"ஆறு மாதம்தான் இந்தப் பெண் உயிர் வாழ்வார். அதன் பிறகும் இவரைக் காப்பாற்றுவது கடினம்” என, கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து அவர் தூங்குவதாக நினைத்து பரிசோதித்த மருத்துவர், துணை மருத்துவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அந்த 30 வயதுப் பெண் 'இவ்வளவுதானா நம் வாழ்க்கை? நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைத்து இருந்தோமே, அது எல்லாம் அவ்வளவுதானா?'என்று மனதில் நினைத்து கண்களில் நீர் கசியப் படுத்திருந்தார்.
அறையினுள்ளே நுழைந்த அந்தப் பெண்ணின் தாய் தந்தையர் "அம்மா உனக்கு ஒன்னும் இல்லை. டாக்டர் சொல்லிட்டார். தைரியமா இரு"என்று அடுக்கடுக்காகப் பொய்களைச் சொல்ல ஆரம்பித்தபோது, அந்தப் பெண் தடுத்தார்.
"எல்லாம் எனக்குத் தெரியும். டாக்டர்கள் பேசிக்கொண்டதை நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன்"என்று சொன்னபோது, ஒரு மாதிரியாக சமாளித்துக்கொண்டு "அதற்கு இன்னும் 6 மாதம் இருக்கிறது அம்மா. எல்லாம் சரியாகிவிடும். பார்த்துக்கொள்வோம்" என்று தைரியம் சொன்னார்கள்.
இந்தப் பெண்ணின் பெயர் லதா மாதவி.
அவர் பிறந்த போதே சோதனை ஆரம்பித்துவிட்டது. ஏழு மாதங்களில் போலியோவால் இரண்டு கால்களும் செயலிழந்தன. பெற்றோர் தந்த தன்னம்பிக்கை, தைரியத்தால் சக்கர நாற்காலியின் உதவியோடு படித்து வங்கி வேலையில் சேர்ந்தார். மாதவி லதா பிறந்து வளர்ந்தது தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில். வங்கி வேலையில் மாற்றலாகி, இன்று சென்னையில் வசித்து வருகிறார்.
வேலை, வீடு என வாழ்க்கை மகிழ்வாக சென்று கொண்டிருந்தபோது, 2007-இல்
திடீரென தாங்கமுடியாத முதுகுவலி. அதைக் காட்ட வந்த இடத்தில் தான் அவருக்குக் கிடைத்தது டாக்டர்களிடம் இருந்து அந்த வேதனையான பதில்!
எதற்கும் ஒரு பிசியோதெரபிஸ்ட்டைப் பார்க்கலாமே எனப் பெற்றோரிடம் சொன்னார் மாதவி லதா. உடனே முன் அனுமதியுடன் பிசியோதெரபிஸ்ட் ஒருவரைச் சென்று சந்தித்தார்கள். 'இதற்கு நீச்சல் பயிற்சி பலன் தரும். முயற்சிசெய்து பாருங்கள்’ என்றார் அவர்.
ஆறுமாத காலம் தான் நமது வாழ்க்கை... எதற்கும் குளத்தில் இறங்கித்தான் பார்ப்போமே..என நீச்சல் பயிற்சி பெற ஆரம்பித்தார் மாதவி லதா. தன் செயலிழந்த கால்கள் நீரில் அசைவதைக் கண்ட மாதவிக்கு உற்சாகம் கூடியது. நேரம் போவது கூடத் தெரியாமல் நீச்சலில் மூழ்கிவிட்டார். அந்த உற்சாகம்தான் இன்று அவரை உலகறியச் செய்திருக்கிறது...
. வலி இருந்த இடம் தெரியாமல் போனது. பிறகு, மருத்துவத்துக்காக என்று இல்லாமல் மனமகிழ்ச்சிக்காக நீந்தி, படிப்படியாக முன்னேறினார்.
2010-ஆம் ஆண்டில் ஏராளமான போட்டியாளர்களைக்கொண்ட 'கார்ப்பரேட் ஒலிம்பியாட்' எனும் கார்ப்பரேட் ஊழியர்களுக்கான விளையாட்டுப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒரே மாற்றுத்திறனாளி மாதவி. தனது அசாதாரண முயற்சியால் `சிறந்த ஊக்குவிப்பாளர்' என்ற விருதைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதைத் தொடர்ந்து பல போட்டிகளில் பங்கேற்றார். சர்வதேசப் போட்டிகளில் கலந்துகொண்டு, இன்று வரை
22 தங்கம், 3 வெள்ளி, 5 வெண்கலப் பதக்கங்கள் பெற்று விட்டார் மாதவி லதா.
இப்போது தனது ‘எஸ் வீ டூ கேன் மூவ்மென்ட்’ என்கிற அமைப்பு மூலம் பிறருக்கு நீச்சல் பயிற்சி அளித்து வரும் மாதவி லதா, அந்த அமைப்பின் செயல்பாடு பற்றித் தொடர்ந்தார்...
"இதுவரை இந்த அமைப்பின் வழியாக 300-க்கும் மேல் மாற்றுத்திறனாளிகளை நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ள வைக்கும் அளவுக்கு விழிப்புணர்வைக் கொடுத்துள்ளேன். சக்கர நாற்காலியில் கூடைப் பந்தாடுபவர்கள் அமைப்பு மற்றும் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டுக்கழகத்தின் முக்கியப் பொறுப்புகளில் இருக்கிறேன்’’
‘‘விளையாட்டு என்பது மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை நிச்சயம் புரட்டிப்போடும்; வேலைவாய்ப்பும் உண்டு. மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவை ஆறுதலோ, அனுதாபமோ அல்ல... அவர்கள் மீதான உண்மையான அன்பும் அக்கறையும் வழி காட்டுதலும் தான்.ஒருமுறை கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் எங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஊக்குவித்தது மட்டற்ற மகிழ்ச்சியைக் கொடுத்தது"
“தற்போது 14 மாநிலங்களில் செயல் பட்டுவரும் WBFI அமைப்பை, மீதம் உள்ள 15 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களிலும் நிறுவி, அனைத்து மாற்றுத்திறனாளிகளின் திறமையையும் வெளிக்கொண்டுவந்து பாரா ஒலிம்பிக்ஸ், ஆசியப் போட்டிகள் என அத்தனைப் போட்டிகளிலும் இந்தியா முன்னிலையில் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை. அதற்கான முயற்சியைத் தொடர்வேன்"
...இப்படிச் சொல்கிறார் மாதவி லதா! கால்கள், முதுகு செயல் இழந்தால் என்ன தன்னம்பிக்கை கூடப் பிறந்திருக்கிறதே!🙌🙌🙌💐💐💐💐
நன்றி: கனவுகளும் காயங்களும், புதிய தகவல்கள், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக