மதுரையில் ஒரு அபூர்வ தம்பதியினர்!
""""""'""'""""""""""""'"""''"'"""''""''"""''"""'"'""""''""'''""""
இதுவும் கொடுப்பர், இன்னமும் கொடு்ப்பர்.
தேவைக்கு மேல் இருப்பதைத் தருவது தர்மம் அல்ல; தேவைகளைக் குறைத்துக் கொண்டு கொடுப்பதே எங்கள் தர்மம் என்று இன்றும் வயதான இந்தக் காலத்தில் டவுன் பஸ்சில் பயணிக்கும் மூத்தத் தம்பதியினர் தங்களது கோடிக்கும் அதிகமாக சொத்துக்களை தர்ம காரியத்திற்குக் கொடுத்துள்ளனர். இன்னமும் இன்றும் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்....
மதுரை திருநகரைச் சேர்ந்த அந்தத் தம்பதிகளின் பெயர் ஜனார்த்தனன்-ஜலஜா! இப்போது இவர்களுக்கு வயது 75 மற்றும் 68. மத்திய அரசுப் பணியில் ஊழியர்களாக இருந்த இவர்கள் தொண்டு செய்வதற்காகவே விருப்ப ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்ற போது கிடைத்த பணத்தைக் கொண்டு திருநகரில் ஐந்து கிரவுண்டு இடத்தை வாங்கிப்போட்டனர். அதன் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கு மேலாகும்.அதில் முதியோர் இல்லம் நடத்தலாம் என்று முடிவு செய்திருந்தனர். ஜனார்தனனுக்கு சற்று திடீரென பார்வைக் கோளாறு ஏற்படவே, தாம் முதியோர் இ்ல்லம் நடத்தமுடியாது; நடத்துபவர்கள் யாருக்காவது இடத்தைக் கொடுத்துவிடலாம் என முடிவு செய்தனர்.
அந்த நேரத்தில் டாக்டர் பாலகுருசாமி உள்ளிட்ட சில இளம் டாக்டர்கள் ஒன்று சேர்ந்து ‛ஐஸ்வர்யம் அறக்கட்டளை' என்ற அமைப்பினைத் துவங்கி ஆதரவின்றி தெருவில் கைவிடப்பட்ட வயதான ஆண் பெண் குழந்தைகளைத் தகுந்த மருத்துவமும் உணவும் கொடுத்துக் காப்பாற்றி வந்தனர்.ஆனால் போதுமான இடவசதி இல்லாமல் சிரமப்பட்டனர். இதனைக்கேள்விப்பட்ட ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினர் தங்களது இடத்தை தானமாகக் கொடுத்தனர்.
ஆனாலும் மருத்துவர்கள் குழு தானமாக இடத்தைப் பெற சிறு தயக்கம்காட்டினர் , இடத்தைப் பதிவு செய்ய இரண்டரை லட்ச ரூபாய் தேவை என்பதுதான் அந்த தயக்கத்திற்குக் காரணம்.இதைக் கேள்விப்பட்ட தம்பதியினர் இடத்தைத் தானமாகக் கொடுத்ததுடன் நி்ற்காமல் தங்களது சேமி்ப்பில் இருந்த பணத்தை எடுத்து இரண்டரை லட்ச ரூபாய் செலவு செய்து இடத்தையும் பதிவு செய்து கொடுத்தனர்.
இடம் கிடைத்துவிட்டது; இனி இதில் கட்டிடம் கட்டவேண்டுமே என்ற நிலை வந்த போது, மீண்டும் இதே தம்பதியினர் தங்களது வெளிநாட்டு, உள்நாட்டு உறவுகள், நட்புகளிடம் விஷயத்தைச் சொன்னதும் நிதி வந்து சேர்ந்தது; இரண்டு மாடிக் கட்டிடமும் கட்டப்பட்டது.
கட்டிடம் கட்டியாகிவிட்டது நோயாளிகள் படுக்க படுக்கை வேண்டுமே என்ற சூழ்நிலையில் கொஞ்சமும் தயங்காமல் ஐம்பது கட்டில்கள் வாங்கித் தந்தனர். இதை எல்லாம் நிர்வாகம் செய்ய இரண்டு கணினிகள் வேண்டும் என்ற போது "இந்தாருங்கள்... வாங்கிக் கொள்ளுங்கள்" என்று அதையும் வாங்கிக் கொடுத்தனர்.
இப்படி இதுவும் கொடுப்பான்; இன்னமும் கொடுப்பான் என்ற கர்ணனைப் போல தர்ம காரியத்திற்குக் கொடுத்துக் கொண்டே இருக்கும் இந்தத் தம்பதியினர் பெரிய பணக்காரர்களா என்றால் இல்லை; மத்திய அரசு வழங்கும் பென்ஷன் பணத்தில்தான் வாழ்க்கையை நடத்துபவர்கள். எங்காவது போகவேண்டும் என்றால் கால் டாக்சியில் போனால் கூட காசு செலவாகும் என்று நினைத்து, டவுன் பஸ்சில்தான் இப்போதும் போய்வந்து கொண்டு இருக்கின்றனர்.
வீட்டு வேலைக்கு ஆள் கிடையாது; தங்களது வேலைகளைத் தாங்களேதான் செய்து கொள்கின்றனர். அக்கம் பக்கம் இருக்கும் குழந்தைகளை அழைத்து மாலை நேரங்களில் தங்களது அறிவைப் பகிர்ந்து கொண்டு இலவச ட்யூஷன் எடு்க்கின்றனர். பிறகு நேரம் கிடைக்கும் போது ஐஸ்வர்யம் அறக்கட்டளைக்குச் சென்று அங்குள்ளவர்களிடம் அன்பாக
அரவணைப்பாகப் பேசி ஆறுதல் தந்து வருகின்றனர். தங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரிடம் பேசினாலும், தர்மம் செய்யச் சொல்லி வலியுறுத்தி அந்தத் தர்மத்தை ஐஸ்வர்யம் அறக்கட்டளை உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் பெறச் செய்கின்றனர்.
இவர்களின் தயவால் இப்போது வாழ்வின் விளிம்பு நிலையில், மரணத்தின் வாசலில் இருப்பவர்கள் என்று யாருமே கவனிக்காமல் குப்பையாக வீசியெறியப்பட்ட ஆண்,பெண் முதியவர்கள் 47 பேர் ஐஸ்வர்யம் அறக்கட்டளையில் தங்கி கடைசி காலத்தை நிம்மதியாகக் கழித்து வருகின்றனர். இன்று 21-7-2020 அவர்களில் ஜலஜா அம்மாவிடம் காலை தொலைபேசியில் பேசினேன்.
இப்போதும் ஆண்டுக்கு ரூபாய் ஒன்றரை லட்சம் நிதியாக வழங்கி வருவதாக உற்சாகமாகத் தெரிவித்தார்கள்.. "எங்களுக்குக் குழந்தைகள் கிடையாது. ஆனால் அறக்கட்டளையில் தங்கி வாழும் 47 பேரும் எங்கள் குழந்தைகள் தான்" என்றார் அப்போது. கொரானா தீநுண்மி பாதிக்கப்பட்ட இந்தக் காலத்திலும் இவர்கள் விடாமல் தொண்டைத் தொடர்வது ஆச்சரியமாக இருக்கிறது!
"தேவைக்கு மேல் அல்ல தேவைகளைக் கூடக் குறைத்துக்கொண்டு கொடுத்துப் பாருங்கள்! அதன் சுகமே தனி" என்று சொல்லும் இந்தத் தம்பதியை நீண்ட ஆயுளோடு வாழ, வாழ்த்துவோம்!
நன்றி : திரு.பைபாஸ் பால.சுகுமார், மதுரை, ஆனந்தவிகடன் வாசகர் குழுமம் மற்றும் முகநூல்.
போற்றுதலுக்குரிய ஜனார்த்தனன்-ஜலஜா தம்பதியினருக்கு பணிவான வணக்கங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக