2 ஜன., 2019

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள்-28: ஐஸக் அஸிமோவ்


ஐஸக் அஸிமோவ்

ஒரு அமெரிக்க அறிபுனை எழுத்தாளரும், பாஸ்டன் பலகலைக்கழகத்தின் உயிர் வேதியியல் பேராசிரியராகவும் பணியாற்றியவர். அறிபுனைப் புத்தகங்களைத் தவிர வெகுஜன அறிவியல் புத்தகங்களையும் எழுதியவர்.

குறிப்பிடத்தக்க படைப்புகள்:

ஃபவுண்டேஷன்வரிசை, 
ரோபோவரிசை, 
தி பைசென்டின்னல் மேன், ஐ,ரோபோ

அசிமோவ் அறிபுனை எழுத்தின் முன்னோடிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் எழுதிய ஃபவுண்டேஷன் (Foundation series) வரிசைப் புதினங்களும், ரோபோ (Robot series) வரிசைப் புதினங்களும் அறிபுனை இலக்கியத்தின் செம்மையான படைப்புகளாகக் கருதப்படுகின்றன. 

தனது வாழ்நாளில் 500 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் மற்றும் 90,000 கடிதங்களை எழுதிய அசிமோவ் தூவி தசம முறையிலுள்ள (நூலகப்பகுப்பு முறை) பத்து துறை பகுப்புகளில் ஒன்பது துறைகளில் புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் எழுதாத ஒரே துறை - மெய்யியல் மற்றும் உளவியல். 

அசிமோவ் வாழ்ந்த காலத்தில் அறிபுனை இலக்கியத்தின் முப்பெரும் எழுத்தாளர்களுள் ஒருவராகக் கருதப்பட்டார். (மற்ற இருவர் ஆர்தர் சி. கிளார்க்கும் ராபர்ட் ஹெய்ன்லீனும்). 

புதினங்கள் தவிர குறுநாவல்கள், சிறுகதைகள், அபுனைவு கட்டுரைகள் போன்ற வடிவங்களிலும் அசிமோவ் எழுதியுள்ளார்.

வாழ்க்கைச் சரித்திரம்

தற்போதைய பெலாரஸின் எல்லையிலுள்ள சோவியத் ரஷிய ஃபெடரேட்டிவ் சோசலிச குடியரசில் அன்னா ராசேல் அசிமோவுக்கும், ஜுடாஹ் அசிமோவுக்கும் பிறந்தார். அசிமோவின் உண்மையான பிறந்த தினம் தெரியவில்லை; எனினும் அசிமோவே தன் பிறந்தநாளை ஜனவரி 2 ஆம் தேதி கொண்டாடினார்.  அசிமோவுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவர்கள் குடும்பம் அமெரிக்காவுக்குக் குடிப்பெயர்ந்தது, அவர் யிட்டிஷ் மொழியும், ஆங்கில மொழியும் பேசுவார் ஆனால் ரஷிய மொழியைக் கற்கவில்லை. அவரது பெற்றோர்கள், மிட்டாய் கடை ஒன்றினை நடத்தி வந்தனர்.

கல்வியும், பணியும்

அசிமோவ் சிறு வயதிலேயே அறிவியல் புனை கதைகளைப் படிக்கத் தொடங்கினார். 
11 வயதின் போது சொந்தமாகக் கதை எழுதினார், 19 வயதின் போது அவரது அறிவியல் புனைகதைகள் நாளிதழ்களில் வெளியாகி அவருக்கு விசிறிகள் உருவானதை உணர்ந்தார். அசிமோவ் நியுயார்க் சிட்டி பப்லிக் பள்ளியிலும், ப்ரூக்ளின் ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும் படித்தார். 15 வயதில் சேத் லோ ஜூனியர் கல்லூரியில் விலங்கியல் சேர்ந்து பின்னர் பூனைகளைச் சோதனைக்காக வெட்டுவதை ஏற்றுகொள்ள முடியாததால் இரண்டாம் பருவத்தின் போது வேதியலில் சேர்ந்தார். 1938ல் சேத் லோ ஜூனியர் கல்லூரி மூடப்பட்ட பின் தற்போதைய கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1939ல் வேதியலில் இளநிலை பட்டம் பெற்றார். பின்னர் அவர் அதே பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1938ல் வேதியலில் முதுநிலைப் பட்டம் பெற்று, 1948ல் உயிர்வேதியலில் டாக்டர் பட்டம் பெற்றார். இடையில் 3 வருடம் பிலடெல்பியா கடற்படை விமான நிலையத்தில் வேலை செய்து வந்தார். டாக்டர் பட்டம் பெற்ற பின் பாஸ்டன் மருத்துவியல் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 

1958ல் இருந்து முழு நேர எழுத்தாளர் ஆனார், அவ்வருமானம் தன் ஆசிரியர் வருமானத்தை விட அதிகரித்தது. பின்னர் 1979ல் பாஸ்டன் பல்கலைக்கழகம் அவர் எழுத்தை கவுரவப் படுத்தும் விதமாக உயிர்வேதியலில் அவரைப் பேராசிரியராகப் பணியமர்த்தி அவரைப் பெருமைப்படுத்தியது. 

அசிமோவின் 1956லிருந்தான தனிப்பட்ட ஆவணங்கள் பல்கலைக் கழகத்தின் முகர் நினைவு நூலகத்தில் ஆவணப்படுத்த படப்பட்டு வந்தது. இந்த ஆவணங்கள் 464 பெட்டிகள் அல்லது 71 மீட்டர் அலமாரி இடத்தை நிரப்பக் கூடியதாக உள்ளது!

 அசிமோவ் ஒரு சிறந்த பேச்சாளர், அறிவியல் புனைக்கதை மாநாட்டின் முக்கிய அங்கமாகவே அவர் கருதப்பட்டார். அவர் மிகவும் நட்பானவர், எப்போதும் அணுகக்கூடியவர். பொறுமையாக, ரசிகர்களின் ஆயிரக்கணக்கிலான கடிதங்களுக்கு விடையளிப்பார். 

 1984ல் அமெரிக்க மனிதநேய சங்கம் அவரை அந்த வருடத்தின் மனிதநேயமிக்க மனிதராக தேர்வு செய்தது. பின் 1985ல் இருந்து 1992 வரை அமெரிக்க மனிதநேய சங்கத்தின் கவுரவ முதல்வராக பதவி வகித்தார். 

தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து

நன்றி: தமிழ் விக்கிப்பீடியா

கருத்துகள் இல்லை: