30 ஜூலை, 2020

வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : ரத்தன் டாடா


ரத்தன் டாடா:

கடிகாரம் முதல் கார் வரை வியாபார சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா..!  - பொக்கிஷ பகிர்வு

உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால், அதைக் கொண்டு கட்டடம் எழுப்புங்கள்..! - இதைச் சொல்லியவர் இந்தியாவில் மட்டுமே காலூன்றியிருந்த ஒரு வியாபார குழுமத்தை உலகெங்கும் எழுப்பி, அக்குழுமத்தையே உலக சந்தையில் இந்தியாவின் அடையாளமாய் மாற்றிய ரத்தன் நாவல் டாடா.

நம் உணவில் உப்பாய், தேநீராய், நம் கையில் கடிகாரமாய், நம் செல்போனில் சிம் கார்டாய், நம் வீட்டுத் தூணில் இரும்பாய், நாம் பயணிக்கும் காராய், நம் டிவியில் டி.டி.எச்சாய், நாம் அணியும் நகையாய் ஒவ்வொரு இடத்திலும் கால் ஊன்றி தடம் பதித்த டாடா சன்ஸின் தலைவர் ரத்தன் டாடா. அவரைப் பற்றிய சிறப்புகள் இதோ..

1937ல் சூரத் நகரில் நாவல் டாடா-சுனூ தன்மதியருக்குப் பிறந்த டாடா,  தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் 1975ல் முடித்தார். அவர் அங்கு மேற்படிப்பை முடித்தவுடனேயே மிகப்பெரிய நிறுவமான IBMல் அவருக்கு வேலை கிட்டியது. ஆனால் இந்தியாவில்தான் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தோடு தாய்நாட்டிற்கே திரும்பினார்.

தனது குடும்ப நிறுவனமான டாடா குழுமத்தில் பணியிலமர்ந்தார் ரத்தன் டாடா. சொந்த நிறுவனமாய் இருந்தாலும் அடிப்படையான சிறிய பொறுப்புகளையே செய்து வந்தார் அவர். அதனால் உழைப்பின் அருமையை அறிந்திருந்தார்.

30 வருடம் டாடா குழுமத்தின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு பங்காற்றிய ரத்தன் டாடா, 1991ல் டாடா குழுமங்களின் தலைவராக, நிறுவனரும் அன்றைய தலைவருமான ஜே.ஆர்.டி டாடாவால் நியமிக்கப்பட்டார். அதன்பிறகு நடந்ததெல்லாம் உலகமே வியந்த அசுர வளர்ச்சி.

உலகையே தன்வயப்படுத்தினார்..

அதுவரை இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களுள் ஒன்றாக இருந்த டாடா குழுமத்தை உலகின் பார்வைக்கு எடுத்துச் சென்றார். 'சிறிய முன்னேற்றங்கள் பற்றி யோசிப்பது எனக்குப் பிடிக்காது' என்பார் டாடா. 'எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் மிகப்பெரிதாய் அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும்' என்று கூறுவார். அப்படித்தான் மிகப்பெரிய அடிகளை உலக மார்க்கெட்டில் எடுத்து வைத்தது டாடா குழுமம்.

உலகின் ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சந்தையிலும் தனக்கான வாய்ப்புகளை கண்டறிந்தார். இரும்பு, மென்பொருள், கெமிக்கல், தேநீர், கார்கள் என அனைத்துத் துறையிலும் அசுர வளர்ச்சி கண்டது இந்நிறுவனம். இவர் பொறுப்பேற்ற பின் டாடா குழுமம் கால் வைக்காத துறை இல்லை என்றே சொல்லலாம்.

ஆண்டுக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டிய முதல் இந்திய மென்பொருள் நிறுவனம் என்ற சாதனையைப் படைத்தது டாடா குழுமம். சொகுசுக் கார்களைத் தயாரிப்பதில் வல்லுநர்களான லேன்ட்ரோவர், ஜாக்குவார் ஆகிய கம்பெனிகளின் இந்திய உரிமையை 2008ல் வாங்கினார் டாடா. இது ஆட்டோமொபைல் உலகில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. இந்திய கார்களுக்கு வெளிநாட்டில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்தினார்.

கோரஸ் என்ற உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனத்தை டாடா வாங்க,  உலகின் முன்னனி இரும்பு உற்பத்தியாளராய் உருப்பெற்றது டாடா ஸ்டீல்ஸ். உலகமயமாக்கலால் பல நிறுவனங்கள் இந்தியாவிற்குள் காலடியை எடுத்து வைக்க,  உலக சந்தையில் சத்தமின்றி தன்னிகரற்ற ஒரு இடத்தைப் பெற்றது டாடா குழுமம்.

தற்போது இந்நிறுவனத்தின் வருவாயில் 65% வெளிநாடுகளிலிருந்துதான் ஈட்டப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கீட்டைப் பாராட்டி இந்திய அரசு இவருக்கு பத்மபூஷண் விருதும்,  பத்ம விபூஷண் விருதும் வழங்கி கௌரவித்தது.

உலகை உறையவைத்த நானோ

அனைத்து முன்னனி கார் நிறுவனங்களும் கோடிகளில் கார்களைத் தயாரித்துக்கொண்டிருக்க, மாற்றுத் திசையில் பயணித்தார் டாடா. சாமானிய மனிதனும் நான்கு சக்கர வாகனத்தில் செல்ல வேண்டும் என்று கருதினார். அதனால் உதித்ததுதான் ‘டாடா நானோ’ திட்டம். வெறும் ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வெளிவரும் என்று டாடா நிறுவனம் அறிவித்தபோது உலகமே கேலி செய்தது.

தரம் குறைவாயிருக்கும், சிறு அடிபட்டாலும் கார் நொறுங்கிவிடும் என பழித்தனர். இது நிச்சயம் சாத்தியமில்லை என்று அனைவரும் சொல்ல, அனைத்தையும் பொய்யாக்கி இந்திய சாலைகளில் நானோவை கம்பீரமாய் வலம்வர வைத்தது டாடா நிறுவனம். விலை முன்பு  சொல்லப்பட்டதை விட சற்றுக் கூட இருந்தாலும் (1.25 லட்சம்), உலகின் மிகவும் குறைந்த விலை கார் என்ற பெருமையை தனதாக்கியது நானோ.

விலை குறைவு என்றாலும் தரத்தில் எந்தக் குறையும் இல்லாமல் வெற்றிகரமான மாடலாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டது நானோ. உலகின் அனைத்து கார் கம்பெனிகளும் டாடாவிற்கு தலை வணங்கின.

பாகிஸ்தானியர் முகத்தில் அறைந்தார்

மும்பை குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட தாஜ் ஹோட்டல்களும் டாடா நிறுவனத்திற்கு சொந்தமானவையே. அவற்றை சரிசெய்வதற்காக பொது டெண்டர் விடப்பட்டபோது பாகிஸ்தானைச் சார்ந்த இரு பெரும் நிறுவனங்கள் அவற்றிற்கு விண்ணப்பித்திருந்தன.

அந்த டெண்டெரை தனதாக்கும் பொருட்டு அந்நிறுவனங்களைச் சார்ந்த இருவர் டாடாவைப் பார்க்க அவர் அலுவலகத்திற்குச் சென்றுள்ளனர். பாகிஸ்தானியர்கள் என்பதால் அவர்களை வெகுநேரம் காக்கவைத்த டாடா, பின்னர் அப்பாயின்ட்மென்ட் இன்றி யாரையும் பார்க்க முடியாது என்று மறுத்துவிட்டார். அவர்கள் இருவரும் அன்றைய தேதியில் அமைச்சராய் இருந்த ஆனந்த் ஷர்மாவை அணுக, டாடாவிடம் இதுபற்றி பேசியுள்ளார் அமைச்சர்.

அதற்கு டாடா அளித்த பதில் நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும். 'உங்களுக்கு வேண்டுமானால் இது கூசாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு அது அவமானம்' என்று டாடா கூற, அதிர்ந்து போனாராம் அமைச்சர்.

ஒரு சமயம் டாடா சுமோ கார்கள் வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு,  மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்குத் தர, ‘பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது’ என்று ஆர்டரை நிராகரித்தார் டாடா. பணம்தான் முக்கியம் என்று பலரும் அறத்தை மீறிச் செயல்பட்டாலும் பணத்தை விட தாய்நாடுதான் தனக்கு முக்கியம் என்று கருதுபவர் டாடா.

இளைஞர்கள் பலருக்கும் தொழில் நுணுக்கங்களை பயிற்று வருகிறார். சரியாக 4 ஆண்டுகள் முன்பு, இதே நாளில் டாடா குழும தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றார் ரத்தன் டாடா. மிகவும் சாந்தமான மனிதர். ஆதரவற்ற குழந்தைகளுக்கும், மாற்றுத்திறன் படைத்தவர்களுக்கும் தனது தொண்டு நிறுவனம் மூலமாக பல உதவிகளைச் செய்து வருகிறார். எதையும் நேரடியாகப் பேசுவார் டாடா.

'நீங்கள் ஏன் கல்யாணம் செய்துகொள்ளவில்லை ?' எனக் கேட்டதற்கு '4 முறை கல்யாணம் செய்யும் நிலைக்குச் சென்று, கடைசியில் அது நிறைவேராமல் போனது. எனக்கு 4 காதல் தோல்விகள் உள்ளது' என்று சிரித்துக்கொண்டே வெளிப்படையாகச் சொன்னார் டாடா. ஆனால் அவையெல்லாம் அவரது சிந்தனையை சிதறடிக்கவில்லை. அவரது தொலைநோக்குப் பார்வைகளை சிதைக்கவில்லை.

முன்னற்றம் என்பதை மட்டும் மூச்சாய்க் கொண்டு, இன்று வரை அம்முன்னேற்றத்தை பார்த்துக்கொண்டிருக்கிறார் டாடா. உலக சந்தையில் இந்தியாவிற்கு ஓர் அந்தஸ்ததை ஏற்படுத்திக் கொடுத்ததிலும், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கும் டாடா குழுமத்தின் பங்கும்,  ரத்தன் டாடாவின் பங்கும் அளப்பறியது.  

'என்னால் இறக்கை விரித்து பறக்க முடியாத நாளே, என் வாழ்க்கையின் சோகமான நாள்' என்பார் ரத்தன் டாடா.

அவரது சிறகுகள் இன்னும் பல்லாண்டு காலம் பல இடங்களில் விரிந்து பறக்கட்டும்..!

*தமிழ்க் களஞ்சியம்* -  http://bit.ly/2jsKWgA


நன்றி : தமிழ்க் களஞ்சியம் மற்றும் திரு அரவிந்தன் குமார், படித்ததில் ரசித்தது, முகநூல்.

கருத்துகள் இல்லை: