26 செப்., 2020

நெல்லை நினைவுகள் : சமையலும் சாப்பாடும்

நெல்லை நினைவுகள் தொடரில் இன்று
 சாப்பாடும் சொதிக்குழம்பும்

சமையல் செய்வதும் ஏறக்குறைய தவம் செய்வதைப் போன்றதுதான். 

தவம் செய்கிறவர்களின் மனம் ஒருபுள்ளியில் இருக்கும். 

சமையல் செய்கிறவர்களும் அப்படித்தான். ஆக்குப்பரை எனும் சமையல்கட்டில் சமையல் செய்யும் சமையல்தொழிலாளி பதம் மாறாமல் எவ்வளவு உப்புப்போடவேண்டும் எவ்வளவு இனிப்பு போடவேண்டும், புளிகரைத்து ஊற்றினோமா என்பதில் கவனம் இல்லாவிட்டால் செய்த குளறுபடிகள் பத்துநிமிடங்களில் பச்சை வாழையிலையில் சாப்பிடும் வக்கனையான வாய் சாட்சிசொல்லிவிடும். 

ஒருவினாடி கூட அங்கிங்கு அகலாமல் தவம் போல் செய்யப்படுவது சமையல். அதனால் சமையல்கலைக் கலைஞர்களைத் தவசுப்பிள்ளைகள் என்று நெல்லைப் பக்கம் அழைப்பர். 

தவசுப்பிள்ளை என்கிற சொல் திருநெல்வேலிக்கே உரித்தான சொல். எவ்வளவு பொருள்பொதிந்த சொல்! 

ஒருதிருமணத்தில் திருப்தியான விஷயம் சமையல்தான். வடக்குப்படையான் மவன் கல்யாணத்துக்குப் போனேன் போட்டான்பாரு ஒரு சாப்பாடு சான்சே இல்லை தெரியுமா? என்று பத்து வருடங்களுக்கு முன்நடந்த திருமணத்தைப் பற்றி வளவு வீட்டில் உக்காந்து இன்னிக்கும் பேசிட்டிருக்கிற ஆளுக நம்ம பாளையங்கோட்டையில் உண்டு. 

மதுரம், ஜானகிராம், ஆர்யாஸ்,சரவணபவன் போன்ற பெரிய நிறுவனங்கள் இன்று பெரியபெரிய திருமண ஆர்டர்களை அந்தந்த மண்டபங்களுக்கே போய் அழகான ஸ்டால்கள் போட்டு சுடச்சுட அங்கேயே செய்து தருகின்றன. 

எண்பதுகளில் தவசுப் பிள்ளை என்றால் அருணாசலம் பிள்ளைதான். 

 திருமணம் என்றவுடன் இன்றிருக்கும் கேட்டரிங்க் எல்லாம் அன்று இல்லை.

  சடங்கு காது குத்து நிச்சயதார்த்தம் என்றால் ஐம்பது பேருக்குள்தான் விசேச வீடுகளில் கூப்பிடுவார்கள், அவர்களுக்காகத் தனியே தவசுப் பிள்ளை போட்டு சமைக்க முடியாது. 

அப்படிப்பட்டவர்களுக்கு ஆபத்பாந்தவன் தான் அருணாசலம் பிள்ளை. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மாடவீதியில் இருக்கும் சங்கர் அதேபோல்தான், கல்யாணவீடுகளில் அவர் சமையல் தூள்பறக்கும். 

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும்போது இறுதிநாள் அந்தாண்டு யார் ஓய்வு பெறப்போகிறார்களோ அவர்களுக்கு விருந்து உபசாரம் நடக்கும். 

சில்வர் வாளியில் அவியல் மணத்தோடு வந்துவிட்டதென்றால் அருணாசலம் பிள்ளை சமையல் என்று பொருள். 

சேனையையும் கத்தரிக்காயையும் கேரட் பீன்ஸையும் உருளைக்கிழங்குடன் போட்டு தேங்காய் எண்ணெய் கமகமக்க அவர் செய்துதரும் அவியலை அடித்துக் கொள்ள ஆளே இல்லை. 

அப்பாவோடு அருணாசலம் பிள்ளை வீட்டிற்கே போயிருக்கிறேன். அவர் ஜோஸப் பேக்கரிக்கு எதிரேயுள்ள முருகப்பெருமான் தெருவில் அப்போது அருணாசலம் பிள்ளை இருந்தார். 

நெற்றிநிறைய திருநீறு, தோளில்துண்டு, தும்பைப்பூ போன்ற வேட்டி..போனவுடன் முன்னறையில் சூடாகக் காபி வரும், ஆள்சிவப்பழமாய் இருப்பார். போனவுடன் பெரிய வணக்கம் போடுவார். “ சார்வா எங்கிருந்து வர்ரிய?” என்பார். 

சொல்லிமுடித்தவுடன் என்ன நிகழ்ச்சி? , என்ன சாப்பாடு? எத்தனை பேருக்கு வேண்டும்? என்று கேட்பார். அதற்கு அவர் வாங்கும் தொகை மிக நியாயமானது. 

சென்னையில் அவர் இருந்திருந்தால் டிவி சமையல் நிகழ்ச்சி பத்திரிகைப் பேட்டி என்று அவரைக் கொண்டாடியிருப்பார்கள். 

அவர்வீடே கல்யாணவீடு மாதிரி இருக்கும். ஒருபக்கம் வெங்காயம், பூண்டு உறித்துக்கொண்டிருப்பார்கள், இன்னொரு பக்கம் காய்கறிகள் நறுக்கிக்கொண்டிருப்பார்கள். மூட்டைமூட்டையாய் அரிசி இருப்பில் இருக்கும். 

வாழைப்பழம் தார்தாராகத் தொங்கிக் கொண்டிருக்கும். 

எவ்வளவுபேருக்குச் சாப்பாடு என்று முந்தைய நாளே சொல்லிவிட்டால் சொன்னநேரத்தில் ஆட்டோவில் டானென்று உணவு வந்து இறங்கிவிடும். 

எண்பதுகளிலேயே தலையில்  தொப்பியோடு சீருடையில் உணவு பறிமாற ஆட்கள் வைத்திருந்தார். 

அவர் திருநெல்வேலி ஸ்பெஷல் சொதிக்குழம்பு வைத்தார் என்றால் சாதப் பற்றாக்குறை வந்துவிடும். தேங்காய் துறுவலைத் தண்ணீர்விட்டு ஆட்டி பால் எடுத்து பாசிப்பருப்பை வறுத்து மிளகாய் பூண்டுடன் வேகவைத்து அவர் செய்யும் சொதிக்குழம்பு அத்தனை சுவையானது. இஞ்சிப் பச்சடியோடு சொதிக்குளம்பும் அவர் கை மணத்தில் திருநெல்வேலி முழுக்க மணக்கும். 

திருநெல்வேலியில் திருமணத்திற்கு மறுநாள் மறுவீடு அன்று அதுதான் வைக்கப்படும். 

மதியச்சாப்பாட்டிற்கு மட்டுமல்ல இரவு ஊத்தப்பத்திற்கும் இடியாப்பத்திற்கும் அவர் வைத்த சொதி சுவையான இணையுணவுதான். 

அன்றுமுதல் இன்று வரை வெள்ளிக்கிழமை என்றால் நெல்லை உணவகங்களில் சொதிக் குழம்புதான். சாப்பிட்டுவிட்டு சனி ஞாயிறு வீட்டில் தூங்கவோ என்னவோ அப்படியொரு வழக்கம் இன்று வரை நெல்லை உணவகங்களில் தொடர்கிறது. 

பள்ளிநாட்களில் பாலாதான் ரெகுவிலாஸ் அழைத்துப் போனான். எந்த கடையில் எது நன்றாக இருக்கும் என்ற நாடித்துடிப்பை அறிந்தவன் அவன்.

நான் வழக்கம்போல் ங வென்று பின்னால் போகும்  ரகம். அற்புதமான சுவைக்கலைஞன் அவன் நம் நண்பனாக வாய்த்து வேறுவழியில்லாமல் இப்படிக் கூட்டிக்கொண்டு அலைகிறானே என்று அவ்வப்போது நினைப்பேன்! என்ன செய்வது? யாருக்கு யார் நண்பனாக வாய்க்க வேண்டும் என்று அந்த தேவன் எழுதியதை இந்த தேவன் மாற்றமுடியுமா?

 எங்கள் சொதிசுவையகமான ரகுவிலாஸ் டவுண் சந்திப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இருந்தது. மிகப் பழைய உணவகம். 

சொதியும் கூழ்வத்தலையும் இஞ்சித் துவையலை ஒருபிடி பிடிப்போம். அதைவிட்டால் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் உள்ள விசாகபவன். ஆரெம்கேவி போய் தீவாளிக்குத் துணிமணிகள் எடுத்துவிட்டு மூணுமணிக்கு விசாகபவன் போனாலும் சொதிக்குழம்பு இருக்கும். 

ரசம்,மோர், வத்தக் குழம்பெல்லாம் அன்று கணக்கில் எடுப்பதே கிடையாது. 

மொத்தச் சாதம் முடிகிறவரை ஒன்லி சொதிதான். மூக்குமுட்ட சாப்பிட்டுவிட்டு பீடாவைச் சவைத்தவாறு அங்கிருந்து மார்க்கட் பஸ் ஏறினால் நயினார்குளம் அரசமரநிறுத்தம் வரும்போது ஒரு சொக்குசொக்குமே அந்தநாள் மீண்டும் வராது. தூங்கிஒருநாள் ஹைகிரவுண்ட் ரவுண்டானாவில் முழிப்புவந்து திரும்ப அதே பஸ்ஸில் மார்க்கட் வந்து இறங்கியது ADJ கண்டக்டர் தலையில் அடித்துக்கொண்டதும் மறக்கமுடியாத மகாத்மியங்கள். 

டவுண் போகமுடியவில்லை என்றால் மார்க்கட் அன்னபூர்ணாவுக்கு அருகில் உள்ள சேதுமெஸ்தான் எங்கள் அடுத்த தெரிவு. 

பெரியகடை போன்றெல்லாம் இருக்காது. 

வீட்டை மெஸ் ஆக மாற்றியுள்ளார்கள், அங்கே சொதிசாப்பிடுவோம். 

உணவுசமைக்கவும் உணவைப் புசிக்கவும் ரசனை இருந்தால் மட்டுமே சரியாகச் செய்யமுடியும். 

என் சேக்காளி ஒருவன் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வியாழக்கிழமை சென்னையிலிருந்து  நெல்லை எக்ஸ்பிரஸில் கிளம்பி பாளையங்கோட்டை வந்து சொதி சாப்பிட்டுவிட்டு இருநாட்கள் தாமிரபரணியில் திவ்யமாய் ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு ஞாயிறு மாலை அதே நெல்லை எக்ஸ்பிரஸில் இருட்டுக்கடை அல்வாவோடு கிளம்பி திங்கட்கிழமை எந்திரவாழ்க்கைக்குள் நுழைந்துவிடுவான். 

நகரத்தில் இருப்பவனுக்கும் நரகத்தில் இருப்பவனுக்கும் எப்போதும் ஒரு சொர்க்கம் இருக்கத்தானே செய்யும். எங்கள் சொர்க்கம் நெல்லையைத் தவிர வேறெங்கு இருக்கமுடியும்?

கருத்துகள் இல்லை: