From s.raa's website
குறுங்கதை -19 பிரார்த்திக்கும் ரோபோ.
அந்த இளைஞன் அவனுக்காகப் பிரார்த்தனை செய்யும் ஒரு இயந்திரத்தை உருவாக்கியிருந்தான். அது ஒரு வகை ரோபோ.
வேலை வேலை என்று பரபரப்பாக ஒடிக் கொண்டேயிருந்த காரணத்தால் அவனுக்குப் பிரார்த்தனை செய்ய நேரமில்லை. ஆகவே அவன் பொருட்டான பிரார்த்தனைகளைச் செய்யப் புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான்.
சின்ன வயதில் கடவுள் தன் வீட்டுப் பூஜையறையில் வசிப்பதாகவே நம்பிக் கொண்டிருந்தான். வயது வளர வளர அவன் கடவுளிடமிருந்து விலகிப் போனான்..
கல்லூரி வயதில் பிரார்த்தனை என்பது இயலாமைகளின் பட்டியல் என்று தோன்றியது. ஆனாலும் சில நெருக்கடியான தருணங்களில் பிரார்த்தனை செய்யவே விரும்பினான். அலுவலக நெருக்கடிகள் அந்த தருணங்களை அதிகப்படுத்தியது. அதற்காகவே ஓராண்டு காலமாக முயன்று புதிய ரோபோவை உருவாக்கியிருந்தான்.
அந்த ரோபோ அவன் பிரார்த்தனை செய்ய வேண்டும் என நினைத்த கோவில்களுக்கெல்லாம் சென்றது. மிகப்பணிவாகக் கைகூப்பி வணங்கி பிரார்த்தனை செய்தது. எல்லா மந்திரங்களையும் பாடல்களையும் பல்லாயிரம் முறை ஒப்புவித்தது. கை நீட்டி பிரசாதம் பெற்றுக் கொண்டது.
ஆனால் பிரார்த்தனை செய்யும் போது அம்மா தன்னை அறியாமல் கண்ணீர் சிந்துவதைப் போல, ரோபோ கண்ணீர் விடவில்லையே என அவன் ஆதங்கப்பட்டான்
புதிய தொழில்நுட்பத்தால் அந்த ரோபோ கண்ணீர் விடும்படியாக செய்தான். எவ்வளவு நேரம் கண்ணீர் விடுவது என அந்த ரோபோவிற்குத் தெரியவில்லை. இதனால் கோவிலில் குழப்பம் ஏற்பட்டது.
அதன் சில வாரங்களில் மௌனமாகப் பிரார்த்திக்கத் தெரியாத ரோபாவாக இருக்கிறதே எனக் கவலைப்பட்டான்
ரோபோவிற்கு மௌனத்தைக் கற்றுக் கொடுக்க முயன்றான். எங்கே, எப்போது மௌனமாக இருக்க வேண்டும். எவ்வளவு நேரம் மௌனமாக இருக்க வேண்டும். எப்போது மௌனம் கலைக்க வேண்டும் எனக் கற்றுக் கொள்ள ரோபோ சிரமம் கொண்டது.
அதற்குச் சிறிய பிரார்த்தனைக்கும் பெரிய பிரார்த்தனைக்கும் வேறுபாடு தெரியவில்லை.
கோவிலின் மங்கள இசையை ரசிக்கப் பழகவில்லை. தெய்வீகம் என்பதை அந்த ரோபோவிற்கு உணர வைப்பது எளிதாகவேயில்லை.
பிரார்த்தனை செய்வதைத் துணி தேய்ப்பது போல ஒரு வேலையாக மாற்றியிருந்தது அந்த ரோபோ.
அவன் சலிப்படைந்து அந்த ரோபோவை உடைத்துத் தள்ளினான்.
அடுத்த சில மாதங்களில் அவன் ஊருக்கு வந்தபோது வீட்டில் அவனுக்காகப் பெண் பார்த்து வைத்திருந்தார்கள். அழகான, படித்த பெண். உடனே திருமணம் செய்து கொண்டுவிட்டான். மகிழ்ச்சியாகக் குடும்ப வாழ்க்கை துவங்கியது.
அவனுக்காகப் பிரார்த்தனை செய்ய இன்னொரு இயந்திரம் கிடைத்துவிட்டது என உள்ளுற சந்தோஷம் கொண்டான்.
பாவம். அதை அறியாமல் அவனது புது மனைவி கோவில் கோவிலாகப் படியேறி அவனுக்காகப் பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்தாள்.
நன்றி திருமதி & திரு எஸ்ரா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக