இந்த வார ஆனந்த விகடனில் வாலியின், "நினைவு நாடாக்கள்", சாரு நிவேதிதாவின் "மனங்கொத்திப் பறவை" (தொடர்) மற்றும் எஸ்.ராமகிருஷ்ணனின் சிறுகதை, "ஜெயந்திக்கு ஞாயிறு பிடிப்பதில்லை" படித்தேன், மகிழ்ந்தேன்.
சாரு நிவேதிதா மரியோ பர்கஸ் யோசா (Mario Vargas Llosa) என்ற நோபல் பரிசு பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் பற்றி எழுதியிருந்தார். எழுத்திற்கும், உச்சரிப்பிற்கும் மாறுபாடான அந்த ஸ்பானியப் பெயரை வாசிக்கச் சிரமப்பட்டிருப்பேன்; நல்லவேளை, அவரே பெயரை ஆங்கிலத்திலும், அதன் சரியான உச்சரிப்பைத் தமிழிலும் கொடுத்திருந்தார். இருப்பினும் உச்சரிப்பை உறுதி செய்துகொள்ள வலையில் Pronouncenames.com என்ற இணையதளத்திற்குச் சென்று தேடினேன். பயனின்றி, பிறகு Forwo.com என்ற ஆடியோ வசதியுள்ள இணையதளத்திற்குச் சென்று தேடினேன். அது "மரியோ பர்கஸ் ஜோஸா" என்று மிகத் தெளிவாக உச்சரித்தது. 'ஜான்' என்ற பெயரை 'யோவான்' என்று உருவேராக்கம் செய்ததுபோல், சாரு 'ஜோசாவை' 'யோசா' என்று தமிழ்ப் படுத்தியிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன். (FORWO.COM சென்றால் எந்த மொழி வார்த்தையாய் இருந்தாலும் அதன் சரியான உச்சரிப்பைத் தெரிந்துகொள்ளலாம்).
என்னைப் பொறுத்தவரை மனிதர்களின் பெயர்களை உருவேறாக்கம் செய்யவேண்டிய அவசியமில்லை. அப்படியே உச்சரிப்பது, எழுதுவதன் மூலம் நிறைய குழப்பங்களைத் தவிர்க்கலாம். ஜான் ஏன் யோவானாக வேண்டும்? மேத்யூ ஏன் மத்தேயு ஆக வேண்டும்? ஆனால் பல மொழிகளில் இந்த மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
ஒரு சுருக்கெழுத்தாளன் என்ற முறையில் இந்த உச்சரிப்பு மாறுபாட்டை எப்போதும் எரிச்சலுடன் கவனித்து வந்திருக்கிறேன். சுருக்கெழுத்தில் நாங்கள் உச்சரிப்பின் படியே எழுதுவோம் (Phonetic Spelling). பின்னர் தட்டச்சு செய்யும்போது, வழக்கில் உள்ள ஸ்பெல்லிங்கை பயன்படுத்துவோம். உதாரணமாக, இருமல் - COUGH , சுருக்கெழுத்தில், K -O -F.
மொழிகளின் இந்தக் குறைபாடுகள் நிறையப் பேரை உச்சரிப்பின்படி எழுதவேண்டும் என்று போராடும் உந்துதலைத் தந்திருக்கிறது. அல்லது குறைந்த பட்சம் இந்தக் குறைபாட்டை கேலி செய்ய, சாட வைத்திருக்கிறது. உதாரணமாக, பெர்னார்டு ஷா 'GHOTI ' என்று எழுதி, அதை 'FISH ' என்று வாசிப்பாராம். அவர் கூறிய விளக்கம்: 'Cough' என்ற வார்த்தையில் இறுதியில் வரும் 'GH', 'ஃப்' என்றும், 'WOMEN' என்ற வார்த்தையில் இரண்டாவது எழுத்தாக வரும் 'O ' , 'இ' என்றும், 'Nation ' என்ற வார்த்தையில், 'ti ' என்ற எழுத்துக்கள் 'ஷ்' என்றும் உச்சரிக்கப்படுகின்றன. ஆகவே 'GHOTI' என்று எழுதி 'FISH' என்று உச்சரிக்கலாம்.
புகழ் பெற்ற அமெரிக்க அதிபர் தியோடார் ரூஸ்வெல்ட் அமெரிக்க ஆங்கிலத்தை உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும் வேறுபாடு இல்லாத மொழியாக்க வேண்டும் என்று விரும்பினார். அதிகாரபூர்வமாக இந்த சீர்திருத்தத்தை அவர் செயற்படுத்த முற்பட்டபோது, கடும் எதிர்ப்புக் கிளம்ப, அதைக் கைவிட்டார். இரண்டு முறை குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு மாபெரும் வெற்றிபெற்ற அவர், மூன்றாம் முறை போட்டியிட முயன்றபோது தன் கட்சியின் ஆதரவைப் பெறமுடியாமல், சுயேட்சையாக, கலைமான் (Bull Moose) சின்னத்தில் போட்டியிட்டுத் தோற்றார். அப்போது அவரது பரம வைரியான அமெரிக்க நாளிதழ் ஒன்று, அவரது தோல்வியைப் பெரிதாக, "THRU" என்று தலைப்பிட்டு எழுதியது.
ஒருகாலத்தில் எனக்கு பிற மொழிகளைக் கற்கும் ஆர்வமும், நேரமும், வாய்ப்பும் இருந்தது. அப்போது இந்தி, ஜெர்மன், ரஷ்யன், பிரஞ்சு மற்றும் வங்காள மொழிகளைக் கற்க முற்பட்டேன். முதல் மூன்று மொழிகளிலும் முதற்படியைக் கடந்து, தேர்ச்சி பெற்றேன். ஆனால் அதன் பின்னர் தொடர முடியவில்லை.
பகவான் இராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் மேலுள்ள ஈடுபாட்டால், பாலாஜி பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டிருந்த 'வங்காளம் கற்போம்' என்ற நூலை வாங்கி, நானே கற்கமுயன்றேன். சந்தேகம் வரும்போதெல்லாம் அலுவலகத்தில் எனக்கு அடுத்த அறையில் இருந்த நண்பர், முனைவர் முகர்ஜி அவர்களிடம் கேட்டுக்கொள்வேன். வங்காள மொழியிலும் உச்சரிப்புப் பிரச்சினை இருந்தது. அதில் 'வ' மற்றும் 'அ' என்ற எழுத்துக்களும், ஒலிகளும் கிடையாது. 'வ' என்பதை அவர்கள் 'ப' என்றும், 'அ' என்பதை அவர்கள் 'ஒ' என்றும் உச்சரிப்பர்.
இந்த விஷயத்தில் பிரஞ்சு மொழி இன்னும் மோசம். பத்து எழுத்துக்களை எழுதினால், அதில் ஐந்து எழுத்துக்கள் (சமயத்தில்) உச்சரிக்கப் படுவதில்லை, அவை Silent என்பதால். வார்த்தையின் இறுதியில் வரும் 'S ' மற்றும் 'T' அந்த மொழியில் உச்சரிக்கப் படுவதில்லை.
ஜெர்மானிய மொழி ஓரளவிற்கு 'Phonetic ' மொழிதான். ஆனால் பிரஞ்சு மொழியைப் போல 'definite article ' (the) மற்றும் indefinite article (a , an) தொடர்ந்து வரும் வார்த்தையின் பாலைப் பொறுத்து (Gender) 'der' (ஆண்பால்), 'die ' (பெண்பால் மற்றும் பலவின்பால்) , 'das' (அஃறிணை) என்று மாறுபடும். அதுவும் வேற்றுமை உருபுகளைப் பொறுத்து 'dem ', 'den ' என்று மேலும் மாறுபடும். சுருங்கச் சொன்னாள் ஜெர்மன் மொழி இலக்கணம் ஆளைக் கொன்றுவிடும். ஜெர்மானிய அறிஞர் மாக்ஸ் முல்லர் உலகிலேயே ஜெர்மானிய மொழி போல் உச்சரிப்பிற்கும், எழுத்திற்கும் மாறுபாடு இல்லாத - PHONETIC LANGUAGE - நேர்த்தியான மொழி கிடையாது என்று பெருமையுடன் எண்ணியிருந்தார். உலகிலேயே இந்த வகையில் நேர்த்தியான, முழுமையான மொழி சமஸ்கிருதம் (A Perfect Phonetic Language) என்பது நிறைய பேருக்குத் தெரியாது. (சுயநலத்தினாலும், அதன் சிறப்பு சிதைந்துவிடக் கூடாது என்ற பயத்தினாலும் அந்த மொழி மூடி மறைக்கப்பட்டது. சாதாரண மனிதர்கள் அதைக் கற்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. அதனால் அந்த மொழி இன்று அழியும் நிலையில் உள்ளது.)
சம்ஸ்கிருத மொழியைப் பற்றி அறிந்த பின், அதன் மேல் ஈடுபாடு கொண்டு, மாக்ஸ் முல்லர் அதை முறைப்படி கற்றுக்கொண்டார். வேதங்களையும், உபநிடதங்களையும் பயின்றார்; பிரமித்துப் போனார். மொழியின் அருமையையும், இந்திய சிந்தனைகளின் மேன்மையையும், அற்புதத்தையும் வியந்து போற்றினார். தமது நூல்கள் மூலம் இந்தியச் சிந்தனைகளின் மேன்மைகளை உலகறியச் செய்தார். ஒரு மிகச் சிறந்த INDOLOGIST ஆக விளங்கினார். சென்னையிலுள்ள ஜெர்மானியத் தூதரகம் 'மாக்ஸ் முல்லர் பவன்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத மொழியின் இந்த முழுமைத் தன்மை, சிறப்புத் தன்மை காரணமாக, எழுத்துக்களே இல்லாத காலம் தொட்டு இன்று வரை நமது ஆன்மிகப் பொக்கிஷங்கள் - வேதங்கள், உபநிடதங்கள் - வாய் மொழியாகவே தலைமுறை தலைமுறையாக மனனம் செய்யப்பட்டு, சிதையாமல் காக்கப்பட முடிந்தது என்ற பேருண்மையை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். சிந்தித்தால் இது எவ்வளவு பிரமிப்பான விஷயம் என்று புரியும். லட்சக்கணக்கான சொற்றொடர்களை ஒலி சிதையாமல், வார்த்தைகள் இடம் பிறழாமல் மனனம் செய்து மனத்தில் பதிவு செய்துகொண்டு, அதை அடுத்த தலைமுறை, அதற்கடுத்த தலைமுறை என்று காப்பாற்றி வந்திருப்பது சாதாரண விஷயமல்ல.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக