மனிதன் ஒருவன், பெரிய இடத்துக்கு நெருக்கமானவனாக இருந்துவிட்டால், அவன் மனதில் கர்வம் தலைதூக்குவது இயல்பு. சராசரி மனிதர்களே இப்படியென்றால், பகவானுக்கே நெருக்கமாக இருந்த அர்ஜுனனைப் பற்றிச் சொல்லவா வேண்டும்?
ஒருமுறை அர்ஜுனனுக்கு, ‘தன்னைவிடவும் சிவ பக்தியில் சிறந்தவர்கள் யாருமில்லை’ என்ற எண்ணம் தோன்றி, அந்த எண்ணமே கர்வமாகவும் மாறியது. அவனது கர்வத்தைப் போக்க நினைத்த கிருஷ்ணர், ஒருநாள் அவனை திருக்கயிலைக்கு அழைத்துச் சென்றார்.
ஓரிடத்தில்,
சிவகணங்கள்
கூடை கூடையாக சிவ நிர்மால்யப் பூக்களைக் கொண்டு வந்து குவித்தவண்ணம் இருந்தனர். அவர்களிடம் அர்ஜுனன், ‘‘இவ்வளவு நிர்மால்யங்களைக் கொண்டு வருகிறீர்களே, இவை யார் பூஜை செய்த மலர்கள்” என்று கேட்டான்.
‘`பூவுலகில் யாரோ பீமசேனனாம். அவன் சிவபெருமானுக்கு அர்ப்பணித்த மலர்களின் நிர்மால்யங்களே இவை’’ என்றார்கள்.
இப்போது கிருஷ்ணன் கேட்டார்: ‘`சரி, அர்ஜுனன் பூஜித்த மலர்களின் நிர்மால்யங்கள் எங்கே?’’
‘`அதோ பாருங்கள்… சிறு குவியலாக கிடக்கின் றனவே, அவைதான் அர்ஜுனன் சமர்ப்பித்த புஷ்பங்களின் நிர்மால்யங்கள்.’’
அர்ஜுனனுக்கு வியப்பு.
‘`கண்ணா, இது என்ன விந்தை? பீமன் சிவ பூஜை செய்தே நான் பார்த்ததில்லை. அப்படியிருக்க, எப்படி இவ்வளவு மலர்களை அவன் ஈசனுக்குச் சமர்ப்பித்திருக்க முடியும்?’’ என்று கேட்டான்.
‘`உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். நீ கொஞ்சம் மலர்களைச் சிவனுக்கு அர்ப்பணித்து மணிக்கணக்கில் பூஜை செய்கிறாய். ஆனால் பீமனோ, தினமும் காலையில் நந்தவனத்துக்கு வந்து, அங்கிருக்கும் அத்தனை மலர்களையும் மானசீகமாக சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். மேலும், தான் உண்ணும் உணவு, பருகும் நீர், செய்யும் செயல்கள் ஆகிய அனைத்தையும் சிவார்ப்பணம் செய்துவிடுகிறான். அப்படி அவன் செய்யும் மானஸ பூஜை, நீ செய்யும் பூஜையைவிட உயர்ந்தது’’ என்றார் கண்ணன். அர்ஜுனனின் கர்வம் அகன்றது.
ஆம்! பீமசேனன் சிவ பக்தியில் சிறந்தவன். முற்பிறவியில் அவன் செய்த சிவநிந்தனையின் விளைவாகவே, துவாபர யுகத்தில் தன்னை முழுவதுமாக சிவபக்தியில் அர்ப்பணித்துக் கொள்ளும் நிலை வாய்த்தது.
திரேதா யுகத்தில் கும்பகர்ணனின் மகனாகப் பிறந்திருந்தான் பீமன். யுத்தத்தில் கும்பகர்ணனும் ராவணனும் கொல்லப்பட்டதும், சிவனாரிடம் வெறுப்புற்று அவரை நிந்தனை செய்தான். அதனால் உண்டான பாவத்தைப் போக்கும் விதமாக, துவாபர யுகத்தில் பாண்டவர்களில் ஒருவனாகப் பிறந்து சிவ பக்தியில் தன்னை ஆத்மார்த்தமாக ஈடுபடுத்திக்கொண்டான் பீமன் என்றொரு தகவல் உண்டு.
மகா சிவராத்திரி தரிசனம்! –
தோஷங்கள் நீங்கும் செல்வம் செழித்தோங்கும்!
By vayal on 01/03/2019
எழுதிய கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்.
நன்றி: vayal.com.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக