*கவியரசு கண்ணதாசன்*
*பிறந்த நாள் "நினைவலைகள்"*
ஒருநாள் இரவு 11 மணி. கண்ணதாசன் அவர்கள் எம்.எஸ்.வி க்குப் போன் செய்தார். அந்த தொலைபேசி அழைப்பை எடுத்த எம்.எஸ்.வியிடம், மெல்லிசை மன்னர் இருக்காரா? என்று கேட்டார் கண்ணதாசன். யாரோ நம்மைக் கிண்டல் செய்கிறார்கள் என்று நினைத்து விட்டுப் பதில் ஏதும் பேசாமலேயே போனை வைக்க இருந்த எம்.எஸ்.வியிடம், டேய் போனை வைச்சுராத. நான் தான் பேசறேன் என்ற குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியில் திளைத்த எம்.எஸ்.வி பேசுவது கண்ணதாசன் என்பதைத் தெரிந்து கொண்டார்.
"என்ன கவிஞரே? ஏதோ மெல்லிசை மன்னர் அது இதுன்னு என்னைக் கிண்டல் பண்றீங்க" என்று கேட்டார் எம்.எஸ்.வி.
"கிண்டல்லாம் ஒண்ணுலில்ல. நாளைக்கு எம்.கே.டி கல்யாண மண்டபத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சியில் உனக்கும் ராமமூர்த்திக்கும் "மெல்லிசை மன்னர்கள்" னு பட்டம் கொடுக்கறதா முடிவு செஞ்சிருக்கோம்". என்று சொன்னார் கவியரசர்.
"எனக்கு அந்தமாதிரி பட்டம்லாம் எதுவும் வேண்டாம். அப்படி பட்டம் கொடுக்கறதா இருந்தா நான் நிச்சயமா விழாவுக்கு வரவே மாட்டேன்" என்று சொன்னார் எம்.எஸ்.வி.
"என்ன விளையாடரியா? நாளைக்கு அந்த விழாவுல நடிகர் திலகம், சாவித்திரி, சந்திரபாபு, ஸ்ரீதர், பீம்சிங் னு எல்லாரும் வர இருக்காங்க. அதனால மரியாதையா வந்து பட்டத்தை வாங்கிக்க" என்று அன்புக்கட்டளை இட்டார் கவியரசர்.
அந்த விழாவை நடத்திய திருவல்லிக்கேணி கலாச்சார சங்கத்தின் சார்பில் கவியரசரிடம் அவர்கள் எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இருவரையும் போற்றி ஒரு பாடல் எழுதும்படிதான் முதலில் கேட்டிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் நாளை நடக்கவிருக்கும் விழாவிலே அவர்களைப் போற்றி பாடல் எழுதுவதற்குப் பதிலாக பட்டம் கொடுக்கலாம் என்று யோசனை கூறினார் கவியரசர். யோசனை சொன்ன கவியரசர் "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டத்தையும் விழாவை நடத்துபவர்களுக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார்.
1963 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு மத்தியிலே, பலத்தக் கைத்தட்டல்களுக்கு இடையே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி ஆகிய இருவருக்கும் "மெல்லிசை மன்னர்கள்" என்ற பட்டத்தை வழங்கினார்.
கவியரசு கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வியை ஒருநாள் பார்க்கலேன்னாலும் பைத்தியம் பிடித்த மாதிரி ஆயிடும். தினமும் அவரை ஒருமுறையாவது பார்த்தாக வேண்டும். அப்படிப் பார்க்க முடியலேன்னா ராத்திரி அவருக்குப் போன் செய்தாவது எம்.எஸ்.வியிடம் பேசி ஆகவேண்டும். இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து எம்.எஸ்.வியைப் பார்க்க முடியவில்லை என்றால் அன்னிக்கு ராத்திரி எம்.எஸ்.விக்குப் போன் செய்து, ஏண்டா திமிரா? நேர வந்து பார்க்க முடியலேன்னாலும் ஒரு போனாவது பண்ணக் கூடாதா? என்று உரிமையோடு கோபித்துக் கொள்வார் கவியரசர்.
இவர்கள் இருவரது நட்பைப் பற்றி விரிவாக சொல்ல வேண்டும் என்றால் அது அனுமார் வால் போல் நீண்டு கொண்டே போகும். அப்படி நட்பு இருந்தும் கவியரசரின் ஆசையை நிறைவேற்ற மறுத்தார் எம்.எஸ்.வி.
கவியரசருக்குத் தான் எப்படியாவது ஒரு பாட்டு பாடணும்னு ரொம்ப நாளாக ஆசை.
"பாவமன்னிப்பு" படத்தில் வந்த நாள் முதல் இந்த நாள் வரை என்ற பாடலைக் கவியரசு கண்ணதாசன் சொல்ல சொல்ல அவர் உதவியாளர் முழுவதையும் எழுதி முடித்ததும் கவியரசர் "டேய் விச்சு, இந்தப் பாட்டாவது பாட எனக்கு சான்ஸ் கொடுடா" என்று கேட்டார். அதற்கு எம்.எஸ்.வி, "அண்ணே, நீங்க ரொம்ப நல்லா பாட்டு எழுதரீங்க. ஜனங்க எல்லாரும் ஒங்க மேல மதிப்பும் மரியாதையும் நிறைய வைச்சுருக்காங்க. இப்ப நீங்க பாடுறேன்னு சொல்லிப் பாடி அதை நீங்களே கெடுத்துக்காதீங்க. பாடுவதற்கு நிறைய பேர் இருக்காங்க. அவங்க பாடட்டும். அதனால நீங்க பாட்டு மட்டும் எழுதுங்க" என்று அன்பாக கவியரசரிடம் சொன்னார். அதைக்கேட்ட கண்ணதாசன் அவர்களுக்கு வந்த ஆத்திரம் கொஞ்சநஞ்சமல்ல. ஆனால் எம்.எஸ்.வியும் அதைக் கண்டு அசரவேயில்லை. அந்தப்பாடலை டி.எம்.எஸ் அவர்களைப் பாட வைத்து கம்போஸிங்கை முடித்தார் எம்.எஸ்.வி. இப்படி இருவருக்கும் அடிக்கடி விரிசல் ஏற்படுவது போல் சச்சரவுகள் இருந்தாலும், அவர்களிடையேயான நட்பு அதைத் தடுத்தது என்பதுதான் உண்மை.
கொலம்பியா நிறுவனத்துக்காக கவியரசு கண்ணதாசன் அவர்களும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களும் "கிருஷ்ண கானம்" என்ற பெயரில் இசைத்தட்டு ஒன்றை உருவாக்கினார்கள். கவியரசர் கண்ணதாசன் பத்துப் பாடல்கள் எழுதி மெல்லிசை மன்னர் அதற்கு இசையமைத்திருந்தார். அந்தப் பாடல்களின் இசையில் அப்படியே உருகிப் போனார் கவியரசு கண்ணதாசன். அதில் ஒரு பாடல்தான் "புல்லாங்குழல் கொடுத்த மூங்கீல்களே எங்கள் புருஷோத்தமன் புகழ் பாடுங்களே" என்ற பாடல்.
கவியரசருக்கு மிகவும் பிடித்த அந்தப்பாடலை அவர் தினமும் ஒருமுறையாவது கேட்காமல் இருந்ததேயில்லை. இரவு தூங்கப்போகும் போது இந்தப்பாடலைக் கேட்டு விட்டுத்தான் தூங்குவார். இரவு 11 மணிக்கு மேல் எம்.எஸ்.வியின் வீட்டில் தொலைபேசி அழைத்தால் கவியரசர் தான் அழைக்கிறார் என்று தெரிந்து கொள்வார் எம்.எஸ்.வி. அதனால் போனை எடுத்ததும் யார் பேசறது? என்று கேட்கவே மாட்டார்.
மறு முனையில் கவியரசர் "டேய் விச்சு, "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" என்ற பாட்டுக்கு இசை அமைச்சியே அந்தப்பாட்டத்தான் கேட்டுட்டு இருக்கேன்" என்று சொல்வார். அவரின் அந்த வார்த்தையைக் கேட்டவுடன் எம்.எஸ்.விக்கு ரொம்பவே சந்தோஷம் வந்துரும்.
"நீ எப்பக் கச்சேரியில இசை அமைச்சாலும் முதல்ல புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற இந்தப் பாட்டோட நாலு வரிகளை நீ பாடிட்டுத்தான் கச்சேரில இசை அமைக்கணும்" என்று அன்புக் கட்டளை விடுத்தார் கவியரசு கண்ணதாசன். எம்.எஸ்.வியும் அதைக் கடைபிடித்து வந்தார். கவியரசரின் மறைவுக்குப் பிறகும் கச்சேரிகளில் முதலாவதாக புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்ற இந்தப் பாடலைப் பாடும்போது "எங்கள் மதுசூதனன் புகழ் பாடுங்களே" என்ற வரிக்குப் பதிலாக "எங்கள் கண்ணதாசனின் புகழ் பாடுங்களே" என்று பாடிவிட்டுத்தான் பல கச்சேரிகளில் இசை அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் எம்.எஸ்.வி.
கவியரசரிடம் இருக்கும் நல்ல குணம் தனக்கு நிகராக விளங்கும் கவிஞர்களைப் பாராட்டுவார். அப்படி அவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் வாலி, புலவர் புலமைப்பித்தன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வைரமுத்து, பூவை செங்குட்டுவன் ஆகியோரைப் பாராட்டியிருக்கிறார்.
ஒருமுறை பாடல் எழுதும்போது படத் தயாரிப்பாளர் ஒருவர் கவியரசரிடம் நீங்க பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மாதிரி தத்துவப் பாடல்களை எழுத வேண்டும் என்று கேட்டார். அதற்கு கவியரசர் அந்தத் தயாரிப்பாளரிடம் பத்து நிமிஷம் பொருத்துக்கோங்க. இதோ வந்து விடுகிறேன் என்று எழுந்து சென்று விட்டார். இதைக் கண்டதும் அங்கிருந்த உதவி இயக்குனர்கள் அந்தத் தயாரிப்பாளரை, ஏங்க உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை? பாருங்க, அவர் கோபிச்சுக்கிட்டுப் போயிட்டார். திரும்ப வருவாரோ? மாட்டாரோ? அவர் எப்பேர்பட்ட கவிஞர் தெரியுமா? இப்ப அவரை எப்படி? எங்கேனு போய் தேடிக் கண்டுபிடிச்சி கூட்டிட்டு வருவீங்க? என்று காய்ச்சிக் கொண்டிருக்கும்போது கவியரசர் காரிலிருந்து இறங்கினார். கூடவே பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் இறங்கி செட்டுக்குள் வந்தார். கவியரசர் லேசாக சிரித்துக் கொண்டே அந்தத் தயாரிப்பாளரிடம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தைக் காட்டி இவர் மாதிரி தானே எழுதச் சொன்னீங்க. அவரையே நான் கூட்டிட்டு வந்துட்டேன். உங்களுக்கு எப்படி பாடல் வேண்டுமோ அப்படி நீங்கள் இவரை வைச்சு எழுதிக்கோங்க என்று சொல்லி விட்டு சென்று விட்டார். இப்படியான நல்ல குணம் தான் கவியரசு கண்ணதாசனை மக்கள் நெஞ்சில் நிலை பெற்றிருக்கச் செய்து இருக்கிறது.
கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கும் இடையே அழுத்தமான நட்பு இருந்தாலும் கவியரசர் கே.வி.மகாதேவன், சங்கர் கணேஷ், இளையராஜா என்று பல இசை அமைப்பாளர்கள் போட்ட டியூனுக்குப் பாடல் எழுதிக் கொண்டிருந்தார். அதேபோல் எம்.எஸ்.வியும் கவிஞர் வாலி, கவிஞர் முத்துலிங்கம், புலவர் புலமைப்பித்தன், கவிஞர் ஆலங்குடி சோமு என்று பல கவிஞர்களுக்கும் வாய்ப்புகள் கொடுத்துக் கொண்டு தான் இருந்தார்.
எம்.எஸ்.வி இல்லாமல் அவர் வெளிநாட்டுப் பயணம் சென்றதேயில்லை. அப்படி எம்.எஸ்.வியால் வரமுடியவில்லை என்றால் அந்தப் பயணத்தையே கேன்சல் செய்து விடுவார் கவியரசர். ஆனால் ஒரே ஒருமுறை மட்டும் எம்.எஸ்.வி இல்லாமல் கவியரசர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டார். அதுதான் கவியரசு கண்ணதாசன் மேற்கொண்ட அமெரிக்கப் பயணம். அதுவே அவரின் இறுதிப் பயணமுமாக அமைந்து விட்டது.
தமிழ் திரையுலகம் தந்த நல்முத்துக்கள் இவர்கள். இவர்கள் காலத்தால் அழியாத பாடல்களைத் தந்த *இந்தத் தங்கங்கள் இருவரும் ஒரே நாளில் பிறந்தவர்கள்*
*(ஜூன் 24) என்பது ஒவ்வொரு தமிழனுக்கும் பெருமை.*
*தமிழ் உலகம் உள்ளவரை இவர்கள், இருவரின் புகழும் நிலைத்திருக்கும்.*
*நன்றி: திரு R.U.சுகுமார் - நாகை.*
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக