மேலே உள்ள படத்தை ஒரு முறை பாருங்கள்.
பார்த்து விட்டீர்களா?
நல்லது. அந்தப் படத்தில் இருப்பது என்ன என்று உங்களுக்குத் தோன்றுகிறது?
‘அது ஒரு மெழுகுவர்த்தியின் படம்”
இல்லை; இல்லை 'அது இரண்டு முகங்களின் படம்’
அந்தப் படத்தைப் பற்றி மேலே சொல்லப்படும் இரண்டு பார்வைகளில் எது சரி? இரண்டுமே சரிதான். மேலே இருக்கும் படத்தை மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது அது மெழுகுவர்த்தியின் படமாகவும், சற்று உற்று நோக்கும் போது இரண்டு முகங்களின் படமாகவும் தெரிகிறது. இது ஜெர்மானிய உளவியல் சார்ந்த ஜெஸ்டால்ட் (Gestalt) ஓவியம் ஆகும். இது போன்ற ஜெஸ்டால்ட் ஓவியங்கள் நிறைய இருக்கின்றன. ஜெஸ்டால்ட் என்ற ஜெர்மன் சொல்லுக்கு ‘முழு வடிவம்’ (whole form) என்று பொருள். நமது அன்றாட வாழ்வில் எத்தனையோ பொருட்களைப் பார்க்கிறோம். ஆனால், அவற்றை முழு வடிவமாகப் பார்க்கிறோமா என்ற கேள்வியை இந்த வடிவக் கொள்கை எழுப்புகிறது.
சரி. இப்போது ஓவியத்துக்கு வருவோம். இந்த ஓவியத்தை ‘மெழுகுவர்த்திதான்’ என்று அடித்துச் சொல்பவர்களை ‘மெழுகுவாதிகள்’ என்று அழைப்போம். ‘முகங்கள்தான்’ என்று பிடிவாதம் பிடிப்பவர்களை ‘முகவாதிகள்’ என்று அழைப்போம். ஆக, இந்த ஒரு படம் இரண்டு கோட்பாட்டுவாதிகளை உருவாக்கி விட்டது. எப்படி ஒரு ஓவியம் இது போல் ஒன்றுக்கு மேற்பட்ட பொருளைக் கொண்டிருக்கிறதோ, அது போலவே ஒரு சொல்லுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட பொருள்கள் உண்டு. உதாரணமாக, ‘படி’ என்ற சொல்லுக்கு படிப்பது, படிக்கட்டில் உள்ள படி, படிப்படியான வளர்ச்சி, படி நிலை, படி என்ற அளக்கும் கருவி, படிந்து போவது, என்று அரை டஜன் அர்த்தங்கள் இருக்கின்றன. அதே போல், பால் என்ற சொல் பசு தரும் பால், ஆண்பால்-பெண்பால் திணை போன்ற அர்த்தங்களைத் தாங்கி நிற்கிறது. ஆக, ஒரு சொல்லுக்கும் அதன் பொருளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அர்த்தங்கள் கால தேச வர்த்தமானங்கள் சார்ந்து ஆக்கிக் கொள்ளப்படுகின்றன. ஒரு சொல்லைப் போலவே ஒரு பிரதியும் ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்தங்களைக் கொண்டது. பிரதியை உருவாக்கும் ஆசிரியன் சொல்லும் அர்த்தம் ஒன்று. அதை வாசிக்கும் வாசகன் புரிந்து கொள்ளும் அர்த்தம் வேறு. முன்னது கட்டமைப்பு (Construction). இரண்டாவது கட்டவிழ்ப்பு (Deconstruction). உலகில் உள்ள எல்லா கலை, இலக்கியம், தத்துவம் எல்லாமே கட்டவிழ்ப்பில் வேறு புதிய பொருளைத் தருகின்றன. தெரிதா பல பிரதிகளைக் கட்டவிழ்த்துக் காட்டினார். பழைய வாசிப்பை (Reading) தனது மறு வாசிப்பில் (Re-reading) தவறிய வாசிப்பு (misreading) என்று சுட்டிக்காட்டினார். தெரிதா மேற்கத்திய பிரதிகளை கட்டவிழ்ப்பு செய்து காட்டினார். நாம் ஒரு சங்க இலக்கியப் பாடல் ஒன்றை கட்டவிழ்த்துப் பார்க்கலாம். கணியன் பூங்குன்றனார் இயற்றிய புறப்பாடல் இது. புகழ் பெற்ற பாடலான இது உலகத் தமிழ் மாநாடு, தமிழ்ச் செம்மொழி மாநாடுகளில் முகப்பு வரிகளாக ஏற்று கொண்டாடப் படுவது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர் தர வாரா
நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன
சாதலும் புதுவது அன்றே வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னாது என்றாலும் இலமே மின்னோடு
வானம் தான் துளி தலை இ ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று
நீர் வழிப் படூம் புணை போல் ஆருயிர்
முறை வழிப்படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின் மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.
இந்தப் புறப்பாடலின் முதல் வரியும், கடைசி இரு வரிகளும் பிரபலமானவை. தமிழன் எல்லாம் என் ஊரே; அனைத்து மக்களும் என் உறவினரே என்று பிரகடனம் செய்வதாக ஒரு வாசிப்பு உண்டு. அதே போல் கடைசி இரு வரிகளும் கணியன் பூங்குன்றனாரின் பரந்த மனத்தை எடுத்துக் காட்டுவதாகவும் கூறுவார்கள். இடையில் உள்ள வரிகள் பெரும்பாலும் பொருட்படுத்தப்படுவதில்லை. ஏனெனில், அந்த வரிகள் விதி வலியது, நன்மை தீமை எல்லாமே விதிப்படிதான் நடக்கும் என்று புலம்புகின்றன. பகுத்தறிவுக்கு எதிராக இருப்பதால் அந்த வரிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன.
மேற்கண்ட பாடலை நாம் மறுவாசிப்பு செய்து பார்ப்போம்.
நன்றி : திரு. நேயம் சத்யா, தத்துவங்களைத் தேடி, முகநூல் குழு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக