31 ஜூலை, 2018

குட்டிக்கதை-1: உண்ணாவிரதம்


குட்டிக்கதை - உண்ணாவிரதம் 

ஒரு மரத்தில் குடியிருந்த குரங்குகளெல்லாம் கூடி வாரம் ஒரு நாள் உண்ணா விரதம் மேற் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தன

எனவே தலைவர் குரங்கிடம் போய் மற்ற குரங்குகள் எல்லாம் விஷயத்தைச் சொன்னவுடன், தலைவர் குரங்காரும் ''சரி அவ்வாறே செய்து விடுவோம்.

அதற்கு முன்னால் உண்ணா விரதம் முடிந்தவுடன் உண்ணுவதற்கான பழங்களைச் சேகரித்து வைத்து விடுங்கள்.

ஏனெனில் விரதம் முடியும் பொழுது பசியாக இருக்கும். எனவே அப்பொழுது போய் பழங்களைத் தேடிக் கொண்டிருக்க முடியாது'' என்று அறிவுரை சொன்னார்.

அதை அமோதித்த மற்ற குரங்குகளும் அருகில் இருந்த தோட்டத்திலிருந்து நிறைய வாழைப்பழங்களைக் கொண்டு வந்து தலைவர் முன் வைத்தன.

உடனே தலைவர் ''சரி உண்ணா விரதத்தை ஆரம்பித்து விடுவோம்'' என்றார்.

அப்பொழுது கூட்டத்தில் இருந்த ஒரு மூத்த அனுபவமுள்ள குரங்கு ''தலைவரே விரதம் துவங்குவதற்கு முன் அவரவர் பழங்களை பிரித்து கொடுத்து விடுவோம். இல்லையென்றால் விரதம் முடிந்தவுடன் சண்டையிட்டுக் கொள்வார்கள்'' என்று யோசனை சொல்லிற்று.

அதை ஆமோதித்த தலைவரும் அவ்வாறே பழங்களை பகிர்ந்தளித்தார்.

அப்பொழுது ஒரு குரங்கு எழுந்து, பழத்தின் தோலை உரித்து வைத்து விடுவோம். அந்த நேரத்தில் உரித்துக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றவுடன். பழத்தின் தோல் உரித்து முன்னே வைக்கப்பட்டது.

உடனே ஒரு குட்டிக் குரங்கு எழுந்து தலைவரே ஒரு நாள் விரதம் இருக்கப் போகிறோம். தோல் நீக்கிய இந்தப் பழங்களின் மேல் தூசிகள் படிந்து விடும். எனவே இந்த பழங்களெல்லாம் கனிந்து அழுகிப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நமக்குதான் உணவை வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்ளும் வசதி இருக்கிறதே ? எனவே பழங்களை அவரவர் வாயில் ஒதுக்கி வைத்துக் கொள்வோம் என்றது.

அவ்வளவுதான் பழங்கள் அனைத்தும் வாயில் ஒதுக்கி வைக்கப்பட்டன.

சற்று நேரம்தான் ஆகியிருந்தது. ஒதுங்கியிருந்த பழங்களெல்லாம் தானாகவே தொண்டைக் குழியை நோக்கி போகத் துவங்கின. இவ்வாறு குரங்குகளின் விரதம் நிறைவுக்கு வந்தது.

இவ்வுலகில் பெரும்பாலானவர்களின் தியான மற்றும் விரத முயற்சியும் இவ்வாறுதான் இருக்கிறது.

உலக ஆசையை விட்டு விட வேண்டும் என்று எண்ணினாலோ, முயற்சித்தாலோ, அது நடக்கவே நடக்காது

ஏனெனில் அது எதிர்மறை சிந்தனையாகவும், முயற்சியாகவும் அமைந்து விடுகிறது.

மாறாக, பரம்பொருள் அல்லது ஆன்ம  நாட்டத்தை அதிகப்படுத்திக் கொள்ளும் அளவு உலக ஆசைகள் ஒவ்வொன்றாக விட்டு ஓடி விடுவதை உணரலாம்.

அதனால் தான் அன்றே சொன்னார்கள்

*மனம் ஒரு குரங்கு* என்று மிகச் சரியாக சொன்னார்கள்

கருத்துகள் இல்லை: