23 மார்., 2020

குட்டிக்கதை

From s.raa's website
குறுங்கதை 35 பெருக்கல் குறி

பிரான்ஸ் காஃப்கா சிறுவனாக இருந்த போது ஒரு நாள் போலீஸ்காரன் ஒரு திருடனைக் கைது செய்து அழைத்துக் கொண்டுபோவதைக் கண்டார். அவர் வயதை ஒத்த சிறுவர்கள் திருடனைத் துரத்தியபடியே பின்னால் ஓடினார்கள்.

காஃப்கா ஒரு திருடனை அன்று தான் முதன்முறையாக நேரில் பார்க்கிறார். ஆகவே அருகில் போய்ப் பார்க்க முனைந்தார்.

அந்தத் திருடனுக்கு முப்பது வயதிருக்கும்.ஆறடிக்கும் அதிகமான உயரம். மீசையில்லாத முகம். வெளிறிப் போன குளிராடை அணிந்திருந்தான். அவனது தோற்றம் ஏதோ அலுவலகக் குமாஸ்தா போலவேயிருந்தது. போலீஸ்காரன் பருத்த தொப்பை கொண்டிருந்தான். அவனது தொப்பிச் சரிந்து கீழே விழுவது போலிருந்தது. இருவரும் மிக மெதுவாக நடந்தார்கள்.

அந்தத் திருடன் முகத்தில் பயமோ, கலக்கமோ எதுவுமில்லை. அவன் வீதியில் நடந்த போது ஒரு வீட்டின் தபால் பெட்டியில் கைவிடுவது போலப் பாவனைச் செய்தான். அதைக் கண்டு போலீஸ்காரன் முறைத்தான். தெருநாய் ஒன்றுக்குத் திருடன் சல்யூட் அடித்தான். போலீஸ்காரனின் உதடுகள் எதையோ முணுமுணுத்தன. மரத்திலிருந்து உதிர்ந்து கிடந்த பூ ஒன்றைக் குனிந்து எடுத்து அதைக் காற்றில் பறக்கவிட்டான் திருடன்.

காஃப்காவிற்குத் திருடனின் செய்கைகளைப் புரிந்து கொள்ளவே முடியவில்லை. திடீரெனத் திருடன் தன்னைப் பின்தொடரும் சிறுவர்களைப் பார்த்துப் பெருக்கல் குறி வரைவது போலப் பாவனைச் செய்தான்.

ஒரு சிறுவன் பயத்தோடு சொன்னான்.

“யாரைப் பார்த்து திருடன் பெருக்கல் குறி போடுகிறானோ அவன் திருடனின் ஆளாகிவிடுவான்“.

சிறுவர்கள் பயந்து பின்னோடினார்கள். காஃப்கா மட்டுமே தெருவில் நின்று கொண்டிருந்தார். திருடன் அவரைப் பார்த்துப் பெருக்கல் குறி செய்தான். இப்போது போலீஸ்காரன் அவனைக் கோபமாகத் திட்டுவது காஃப்காவிற்குக் கேட்டது.

அவர்கள் வீதியை விட்டு மறையும் வரை காஃப்கா பயத்தோடு நின்று கொண்டேயிருந்தார்.

சிறுவர்கள் சொன்னது நிஜமா. தான் எப்படித் திருடனின் ஆளாக முடியும். அதைப்பற்றி நினைக்கத் துவங்கியதும் கால்கள் நடுங்க ஆரம்பித்தன. பயத்தோடு வீடு திரும்பினார். வீட்டில் யாரிடமும் சொல்லத் தயக்கமாக இருந்தது.

திருடனின் ஆளாகிவிடக்கூடாது என்று மனம் அரற்றிக் கொண்டேயிருந்தது. பிரார்த்தனை செய்யக் கண்களை மூடினால் பயம் அதிகமானது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இரண்டு நாட்கள் அவஸ்தைப்பட்டார். பின்பு ஒரு இரவில் சிறிய நோட்டில் தனது பயத்தை அவர் எழுத ஆரம்பித்தார். நாலைந்து வரிகளுக்கு மேல் எழுத இயலவில்லை. ஆனால் அதுவே மனசாந்தி தருவதாக இருந்தது. அன்று தான் பயத்திலிருந்து தப்பிக்க எழுத்து உதவும் என்பதைக் கண்டு கொண்டார்.

திருடன் காற்றில் பெருக்கல் குறி போடுவது விசித்திரமானதாகத் தோன்றியது. விசித்திரமும் குற்றமும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையது எனக் காஃப்காவிற்குப் புரிந்தது.

அந்தப் பெருக்கல் குறி தான் பின்னாளில் ஜோசப் கே என்ற அவரது புகழ்பெற்ற கதாபாத்திரமாக உருமாறியது என்பதை உலகம் அறிந்து கொள்ளவேயில்லை.

**

19/3/20

நன்றி: திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன், முகநூல்

கருத்துகள் இல்லை: