3 செப்., 2020

தமிழக வரலாற்றில் முத்திரை பதித்தவர்கள் : மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை: தமிழ் இலக்கணத் தாத்தா

மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை: தமிழ் இலக்கணத் தாத்தா

ஆகஸ்ட் 31: தமிழ் இலக்கணத் தாத்தா மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை பிறந்த தினம்.

சென்னை சைதாப்பேட்டைக்கு அருகில் உள்ள மேட்டுப்பாளையத்தில் பிறந்தார் (1896). சைதாப்பேட்டை மாதிரிப் பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். வறுமையால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு அஞ்சலகத்தில் உதவியாளராகவும், ஒப்பந்த அலுவலகத்தில் எழுத்தராகவும் பல்வேறு வேலைகளைச் செய்தார்.
* சிறுவயது முதலே தமிழின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தமிழறிஞர்கள் கா.ர.கோவிந்தராச முதலியார், கா.நமச்சிவாய முதலியார், எம்.தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோரிடம் இலக்கண, இலக்கியங்களைக் கற்றார். கலா நிலையம் கேசாச்சல ஐயர் நடத்திய இரவுப் பள்ளியில் ஆங்கிலம் கற்றார். வித்வான் தேர்விலும் தேர்ச்சி பெற்றார்.
* 1920-ல் சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியிலும் புரசைவாக்கம் பெப்ரீசியஸ் உயர்நிலைப் பள்ளியிலும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றினார். புரசைவாக்கம் குருகுல மதக் கல்லூரியில் இந்துமதச் சித்தாந்தப் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். அப்போது அங்கு பயின்ற பல ஜெர்மானியர்களுக்குத் தமிழ் போதித்தார்.

காரிகை கற்றுக் கவிபாடுவதைக் காட்டிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’ என்றொரு சொல்வழக்கு உண்டு. தமிழின் யாப்பிலக்கணத்தைக் கற்பதற்கும் புலமை பெறுவதற்கும் ஏகப்பட்ட இடர்ப்பாடுகளைக் கடக்க வேண்டிய காலமும் ஒன்றிருந்தது. பெரும்புலவர்களின் அணுக்கச் சீடர்களாக இருந்து, மரபிலக்கியங்களையும் இலக்கண நூல்களையும் மனனம் செய்துதான் ஒருவர் பாவகைகளை இயற்றும் திறனை வளர்த்துக்கொள்ள முடியும்.

தமிழில் அச்சு நூல்கள் பரவ ஆரம்பித்த இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நிலை மாறியது. இலக்கண இலக்கிய நூல்கள் எல்லோர் கைகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. இலக்கிய நூல்களைப் போலவே இலக்கண நூல்களைப் பதிப்பிப்பதிலும் சில தமிழறிஞர்கள் உழைப்பைச் செலுத்தினர். அவர்களில் ஒருவர் ‘தமிழ் இலக்கணத் தாத்தா’ என்று போற்றப்பட்ட மகாவித்துவான் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை.

யாப்பருங்கல பழைய விருத்தியுரை பதிப்புகளின் பிழைகளை நீக்கி, விளக்கக் குறிப்புகளையும் சேர்த்து அவர் அளித்த வடிவம்தான் தமிழக அரசால் 1960-ல் வெளியிடப்பட்டது. மே.வீ.வே. அளித்த நூல்வடிவத்தையும் அரசு வெளியிட்ட நூலையும் இரா.இளங்குமரன் ஒப்புநோக்கித் திருத்தங்கள் செய்த செம்பதிப்பை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. தான் செம்மைப்படுத்திய யாப்பருங்கல உரைநூலுக்கு முன்னுரையாக மே.வீ.வே. எழுதிய எழுசீர் ஆசிரிய விருத்தத்தில், அவருக்கு முன்பு 1916-ம் ஆண்டிலேயே யாப்பருங்கலத்தை நூலாக வெளியிட்ட பதிப்புச்செம்மல் சரவண பவானந்தத்துக்கு நன்றி தெரிவித்திருக்கும் பாங்கு வியப்புக்குரியது.

மே.வீ.வே.யைப் பதிப்பாசிரியராகக் கொண்டு பாரி நிலையம் வெளியிட்ட யாப்பருங்கலக்காரிகையின் துணையோடுதான் நமக்கு முந்தைய தலைமுறை யாப்பு பழகியது.

இருமொழிப் புலமை

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மேட்டுப்பாளையத்தில் 1896-ல் பிறந்தவர் மே.வீ.வே. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியின் மாதிரிப் பள்ளியில் சேர்ந்த மே.வீ.வே., வறுமையின் காரணமாக பள்ளிப்படிப்பைத் தொடர முடியாமல் போனது. வேப்பேரியில் ஒரு அச்சகத்தில் அச்சுக்கோப்பாளராகப் பணிபுரிந்துகொண்டே இரவுப் பள்ளிகளில் படிப்பைத் தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் டி.என்.சேஷாசல ஐயர், தாமோதர நாயுடு, மோகனரங்கம் பிள்ளை ஆகியோர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் மே.வீ.வே. புலமை பெறுவதற்கு உதவினார்கள்.

கே.ஆர்.கோவிந்தராஜ முதலியார், வி.ஆர்.ரங்கநாத முதலியார், ஆர்.மாசிலாமணி முதலியார் ஆகிய தமிழறிஞர்களும் மே.வீ.வே. என்ற ஆளுமையை வார்த்தெடுத்தார்கள். பெயர்களுக்குப் பின்னால் சாதி அடையாளங்கள் இருந்தாலும், பேதம் பாராமல் தமிழால் ஒன்றிணைந்திருந்த காலம் அது.

சென்னை முத்தியால்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக 1920-ல் பணியில் சேர்ந்த மே.வீ.வே., 1923 வரையிலும் அங்கு பணியாற்றினார். புரசைவாக்கம் பாப்ரிசியஸ் பள்ளியில் 1938 வரையிலும் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார். ஆசிரியர் பணியிலிருந்து விலகிய மே.வீ.வே., சொந்தமாகப் புத்தகங்களை எழுதி பதிப்பிக்கத் தொடங்கினார். அவர் எழுதிய நூல்கள் பள்ளி மாணவர்களுக்கான பாட நூல்களாகப் பரிந்துரைக்கப்பட்டன. அவரது இலக்கண தேர்ச்சியைப் பதிப்பாளர்களும் பயன்படுத்திக்கொண்டார்கள். தமிழறிஞர்கள் பலர் தங்களது நூல்களைப் பதிப்பிக்கும் முன்னர் அவரிடம் அளித்து செப்பம் செய்துகொண்டனர்.

இறையனார் அகப்பொருள்’, ‘தொல்சொல்’, ‘வீரசோழியம்’, ‘தஞ்சைவாணன் கோவை’, ‘யசோதர காவியம்’, ‘அஷ்ட பிரபந்தம்’, ‘நளவெண்பா’ உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தார். 1945-ல் காஞ்சிபுரத்தில் குடியேறிய இவர், அங்கு ‘கச்சித் தமிழ்க் கழகம்’ என்ற அமைப்பை நிறுவித் தமிழ் உணர்வைப் பரப்பினார்.

இரண்டாம் உலகப் போரின்போது சென்னையிலிருந்து காஞ்சிக்கு இடம்பெயர்ந்தார் மே.வீ.வே. சமண சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, சீவக சிந்தாமணி குறித்த சொற்பொழிவுகளைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் நடத்தினார். அந்தச் சொற்பொழிவுகளைத் தொகுத்து நினைவு மலர் ஒன்றையும் வெளியிட்டார். அந்நிகழ்வின்போது, ‘சிந்தாமணிச் செல்வர்’ என்று மே.வீ.வே.வுக்குப் பட்டம் அளித்துப் பாராட்டினார் திரு.வி.க.

தான் கற்ற கல்வி பெறுக இவ்வையகம்.

காஞ்சிபுரத்தில் மே.வீ.வே. வசித்தபோது வித்வான் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த தமிழ் மாணவர்களுக்கு மாலை நேரங்களில் வகுப்பெடுத்தார். இந்தப் பயிற்சி வகுப்புகளை இலவசமாகவே அவர் நடத்திவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பொருளாதாரச் சூழல் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்ற எண்ணமே அவரது மாலை நேர வகுப்புகளுக்கான காரணம். அவரிடம் பயின்ற தமிழ் மாணவர்கள் பலரும் பள்ளிகளில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றார்கள். பிழைகள் இன்றி இளைஞர்கள் தமிழ் எழுத வேண்டும் என்பதே மே.வீ.வே. வாழ்வின் லட்சியமாக இருந்தது. மே.வீ.வே. எழுதிய, பதிப்பித்த நூல்களின் பட்டியல் மிக நீளமானது. துருவன், ஆட்சிக்குரியோன், திருக்கண்ணபிரானார், விமலன், குணசாகரர் ஆகிய தலைப்புகளில் புத்தகங்களை எழுதியிருக்கிறார். ஆயிரத்தொரு அராபிய இரவுகளின் கதையை மூன்று தொகுப்புகளாக வெளியிட்டிருக்கிறார். கம்பராமாயணத்தை பாலகாண்டம் முதல் சுந்தரகாண்டம் வரை வசனங்களாக எழுதியிருக்கிறார். இறையனார் அகப்பொருள் உரை, தொல்காப்பியம் - நச்சினார்க்கினியார் உரை, தஞ்சை வாணன் கோவை - விளக்கவுரை, அழகிய மணவாளதாசரின் அஷ்ட பிரபந்தம், சித்தர் ஞானக் கோவை, நளவெண்பா, அரிச்சந்திரா கதை, நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகியவற்றைப் பதிப்பித்திருக்கிறார்.
தமிழக அரசின் இலக்கிய மற்றும் இலக்கண நூல் வெளியீடுகளின் தலைமைப் பதிப்பாசிரியராக மே.வீ.வே பணியாற்றினார். சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியின் திருத்தக் குழுவின் தலைமை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்திருக்கிறார். 1967-ல் சென்னை தொல்காப்பியர் சங்கத்தின் சார்பில் நடந்த விழாவில் மே.வீ.வே.வுக்கு ‘செந்தமிழ்க் களஞ்சியம்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார், அன்றைய தமிழக முதல்வர் அண்ணா. மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ் மாநாட்டில் அன்றைய பிரதமர் இந்திரா காந்தியும் முதல்வர் எம்ஜிஆரும் மே.வீ.வே.வுக்குப் பொன்னாடை அணிவித்துச் சிறப்பித்தார்கள். 19.7.1997 அன்று மே.வீ.வே. நூற்றாண்டு விழாவையும் தமிழக அரசு நடத்தியது.

கமில் சுவலபில் பாராட்டு

செக்கோஸ்லேவியா நாட்டைச் சேர்ந்த திராவிட மொழி ஆராய்ச்சியாளர் பேரறிஞர் கமில் சுவலபில், மே.வீ.வே.வின் தலையாய மாணவர்களில் ஒருவர். தமிழக சித்தர்கள் பற்றிய அவரது நூலின் தொடக்கமே மே.வீ.வே. பற்றிய வியப்பும் நன்றியுமாகத்தான் இருக்கிறது. ‘கொங்குதேர் வாழ்க்கை’ என்ற குறுந்தொகைப் பாடலின் அடிப்படையாகக் கொண்டு இறையனார், தருமி, நக்கீரர் ஆகியோரைப் பற்றி விவாதிக்கும் கமில் சுவலபிலின் கட்டுரை, மே.வீ.வே. எழுதிய ‘தமிழ் அன்றும் இன்றும்’ நூலைச் சான்றாகக் கொண்டது. அக்கட்டுரையிலும் தனது பெருமதிப்பிற்குரிய தமிழாசிரியர்களில் ஒருவர் என்று மே.வீ.வே. பற்றி குறிப்பிட்டிருக்கிறார் கமில் சுவலபில்.

‘தமிழ்த் தாத்தா’ என்றதும் உவேசா நினைவுக்கு வந்துவிடுகிறார். ‘தமிழ் இலக்கணத் தாத்தா’வான மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிமுகமில்லாமல் போனது துரதிர்ஷ்டம். உலகம் போற்றும் தமிழறிஞரான மே.வீ.வே. எழுதிய, பதிப்பித்த நூல்கள் பலவும் தற்போது அச்சில் இல்லை என்பது மேலும் ஒரு துரதிர்ஷ்டம்.

திருப்பனந்தாள் காசிமடத்தில் 1967 அக்டோபர் 29 அன்று நடந்த விழாவில் அறிஞர் அண்ணாவால், செந்தமிழ்க் களஞ்சியம் எனும் விருதும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தால், கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். 1981 இல் அமெரிக்க உறவுபூண்ட உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு, டாக்டர் பட்டம் (D.Litt) வழங்கியுள்ளது. மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில், தமிழ்ப் பேரவைச் செம்மல் விருதும் பெற்றுள்ளார்.

செந்தமிழ்க் களஞ்சியம் கலைமாமணி, தமிழ்ப் பேரவைச் செம்மல் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார். நியூயார்க் உலகப் பல்கலைக்கழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. ‘இலக்கணத் தாத்தா’ என்றும் ‘மகாவித்வான்’ எனவும் போற்றப்பட்ட மே.வீ. வேணுகோபாலன்1985-ம் ஆண்டு தமது 89வது வயதில் மறைந்தார்.  🙏🙏🙏

நன்றி :



கருத்துகள் இல்லை: