படக்கவிதை-1:
*என் செய்தாய்?*
நெல்லையப்பன்
தாத்தா கைபிடித்து
அழைத்து வந்தாயா,
பறக்கும் முத்தம்
பாட்டிக்கு தந்தாயா,
சமையலில் அம்மாக்கு
சிற்றேவல் செய்தாயா,
அப்பாவின் சிகரெட்டை
அம்மாவிடம் மறைத்தாயா,
எடைக்கு எடை
திராட்சை பெற
என் செய்தாய்?
என் செய்தாய்!
படக்கவிதை-2:
மகிழ்தல் தான் எத்தனை எளிது உனக்கு :
மும்பை சுப்பிரமணி
மகிழ்தல் தான் எத்தனை எளிது உனக்கு
மிக உயர்ந்த பட்டங்களை தூக்க வேண்டியதில்லை
விலை உயர்ந்த முகப்பூச்சு வேண்டியதில்லை
பங்குச்சந்தையில் வைத்திருக்கும் ஷரின் மதிப்பு உயர வேண்டியதில்லை
நூற்றுக்கு நூறு மதிப்பெண்ணை பெற்றே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை
மிகப் பெரிய வெற்றிக் கோப்பையை தூக்க வேண்டியதில்லை
பதப்படுத்திய பழைய திராட்சை கோப்பையும் தேவையில்லை
சும்மா வெறுமனே பெரிய திராட்சை கொத்தை தூக்கினாலே போதும்
மகிழ்தல் தான் எத்தனை எளிது உனக்கு
படக்கவிதை -3 : உனக்கே உனக்காக ! :
திரு. பிரபாகரன்
உனக்கே உனக்காக
ஒரு பாட்டு பாட ஆசை
பாடத் தெரியாது.. அதனால் எழுதுகிறேன்.
கள்ளமில்லா மழலைச்
சிரிப்பை அத்திராட்சை குலை போல விடாது பிடித்துக் கொள்.
தரை எங்கும் திராட்சை கிடந்தாலும் கையில் இருப்பதில் மகிழ்ச்சி பொங்க சிரிக்கிறாய்..
பொறாமைப்பட வைக்கிறாய்..
எட்டிப்பார்த்து ஏமாந்த மிருகமும், சாறு பிழிந்து போதை ஏற்றும் மனிதனும் உன்னில் இல்லை..
அவை உனை அண்டாது நீண்ட நாள் நீ இருக்க வேண்டுகிறேன்..
மூவருக்கும் மனமார்ந்த நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக