30 அக்., 2010

யோக சித்தி-58: அறநெறி-4

வசை  சினவஞ்ச  வழக்கற்றுத்  தீய
நசையற்று  நானுற்று  வாழ்.

மனத்தைக்  கெடுக்கும்  தீமைகளைக்  காண்மின்:-

1 .  வசை:  பிறரைப் பழித்தல்,  சொல்லாற்  புண்படுத்துதல்,  மரியாதைக் குறைவாய்ப்  பேசுதல்,  பண்டமொருபுரம் இருக்கப்  பழியோருவர்  மேற்  சுமத்துதல் எல்லாம்  வசையாம்.
2 . சினம்:  கோபம்;  இதனால் குணங் கெடும்,  மனங் கெடும், நரம்பு தளரும்,  ஆயுட்  கெடும்,  ஆற்றல்  கெடும்.
3 . வஞ்சம்:  கபடம், சிறுமை,  பொய், கொடுமை, மாயம்,  பிறரை  ஏமாற்றல் வஞ்சனையாம்.
4 . வழக்கு:  பொய் வழக்கு,  வியாஜ்ஜியம்,   வம்பு  இவற்றால்  அமைதி  கெடும்.
5. தீயநசை: துராசை,  காமக்குரோதாதிகள் இவையெல்லாம்  நீங்கவேண்டும்.

இவை  நீங்க  என்ன  வழி?

நாணுறல் :    அடக்கம், கௌரவம், மரியாதை,  விநயம்,  பிறர் பழியும், தன் பழியும்  அஞ்சல்,  நோகாது நோவுறுத்தாது,    பிறர் மனம் சுளிக்காது,  சீர்மையுடன் நடத்தல்.  வெட்டெனப் பேசாமை,  சூதுவாதின்மை,  நாய்ச்சினம்,  நரிவஞ்சம்,  பாம்புச் சீற்றம்,  அகங்கரிப்புகள் இன்றி  பெருந்தன்மை பிடித்தொழுகல் முதலியன நாண் எனப்படும்.  நாகரிகத்தின் நல்லுயிர் நாணே. 

கருத்துகள் இல்லை: