2 செப்., 2009

புதுமைப்பித்தன் கவிதைகள்-2: "இருட்டு"

நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகிறேன்
நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகிறேன்

செல்லும் வழி இருட்டு
செல்லும் மனம் இருட்டு,
சிந்தை அறிவினிலும்
தனி இருட்டு.

நடையால் வழிவளரும்
நடப்பதனால் நடை தொடரும்;
அடியெடுத்து வைப்பதற்கு
ஆதிவழி ஏதுமில்லை.

சுமையகற்றிச் சுமையேற்றும்,
சுமைதாங்கியாய் விளங்கும்
சுமைக்குள்ளே தானியங்கிச்
சுமையேற்றும் சும்மாடே!

'எங்கு, எதற்கு
ஏனென்று' கேட்டக்கால்
'எங்கு எதற்கு
ஏனென்றே கேள்வி வரும்?

என்னை அனைத்தேகும்
இருட்டுக்குரல் தானோ?
என்னை அணைக்கவரும்
மருட்டுக் குரல் தானோ?

நடந்தேன், நடக்கின்றேன்,
நடந்து நடந்தேகுகிறேன்.
நடந்தேன், நடக்கின்றேன்
நடந்து நடந்தேகுகிறேன்.

கருத்துகள் இல்லை: