31 ஜூலை, 2020

சட்டசபையில் முத்துலட்சுமி ரெட்டியின் கேள்வி!


சட்டசபையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் ஒரு தில்லான கேள்வி!!!

தமிழக சட்டசபை வரலாற்றில் இதற்கு முன்பும் பின்பும் இதை விட வீரியமிக்க கேள்வி எப்போதாவது எழுப்பப்பட்டிருக்குமா? எனில் அரசியல் அறியாதவர்கள், சபை நடப்பை உற்றுக் கவனிக்காதவர்கள் எவருக்கும் பதில் சொல்வது சற்றுக் கடினமே. ஆயினும் ஒரு பெண்ணாக இவரது கேள்வியானது, கேள்வி கேட்கும் உத்வேகம்  கொண்ட அத்தனை பெண்களுக்கும் மேற்கோள் காட்டத்தக்க வகையில் ஒரு முன்மாதிரி வினா என்று சொன்னால் மிகையில்லை.

இன்றைக்கு ஒழிக்கப்பட்டு விட்ட 'தேவதாசி முறை' பற்றி சட்டசபையில் அன்று விவாதிக்கப்படுகிறது. பெண்களை விபச்சாரத்தில் தள்ளும் முனைப்புடன் செயல் பட்டுக் கொண்டிருக்கும் "பொட்டுக் கட்டுதல்" எனும் வழக்கத்தை தடை செய்ய வேண்டும் என்று கோரி இந்தியாவின் முதல் பெண் சட்ட மன்ற  உறுப்பினர் எனும் பெருமை பெற்ற டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி சட்டசபையில் குரல் எழுப்பினர். அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் சத்யமூர்த்தி அவர்கள் "தேவதாசி முறை என்பது கடவுளுக்குத் தொண்டு செய்வதற்காக பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வரப்படும் ஒரு கோயில் சார்ந்த நடைமுறை அதை ஏன் தடை செய்ய வேண்டும் என்கிறீர்கள்?" என்று பதில் கேள்வி எழுப்பினார். அதற்கு முத்துலட்சுமி ரெட்டி அளித்த பதிலில் காந்தாரி மிளகாயை விடக் காரம் அதிகமிருந்தது.

’அப்படி கடவுள் சார்ந்த புனிதமான ஒரு நடைமுறையில் பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பெண்கள் மட்டும் தான் ஈடுபடுத்தப்படவேண்டுமா? ஏன் உயர்சாதி பெண்களும் இந்த நடைமுறையில் ஈடுபடுத்தப் படலாமே’ என்றார். இந்த பதிலில் சட்டசபையே அதிர்ந்து சில நிமிடங்கள் இயங்க மறந்தது. அவரது வீரியமிகுந்த பல சட்டசபை விவாதங்களின் பின் தான் குறிப்பிடத்தக்க அந்த பழங்கால கொடுமை அடுத்த தலைமுறைப் பெண்களை அணுகாமல் அகன்றது. இது பாதிக்கப்பட்ட பெண்களைப் பொறுத்தவரை வரலாற்றுப் புகழ் மிக்க சமுதாய புரட்சி. இதற்கு வித்திட்டவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார்.

இதில் கவனிக்கப்பட   வேண்டிய விஷயம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் தாயார் இசை வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். தந்தை பிராமண குலத்தவர். இசை வேளாளர் உள்ளிட்ட மேலும் பல பிற்படுத்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த  பெண்கள் 'பொட்டுக்கட்டும்  வழக்கத்தால் அன்று பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். பெண்களின் சுய விருப்பமின்றி வெகு இளமையிலேயே அவர்கள் கோயில்களின் பெயரால் தெய்வத்தின் பெயரால் பொட்டுக் கட்டப்பட்டு புனிதமான கோயில் காரியங்களில் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறிக்கொண்டு பெரும்பாலும் அதிகார வர்க்கத்தினரின் பலாத்காரத்திற்கு உள்ளாகிக்  கொண்டிருந்தனர். இதைத் தடுக்க  நிச்சயம் ஒரு சட்டம் வர வேண்டும். அதற்கு நிச்சயம் தொடர்ந்த போராட்டம் வேண்டும். அதை யார் செய்வது? சமூகச் சீர்திருத்தத்திற்காக எவர் போராட வரினும் அது பாராட்டுதலுக்குரியதே. ஆயினும் பிரச்சினையால் பாதிக்கப்படுபவர்களே நேரடியாகக் களத்தில் இறங்கினால் போராட்டம் இன்னும் வலுவாக இருக்கும் அதற்கான பலனும் உறுதியானதாக இருக்கும் என்பதற்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் சமூகப் போராட்டம்  ஒரு மிகச் சிறந்த உதாரணம்

 ஜூலை 30. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாள். தேவதாசி முறை ஒழிப்பு  மட்டும் அல்ல அநாதரவான பெண்கள் மற்றும் குழந்தைகளைக் காக்க "அவ்வை இல்லம் " அமைத்தது. புற்று நோயால் பாதிக்கப்பட்டு கை விடப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அடையாறு புற்று நோய் மையம் அமைத்தது, இப்படி அவரது ஒவ்வொரு சமூகப் பங்களிப்பும் இன்றைய பெண்கள் வியத்தகு உதாரணம் கொள்ளத் தக்கவையே! இந்தியாவின் முதல் பெண் மருத்துவர், இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் இவை மட்டுமல்லாது அவரது ஒட்டுமொத்த சமூக சீர்திருத்தச் சாதனைகளுக்காக இந்திய அரசு 1952 ஆம் வருடம் 'பத்ம பூஷன்' விருது அளித்து கௌரவித்தது.

இன்று அவரது பிறந்த நாளில் அவரை நினைவு கூர்தல் நமது கடமை


நன்றி : திரு பிரபாகரன், புதிய தகவல்கள், முகநூல்.

கருத்துகள் இல்லை: