27 ஆக., 2020

ஹோமியோபதி : உயிர் காக்கும் மருந்துகள் : அலுமினா

உயிர் காக்கும் மாமருந்துகள்-- 2

அலுமினா
ALUMINA 

மருந்தின் மூலம் ;
அலுமினா என்று அழைக்கப்படும்  அலுமினிய ஆக்சைடு  என்பது  அலுமினியம் மற்றும் ஆக்ஸிஜனின் ரசாயன கலவை ஆகும். இது பல அலுமினிய ஆக்சைடுகளில் பொதுவாக உள்ளது, குறிப்பாக அலுமினியம் (III) ஆக்சைடு என அடையாளம் காணப்படுகிறது. இது பொதுவாக அலுமினா என்று அழைக்கப்படுகிறது, மேலும் குறிப்பிட்ட வடிவங்கள் அல்லது பயன்பாடுகளைப் பொறுத்து அலோக்ஸைடு, அலோக்சைட் அல்லது அலண்டம் என்றும் அழைக்கப்படலாம்.
அலுமினியம் என்பது பூமியின்  மேலோட்டத்தில் உள்ள பல்வேறு தாதுகளில் மூன்றாவது மிக அதிகமாக இருப்பதாகும். அலுமினிய உலோக உற்பத்திக்கு அலுமினாவை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் மிகவும் பொதுவான மூலப்பொருள் பாக்சைட் ஆகும்.
பாக்சைட் வைப்பு முக்கியமாக பூமத்திய ரேகை சுற்றி ஒரு பரந்த வளையத்தில் காணப்படுகிறது.

மருந்தின் சித்திரம்;

அலுமினா ஒரு தனித்துவமான மருந்தாக இருந்தபோதிலும் ஆரம்ப நிலை மருத்துவர்களால் அவ்வளவாக மெச்சப் படாத மருந்துகளில் ஒன்றாக உள்ளது. "தாமதமான செயல்பாடு" என்பதே இதன் தனிச்சிறப்பான பண்பாகும். குறிப்பாக உடலின் உள் மட்டத்திலுள்ள மன அளவிலும் வெளி மட்டத்திலுள்ள மத்திய மற்றும் வெளிப்புற நரம்பு மண்டலத்திலும் அப்பண்பு வெளிப்படுகிறது. இதனால் மெதுவான செயல்பாடு என்ற பண்பு தொடர்ந்து இறுதியில் பாரிசவாதத்தில் முடிகிறது. இந்த நிலை மிகவும் மெதுவாகத்தான் அடைகிறது. துயரர் தனக்கு ஏற்படப்போகும் உடல்நல குறைபாட்டை நீண்ட நாட்களுக்கு உணராமலேயே இருப்பார். கால்களில் ஏதோ சொல்லமுடியாத பாரம் இருப்பதாக உணர்ந்தாலும் அது "இடப்பெயர்ச்சி இயலாமை" (Locomotor ataxia) ஆக மாறும் வரை அதைப்பற்றி யாரிடமும் எதுவும் தெரிவிக்க மாட்டார்.
மன அளவில் ஏற்படுகின்ற  தாமதமே மிகவும் கவனிக்கத்தக்க பண்பாக இம்மருந்தில் காணப்படுகிறது. விஷயங்களை அறிந்து கொள்வதில் தாமதம், தன்னுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்வதிலும் தாமதம், அதை செயல்படுத்துவதிலும் தாமதம், எல்லாம் தாமத மயம்.

மன அளவில் ஏற்படுகிற இந்த தாமதமான தன்மை அலுமினாவில் அதற்கே உரித்தான குழப்பமான நிலையில் போய் முடிகிறது. துயரர் சொல்ல வருகின்ற விஷயங்கள் தெளிவற்றதாகவும், முழுமையாக சொல்லாத மாதிரியும் இருக்கும். இருட்டில் ஒரு பொருளை தேடும்போது அதன் மீது படும் வெளிச்சம் பட்டும் படாமல் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். அவர்களின் வார்த்தைகள். தொண்டையில் விழுங்க முடியாத நிலையில் உள்ள துயரரை நீங்கள் பார்ப்பதாக கொள்வோம். அவரிடம் தங்களின் தொந்தரவை சொல்லும்படி கேட்டால், துயரர் தன்னுடைய துயரத்தை சொல்லும்போது இடையிடையே நிறுத்தியும், எதையும் தீர்மானமாக சொல்லாமலும் இருப்பார். துயரர் எதையும் சொல்ல வருவதற்கு முன்பு அதிக நேரம் யோசிப்பார். தான் என்ன நினைக்கிறாரோ அதை வெளிப்படுத்த அதற்கேற்ற சரியான வார்த்தைகளை கண்டெடுப்பதற்கு மிகவும் பிரயாசை படுவார்.
இந்த சமயங்களில் நடைபெறுகின்ற துயரத்தை வெளிப்படுத்துவதில் சிரமம் என்பதே அலுமினாவில் காணப்படுகின்ற தனிச்சிறப்பான கவனத்தில் கொள்ளத்தக்க நோய்  குறியாகும். இவ்வாறு தெளிவற்ற முறையில் துயர் குறிகளை விவரிக்கின்ற துயரங்களுக்கு நீங்களும் பல்வேறு மருந்துகளை ஆரம்பத்தில் பரிந்துரை செய்வீர்கள். ஆனால் துயரரிடம் இத்தகைய  தனிச்சிறப்பான தெளிவற்ற தன்மையும், குழப்பத்தையும் அடையாளம் காண்கிறீர்களோ அப்போதுதான் சரியான துயர் நிலைக்கு இதுவரை மருந்தினை அளிக்கவில்லை என்பதை உணரத் தொடங்குவீர்கள். அதை கண்டுகொண்ட பிறகு  அலுமினாவை கொடுத்தீர்களென்றால் நல்ல முன்னேற்றத்தை உங்களால் கண்ணார காணமுடியும்.
இந்த இந்த குழப்பநிலை மேலும் சில காலம் நீடித்தால்  வேறொரு வித்தியாசமான மனநிலையை வளர்த்தெடுக்கிறது. அது என்னவெனில் தான் பேசும்போது தன் பக்கத்தில் யாரோ பேசுவதாக துயரர் நினைப்பார் அல்லது இன்னும் வித்தியாசமாக யாரோ ஒருவர் அவருடைய காதுகளால் கேட்பதை தவிர்க்காத வரை தன் காதுகளால் கேட்கமுடியவில்லை என எண்ணிக் கொள்வார். இது ஏதோ வித்தை காட்டுவது போல் இருக்கும். எப்படியாகிலும் துயரர் நேரடியாக இந்த விஷயத்தை தெரிவிக்க மாட்டார். இதுபோன்ற சமயங்களில் அதுபோன்ற குறியை எவ்வாறு தெரிந்துகொள்வது எனில் துயரரின் மற்ற குறிகளின் அடிப்படையில் அவருக்கு அலுமினா வரலாம் என்று எதிர் பார்க்கும் பட்சத்தில் அவரிடம் நேரடியாக கேட்டு விடலாம். கேட்டவுடன் துயரர், "ஆமாம் ஐயா, தாங்கள் அதை தெளிவாக குறிப்பிட்டு விட்டீர்கள்" என்று கூறி ஆச்சரிய படுவார்.
இந்த நிலையில் துயரர் தனக்கு பைத்தியம் பிடித்து விடப்போகிறது என்று கருதுவார். உண்மையில் துயரருக்கு பைத்தியம் குறித்தான பயமாக இருக்காது, அது அவர் சம்பந்தமான முடிவு என்ற முறையில் இருக்கும். இதுவும் முன்னர் பார்த்ததைப் போன்ற ஒருவகையான தீர்மானமாகும். பைத்தியம் குறித்தான பயத்திற்கு அலுமினா முக்கியமான மருந்தல்ல.
ஒருவேளை துயரர் அதுகுறித்த பயத்தை அதிகமாக வெளிப்படுத்தினால் கண்டிப்பாக நாம் அலுமினா தேர்வு செய்வதிலிருந்து விலகி செல்ல வேண்டும்.
கடைசியில் துயரர் மிக ஆழமான நம்பிக்கை இழந்த நிலைக்கு தள்ளப்படுவார். துயரர் தனக்கு யாரும் உதவி செய்ய முடியாது என்றும் தான் ஏன் நலமாக வில்லை என்றும் கேட்பார். மேலும் தனக்கு வந்திருப்பது சாதாரண தொந்தரவுகளை விட கூடுதலானதோ என்று எண்ணுவார். ஆகையால் பல மருத்துவர்களை சந்தித்து தன் துயரத்தை முடிவுக்கு கொண்டுவர முயற்சி செய்வார். யாரும் குணப்படுத்த படுத்தாத நிலை வரும்போது அளவுக்கதிகமான நம்பிக்கை இழந்த நிலையில் தள்ளப்படுவார். ஆர்சனிக்கத்தில் காணப்படும் நம்பிக்கையின்மை என்பது இறப்பை குறித்த அதிகமான பயத்தினால் எழுவது. ஆனால் அலுமினாவில் உள்ள நம்பிக்கையின்மை என்பது ஆழமானது மட்டுமல்ல உண்மையானதும் கூட.
துயரர் மிகுந்த துயர் நிலையில் இருக்கிறார், மனநிலையோ மிகுந்த குழப்பமான நிலையில்,  இரண்டும் சேரும்போது கொஞ்சம் கொஞ்சமாக துயரர் தான் யார் என்ற சுய தன்மையை (Identity) இழக்க ஆரம்பிப்பார். இதுவே ஆரம்ப நிலை மனசிதைவு நோயின் (Schizophrenia) நோய்க்குறிகளாக காணப்படுகின்றன.
தாமதமான மன செயல்பாடு, குழப்பம், சுய தன்மையை இழத்தல், நம்பிக்கையின்மை இவையெல்லாம் மெதுவாக ஒவ்வொன்றாக ஏற்படுவதையும் இறுதியில் நரம்பியல் சம்பந்தமான சீர்கேட்டில் முடிவடைவதையும் காணமுடிகிறது. அம்மருந்தில் நோய்க்குறிகள் இந்த வகையிலேயே வளர்ச்சி அடைகின்றன என்பதை நாம் முக்கியமாக நினைவில் வைத்திருக்கவேண்டும். இந்த போக்கை வயது காரணமாகவோ, அடிக்கடி நோய்களின் தாக்குதல்களாலோ  ஏற்பட்ட உருக்குலைந்த உடல் கட்டமைப்பு கொண்ட துயரர்களிடம் நாம் பார்க்கலாம். ஆகவே அலுமினா பொதுவாக வயது முதிர்ந்த துயரர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது.
இதுவரை நான் அலுமினாவை அதன் மனம் என்ற மட்டத்திலேயே பார்த்தோம். இனி அதன் எண்ணம் என்ற மட்டத்தை பார்ப்போம். அலுமினாவிற்குள் அவசரமாக செயல்புரிய வேண்டும் என்ற எண்ணம் உள்ளுக்குள் இருந்துகொண்டே இருக்கும். மருத்துவர்.கெண்ட் இந்த குறிக்கு தன்னுடைய மெட்டீரியா மெடிக்காவில் அதிகமான அழுத்தத்தை கொடுத்தாலும் மருந்து காண் ஏட்டில் இந்த குறிக்கு சாதாரண எழுத்து வடிவத்திலேயே வரிசைப் படுத்தியுள்ளார். மரு.கெண்ட் என்ன அர்த்தத்தில் சொல்கிறார் என்றால், அலுமினா துயரரால்
தேவையான வேகத்தில் செயல்பட முடியாது என்பது ஒரு உணர்வு, அந்த துயரருக்குள் வெளி உலகத்தில் நடக்கிற எல்லா நிகழ்வுகளும் மெதுவாக நடைபெறுவது போன்று தோன்றுவதால் தான் செய்கின்ற செயல்பாடும் தாமதமாக இருப்பதாக உணர்கிறார்.
இந்த உணர்வே அலுமினாவில் காணப்படும் "நேரம் மிக மெதுவாக நகர்கிறது" என்ற குறிக்கு அடிப்படையாக அமைகிறது. அரைமணிநேரம் என்பதே ஒரு முழு நாளாக அவருக்குள் தோன்றும், நேரம் மிக மெதுவாக நகர்வதாக உள்ளுக்குள் நினைப்பார். அதனடிப்படையில் செயல்படும்போது வெளியிலிருந்து பார்க்கும் நமக்கு அலுமினா துயரர் மிகவும் மெதுவாக செயல்படுவதாக நம்மால் காண முடியும் ஆனால் அதை அவர்களால் உணர முடியாது ( குறிப்பு:- காரணம் ஆரம்பத்தில் நாம் கண்ட, விஷயங்கள் அறிந்து கொள்வதில் தாமதம் என்பதே இங்கு நேர அளவை அறிந்து கொள்வதிலும் தாமதமாக உள்ளது.)
இந்த எண்ணம் மேலும் நீடிக்குமானால் தாமத செயல்பாட்டினால், குறித்த நேரத்திற்குள் முடிக்க வேண்டியவைகள் முடிக்க முடியாததால், உள்ளுக்குள் அவசரத் தன்மை ஏற்படுகிறது. உண்மையில் அலுமினா துயரர் தன் சக்திக்கு உட்பட்டு சிறந்த முறையில் செயல்படவே முயல்கிறார். நேர அளவை அறிந்து கொள்வதில் ஏற்படுகின்ற தாமதத்தினால் செயல்பாடுகள் தாமதமாகின்றன. இந்த தாமதத்தினால் அவசரத் தன்மையும் அதன் விளைவாக பயமும் ஏற்பட காரணமாகிறது. இந்த நிலை இப்படியே வளருமானால் அந்த துயரருக்குள் ஏதோ கெட்ட விஷயம் (விபத்து அல்லது துரதிஷ்டம்) நடைபெறப் போவதாக என்ற பயம் முளைக்கத் தொடங்கிவிடும்.
இந்தப் போக்கு இறுதியாக தற்கொலை தூண்டலுக்கான மன அழுத்தத்தில் போய் சேர்கிறது. கத்தியையோ, ரத்தத்தை பார்த்தாலோ, தற்கொலை தூண்டல் என்ற நோய்க்குறி அலுமினாவில் உள்ளது. இதேபோன்ற குறி பிளாட்டினா, அர்சனிக்கம், மெர்க்குரி போன்ற மருந்துகளிலும் காணப்படுகிறது ஆனால் அவைகளில் பெரும்பாலும் மற்றவர்களை கொல்வதற்கான தூண்டலே இருக்கும் ஆனால் அலுமினாவிலோ தன்னை கொல்லும் தூண்டல் இருக்கும்.
அலுமினாவில் காணப்படுகின்ற "மன அழுத்தம்" என்பதை "வெறுமை தன்மை" என சரியாக வரையறை செய்யலாம். எவ்விதமான விளக்கமும் இருக்காது.
துயரர் தன்னுடைய துயரங்களை சொல்லும் போதும் துன்பம்கரமானதாக சொல்ல மாட்டார். அழவோ, புலம்பவோ மாட்டார். மருத்துவர் கேட்பதற்கெல்லாம் தலை காட்டுவார். குறிகளை சொல்லும் போதும் வெறுமனே சொல்வாரேயொழிய யாரையும் குற்றம் சுமத்தாத வகையிலேயே கூறுவார். துயரர் தன்னுடைய துயர்நிலையை பொறுமையாக சகித்துக்கொள்ளும் தோற்றத்திலேயே காணப்படுவார். அவர் துயர் நிலைகள் மிக நீண்ட நாட்களுக்கு மெதுவாக வளர்ந்தமையால் துயரர் அத்தகைய நிலையை உள்ளூர சகித்துக்கொள்ளும் நிலைக்கு வந்திருப்பார். (குறிப்பு:- யாவும் தன்னுடைய துயர்நிலையை புரிந்து கொள்வதில் தாமதமே காரணம்)
ஏற்கனவே தாமதமான மனச்செயல்பாடு,  தெளிவற்ற தன்மை இத்துடன் தற்போது ஏற்பட்டுள்ள பொறுமையாக சகித்துக் கொள்ளும் தன்மையும் இணைந்தால் சில நேரங்களில் துயரர் பார்ப்பதற்கு "சித்தன் போக்கு சிவன் போக்கு" என்று நிலையில் இருப்பதைப் போன்ற தோற்றத்தை அளிப்பார். அவரின் அத்தகைய எத்தன போக்கை  உங்களால் கவனிக்க முடியும். மேலும் நம்மிடம் வந்திருப்பதும் அவருடைய சுய உந்துதலின் முடிவால் அல்ல என்று கணிக்க முடியும். அவரை பார்ப்பதற்கு, "எல்லாவற்றிற்கு பிறகு நான் ஏன் இங்கு வந்தேன்?" என்ற எண்ணத்தில் இருப்பதாகவும் தோன்றும்.
தாமதமான செயல்பாடு என்ற அலுமினாவின் மையக்கரு உடல் மட்டத்திலும் எங்கும் வியாபித்து இருப்பதை காண முடிகிறது. முதலில் செயல்பாடுகளில் தாமதம், பிறகு இது தசைகளின் பலவீனமாக வளர்ச்சி அடைகிறது, இறுதியாக பக்கவாத வகையை அடைகிறது.
அலுமினாவில் உள்ள பலவீனம் என்பது கடைநிலை உறுப்புகளிலேயே (Peripheral) செயல்படுகிறது. ஏற்கனவே நாம் பார்த்ததுபோல் துயரர் தன்னுடைய துயரத்தை சொல்வதற்கான சரியான வார்த்தையைக்கூட எளிமையாக சொல்லமுடியாமல் மிகவும் போராட வேண்டியிருக்கும். இதை பார்க்கும்போது துயரரின் அந்த மன மட்டத்தின் செயல்பட்டாலும் அதன் காரணமாக அதன் விளைவுகளும் தாமதமாகவே ஏற்படுகின்றன. இந்த தாமதம் என்ற தனிச்சிறப்பான அலுமினாவின் பண்பு என்பது அதன் மலச்சிக்கலிலும் முதன்மையான எடுத்துக்காட்டாக உள்ளது. மரு.கெண்ட் விவரிப்பதை பார்ப்போம்; இலகுவான மலத்தை வெளியேற்றுவதற்கு கூட மிகுந்த சிரமப்பட வேண்டியிருக்கும். இதை துயரர் தன் வாய்மொழியாக சில நேரங்களில் சொல்வதை இவ்வாறு கேட்கலாம், "மலம் போவதற்கான நிலையில் போய் உட்கார்ந்தாலும் மலம் வருவதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாக இருக்கும். மலம் போகாமல் பல நாட்கள் கழித்துப் போனாலும் மலக்குடலில் மலம் நிறைந்து இருந்தாலும் மலம் கழிக்க முடியும் என்ற உணர்வு இருந்தாலும், ஆனாலும் அதிக நேரம் உட்கார வேண்டியிருக்கும். இறுதியாக அடிவயிற்று தசைகளை கடுமையாக அழுத்தியும், பலத்தை எல்லாம் பயன்படுத்தி முக்கியும் இவையெல்லாம் செய்தாலும் மலக்குடல் தன்னளவில் சிறிதே செயல்படுவதை உணரமுடியும்". துயரின் முயற்சி தொடரும் பட்சத்தில் உடல் முழுவதும் வியர்வையால் நனைந்து பக்கத்தில் உள்ள ஏதாவது இடத்தின் மீது சாய்ந்து தொங்கிவிடுவார். இதையும் தாண்டி பிரசவத்தில் செய்வதைப்போல் மிகுந்த பிரயாசை பட்டாலும் இறுதியில் சிறிதளவு இலகுவான மலமே வெளிப்படும். ஆனாலும் மலக்குடலில் அதிக மலம் தங்கியிருப்பதான உணர்வு இருக்கும்.
இதுபோன்ற செயல்பாட்டை நாம் சிறுநீர்ப்பையிலும் காணலாம். சிறுநீர் கழிப்பதற்கு முன்பாக வெகுநேரம் காத்திருக்க வேண்டியது இருக்கும். உணவுக் குழாயிலும் உண்ட உணவு இடையில் மாட்டிக் கொண்ட உணர்வு இருக்கும். கீழே இறங்காது.
அலுமினாவின் இந்த தனிச்சிறப்பான பண்பு முதன்மையாக பக்கவாதத்தில் அதிலும் குறிப்பாக கால்கள் பாதிக்கப்படும் போது கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. அலுமினாவின் சுய தன்மையை இழத்தல் என்பது இந்தப் பகுதியில் பொருந்துவதை நம்மால் காண முடியும். கால்கள் சுதந்திரமான போக்கில் போகும். துயரர் எவ்வளவுதான்  கடினமாக முயற்சி செய்தாலும் அவைகளை கட்டுப்படுத்த முடியாது அதைத்தான்  "இடப்பெயர்ச்சி இயலாமை" (locomotor ataxia)யில் கால்கள் ஒழுங்கற்ற முறையிலும் எங்கு போகிறோம் என்று அறியாமல் தள்ளாட்டமாக (wobbling) நடப்பதை நாம் பார்க்கிறோம். இதே கட்டுபாடற்ற தன்மையை சிறுநீர்ப்பையிலும் மலவாயிலும் காணமுடிகிறது.
அலூமினாவில் பலவீனம் என்பது வந்து அடைவதற்கு முன்பாக மரத்துப் போகும் உணர்வு அந்த பாதிப்புக்குள்ளான உறுப்புகளுக்கு வருவதை  பல நேரங்களில் நாம் பார்க்கலாம். குறிப்பாக கால்களின் பாதங்களில் மரப்பு உணர்வை காணலாம். கால்களிலிருந்து மூளைக்கு கடத்தப்படுகின்ற நரம்பு தூண்டல்களில் ஏற்படுகின்ற தாமதமே இதற்கு காரணமாக அமைகிறது. (குறிப்பு:-  நரம்பியல் தூண்டல் கடத்தலிலும் தாமதம் என்பதை நாம் அறிய வேண்டும்.)
நரம்புகளில் அனிச்சையாக செயல்படவேண்டிய தூண்டல்களில் ஏற்படுகின்ற இத்தகைய தாமத செயல்பாடு அலுமினாவில், காக்குலஸில் காணப்படுகின்ற  குண்டூசியினால் குத்துவது போன்ற உணர்வு குறியும் வெளிப்படுகிறது.
நரம்பியல் சார்பான துயரர் ஆய்வுகளில் ஒரு வித்தியாசமான அலுமினாவின் நோய்க்குறியை அடிக்கடி கவனிக்கமுடிகிறது. அதாவது கண்களை மூடினால் தலைச்சுற்றல் என்பது அந்த நோய்க்குறி. விளக்கமாக சொல்வதென்றால் நின்று கொண்டிருக்கும் ஒரு நபர் கண்களை மூடினால் கீழே விழுந்து விட ஏதுவாகிவிடும். இச்செயலிலும் புலன் உறுப்பு (கண்) சார்ந்த உணர்வு தூண்டலை மூளைக்கு கடத்தி கால்களின் சமநிலையை நிலைப்படுத்துவதற்கு தேவையான போதுமான தகவல்களை அனுப்புவதில் ஏற்படுகின்ற தாமதமே இதற்கு காரணமாக அமைகிறது.
இத்தகைய வழியில் அலுமினாவை படிக்கும்போது அது செயல்படுகின்ற எந்த உடல் பாகத்தை எடுத்துக்கொண்டாலும் நிரூபணத்தில் காணப்படுகின்ற குறிகள், எத்தன்மையுடன் செயல்படுகின்றன என்பதை நம்மால் உண்மையாக அறிந்துகொள்ளமுடியும். ஒருமுறை அடிப்படையான கருத்துருவை (Theme) புரிந்து கொண்டோமேயானால் மற்றவைகளை நம்மால் எளிமையாக விளங்கிக் கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக பாலுணர்வு சார்ந்த பகுதியில் எத்தகைய நோய்க்குறிகளை அலுமினாவில் நாம் எதிர்பார்க்க முடியும். அலுமினாவின் பலவீனமும், கட்டுப்பாடு இழந்த தன்மையும் காணப்படுவதால் உடலுறவில் விருப்பமற்ற நிலையை வெளிப்படுத்தும். ஆண்களில் விருப்பம் இருந்தாலும் முழுமையற்ற அல்லது விறைப்புத்தன்மை சிறிதும் இல்லாத நிலையே காணப்படும். பாலுறவு உறுப்புகள் தளர்ந்து இருக்கும்.
அலுமினா என்பது அடிக்கடி ஏற்படுகின்ற சளி தொந்தரவுக்கு ஒரு முக்கியமான மருந்து என்பது நாம் அறிந்ததே. இது எவ்வாறு விளக்குவது எனில் சளிச்சவ்வு படலங்களில் (mucous membranes) சளிச்சவ்வினை தொடர்ந்து கொடுக்கின்ற நரம்புகளில் ஏற்படுகின்ற ஆற்றல் இழந்த நிலையே (paralysis) இதற்கு சந்தேகமற்ற காரணமாகும். அவ்வாறு ஏற்படுவதால் தேவையான சளிச்சவ்வு சுழற்சி அல்லது மெதுவான சுழற்சி நடைபெறுகிறது. இதனால் சவ்வுப்படலத்தில் வறட்சித் தன்மை ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி தொந்தரவுகள் ஏற்படாமல் இருக்க உடலில் செயல்படுகின்ற நோயெதிர்ப்பு அல்லது தற்காப்பு அமைப்பில் குறைபாடு ஏற்படுகிறது. இதன் காரணமாக சளி தொந்தரவுக்கு எளிதில் வயப்படும் தன்மைக்கு உள்ளாகிறார். அடிப்படையில் எதிர்வினையாற்றலின் பலவீனமே இதற்கு காரணம். இதேபோன்ற நோய்க்கூறியலை (Pathology) கொண்ட சளி தொந்தரவுகளுக்கான மருந்துகள் Tuberculinum, Sulphur, Graphites, Silica, Mercury.
அலுமினாவிலுள்ள உடலியல் சார்ந்த மற்ற தனிச்சிறப்பான குறிகள், மங்கலான பார்வை, ஏறத்தாழ கண்களின் தசைகளில் உள்ள பலவீனமே காரணமாகும். தோல் மிகவும் வறட்சியாக இருக்கும். எத்தகையான தோல் புறப்பாடுகள் (Eruptions) இல்லாமல் அரிப்பு மட்டும் இருக்கும். தோல் புறப்பாடுகளில் வரண்ட பொறுக்குகளும், மூக்கில் கட்டியான பொறுக்குகளும், தொண்டையில் குறுணை அளவு பொறுக்குகளும் இருக்கும். மூக்கு சிறுநீர் பிறப்புறுப்பு போன்ற எல்லா சவ்வு படலங்களில் (membranes) சளி ஒழுகுதலும், ஒழுகுதல்கள் உள்ளமுக்கப்படுவது என மீண்டும் மீண்டும் வந்த வண்ணம் இருக்கும். (ஒரு பக்கமாக ஏற்படுகின்ற பக்கவாதமும் இம்மருந்தில் உள்ளது - பெரும்பாலும் வலது பக்கம் )
அலுமினாவில் காலை வேளைகளில் நோய்க்குறிகள் துன்ப மிகுதி (Aggravation) பெறுவது திட்டவட்டமாக உள்ளது. அதன்பிறகு துயரர் பகல் பொழுதில் மெதுவாக முன்னேற்றம் அடைவார் அல்லது பகல் முழுவதும்  பலவீனமாக பின் தங்கி இருப்பார். எப்படியாகிலும் மாலை வேளைகளில் சூரியன் மறைந்த பிறகு (Med, Lyco) நோய்க்குறிகளில் சொல்லும்படியான தணிவு காணப்படும்.
அலுமினாவில் மனதில் பதிந்து பதிந்து வைத்துக் கொள்ளவேண்டிய தனிச்சிறப்பான நோய்க்குறி உருளைக்கிழங்கினால் நோய்க்குறிகள் துன்ப மிகுதி (Aggravation) பெறுதலாகும். மேலும் மாவு சத்து உணவு, வைன், மிளகு, உப்பு போன்றவை ஒத்துக்காது.
தாமதம் என்பது மெதுவாக வளர்ச்சி அடைந்து பக்கவாதம் வரை அடைகிறது என்ற அலுமினாவில் உள்ள கருத்துரு (Theme) துயரருக்கு அம்மருந்தினை அளித்த பிறகும் வெளிப்படுவதை நாம் எதிர்பார்க்கமுடியும். மருந்து கொடுத்த பிறகு அதற்கான விளைவுகள் கிடைப்பதற்கு நாம் அதிகமான நேரம் காத்திருக்க வேண்டி வரும். அதுவும் உறுப்பமைவு சார்ந்த மாற்றங்கள் (organic changes) ஏற்படும்போது அத்தன்மையை நாம் பார்க்கலாம். எப்படி நோயாக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதோ அதேபோல் நோயிலிருந்து மீண்டு நலம் ஏற்படுத்துவதற்கும் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறது.
         ---- ஜார்ஜ் வித்தௌல்காஸ்

மருந்தின் சிறப்பியல்பு குறிகள் ;

நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏற்றது; திடீர் நோய்களில் அகோனைட்டை நினைப்பது போல நாட்பட்ட நோயாளிகளில் அலுமினாவை நினைக்க வேண்டும் என்பதற்காக அலுமினாவை "நாள்பட்ட நோய்களின் அகோனைட்" என்று அழைக்கப்படுகிறது.
வெப்பநிலை சார்ந்த குறைபாடுள்ள உடலமைப்புகளை கொண்டவர்கள் (Cal., Sil.).
பலவீனமான, வறண்ட, மெல்லிய துயரர்கள்; பிரகாசம் இல்லாத முகப்பொலிவு ; சிறிதளவே லேசான, மகிழ்ச்சியான மனநிலை;  நலமுடன் உள்ளபோதும் நோயுற்றுள்ளதாக நம்புகிற மனவாட்ட நிலை; வறண்ட,சொறி சிரங்கு வகையை சார்ந்த, அரிப்புள்ள  புறப்பாடுகள், குளிர்காலத்தில் மோசமாகும் (Petr.); சகிக்கமுடியாத, படுக்கைக்கு சென்றதும் அதன்  கதகதப்பை பெறும் போதே  முழு உடலிலும் தாங்க முடியாத அரிப்பு (Sulp.); இரத்தம் வரும் வரை சொறிந்து கொள்ளுதல், பின்னர் தொந்தரவு வலி மிகுந்ததாக மாறும்.
நேரம் மிக மெதுவாக செல்லும்; ஒரு மணி நேரம் அரை நாளாக தெரியும்
(Cann.ind.).
பகல் நேரங்களிலும், கண்களை மூடி நடக்க இயலாமை; கண்களை மூடும்போது தடுமாற்றம் மற்றும் விழுந்து விடுதல் ( Arg-n., Gels.).
அசாதாரண பசி; மாவுப் பண்டம் (starch) , சாக்கு கட்டி (chalk), கரி, இலவங்கம் கிராம்பு, காபி- அல்லது தேநீர் சக்கைகள் (tea grounds), அமில தன்மையானவைகள் (acids) மற்றும் எளிதில் ஜீரணமாகாத விஷயங்களுக்கு ஏங்குதல்- (Cic., Psor.); உருளைக்கிழங்கு ஒத்துக்காது.
பல ஆண்டுகளாக நாள்பட்ட ஏப்பங்களின் தொந்தரவு; மாலையில் மோசமாகும்.
உறுத்தலை ஏற்படுத்துகிறத (irritating) அனைத்து பொருட்களும்-உப்பு, ஒயின், வினிகர், மிளகு போன்றவை உடனடியாக இருமலை உருவாக்குகின்றன.
மலச்சிக்கல்: அதிகமான அளவு மலம் சேராதவரை மலத்தை வெளியேற்றவோ விருப்பமுமோ இருக்காது (Melil), பெரும் சிரமமும், சோர்ந்து  இருக்கையை இறுக்கமாகப் பற்றிக் கொள்ள வேண்டும்; மலம் கடினமானதாகவும், முடிச்சுகளாகவும், புன்னைவகை மரத்தின் சிறிய பழங்களை (laurel berries) போன்றதாகவும், சளியால் சூழப்பட்டிருக்கும்; அல்லது மென்மையானதாக, களிமண் போன்றும், படும் இடங்களில் ஒட்டிக்கொள்ளும் (Plat.).
மலக்குடலின் செயலற்ற தன்மை, மென்மையான மலத்தை கூட வெளியேற்ற பெரிய சிரமம் தேவைப்படுகிறது (Anac., Plat., Sil., Ver.).
மலச்சிக்கல்: செயற்கை உணவு கொடுக்கப்பட்டதின் காரணமாக பாலூட்டும் குழந்தைகளின், ;
(பாட்டிலில் செயற்கை பால் ஊட்டப்பட்ட குழந்தைகள்) மலச்சிக்கல் ; வயதானவர்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் (Lyc., Op.);   மலகுடலின் செயலற்ற தன்மையினால் கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் (Sep.).
சிறுநீர் கழிக்கும் போது வயிற்றுப்போக்கு.
மலம் கழிக்கும் போது சிறுநீர் போவதற்காக சிரமப்படுதல்.
வெள்ளைப்பாடு: காரத்தன்மை (acrid) கொண்டும்  அபரிமிதமானதாக இருக்கும், குதிகால் வரை செல்லும் (Syph.); பகல் நேரத்தில் மோசமாகும்;  குளிர்ந்த குளியல் மூலம் குறையும்.
மாதவிடாய்க்குப் பிறகு: உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்ந்து போகுதல், சிரமப்பட்டு  பேச வேண்டி இருக்கும் (Carbo an., Cocc.).
பேசுவதினால் களைப்படைதல்; மயக்கம் மற்றும் சோர்வாக, கண்டிப்பாக உட்கார வேண்டும்.
தொடர்பு படுத்தி படிக்க வேண்டியவை -
நிறைவு : பிரையோனியாவிற்கு.
தொடர் ; Bry., Lach., Sulp.
பிரையோனியாவின் நாள்பட்ட நிலைகளில் அலுமினா செயல்படுகிறது.
ஒத்த தன்மை :  வயதானவர்களின் வியாதிகளில் அலுமினா Baryta.carb., Con ஆகியவற்றிற்கு ஒத்தவையாக இருக்கும்.
மோசமடைதல்:-குளிர்ந்த காற்றில்; குளிர்காலத்தில்; உட்கார்ந்திருக்கும் போது; உருளைக்கிழங்கு சாப்பிடுவதிலிருந்து; சூப்கள் சாப்பிட்ட பிறகு; ஒருநாள் விட்டு ஒருநாள் என (alternate days) ; அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில்.
சமனமடைதல்:-
மிதமான கோடை வானிலை; சாப்பிடும்போது சூடான பானங்களை குடிப்பதினால் (Psor.); ஈரமான வானிலையில் (Caust.).
ஈய நச்சுத்தன்மையின் விளைவுகளுக்கு முக்கியமான முறிவு மருந்துகளில் அலுமினாவும் ஒன்று; வர்ணம் தீட்டுபவரின் கடுமையான வயிற்று வலிக்கு ஏற்றது; ஈயத்திலினால் (lead)  ஏற்படும் நோய்களுக்கு சிறந்த மருந்து.
                              ---- மரு. H.C.ஆலன்

மருந்தின் நலமாக்கல் ;
ஒரு பெண், 40 வயது மதிக்கத்தக்கவர்,  "Genuine contracting kidney" என்று அழைக்கப்படும் சிறுநீரக சுருங்கிய நோயினால் அவதிப்பட்டு கொண்டிருந்தார், அவ்வப்போது தரப்படும் பல்வேறு மருந்துகளின் விளைவுகளினால் நோய் நிலை அந்த சமயத்திற்கு சரியாகும். அத்தகைய முன்னேற்றம் வரும் போது  நல்ல தூக்கம் தூங்குவார், அவர் எப்போதும் திடீரென சிறுநீர் கழிக்க விழிப்பார். உடனே செல்லவேண்டும் என்று விருப்பப்படுவார், அதன் பின்னரோ சிறுநீர் கழிப்பதில் பெரும் சிரமம் இருக்கும். சிறுநீர்ப்போக்கை தூண்டும் மருந்துகள் (cantharides) அளிக்கும் போது அந்த நேரத்திற்கு நிவாரணம் அளிக்கும், 
ஆனால் நோயின் தோற்றம் மற்றும் வளர்ச்சி படிநிலைகள் (Pathogenesis) யாவும் அம்மருந்தின் கீழ் வராமல் இருப்பதால் பிற அறிகுறிகள், அப்பெண்மணிக்கு மீண்டும் மேலோங்க தொடங்கும். அவைகளை மற்ற மருந்துகள் மீண்டும் அவரை விடுவிக்கும். அவரது தூக்கம் மீட்கப்பட்டவுடன், மேலே உள்ள அறிகுறி மீண்டும் திரும்பியது. மூச்சுக் குழாயில் சளி மற்றும் இதயத்தின் படபடப்பு
(இடது வென்ட்ரிகலின் விரிவாக்கம்) பெரும்பாலும் முக்கிய அறிகுறிகளாக மாறியது. இறுதியாக, ஒரு புதிய அறிகுறி முக்கியமாக தோன்றியது.அது என்னவெனில் ஒரு சூடான இரும்பு கம்பியை கீழ் முதுகெலும்புகளின் உள்ளே செலுத்தியது போன்ற வலி ஏற்பட்டது. இந்த புதிய அறிகுறியை திரும்ப திரும்ப ஆய்வு செய்ததில் அந்த குறி அலுமினாவில் காணப்படுகிறது என்பதை உறுதி செய்துக் கொண்டேன். அவ்வாறு கண்டறிந்ததில்  இத்தகைய நாட்பட்ட கடினமான துயர் ஆய்வை மீண்டும் செய்ததில், அலுமினாவின் மற்றொரு அறிகுறி அத்துயரரில் கண்டறியப்பட்டது, அதாவது, "காலையில், எழுந்திருக்கும்போது, ​​ சிறுநீரை கழிக்க விருப்பமும் ஆனால் சிரமப்பட வேண்டி இருந்தது. மேலும் அவ்வாறு கழிக்கும் போது சிறுநீர் மிகவும் தாமதமாகவும், ஆனால் கழிப்பதற்கு தேவையான பலமில்லாமல் சோர்வாகவும் மிக மெல்லிய நீர்த்தாரை போல் வெளியேறும் ". சில நேரங்களில் அவர் சிறுநீர் கழிக்க இரவில் அடிக்கடி எழுந்திருக்க வேண்டும், அப்போது அது அதிக வெளிர் தன்மையான சிறுநீர்  என்பதையும் கண்டறியப்பட்டது. 
இத்தகைய குறிகளை உறுதி செய்த பிறகு மருந்தான அலுமினாவை, ஒரு வேளை, CM வீரியத்தில்  அளிக்கப்பட்டது. அதன் பின்னர் துயரரின் நிலையின் முன்னேற்றம் படிப்படியாக மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அப்போதிருந்து சிறுநீர் கழிக்க இரவில் எழுந்திருப்பதில்லை. மேலும் அவர் காலையில் எழுந்தவுடன், மிகவும் சாதாரணமான சிறுநீர் சுதந்திரமாக எவ்வித சிரமமுமின்றி கழித்தார், அவரின்  ஆரோக்கியம் மீட்டெடுக்கப்பட்டது.
-                      ---S.M.குணவந்தே

தமிழாக்கம் மற்றும் தொகுப்பு :- நேயம் சத்யா

இந்த கட்டுரையின் மீதான மேலான கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறேன்...
நன்றி!!!

நன்றி : S.M.குணவந்தே, 
நேயம் சத்யா மற்றும் 

கருத்துகள் இல்லை: