இன்றைய வாசிப்பு : "இருள் இனிது ,ஒளி இனிது". எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது .விலை ரூபாய் 130/-
உயிர்மை பதிப்பகம் வெளியீடு .மொத்த பக்கங்கள் 198 .
இரண்டாம் பதிப்பு நவம்பர் 2014.
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களில் ஒருவர் .இவரைப் பிடிக்க காரணமே இவரின் எழுத்துக்கள்; இவரின் வாசிப்பனுபவம் ;இவரின் பரந்துபட்ட பயண அனுபவம்; உலக திரைக்காவியங்கள் எல்லாம் கரைத்துக் குடித்த மிகப்பெரிய ஜாம்பவான் .
உண்மையாக எழுதுவார் ,
வன்மையாக எழுதமாட்டார் ,நமக்கு
அண்மையாக எழுதுவார் ,
திறமையாக எழுதுவார் .
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு இலக்கோடு இலக்கற்ற பயணி நூல் நமக்கு எழுதி தருபவர் அவர்தான்.
உலக சினிமாவில் ஓவியர்கள் இசைக் கலைஞர்கள் எழுத்தாளர்களின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்களை முன்வைத்து நிறைய படங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன . உருவாகிக்கொண்டே இருக்கிறது .அது போன்ற அயல் மொழி திரைப்படங்கள் சிலவற்றை இந்த தொகுப்பு அடையாளப்படுத்துகிறது .மாற்று சினிமா குறித்து தீவிரமான முனைப்பும் அக்கறையும் உருவாகிவரும் சமகால தமிழ்ச்சூழலில் அனிமேஷன் திரைப்படங்களின் முக்கியத்துவம் மற்றும் வரலாற்று பிரக்ஞை கொண்ட திரைப்படங்கள் குறித்து இந்த நூல் விரிவாகப் பேசுகிறது .
ஒரு முறை அல்ல பல முறை படித்தும் முக்கியமாக பொக்கிஷமாக போற்றப் பட வேண்டிய அரிய நூல் இது.
* கற்பனை தான் படத்தின் ஆதாரம். கற்பனையை நாம் வளர்த்து எடுக்க வேண்டும் . கற்பனைக்கு அதிக இடம் கொடுக்கவேண்டும் .உயரிய கற்பனையே கலையின் ஆதாரம் *என்கிறார் மியாசகி.
திரைப்படத்தில் நடிக்க எனக்கொரு வாய்ப்பு வந்தது .தன்மான உணர்ச்சி அதிகம் கொண்ட என்னால் ,கூச்சம்,அச்சம், கொண்டு என்னால் தலை காட்ட முடியுமா என்ற அச்சம் காரணமாகவே, ஆம்அச்சம் காரணமாகவே ஒதுங்கி இருந்து விட்டேன் .ஒருமுறை எனது நண்பனும், ஒவியனும் கவிஞனும் இயக்குனரும் ஆன வகுப்புத் தோழன் கங்கைகொண்டான் என்கிற பா. மனோகரன் அவர்கள் இயக்கிய "பிரியமுடன் பிரபு "படத்தை, வளர்வதை அவ்வப்போது அருகில் இருந்து பார்த்து இருக்கிறேன் .ஜீவிதா மற்றும் பிரபு அவர்கள் நடித்த படம் .ஜீவிதாவை அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் என்று நினைக்கிறேன் .ஒன்று மட்டும் உறுதி. என்றேனும் ஒருநாள் ஏதேனும் ஒரு திரைப்படத்தில் ஏதுவாகவோ நான் என்னை காட்டிக்கொள்ள இருப்பேன் என்று நம்பிக்கை உள்ளது.
எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் பல புத்தகங்களை படிக்கும் பொழுது ஆங்காங்கே அவர் சில திரைப்படங்களை, சில உலகளாவிய திரைப்படங்களை குறிப்பிட்டு செல்வார் .அந்த படங்களை எல்லாம் எனது அமெரிக்கா விஜயத்தின்போது மகள் வீட்டிலோ அல்லது மகன் வீட்டில் உள்ள ஹோம் தியேட்டரில் முடிந்த வரை தனியாக அந்த படங்களை எல்லாம் போட்டுப் பார்ப்பேன் . கால் ஒடிந்த மாது அருகே இருக்க.பொதுவாக தமிழ் தெலுங்கு சினிமாக்களை ஒன்று விடாமல் பார்த்து விடுவேன் .மலையாளப்பட அவ்வளவாக ,மொழி பிரச்சினை, காரணமாக பார்க்க மாட்டேன் .
அது ஒரு சுகம் .இத்திரைப்படத்தை பிரேம் பை பிரேம் , நொடிக்கு நொடி காட்சிக்கு காட்சி அடிக்கடி நோக்கி ரசித்து பார்ப்பது ஒரு சுகம் .அதை விவரித்து சொல்ல தெரியவில்லை.
எஸ் ராமகிருஷ்ணன் முன்னுரையில் இப்படி சொல்லுவார் : "எழுத்தாளர்களின் வாழ்க்கை சார்ந்த திரைப்படங்களாக தேர்வு செய்து பார்த்துக் கொண்டே இருந்தேன். தமிழில் புதுமைப்பித்தன் , நகுலன்,
பா. சிங்காரத்தின் வாழ்க்கையில் எப்படி படமாக்குவதற்கு எவ்வளவோ இருக்கிறது என்று தோன்றியது .வரலாற்று நினைவுகளையும் தனித்துவமிக்க ஆளுமைகளையும் பற்றிய திரைப்படங்களை ஒரு பார்வையாளன் எதிர்கொள்ளும் முறையுமே இந்தப் புத்தகத்தின் மையம் .இது அனுபவப் பகிர்வு மட்டுமே . நான் ஒரு சினிமா பார்வையாளனாக எனது அனுபவங்களை பதிவு செய்ய விரும்புகிறேன் .அதன் காரணமாகவே இவை எளிய நேரடியான வெளிப்பாட்டில் எழுதப்பட்டிருக்கின்றன."என்கிறார் ஆசிரியர்.
" நான் எப்படி ஒரு படத்தை புரிந்துகொள்கிறேன் ,.எந்த வகையான படங்கள் ஈர் கின்றன, அதன் காரணங்கள் என்னவென்று அறிந்துகொள்ள தேவையாக இருக்கிறது." என்கிறார் ஆசிரியர்.
"ஒரு திரைப்படத்தை நாவலை படிப்பது போல பல முறை பார்க்க வேண்டியிருக்கிறது காரணம் ஒவ்வொரு காட்சியும் தனித்துவமானது அதை தனித்து அவதானித்து ரசிப்பதில் வழியை படத்தினை மேலும் புரிந்துகொள்ள முடியும் ஒரு படத்தை வசனங்கள் இல்லாமல் மௌனமாகவே முயற்சித்துப் பாருங்கள் அப்போதுதான் அதன் காட்சி கோணங்களும் நடிப்பும் ஒரு காட்சியில் எத்தனை நுட்பமான விஷயங்கள் புரிய வைக்கப் படுகின்றன என்பது புலப்படும்."என்கிறார் ஆசிரியர்.
" தமிழ்நாட்டில் கேளிக்கை என்ற அளவை தாண்டி சினிமா புரிந்து கொள்ளப்படவில்லை .நோபல் பரிசு பெற்ற நாவலை விடவும் அதன் திரை வடிவம் அதிகமான பார்வையாளர்களை சென்று அடைகிறது .உலகெங்கும் எழுத்தாளர்களின் படைப்புகள் திரைப்படமாக்காப்படும் மரபு அன்றும் இன்றும் இருக்கிறது .தமிழ்ச்சூழலில் எழுத்தும் எழுத்தாளர்களும் இப்போதுதான் அடையாளம் காணப்பட துவங்கியிருக்கிறார்கள் .நல்ல நாவல்கள் திரைப்படமாக மாற்றப்படும்போது சினிமாவில் புதிய மாற்றங்கள் உருவாவது தானே துவங்கி விடும் "என்று எஸ் ராமகிருஷ்ணன் அவர்கள் கூறுகிறார்.
இந்தப் புத்தகத்தில் கீழ்க்கண்ட 22 திரைப்படங்கள் விமர்சிக்கப்பட்டுள்ளது; அவரின் பார்வையில் .
1)மனசாட்சியின் கண்கள்.
2) எல் வயலின்
3)பீத்தோவன் அவனின் காதல் .
4) கசக்கும் காமம்
5)துறவியும் மீனும்
6)துயரத்தின் சாலை
7) எஷ்னாபூரின் புலி
8) கிட்ஸ் எனும் நட்சத்திரம்
9)எமிலி ஜோலா எனும் நட்சத்திரம்
10) மோனோ நோகி
11)பெண் வேஷம்
12)விர்தியானா
13)மாதுளையின் பாடல்
14) 26 நாட்களில் ஒரு காதல்
15)கனவின் மிச்சம்
16)காதலின் துறவி
17)ஒரு படம் சில கதைகள்
18) ஹென்றி மில்லரின் காதல்
19) குர சே வாவின் நூறுவயது
20)மாய விளக்கின் ஒளியில்
21)காலத்தை செதுக்குதல் ..
22). மௌனப் பனி.
முதலான படங்களைக் குறித்து ஆசிரியரின் பார்வையில் நாம் பார்க்கலாம், படிக்கலாம், இன்பம் துய்க்கலாம்.
இதில் ஒன்பது படங்களை இவரது சிபாரிசின் பேரில் பார்த்திருக்கிறேன்.
மனசாட்சியின் கண்கள், பீதோவனின் காதல் ,கசக்கும் காமம் ,கிட்ஸ் எனும் நட்சத்திரம் , பெண் வேஷம் , மாதுளையின் பாடல் எல்லாம் அருமையாக இருக்கிறது. காதலின் துறவி மிக அற்புதம் .
இதில் ஒன்றை மட்டும் சொல்ல வேண்டுமானால் " 26 நாட்களில் ஒரு காதல்" இது குறித்து கொஞ்சம் விரிவாகவே பார்க்கலாம்.
தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் 26 நாட்கள். (Twenty six days from the life of
Dostoyevsky ) என்ற படம் அவருக்கும் அவரிடம் உதவியாளராக பணிக்கு வந்த அன்ன என்ற இளம் பெண்ணுக்குமான காதலும், சூதாடி நாவலை எழுதுவதற்கு அவர் அடைந்த நெருக்கடியான மனநிலையும் படத்தின் ஆதார கதை.
Dostovesky at the Roulette-- Novel from the life of a great writer. என்ற நூலினை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வை மிகவும் நெருங்கி உண்மையாக பதிவு செய்துள்ளது.
தஸ்தயேவ்ஸ்கி சொல்லச் சொல்ல சுருக்கெழுத்தில் குறிப்பு எடுத்து எழுதி தர வேண்டியது அன்ன வேலை .அப்படி எழுதப்பட்டதுதான் சூதாடி என்ற நாவல். அதைத்தான் இந்த திரைப்படம் விரிவாக காட்சிப்படுத்துகிறது .
படத்தின் துவக்கத்தில் தஸ்தயேவ்ஸ்கி பீட்டர்ஸ்பர்க் என்ற நகரில் தனியே வசிக்கிறார் .அவருக்கு அப்போது 45 வயதாகிறது .வேலை தேடி வரும் அண்ணாவிற்கு 26 வயது .ஒரு மாதத்திற்குள் நாவல் எழுதி முடிக்க வேண்டுமே என்ற பதட்டம் ,இதுவரை உதவியாளரை வைத்து எழுதிய அனுபவம் இன்மை ,என்ற குழப்பத்தில் தவிக்கும் இவரின் அறிமுக காட்சி அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளன.
26 நாட்களில் உருவான அந்த காதல் மட்டுமே தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வில் நடந்த அரிய சந்தோஷம் .மற்ற யாவும் அவரை வதைத்த பிரச்சினைகள், சிக்கல்கள் மட்டுமே படம் அவரது வறுமை அவரை எவ்வளவு ஒடுக்கி இருந்தது என்பதை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.
அவரது வளர்ப்பு மகன் பாவல் அவரை மிகவும் மானபங்கப் படுத்தும் அளவிலேயே நடத்திக் கொள்கிறான் .அவனுக்கும் அவருகமான உறவை பற்றி நோபல் பரிசு எழுத்தாளரான ஜே. எம். கூட் சி The master of Petersburg என்ற நாவலை எழுதியிருக்கிறார் .இது தமிழில் சா. தேவதாஸ் மொழியாக்கத்தில் பீட்டர்ஸ்பர்க் நாயகன் என்று வெளியாகியுள்ளது.
அவர் வாழ்வில் சந்தித்த பெண்கள் யாவரும் வலிமையானவர்கள் .அவர்களே அவரைமுன்னெடுத்து போகிறார்கள், துணை நிற்கிறார்கள் .வாழ்வின் துயரங்களை மட்டுமே தஸ்தயேவ்ஸ்கி நினைத்துக் கொண்டிருக்கிறார் .அவரால் இயல்பான ஒரு வாழ்வை நடத்த முடியவில்லை .அவ்வளவு அக நெருக்கடி. ஆனால் அவர் காதலித்த பெண்கள் அவரை சாந்தம் கொள்ள வைக்கிறார்கள் .
ஆனால் மனைவியின் மரணம் ,சிறு வயதில் கண்ட தாயின் பரிதவிப்பு என்று அவர் அனுபவித்த துயரம் அவருக்குள் எப்போதும் மாறாத வலியை உருவாக்கிய படியே இருந்தது .அதிலிருந்து விடுபடவே முடியவில்லை .
" ஒரு எழுத்தாளனின் வாழ்வு அவன் எழுதிய கதைகளை விட வியப்பானது. அதில் சிறு பகுதியை மட்டுமே அவன் எழுதி வெளிப்படுத்துகிறான் .அந்தவகையில் தஸ்தாயெவ்ஸ்கியின் வாழ்வும் அனுபவங்களும் அவரது நாவல்களை விட வினோதமான ,துயரமானவை "என்று ஆசிரியர் கூறுகிறார்.
மொத்தத்தில்,
இருள் இனிது , ஒளி இனிது .!
மருள் சிறிது , அருள் பெரிது..!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக