29 ஜூலை, 2020

நூல் நயம் : எஸ்ராவின், 'நீரிலும் நடக்கலாம்"

இன்றைய வாசிப்பு "நீரிலும் நடக்கலாம்". எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் எழுதியது
உயிர்மை பதிப்பகம் வெளியீடு .
விலை ரூபாய் 130/- 
மொத்த பக்கங்கள் 168 .
முதல் பதிப்பு 2014.

    விழித்திருப்பவனின் இரவு, உபபாண்டவம் ,நெடுங்குருதி ,உறுபசி இன்னும் பல நூல்கள் எழுதி தமிழ் நாடெங்கும் ரசிகர்களை கொண்டவர் 
எஸ் .ராமகிருஷ்ணன் அவர்கள்.
   இந்த சிறுகதைகள் மௌனத்தில் உறைந்துபோன மனிதர்களின் வாழ்க்கையைச் சுட்டிக் காட்டுகின்றன.
     ஒரு கதையில் ஆன்டன் செகாவ் முக்கிய பாத்திரமாக வருகிறார் .அவர் சந்திக்கும் மனிதன் வழியே செகாவு கொள்ளும் அனுபவம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. தமிழிலக்கியத்தில் ஒரு பாத்திரமாக வைத்து எழுதப்பட்ட கதை இதுவே.
      குறுங்கதை ,சிறுகதை, நீள் கதை, தனிமொழி உரையாடல் மட்டுமே கொண்ட கதை ,மிகை புனைவு , மறுகதை,விந்தை
 என எத்தனையோ மாறுபட்ட கதை கூறும் முறைகளில் புனைவின் முடிவில்லாத சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுகிறார் எஸ். ராமகிருஷ்ணன்.

      நவீன சிறுகதைகளின் பரப்பை முற்றிலும் புதியதொரு தளத்திற்கு கொண்டு சென்று இருப்பதே இந்த தொகுப்பின் தனிச்சிறப்பு.

   *****
எஸ் .ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் இவ்வாறு கூறுகிறார்: நீரிலும் நடக்கலாம் எனது பதினான்காவது சிறுகதைத்தொகுப்பு. இந்த கதைகளை இப்புதிய திறப்பு என்றே சொல்வேன். ஒவ்வொரு தொகுப்பும் ஒரு காலகட்டத்தில் எனக்கு இருந்த மனநிலையில் சாட்சியே. முந்தைய கதைகளில் இருந்து விலகி புதிய திசை நோக்கி எனது கதைகள் பயணிக்கத் துவங்கி இருப்பதன் அடையாளமாகவே இந்த தொகுப்பை கருதுகிறேன் .
        அந்த வகையில் இந்தத் தொகுப்பு பிரதானமாக இரண்டு மையப்புள்ளிகளை கொண்டிருக்கிறது. ஒன்று எழுத்து, எழுத்தாளன் ,அவன் சந்திக்கும் உலகம் மற்றொன்று பெண்களின் எளிய ஆசைகளும் அது தோற்றுப்போகும் தருணங்களும் அதன் விளைவாக உருவாகும் துயரையும் பற்றிய கதைகள்.
   இந்தத் தொகுப்பின் வரையறைக்குள் அடங்காத கதை என்று ஒரு பல் போதும் கதையை கூறுவேன். அதுவே அடுத்த தொகுப்பிற்கான திறவுகோல் என்று கருதுகிறேன் .காலணிமயமாக்கம் நமக்கு ஏற்படுத்திய பாதிப்புகள் குறித்த கோபமும் ஆற்றாமையும் எனக்குள் இருக்கின்றன. அதன் வெளிப்பாடே இந்த சிறுகதை.
   புனைவும் நடப்பும் ஒன்று கலந்தே வாழ்க்கை இருக்கிறது .இதுபோலவே புனைவிற்கு எதார்த்த உலகம் சுவையூட்டுகிறது. இந்த கதைகள் அதன் பாதிப்பில் உருவானவையே .
      செகாவ் வை சந்திக்கச் செல்லும் இளம் எழுத்தாளனாக நான் இருந்திருக்கிறேன். மானசீகமாக நான் சந்தித்திருக்கிறேன், உரையாடியிருக்கிறேன், அவர்களை,ருஷ்ய எழுத்தாளர்களை குருவாகக் கொண்ட ஏகலைவன் ஆக என்னை உணர்கிறேன். என்று எஸ் ராமகிருஷ்ணன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.
****
 இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள் இருக்கின்றன .
ஆண் மழை 
கற்பனை சேவல் 
நீரிலும் நடக்கலாம் 
அவளது வீடு 
செகாவின் விருந்தாளி 
தனலட்சுமியின் துப்பாக்கி 
பதினாறு டைரிகள் 
எம்பாவாய் 
ஒரு பல் போதும் 
வானோர் 
வெறும் இருட்டு 
காப்காவிற்கு செண்பக வல்லியைத் தெரியாது.
 ரயில் நிலையத்தில் ஒருவன் 
இரண்டாவது புலி 
இன்னும் சில கிளைகள்....
******
கதைகளைப் படிக்கும்போது எனக்கு ஒரு சில நினைவு ஓட்டங்கள் .இது முழுமையும் கற்பனையா அல்லது எங்கோ கேட்டு தெரிந்து கொண்ட சில கதைகளை கற்பனையை புகுத்தி எழுதப்பட்டவையா அல்லது ஆசிரியரின் அதீத கற்பனை தீண்டலா என்று யோசித்தேன் .வாழ்க்கை என்பதும் கதை என்பதும் இரண்டும் ஒன்றுக்கொன்று பிணைந்து பிரிக்க முடியாதது .கற்பனை அற்ற வாழ்க்கை வாழ்க்கை இல்லாத கற்பனை ஒன்றும் சுவைக்காது ,கவைக்கு உதவாது.
       கதையை படிக்க எடுத்தவுடன் கீழே வைக்காமல் முழுமையாக படித்தேன். சில கதைகள் என்னை மிகவும் பாதித்தது. எம்பாவாய் ,ஆண் மழை ,சகாவின் விருந்தாளி ,16 டைரிகள் இன்னும் ஓரிரு கதை என்னை மிகவும் பாதித்தது .எனக்கு நடந்தது போல இருக்கிறது .என்னுடைய,என்னுள் ஏதோ நடந்தது போல இருக்கிறது .இந்தக் கதைகளை எல்லாம் வாசிக்கும் பொழுது நாமும் கூட ஒரு கதை எழுதலாம் என்கிற எண்ணத்தை உண்டாக்கும் வண்ணம் ஆசிரியரின் கைவண்ணம் புத்தகம் முழுவதும் பரந்து கிடக்கிறது.
   ஒருமுறை அல்ல இருமுறை பலமுறை வைத்து போற்றி பாதுகாத்து படிக்கப்பட வேண்டிய நூல் என்பது எனது எண்ணம்., பொழுது போகத்தான்.
*****
1)ஆண் மழை .
மழையில் ஆண்மழை ,பெண்மழை  ஆசிரியர் அற்புதமாக விளக்குகிறார். ஆண் மழை என்றால் என்ன என்று இதில் வரும் கனத்த மழை சொல்லும்.
      நாயகன் நாயகனின் தந்தை இருவரும் மழை பெய்தால் அது அந்த அளவு தினமும்  குறித்து தனி நோட்டுப் புத்தகத்தில் குறித்து வைத்துக் கொள்ளும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். வானிலை ஆய்வு இயக்குனர் கூட தனது பணி நிமித்தம் மழை அளவு குறித்து வைத்து கொள்வார்களே அன்றி ,தனிப்பட்ட முறையில் தமக்காக குறித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக நான் அறியவில்லை .
     நான் கூட பணி நிமித்தம் ஒவ்வொரு மாதமும் பெய்த மழை அளவு காற்றின் அளவு மற்றும் வானிலை விபரம் குறித்து மாதாமாதம் எனது மேலதிகாரிக்கு அறிக்கையாக  தெரிவித்துக் கொண்டு இருந்தேன் .ஒருமுறை சோழவரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது தான் எனது பணி காலத்திலேயே அதிகபட்சமாக மழை பொழிய கண்டேன் .
    மழை என்றாலே ஒவ்வொரு ஆண் மகனுக்கும் பெண்மை வந்துவிடும்; ஒரு ஒரு பெண்ணுக்கும் ஆண் தன்மை வந்துவிடும் என்று எனக்குள் ஒரு ஐயம் எப்போதுமே உண்டு .
   இந்த கதையின் ஆசிரியர் மழை அளவு குறிக்கின்ற தந்தையையும் மழை அளவு குறிக்கின்ற மகனையும் பற்றிக் குறிப்பிடுவார் .மழை அளவு குறிக்கின்ற தந்தைக்கு யாருக்கும் தெரியாமல் 
தனிவீடு, சின்ன வீ்டு கேரளாவில் இருந்ததாகவும் அவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருந்ததாகவும் மகன் அமெரிக்கா வாழும்போது தெரிந்து கொள்கிறார் .
இந்த விஷயம் அவரின் அம்மாவுக்கு மட்டும் தெரிந்தது ,தெரிந்திருக்கிறது ;அம்மா மூலமாக மனைவிக்கும் தெரிந்திருக்கிறது. மனைவி மூலமாகவும்,தற்போது தந்தையின் கடிதம் மூலமாகவும் தற்போது மகன் தெரிந்து கொள்வதாக ஆசிரியர் கதை முடிப்பார் .
     ஒவ்வொருவரின் வாழ்விலும் ஒரு மர்ம முடிச்சை அவிழ்த்தும் ,அவிழ்க்காமலும்,மறைத்தும் மறைக்காமலும் மழை புரிந்து கொண்டுதான் இருக்கிறது.
     "நிறைய விஷயங்களை  ஏற்றுக்கொள்வதை தவிர வேறு வழி இல்லை .இந்த ஊர் மழை அதைத்தானே கற்றுத் தருகிறது "என்று அவன் மனைவி சொல்வதாகக் கதை முடிகிறது.
2) "எம்பாவாய் ".
பெண்களுக்கு மிகவும் பிடித்தமான கதை இது .எனது ,எனக்குள் இருக்கின்ற பெண் தன்மை 60 சதம் என்பதால் எனக்கும் இந்த கதை பிடித்துப் போனது .அம்மாவின் கடிதத்தை பிற்காலத்தில் வாசிக்க நேரும் என்ற ஒரு மகன் மனம் எப்படி இருந்தது என்றும் அவனின் அம்மா அவளது வாழ்க்கை பருவத்தில் எப்படி இருந்தாள், எத்தனை புத்தகங்களைப் படித்தாள் ,அவள் மனநிலை என்ன என்பது குறித்து இந்த கதை சொல்கிறது .ஸ்ரீவில்லிபுத்தூரில் நடக்கின்ற கதை தளம் .சுமார் ஐம்பது,அறுபது வருடங்களுக்கு முன் 
நடந்த கதையாக குறிப்பிடப்படுகிறது. ஆத்திரம் தீர இயற்கை உபாதையை கழிக்க கூட பெண்களுக்கு இடவசதி இன்மையை ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
     கதையை படித்து முடித்த பிறகு எனக்கும் எனது அம்மாவின் நினைவு வரத்தான் செய்கிறது.
3) "செகாவின் விருந்தாளி"
 செகாவ் காலத்தில் நடந்த கதையாக ஆசிரியர் குறிப்பிடுகிறார் .
    செகாவின் காதலியை வேலைக்காரி ஆக்கி , செகாவின் தங்கை மரியாவை தோட்ட வேலை செய்கின்றவளாவாகவும், டால்ஸ்டாய் படம் அறையில் மாட்டி இருப்பதை காட்டிய வண்ணம் இந்த ஆசிரியரே ஒரு கதையை எழுதியதாக அவரிடம் சென்று காண்பிப்பதாகவும்,ஒரு நாயை கதாபாத்திரமாக கற்பனையில் உருவாக்கி ,பிரம்மாண்டமான ஏரியை உருவாக்கி கதையை நடத்திச் செல்கிறார். இவர் அமெரிக்காவில் பயணம் செய்தபோது கண்ட ஏரியின் பிரம்மாண்டத்தை அப்படியே இந்த கதையில் புகுத்தியிருக்கிறார் .அவ்வளவு பெரியது ஏரி,."அதை பார்க்கும் போது பூமி உயர்த்திப் பிடித்து உள்ள ஒரு மதுக்கோப்பை என்று கூட தோன்றும்" என்பதாக ஆசிரியர் கவித்துவமாக வர்ணிப்பார் அந்த ஏரியை.
டால்ஸ்டாய் சொல்வதைப்போல ஒரு வரி:
"ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை என்ற டால்ஸ்டாயின் வரி நினைவுக்கு வந்து போனது "என்பதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
 செகாவின் விருந்தாளி மன மயக்கத்தை தருகிறது.
4)"நீரிலும் நடக்கலாம் ".
அவனுக்கு அவன் பெரியப்பாவை பிடிக்கும். அவன் பெரியப்பா அடிக்கடி மௌன விரதம் இருப்பார் .அவன் பெரியப்பா எப்பொழுதும் பின்னோக்கி நடப்பார் .முன் நோக்கி நடந்து அவன் பார்த்ததேயில்லை .பின்னோக்கி நடக்கும் ஒரு வைராக்கியத்தை அவர் வளர்த்துக் கொண்டுவிட்டார்.பின்னாளில் காணாமல் போய்விடுகிறார் .காசிக்கு சென்று அங்கேயே சமாதி ஆகிவிட்டதாக பின்னாளில் அவன் அறிகிறான்.

  "நீரில் நடப்பது ஒரு பெரிய வித்தை அல்ல, விந்தை இல்லை .அப்படி நடக்க ஞானியாக தான் இருக்கனும் அவசியமில்லை .மனசும் உடம்பும் ஒத்துழைத்தால் எதையும் செய்து காட்டலாம். அதை நம்ம கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்"என்று அவன் தந்தை சொல்வதாக ஆசிரியர்  எழுதுவார். மேலும் அவன் தந்தை சொல்வதாக, "ஒருத்தனை உலகம் புரிஞ்சிக்காம போயிட்டா தப்பில்லை .ஆனா வீடு புரிந்து கொள்ளாமல் போய்விட்டா அந்த வாழ்க்கை நரகம் தான். எங்க அண்ணனை ஊரும் புரிஞ்சு கிடலை ,வீடும் புரிஞ்சு கி, யாரும் புரிஞ்சுக்கல .அவனுக்கு அது ஒன்றும் பெரிய குறையாக இல்லை .அவன் மனசு எத்தனை பேருக்கு வரும் "என்று அவன் தந்தை சொல்வதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
ஒரு குடும்பத்தில் மனைவி மூலம் தீராத பிரச்சனைகளை எதிர்கொள்ளும் ஆண்களின் மனோபாவத்தை காட்டுகிறது. பிரச்சனைகள் இல்லாத ஆண்கள் இல்லை பிரச்சினைகளை உருவாக்காத பெண்களும் இல்லை.viceverse ஆகவும் இருக்கலாம்.
5) "தனலட்சுமியின் துப்பாக்கி" புதுமைப் பெண்ணின் உள்ளத்தில் ஏற்படுகின்ற ஒரு தனித்தன்மையை ஆசிரியர் இலகுவாக கொண்டு சென்றிருக்கிறார் .புகுந்த வீட்டுக்கு வரும்போது  தனலட்சுமி ஒரு துப்பாக்கியை கொண்டு வருகிறார். பிடிக்காத புகுந்த வீட்டுப் பெண்மணிகள் புரளி பேசுகிறார்கள் .கணவனும் ஏசுகிறார் துப்பாக்கியை கழற்றி கிணற்றில் போட்டு விடுகிறான் .ஆனால் மீண்டும் அவளிடம் துப்பாக்கி இருப்பதாக அவள் சொல்லிக் கொண்டே இருக்கிறாள் . 
    முப்பது வருஷம் உடன் வாழ்வதால் மட்டுமே ஒரு பெண்ணை புரிந்துகொள்ள முடியாது என்பது அன்றுதான் நல்ல பெருமாளுக்கு புரிந்ததாக ,தனலட்சுமி கணவன் ,ஆசிரியர் குறிப்பிடுவார்.
இதுதான் கதை.
6) "16 டைரிகள்".
இந்தக்கதையில் ராமபத்ரன் சிறு வயது முதல் டைரி எழுதும் பழக்கம் கொண்டிருந்தார் ஓய்வு பெற்ற பின் பழைய டயர்களை எடுத்து புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார் தீவைத்து கொடுத்து விடலாமா என்று யோசிப்பார் யாரும் இல்லாத போது பழைய டயர்களை ஒவ்வொன்றாக எடுத்து படிக்க ஆரம்பிப்பார் பழைய நினைவுகள் அவரை வாட்டும் சில குத்தீட்டி போல.
பழைய டைரிகள் கடந்தகாலத்தின்உள்ளே இறங்கும் படிக்கட்டுகள் .அதன்வழியே நிறைவேறாமல் போன தருணங்களுக்குள் மீண்டும் பிரவேசிக்க முடியும் .உதிர்ந்த கனவுகளை கையில் எடுத்து பார்க்க முடியும் .அவமானத்தில் கசிந்து கண்ணீர் விடுவது உணரமுடியும் .நிராசைகள் தானே எழுத வைக்கின்றன .சந்தோஷமான மனிதனால் என்ன எழுதிவிட முடியும்.
   " டைரி என்பது ஒரு மாயக்கண்ணாடி. அதன் வழியே கடந்த காலத்தை மட்டும் நாம் காண்பதில்லை ,இறந்த தருணங்களை மறுபடி தன் வசமாக்கி பார்க்கிறோம் .ஒரு வகையில் இன்னொரு முறை அதே நிகழ்வில் வாழ்கிறோம்.
வாழ்க்கை அனுமதிக்க மறுத்த ஒன்றை எழுத்து அனுமதிக்கிறது .அதுவே டயரி "என ராமபத்ரன் புலம்புவதாக ஆசிரியர் குறிப்பிடுவார்.
     நானும் ஒரு சில டைரிகள்   எழுதியிருக்கிறேன் .இளம்வயதில் எழுதியிருக்கிறேன் .பின்னர் அந்த 
வழக்கம் விட்டு போனது .எப்பொழுதேனும் ஓய்வு நேரத்தில் எடுத்துப் படித்து சுவைத்து இருக்கிறேன் இந்தக் கதையில் வரும் ராமபத்ரன் போல.
7) "கற்பனைச் சேவல்."
சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சேவல்சண்டை கிராமங்களில் நடந்து கொண்டிருக்கும் அது பற்றிய கதை இது .

காயாம்பு சண்டைசேவல் ஒன்றை வளர்த்து வந்தார்.பல கிராமங்களுக்குச் சென்று சேவல் சண்டையில் கலந்து கொண்டு பல வெற்றி கொண்டுவருவார் .இந்த சேவல் வாங்குவதற்காக அந்த காலத்தில் பலத்த போட்டி .ஆயிரம் ரூபாய் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த சேவலுக்கு விலை வைத்து குறிவைத்து வருவார்கள் .இவர் யாருக்கும் தரமாட்டார் .
    இதன் காரணமாகவே தனது நல்ல குடும்பத்தை இழந்தார் ;மக்களை இழந்தார்; கட்டிய மனைவியை இழந்தார் ;சேவலையும் இழந்தார் .
   இப்பொழுது மனச்சிதைவு காரணமாக தனியே புலம்பிக் கொண்டிருப்பதாக கதை.
  .எனது பெரியப்பா மகன் ஒருவரும் கூட இது போல சண்டை சேவல் வளர்த்து,சேவல் சண்டையில் கலந்து கொண்டு வருவார் அவர் வெற்றி பெறாமல் வீடு திரும்புவதே இல்லை .தனது சேவைலை ராமபாணம் என்று சொல்வார் அவர் பெயர் கூட ராமச்சந்திரன் .அவர் கலந்து கொண்ட சேவல் சண்டையில் பல சேவல்களை கழுத்தை வெட்டி ரத்தம் வடிய வடிய செய்து வெற்றிக் களிப்போடு வீடு திரும்பி வருவார் வந்தவுடன் எல்லோருக்கும் கோழி கறி பிரியாணி ஆக்கி போடுவார் .இன்னும் எனக்குப் பசுமையாக நினைவிருக்கிறது. ஐ ஜி. எப்.அருள் அவர்கள் தமிழ்நாட்டு ஐஜியாக இருந்த போது இதற்கு தடை விதிக்கப்பட்டது.

"ஓடும் சேவலை துரத்தி ஓடுபவர் போல தாவி ஓடிக்கொண்டிருந்தார் காயாம்பு. இல்லாத சேவல் ஒன்று தனியே ஓடிக்கொண்டிருந்தது "என்பதாக கதை முடியும்.
8) "அவளது வீடு ".
தன் அப்பாவிற்கு சொந்த வீடு இல்லை என்பதன் காரணமாக தனது அம்மா பட்ட மனக்கஷ்டம் உடற்கட்டும் எல்லாம் அறிந்த இவள் நல்ல வீடு ஒன்று வாங்குகிறாள். சொந்தமாக சிறிய வீடு என்பதனால் அது அவளுக்கு பிடிக்கவில்லை .எனவே ஒவ்வொரு நாளும் புதுப்புது வீடாக வாடகைக்கு தேடிப் புறப்படுகிறாள். அங்கங்கே இருக்கக் கூடிய வீடுகளை பார்த்து உள்ளே நுழைந்து சமையலறை எப்படி இருக்கிறது ,ஹால் எப்படி இருக்கிறது என்று எல்லாம் பார்த்து கண்டு கொண்டு வருகிறாள் .
       பிறகு ஒருநாள் தனக்கு பிடித்த ஒரு வீட்டை ,சொந்த வீடு இருக்கிறது ,கணவன் பிள்ளைகளோடு வாழ்கிறாள் , இருந்தாலும் தனக்கு ,தனக்கே தனக்கு பிடித்தவாறு தன் மனதுக்குப் பிடித்தவாறு ஒரு வீட்டையும் பார்த்து அதில்தான் மட்டும் குடி வந்து இருக்கிறாள் .
    இந்த விஷயம் குடும்பத்தினருக்கு தெரிந்து அவர்கள் வீட்டை காலி செய்துவிட செய்கிறார்கள் என்பதாக கதை முடிகிறது.
  "வீடு ஆண்களுக்கு வாழ்விடமாகவும், பெண்களுக்கு வாழ்விடமாகவும் இருக்கிறது "என்று ஆசிரியர் சொல்வது மிக சரியான ஒன்று.
9) "ஒரு பல் போதும்,"
இது ஒரு புது விதமான பழிவாங்கல் போல இருக்கிறது .வீட்டுக்குள்ளேயே பழி வாங்கு வார்கள் .பக்கத்து வீட்டுக்காரனை பழி வாங்குவார்கள். தெருவிலேயே வசிக்கின்றவனைப் பழி வாங்குவார்கள். ஒரு கிராமம் மற்றும் ஒருகிராமத்தை பழிவாங்கும் .ஒரு நாடு வேறு நாட்டினை பழிவாங்கும் .
      ஆனால் இந்த கதையில் ஒரு தாத்தா தன் பேரனிடம் சொல்லி நான் சத்தியாகிரகம் செய்தபோது சுதந்திரத்திற்காக எனது இரண்டு பற்களையும் ஆங்கிலேயன் உடைத்துவிட்டான்.எனவே நீ இங்கிலாந்து சென்று அங்கு இருக்கக்கூடிய ஆங்கிலேயர் ஒருவனின் ஒரு பல்லை பிடுங்கி எடுத்துக்கொண்டு வா "என்று சொல்வார். பேரனின் நண்பன் தனது பல்லைத் தானே உடைத்துக்கொண்டு இவனிடம் கொடுத்து உன் தாத்தா ஆத்மா சாந்தி அடைய வேண்டும் இதைக் கொண்டுபோய் கொடு" என்று கொடுப்பான் .இந்த கதையை புதுவிதமான கதை என்றும் இந்தக் கதையை கொண்டு மீண்டும் வேற புதிய அத்தியாயம் தொடங்கப்படும் என்றும் ஆசிரியர் கூறுகிறார். 
தேசபக்தி காட்டுவதைப் போல இருக்கிறது இந்த கதை.
மற்ற சில கதைகள் வழக்கம்போல் சுவையாகவே இருக்கிறது .அவசியம் படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு நீரிலும் நடக்கலாம்.

நன்றி : திரு.எஸ்ரா மற்றும் திரு கருணா முர்த்தி, முகநூல்.

கருத்துகள் இல்லை: