22 ஜன., 2019

குட்டிக்கதை-74:

ஒரு ஊரில் ஒரு பயில்வான் இருந்தான். உடல் வலிமையை காட்டி
எல்லோரையும் உருட்டி மிரட்டினான். அந்த ஊருக்கு ஒரு மகான்
வந்தார். பயில்வானின் கொடுமைகளை சொல்லி மந்திர சக்தியால்
அவனை அடக்கும்படி மக்கள் முறையிட்டனர்.

மகான் அந்த பயில்வானை தனிமையில் சந்தித்தார்.

‘உன் வலிமையை என்னிடம் காட்ட முடியமா?’ என்று கேட்டார்.

‘முடியும்’ என்றான் அவன். ‘நீ தோற்றுவிட்டால் பிறருக்கு துன்பம்
செய்யாமலிருப்பாயா?’ என்று மகான் கேட்க, ‘சரி’ என்றான் அவன்.
அவர், ஒரு கைக்குட்டை அளவுக்கு ஒரு பட்டுத்துணியை அவனிடம்
கொடுத்தார். சற்று துாரத்தில் எதிரில் இருந்த சுவரை காட்டி,
‘இந்த பட்டுத்துணி சுவருக்கு அந்த பக்கம் போய் விழும்படி எறி’
என்றார். இதென்ன பிரமாதம் என்றபடி, துணியை சுருட்டி வீசி
எறிந்தான்.

ஆனால், அது சுவரை தாண்டுவதற்குள் காற்றடித்து உள்பக்கமே
விழுந்தது. மீண்டும் மீண்டும் முயற்சித்தான். அதேவிளைவுதான்
ஏற்பட்டது.

‘என்ன? உன் பலம் இவ்வளவுதானா?’ என்று ஏளனமாக பார்த்தார்.

‘உன் முயற்சி வெற்றி பெறாததற்கு என்ன காரணம் என்பதை
சிந்தித்தாயா?’ என்று கேட்டார். அவன், ஒன்றும் புரியாமல் திகைத்து
நின்றான். ‘இப்போது நான் எறிகிறேன். பார்’ என்று சொல்லிவிட்டு,
உடைந்து கிடந்த செங்கல்துண்டுகளில் ஒன்றை எடுத்து துணியுடன்
நடுவில் வைத்து முடிச்சு போட்டார்.

பிறகு வீசி எறிந்தார். காற்றின் தடையை தாண்டி சுவற்றுக்கு
வெளியே கல் விழுந்தது.செயலும், சிந்தனையும் செயல் மட்டும்
போதாது. செயலோடு சிந்தனையும் இணைய வேண்டும் என்று
போதித்தார். அவன் அவரது சீடனானான்.

நன்றி: ராஜகுமார், புதிய தகவல், முகனூல்

கருத்துகள் இல்லை: