4 செப்., 2009

இன்றைய சிந்தனைக்கு-69:

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

அனைவரும் அறிந்த குறள்தானே என்கிறீர்களா? ஆனால் அன்றாட வாழ்க்கையில் நமது அனுபவங்கள் அதைப் பிரதிபலிப்பதாக இல்லையே, ஏன்? (அன்புடைமை, அருளுடைமை, அழுக்காறாமை, அறிவுடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஒழுக்கமுடைமை, கொல்லாமை, சான்றாண்மை, செய்நன்றி அறிதல், பண்புடைமை, பொய்யாமை, பிறனில் விழையாமை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.) என்னில் தொடங்கியே எழுதுகிறேன். ஒருவேளை நாம் மேலோட்டமாக படித்துவிட்டு மறந்துவிட்டோமா? இதன் ஆழமான பொருளை சிந்தித்துப் பார்க்கிறோமா? சற்றே ஆழமாகத்தான் பார்ப்போமே!

1. கற்க - கற்கவேண்டும்; படிக்கவேண்டும்;
2. கசடற - ஐயந்திரிபுற கற்கவேண்டும்; தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும்.
3. கற்பவை - கற்க வேண்டியவற்றை மட்டுமே கற்கவேண்டும். வேண்டாத குப்பைகளையெல்லாம் படித்துவிட்டு, மனம் குழம்பி அல்லது மனம் கெட்டு, நேரத்தைப் பாழாக்கி, தவறான பாதையில் செல்லக் கூடாது.
4. கற்றபின் நிற்க அதற்குத் தக - வாழ்க்கையில் நம்மை மேல்நோக்கிச் செலுத்தும் உன்னதமான நூல்களை மட்டும் கற்று, பின் அவற்றின்படி ஒழுக வேண்டும்; வாழவேண்டும்.

இன்றிலிருந்தாவது முயன்று பார்க்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

கருத்துகள் இல்லை: