3 மார்., 2020

குட்டிக்கதை

From s.raa's website
குறுங்கதை 17 
அந்தச் சிறுவன்

சக்கரவர்த்தியின் புதிய உடைகள் என்ற கதையைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தினமும் புதுப்புது மோஸ்தரில் ஆடைகளை அணிய ஆசை கொண்ட அரசனுக்குப் பாடம் கற்பிக்க இரண்டு நெசவாளிகள் அரூப அடை நெய்து தருவதாக வாக்களித்தார்கள். அதன்படியே அவர்கள் நெய்து தந்த கண்ணுக்குப் புலப்படாத ஆடையை அணிந்து கொண்ட சக்கரவர்த்தி தெருவில் ஊர்வலம் வந்த போது ஊரே கண்ணுக்குப் புலப்படாத உடையைப் பாராட்டியது.

ஆனால். ஒரு சிறுவன் மட்டும், “சக்கரவர்த்தி ஆடையே அணியவில்லை. அம்மணமாக இருக்கிறார்“ என்று உண்மையை உரத்துச் சொன்னான். அப்போது தான் மன்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்

இந்தக் கதையில் வரும் சிறுவனுக்குப் பெயரில்லை. இந்த நிகழ்விற்குப் பின்பு அச்சிறுவன் என்னவாகியிருப்பான் என்ற தகவலும் இல்லை.

ஆனால் இப்படி நடந்ததாக வேறு கதையொன்றைச் சொல்கிறார்கள்.

அரண்மனை திரும்பிய சக்கரவர்த்தி தன்னை ஏமாற்றிய இரண்டு நெசவாளிகளின் தலையைத் துண்டித்தார். உண்மையை உரத்துப் பேசும் சிறுவனை வளர விடுவது தனது ஆட்சிக்கு ஆபத்து என உணர்ந்து அச்சிறுவனைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்.

தாய்மொழியிலிருந்து ஒருவனைத் துண்டித்துவிட்டால் போதும், உண்மையை விட்டு விலகிப் போக ஆரம்பித்து விடுவான் என நினைத்த சக்கரவர்த்தி அச் சிறுவனை வெளிநாட்டில் அந்நிய மொழி பள்ளி ஒன்றில் தன் செலவில் சேர்க்க ஏற்பாடு செய்தார்.

மூன்று வருஷங்களில் அந்தச் சிறுவனுக்குத் தாய் மொழி மறந்து போனது. ஆனால் அப்போதும் உண்மையைச் சொல்லும் பழக்கம் போகவில்லை.

அந்தச் சிறுவன் மிக நாகரீகமாக வளர்ந்தான். பதின்வயதில் பள்ளி நிர்வாகம் செய்யும் தவறுகளைக் கண்டித்து முழக்கம் எழுப்பினான். கல்லூரி நாட்களில் சமூகப் பிரச்சனைகளுக்காக வாதிட்டான். விஷயம் மன்னரின் காதிற்குப் போனது.

“அவனுக்கு உடனடியாக ஒரு அரசாங்க வேலையைக் கொடுத்துவிடுங்கள். உண்மையைச் சொல்வதை விட்டுவிடுவான்“ என்றார்

உடனே அவனுக்கு வரி வசூல் செய்யும் அதிகாரியாகப் பணி வழங்கப்பட்டது. உயரதிகாரியாக இருந்த போதும் அவன் பொய் சொல்லவில்லை. பிற அதிகாரிகளின் தவறுகளைக் கண்டித்துப் பேசினான். நடவடிக்கைகள் எடுத்தான்.

அவனைத் திருத்துவதற்கு மறுபடியும் மன்னரிடம் யோசனை கேட்டார்கள். “பணக்கார பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து வையுங்கள், திருந்திவிடுவான்“ என்றார்.

அதன்படியே பெரிய வணிகரின் ஒரே மகளைத் திருமணம் செய்து வைத்தார்கள். மிகப்பெரிய வீடு. செல்வம். செல்வாக்கு எல்லாமும் வந்து சேர்ந்தது. ஆனாலும் அவன் பொய் சொல்லவேயில்லை.

இவனை என்ன செய்வது என அரசனுக்குத் தெரியவில்லை. குழம்பிப் போனான். சக்கரவர்த்தியின் கலக்கத்தை அறிந்த மகாராணி சொன்னாள்

“இதற்குப் போய் ஏன் கவலைப்படுகிறீர்கள். அவனிடம் இல்லாத திறமைகள் யாவும் இருப்பதாகப் புகழ்ந்து சொல்லிக் கொண்டேயிருங்கள். தானே அதை நம்ப ஆரம்பிப்பான். பிறகு அவனாகவே பொய் சொல்லுவான்“.

அதன்படியே அவன் “பூமியில் வாழும் கடவுள். நிகரற்ற கொடையாளி, நீதிமான், சாக்ரடீஸை விஞ்சிய அறிவாளி. தெய்வப்பிறவி. ஈரேழு பதினாலு லோகத்திலும் அவனுக்கு நிகரான ஒருவருமில்லை.“  என்று ஆளுக்கு ஆள் புகழ்ந்து பேசினார்கள். அப்படித் தனக்கு எந்தத் திறமையோ .குணங்களேயில்லை என மறுத்துச் சொல்ல விரும்பினான். ஆனால் புகழ்ச்சியை எப்படி விமர்சனம் செய்வது என மௌனமாகக் கேட்டுக் கொண்டான்.

நாளடைவில் அவன் புகழ்ச்சிக்கு ஏங்க ஆரம்பித்தான். புகழ்ந்து பேசுகிறவர்களைக் கூடவே வைத்துக் கொண்டான். இல்லாத திறமைகள், குணங்கள் யாவும் தனக்கு இருப்பதாக நம்பத் துவங்கினான். பின்பு அவன் சரளமாகப் பொய் பேச ஆரம்பித்தான். பொய்யை ரசித்தான். பொய்யை விரும்பினான். பொய்யிலே வாழ்ந்தான்.

முடிவில் நிர்வாணமாக வீதியில் சென்ற அரசனைப் போலவே அவனும் மாறியிருந்தான்.

இனி அவனைப்பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று சொன்னார் சக்கரவர்த்தி

அதன் பிறகு பொதுவெளியில் துணிச்சலாக உண்மையைச் சொல்லும் ஒரு சிறுவனை மக்கள் காணவேயில்லை.

நன்றி : திருமதி & திரு எஸ்ரா 

கருத்துகள் இல்லை: