்த்தைகள்
எங்கோ காணாது போச்சு.

நானும் மாற்றிக்கொண்டேன்
சடங்கு, சம்பிரதாயம்,
வடிவம், உள்ளீடு பற்றிய
என் மதிப்பீடுகளை.

3 பிப்., 2009

பாரதி கவிதைகள்-13: "ஒளியும் இருளும்"

வானமெங்கும் பரிதியின் சோதி;
மலைகள் மீதும் பரிதியின் சோதி;
தானை நீர்க்கடல் மீதிலும் ஆங்கே
தரையின் மீதும் தருக்களின் மீதும்
கானகத்திலும் பற்பல ஆற்றின்
கரைகள் மீதும் பரிதியின் சோதி;
மானவன்றன் உளத்தினில் மட்டும்
வந்து நிற்கும் இருளிது வென்னே!
சோதி என்னும் கரையற்ற வெள்ளம்
தோன்றி எங்கும் திரைகொண்டு பாய
சோதி என்னும் பெருங்கடல் சோதிச்
சூறை மாசறு சோதி யனந்தம்
சோதி என்னும் நிரைவிஃதுலகைச்
சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்
சோதி என்றதோர் சிற்றிருள் சேரக்
குமைந்து சோரும் கொடுமையி தென்னே!
தேம லர்க்கொர் அமுதன்ன சோதி,
சேர்ந்து புள்ளினம் வாழ்த்திடும் சோதி,
காம முற்று நிலத்தொடு நீரும்
காற்றும் நன்கு தழுவி நகைத்தே
தாமயங்கிநல் லின்புறுஞ் சோதி
தாரணி முற்றும் ததும்பியிருப்ப
தீமை கொண்ட புலையிருள் சேர்ந்தோர்
சிறிய நெஞ்சந் தியங்குவ தென்னே!
நீர்ச்சு னைக்கணம் மின்னுற்றிலக
நெடிய குன்றம் நகைத்தொழில் கொள்ள
கார்ச்ச டைக்கரு மேகங்க ளெல்லாம்
கனக மொத்துச் சுடர்கொண் டுலாவ,
தேர்ச்சி கொண்டுபல் சாத்திரம் கற்றும்
தெவிட்டொ ணாதநல் லின்பக் கருவாம்
வேர்ச்சுடர் பரமாண் பொருள் கேட்டும்
மேளிவோர் நெஞ்சிடை மேவுதல் என்னே!

நலக்குறிப்புகள்-32: "சின்ன வெங்காயம்"

வெங்காயத்தில் சுண்ணாம்புச் சத்து, பாஸ்பரஸ், இரும்பு, மற்றும் ஏ, பி, சி வைட்டமின்கள் உள்ளன. இவை ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பை நீக்குகின்றன. இரத்தக் கட்டிகளைக் கரைக்கின்றன. எனவே இருதய நோயாளிகளுக்கு இது மிகவும் பயனுள்ளது.
வெங்காயத்திலுள்ள அலினின், மற்றும் அலிசின் செல்களின் இன்சுலின் தேவையைக் குறைக்கிறது.
இதிலுள்ள தயோசல்பனேட்டுகள் ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்துகின்றன.
ஆண், பெண் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டுகிறது வெங்காயம்.
தேனி மற்றும் விஷ வண்டுகள் கொட்டிய இடத்தில் வெங்காயத்தைத் தடவ விஷம் நீங்கும்.
வெங்காயம் ஆறாத புண்களை ஆற்றுகிறது.
வெயில் காலங்களில் ஏற்படும் நீர்ச் சத்துக் குறைவிற்கு வெங்காயம் மிகச் சிறந்தது.
மாதவிடாயின் பொது குறைவான இரத்தப் போக்குள்ள பெண்கள், வெங்காயத்தை அரைத்துச் சாப்பிட இரத்தம் நன்கு வெளியேறும்.

நெல்லையப்பன் கவிதைகள்-46: "கண்ணீர் சிந்திய கடவுள்"

கனவில் வந்தார் கடவுள் -
முகத்தில் அப்பியிருந்தது கரி;
உடைந்திருந்தது மூக்கு;
கண்களில் உதிரம்.

நெடுஞ்சாண் கிடையாய்
கால்களில் விழுந்தேன்;
கதறி அழுதேன்;
காரணம் கேட்டேன்.

காரணம், ரணம் என்றார்.
கந்தமால் நிகழ்வுகள்
கன்னத்தில் கரிபூசியதை,
மாற்று மதத்தினரின்
சிலைகளை உடைத்ததால்
மூக்குடைபட்டதை,
கன்னியாஸ்திரிகள் மேல்
கைவைத்துக் கொன்றதால்,
கோயில்களை விட்டுவிட்டு
வெட்கப்பட்டு வெளியேறிய
வேதனையைச் சொன்னார்.

மதங்களை எல்லாம்விட
மனிதர்கள் முக்கியம்;
மனிதநேயமற்றவர்க்கு
கடவுளாய் இருக்க
சத்தியமாய் சம்மதியோம்;
கனவில் உரைத்தது
காதுகளில் ஒலிக்கிறது.

2 பிப்., 2009

நலக்குறிப்புகள்-31: "கரிசாலை"

நாற்பது வகையான நோய்களைக் குணப்படுத்தும் சக்தி படைத்தது தெய்வீக மூளிகையான கரிசாலை. இதை நாள்தோறும் உண்டுவந்தால் பித்தமும், கபமும் வெளியேறும். கண்பார்வை மங்காது. கண்களில் ஒளி உண்டாகும். பல்வலி வராது. ஈளை மறையும். சுக்கிலம் கட்டும். ஆண்மை உண்டாகும். ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கும். புற்றுநோய் வராது. காசம், வெள்ளை, வெட்டை முதலியவை விலகும். நரையும், திரையும் மாறும். ஆன்மா மிளிரும். விதியே மாறும். நாள்தோறும் காலையில் வெறும் வயிற்றில் ஐந்து இலைகள் சாப்பிடுவது போதும். கரிசாலையை மென்று பல் துலக்கினால் பல்வலி மறையும்.

நன்றி: "இயற்கை மருத்துவம்", மாத இதழ், வெளியிடுவோர்: தமிழ்நாடு இயற்கை மருத்துவ சங்கம், காந்தி நினைவு நிதி, மதுரை-625020, மார்ச் 2005 இதழ்.

ஆன்மீக சிந்தனை-17:

"நாம் ஒரு படத்தைக் கடவுளாக வழிபடலாம். நமது எண்ணம் படத்தைக் கடவுளாக மாற்றிவிடுகிறது."

நன்றி: "அருள் விருந்து", தர்மசக்கரம், ஜூன் 2008.

எனக்குப் பிடித்த கவிதை-45: "வீணருக்குரைத்தல்"

வானரம் மழையினில் நனைய
தூக்கணாம் தானொரு நெறி சொல்ல
தாவி பிய்த்திடும் .
ஞானமும், கல்வியும்,
நவின்ற கலைகளும்
வீணருக்குரைத்திடில்
வீணாகுமே.
- ஔவையார்