5 மார்., 2020

குட்டிக்கதை

மனிதனும் பாவமும்....! 

சிறந்த பக்தராகிய ஏகநாதரிடம்,  இல்லறவாசி ஒருவர் ஆசி பெறுவதற்காக வந்திருந்தார்.

அவர் ஏகநாதரிடம், ‘சுவாமி! தாங்கள் தான் எனக்கு அருள்புரிய வேண்டும். பாவம் செய்யக்கூடாது என்று என்னுடைய மனம் எப்போதும் நினைக்கிறது. ஆனால் என்னையும் அறியாமல் ஏதாவது ஒரு பாவத்தை நான் செய்து விடுகிறேன். அதைத் தடுக்க தாங்கள்தான் உதவி புரிய வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் பணித்திருந்தது.

ஏகநாதர் அந்த இல்லறவாசியைப் பார்த்து, ‘என்ன பாவம் செய்தாலும் நீங்கள் இன்னும் ஏழு நாட்களுக்கு மேல் பாவம் செய்யப் போவதில்லை. அதனால் கவலைப்படாதீர்கள்’ என்று கூறினார்.

‘இந்த ஏழு நாள் கணக்கு என்ன சுவாமி! நீங்கள் சொல்வதன் அர்த்தம் எனக்குப் புரியவில்லை என்று கேட்டார் இல்லறவாசி.

‘உங்களது ஆயுள் இன்னும் ஏழு நாட்கள் தான் என்பதைத்தான் அப்படிக் கூறினேன்’ என்று ஏகநாதர் கூறியதும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார் அந்த இல்லறவாசி.

மேற்கொண்டு எதையும் கேட்காமல், ஏகநாதருக்கு வணக்கத்தைத் தெரிவித்து விட்டு, மனம் ஒடிந்து போன நிலையில் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். வீட்டிற்கு வந்தவர் தன் வீட்டில் தனியாக அமைக்கப்பட்டிருந்த பூஜை அறையில் போய் இறைவனின் முன்பாக அமர்ந்து கொண்டார்.

‘இறைவா! எனக்கு இன்னும் ஏழு நாட்கள் தான் ஆயுள். நான் என்ன செய்வேன். என்ன செய்வேன்’ என்றபடி பகவானை நினைத்து தியானம் செய்தார்.

ஆறு நாட்கள் கடந்து போய்விட்டது. உணவு உண்பதைக் கூட மறந்து விட்டார் அந்த இல்லறவாசி. அதிக பசியின் போது மட்டும் குடும்பத்தினரின் வற்புறுத்                     தலுக்காக சற்று உணவு எடுத்துக் கொண்டார். மற்ற நேரங்களில் எப்போதும் இறைவனின் அறையில் அமர்ந்து அவன் நினைவிலேயே மூழ்கிப்போனார். ஆறு நாட்களில் பகவானை சிந்தனைச் செய்வதைத் தவிர, வேறு ஒரு காரியத்தையும் அவர் செய்ய வில்லை. அவர் மனம் வேறு எதிலும் லயிக்கவும் இல்லை.

ஏழாம் நாள் காலையில் ஏகநாதர், அந்த இல்லறவாசியின் வீட்டை தேடிக் கொண்டு வந்து சேர்ந்தார்.

அவரைப் பார்த்ததும் இல்லறவாசி எழுந்து நின்று வணக்கம் தெரிவித்து வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

‘எப்படி இருக்கிறீர்கள்?’ என்று கேட்டார் ஏகநாதர்.

‘சுவாமி! இன்றுதான் இந்த உலகத்தில் என்னுடைய கடைசி நாள். ஆகவே எப்போதும் இறைவன் ஞாபகமாகத்தான் இருக்கிறேன். அன்று உங்களைப் பார்த்ததில் இருந்து எனக்கு கடவுளின் நினைவுதான். வேறு நினைவு என்னிடம் எழவில்லை’ என்று கூறினார் இல்லறவாசி.

இப்போது ஏகநாதர், ‘சரி.. அது இருக்கட்டும். இந்த ஒரு வாரத்தில் எத்தனை பாவங்கள் செய்திருப்பீர்கள்?’ என்று கேட்டார்.

அதற்கு இல்லறவாசி, ‘பாவங்கள் செய்வதாவது?.. என்னுடைய இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் நான், இறைவனின் சிந்தனையிலேயே மூழ்கி இருந்தேன். இறைவன் நினைப்பில் மூழ்கி இருக்கும்போது எவ்வாறு பாவங்களைச் செய்ய முடியும்’ என்று கேட்டார்.

‘மரணம் நெருங்கி விட்டது என்று தெரிந்ததும் எப்படி மனிதனுக்குக் கடவுள் ஞாபகம் உண்டாகிறது, பார்த்தீர்களா?.. அதனால்தான் உங்கள் ஆயுள் இன்னும் ஏழு நாட்கள்தான் என்று பயமுறுத்தினேன். எப்பொழுது வேண்டுமானாலும் மரணம் நிகழலாம் என்கிற பயம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருந்து கொண்டே இருந்தால், அவன் ஒரு பாவமும் செய்ய மாட்டான்’ என்றார் ஏகநாதர்.

ஆம்! இன்று தான் நம்முடைய கடைசி நாள் என்பது ஒருவனுக்குத் தெரியும்போது, அவன் எல்லோரிடமும் அன்பாகவும், இறைவனின் நினைவுகளோடும் இருக்கவே முயற்சி செய்வான். இறைவனின் நினைப்பில் இருக்கும்போது எக்காரணத்தைக் கொண்டும் பாவங்களைச் செய்ய மனம் தூண்டப்படாது......!!!

நன்றி: திரு Ps அரவிந்தன், முகநூல்

கருத்துகள் இல்லை: