From s.raa's website
குறுங்கதை 20
புத்தரைச் சந்தித்த கழுகு
ராஜகிருகத்தை நோக்கி புத்தர் நடந்து கொண்டிருந்த நாளில் ஒரு கழுகு அவரைச் சந்திப்பதற்காகத் தரையிறங்கியது. கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான நகங்களும், அகண்ட இறக்கைகளும் கொண்ட அக்கழுகு கேட்டது
“கோதமரே நீங்கள் ஏன் பறப்பதில்லை.“
புத்தர் சொன்னார்
“நானும் பறக்கவே செய்கிறேன். ஆனால் வானத்தில் அல்ல“
கழுகு மறுபடியும் கேட்டது
“வானில் பறக்கையில் பெரியதாக உள்ள உலகம் தரையிறங்கும் போது சிறியதாகிவிடுகிறது.. அது ஏன்“
கோதமர் சொன்னார்
“பறத்தலின் போது நீ உடலை வெல்கிறாய். பூமியில் இறங்கியதும் உடல் உன்னை வென்றுவிடுகிறது. உடலால் மட்டும் வாழ நினைப்பவனுக்கு உலகம் சிறியதே“.
கழுகு கேட்டது
“ஞானம் மனிதர்களுக்கு மட்டுமேயானது தானா“
புத்தர் சொன்னார்
“மனிதர்கள் மட்டும் தான் கடந்தகாலத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தை எண்ணிப் பயப்படுகிறார்கள். ஆகவே அவர்களை நெறிப்படுத்த ஞானம் தேவைப்படுகிறது. ஆனால் வேறு உயிர்களுக்குக் கடந்தகாலமும் இல்லை. எதிர்காலமும் இல்லை. அவை நிகழ்காலத்தில் மட்டுமே வாழுகின்றன. அதுவே ஞானநிலை தான்“.
கழுகு மறுபடியும் கேட்டது
“பறவைகளில் நானே வலிமையானவன். கொல்வது என் உரிமை. நீங்கள் அதை ஏன் மறுக்கிறீர்கள்“
கோதமர் சொன்னார்
“வானத்திற்குப் பசி எடுக்காதவரை நீ இப்படிப் பேசிக் கொண்டிருக்கலாம். உயரத்திற்குச் செல்ல செல்ல அலட்சியம் கொள்வதும் இரக்கமற்று நடந்து கொள்வதும் மனிதர்களின் செயல். நீ தான் அவர்களுக்கு வழிகாட்டி போலும். ஒரு கோழிக்குஞ்சைக் கூட ஸ்நேகிக்க முடியாத கூட உன் வாழ்க்கை அர்த்தமற்றது. உயிர்களைக் கொல்லும் வலிமையை விட உயிர்களைக் காப்பவனின் வலிமையே பெரியது. “
அதைக்கேட்டவுடன் கழுகு சட்டெனத் தன் உருவம் சிறிய குருவியின் அளவு சிறியதாகிவிட்டது போல உணர்ந்தது.
முதன்முறையாக அது கழுகாக இருப்பதற்காக வெட்கப்பட்டது. குற்றவுணர்வு கொண்டது
புத்தரோ புன்னகை படர்ந்த முகத்தோடு தன் பாதையில் தனியே நடந்து போய்க் கொண்டேயிருந்தார்.
நன்றி : எஸ்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக