22 மே, 2019

சுற்றுச்சூழல்-66: "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று..."

"இனிமேல் உங்கள் நாட்டில் 

பருவ மழையே பெய்யாதென்று"

ஐயா நம்மாழ்வார்: இயற்கை விவசாயப் பயிற்சிக்குப் போனேன். அங்கு ஒரு பெரியவர் வந்திருந்தார். சுற்றுச்சூழல் கழகத்தினுடைய தலைவர் அவர். அவர் என்னிடம் "இனிமேல் உங்கள் நாட்டில் பருவ மழையே பெய்யாதென்று" சொன்னார். இதை அவர் 1987-ல் சொன்னார்.

ஏன் என்று நான் கேட்டதற்கு, "உங்களுடைய மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அது அரபிக் கடலிலிருந்து வருகின்ற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக மாற்றி கீழே இறக்குகிறது. அந்த மழை நீரை பூமியில் இறக்கி பிறகு ஆற்றில் நீராக ஓடுகிறது. அந்த மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரமுள்ள "டீ" தோட்டம் போட்டு விட்டீர்கள். இன்னமும் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னமும் குறையவே இல்லை அது. அதற்குப் பிறகு முழங்கால் உயரத்திற்கு உருளைக்கிழங்கு செடிகளை நடுகிறீர்கள். ஒரு ஜான் உயரத்திற்கு முட்டைக்கோஸ், காலிஃபிளவர் எல்லாம் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு அரபிக்கடலிலிருந்து வரக் கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. மழையாக மாற்ற முடியவில்லை. அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகின்ற தண்ணீரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. ஆகவே எங்குப் பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவ மழை வருவதற்கு வாய்ப்பில்லை" என்று சொன்னார் அவர். அவர் சொன்ன அன்றிலிருந்து தொடர்ந்து உற்றுக் கவனித்துக் கொண்டுதான் வருகிறேன். அதே தான் நடந்து கொண்டிருக்கிறது. நான் போகின்ற அத்தனை கூட்டங்களிலும் சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் எழுதும் அத்தனை கட்டுரைகளிலும் எழுதி கொண்டுதான் இருக்கின்றேன். யாராவது இதை வாசித்து உணர மாட்டார்களா? தவறைத் திருத்திக் கொள்ள மாட்டார்களா? என்று. ஆனால் யாரும் யோசித்த மாதிரி தெரியவில்லை. தொடர்ந்து காடு அழிக்கப்படுகின்ற செய்தி வந்து கொண்டுதான் இருக்கிறது.

நன்றி - ஏர்முனை

கருத்துகள் இல்லை: