உயிர் வளர்க்கும் திருமந்திரம் 49: மன்மனத்து உள்ளே மனோலயம்
கரு.ஆறுமுகத்தமிழன்
Published : 20 Sep 2018 11:20 IST
Updated : 20 Sep 2018 11:20 IST
வணிகம் செய்கிறவர்கள் வரவுசெலவுகளைக் கணக்கிட்டு, ஆகமொத்தம் இந்த வணிகத்தால் நமக்கு வந்த ஊதியம் அல்லது இழப்பு இவ்வளவு என்று மதிப்பிட்டுக் கொள்வதைப்போல, வாழ்வின் வரவுசெலவுகளைக் கணக்கிட்டு இந்த முறையிலான வாழ்வினால் நமக்கு வந்த ஊதியம் அல்லது இழப்பு இவ்வளவு என்று மதிப்பிட்டுக்கொள்ள முடியுமா? தாயுமானவர் ஒரு கணக்கெடுக்கிறார்:
...யோசிக்கும் வேளையில் பசிதீர உண்பதும்
உறங்குவதும் ஆகமுடியும்;
உள்ளதே போதும்நான் நான்எனக் குளறியே
ஒன்றைவிட்டு ஒன்றுபற்றிப்
பாசக் கடற்குளே வீழாமல் மனதுஅற்ற
பரிசுத்த நிலையைஅருள்வாய்,
பார்க்கும்இடம் எங்கும்ஒரு நீக்கம்அற
நிறைகின்ற பரிபூரணானந்தமே.
(தாயுமானவர், பரிபூரணானந்தம், 10)
கணக்கெடுத்துப் பார்த்தால், பசி தீரச் சாப்பிட்டிருக்கிறோம்; படுத்து உறங்கியிருக்கிறோம். அல்லாமல் வேறென்ன? உள்ளதே போதும் என்று ஒரு பொழுதேனும் தோன்றியிருக்கிறதா? ‘நான், நான்’ என்னும் அறிவற்ற குளறல் என்றைக்காவது அற்றுப் போயிருக்கிறதா? அதை விடுவோம், தாவி இதைப் பிடிப்போம்; இதை விடுவோம், தாவி வேறொன்றைப் பிடிப்போம்; தாவித் தாவிப் பிடித்துக் கடைசியில் பிடிமானமில்லாமல் பற்றாகிய பழங்கடலுக்குள் விழுந்து அமிழ்வோம்.
அல்லாமல் வேறென்ன? அவ்வாறெல்லாம் ஆகிவிடாமல், இனி என்னைப் புதிய உயிர் ஆக்கி, மனம் தன்னை மிகத் தெளிவு செய்து, என்றும் ஆனந்தம் கொண்டிருக்கச் செய்வாய் என்று பரிபூரண ஆனந்தத்தை வேண்டுகிறார் தாயுமானவர்.
முற்றத் துறக்கும் முன் அரசக் கணக்கெழுதியவர் தாயுமானவர். பட்டினத்தாரும் அவ்வாறே. முற்றத் துறக்கும் முன் வணிகக் கணக்கெழுதியவர். தாயுமானவரைப்போலவே பட்டினத்தாரும் வாழ்க்கைக் கணக்கெடுக்கிறார்:
உண்டதே உண்டும், உடுத்ததே உடுத்தும்,
அடுத்து அடுத்து உரைத்ததே உரைத்தும்,
கண்டதே கண்டும், கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள் எல்லாம்;
விண்டதா மரைமேல் அன்னம்வீற்று இருக்கும்
விழவுஅறா வீதிவெண் காடா,
அண்டரே போற்ற அம்பலத்து ஆடும்
ஐயனே, உய்யுமாறு அருளே.
(பட்டினத்தார், திருவெண்காட்டுத் திருவிசைப்பா)
உண்டதைத்தான் உண்கிறோம்; உடுத்ததைத்தான் உடுக்கிறோம்; பேசியதையே திரும்பத் திரும்பப் பேசுகிறோம்; பார்த்ததையே பார்க்கிறோம்; கேட்டதையே கேட்கிறோம். திரும்பிப் பார்த்தால், ஐயோ, கடவுளைக் கண்டுகொள்வதற்காக வழங்கப்பட்ட நாட்களை அல்லவா வீணாக்கியிருக்கிறோம்? திருவெண்காட்டு ஈசா, இவ்வாறு உழற்றாமல், என்னைச் சரியான திசைக்குத் திருப்பி ஆட்கொள்ள மாட்டாயா?
அறிந்ததைக் கணக்கெடுக்கும் திருமூலர்
தாயுமானவரைப் போலவும் பட்டினத்தாரைப் போலவும் கணக்கெழுதும் பயிற்சி உள்ளவரா திருமூலர் என்று தெரியவில்லை. என்றாலும் அவரும் கணக்கெடுக்கிறார். ஆனால், இவர் போடும் கணக்கு கொஞ்சம் வேறாக இருக்கிறது. தாயுமானவரும் பட்டினத்தாரும் உண்டதை, உடுத்தியதைக் கணக்கெடுக்கிறார்கள். திருமூலர் அறிந்ததைக் கணக்கெடுக்கிறார்:
உற்றுஅறிவு ஐந்தும், உணர்ந்துஅறிவு ஆறுஏழும்,
கற்றுஅறிவு எட்டும், கலந்துஅறிவு ஒன்பதும்,
பற்றிய பத்தும், பலவகை நாழிகை
அற்றது அறியாது அழிகின்ற வாறே (திருமந்திரம் 741)
மெய், வாய், கண், மூக்கு, செவி என்று புலன்களின் வழியாக உற்று அறிந்த வகையில் அறிவு ஐந்து; புலன்களால் உற்று அறிந்தவற்றையெல்லாம் மனத்தினுள் வாங்கிக் கொண்ட வகையில் அறிவு ஆறு; வாங்கிக் கொண்டவற்றையெல்லாம் வகைப்படுத்தித் தொகுத்து, உணர்ந்துகொண்ட வகையில் அறிவு ஏழு;
முற்றறிவு பெறுவதற்கு, உற்றும் உணர்ந்தும் அறிந்தவை போதாதென்று, அறிஞர் பெருமக்கள் உணர்ந்து சொன்னவற்றைக் கசடறக் கற்று அறிந்த வகையில் அறிவு எட்டு; கசடறக் கற்று, அறிந்தவற்றுக்குத் தக நின்று, தானே பட்டும் அறிந்த வகையில் அறிவு ஒன்பது; பட்டு அறிந்தவற்றையெல்லாம் ‘தனது’ என்று பற்றிக்கொண்ட வகையில் அறிவு பத்து. அறிந்தாலும் என்ன, அறியாவிட்டாலுந்தான் என்ன என்று கருதத்தக்க அற்பங்களையெல்லாம் அறிவதிலேயும் அவற்றைத் தனதாக்கிப் பற்றிக் கொள்வதிலேயும் காலம் கழிகிறது. காலம் கழிகிறது என்பதையே அறியாமல், ஐயோ, வாழ்வு அழிகிறதே?
தளைப்படுத்துவது எது?
அறிவுதான் விடுதலை செய்யும். விடுதலை செய்ததா என்று கணக்குப் பார்த்தால் செய்யவில்லை. என்றால் என்ன கோளாறு? விடுதலை தருவது எதுவோ அதை அறிந்து அதில் ஈடுபடாமல், தளைப்படுத்துவது எதுவோ அதை அறிந்து அதில் ஈடுபட்டது.
கொங்குபுக் காரொடு வாணிபம் செய்தது
அங்குபுக் கால்அன்றி ஆய்ந்துஅறி வார்இல்லை;
திங்கள்புக் கால்இருள் ஆவது அறிந்திலர்;
தங்குபுக் கார்சிலர் தாபதர் ஆமே.
(திருமந்திரம் 2930)
கொங்கு எனப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையின் காடும் காடு சார்ந்த நாடுமாகிய பகுதியில் அகிலும் சந்தனமும் மிளகும் கிராம்பும் ஏலமும் பெரும் வருவாயை ஈட்டித்தரும் வணிகப் பொருள்கள். அவை எந்த வகையில் கொள்முதல் செய்யப்படுகின்றன, என்ன விலைக்கு விற்கப்படுகின்றன என்னும் வணிக விவரங்களை வேறு பகுதியில் வாழ்கிறவர் ஒருவர் அறிய வேண்டுமானால் அவர் கொங்குப் பகுதிக்குப் போய்த்தான் அறிய வேண்டும். என் இடத்திலிருந்தே அறிவேன் என்றால் கதை நடக்காது.
நீச்சல் கற்றுக்கொள்ள விரும்புகிறவர் குளத்தில் இறங்குவது கட்டாயம் இல்லையா? மாலை மயங்கி நிலா வரும்வரையில் இருள்தான்; நிலா வந்துவிட்டால் இருள் ஒடுக்கப்பட்டுவிடுகிறது இல்லையா? அவ்வாறே ஒன்றை அறியப் புகுந்துவிட்டால் அறியாமை நீங்குகிறது. ஆனால் அறியப் புகுந்தது எதுவோ அதை அறியாமல் விடுவதில்லை என்ற விடாமுயற்சியும் அங்குமிங்கும் விலகாத நேர்க்கோட்டு நினைவும் உள்ளவர்கள் மட்டுமே அதை அறிகிறார்கள்.
விடுதலை விளையுமிடத்தைக் கண்டறியவும் விலகாத நேர்க்கோட்டு நினைவு, விடாமுயற்சி வேண்டும். அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம்?
அங்குமிங்குமாக அலைக்கழிக்கும் மனம் என்னும் மாடு அடங்கினால் நேர்க்கோட்டு நினைவு இயல்வதாகும். மனம் என்கிற மாட்டை அடக்கும் வகை என்ன? கொம்பைப் பிடித்து மடக்க வேண்டும். மன மாட்டின் கொம்புகள் எங்கே இருக்கின்றன? அவை நம் மூக்கிலிருந்து மூச்சாக நீள்கின்றன. மூச்சைப் பிடித்தால் மாட்டை மடக்கலாம். கூற்றை உதைக்கலாம்.
மன்மனம் எங்குஉண்டு வாயுவும் அங்குஉண்டு;
மன்மனம் எங்குஇல்லை வாயுவும் அங்குஇல்லை;
மன்மனத்து உள்ளே மகிழ்ந்துஇருப் பார்க்கு
மன்மனத்து உள்ளே மனோலயம் ஆமே.
(திருமந்திரம் 620)
மனம் புறப்பொருள்களை நத்தித் திரியும்போது, உயிர்க் காற்று அலைகிறது. மனம் ஒடுங்குகிறபோது, உயிர்க் காற்று தன் அலைச்சல் மாறிக் கட்டுப்பட்டு ஒழுங்குக்கு வருகிறது. புறப்பொருள்களைப் பற்றித் திரிகிற மனத்தையே பற்றித் திரிக. மனம் மனத்துக்குள்ளேயே ஒடுங்கும். நஞ்சுக்கு நஞ்சே மருந்தாவதுபோல, மனத்தை மனமே வசப்படுத்தும் என்ற பாட்டால் மனத்துக்கும் உயிர்க் காற்றுக்கும் உள்ள நேரடித் தொடர்பு சொன்ன திருமூலர் மற்றொரு பாட்டால் அதை உறுதிப்படுத்துகிறார்:
பிராணன் மனத்தொடும் பேராது அடங்கிப்
பிராணன் இருக்கில் பிறப்புஇறப்பு இல்லை;
பிராணன் மடைமாறிப் பேச்சுஅறி வித்துப்
பிராணன் நடைபேறு பெற்றுஉண்டீர் நீரே.
(திருமந்திரம் 567)
பிராணன் என்கிற உயிர்க்காற்றும் மனமும் நேர்த் தொடர்புள்ளவை. உயிர்க்காற்றுப் பெயர்ந்தால் மனம் பெயரும்; மனம் பெயர்ந்தால் உயிர்க்காற்றின் நடை மாறும். உயிர்க்காற்று நடைமாறாமல் நிலைகுத்திவிட்டால் பிறப்பு இறப்பு அச்சத்திலிருந்து விடுதலை கிடைக்கும். உயிர்க்காற்றை நிலைநிறுத்துக. பேச்சுப் பேச்சென்றும் உங்கள் பெரும்பேச்சின் பயனின்மையை உங்களுக்கு நீங்களே அறிவித்துக்கொண்டு பேச்சடக்குக. உயிர்க்காற்று கதி மாறாமல் நடைபழகும். அந்தச் சிதறா நடையின் பேறாக விடுதலை வந்து முன்னிற்கும்.
காற்று மெலிய தீயை அவித்துவிடும்; வலிய தீயை வளர்க்கும். காற்றின் தோழமை நன்று. காற்றை நித்தமும் வாழ்த்துக (பாரதி, வசன கவிதை, காற்று). வாழ்வைக் கணக்கெடுக்க விரும்புகிறவர்கள் காற்றைக் கணக்கெடுங்கள். காற்றில் இருக்கிறது வாழ்வு.
(வாழத் தொடங்குவோம்)
கட்டுரையாசிரியர்,
தொடர்புக்கு: arumugatamilan@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக